Jump to content

பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன்


புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார்

தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன்  கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, ஆஸ்திரோவ்ஸ்கிமீண்டுமொருமுறை துர்கனேவ்வைக் கூர்ந்து கவனித்தார்

பூஞ்சையான, உள்நோக்கி இருந்த கண்கள். ஒடுங்கிய கன்னங்கள். கூடவே, ஒரு எளிய மனிதன்கொண்டிருக்க வேண்டிய அத்தனை தோற்றங்களையும் துர்கனேவ் கொண்டிருந்தான். அழுதழுதுஅவன் கண்கள் சிவந்திருந்தன. நானொரு பாவி; குற்றம் செய்தவன்; கர்த்தர் என்னை மன்னிக்கவேமாட்டார் என்பது போல் ஏதோ முணுமுணுத்தான்

பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் புரிவது போல் சொல்ல முடியுமாஎன்றார். அதேநேரம், தன் கைகளைப் பற்றியிருந்த துர்கனேவ்வின் கைகளை விலத்திக்கொள்ளமுடிகிறாதாயென அவர் முயன்று பார்த்தார். முடியாமற் போகவே தானும் இறுகப் பற்றிக் கொண்டார்

நானொரு பாவி; குற்றம் செய்தவன்; கர்த்தர் என்னை மன்னிக்கவே மாட்டார் என்ற துர்கனேவ் மேலும்சொன்னான். குற்றம் செய்துவிட்டு அதிலிருந்து தப்பி விட்டேன்; ஆனால், குற்றவுணர்விலிருந்து தப்பமுடியவில்லை”  

ஆஸ்திரோவ்ஸ்கி வியர்த்துப் போயிருந்த தன் வழுக்கை மண்டையைத் துடைத்துக் கொண்டார். பதினான்கு வருடங்களாகப் புனித லூசையப்புத் தேவாலயத்தில் பாவத்துக்கான மன்னிப்பை வழங்கிவருகிறார். திருப்திதான் என்றாலும் சிலநேரங்களில், பாவத்துக்கான தண்டனை, பாவத்துக்கானமன்னிப்பு போன்ற வார்த்தைகள் அவரை இதெல்லாம் உண்மைதானா என்கிற கேள்விக்கு உட்படுத்தும். ஆரம்பத்தில், அதாவது, இறையியல் மிஷனரியில் படித்துக் கொண்டிருக்கும்போதும் ஆகினால்பாதிரியார்தான் என்று திண்ணமாக நம்பியபோதும் இந்தக் கேள்வி அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவர் தேடுவார். கற்றுக் கொள்வார். இப்படியான தன்னை வருத்தும் கேள்விகளுக்கு சுயமாகவே ஒருபதிலைக் கண்டடைந்து திருப்தி கொள்வார். இருப்பினும், சிலவேளைகளில், அவருக்கு  மனம் ஒப்பாமல்இதெல்லாம் சால்ஜாப்பு என்பது மாதிரியும் படும்

இப்படியாகச் சிந்தித்துக் கொண்டிருந்தவர் துர்கனேவ்விடம் இப்படிச் சொன்னார். “பாவம்செய்தவர்கள் அச்சமடைகிறார்கள். கடவுள் குறித்து அவரின் நிந்தனை குறித்து இவர்கள்அச்சமடைகிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படையே கடவுள்தான். ஒருவேளை, கடவுள் என்கிற வஸ்துகண்டுபிடிக்கப்படாமலேயே போயிருந்தால் பாவம் என்கிற எண்ணமே வந்திருக்காது. சிலர் பாவத்தைச்செய்துவிட்டு ஒரு மெல்லிய குற்றவுணர்வோடு அதைக் கடந்து சென்றிருப்பார்கள். மிகச் சொற்பஅளவிலானவர்கள் தன்னை வருத்தும் பாடாய்ப்படுத்தும் குற்றவுணர்விலிருந்து மீள்வதற்குக்குறைந்தபட்சம் சுயதண்டனையாவது பெற்றிருப்பார்கள். ஆனால், எப்போது கடவுள் என்கிறவன்கண்டுபிடிக்கப்பட்டானோ அப்போதிலிருந்து மனிதனின் செய்கைகள் மாற்றமடைகின்றன.” 

துர்கனேவ் மறுபடியும் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டான். அவன் அப்போதிருந்த மனநிலையில்பாதிரியாரின் இந்தப் பிரசங்கம் தேவையில்லாத ஒன்று போல் பட்டது. அவன் உடல் படபடத்து விக்கிவிக்கி அழுதான். அப்படி அவன் கேவிக் கேவி அழும்போது அவன் வாயிலிருந்து வீணீர் ஒரு கோடு போல்ஒழுகிற்று. பாதிரியாரின் கைகளைக் கூண்டுக்கு வெளியே இழுத்துக்கொண்டு அதில் முகம் புதைத்துக்கொண்டவனான துர்கனேவ் என் தேகம் நடுங்குகிறது தந்தையே கூடவே பஞ்சாட்டம் ஆனதைப்போலவும் படுகிறது என்று உடைந்து அறுந்து விழுந்த வார்த்தைகளால் ஏதோ சொன்னான்

பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி தன் கைகளை துர்கனேவ்வின் பிடியிலிருந்து விடுவித்து, கூண்டுக்குள்இழுத்துக்கொள்ள முயன்றார். அப்போது, துர்கனேவ், அவர் கைகளை இன்னும் ஆழமாகப்பற்றிக்கொண்டு மேலும் சொன்னான். தயவு செய்து உங்கள் கைகளை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்; ஏனெனில், உங்கள் மிருதுவான கைகள் இயேசுவின் கைகளுக்கு ஒப்பானவையாகஇருக்கிறன. அவை என்னைச் சொஸ்தப்படுத்துவது போல் உணர்கிறேன்  

இதற்கு மேலும் தன் கைகளை அவனிடமிருந்து பறித்துக்கொள்வது சரியில்லையென்றுஆஸ்திரோவ்ஸ்கி நினைத்தார். தன் உடலின் பாரம் குறைந்து லகுவாகிய அவர் இருக்கையில் சாய்ந்துஉட்கார்ந்தார். துர்கனேவ்வுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால், தான் சொல்லப் போவதைஅவன் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பவனாக இருந்தால் அது அவனை  முழுமையாகஇல்லாவிடினும்  குறைந்த பட்சம் ஆற்றுப்படுத்தவாவது கூடுமென்று அவர் நினைத்தார். ஆகவே, அவர்விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்

