Jump to content

விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் வழங்க வேண்டிய தலைமைத்துவம்? - யதீந்திரா

தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் தலைவராக விக்கினேஸ்வரன் தெரிகின்றார். வழமையாக ஊடகங்கள் மத்தியில் அடிக்கடி பேசப்பட்ட சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் சற்று பின்னுக்கு சென்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து சுமந்திரன் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு வேளை தான் அதிகம் பேசியதால்தான் தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவேண்டியேற்பட்டது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம் – அல்லது, இப்போது பேசுவதற்கு எதுமில்லையென்றும் சுமந்திரன் கருதியிருக்கலாம். ஏனெனில் சுமந்திரனின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமந்திரனின் தோல்வியென்பது அடிப்படையில் சம்பந்தனின் தோல்வி. எனவே இந்த தோல்வியிலிருந்து எழுவதற்கு, ஏனையவர்கள் தோல்வியடையும் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. அதாவது, கூட்டமைப்பை தவறென்று கூறி வெற்றிபெற்றிருக்கும் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் கூட்டமைப்பின் இடத்திற்கு வரும்வரையில் அமைதி காப்பது நல்லதென்றும் சுமந்திரன் எண்ணியிருக்கலாம். சுமந்திரன் ஒரு வேளை அவ்வாறு கருதியிருந்தால் அவரது நம்பிக்கை நிச்சயம் வீண் போகப் போவதில்லை. ஏனெனில் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் வியூகங்களை எதிர்கொள்வதற்கான தமிழ் ஆற்றல் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றது. எண்ணிக்கையில் சிறுபாண்மையினரின் உதவியை எதிர்பார்க்காத ஒரு அரசாங்கம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் என்னதான் பேசினாலும் அது பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த இடத்தில்தான் – விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? அவரது அரசியல் பாதையெது? என்னும் கேள்விகள் எழுகின்றன.

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய போது, அவர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கும் இன்று அவர் வந்து நிற்கும் இடத்திற்குமிடையிலுள்ள வேறுபாடானது, மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு. இதனை அவரால் ஒரு போதுமே நிராகரிக்க முடியாது. அரசியலில் நண்பர்கள் எதிரிகளாவதும் – எதிரிகள் நண்பர்களாவதும் மிகவும் சாதாரணமான விடயம். இன்று விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்தவர்கள் விக்கினேஸ்வரனோடு இல்லை. விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வருகின்ற போது, அவரை எதிர்த்தவர்கள் அவரோடு நிற்கின்றனர். இதனையும் அவரால் மறுக்க முடியாது. எதிர்காலத்தில் வெளியில் நிற்கும் இன்னும் பலரும் விக்கினேஸ்வரனை நோக்கி வரக் கூடும். அதாவது, விக்கினேஸ்வரனோடு இணைந்திருந்தால் தேர்தலில் வெல்ல முடியுமென்னும் நம்பிக்கை ஏற்பட்டால் பலர் விக்கினேஸ்வரனை நோக்கி நிச்சயம் வருவர். இன்று பலரும் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்புவது, செல்வநாயகத்தின் மீதான பற்றுதலாலோ அல்லது சம்பந்தன் மீதான பற்றுதலாலோ அல்ல. மாறாக, தமிழரசு கட்சியுடன் இணைந்திருந்தால்தான், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெறமுடியுமென்னும் நம்பிக்கை இருப்பதால்தான் பலரும் அங்கு செல்கின்றனர். 2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறுமனே தேர்தலில் போட்டியிடுவதற்கான நல்ல கட்சிகளை தேடும் அரசியலாகவே சுருங்கிப்போனது. இதனை எவ்வாறு மாற்றியமைப்பது? இதனை மாற்றியமைக்கக் கூடிய தலைவர் யார்? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரையில் பதிலில்லை.

இன்றைய நிலையில் தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரேயொரு தெரிவு தேர்தல் அரசியல்தான். அதற்கப்பால் மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்ப வேண்டுமென்று சிலர் அவ்வப்போது கூடிய போதும், அந்த முயற்சிகள் அனைத்தும் கூடிக் கலைவதாகவே முடிந்திருக்கின்றது. இதுவரையில், வடக்கில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் அனைத்துமே வெறும் கூடிக் கலைதல்களாகவே இருந்திருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டுதான், இன்றைய நிலையில் தேர்தல் அரசியலை தவிர வேறொரு தெரிவு தமிழ் மக்களுக்கு முன்னால் இல்லையென்று இந்தக் கட்டுரை வாதிடுகின்றது. தேர்தல் அரசியல் ஒன்றுதான் தமிழர்களிடம் இருக்கின்ற நிலையில், அதனை எவ்வாறு உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது,? அதற்கான பொறிமுறை என்ன? தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் பிடிக்குள் விழுந்ததைத் தொடர்ந்து, தமிழ் மிதவாத அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தை இழுந்துவிட்டது.

