Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் நானாட்டானில் கிடைத்த பண்டையகால நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

 

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 செப்பு  நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்படுகின்றது.

 

இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள் பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்கள் அந்நாணயங்கள் அனைத்தையும் தற்போது முருங்கன் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அந்நாணயங்கள் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கைத் தொல்லியற் திணைக்களத்திடம் ஒப்படைக்க இருப்பதாக அறிகின்றோம். வடஇலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான நாணயங்கள் முதன் முறையாக ஒரேயிடத்தில் கிடைத்திருப்பதால் அந்நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையாவது பார்ப்போம் என்ற ஆவலில் மன்னார் மாவட்ட கௌரவ பாராளமன்ற உறுப்பினர் திரு.சாள்ஸ் அன்ரனி மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் உரிய இடத்தைப் பார்வையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்தனர். 

 

இக்களவாய்வில் எனது மாணவர்களும் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர்களுமான திரு. கபிலன், மணிமாறன், தசிந்தன், கிரிகரன் ஆகியோருடன் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேசசபை உறுப்பினர் ஜொனி, மதகுரு அருண் புஸ்பராஜ், அக்கிராமத்து இளைஞர்களான திரு.செல்வம், கணேஸ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரும் எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் களவாய்வில் பங்கெடுத்தமை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. 

 

நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அக்குழிகள் எவற்றிலுமே புராதன குடியிருப்புக்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. மாறாக இக்குழிகளில் காணப்படும் களிமண் அருகிலுள்ள காணிகளின் மண்ணின் நிறத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. இது பற்றி வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது இற்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணை அருகில் உள்ள குளத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டியதாகக் கூறினார். இதனால் இங்கு பானையோடு கிடைத்த நாணயங்கள் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணோடு வந்தவை என்பது உறுதியாகத் தெரிகின்றது. இந்நாணயங்களில் மீன் சின்னங்களும், வாளும் பொறிக்கப்பட்டுள்ளதால் இவற்றைப் பாண்டியர் முடியாட்சிக்குரிய நாணயங்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

 

தற்போது தென்னிலங்கை ஊடகங்களில் இவை அநுராதபுர இராசதானிகால நாணயங்கள் எனவும் செய்திகள் வெளிவருவதாக அறிகின்றோம். இந்நாணயங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட இன்னும் எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆயினும் முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நானாட்டான் பாடசாலை ஒன்றில் காட்சிக்கு வைப்பதற்காக கொடுத்த நாணயங்களையும், களவாய்வின் போது எமக்கு கிடைத்த இரு நாணயங்களையும், ஊடகங்களில் வெளிவந்த நாணயங்களின் புகைப்படங்களையும் வைத்துப் பார்க்கும் போது இந்நாணயங்களின் முன்பக்கத்தில் மூன்று கோடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடத்தின் மேல் இடப்பக்கமாக அல்லது வலப்பக்கமாக பார்த்த நிலையில் படுத்திருக்கும் நந்தியின் உருவமும், இதற்கு இரு புறத்திலும் குத்துவிளக்கும், நந்தியின் தலைக்கு மேல் பிறைச் சந்திரனும், நாணய விளிம்னை ஒட்டி சிறுபுள்ளிகளும் காணப்படுகின்றன.

 

நாணயத்தின் பின்பக்கத்தில் பீடத்தின் மேல் கிடையாக அல்லது நேராக இரண்டு மீன் சின்னங்களும் இவற்றின் இரு புறத்திலும் குத்துவிளக்கும், விளிம்பை ஒட்டி பிறைச்சந்திரனும், சிறு புள்ளிகளும் .காணப்படுகின்றன. ஆயினும் நாணயங்களின், அளவு, நிறை, வடிவமைப்பு, அழகு. தெளிவு என்பவற்றில் வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

 

இவ்வகையான நாணயங்கள் இலங்கையில் சிறப்பாக வடஇலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பிரின்செப் (1858), எலியட் (1858), கொட்றிங்ரன்(1924), டுல்பே(1966), மிச்செனர்(1998) முதலான நாணயவியல் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். சேயோன் என்ற நிலவியலாளர் வடஇலங்கையில் மாதோட்டம், மன்னார், கந்தரோடை முதலான இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான இவ்வகை நாணயங்களைக் கண்டுபிடித்து 1982 இல் வெளியிடப்பட்ட தனது இலங்கையின் பண்டைய கால நாணயங்கள் என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். 1997 களில் பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1990 களில் இருந்து வடஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எமது தொல்லியல் மேலாய்வின் போது பூநகரி, ஈழவூர், மாதோட்டம், உடுத்துறை, இயற்றாலை, அண்மையில் கட்டுக்கரை முதலான இடங்களிலும் இவ்வகை நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புக்களின் தொடர்ச்சியாக நானாட்டானில் கிடைத்த நாணயங்கள் காணப்பட்டாலும் அவை வகையிலும், தொகையிலும் அதிகமாக இருப்பதால் வடஇலங்கையின் வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வில் இந்நாணயங்கள் அதிக முக்கியத்துவம் பெற இடமுண்டு என்பதில் ஐயமில்லை.