ஆனால், எப்போது கடவுள் என்கிற ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டானோ அப்போதிலிருந்து மனிதனின்செயல்கள் மாற்றமடைகின்றன. அவன் அச்சமடையத் தொடங்குகிறான். அவனின் சுய பாதுகாப்புச்சார்ந்து அது நிகழ்கிறது. கடவுளை இரண்டு விதமாக அவன் பிரித்துப் பார்க்கிறான். முதலாவது, தன்னை உற்று நோக்கும் கடவுள். இங்கு மனிதனானவன் கடவுளுக்கு அஞ்சி தவறுகளைச் செய்யத்துணிவற்றவனாக இருக்கிறான். இரண்டாவது, கடவுளை உற்று நோக்கும் மனிதன். இங்கு, இவன்பாவங்களைச் செய்துவிட்டு பின்னர் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பவனாக இருக்கிறான். இதன் மூலம்தன்னுடைய பாவங்கள் தன்னை விட்டு விலகிப் போய்விடுமென்றும் கடவுள் தன்னை தண்டிக்கப்போவதில்லையென்றும் அவன் நம்புகிறான். கடவுள் உற்று நோக்கும் மனிதன் நேரிய நல்லவனாகவும், கடவுளை உற்று நோக்கும் மனிதன் பொல்லாப்புக்கு அஞ்சாத அஞ்சனக்காரனாகவுமிருக்கிறான். எல்லோருமென்று அல்ல; ஆனால், கணிப்பில், பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தானிருக்கிறார்கள். அவர்களுக்குக் கடவுளும் வேண்டும் குற்றமும் வேண்டும். இன்னொருவகையில் சொல்லப் போனால், அவர்கள் குற்றத்தைச் செய்துவிட்டு அதைக் கடவுளிடம் சமர்ப்பித்து விட்டு ஒரு மன்னிப்புக் கோரலுடன்விலகிப் போய்விடலாமென்று எண்ணுகிறார்கள். இவர்களைப் பொருத்தவரை கடவுள் என்பவன்பாவங்களைப் போக்குபவன். ஒரு வியாபாரி. ஆனாலும் ஏதோவொரு வகையில் இவர்களும் கடவுளைநம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், நேரிய நல்லவன் கடவுளை இவ்வாறாகப் பார்ப்பதில்லை. அவனைப் பொருத்தவரை கடவுள் என்பவன் தன்னை உய்விக்க வந்தவன். தன் சகல நடத்தைகளையும்கடவுளானவன் பார்த்துக் கொண்டிருக்கிறானென அவன் நம்புகிறான். பாவங்களுக்குக் கடவுளிடத்தில்தண்டனை உண்டென்றும் அவன் அறிந்திருக்கிறான். இதனால், பாவங்களைச் செய்வதற்கு அவன்தயங்குகிறான்

துர்கனேவ் அப்போதும் தலையைக் குனிந்தபடிக்கு அழுதவாறு இருந்தான். தன் மூளையைச்சாத்தானின் பாம்புகள் மெல்ல மெல்ல உண்பது போல் அவனுக்குப் பட்டது. பாதிரியார்ஆஸ்திரோவ்ஸ்கியின் கைகளை இறுக்கிக் கொண்ட அவன், தன் கன்னத்தை அதில் ஒற்றிக்கொண்டான். அவன் அவ்வாறு செய்துகொண்டே நானொரு அஞ்சனக்காரனென்றான்.

பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு இப்போது சிறிது படபடப்பும் கூடவே சுவாரஸ்யமும் தொற்றிக்கொண்டது. துர்கனேவ்வின் பதற்றத்துக்கான கதையைக் கேட்க அவர் விரும்பினார். ஆனால், அதைக்காட்டிலும் துர்கனேவ்வை அவன் பதற்றத்திலிருந்து வெளியேற்றவே அவர் விரும்பினார். அவர்தேவனுக்கு ஒப்புக் கொடுத்தார். தான் நன்கு அறிந்த ஒரு மனிதனை அவனின் சகல பாடுகளிலிருந்தும், அவன் செய்த பாவங்களிலிருந்தும் வெளியேற்றி அவனையொரு கடவுள் உற்று நோக்கும் மனிதனாகக்கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பதென அவர் முடிவெடுத்தார். ஆகவே, துர்கனேவ்விடம் அவர் இப்படிச்சொன்னார்

தவறு என்று தெரிந்தும் அதைச் செய்துவிட்டு கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டால் அவர் அதைச்செவிமடுப்பதுமில்லை; பொருட்படுத்துவதுமில்லை. ஆனால், துர்கனேவ் நான் உன்னை நன்கறிவேன். கிராமத்தின் அப்பாவியான மனிதனென உன்னைச் சுட்டி என் சகோதரனிடம் பலமுறைகள் நான்கூறியதுண்டு. நீ தவறு செய்திருப்பாயென நான் நம்பவில்லை. ஆனால், ஏதோவொன்று உன்னைஇம்சிக்கிறது. உன் கதையைச் சொல் துர்கனேவ்…! எதற்காகத் தயங்குகிறாய் கர்த்தருக்காகவா?

இப்போது, பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி சற்று நிறுத்திவிட்டு துர்கனேவ்வின் தலையைக் கோதி விட்டார். பின்பு, “அச்சம் அடையாதே துர்கனேவ் ஏனெனில், கர்த்தரானவர் நீ செய்த செயல்கள்அனைத்தையும் ஏற்கனவே அறிந்து கொண்டு விட்டார் என்றார்

பாதிரியார் இப்படிச் சொன்னதும் துர்கனேவ், தன் எதிரிலிருந்த கூண்டுப் பலகையில் தன் தலையைமோதி மோதி பெரும் குரலெடுத்து அழுதான். துர்கனேவ்வின் இந்தச் செய்கையால் அதிர்ச்சியடைந்தபாதிரியார் பின், ஆசுவாசமடைந்து அவன் தலையைக் கோதிக் கொடுத்தார். அது அவனுக்குஇதமாக இருந்திருக்க வேண்டும். பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கியின் கைகளை மீண்டும் வெடுக்கென்றுபற்றிக்கொண்ட அவன் அவர் கைகளில் முத்தமிட்டு தன் கதையைச் சொல்லலானான்.

