Jump to content

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா... எஸ்.பி.பி நினைவுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை."

தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான்.

அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்தான்.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

மெல்லிசைக் கச்சேரிகளில் பாடுவதும், பாட்டுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவிப்பதையும் ஆர்வத்தோடு செய்தவர். அப்படி ஒரு பாட்டுப்போட்டிக்காக 1966-ல் சென்னை வந்து பாடி இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணியிடம் முதல் பரிசு வாங்கினார் பாலு. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு படமான 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா' படத்தில் 'ஏமி ஈவிந்த மோகம்' என்ற பாடலைப் பாடி திரை உலகில் அறிமுகமானார்.

எந்த எல்லைகளுக்குள்ளும் சிக்காத வித்தியாசமான குரல்வளமே எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் என இளம்வயதிலேயே எல்லைகள் தாண்டிப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. எந்தப் பாடகனுக்கும் ஆரம்பத்தில் உச்ச நட்சத்திரங்களுக்குப் பாட வாய்ப்புக் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆரே ''எனக்கு இந்தப் பையன்தான் பாடணும்!'' எனக் காத்திருந்து 'அடிமைப் பெண்'ணில் பாட வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தனக்காக பாலுவைப் பின்னணிப் பாடகராக தேர்ந்தெடுத்ததே தனிக்கதை. ஒருமுறை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் பிரேக்கில் காற்றுவாங்க மரத்தடியில் உட்கார்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர். பக்கத்திலிருந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆர் படமொன்றின் தெலுங்கு டப்பிங் வெர்ஷன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தாராம் எஸ்.பி.பி. அந்த வித்தியாசமான குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர் தன் உதவியாளரை அழைத்து, ''பையன் யார்னு விசாரிங்க!'' என்று சொல்லியிருக்கிறார். பாலுவின் வீட்டுக்கு கார் அனுப்பி ராமாபுரம் தோட்டத்துக்கே வரவழைத்து, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன் வீட்டிலேயே கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு பி.சுசீலாவோடு ரிகர்சல் பாடவைத்துப் பார்த்திருக்கிறார் எம்.ஜி.ஆர். கனவுபோல எல்லாம் நடந்தது பாலுவுக்கு.

"அடுத்த வாரம் ஜெய்ப்பூர் ஷூட்டிங் போறோம். இந்தப் பாட்டை ரெண்டுநாள்ல முடிச்சிடு... நல்லா பாடு சரியா?" என எம்.ஜி.ஆர் சொன்னதும் தலையாட்டிவிட்டு உற்சாகமாக வீடுவந்து சேர்ந்திருக்கிறார் பாலு. ஆனால், மறுநாள் பாலுவுக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து சேர்ந்தது. ஒருவாரம் கழித்து, சரியானவர் அவசர அவசரமாக கே.வி.மகாதேவனைப் போய் பார்க்க, '' 'ஆயிரம் நிலவே வா' பாட்டுதானே... மெதுவா பாடிக்கலாம். சின்னவரே சொல்லிட்டாரு'' என்று எம்.ஜி.ஆர் காத்திருந்ததைச் சொல்லியிருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

"ஆசை ஆசையா எனக்கு பாடப்போற தகவலை எல்லார்கிட்டயும் சொல்லியிருப்பே. ஏற்கனவே தமிழ்ல நீ பாடின முதல் பாட்டு தாமதமாகுதுனு கேள்விப்பட்டேன். 'நீ குணமாகி வர்றவரைக்கும் காத்திருக்கலாம்னு நான்தான் சொன்னேன்' என எம்.ஜி.ஆரே சொன்னபோது தெய்வமே வந்து சொன்னது போல இருந்தது!" என்று 'அடிமைப்பெண்'ணில் தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்ந்தவர் நம் பாலு!

