Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கபிலர் பாடல்களில் அகப்புற மரபுகள்

girlarta.jpg

முன்னுரை

எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், பழமையை சுலபமாக விட்டுவிட முடிவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை. கலை, இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயேயாக்கப் பெற்றுள்ளன. இவ்வகத்திணைப் பாடல்கள் மிகப் பழமையனவாக இருப்பினும், இன்றும் அவை ஆளுமைத்தன்மை மிக்கதாக விளங்குவதைக் காணலாம். சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் திணை, துறை அமைப்புகள் வழி நின்று கபிலர் எத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளார் என்பதை சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அகமும் புறமும்

சங்கப்பாடல்களை அகம், புறம் என்ற இரு பெரும்பிரிவுகளுள் அடக்கி விடலாம். காதல் தழுவிய பாடல்கள் அகம் எனவும், வீரம் தழுவியன புறம் எனவும் கருதப்பெற்றன.

அக உணர்வுகளின் அடிப்படை இவ்விரு எல்லைகளுக்குள் அடங்கி விடுகின்றன. “அனைத்து அகவுணர்வுகளையும் அரிஸ்டாட்டில் இன்பம் துன்பம் என்ற இரு எல்லைகளுக்குள் அடக்குகிறார். பிளேட்டோ விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு எல்லைக்குள்ளும், வைல்ஸ் என்பவர் நல்லது கெட்டது என்ற இரண்டினுள்ளும் அடக்குகின்றனர்” இரு உணர்வுகள் மையமாக இருப்பினும் அவற்றுள் காதல் உணர்வே தலையாயதாகப் போற்றப் பெற்றது.

அகம் என்ற சொல்லே நுண்மை வாய்ந்ததாகவும், பல்வேறு விளக்கங்களுக்குட்பட்டதாகவும் அமைகின்றது. அகத்திணையியல் என்ற சொல்லை ஆராய வந்த இளம்பூரணர், “போக கர்ச்சியாகலான் அதனால் ஆய பயன்தானே அறிதலின் அகம் “ என்றார். உள்ளப்புணர்ச்சி மெய்யுரு புணர்ச்சிக்கு நிகர் என்ற இறையனார் களவியல் உரைகாரரின் குறிப்பும் இலக்கியங்கள் உள்ளத்தை அகம் என்ற சொல்லால் சுட்டுவதும் காண முடிகின்றது.

“மெல்லியலரிவைநின்நல்லகம்புலம்ப” (குறுந் :137:1)

“வாள்வலத்துஒழியப்பாடிச்சென்றவர்

வரல்தோறுஅகம்மலர“
(புறம் :337:3-4)

“ உள்ளத்தால்உள்ளளும்தீதே “ (குறள் : 282)

என மனநிலையையே செயலுக்கு நிகராகத் திருவள்ளுவர் போற்றுவதும் நினைக்க உள்ளத்தோடு - அகத்தோடு தொடர்புற்ற காதல் பற்றிய செய்திகள் அகம் என அழைக்கப்பெற்றது தெளிவாகின்றது.

அகத்தின் சிறப்பு

சமுதாயம் ஆண், பெண் இருபாலாரைப் பெற்றிருப்பினும் ஆண் பாலரைச் சிறப்பிப்பது போல, அகம் புறம் என்ற அமைப்பில் அகத்திற்கே முதலிடம் தந்தது அதன் சிறப்பை உணர்த்தும்.

தொல்காப்பியர் ஒன்பது இயல்களில் புறத்திணைக்கு ஒரு இயலையும், அகத்திணைக்கு அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் எனப் பல இயல்களில் பேசுவது அகத்தின் சிறப்பை எடுத்துரைக்கும்.

அவ்வகையில் அகப்பாடல்கள் உயிரியக்கத்திற்கு அடிப்படையான இன்ப உணர்வை அடிநாதமாகப் பெற்று ஒலிப்பன. இத்தகைய அகப்பாடல்கள் ஒரு சில மரபுகளை அடியொற்றியே இயற்றப் பெற்றுள்ளன.

மரபு - சொற்பொருள் விளக்கம்

கட்டுப்பாட்டை வேறொரு வகையில் குறிக்குமிடத்து மரபு என்று கூறப்படுகிறது என்பார் அ. ச. ஞானசம்பந்தன்.