ன் மகனை அவள் எனக்குத் திருப்பிக் கொடுக்கும்போது அவனுக்குப் பதினான்கு வயதுமுடிந்திருந்தது. அப்போது அவன் பைத்தியமாக இருந்தான். சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் அவர்களைநீங்கள் அறிந்திருக்கக்கூடுமென நான் நம்புகிறேன். ஊரின் பணக்காரச் சீமாட்டி அல்லவா அவள். அவளிடம்தான் நான் ஆன்டனை அவனுக்கு ஆறு வயதாக இருக்கும்போது வளர்க்கக்கொடுத்திருந்தேன். என் மனைவி தலையிலும் வயிற்றிலும் அடித்தாள். எவ்வளவு துன்பமென்றாலும்பரவாயில்லை. உருளைக்கிழங்குப் பொரியலாவது கிடைக்கிறதல்லவா பெற்ற பிள்ளையை மாத்திரம்இன்னொருவரிடம் கொடுத்து விடாதீர்களென இரைஞ்சி, இரைஞ்சி அழுதாள்

நான் அன்னாவின் சொற்கள் யாவற்றையும் செவிமடுக்காமல் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சிடம் என்மகனை ஒப்புக்கொடுத்தே ஆவதென பிடிவாதமாக நின்றேன். ஏனெனில், அப்போது என் செவிகள்மாத்திரமல்ல; கூடவே, இருதயமும் அடைக்கப்பட்டிருந்தது

சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சுக்கு நான்கு ஆண் மகவுகள் பிறந்தபோது அவள் கணவனானவன் தோல்புற்று நோயால்  இறந்து போய் விட்டான். அப்போது ரஷ்ய நிலமெங்கிலும் அதிகளவிலான தோல் புற்றுநோயாளர்கள் நிரம்பியிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் கோர்க்கின் நிலவுடைமையாளர்களின்நிலங்களைப் பறித்து அல்லது அநியாய விலைக்கு வாங்கி அதைப்  பெருமுதலாளிகள் என்றுசொல்லப்படும் பூர்ஸுவாக்களுக்கு எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதன் மூலம், கேத்ரின்இவானுவிச்சின் கணவனுக்கு இரண்டு பெருநிலங்களின் உடைமையாளன் ஆகும் அதிஷ்டம் அடித்தது. இதனால், கேத்ரீனுக்கு திமிர் பிடித்தவளாகும் வாய்ப்புக் கிட்டியது

கணவனானவன் இறந்ததும் தன் நான்கு மகவுகளையும் அவர்களின் பத்து வயதுவரை தனியே வளர்த்து, பின்னர், அவர்களின் மேற் படிப்புக்காக மாஸ்க்கோவிலிருக்கும் தன் சகோதரனின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். கூடவே, அவர்களின் செலவுகளுக்கென்று மாதாமாதம் பெருந்தொகை பணத்தையும்அனுப்பி வைப்பவளாக அவளிருந்தாள்

பண்ணையில் ஏராளமான பன்றிகளும், வீட்டில் ஏராளமான வேலையாட்களுமிருந்தும் அவள் யாருடனும்பேசாமல் தனிமையிலிருந்தாள். அவ்வப்போது அவள் வெளியில் செல்வதும் உண்டு. அவ்வாறானவேளைகளில், தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்ளும் அவள் ஒரு கிழட்டு மயிலைப் போல்தெருக்களில் நடந்து செல்வாள். அப்போது அவள் முகமானது செருக்குடனும், உதடானதுகோணியுமிருக்கும்

ஒருதடவை, அவள் தாயின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகளான அன்னாவை  அதாவது என் மனைவியை அழைத்து தனிமை தன்னை வாட்டுகிறதென்றும், தன் கணவர் கூடிய சீக்கிரமே தன்னை அழைத்துவிடக்கூடுமென்று தனக்குத் தோன்றுகிறதென்றும், அதனால், ஆன்டனைத் தனக்குக் கொடுத்துவிடும்படிக்கும், தான் அவனை வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கி விடுகிறேனென்றும்சொல்லியிருக்கிறாள். பதறிப்போன அன்னா துடித்து அழுதிருக்கிறாள். நாங்கள் உருளைக்கிழங்குவறுவலைப் பொரித்துச் சாப்பிடுபவர்கள்தான். முகர்ந்து பார்த்தால் எங்களிடமிருந்து மலையாடுவாசனை வரும். ஆனால், பெற்ற பிள்ளையை இன்னொருவரிடம் கொடுத்து வளர்க்கும் அளவுக்குவக்கினையற்றவர்களல்ல என்றும் சொல்லியிருக்கிறாள்

அதற்கு, சீமாட்டி கேத்ரீன் இவானுவிச், உன் கணவன் ஒரு மனிதனாக இருக்கலாம். ஆனால், அவனால்ஒருபோதும் உன்னையோ அல்லது உன் மகனையோ ஒழுங்காகப் பார்த்துவிட முடியாது. அவனொருமாபெரும் குடிகாரன். அவனைப் போன்றவர்களால் ஒரு கழுதையைத்தனினும் மேய்த்து விட முடியாதுஎன்றிருக்கிறாள்.  

நானொரு குடிகாரனாய் இருக்கலாம். ஆனால், என் மனைவி ஒரு ரோஷக்காரி அல்லவா? சீமாட்டிகேத்ரீன் இவானுவிச்சின் வீட்டைவிட்டு வெளியேறும்போது கீழ்வரும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டுவெளியேறியிருக்கிறாள் அவள்

நான் பெற்றெடுத்தது ஒரு பிள்ளையை; பூசணிக்காயை அல்ல

இவை யாவற்றையும் அன்னா இராப்போசனமொன்றில் என்னிடம் சொல்லியபோது, எனக்கு, கொடுத்தால் என்னவென்று தோன்றிற்று. பெரும் பணக்காரி. நல்ல நிலைக்கு ஆளாக்கிவிடுகிறேனென்றும் சொல்கிறாள். இது கடவுளாகக் கொடுத்த வாய்ப்பு. என்னால் ஆன்டனைவளர்க்கத்தான் முடியும் படிக்க வைக்க முடியாது

இதை நான், அன்னாவைப் புணர்ந்த ஒரு இரவில், அவளிடம் சொல்லியபோது அவள் ஒருபோதும் நான்இதற்குச் சம்மதிக்கப்போவதில்லையென்று சொன்னாள். நான், மறுபடியும் மறுபடியும் அவளைவற்புறுத்தி, இதனால் ஆன்டனின் எதிர்காலம் நன்றாக இருக்குமென்றும், தேவையில்லாமல் அவனின்வாழ்க்கையை நாசமாக்கி விடாதே என்றும் கூறினேன்

ஆனால், அவள் பிடிவாதமாக இருந்தாள். கண்களிலிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்ட அவள் மேலும்சொன்னாள். உங்களுக்கு உங்கள் பிள்ளையை வளர்க்கத் திராணியில்லையென்றால் பிள்ளையைப்பெறுவதற்கு மாத்திரம் எங்கிருந்து திராணி வந்தது?”

வாஸ்தவம்தான் அன்னா. ஆனால், இதெல்லாம் வீண் பேச்சு. பிரயோசனமற்றது. பெற்று விட்டோம்; வளர்க்கச் சிரமமாக இருக்கிறது. கொடுத்துத்தான் பார்ப்போமே என்ன வந்து விடப் போகிறது?” 

