Jump to content

குழந்தைகளும் தண்டனைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
spacer.png

1

சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண், கணக்குகளை குழந்தை சரியாகச் செய்கிறாரில்லையென்று சொல்லி முதுகெல்லாம் அடித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கைளை எடுப்போம் என்று குழந்தையின் பெற்றோரிடம் கதைத்துப் பார்க்கச் சொன்னேன். தாங்கள் கூலி வேலை செய்வதாகவும் தங்களுடைய பிள்ளை இதற்காக எதிர்காலத்தில் பழிவாங்கப்படும் ஆகவே வேண்டாம் என்று அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை போல் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். அடிக்கப்பட்ட குழந்தைக்காய், குழந்தையின் பக்கம் நிற்காமல் போனது பெற்றோர் புரிந்த முதல் வன்முறை, ஆசிரியர் புரிந்தது இரண்டாவது, இதைத் தடுக்க முடியாத கையாலாகாத சமூகமாக வாழும் நாம் மூன்றாவது. இப்படியாக மூன்று அமைப்புகளாலும் கைவிடப்பட்ட குழந்தையின் மனநிலையை ஒரு கணம் நினைத்துப் பார்க்க முடிகிறதா? அதில் எவ்வளவு இருட்டுக் குடி கொள்ளும், எவ்வளவு நம்பிக்கை இழந்து போகும்?

2

அண்மையில் இன்னொரு கிராமத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அவர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து விளையாடுவது வழமை தான்,ஆனால் இரண்டு குழந்தைகளை மட்டும் அவர்கள் சேர்க்கவே இல்லை. முதலாம் வகுப்புப் படிக்கும் ஆறு குழந்தைகள் அவர்கள், அவர்களில் இரண்டு பேரை ‘நீ போ, விளையாட வராதே’ என்று அந்த தலைமைக் குழந்தை சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஏன் என்று நெருங்கிப் பார்த்தேன், சொன்ன குழந்தை நன்றாக உடை உடுத்தியிருந்தார், அவர்களுடன் இருந்த மற்ற நால்வரும் கூட சமமாகவே உடை போட்டிருந்தார்கள், இந்த இரண்டு குழந்தைகளும் அணிந்திருந்த உடைகள் சாதாரணமானவை, அவர்களும் மெலிந்து போயிருந்தார்கள். விசாரித்த போது, அனைத்துக் குழந்தைகளும் ஒரே ஒடுக்கப்பட்ட சாதியாகவே இருந்தாலும் அதற்குள் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாய் இருந்தவர்கள் அவர்களை விலக்கிய குழந்தைகள், நான் அந்தக் குழந்தைகளைப் பார்த்தேன், ‘சேர்ந்து விளையாடுங்கோ’ என்று சொன்னேன், கொஞ்சம் தள்ளிப் போய் நின்றவர்கள், ‘நீயும், நீயும் வா, நீங்கள் ரெண்டு பேரும் வேண்டாம்’ என்று சொல்லி விட்டு அருகில் இருந்த மரத்தடி நோக்கி நகர்ந்தார்கள், ஆனால் இந்த இரண்டு சிறுவர்களும் கூட அவர்களின் பின்னாலேயே சென்றனர், அவர்களோடு இருந்த இன்னொரு குழந்தை பின்னால் வந்த இன்னொரு குழந்தையைத் தள்ளி , ‘போடா’என்றார், அந்தக் குழந்தைக்கு அழுகை முட்டி வந்திருக்க வேண்டும், நான் அப்போது தான் பார்த்தேன், தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் கையில், ஒரு கற்பூரப் பெட்டியில் மண் நிரம்பியிருந்தது, தன் உடல் முழுவதிலும் இருந்து வந்த கோபத்தைச் சேர்த்து கையை ஓங்கி விசுக்கி அதைப் பற்றைக்குள் எறிந்தார், அருகிலிருந்த மண்டபத்துக்கு வந்து அதன் சுவற்றைக் குத்தினார். கண்ணெல்லாம் கோபம் தெறிக்க, ‘அண்ணை என்னை விளையாடச் சேர்க்கவில்லை என்று சொன்னார்’, ‘இங்க வா தம்பி, ஓம் அவை செய்தது பிழை தான், உன்னையும் சேர்த்து விளையாடியிருக்க வேணும்’ என்று சொல்லி சமாதானப்படுத்த முயன்றேன். என்னோடு நின்றபடி தூரத்தில் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் சிறிது நேரம் அவருடன் விளையாட முயற்சி செய்தேன், ஆனால் அவருக்கு அவர்களுடன் சேர்ந்து விளையாடத் தான் விருப்பமிருந்தது, பின்னர் நேரமாகியதால், அனைவரும் வீட்டுக்குப் போனார்கள், ‘நீ கவலைப்படாத’ என்று சொல்லி அனுப்பினேன். குழந்தைகளே குழந்தைகள் மேல் வன்முறை புரியும் படி அவர்களை ஆக்கி வைத்திருப்பது எது? வீட்டில் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்?நமது சமூகம் எதைக் கற்பிக்கிறது?அந்தக் குழந்தையின் இதயத்திற்குள் விழுந்திருப்பது இவர்களின் நஞ்சல்லவா?