 

பொதுவாக பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது யாழ்ப்பாண அரசின் தோற்றத்திற்கு முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்களை தமிழகத்துடனான அரசியல் வாணிபத் தொடர்பால் வந்தவை என்றே கூறப்பட்டு வந்துள்ளது. இதற்கு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னரே இலங்கைத் தமிழரிடம் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றியது என்ற நம்பிக்கை முக்கிய காரணமாகும். ஆனால் இலங்கையின் சமகாலத் தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் சங்க காலத்தின் சமகாலத்தில் இருந்து தமிழகத்தைப் போல் இலங்கைத் தமிழரிடமும் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றி வளர்ந்ததற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அண்மையில் நானாட்டானில் கண்டுபிடிக்கப்பட்ட நாணய வகைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் அந்நாணயங்கள் வடஇலங்கையில் கிடைத்ததாகவே கூறுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த நாணயங்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. வடஇலங்கைக்கு வெளியே இவ்வகை நாணயங்கள் மிக அரிதாக அநுராதபுரத்திலும், அக்குறுகொட என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. தமிழ் நாடு சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகையான நான்கு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவையும் யாழ்ப்பாணத்தில் இருந்தே பிற்காலத்தில் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளை வடஇலங்கையில் இருந்த அரசோடும், ஆட்சி செய்த அரசர்களோடும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும். இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சின்னங்கள், குறியீடுகள் முதலியன இந்து மதத்தை சிறப்பாக சைவ சமயத்தைப் பிரதிபலிப்பதால் இந்நாணயங்களை வெளியிட்ட அரசின் மதமாக இந்து மதம் இருந்துள்ளதெனக் கூறலாம்.

 

இதுவரைகாலமும் இந்நாணயங்களை ஆய்வு செய்த நாணயவியல் அறிஞர்களில் ஒருசாரார்; நாணயங்களில் மீன் சின்னங்கள் காணப்படுவதால் இவை பாண்டியரால் வெளியிடப்பட்டு தமிழகத் தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இன்னொரு சாரார் இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளமாக இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர். வேறு சிலர் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்கள் சமகாலத்தில் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் இருந்து சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவற்றைப் பாண்டியர் வடஇலங்கைக்கென வெளியிடப்பட்ட தனித்துவமான நாணயங்கள் எனக் கருதுகின்றனர். ஆயினும் இக்கருத்துக்கள் பொருத்தப்பாடாகத் தோன்றவில்லை. காரணம் தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் வடஇலங்கையில் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ள மீன் சின்னங்கள் பொறித்த ஒரு நாணயமாவது தமிழக ஆய்வுகளில் கிடைத்ததாகத் தெரியவில்லை. இவை தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களாக இருந்தால் வடஇலங்கையைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கிடைத்திருக்கவேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பாண்டியர் இலங்கை மீது பல தடவைகள் படையெடுத்ததற்குப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்படையெடுப்புக்கள் மூலம் சோழரைப் போல் பாண்டியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை. மாறாக இப்படையெடுப்புக்கள் மூலம் இலங்கை மன்னர்களிடம் பாண்டியர் திறைபெற்றதற்கே சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளம் இந்நாணயங்கள் வெளியிடப்பட்டவை எனக் கூறுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வடஇலங்கையில் கிடைத்த மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்கள் தனித்துவமானது என்பதில் நாணயவியல் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்துக்கள் காணப்படவில்லை. அத்தனித்துவம் பாண்டியருக்குரியதல்ல. மாறாக இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காணப்படும் தனித்துவமான அம்சமாகப் பார்ப்பதே பொருத்தமாகும்.

 

நானாட்டானில் கிடைத்த நாணய வகைகள் வடஇலங்கைக்கு வெளியே மிக அரிதாக தென்னிலங்கையிலும், தமிழகத்திலும் கிடைத்துள்ள நிலையில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களின் எண்ணிக்கை பல ஆயிரமாகக் காணப்படுகின்றன. இந்த எண்ணிக்கை யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த நாணயங்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளன. இதையே நானாட்டானில் கிடைத்த நாணயங்கள் மேலும் உறுதிசெய்கின்றன.