கனத்த மழை கொட்டிக்கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் அப்போது ஆறு வயதாகயிருந்தஆன்டனை நான் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சுக்கு ஒப்புக் கொடுத்தேன். பெரு மகிழ்வோடு அவனைவாங்கிக் கொண்ட சீமாட்டி கேத்ரீன், நீங்கள் எப்போதென்றாலும் இவனை வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றாள். நான் ஆன்டனைப் பார்த்தபோது அவன், அன்னாவைப் பார்த்துக்கொண்டுகையை நீட்டி அழுது கொண்டிருந்தான். இவை யாவற்றையும் பெருத்த மவுனத்தோடு கவனித்துக்கொண்டிருந்த அன்னாவின் கண்களிலிருந்து கண்ணீர் உமிழ்ந்து கொண்டிருந்தது.  

அதன் பிறகான நாட்களில் ஏதோவொரு பாரம் குறைந்ததைப் போல் நான் உணர்ந்தேன். பகல்முழுவதும் கிடைக்கும் வேலையைச் செய்துவிட்டு இரவு நேரங்களில் மதுபானச்சாலையே கதியென்றுகிடந்தேன். சொச்சமென்று இருப்பதை அன்னாவுக்குத் தருவேன். அவள் இப்போதும் அழுதுகொண்டு தானிருந்தாள். நாள் முழுவதும் கிழங்குப் பொரியலையே அவள் சாப்பிட்டாள். என்னைப் போன்றவொருகணவனை அவளுக்குக் கொடுத்ததையிட்டு அவள் நாள்தோறும் கடவுளைச் சபிக்கக் கூடுமென்றுஎனக்குத் தெரியும். அதை நான் அறிந்தே இருந்தேன். என்ன செய்வது? எனக்கு வோட்கா முக்கியம். அதன் போதை முக்கியம்.

நான் இப்போதுதான் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் வீட்டிலிருந்து வருகிறேனென்றும் அங்கு, நானுன்மகனைப்  பார்த்தேனென்றும் அவனுக்குச் சாதுவாகப் பைத்தியம் போல் தனக்குத் தோன்றியதென்றும்என் சகோதரன் என்னிடம் கூறியபோது அருகில் அன்னாவும் நின்றிருந்தாள். ஆன்டனை இப்போதேஅழைத்து வாருங்களென்றவள் நான் இப்போது முடியாதென்றதும் சினம் கொண்டு என்மீது பாய்ந்தாள். பெற்ற வயிறல்லவா? பற்றி எரிந்தது அவளுக்கு.

நான் மறுநாளே சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சிடம் சென்று ஆன்டனை அழைத்து வந்தேன். ஆரம்பத்தில், மகனைக் குறித்து எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், ஒருநாள் தொடைதெரியக்காற்சட்டையை அணிந்துகொண்டு இரண்டு கைகளையும் அது ஏதோ வட்டம் போல் செய்து முன்னுக்குநீட்டிக்கொண்டு எச்சில் தெறிக்க புர்ர்ர்ர்ர்ர் என்று சப்தமெழுப்பி வானத்தைப் பார்த்துக்கொண்டு ஓடும்போது எனக்குப் பகீரென்றாகி விட்டது. பெற்ற பிள்ளை பைத்தியமென்றால் யாருக்குத்தான் நோகாது. அவன் வயதை ஒத்த சிறுவர்கள் ஏய் பைத்தியமே என்று கேலி செய்து ஆன்டனைக் கற்களால்அடிப்பதை நானே பல தடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன். பரிதாபத்துக்குரியவன் அவன் ஏனெனில், அவன் அப்போதும் சிரித்துக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.

ஏற்கனவே துன்பங்களினாலும், ஏமாற்றங்களினாலும் துவண்டுபோயிருந்த அன்னா, அதன் பிறகு மேலும்துன்பப்பட்டுப் போனாள். வேதனை அவளை அரித்திற்று. நாள்தோறும் கண்ணீர் சிந்திய அவள்பொறுப்பற்ற ஒரு குடிகாரப் பரதேசியான என்னைத் தண்டிக்கும் பொருட்டு ஒருநாள் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டாள்.  

துர்கனேவ் கூறியதைக் கேட்டு பெருமூச்சொன்றைச் சொரிந்து கொண்ட பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி, கூடவே என் தேவனே என்று முணுமுணுத்தார். சிறிது நேர மவுனத்துக்குப் பிறகு இப்படிச் சொன்னார். நான் உன் மகனையிட்டு கர்த்தரிடம் ஜெபிக்கிறேன் துர்கனேவ்; ஏனெனில், அவர் ஆன்டனைப்போன்றவர்களை நிச்சயமாகவே கைவிடுவதில்லை.”

துர்கனேவ் இப்போது அழுவதை நிறுத்தியிருந்தான். அவன் முகம் காய்ந்திருந்தது. பாதிரியாரின்கைகளை மெதுவாக விடுவித்தவன் பின், காய்ந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். பின்பிடரியில் மெல்லத் தட்டி கர்த்தர் என்னை மன்னிக்கவே போவதில்லை என்றான்

பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி குறைந்தபட்சம் அழுகையையாவது நிறுத்தி விட்டானே என்பதில்ஆசுவாசமடைந்தார். அவர் அவனைத் தொடர்ந்து சொல் என்று வற்புறுத்தினாரில்லை. அவனாகவேதொடரட்டும் என்று காத்திருந்தார்

கர்த்தர் நல்லவரென்பதை நான் நம்புகிறேன்; ஆனால், அவரால் என் மகனைச் சொஸ்தப்படுத்தமுடியுமென நான் நம்பவில்லை என்ற துர்கனேவ் மேலும் சொன்னான்.  என்னைத் தண்டிக்கும்பொருட்டாவது என் மகனை அவர் சொஸ்த்தப்படுத்த மாட்டார்” 

பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, நீ உன்கதையை இன்னும் முடிக்கவில்லை; ஆகவே, முதலில் முடி…! மற்றதைப் பிறகு பார்க்கலாம் என்றார்

    •  

கவே, ஒரு அந்திமகாலத்தில், சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சை கொன்றுவிட நான் தீர்மானித்தேன். அது வருடத்தின் இளவேனிற் காலமாக இருந்தது. ஆரம்பத்தில், ஒரு இரவு நேரத்தில் யாருக்கும்தெரியாமல் அவளின் வீட்டுக்குச் சென்று கயிறொன்றினால் அவளின் கழுத்தை நெரித்துக்கொன்றுபோடவே தீர்மானித்திருந்தேன். ஆனால், பின்னர், அதில் திருப்தி இல்லையென்பது போல்படவே கூடவே அந்த ஈவு இரக்கமற்ற இராட்ஷசியின் சாவை அத்தனை இலேசானதாக, வலியற்றதாகஆக்கி விடக் கூடாது என்பதற்காக முதலில் கத்தியொன்றினால் அவளின் நாக்கை அறுத்து பின்புகோபம் அடங்கும் மட்டும் அவளின் உடலைக் குத்திக் குத்தி குருதி தெறிக்கக் கண்டம் துண்டமாகவெட்டிப் போடுவது என்றும் தீர்மானித்தேன்