தமிழில் அவர் பாடிய முதல் பாடல் 'சாந்தி நிலையம்' படத்துக்காக 'இயற்கை எனும் இளையக்கன்னி' என்ற பாடல்தான். ஆனால், 1969-ல் ரிலீஸில் முந்திக்கொண்டது எம்.ஜி.ஆரின் 'ஆயிரம் நிலவே வா!'

எஸ்.பி.பியின் பாடல்களைக் கேட்காமல் தமிழர்கள் யாரும் காதலித்திருப்பார்களா என்று தெரியாது. புதிதாய் அரும்பிய காதலுக்கு, 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்...', காதலை ஏற்பாளா என்ற தவிப்புக்கு, 'சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்?' என்றும், பிரிவில் வாடும்போது, 'காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே' என்றும் எல்லா எக்ஸ்ட்ரீம்களிலும் வெரைட்டியாக ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஆயிரம் பாடல்களாவது பாடியிருப்பார். அந்த வகையில் எஸ்.பி.பி மென் உணர்ச்சிகளுக்கான ஓர் ஆவணம்!

ஆனால், இது பற்றியெல்லாம் எந்தவொரு கர்வத்தையும் அவர் தன் தலைக்குள் ஏற்றிக் கொண்டதே இல்லை. "எல்லாமே இறைவன் கொடுத்தது. நான் அப்படி என்ன சாதிச்சிட்டேன்!" என உளப்பூர்வமாகப் பேசுவார். 

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

பாலிவுட்டில் அவர் அறிமுகம் 1981-ல் கமல்ஹாசனுக்கு பின்னணி பாட கே.பாலசந்தரின் 'ஏக் துஜே கேலியே'வுக்காக! ஆனால், அப்படத்தின் இரட்டை இசையமைப்பாளர்கள் லக்‌ஷ்மிகாந்த்-பியாரிலால் ஜோடி, 'மதராஸி குரல் பாலிவுட்டுக்கு செட்டாகாது!' என்று பாலுவை கடுமையாக நிராகரித்திருக்கிறார்கள். ''படத்தில் இந்தி அதிகம் தெரியாத கேரக்டரில் கமல் நடித்திருப்பதால் எஸ்.பி.பி பாடினால் நன்றாக இருக்கும்!'' என பிடிவாதமாகக் கேட்டுப் பாட வைத்தது கே.பாலசந்தர்தான். அப்படத்தில் லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி பாடிய 'தேரே மேரே பீச் மெய்ன்' பாடல் அகில இந்திய அளவில் ஹிட்டாக, பாலிவுட்டிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கினார் பாலு.

கடவுள் கொடுத்த சங்கீதத்தோடு இங்கீதமும் தெரிந்தவர் பாலு. எந்த இடத்திலும் அவர் உணர்ச்சிவயப்பட்டு பேசி யாரையும் காயப்படுத்தியதே இல்லை. உயிரைக் கொடுத்துப் பாடியபிறகு படத்திலிருந்து தூக்கப்பட்ட பாடல்களும் இருக்கின்றன. இப்போதுபோல அப்போது ரெக்கார்டுகளிலும் இடம்பிடிக்காமல் குப்பைகளுக்குப் போகும் அந்தப் பாடல்களுக்காக அவர் சண்டை செய்ததுமில்லை.

50 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒரேநாளில் அசுரத்தனமாக 19 பாடல்களைப் பாடி ரெக்கார்ட் செய்ததெல்லாம் இன்றளவும் யாரும் மிஞ்ச முடியாத சாதனை. அதேபோல ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருமாறி வெவ்வேறு மொழிகளில் 45 படங்களுக்கு இசையமைத்ததும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இந்தியா முழுவதும் 13 நடிகர்களுக்கு குரல் கொடுத்திருப்பதும் ஆல்டைம் ரெக்கார்ட்தான்!

வெறும் எண்ணிக்கைக்காக மட்டும் பாடாமல் ஒரு பாடகராக அவர் செய்த பரிசோதனை முயற்சிகளுக்கு அளவே இல்லை. கண்டசாலாவின் குரலில் ஆரம்பித்து ஜி.வி.பிரகாஷின் குரல்வரை தன் வாய்ஸில் கொண்டு வந்து பாடுவது அவர் சிறப்பு.