90களுக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் தமிழ் அரசியல் சென்ற பின்னர், மிதவாத அரசியல் கட்சிகள் என தனித்து பார்ப்பதற்கான ஒரு அரசியல் சூழலே தமிழர்கள் மத்தியில் இருந்திருக்கவில்லை. தவிர, விடுதலைப் புலிகள் இயக்கம் மிதவாதிகள் என்று சொல்லப்பட்டவர்களை எப்போதுமே நம்பியதுமில்லை. இதற்கு கூட்டமைப்பின் உருவாக்கவே ஒரு சிறந்த உதாரணம். கூட்டமைப்பை வன்னி வழிநடத்திய போதும், கூட்டமைப்பு சுயாதீனமானதொரு அமைப்பாக இயங்குவதை புலிகளின் தலைமை ஒருபோதுமே விரும்பியிருக்கவில்லை. அதே வேளை கூட்டமைப்பிற்கு சர்வதேச அரங்கில் அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. அன்று கூட்டமைப்பிலிருந்த அனைத்து கட்சிகளும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே கூட்டமைப்பில் இருந்தனர். அவ்வாறிருந்த போதும், ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பை புலிகள் உள்வாங்கவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் என்னும் அடிப்படையில், சம்பந்தனுக்கு பேச்சுவார்த்தை மேசையில் ஒரு இடத்தை கொடுத்திருக்க முடியும். ஆனாலும் விடுதலைப் புலிகள் அதனை செய்யவில்லை. ஏன்? ஏனென்றால் விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் கூட்டமைப்பை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார்களேயன்றி, கூட்டமைப்பிற்கு ஒரு தனித்துவமான அங்கீகாரத்தை கொடுக்க புலிகள் விரும்பியிருக்கவில்லை. விடயங்களை தொகுத்து நோக்கும் போது, இவ்வாறாதொரு முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது. இந்த விடயங்களை தொகுத்து நோக்கும் போது – இன்று தேர்தல் அரசியலுக்காக விடுதலைப் புலிகளை பயன்படுத்த நினைப்பது முற்றிலும் பிழைப்புவாதமாகும். விடுதலைப் புலிகள் வேறு – தேர்தல் அரசியல் வேறு.

2009இற்கு பின்னரான தேர்தல் அரசியல் என்பது மீண்டும் மிதவாத அரசியலை தமிழ்ச் சூழலில் பலப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. யுத்தத்தின் விளைவுகளும் அதே வேளை எதிர்காலத்தை நோக்கி பார்வைiயும் முன்வைத்து புதியதொரு மிதவாத அரசியலை கட்டியெழுப்பியிருக்க முடியும். மேலும் வெளியிலிருப்பவர்களை ஒன்றுபடுத்தி தமிழர்களின் ஐனநாயக பலத்தை பெருப்பித்திருக்க முடியும். இந்த பலத்தை கொண்டு ஐனநாயக ரீதியில் முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டங்களை வகுத்திருக்க முடியும். யுத்தத்திற்கு ஆதரவளித்த நாடுகளை நோக்கி ஓருமித்து கைநீட்டியிருக்க முடியும். யுத்த அழிவுகளிலிருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு உங்களுக்குண்டு என்பதை ஒரு பிரச்சாரமாக முன்வைத்திருக்கலாம். புலம்பெயர் சமூத்துடன் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு. 2009இற்கு பின்னர் தமிழரின் ஐனநாயக பலத்தை மேலும் மேலும் திரட்சிபெறச் செய்வதற்கு பதிலாக, அதனை மேலும் மேலும் சிதைப்பதற்கான முயற்சிகளே நடந்தன. இதன் விளைவாகவே இன்று தேர்தல் அரசியல் தளத்திலும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலும் தமிழ்த் தேசியத்தை பிரநிதித்துவப்படுத்தி பல கூறுகளாக சமூகம் பிளவுற்றிருக்கின்றது. இவ்வாறனதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தனியொருவராக நாடாளுமன்றம் சென்றிருக்கின்றார். தனது பேச்சுக்களால் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றார். சிங்கள அடிப்படைவாத தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார். ஆனால் இது மட்டும்தானா விக்கினேஸ்வரனின் பணி?