என் மனம் அமைதியற்றுக் கிடந்தது. ‘கொலைகாரா கொலைகாரா…!’ என்று மண்டைக்குள்குரல்கள் கேட்குமாற் போலவும் பட்டது. அதனாலென்ன…?எப்படியாகினும், சீமாட்டி கேத்ரின்இவானுவிச் என்கிற அந்த சீக்குப் பிடித்த வேசையைக் கொன்றுபோடுவது நிச்சயம் தானே

இராப்பொழுதொன்றில் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சின் வீட்டுச் சுவரேறிக் குதித்தேன். கையில்பளபளக்கும் கத்தி. பால்கனியின் வழியாக உள்ளே நுழைந்த நான், வியர்த்துப்போன தேகத்தோடு ஒருபூனையைப் போன்று அரவமேயில்லாமல் நடந்தேன். மண்டைக்குள் கொலைகாரா…!’ என்கிற குரல்கேட்கிறது. கேட்கட்டுமே…! அதனாலென்ன

இருட்டில் தட்டுத் தடுமாறி அந்த அறைக்குள் நுழைந்தேன். அறையின் மத்தியில் ஒரு நொய்ந்துபோனகதிரையில் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் உட்கார்ந்திருந்தாள். ஏதோ என் வருகையை எதிர்பார்த்துக்காத்திருந்தது போல அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்குத் திக்கென்றாயிற்று. அறையில் ஒரு லேசான மூத்திர நெடியை உணர்ந்தேன். அப்போது, அவள், “துர்கனேவ் என்றாள்

அருகில் சென்று பார்த்தேன். சீமாட்டி கேத்ரின் தலைமயிரின் அடர்த்தி குறைந்து, உடல் மெலிந்து அதுஏதோ சீக்குப் பிடித்த கோழியைப் போல் ஆளே மாறியிருந்தாள். அப்போது, அவள், என்னைக்கொன்றுபோடுவதற்காகத் தானே வந்திருக்கிறாய் துர்கனேவ் ஆட்சேபனையில்லை ஆனால், முதலில் நாம் சிறிது உரையாடுவோம் உன் கையிலிருக்கும் கத்தியை அந்த மேசையில் வைத்துவிட்டு, இதில் உட்கார் என்றாள்

நான் என் கையிருந்த கத்தியை மேசையில் வைத்துவிட்டு இவானுவிச் சுட்டிய கதிரையில் அமர்ந்துகொண்டேன். என் கால்கள் நடுங்கி அப்படி நடுங்கும்போது எனக்குள் ஒரு பதற்றத்தை நான் உணர்ந்துகொண்டேன். சிறிது வியர்ப்பது போலவும் பட்டது. என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒருசமநிலையை அடைய முயற்சித்தேன். அப்படியான ஓர் சூழ்நிலையில் இவானுவிச் தான் மறுபடியும்ஆரம்பித்தாள்.  

இறுதியில், கொலை செய்யும் அளவுக்கு நீ துணிந்து விட்டாய்…!” இதைச் சொல்லிவிட்டு சிறிதுநிறுத்தியவள், குனிந்து தன் கால் விரல்களின் இடைக்குள் சொறிந்து கொடுத்தாள். நான் அவள்விரல்களைக் கூர்ந்து கவனித்தபோது அதில் சிரங்கு போல் ஏதோ கண்டிருந்தது. அப்போது, அவள்மேலும் சொன்னாள்.

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது. கோழை என்று நம்பப்பட்டவன் இன்று ஒரு உயிரைஎடுப்பதற்காகக் கையில் கத்தியுடன் வந்து நிற்கிறான்.” இதைச் சொல்லிவிட்டு அவள் கொஞ்சமாகச்சிரித்துக் கொண்டாள் என்று தோன்றியது. அல்லது அப்படி அவள் சிரித்தாள் என்பது என்கற்பனையாகக் கூட இருக்கலாம். நான் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, உங்களை நம்பித்தானே ஆன்டனை உங்களிடம் ஒப்புக் கொடுத்தேன் என்றுகோர்வையற்ற வார்த்தைகளால் சொற்களை விழுங்கி விழுங்கிச் சொன்னேன்.   

ஆம், அதென்னவோ உண்மைதான் என்றவள் மேலும் சொன்னாள். ஆரம்பத்தில், பெரும் தனிமைஎன்னை வாட்டிற்று. சூன்யமாக இருந்த என் வாழ்வை நான் எதைக் கொண்டாகினும் நிரம்பஎண்ணினேன். அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சியானதாகவும் ஆக்க விரும்பினேன். உன் மகனைஉன்னிடமிருந்து சத்தியமான வார்த்தைகளைக் கூறி தத்தெடுத்துக் கொண்டேன். இச்சம்பவத்தால்நானும் நீயும் மகிழ்வடைய உன் மனைவியோ பெரும் துயரம் கொண்டாள்.” 

இவானுவிச் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் மேசையிலிருந்த கத்தியை ஒருதடவைபார்த்துக் கொண்டேன். அதன் மினுங்கிக் கொண்டிருந்த கூர்மையான முனையைக் கண்டு ஒருநடுக்கம் எனக்குள் ஏற்பட்டாலும்  சீமாட்டி இவானுவிச் கேத்ரீனை எப்படியாவது கொலைசெய்துவிடவேண்டுமென்பதில் நான் திண்ணமாகவே இருந்தேன்.

இவானுவிச் தொடர்ந்தாள்

பள்ளிக்கு மாத்திரம் அனுப்பிக்கொண்டிருந்த அவனை மற்றபடிக்கு நான் வேறு எங்குமே போக விட்டதுகிடையாது. பொத்திப் பொத்தி வளர்த்தேன். அன்பெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒருவிதமான வக்கிரப்புத்திதான். ஏனெனில், அவன் என்னுடைய வயிற்றிலிருந்து வரவில்லை அல்லவா?”

அவன் உங்களுடைய வயிற்றிலிருந்து வரவில்லைதான்; ஆயினும், நீங்களும் அதுவும் நான்குபிள்ளைகளின் தாயல்லவா?”

தாய் என்பவள் சிறந்தவள்தான் துர்கனேவ்…! ஆனால், அவர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்குமாத்திரமே அவ்வாறிருக்கிறார்கள். இன்னொரு பிள்ளையென்று வரும்போது அது அந்நியப்பட்டதாகஇருக்கும்போது அப்பிள்ளைக்கு அத்தாய் சிறந்தவளாக இருப்பதில்லை.”