எத்தனை ஏற்ற இறக்கங்களோடு, கடினமான மெட்டுகளுக்குக்குக்கூட அனாயசமாகப் பாடுவது அவர் சிறப்பு. ரஜினிக்காக எஸ்.ஜி.கிட்டப்பாவை இமிட்டேட் செய்து அவர் பாடிய 'பாயும் புலி' படத்தின், 'ஆடி மாசம் காத்தடிக்க...வாடி புள்ள சேர்த்தணைக்க' பாட்டெல்லாம் வேறுவகை. நிறைய பேர் அது மலேசியா வாசுதேவன் பாடியது என்றே இன்றும் நினைக்கிறார்கள்.

எஸ்.பி.பி - இளையராஜா
 
எஸ்.பி.பி - இளையராஜா

"எப்படி இப்படியெல்லாம் குரல் மாற்றிப் பாட முடிகிறது?" என்று கேள்வியாக அவரிடம் கேட்டால், "கண்டசாலா இதை எல்லாத்தையும்விட பல பரிசோதனைகளை செஞ்சிருக்கார். அவர் போட்ட பிச்சைதான் என் இந்த திறமை. அவ்வளவு ஏன்... டி.எம்.எஸ் அவர்கள் எம்.ஜி.ஆர் - சிவாஜினு குரல் மாத்திப்  பாடலையா..? அவங்க முன்னாடி இந்த எஸ்.பி.பிலாம் தூசு!" என்று சுய பகடி செய்திருக்கிறார். 

"இந்தப் பாட்டை உங்களைத் தவிர வேற யாருமே இவ்ளோ சிறப்பா பாடியிருக்க முடியாது" என்று அவரின் ரசிகர்கள் மேடையில் புகழ்ந்தால் பதறி மறுப்பார். "ஒரே பாடலை ரெண்டு பேர் பாடியிருந்தா, அப்ப யார் நல்லா பாடியிருக்காங்கனு தெரியும். ஆனா, இந்த ஒப்பீடு எதுக்குங்க..? நல்ல பாடலை யார் பாடினாலும் கேட்டு ரசிப்போமே!'' என்பார்.

ஐஸ்க்ரீமில் செர்ரி போல நடிப்புத் திறமை என்பது அவர் நமக்குக் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ். மிக நல்ல நடிகர்! "ஒரு பாடகன் என்பவன், கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். நான் பள்ளி நாள்களிலேயே மேடை நடிகன்தான். இயல்பாக நடிப்பேன். அதனால் நடிப்பது சிரமமாக இல்லை. ஆனால், நல்ல அப்பா, நல்ல அண்ணன், நல்ல டாக்டர் என ஒரே மாதிரி ரோல்கள் செய்வது பிடிக்கல. தெலுங்கில் தணிகல பரணியின் இயக்கத்தில் 'மிதுனம்' படத்துல கிடைச்ச மாதிரி சவாலான கேரக்டர்களை எதிர்பார்த்துட்டு இருக்கேன்!" என்று தன் நடிப்பார்வத்தையும் 74 வயதில் வெளிக்காட்டியவர் பாலு.

எஸ்.பி.பியை எல்லோருக்கும் பிடிக்கக் காரணமே அவரின் எளிமைதான். 40 ஆயிரத்துக்கும் மேலான பாடல்கள்... கின்னஸ் சாதனை... 6 தேசிய விருதுகள் உட்பட ஆயிரக்கணக்கான விருதுகள். அவற்றை வைக்கவே வீட்டில் இரண்டு அறைகள் வைத்திருக்கும் மனிதர். எவ்வளவு உயரங்கள் போனாலும் சிகரங்கள் தொட்டாலும் அவர் எல்லோரிடத்திலும் அன்பாகவே இருந்தார். எளிதில் அணுகும் மனிதராக இருந்தார். 