 

இலங்கையில் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றுவதற்கு இந்தியத் தொடர்பு முக்கிய காரணமாக இருந்தாலும், பண்டுதொட்டு இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களில் முன்பக்கத்தில் நிற்கும் நிலையில் காளையின் உருவமும், நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் அரச இலட்சனையான மீன் சின்னமும் காணப்படுகின்றன. சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட சதுர நாணயங்களின் முன்பக்கத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் உள்ளதைப் போன்ற காளை உருவம் இடம் பெற்றாலும் நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் மீன் சின்னத்திற்குப் பதிலாக ஒரு வட்டமும் வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு சிறு புள்ளிகளும் காணப்படுகின்றன. இச்சின்னங்களே சற்றுப் பிற்பட்ட காலத்தில் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களின் பின்பக்கத்திலும் காணப்படுகின்றன. ஆனால் நாணயங்களின் முன்பக்கத்தில் காளைக்குப் பதிலாக சிங்கள மன்னர் வெளியிட்ட நாணயங்களில் சிங்கம் முக்கிய இலட்சனையாக இடம்பெற்றுள்ளது. இவற்றில் இருந்து சிங்கள மன்னர்கள் சிங்கத்தையும், தமிழர்கள் காளையையும் (நந்தி) தமது அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்துள்ளது. நாணயங்களின் பின்பக்கத்தில் உள்ள சின்னங்களில் காணப்படும் ஒற்றுமை அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறித்திருக்கலாம்.

 

கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட சதுர வடிவிலான நாணயங்களில் அவர்களின் அரச இலட்சனையான மீன் சின்னம் கோட்டுருவில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கிடைத்த சதுர நாணயங்களில் அவை முழு உருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு வடஇலங்கையில் கிடைத்த மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களிலும் காணப்படுகின்றன.

 

நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளில் மூன்று கோடுகளால் அமைந்த பீடத்தின் மேலேயே நந்தியும், மீன் சின்னங்களும் காணப்படுகின்றது. இந்த அம்சம் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் பௌத்த சின்னங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கை நாணய மரபுக்குரிய தனித்துவமான அம்சமாகும். இந்த அம்சத்தை தமிழக நாணயங்களிலோ அல்லது இந்திய நாணயங்களிலோ காணப்படவில்லை. பாண்டியர் இன்னொரு நாட்டை வெற்றிகொண்டு ஆட்சி செய்யும் போது தாம் வெளியிட்ட நாணயங்களில் தமது அரச இலட்சனையான மீனையே பொறித்தனர். ஆனால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் புதிய அரசைத் தோற்றுவித்த பாண்டியரின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் மீனுக்குப் பதிலாக நந்தியையே அரச இலட்சனையாக நாணயங்களிலும், அரச கொடிகளிலும், அரச ஆவணங்களிலும் பயன்படுத்தினர். இதற்கு யாழ்ப்பாண அரசிற்கு முன்னோடியாக நந்தியை அரச இலட்சனையாகக் கொண்ட தமிழ் அரசு வடஇலங்கையில் இருந்தது காரணம் எனலாம். ஆயினும் யாழ்ப்பாண இராசதானிக்கு முற்பட்ட நாணயங்களில் நந்தியின் வடிவம் மூன்று கோடுகளாலால் அமைந்த பீடத்திற்கு மேல் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்களில் பீடத்திற்குப் பதிலாக சேது என்ற மங்கல மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாண இராசதானியை முதலில் தோற்றுவித்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தமிழ் நாடு இராமேஸ்வரம் சேது தலக்துடன் தமக்குள்ள தொடர்பை அடையாளப்படுத்திக் கொண்டனர் எனக் கூறலாம்.

 

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை இராசதானியில் கலிங்கமாகன் ஆட்சியால் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள அரசும் தெற்கு நோக்கி நகர்ந்த போது வடக்கே தமிழருக்குச் சார்பான அரசு கலிங்கமாகன், சாவகன் தலமையில் தோன்றியதாகப் பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வரசின் படைகள், பாதுகாப்பு அரண்கள் திருகோணமலை, கந்தளாய், பதவியா, குருந்தன் குளம், கோணாவில், மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, காக்கதீவு, ஊர்காவற்துறை, வலிகாமம் முதலான இடங்களில் நிலை கொண்டிருந்ததாக இவ்விலக்கியங்கள் மேலும் கூறுகின்றன. இதைச் சமகாலத்திற்குரிய பாண்டியரது கல்வெட்டும் உறுதி செய்கின்றது. இவ்வாதாரங்களை வைத்துப் பார்க்கும் போது மன்னார் நானாட்டனிலும், வடஇலங்கையின் ஏனைய வட்டாரங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட நந்தி, மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களை யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வடஇலங்கையில் நந்தியை அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டவை எனக் கூறுவதே பொருத்தமாகும்.