3

கொரோனா காலத்தின் பின்னரான பாலர் வகுப்பு குழந்தைகளுடனான சந்திப்பு ஒன்றில் ஒரு ஆசிரியர் என் நண்பரொருவருக்குச் சொன்ன தகவல், வீட்டில் ஒரே குழப்படி என்ற காரணத்தினாலும் அந்தக் குழந்தையைச் சமாளிக்கத் தெரியவில்லையென்றும், அந்தக் குழந்தையின் தாய், கரண்டியை நெருப்பில் வாட்டி அந்தக் குழந்தைக்குக் காலில் சூடு வைத்திருக்கிறார், அந்தக் குழந்தைக்கு வயது நான்கு அல்லது ஐந்து இருக்கலாம்.

4

இன்னொரு கிராமத்தில் ஒரு தாய் சொன்ன தகவல், தன்னுடைய மகளின் வகுப்பில் படிக்கும் இன்னொரு குழந்தைக்கு கணக்குப் பாடம் செய்கிறார் இல்லையென்று தொடர்ச்சியாக கணித ஆசிரியர் அடித்து வந்திருக்கிறார். ஒரு நாள் கணக்குப் பிழை விட, “இவனை இனிமேல் ‘மொக்கு’ என்று தான் எல்லாரும் கூப்பிட வேண்டும் என்றும் ஆசிரியர் சொல்லியிருக்கிறார், சக மாணவர்களும் அந்தக் குழந்தையை அப்படியே அழைத்திருக்கிறார்கள்,அண்மையில் மேலும் ஒரு கணக்கை அந்தக் குழந்தை பிழையாகச் செய்து விட, அப்போது அந்த ஆசிரியர் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்த அந்த ஆசிரியர், கண்ணை மூடி விட்டுச் சொல்லியிருக்கிறார், நான் கண்ணைத் திறப்பதற்குள் நீ வீட்டுக்குப் போய் விட வேண்டும்,என்று சொல்லியிருக்கிறார்,பயந்து வெளிறிப்போன அந்தக் குழந்தை பற்றைகளுக்குள் எல்லாம் விழுந்து வீட்டுக்கு ஓடிப் போயிருக்கிறார், அப்பொழுது அவருடைய தந்தை இருந்தமையினால், அவர் பள்ளிக்கூடம் சென்று ஆசிரியருடன் தர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால்
கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் அந்தக் குழந்தைக்குள் அச்சம் எப்படிப் பரவியிருக்கும்? கால் தெறிக்க எப்படி ஓடியிருப்பார்? என்று கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

அதே பாடசாலையில் கொரானாவுக்குப் பின்னரான பாடசாலை தொடக்கத்தில், முதல் நாள் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பதினைந்து வீட்டுப் பாடங்கள் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளால் அவற்றைச் செய்ய முடியவில்லை. ஒரே நாளில் இவ்வளவு வீட்டுப் பாடங்களை அவர்களால் எப்படிச் செய்ய முடியுமென்ற பகுத்தறிவு கூட இல்லாத அவ் ஆசிரியர்கள், அடுத்த நாள் அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் அந்த இரண்டாம் வகுப்புக் குழந்தைகளை நிற்க வைத்திருக்கிறார்கள்.

இன்னும் அதிகமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்,உதாரணத்திற்கு நான்கு சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இங்குள்ள சிக்கல்களின் அடிப்படையை நாம் விளங்கி கொள்ள வேண்டும். முதலாவது,பெரும்பான்மை சமூகம் குழந்தைகளை மதிப்பதில்லை. அவர்களுக்குச் சுயமரியாதை இல்லையென்று கருதுகிறார்கள், இதனை நம் அன்றாடத்தை சற்று கவனித்தாலே தெரியும். குழந்தைகளைச் சுட்டும் நம் மொழியிலிருந்தே அதன் உளவியல் தொடங்குகிறது. குழந்தைகளை ‘அது’ என்று சுட்டியே பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறோம், ‘அந்தக் குழந்தைக்கு, ஒண்டும் சரி வராது, அதுக்கு கணிதம் வராது, அது விளையாடுது, சிரிக்குது…’என்பது நம் அன்றாட வார்த்தைகள்,அதிலேயே நாம் ‘அவர்களை’ ‘அதுகள்’ ஆகப் பாவிக்கிறோம். அங்கிருதே அவர்களுக்குச் சுயமரியாதையை மறுக்கிறோம்,அவர்களின் கருத்துக்களுக்கான மதிப்பை நிராகரிக்கிறோம். அவர்கள் விடும் தவறுகளைச் சகிக்க முடியாதவர்களாக இருக்கிறோம்.