விஜய் - எஸ்.பி.பி
 
விஜய் - எஸ்.பி.பி

அதேபோல உழைப்பில் பெரிதென்ன சிறிதென்ன? துளி ஈகோ பார்க்காமல் ஓடி ஓடி வேலை செய்வார் பாலு. கமலின் படங்கள் தெலுங்கில் டப்பிங் வாய்ஸ் எப்போதுமே எஸ்.பி.பி தான். ஆனால், தமிழில் 'இந்தியன்' படம் கமல் டப்பிங் பேசி முடித்தபிறகு ஓரிடத்தில் சின்னதாய் பேட்ச் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது. கவுண்டமணியை மனீஷா கொய்ராலாவின் ஒட்டகம் கடித்தபிறகு கமல் பேசும் சின்ன டயலாக் அது. கமலை அந்த ஒரு வரிக்காக அழைக்க முடியவில்லை. ரிலீஸுக்குத் தேதியும் குறித்ததால் எஸ்.பி.பியை கடைசி நேரத்தில் அவசரமாக அழைக்க குடுகுடுவென ஓடி வந்து, "அதுக்கிட்ட ஏன்டா ஸ்டொமக்கைக் காட்டுனே?" என்ற அந்த 4 வார்த்தைகளைப் பேசிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அதுதான் பாலு!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் அவர் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை. எல்லாம் தெரிஞ்சுதான் பாடணும்னா இந்த பாலுவே கிடையாது போங்க... நம்மால முடிந்த அளவு பாசிட்டிவிட்டியை விதைப்போமே?" என்பார்.

இளையராஜா
 
இளையராஜா

ஆரம்பகாலங்களில் இளையராஜா ராசய்யாவாக இசைக்குழுவுக்காக இசையமைத்துக் கொண்டிருந்தபோது அக்குழுவின் 'ஸ்டார் அட்ராக்‌ஷன்' சினிமாவில் பாட்டுப்பாடி பிரபலமாகியிருந்த பாலுதான். ''அவன் நிராகரிச்சிருந்தா எங்க இசைக்குழு வெளி உலகுக்கு தெரியாமப் போகக்கூட வாய்ப்பிருக்கு!'' என்று ராஜாவே முன்பு நன்றியோடு சொல்லியிருக்கிறார்.

நீண்ட நெடிய ஒரு இசை சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் உடல் மட்டும்தான் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறது. அவர் குரலின் ஆத்ம ராகமாய் நம் வாழ்வின் சந்தோஷம் துக்கம் என எல்லாவற்றிலும் சங்கீத மேகமாய் யுகங்கள் கடந்து தேன் சிந்துவார் பாலு! வி மிஸ் யூ பாலு சார்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

``எங்களை விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது பாலசுப்ரமணியம்?" - எஸ்.பி.பி நினைவுகள் பகிரும் எஸ்.ஜானகி

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவால் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தவிக்கும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, அவரின் மறைவு குறித்து நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் பணியாற்றிய திரைக்கலைஞர்களும் மீள முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஓர் இசை நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட பாடகி எஸ்.ஜானகி, அதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாலசுப்ரமணியத்தின் திறமையைப் பாராட்டி ஊக்கம் கொடுத்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 
எஸ்.பி.பாலசுப்ரமணியம் Photo: Vikatan

பின்னர், இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். அவை தினந்தோறும் நம் செவிகளைக் குளிர்விக்கின்றன. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவால் அதிர்ச்சியிலும் வேதனையிலும் தவிக்கும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, அவரின் மறைவு குறித்து நம்மிடம் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

``ஆந்திராவில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போது சிறுவனாக இருந்த பாலசுப்ரமணியம் மிகத் திறமையாகப் பாடினார். அவரைப் பாராட்டி, `பெரிய பாடகராக உயர்வாய்' என வாழ்த்தினேன். அதுபோலவே திறமையால் பின்னணிப் பாடகராக உயர்ந்தார். எதிர்பாராத ஆச்சர்யமாக நாங்கள் இருவரும் இணைந்து ஏராளமான சினிமா பாடல்களைப் பாடினோம். அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