பழங்காலந்தொட்டே பெரியோர்கள் எவ்வெப்பொருள்களை எவ்வெவ்வாறு குறித்தனரோ அவ்வப்பொருட்களை அப்பெயர்களிலேயேக் குறிப்பது மரபு என்று தொல்காப்பியர் குறிப்பார். எனவே கட்டுப்பாடு என்பதற்கும் மரபு என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது தெளிவு.

அகப் பாடல்களைச் செய்யும் போது புலவர்கள் சில மரபுகளைப் பின்பற்றினர். திணைப்பிரிவுகள், துறைக் குறிப்புகள், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாமை போன்றவற்றை இதற்குச் சான்றுகளாகக் காட்டலாம்.

அகப்பொருள் மரபுகள்

செய்யுள் செய்வோர் தம் மனத்துள் காதலர் கூடுதல், பிரிதல் என்ற இரு பிரிவுகளையேக் கருத்தாகக் கொண்டு பாடுதல் மரபாகும். அவை பாடும் புலவனது மனவுணர்வுகளுக்கேற்ப அமையும். திணை, துறை அமைப்புகள் சங்க அகப்பாடல் உருவாக்கத்தில் துணைபுரிகின்றன. சங்க அகப்பாடல்களுக்கு வகுக்கப் பெற்றுள்ள திணை, துறை அமைப்புகள் அகப்பொருள் இலக்கணச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு, கபிலர் பாடல்களில் கையாளப் பெற்றுள்ள மரபுகளைப் பற்றிய முடிவுகளைப் பெறலாம்.

திணைப்பிரிவும் மரபும்

மரபு பற்றிப் பேசும் போது முதலில் நம் நினைவுக்கு வருவது திணைப்பிரிவாகும். நிலத்தை நான்காகப் பிரித்து, ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறையை அமைத்தனர் பண்டைத் தமிழர். நிலங்களையும் அவற்றில் வாழும் விலங்குகளையும் மரபுரீதியாகப் படைத்தனர். ஒரு திணைப் பொருளை மற்றொரு திணைப்பிரிவில் கூறும் இயல்பு வந்ததால் ‘திணை மயக்கம்’ என்ற ஒன்றினை வகுத்தனர். நிலங்கள் பற்றிக் கூறும் திணைப்பிரிவில் மரபு பிறழாமல் கூற வேண்டும் என்று பழந்தமிழர் கருதினர். சான்றாக பாலை நில வர்ணனை என்று வைத்துக் கொண்டால், அதில் தாமரைத் தடாக வர்ணனை இடம் பெற்றால் அந்தப் பாடலில் நமக்குத் துளியும் உறவேற்படுவதில்லை.

துறை அலகுகள்

ஒரு துறையை உருவாக்கச் சில இன்றியமையாத அலகுகள் பொருந்துகின்றன. அகப்பாடல்கள் அகமாந்தர்களின் கூற்றாக வெளிப்படுகின்றன. எனவே, அப்பாடல்களை உணர்ந்து கொள்ள, அப்பாடல் யார் கூற்று, கேட்போன் யார், எச்சூழலில் என்ன பயன் கருதி அப்பாடல் பாடப்பட்டது என்பதைக் குறித்தத் தெளிவான வரையறைகளைத் துறை அலகுகள் நமக்குத் தருகின்றன.

இத்தகைய துறை அலகுகளை அமைக்கும் போக்கு சங்கப்பாடல்களில் மிகுதியும் காணப்படுகின்றது.

களவுக் கைகோள்

குறுந்தொகைக் கபிலர் பாடல்களில் களவு எனும் கைகோளையே அதிகம் பாடியுள்ளார். குறுந்தொகையில் அவர் பாடியனவாகக் கிடைக்கும் 29 பாடல்களின் கொழு எனக் குறிக்கப்பெறும் துறைக் குறிப்புகளில்,

1. இயற்கைப்புணர்ச்சி - 142

2. பாங்கற்கூட்டம் - 95,100, 291

3. பாங்கியற்கூட்டம் - 13, 142

4. பகல், இரவுக்குறிகள் - 198, 18, 42, 112, 312, 355

5. சிறைப்புறம் - 246, 357

6. அல்லகுறிப்படுதல் - 121

7. வரைவுநீடல் - 25, 38, 153, 187, 208, 247

8. வரைவிடைவைத்துப்பிரிதல் - 87, 106, 225, 241

9. மீண்டுவருதல் - 288

10. வரைவு - 361, 385

11. உடன்போக்கு - 115

என்ற அமைப்பில் காணலாம்.