இன்றைய சூழலில் விக்கினேஸ்வரன் எவ்வாறானதொரு தலைமைத்துவத்தை கொடுக்க முடியும்? உண்மையில் இன்று தமிழ் மக்களுக்கு தேவையானது ஒரு தமிழ்த் தேசிய மிதவாத தலைமையாகும். அதாவது, உள்நாட்டு நிலைமைகளை எதிர்கொள்ளவும் அதே வேளை, பிராந்திய சர்வதேச நிலைமைகளை எதிர்கொள்ளுவதற்கு ஏற்றவாறானதொரு தலைமையே தமிழ் மக்களுக்கும் தேவையானது. அவ்வாறானதொரு தலைவருக்கான வெற்றிடம்தான் இங்கு காணப்படுகின்றது. ஒரு வேளை விக்கினேஸ்வரனால் அவ்வாறானதொரு தலைமைத்துவததை வழங்க முடியாது போனாலும் கூட, அதற்கான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையாவது அவர் மேற்கொள்ளலாம். இன்று தமிழர்களின் தேர்தல் அரசியலானது, முற்றிலும் சுயநல அரசியலால் விழுங்கப்பட்டிருக்கின்றது.

 

தேர்தல் அரசியலை ஒழுங்குபடுத்தும் ஒரு பணியை விக்கினேஸ்வரன் அறிமுகம் செய்யலாம். அது ஒரு முன்னுதாரனமான நடவடிக்கையாக நோக்கப்படலாம். அதாவது, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரையுமே மாகாண சபைத் தேர்தலில் நிறுத்துவதில்லை என்னும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரலாம். அத்துடன், மாகாண சபையில் 25-50 வரையானவர்கள் மட்டுமே போட்டியிடலாம். அவ்வாறானவர்களுக்கே முன்னுரிமை என அறிவிக்கலாம். இதன் மூலம் இளைய தலைமுறையினரை அரசியலுக்குள் கொண்டுவரலாம். அவர்கள் மத்தியிலிருந்து இரண்டாம் மட்ட தலைவர்களை இனம்காணலாம். இன்று ஆளுமைமிக்க தலைவர்களுக்கு பஞ்சமுள்ள ஒரு சமூகமாகவே தமிழர் சமூகம் காட்சியளிக்கின்றது. ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்ததாக பெருமைகொள்ளும் சமூகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆளுமையான நபர்கள் இல்லாமலிருக்கின்றனர். இதற்கு என்ன காரணம். பழையவர்கள் தாங்கள் சாகும் வரையில் பதவியிலிருக்க வேண்டுமென்று எண்ணுவதே பிரதான காரணம். இப்படிப்பட்ட ஒரு பதவி மோக அரசியலுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால், இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து ஒருபோதுமே தலைவர்கள் உருவாக மாட்டார்கள்.

தமிழ்ச் சூழலில் விக்கினேஸ்வரன் ஒரு அரசியல் அடையாளமாக தெரிந்தாலும் கூட, ஸ்தாபன ரீதியில் விக்கினேஸ்வரன் மிகவும் பலவீனமாகவே இருக்கின்றார். அவருக்கென்று ஒரு அரசியல் கட்சியில்லாமை அவரை பின்தொடரும் ஒரு பலவீனமாகும். இந்த பலவீனத்திலிருந்து அவர் எவ்வாறு மீண்டெழப் போகின்றார்? தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருப்பதாகச் சொல்லப்படும் கூட்டணி மிகவும் பலவீனமாக இருக்கின்றது. எவரும் எதையும் பேசலாம் என்னும் நிலைமையே அங்கு காணப்படுகின்றது. கூட்டமைப்பிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்பட்டது. கூட்டமைப்பிற்கான மாற்று என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை கூறிக்கொண்டாலும் கூட, அவ்வாறானதொரு மாற்றுக்கான எந்தவொரு கட்டமைப்பும் அங்கில்லை. திலீபன் விவகாரத்தில் சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கை அதனை தெளிவாகவே காண்பிக்கின்றது. நீதிமன்றத்தின் தடையை மீறினால் கைதுசெய்யப்படுவோம் என்பதை தெரிந்தே தமிழ் சினிமாப்பாணியில் விடயங்களை கையாள முற்படுவதானது தவறானதொரு அரசியல் அணுகுமுறையாகும். தீலிபன் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உயிர் நீத்தவர். அவரை நினைவு கூர்வதற்கான உரிமை மறுக்கப்பட்டால், அதனை எதிர்ப்பதற்கு திலீபனைப் போன்றே உண்ணாவிரதமிருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு அர்ப்பணிப்பிற்கு எவரும் தயாராக இல்லை. விக்கினேஸ்வரன் முன்னுதாரனம்மிக்க தலைமைத்துவம் ஒன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்த விடயங்கள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது. விக்கினேஸ்வரனின் தலைமைத்துவம் பலரையும் போல் சாதாரணமான ஒன்றாகிவிடக் கூடாது. விக்கினேஸ்வரன் தனது ஆற்றல் உறைந்திருக்கும் ஒவ்வொரு இடங்களையும் கண்டடையும் போது, தனனால் எவ்வாறானதொரு தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்பதை நிச்சயம் உணர முடியும்.

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்கினேஸ்வரன்-வழங்க-வேண/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.