நிச்சயமாக அப்படி இல்லை சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் என்ற நான் அவளின் கூற்றை மறுத்துமேலும் சொன்னேன். தாய் என்பவள் எப்போதும் எதைக்காட்டிலும் சிறந்தவளே. என் அன்னாவேஅதற்கொரு உதாரணம். ஏனெனில், அவள், தன் சொந்தப் பிள்ளையைக் காட்டிலும் தன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட பிள்ளையையே நன்றாகக் கவனிக்கக் கூடியவளாக இருந்திருப்பாள்.”

நூற்றில் ஒரு விழுக்காடு.”

அதற்கு மேல் நான் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தேன். ஆன்டனின் நினைவு வந்தது. அதில்அவன், புர் புர் என்று சப்தமிட்டு ஒரு கோணலாகத் தன் தலையைச் சாய்த்துக்கொண்டு சிரித்தான். அதற்கு மேல் அவனைப் பார்க்க முடியாமல் அவன் நினைவிலிருந்து வெளியேற முயன்றேன். “அன்னாஅதாவது தன் தாய் இறந்தபோது அதை ஆன்டனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவளின்இறப்பு நிகழ்வில் கூட அது ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாதது போலவே அவனிருந்தான். மாத்திரமல்லாது; நாளைக்கே நானுமே மரணமடையும்போது தகப்பன் இறந்த துயரத்தைக் கூடஉணர்ந்து கொள்ள முடியாமல் என் சவக்குழியில் அது ஏதோ வேடிக்கைபோன்று சிரித்துக்கொண்டுதானே மண்ணை அள்ளிப் போடுவான்? பெரும் துயர் அல்லவா அது?”

ஆம் துயரம் தான். ஆனால் இந்தத் துயரத்துக்கெல்லாம் யார் காரணம்? சபிக்கப்பட்ட உன்னுடையஇந்த விதியை எழுதியது யார்? நீயல்லவா?”

நான் அதிர்ந்து போனேன். என் மகனின் இந்த நிலைமைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? சீமாட்டி இவானுவிச் மீதான என்னுடைய கோபம் இப்போது இரட்டிப்பாகியது. என் கைகள் நடுங்கிஉதடுகள் துடித்தன. கதிரையில் இருந்துகொண்டே அவளின் கழுத்தை நெரிப்பது போல் நினைத்துப்பார்த்தேன். அப்போது அவள் மேலும் சொன்னாள்.

ஒருதடவை, அப்போது உன் ஆன்டன்னுக்கு எட்டு வயதிருக்கலாம். ஏதோ காரணத்துக்காக அவன்பிடரியைப் பொத்தி அடித்தேன். அடியின் பெலத்தினால் குப்புற விழுந்த அவனின் தலையானது நிலத்தில்படீரென்று பெரும் சப்தத்தோடு மோதியது. அன்றைய நாள் பூராகவும் அழுதுகொண்டிருந்தவன் நான்என் அம்மாவிடம் போகப் போகிறேன் என்றான். அவளிடம் சென்று நீங்கள் தனக்கு அடித்ததைப் பற்றிபுகார் அளிக்கப்போவதாகவும் இதனால் என் தந்தை ஆத்திரமுற்று உங்கள் செவிட்டில் நான்கு அடிகள்கொடுப்பாரென்றும் சொன்னான். அதைக் கேட்டு அன்றைய நாள் பூராகவும் நான் சிரித்துக்கொண்டேயிருந்தேன். மறுநாள், எந்தக் காரணமுமில்லாமல் மறுபடியும் அவன் பிடரியைப் பொத்திஅடித்தேன். பதிலுக்கு அவன், என் தந்தையானவர் உங்கள் கூந்தலைக் கத்தரித்து விடுவாரென்றான். எனக்கு அது ஒரு விளையாட்டு போல் ஆனது. அதன் பிறகான நாட்களில் ஆன்டனின் பிடரியைப்பொத்தி அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவன் எல்லாவற்றுக்கும் என் தந்தையானவர்என்றே கூறிக்கொண்டிருந்தான். அந்த வார்த்தை என்னை மேலும் சூனியக்காரியாக்கியது. உன் தந்தைஒரு பெரும் குடிகாரன்; கையாலாகாதவன்; அந்த எதற்குமே லாயக்கற்றவனால் என் நிழலைக் கூடஒன்றுமே செய்துவிட முடியாது என்று கூறிக் கூறி நாள்தோறும் அவன் பிடரியைப் பொத்தி அடிப்பேன். அவனும் நாள் தவறாது தன் பிடரியை என்னிடம் ஒப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தான். சிலநாட்களின் பின்பு, அவன் நடவடிக்கைகள் மாற்றமடைந்தன. உதடுகளைத் திறந்து வைத்துக்கொண்டுதலையைக் கோணலாக்கிச் சிரிப்பான். எச்சில் தெறிக்க கைகளைத் தட்டிக்கொண்டு ஓடுவான். அப்போது, நான், அந்தக் குடிகாரனின் மகன் ஒரு பைத்தியம் எனச் சொல்லி மனத்துக்குள் சிரித்துக்கொள்வேன்.”

எனக்கு அழுகை வரலாயிற்று. கண்களில் கண்ணீரானது சுரக்கவும் செய்திற்று. கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு கொஞ்ச நேரம் அழுதேன். நெஞ்சில் பிடிப்பு போல் ஏதோ வரவே மார்பைவிரல்களால் தடவிக் கொடுத்தேன். சிறிது நேரம் கழித்து, நீங்களே என் மகனைப் பைத்தியமாக்கிவிட்டுஇப்போது பழியைத் தூக்கி என்மீது சுமத்துகிறீர்களே இது என்ன அநியாயம் சீமாட்டி கேத்ரீன்இவானுவிச்? என்ற நான் மேலும் சொன்னேன். “பெற்ற பிள்ளையைப் பார்த்து ஒரு தந்தை தன்வாயாலேயே பைத்தியம் என்று கூறும் துர்ப்பாக்கிய நிலைமையை எனக்குக் கொடுத்து விட்டீர்களே” 

அப்போது, என் மார்பைத் தடவிக் கொடுத்துக்கொண்டே பெரும் குரலெடுத்து அழுதேன். கூடவேவீணீரும் ஒழுகிற்று

நான் அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீமாட்டி கேத்ரீன் இவானுவிச், “துயரம் தான் துர்கனேவ்; ஆனால் ஒரு தந்தையாக உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தத்  துர்ப்பாக்கியநிலைமை உனக்கு ஏற்பட்டிருக்குமா? வேலைக்குப் போய் சம்பாதித்து ஒரு திறமான மனிதனாக, ஒரு நல்ல கணவனாக நீ இருக்கவில்லை. உன் மீது மதிப்புக் கொண்டவர்கள் யாராகினும் ஊரில்இருக்கிறார்களா? இந்த உலகம் பணமிருந்தால் அஞ்சனக்காரர்களைக் கூட மதிக்கும் துர்கனேவ். ஆனால், அதுவே பணமில்லையென்றால் அது கர்த்தராகவே இருந்தாலும் கூட மதிக்காது.” என்றாள்.

