Jump to content

மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா?


Recommended Posts

மாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா?

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, “மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக, நான் ஒருபோதும் கூறவில்லை” எனக் கூறியிருக்கிறார். இது, பிரதான அச்சு ஊடகங்களிலும் பல இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.   

சரத் வீரசேகர, இவ்வாறு கூறுவதாலேயே இது முக்கிய செய்தியாகிறது. ஏனெனில், அவர் மாகாண சபைகளுக்கு எதிரானவர். “மாகாண சபைகளை ஒழிப்போம்” என அவர் கூறினாலும், அது செய்திதான். ஆனால், “நான் மாகாண சபைகளை ஒழிப்பதாகக் கூறவில்லை” என்று அவர் கூறுவது, அதைவிட முக்கியமான செய்தியாகும்.  

உண்மையிலேயே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதாக சரத் வீரசேகர எங்கும் கூறவில்லையா? நேரடியாக இல்லாவிட்டாலும், அந்தக் கருத்துப்பட பலமுறை, அவர் கருத்து வெளியிட்டு இருந்தார். அந்த நோக்கத்துக்காக, மாகாண சபைகளின் கடந்த காலச் செயற்பாடுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.  

“மாகாண சபைகளைத் தோற்றுவித்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிரானவன் தான். ஆனால், அவற்றை இரத்துச் செய்வதாக ஒருபோதும் நான் கூறவில்லை” என, அவர் இப்போது கூறுகிறார். இது, இனவாத சக்திகளுக்கு மத்தியில், அவருக்கு இருந்த மதிப்பைக் குறைக்கும் கூற்றாகும். அவ்வாறாயின், இப்போது ஏன் அவர், இவ்வாறு கூற வேண்டும்? மேலிடத்திலிருந்து ஏதோ நெருக்குதல் வந்திருக்கிறது போலும்.   

ஆனால், கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்குச் சென்ற போது, இந்திய அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு வந்தார். அதன் பின்னர், நீண்ட காலமாக மாகாண சபைகளை எதிர்த்து வந்த சரத் வீரசேகரவுக்கு, மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சையும் கொடுத்தார்.   

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையிலேயே சரத் வீரசேகர, “நான் மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறவில்லை” என்கிறார். அவ்வாறாயின், புதிதாக அரசாங்கத்துக்கு இந்திய நெருக்குதல் போன்ற ஏதாவது ஏற்பட்டதா என்று தான் சிந்திக்க வேண்டியுள்ளது.  

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, அதிகாரப் பரவலாக்கல் முறைமையாகவே, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. உண்மையிலேயே, இலங்கை அரசாங்கம் விரும்பி இந்த முறைமையை நாட்டில் அறிமுகப்படுத்தவில்லை என்பதும் இந்தியாவே இதை இலங்கை அரசாங்கத்தின் மீது திணித்தது என்பதும் சகலரும் அறிந்த விடயம்.  

ஆரம்பத்தில், தென்பகுதியில் பெரும்பாலானவர்கள் மாகாண சபை முறைமையை விரும்பவில்லை. இப்போது, மாகாண நிர்வாக முறைமை நாட்டுக்குப் பழகிவிட்டதால், தெற்கில் சிலர் விரும்பிய போதிலும், இன்னமும் பெரும்பாலானவர்கள் நாட்டுக்கு, மாகாண சபைகள் பெரும் சுமை என்ற அபிப்பிராயத்திலேயே இருக்கின்றனர். 

தெற்கில் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள், அரச செலவில் தமது பிள்ளைகளுக்கு அரசியல் பயிற்சி வழங்கும் நிலையங்களாகவே, மாகாண சபைகளைப் பாவிக்கின்றனர். அவ்வாறானவர்கள், இந்த முறைமையை மேலோட்டமாக மட்டுமே எதிர்க்கின்றனர்.  

உண்மையிலேயே, மாகாண சபைகள் பலர் கூறுமளவுக்கு நாட்டுக்கு சுமையல்ல. அவற்றின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் போன்றவர்களுக்கான செலவை எடுத்துக்கொண்டால், மேலதிக சுமை தான். ஆனால், அவற்றின் நிர்வாக இயந்திரத்துக்கான செலவானது, மாகாண சபைகளை இரத்துச் செய்தாலும் செய்ய வேண்டிய செலவாகும்.   

மாகாண சபைகளை இரத்துச் செய்தாலும், தற்போது அவற்றின் கீழ் இயங்கும் பாடசாலைகள், மருத்துவமனைகள், வீதிகள் போன்றவற்றையும் நிர்வகிக்கும் அதிகாரிகளையும் அலுவலகங்களையும் ஏனைய சேவைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தியே ஆக வேண்டும். மாகான சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 85 சதவீதம், இவற்றுக்கான மீண்டுவரும் செலவாகவே (Recurrent expenditure) அமைந்துள்ளது.   

மாகாண சபைகளை இரத்துச் செய்தாலும் இந்தச் சேவைகளை நிறுத்த முடியாது; ஊழியர்களை நீக்கிவிட முடியாது. எனவே, மாகாண சபைகளை இரத்துச் செய்வதன் மூலம், பாரியளவில் பணத்தைச் சேமிக்க முடியும் என்று சிந்திப்பது தவறானதாகும்.  
ஆனால், மாகாண சபைகளால் நாட்டுக்குப் புதிதாகக் கிடைத்த நன்மை  என்ன என்பதே கேள்வியாகும். தனித் தமிழ் நாடொன்றை உருவாக்கும் நோக்கில், தமிழ் ஆயுத இயக்கங்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, தமிழ் மக்கள் தமது அலுவல்களைத் தாமே செய்து கொள்ளும் வகையிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.   