ஜானகி
 
ஜானகி

1980, 90-களில் ஒரே நாளில் பல பாடல்களை இணைந்து பாடினோம். அந்தக் காலத்தில் நாங்கள் சந்திக்காத நாள்கள் மிகக் குறைவே. அப்போதெல்லாம் காமெடி செய்து ஒலிப்பதிவு கூடத்தைக் கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் மீண்டும் கிடைக்காத பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும் நான் நடுவராகக் கலந்துகொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார்.

பாலசுப்ரமணியம் உயிரிழந்த தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அழுகையை அடக்க முடியவில்லை. எங்களையெல்லாம் விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது பாலசுப்ரமணியம்? நாம் இணைந்து பணியாற்றிய காலம் மீண்டும் கிடைக்குமா? அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" - என்று கண்ணீருடன் கூறினார் எஸ்.ஜானகி.https://cinema.vikatan.com/music/s-janaki-shares-her-memories-of-s-p-balasubrahmanyam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`` `தங்க தாரகை' பாட்டை எஸ்.பி.பி பாடணும்னு ஜெயலலிதாம்மா ஆசைப்பட்டாங்க!'' - தேவா

''இவருக்கு தெரியாத விஷயங்கள்னு எதுவுமே மியூசிக்ல இல்ல. பெரிய மாமேதை. இவர் வாழ்ந்த காலத்துல வாழ்ந்த பெருமையே போதும்'' - பின்னணி பாடகர் எஸ்.பி.பி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

பிரீமியம் ஸ்டோரி

'' 'பாசமுள்ள நெஞ்சம், பாரமுள்ள நெஞ்சம்'னு கீதைல சொன்ன மாதிரி மனசு பாராமா இருக்கு. நேத்து மாலையில இருந்தே மனசு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இப்படியொரு மனிதரைப் பார்க்க முடியாது. தன்மையான, பண்புள்ள, நல்ல பாடகரை பார்க்குறது கஷ்டம். என்னோட முதல் படத்துல பாடுறப்போகூட, 'இவர் பெரிய இசையமைப்பாளர் இல்லையே'னு ஒரு நிமிஷம் கூட யோசிச்சது இல்ல. எந்தப் பாட்டா இருந்தாலும் அழகுபடுத்தி பாடுவார். அவர் பாடிட்டு போனாலே, ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுல தெரியும். நம்ம நல்ல மியூசிக் டைரக்டரா வந்திருவோம்னு தோண ஆரம்பிச்சிருச்சு. அவரோட குரலை கேட்டாலே இனிமையா இருக்கும். புது மியூசிக் டைரக்டர்னு பந்தா இல்லாம ஃப்ரெண்ட் மாதிரி பழகுவார். ஜாலியா பேசிட்டு இருப்பார்.

எஸ்.பி.பி
 
எஸ்.பி.பி

இன்னைக்கு இந்த இடத்துல நான் இருக்குறதுக்கு காரணம் எஸ்.பி.பி சார்தான். அவரெல்லாம் பாடிதான் என்னை உயர்த்துனாங்க. 'நான் ஆட்டோக்காரன்'னு உற்சாகத்தோட, ஜாலியா பாடலைனா பாட்டு ஹிட் ஆகியிருக்காது. அதே மாதிரியே 'மலரே'னு மெலடி ஹிட்டும் கொடுப்பார். எழுச்சி பாடல்களும்னு பாடியிருக்கார். 'சங்கராபரணம்'னு க்ளாசிக் பாடல்களும் பாடியிருக்கார். இவருக்கு தெரியாத விஷயங்கள்னு எதுவுமே மியூசிக்ல இல்ல. பெரிய மாமேதை. இவர் வாழ்ந்த காலத்துல வாழ்ந்த பெருமையே போதும். இவரை வெச்சுட்டு பாடல்கள் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன். மைக் பக்கத்துல நின்னுட்டு சொல்லிக் கொடுத்திருக்கோம். இந்தப் பெருமை போதும். இவரோட ஒண்ணா புரொகிராம்ல இருந்திருக்கோம். இது போதும்.