இயற்கைப் புணர்ச்சி

408274_336119459812803_1784499482_n.jpg

ஒத்த தலைவன் தலைவி எதிர்பட்ட வழி தம்முள் வேறு எந்த நினைப்பும் இல்லாது தம் நிலை மறந்து இணைவதை பண்டைத்தமிழர் ‘இயற்கைப் புணர்ச்சி‘ என்றனர்.

ஊழ்வினை கூட்ட இருவர் தம் உள்ளங்களும் இசைவுபடுதலால் அது இயற்கைப் புணர்ச்சியாயிற்று. அவ்வகையில் கபிலர் பாடலில் இயற்கைப் புணர்ச்சித் துறையில் அமைந்த குறிப்புகளைக் காணலாம்.

குறுந்தொகை 142 -ஆம் பாடல் இயற்கைப் புணர்ச்சித் துறையில் அமைந்த பாடலாகும்.

தலைவியை ஊழின் வசத்தால் காணப்பெற்ற தலைவன் அவளுடன் பேசிவிட்டு நீங்கும் போது தன் உள்ளம் இன்னும் தலைவியிடம்தான் உள்ளது எனவும், இதனைத் தலைவி அறிந்தாளோ இல்லையோ எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாய் துறைக் குறிப்பு காணப்படுகின்றது.

“பள்ளியானையின்உயிர்த்தென்

உள்ளம்பின்னுந்தன்னுழையதுவே”
(குறுந் :142: 4-5)

என்பதில் உள்ளத்துக்கு உயிர்த்தல் இல்லை எனினும், நெஞ்சொடு புணர்ந்து உரைக்கும் மரபு பற்றி இவ்வாறு உரைத்தார்.

பாங்கற் கூட்டம்

தன் அன்புக்குரிய காதற்கிழத்தியை மீண்டும் காண்பதற்கு வாயிலாகும்படி தலைவன் தன் பாங்கனிடம் கூறுதல் ‘பாங்கற் கூட்டம்’ எனப்படுகின்றது.

“மால்வரைஇழிதருந்தூவெள்ளருவி

கன்முகைத்ததும்பும்பன்மலர்ச்சாரல்

சிறுகுடிக்குறவன்பெருந்தோட்குறுமகள்

நீரோரன்னசாயல்

தீயோரன்னவென்னுரனவித்தன்றே ”
(குறுந் : 95)

எனும் இப்பாடல் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தலைவியைப் பிரிந்த பின் தன் வேறுபாடுகள் கண்டு வினவிய பாங்கனுக்கு, குறமகள் மேல்தான் கொண்ட காதலே அதற்குக் காரணம் என்பான்.

பாங்கியற் கூட்டம்

5TAM002.jpg

தன் தலைவியை அடிக்கடி காண்பதற்கு உதவி புரியுமாறு தலைவன் தோழியிடம் சென்று வேண்டிக் கொள்வது ‘பாங்கியற் கூட்டம்’ எனப்படும். குறுந்தொகையின் 13 ஆவது பாடல் தோழியை முன்னிட்டுக் கூடியதாகக் காட்டலாம்.142 ஆவது பாடல் தோழியிடம் குறையிரந்து வேண்டியதாகத் துறைக்குறிப்பு உள்ளது.

பகல் இரவுக் குறிகள்

தோழி மூலமாகத் தலைவியைப் பகற் காலத்திலும் இரவுக்காலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கண்டு திளைக்க சம்மதம் பெற்றுக் கூடுதல் ‘பகற்குறி இரவுக்குறி’ என்ற பெயர் பெற்றன.

குறுந்தொகையின் 198 ஆவது பாடலில் ‘யாம்இயவிற்சேறும்’ என்று தோழி கூறியது தலைவனையும் அவ்விடத்தே வருமாறு பொருள் தந்தது.