தனி நாட்டைக் கேட்ட தமிழ்த் தலைவர்கள், 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் கிடைத்த போது, அதைத் தீர்வாக ஏற்றார்கள். புலிகள் தவிர்ந்த தமிழ் ஆயுத இயக்கங்கள், மாகாண சபைகளுக்காகத் தமது ஆயுதங்களையும் கைவிட்டனர். இந்தநிலையில், மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழ்த் தலைவர்கள், அதை முறையாகப் பயன்படுத்தி, தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தார்களா என்று, தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்புகிறார்கள். சரத் வீரசேகர, மாகாண சபைகளின் செயற்பாடுகளை ஆராயப் போவதாகக் கூறுவதன் அர்த்தமும் இதுவே!   

குறிப்பாக, வடக்கு மாகாண சபையின் பல செயற்பாடுகள், தென் பகுதியில் மாகாண சபைகளைப் பற்றிய எதிர்ப்பை அதிகரிப்பவையாகவே இருந்தன. உதாரணமாக, அம்மாகாண சபை, தனது ஐந்தாண்டு காலத்தில், 415க்கும் மேற்பட்ட பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததாகவும் அவற்றில் பல, மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை அல்ல என்றும் அரசியல் நோக்கம்கொண்டவை என்றும் சில அநாவசியமானவை என்றும் 2018ஆம் ஆண்டு அதன் பதவிக் காலம் முடிவடைய ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்திருந்தது.   

அந்தச் செய்தியில், சில உதாரணங்களும் வழங்கப்பட்டு இருந்தன. அதன்படி, பலாலி விமான நிலையத்தைத் தரமுயர்த்துவது தொடர்பாகவும் தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை, ‘ஹேக்’ நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வது தொடர்பாகவும் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருந்தன. 

பலாலி விமான நிலையம் தொடர்பான பிரேரணை, மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. மற்றையது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற பிரதான தமிழ்க் கட்சிகள், அவற்றின் மாநாட்டில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது.   

இவை போன்றவற்றுக்குப் புறம்பாக, மாகாண சபையின் கீழ்வரும் அலுவலகங்களில் முதலமைச்சரின் உருவப்படத்தைக் காட்சிக்கு வைப்பது தொடர்பாகவும் மரணித்தவர்களுக்கான இறுதி ஊர்வலங்களில் பட்டாசு கொழுத்துவதைத் தடை செய்வது தொடர்பாகவும் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. பட்டாசு பற்றிய பிரேரணையை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார்.   

முப்பது வருடங்களுக்கு மேலான கொடூரப் போரொன்றை எதிர்கொண்ட மக்கள், வாழ்வாதார ரீதியாக எத்தனையோ பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது, அவற்றைத் தீர்க்க, இந்தப் பிரேரணைகள் எவ்வகையிலும் உதவாது. எனவே, “மாகாண சபைகள் என்ன செய்தன” என்று, வீரசேகர கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை.  

அதேவேளை, மாகாண சபைகளின் தோற்றமே, பெரும்பான்மை சிங்கள மக்களை ஆத்திரமூட்டுவதாகவே அமைந்து இருந்தது. அதிகாரப் பரவலாக்கல் பற்றிய கருத்து, பிரிவினைப் போராட்டத்துக்குப் பின்னரே, பலமாகவும் சர்வதேச (இந்திய) ஆதரவுடனும் முன்வைக்கப்பட்டது. எனவே, அதையும் பிரிவினையின் ஒரு வடிவமாகவே, பெரும்பான்மை சமூகம் பார்க்க முற்பட்டது. இந்த விடயத்தில், பெரும்பான்மை மக்களை மிக மோசமான முறையில் ஆத்திரமூட்டும் வகையில், இந்தியா நடந்து கொண்டது.   

தமிழ் ஆயுத இயக்கங்களுக்குப் பணம், ஆயுதம், பயிற்சி வழங்கிய இந்தியா, வட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கும் போர்வையில் இந்திய கடற்படையையும் விமானப் படையையும் பாவித்து, இலங்கை அரசாங்கத்தை  அச்சுறுத்தியே, இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு இலங்கை அரசாங்கத்தை இணங்கச் செய்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது, பெரும்பான்மை மக்கள் மேலும் அதிகாரப் பரவலாக்கல் முறையை எதிர்க்கலாயினர்.  

வடக்கு - கிழக்கு இணைப்பும் மற்றோர் ஆத்திரமூட்டலாகவே அமைந்தது. தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆயுதங்களைக் கையளித்தால் மட்டுமே, வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியும் என, மாகாண சபைச் சட்டம் கூறுகிறது. 

ஆனால், இந்திய நெருக்குதலின் காரணமாக, ஆயுதக் களைவுக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்கிறதென ஜனாதிபதி திருப்தியடைந்தால், இரு மாகாணங்களையும் இணைக்கலாம் என, அவசர காலச் சட்டத்தின் கீழ் மாகாண சபை சட்டம் திருத்தப்பட்டு 1988ஆம் ஆண்டு செப்டெம்பர் இரண்டாம் திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அல்லாது, அவசர காலச் சட்டத்தின் கீழ் ஒரு சட்டம் திருத்தப்பட்ட முதலாவது முறை இதுவாகும்.  

தற்போதைய மாகாண சபை முறைமைக்கு அப்பால், ஏதும் கிடைக்கும் என்று நம்ப முடியாத நிலையே நாட்டில் இருக்கிறது. எனவே, கூடுதல் அதிகாரங்களைக் கேட்கும் அதேவேளை, இருப்பதை வைத்து, அதிகூடிய பயனை அடையும் வழிகளையே ஆராய வேண்டும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைகள்-தப்பிப்-பிழைக்குமா/91-255812

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.