கடைசியா ஜனவரில போன்ல பேசுனேன். ஒரு கிறிஸ்துவ ஆல்பம் பாட்டு பாடுனார். ட்யூனோட டிராக் பாடி அனுப்பியிருந்தேன். இதை கேட்டுட்டு செமயா பாடி அனுப்பி வெச்சார். ஜெயலலிதா அம்மாவுடைய 'தங்க தாரகை' பாட்டு அவர் பாடியது. அவர் பாடியதாலேயே சி.எம். அம்மா என்னை பெருசா பாராட்டுனாங்க. எஸ்.பி.பி சாரின் குரல்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். 'ரெண்டு நாள் லேட்டானாலும் பரவாயில்ல. எஸ்.பி.பி சார் வெச்சிட்டு வாய்ஸ் எடுங்க'னு ஜெயலலிதாம்மா சொல்லுவாங்க. உலகமே அவருக்காக பிரார்த்தனை பண்ணாங்க. 'சார், நல்லாயிட்டாரானு' எக்கசக்கமான போன் கால்ஸ் வந்துக்கிட்டே இருந்தது. எப்படிப்பட்ட பாட்டெல்லாம் பாடியிருக்கார்.

தேவா
 
தேவா

எஸ்.பி.பி சாரின் இடம் இனி வெற்றிடம். அந்த இடத்துக்கு இனி யாரும் வரமுடியாது. அவரோட வாய்ஸூக்கு தேனால அபிஷேகம் பண்ணனும். சென்னையில அவரோட இறுதி சடங்கு நடந்துச்சுனா கண்டிப்பா கலந்துக்குவேன். என்னோட 300 படத்துல பாதி படத்துக்கு எஸ்.பி.பி பாடியிருப்பார். ரஜினி, கமல், விஜயகாந்த்னு எல்லாருக்கும் ஓப்பனிங் பாட்டு பாடுன மனிதர் எஸ்.பி.பி'' எனக் கண்ணீரோடு நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் இசையமைப்பாளர் தேவா.

https://cinema.vikatan.com/music/music-director-deva-shares-s-p-balasubrahmanyam-memories

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா?’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பொட்டுவைத்த முகமோ’, ‘தேன்சிந்துதே வானம்’, ‘நந்தா நீ என் நிலா’;  - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா?’, ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘பொட்டுவைத்த முகமோ’, ‘தேன்சிந்துதே வானம்’, ‘நந்தா நீ என் நிலா’;  - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள் 

s-p-balasubramaniam ஓவியம்: இளங்கோ
 

எஸ்.பி.பி... தமிழ் சினிமாவின் இன்னொரு மூன்றெழுத்து மந்திரம். இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை. இவரின் குரலின் கேட்காத செவிகளே இருக்கமுடியாது. சிலர் பேசினால் நன்றாக இருக்கும். சிலர் பாடினால்தான் நன்றாக இருக்கும். ஆனால், எஸ்.பி.பி.யின் குரல், குலோப்ஜாமூன் குரல். ஜீராவின் ஊறிய ஜாமூனைப் போல், அப்படியொரு இனிமையான குரல். பேசினாலும் அப்படித்தான். பாடினாலும் அவ்விதம்தான்!

அன்றைக்கெல்லாம் கோயில் விழாக்களென்றால் பாட்டுக்கச்சேரி நிச்சயமாக இடம்பெறும். உள்ளூர் கச்சேரிக்காரர்கள், சினிமாப் பாடல்களை அப்படியே பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரின் குரலுக்குத் தகுந்தபடி பாடுவதற்கு, இரண்டு மூன்று பாடகர்கள் இருப்பார்கள். எஸ்.பி.பி.யின் பாடலைப் பாடுபவர் எழுந்து மைக் பிடித்தாலே அப்படியொரு கைதட்டலும் விசிலும் பாடுவதற்கு முன்பே அதிரவைக்கும்.