மேலும் நம் அருகிலிருக்கும் குழந்தைகளை கவனித்துப் பார்க்க வேண்டும், அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று பாருங்கள்,சமூகம் எப்படி நடத்துகிறது என்று பாருங்கள், சிந்தியுங்கள்,அவர்களை நாம் சமத்துவமாக மதிக்கிறோமோ, ஒரு வளர்ந்தவருக்கு அல்லது மூத்தவருக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் தானே குழந்தைக்கும் இருக்கிறது. இன்னும் ஆழமாக விளக்கினால் சமூகத்தின் பணிய வைக்கும் ஒழுங்கை, கீழ்ப்படிதலை ஒவ்வொரு படிமுறையாக நாம் அவர்கள் மேல் நிகழ்த்தி அவர்களை எப்படியானவர்களாக உருவாக்க நினைக்கிறோம்?

பலர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து கதைக்கும் போது கவனித்துப் பாருங்கள், ‘எங்களுக்குச் சின்ன வயசில கட்டி வைச்சு கண்ணுக்குள்ள மிளகாய் தூள் போடுவினம், வட்டத்தைக் கீறிப்போட்டு அதற்குள் நிற்க வைத்து அடிப்பார்கள், நாங்கள் வாங்காத அடியா..’ என்று நீளமாக தங்கள் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை நியாயப்படுத்தி,இவற்றைச் சாதாரணமானவை ஆக்குகிறார்கள். இவையெல்லாம் இயல்பு, குழந்தைகள் தண்டனைகள் மூலமே வளர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்து நம் சமூகத்தில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் குழந்தைகளையே கேட்டுப் பாருங்கள், ‘பிழை செய்தால் அடிக்கத் தானே வேண்டும்’ என்று சொல்லுவார்கள். அப்படிப் பழக்குகிறோம் நம் குழந்தைகளை. வன்முறையை ஏற்கும்,தண்டனைகளை நியாயப்படுத்தும் சமூகத்தை உருவாக்கிய பின் அவர்களைச் சொல்லி ஒரு குற்றமுமில்லை. நாம் தான் அவர்களை வன்முறையை நியாயப்படுத்தக் கற்பிக்கிறோம். நம் சமூகத்தில் இன்னொரு பிரபலமான வாக்கியமும் உண்டு, “தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை அடிக்கக் கூடாது”. அதன் மறுவளமான வாசிப்பு என்ன, சிறுவர்களையும் குழந்தைகளையும் அடிக்கலாம் என்பது தானே.

இந்த ஒழுங்குகளால் மனவடுவுடன் உருவாகும் குழந்தைகளின் இதயத்தையும் குழந்தைமையையும் நசுக்கும் நமக்கோ குற்றவுணர்ச்சிகள் இல்லை. அருகில் ஒரு குழந்தை அவமானப்படுத்தப்படுகிறார்,தண்டனை வழங்கப்படுகிறார் என்றால் அவரின் பொருட்டு நாம் நிற்க வேண்டும். அது தவறு என்று யார் அவர்களை ஒடுக்குகிறாரோ அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தக் குழந்தையைக் காப்பாற்றியாக வேண்டும். ஆனால் நம்மால் முடியுமா? நாம் கரிசனையுள்ளவர்களா?துணிச்சலுள்ளவர்களா? குறைந்த பட்சம் இதயமுள்ளவர்களா?

கிரிசாந்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 00:46, பிழம்பு said:

இந்த ஒழுங்குகளால் மனவடுவுடன் உருவாகும் குழந்தைகளின் இதயத்தையும் குழந்தைமையையும் நசுக்கும் நமக்கோ குற்றவுணர்ச்சிகள் இல்லை

குற்றவுணர்ச்சி எப்பொழுது வரும்.. இந்தப்பிள்ளைகளின் மனவடுவினால், தன்னம்பிக்கை குறைந்து, வெளியே/வேலையிடங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்கத்தெரியாமல் தற்கொலையை நாடும் பொழுதுதான் வரும்..

இப்பொழுது வரமாட்டாது ஏனெனில்” இது போட்டிகள் நிறைந்த உலகம், இப்ப இறுக்கிப்பிடிக்காவிடில், வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.. நாங்கள் வாங்காத அடியா? .. இவர்களுக்கு எல்லாம் செய்து கொடுத்திருக்கிறது, படிப்பைத்தவிர வேறு என்ன வேண்டும்” இப்படிப்பலவற்றை கூறி தங்களை நியாயப்படுத்திக்கொள்வார்கள்..

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது... அவர்களது தனித்துவமான திறமையை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்றிவிடுவதே பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் கடமை.. அதை உணரும்பொழுதுதான இவ்வாறான சம்பவங்கள் குறையும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது... அவர்களது தனித்துவமான திறமையை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்றிவிடுவதே பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் கடமை.. அதை உணரும்பொழுதுதான இவ்வாறான சம்பவங்கள் குறையும்.. 

உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.