ஒரு பெரும் சூதாடி. அவன் வீட்டிலோ எக்கச்சக்கமான வறுமை நிறைந்து கிடக்கிறது. மனைவியையும், குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்ள அவன் பிரியப்படுகிறான். அவனிடமிருப்பது ஒருநோஞ்சான் குதிரையும், அடிக்கடி சக்கரங்கள் கழன்று விழும் ஒரு வண்டியும் தான். சம்பாதிக்கிறான். ஆனால், துரதிஷ்டம். அது போதாமலிருக்கிறது. மனைவியின் முகத்தையும், பிள்ளைகளின் முகத்தையும்அவனால் பார்க்க முடியவில்லை. குற்றவுணர்வு அவனைப் படுத்துகிறது. எப்படியாகினும் அவர்களைநன்றாகப் பார்த்துக்கொள்ள அவன் பிரியப்படுகிறான். நண்பர்கள் சூதாடு என்றும் பணம் அள்ளிநிறையுமென்றும் சொல்கிறார்கள். ஆகவே, அவன் சூதாடுகிறான். கொஞ்சம் பணமும் வருகிறது. தன்பிள்ளைகளைக் குறித்து அவன் கனவு காண்கிறான். நிலைமை தினம்தோறும் அவன் சூதாடுகிறான். கிடைக்கும் பணத்தில், மனைவிக்குத் தங்க மோதிரமும், பிள்ளைகளுக்கு கனமான குளிர் அங்கிகளையும்வாங்கிக் கொடுக்கிறான். அவன் தன்னைக் குறித்துச் சிந்தித்தானில்லை. மனைவியும், பிள்ளைகளும்தான் அவனின் பெரும் செல்வங்கள். ஒருநாள், இவன் தோற்றுப் போகிறான். கையிருப்பு முடிகிறது. நண்பர்களிடம் கடன் பெற்றுச் சூதாடுகிறான். அப்போதும் அவன் தோற்றே போகிறான். விளைவு, பெரும் கடனாளி ஆகிறான். மறுபடியும் அவனை வறுமை சூழ்கிறது. பசியால் அழும் பிள்ளைகளின் முகம்அவனை இம்சிக்கிறது. என்றாவது ஜெயித்து விடுவோமென்ற நம்பிக்கையில் சூதாடுபவனாகவும், பெரும்குடிகாரனாகவும் அவன் மாறுகிறான்.” 

இவை யாவற்றையும் நான் சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சிடம் சொல்லி முடித்தபோது அவள் அதைமறுத்து, நீ என்ன தான் சொன்னாலும் அதெல்லாம் சால்ஜாப்பு. உன் மகனைப் பைத்தியமாக்கியதுநானில்லை; நீதான். ஏனெனில், உன்னைக் குறித்தான எனக்குள்ளிருக்கும் பிம்பமே என்னை இத்தனைஅநியாயங்களையும் செய்வதற்குத் தூண்டிற்று. உனக்குத் தெரியுமா? என் நான்கு மகன்களில் இருவர், அதிலொருவர், மருத்துவராகவும், இன்னொருவர், நகர பிதாவாகவும் இருக்கிறார்கள். அவர்களும் கூடதன் பெற்றோருடன் வளராமல் இன்னொருவருடன் வளர்ந்தவர்களே. இதற்குக் காரணமென்ன? அவர்களை வளர்த்தவர்களுக்கு என் குறித்துப் பயமிருக்கிறது. அதாவது, சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்குறித்து அவர்கள் அச்சமடைகிறார்கள். இல்லையா? உனக்கு இன்னொன்றையும் சொல்கிறேன். நாளையே உன் மகன் அவனின் பைத்திய நிலையிலிருந்து சொஸ்தமடைவானாகயிருந்தால் முதலில்அவன் யாரை நோவான்? அவன் கையிலிருக்கும் கத்தியானது முதலில் யாரை நோக்கித் திரும்பும்? கண்டிப்பாக உன்னை நோக்கித்தான் இல்லையா? என்றாள்.  

நான் பதிலேதும் சொல்லாமல் பெருமூச்சொன்றைச் சொரிந்துகொண்டேன். தொண்டை வறண்டுதாகமெடுத்தது. ஆனால், அவளிடம் தண்ணீர் கேட்க மனமில்லாமலிருந்தது. தாகத்தைக்கட்டுப்படுத்திக்கொண்டு கதிரையை விட்டு எழுந்தேன். என்ன இருந்தாலும் நீங்கள் செய்ததுபச்சையான நம்பிக்கைத் துரோகம்; உங்களைக் கொலை செய்து விடுவதுதான் சரியானது என்றுவிட்டுமேசையிலிருந்த கத்தியை எடுத்து அதன் கூரான முனையைப் பெரு விரலினால் நீவிக் கொடுத்தேன். உலர்ந்திருந்த உதடுகளை நாக்கினால் மேவி ஈரப்படுத்திக் கொண்டே சீமாட்டி கேத்ரீன்இவானுவிச்சை நோக்கிச் சென்றேன்

 அப்போது, சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் தேகம் படபடத்தாள். நான் பதறிப்போய், அவளின் தோளில்கை வைத்து உங்களுக்கு என்ன ஆயிற்று? என்றேன். இப்போது முன்னரைக் காட்டிலும் அவளின் தேகம்படபடத்தது. தலையைச் சரித்து கதிரையில் அழுத்திக் கொண்ட அவள் அப்படியே கொஞ்சம்கொஞ்சமாகச் சரிந்தாள். ஒரு படபடப்போடு கத்தியை அப்பால் வீசிய நான், சரிந்திருந்த சீமாட்டிகேத்ரீன் இவானுவிச்சை நிமிர்த்தி விட்டேன். பயத்தில், என்ன செய்வதென்று தெரியாமல்குளிர்ந்திருந்த அவள் மார்பைத் தடவிக் கொடுத்தேன். சில நிமிடங்கள் கழித்து சுய நினைவுக்கு வந்தஅவள், குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்து வருகிறாயா? என்றாள். பின்பு, தான் அணிந்திருந்த பாவாடையைதன் முழங்கால் வரை தூக்கிக் கொண்ட அவள், காலில் சுற்றியிருந்த வெள்ளைநிறத் துணியைக் காட்டிஅதை அவிழ்த்து என் கால்களைச் சுத்தப்படுத்தி விடு என்றும் நீ அவ்வாறு செய்த பின்னர் என்னைக்கொலை செய்வதற்கான வாய்ப்பை உனக்குக் கொடுப்பேனென்றும் கூறினாள்