 
 

16010443312948.jpg

‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடல்தான் அன்றைக்கு பெல்பாட்ட இளைஞர்களின் மவுத்டோன் பாடல். எப்போதும் பாடிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பாட்டில் ‘பபபபபப்பாபா... பபபபபபபா’ என்றெல்லாம் எஸ்.பி.பி. ஹம்மிங்கில் விளையாடிவிட்டு பாடலைத் தொடருவார். கிறுகிறுத்துப் போனார்கள் ரசிகர்கள்.
ஜெமினி கணேசனுக்கு ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்று பாடியதுதான் முதல் பாடல். ஆனால் அதற்குள் வந்துவிட்டது எம்ஜிஆருக்காக பாடிய ‘ஆயிரம் நிலவே வா’. அன்றைக்கு டாப் மோஸ்ட் இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.வி.யும் பாடவைத்தார்கள்.

‘அவள் ஒரு நவரசநாடகம்’ என்றும் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என்றும் ‘வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்றும் எம்ஜிஆருக்குப் பாடியது தனி ஸ்டைலாக இருந்தது. ‘நீ எனக்காகப் பாடுற மாதிரி பாடாதே. நீ எப்படிப் பாடுவியோ, அப்படியே பாடு. நான் பாத்துக்கறேன்’ என்று சிவாஜி சொல்ல, ‘பொட்டு வைத்த முகமோ’ என்று பாடினார்.

16010443512948.JPG

‘நான் அவனில்லை’ படத்தில் ஜெமினிக்கு ‘ராதா காதல் வராதா’ என்ற பாடல் அப்போது அட்டகாசமாக புதுரத்தம் பாய்ந்த பாடலாக அமைந்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில், கமலுக்கு ‘கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே’ என்ற பாடல், மைக் பாடலாக அமைந்தது. இதேபோல், ‘பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் கமலுக்கு ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடலும் மைக் பாடலாக ஹிட்டடித்தது.

விஜயகுமாருக்கு ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலும் ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடலும் ஏகப்பட்ட சங்கதிகளுடன் அன்றைக்கு எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடலாக அமைந்தது.

எம்ஜிஆருக்கு ‘அவள் ஒரு நவரசநாடகம்’ தனித்துத் தெரிந்தது. சிவகுமாருக்கு ‘தேன் சிந்துதே வானம்’ முதலான பாடல்கள் அதுவொரு குரலாக த்வனியாக இருந்தன. ’பாடும்போது நான் தென்றல்காற்று’ பாடலில் எம்ஜிஆருக்கு அப்படியொரு ஸ்டைலுடன் பாடியிருந்தார்.

16010443772948.jpg

’எங்கள்வீட்டு தங்கத்தேரில் எந்த மாதம் திருவிழா’ என்ற பாடலும் அப்படித்தான். ‘அவள் ஒரு தொடர்கதை’யில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, அப்போது கைதட்டல் பெறுவதற்காகவும் ரசிகர்களைக் கவர்வதற்காகவும் மேடைகளில் பாடப்பட்டது.

‘மன்மத லீலை’யில் ‘ஹலோ மைடியர் ராங்நம்பர்’ என்ற பாடலைக் கேட்டால் கமல் பாடுவது போலவே இருக்கும். ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில், இரண்டு பாடல்கள்தான். இரண்டுமே எஸ்.பி.பி.யின் தேன் குரலில் வந்தன. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலும் ‘இலக்கணம் மாறுமோ’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

ஜி.கே.வெங்கடேஷ் இசையில், ‘தொடுவதென்ன தென்றலோ’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் இசையில் ‘தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு’ பாடலும் நம்மை தாலாட்டும்.