இரவுக்குறி

கபிலர் இரவுக்குறியில் அமைந்த துறைகளையேப் பெரிதும் விரும்பிப் பாடியுள்ளார். இரவுக்காலத்தில் காதலியை ஒரு இடத்தில் சந்தித்துப் பேசி மகிழ்வது ‘இரவுக்குறி’ எனப்படுகின்றது.

“காமமொழிவதாயினும்யாமத்துக்

கருவிமாமழைவீழ்ந்தெனஅருவி

விடரகத்தியம்பும்நாடவெம்

தொடர்பும்தேயுமோநின்வயினானே”
(குறுந் : 42)

இப்பாடல் பகல்குறி நீக்கி, இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது என்ற துறைக்குறிப்பு காணப்படுகின்றது.

அல்ல குறிப்படுதல்

தலைவன் செய்த குறி இயற்கையாக நிகழ்ந்து தலைவி அல்ல குறிப்படும் நிலைமையும் கபிலர் பாடல்களில் காணமுடிகின்றது. குறுந்தொகையின் 121 ஆம்பாடலை இத்துறையில் அமைந்ததற்குச் சான்று காட்டலாம்.

வரைவிடை வைத்துப் பிரிதல்

பகற்குறி இரவுக் குறிகளில் தலைவியைப் பெற்று மகிழ முடியாத தலைவன் வரைவிடை வைத்துப் பிரிதலை மேற்கொள்வான். தலைவியின் அருமையை உணர்ந்த பின்னரே இச்செயலைப் புரிவான்.106 ஆவது பாடல் வரை விடை வைத்துப் பிரிந்ததலை மகன் தூது கண்ட தலைவி தூதை ஏற்றுவாயில் நேர்ந்ததைக் கூறுவதாகும்.

வரைவு நீடல்

வரைவு நீடல் துறையில் கபிலர் பல பாடல்களைப் பாடியுள்ளார். வரைவு நீட்டித்தலில் தலைவனே அதிகம் பங்கு கொள்கிறான். இதனால் தலைவி பெரிதும் துன்பப்படுவாள். 25 ஆவது பாடலில், தனக்கும் தலைவனுக்கும் ஏற்பட்ட களவு மணத்தை அறிவார் யாரும் இல்லாத போது,

“யாருமில்லைத்தானேகள்வன்

தானதுபொய்ப்பின்யானெவன்செய்கோ”
(குறுந் :25:1- 2)

தலைவனாகவே வரைந்து கொள்ள வேண்டியது போல் வருகின்றது.

மீண்டு வருதல்

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் மீண்டு வருவதாக ஒரே ஒரு பாடல் செய்துள்ளார் கபிலர். அவன் வரவுணர்ந்த தலைவி “அன்புடையவர்கள் செய்யும் துன்பம் தேவருலக இன்பத்தைக் காட்டிலும் சிறந்தது” என்று கூறுகிறாள்.

உடன்போக்கு

கபிலர் உடன்போக்குத் துறையில் ஒரே ஒரு பாடலைச் செய்துள்ளார்.குறுந்தொகையின் 115 ஆவதுபாடல் உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைவிக்குக் கூறியதாகத் துறைக்குறிப்பு உள்ளது. தலைவிக்குத் தலைவன் பால் உள்ள அன்பை வெளிப்படுத்திய தோழி கூற்றாக வருகின்றது.

வரைவு

வரை பொருளுக்காகச் சென்ற தலைவன் நல்லமுறையில் பொருளீட்டி வந்தான். முதியோர்கள் முன்னின்று வரைவினை மேற்கொள்வான். 361 ஆம் பாடலில் வரைவிற்குரிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தலைவி பிரிவை ஆற்றியிருந்ததைத் தோழி பாராட்டுகிறாள்.

முடிவுரை :

கபிலரது அகச்செய்யுள் துறைகளை நோக்கும் போது, அவர் குறிஞ்சித்திணையின் உரிப்பொருளான புணர்ச்சியும் புணர்ச்சி நிமித்தம் பற்றியே அதிகம் பாடியுள்ளார் என்பது புலனாகின்றது.

முனைவர் கோ. சுகன்யா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

பூ. சா. கோ. அர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,

கோயம்புத்தூர் .

http://www.muthukamalam.com/essay/literature/p264.html

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.