ஒரு கையில், வெள்ளைநிறத் துணியொன்றையும் மறு கையில், சுடு நீரினால் நிரப்பப்பட்டசட்டியொன்றையும் எடுத்து வந்து சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் முன்னால் அமர்ந்திருந்த நான் சீழ் வடிந்து மஞ்சள் நிறமாகிப் போயிருந்த அவள் காலின் துணியை அவிழ்க்கலானேன். அப்படிஅவிழ்க்கும்போது ஒரு சகிக்க முடியாத நாற்றத்தை உணர்ந்தேன். ஒருகட்டத்தில், வயிற்றைக் குமட்டிவாந்தி வருமளவுக்கு அந்த நாற்றத்தின் வீரியம் அதிகமாயிற்று. நான் அந்தத் துணியை முழுதாக அவளின்காலிலிருந்து அகற்றிக் கூர்ந்து கவனித்தபோது நிஜமாகினுமே குமட்டிக் கொண்டு வந்தது. நான்என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு சீமாட்டி கேத்ரீன் இவானுவிச்சின் கால்களை என் கைகளில்வாங்கிக் கொண்டேன். அவளின் இரண்டு கால்களும் பாளம் பாளமாகக் கீறப்பட்டிருந்தது. அதில், இரத்தமும், கூடவே சீழ் வடிந்துகொண்டிருந்தது. சில இடங்களில், கருத்திருந்த சிறு சிறுதுவாரங்களையும் நான் கண்டேன். அதிலிருந்து மஞ்சள் நிற சீழானது வடிந்து காய்ந்து போயிருந்தது. அதில் ஏதோ அசையுமாற் போல் படவே அவளின் கால்களை என் முகத்தினருகே கொணர்ந்துகவனித்தபோது அங்கே புழுக்களின் கூட்டமானது நெளிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன்

சட்டியிலிருந்த சுடுநீரில் துணியை அழுத்திப் பின் அவள் கால்களை ஒத்தடம் கொடுப்பதுபோல்சுத்தப்படுத்தினேன். ஆனாலும், சீழானது வடிந்து கொண்டேதானிருந்தது. நான் அவளின் இரண்டுகால்களையும் இரண்டு முறைகள் சுத்தப்படுத்திவிட்டு துணியால் கட்டிக் கொடுத்தேன். அப்போது நன்றிஎன்ற சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் மேலும் சொன்னாள். இரண்டு வருடங்களாக இந்தப் பெரும்அவஸ்தையிலிருந்து என்னால் மீண்டு விட முடியவில்லை துர்கனேவ்.” 

என்னால் அதற்கு மேல் எதுவுமே பேச முடியவில்லை. பெரும் குழப்பமடைந்தவனாக மவுனமாகஇருந்தேன். இப்போது இவளைக் கொல்வதா வேண்டாமா என்று தீர்மானமுமற்று இருந்தேன். அப்போது அவள், திரு. வீரம் கொண்ட துர்கனேவ் அவர்களே உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்போது என்னைக் கொல்வதற்கான முழுச் சுதந்திரத்தை உங்களுக்கு நான் வழங்குகிறேன்என்றாள்.  

நான் எழுந்து கொண்டேன். ஆன்டன் புர் புர்ரென்று சிரித்தான். எச்சில் தெறித்தது. தலையை ஆட்டிஅவன் நினைவிலிருந்து வெளியேறி சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் அவர்களிடம் விடை பெற்றேன். போகும்போது உங்களை உயிருடன் விட்டுச் செல்வதற்கு என்னை மன்னியுங்கள். ஏனெனில், நான்உங்களைக் கொல்வதாக இருந்தால் அது நிச்சயமாக உங்களைத் தண்டிப்பதாகாது. மாறாக, உங்களைக் காப்பாற்றுவதாகவே ஆகி விடும் என்றேன்.

 

கூண்டிலிருந்து எழுந்த வந்த பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி, துர்கனேவ்வின் தோள்களில் அணைத்துஅவனை எழுப்பினார். அவன் விடாப்பிடியாக மறுத்து, நான் பாவம் செய்தவன்; ஒன்றுமறியாத ஒருஅப்பாவிப் பிள்ளையை என் முட்டாள்தனத்தால் பைத்தியமாக்கி விட்டேன்; தயவு செய்து கர்த்தரிடம்இவையனைத்தையும் சொல்லி எனக்குப் பாவ மன்னிப்பை வழங்குங்கள் தந்தையே என்று கூறிபெரும் குரலெடுத்து அழுதான்

கண்டிப்பாக உனக்காக ஜெபிக்கிறேன் என் மகனே…! என்றவர் மேலும் சொன்னார். “உண்மையில், நீஎந்தப் பாவமும் செய்யவில்லை. நீ செய்த ஒரே தவறு குடி தான் வாழ்க்கையென்று இருந்தது. ஆனால், அதையும் நீ வேண்டுமென்று செய்யவில்லை. அதைக் கர்த்தர் உணர்ந்து கொள்வார். கண்டிப்பாக உன் தவறுகள் அனைத்தையும் மன்னித்து, உன்னை அவர் மனம் திரும்பப் பண்ணுவார்.”

சீமாட்டி கேத்ரீன் இவானுவிச் கூறியதைப் போன்று ஆன்டன் சொஸ்தமடைவானாக இருந்தால்அவனுடைய கத்தியானது நிச்சயமாக என்னை நோக்கித் தான் திரும்பும் என்ற துர்கனேவ் அழுதான். பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கியின் மார்பில் முகம் புதைத்து அழுதான். அவரின் கைகளைப்பற்றிக்கொண்டு வீணீர் ஒழுக அழுதான்

அப்போது பாதிரியார், துர்கனேவ்வின் தோளில் அணைத்து அவனின் உச்சந்தலையில் முத்தமிட்டுக்கொண்டார். சடாரென்று அவரை விட்டு விலகிய துர்கனேவ் எழுந்து கொண்டான். கண்களைஅழுத்தித் துடைத்துக்கொண்டவன், ஒரு நிமிடம் அப்படியே நின்று கொண்டான். பின்பு, திடீரென்று, தன்இரண்டு கைகளையும் முன்னுக்கு நீட்டி அது ஏதோ வட்டம் போல் செய்து கொண்டான். பின், தலையை ஒரு மாதிரியாகச் சரித்து புர் புர்ரென்று சப்தமெழுப்பிச் சிரித்துக்கொண்டே அந்தப் புனிதலூசையப்புத் தேவாலயத்தை விட்டு வெளியேறி ஓடினான்

அப்போது பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கி, கனத்த ஹிருதயத்தோடு கர்த்தரே…!’ என்று சொல்லிக்கொண்டார்.  


  • சாதனா சகாதேவன்

குறிப்பு: 

ஆரம்பத்தில், சாதனா என்கிற பெயரில் எழுதிய இவர் ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு ஈழத்தவர். ‘தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’ என்பது இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஆகும். அப்புத்தகம் வரும் வாரங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.