16010444032948.jpg

இப்படி எழுபதுகளில், கருப்பு வெள்ளை காலத்தில் ஏராளமான பாடல்களை, அன்றைக்கு உள்ள நடிகர்களுக்குத் தக்கபடி பாடினார். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கமலுக்கான எல்லாப் பாடல்களும் எஸ்.பி.பி.தான். ‘எங்கேயும் எப்போதும்’, ‘பாரதி கண்ணம்மா’, இனிமை நிறைந்த உலகமிருக்கு’ என்ற பாடல்களெல்லாம் கமல் பாடுகிறாரா எஸ்.பி.பி. பாடுகிறாரா என்று நம்மை குழப்பும்.

அதில், ரஜினிக்கு, ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலும் ‘பொல்லாதவன்’ படத்தில், ‘நான் பொல்லாதவன்’ பாடலும் ‘பில்லா’ படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா’ பாடலும் ரஜினியே பாடுவது போல் பாடி அசத்தியிருப்பார்.

‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் சிவசந்திரனுக்கு ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்ற பாடலில் எஸ்.பி.பி.யும் கொஞ்சுவார். வயலினும் குழையும். சங்கர் கணேஷின் இசையில் ‘நீயா’ படத்தில், ‘ஒரே ஜீவன்’ பாடலும் ‘நான் கட்டில் மீது கண்டேன்’ பாடலும் சொக்கவைக்கும்.

16010444532948.jpg

யாருக்குப் பாட வேண்டும் என்பதையும் எந்தச் சூழலுக்கான பாடல் என்பதையும் எந்தவிதமான பாவங்களைக் கொண்ட பாடல் என்பதையும் முழுவதுமாக அறிந்து உணர்ந்து அநாயசமாகப் பாடிவிட்டுச் சென்றுவிடுவார் எஸ்.பி.பி. பிறகு அந்தப் பாடலுக்கான காட்சிக்கு நடிகர்கள் அவர் பாடியதற்குத் தக்கபடி நடிக்கவேண்டியிருந்தது.
அப்படித்தான்... தேங்காய் சீனிவாசனும் ஜெய்கணேஷும் பாடுகிற பாட்டு. ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ என்ற பாட்டு. எம்.எஸ்.வி.யும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடியிருப்பார்கள். ‘இலக்கணம் மாறுமோ’ பாடலை எஸ்.பி.பி. பாடிய விதத்தைக் கேட்டு சிலிர்த்துக் கண்ணீர் விட்டார் மெல்லிசை மன்னர். அதேபோல், இந்தப் பாடலை பாடி முடித்ததும் எஸ்.பி.பி.யை அப்படியே கட்டியணைத்துக்கொண்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அப்படி பாலுவை கட்டியணைத்துக்கொள்ள நிலவுலகில் மெல்லிசை மன்னர் காத்துக்கொண்டிருக்கிறாரோ? ‘வான் நிலா நிலா அல்ல என் பாலுவே நிலா’ என்று கவியரசர் அங்கே மாற்றி எழுதித்தருவாரோ?

‘ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது’ என்று பாடியதைக் கேட்டு மகிழ்ந்த ரசிகக்கூட்டம் இனி நிலாவைப் பார்க்கும்போதெல்லாம் பாடும்நிலாவை, பாடும் நிலா பாலுவை நினைத்து நெகிழ்ந்துகொண்டே இருக்கப் போகிறோம்.

கவிஞர்கள் நிலாவை பெண்களுக்கு உவமையாகத்தான் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த உலகில், நிலாவை ஆணுக்கு உவமையாக, அடைமொழியாக மாற்றிக்கொண்ட ஒரே பாட்டுடைத்தலைவன்... பாடும் நிலா பாலுவாகத்தான் இருக்கமுடியும்!

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/583513-s-p-balasubramaniam-5.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட பதிவு, பகிர்வுக்கு நன்றி பிழம்பு .....!   🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.