 

குறிப்பு

 

ஆதிகால, இடைக்கால இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்களின் முன்பக்கத்தில் நந்தியும், நாணயங்களின் பின்பக்கத்தில் மீன் வடிவங்களும் முக்கிய சின்னங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நந்தியின் வடிவம் அரச இலட்சனையையும், மீன் சின்னங்கள் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் கடல்சார் தொடர்புகள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கலாம். மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அங்குள் அருங்காட்சியங்கள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணயங்களையும், தனிநபர்களின் சேகரிப்பிலுள்ள நாணயங்களையும் நேரில் பார்வையிட்டு ஆராயும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கையில் கிடைத்துள்ள மேற்மேற்கூறப்பட்ட சின்னங்கள் கொண்ட நாணயங்களை அங்கு காணமுடியவில்லை.

 

கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேல் தமிழகத்தின் குக் கிராமங்களுக்கெல்லாம் சென்று நாணயங்களைச் சேகரித்து பதினைந்துக்கு மேற்பட்டநூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்ட தஞ்சாவூர் அளக்குடி ஆறுமுகம் சீதாராமனுடம் பல தடவைகள் இலங்கையில் கிடைத்து வரும் நாணயங்கள் பற்றி கலந்துரையாட முடிந்தது.அவர் நந்தியும், மீன் சின்னமும்பொறித் த நாணயங்களின் வடிவமைப்பும், அவற்றின் கலைமரபு, தொழில்நுட்பத் திறன், அழகு என்பவற்றை தமிக நாணய மரபிற்கு அந்நியமானவை என்றே உறுதிபடக் .கூறுகின்றார். ஆகவே யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்ற பாரம்hரிய நம்பிக்கையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி அவற்றை இலங்கை மண்யேடொட்டி வாழ்ந்து வரும் தமிழருடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும். அதன் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு புதுமுகவரி கிடைக்கும்.https://www.virakesari.lk/article/91139

  • Thanks 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நானாட்டானில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் பாண்டியர் காலத்தவையா? அநுராதபுரம் இராசதானி காலத்தவையா?

  • உமாச்சந்திரா பிரகாஷ்

uma-chanra.jpgண்மையில் மன்னார் – நானாட்டான் பகுதியில் பழங்காலத்து நாணயங்கள் 1906 கிடைத்தமை தொடர்பில் பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்விடயம் தொடர்பில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை இங்கு கட்டுரையாகக் குறிப்பிடுகிறேன்.

மன்னார் – நானாட்டான் பகுதியில் பழங்காலத்து நாணயங்கள் கிடைத்த செய்தி அறிந்த பேராசிரியர் உடனடியாக அங்கு சென்று, குறித்த நாணயங்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார். மன்னாரில் கிடைத்த 1906 நாணயங்களும் முழுமையாக பொலிஸ் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த பொலிஸ் அதிகாரி பாடசாலையில் வைப்பதற்காகக் கொடுத்த சில நாணயங்களையும், கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற நாணயங்கள் சிலவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்திய பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் சில கருத்துக்களை முன்வைத்தார்.

பொதுவாக 1906 நாணயங்கள் கிடைக்கப்பெற்றதாகக் குறிப்பிட்டாலும், அதை விட கூடுதலான எண்ணிக்கையிலான நாணயங்கள் அங்கு கிடைக்கப்பெற்றமை தொடர்பில் அங்கிருந்தவர்களுடன் உரையாடியதில் இருந்து பேராசிரியர் அறிந்து கொண்டமையை உறுதிப்படுத்தினார்.

1-10-13.jpg

கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள்

மன்னார் – நானாட்டான் பகுதியில் கிடைக்கப்பெற்ற பழங்காலத்து நாணயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பலவும், குறித்த நாணயங்களில் மீன் சின்னம் இருப்பதால் அந்நாணயங்கள் பாண்டியர் காலத்து நாணயங்கள் என செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல, அந்நாணயங்கள் அனுராதபுர இராசதானி காலத்து நாணயங்கள் என செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் மன்னார் – நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்களுக்கு ஒப்பான நாணயங்கள் முதன்முறையாக இங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான நாணயங்கள் பல 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடக்கம் வட இலங்கையில் தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த நாணயங்களும் பற்றி பிரின்செப் (Prensep), எம். மிச்செனர் (M. Mitctciner), எப். ஹுல்சே (F. Hultzsch) மற்றும் எச். டபிள்யூ. கொட்றிங்கன் (H. W. Codrington) முதலியோர் ஆய்வு செய்துள்ளார்கள். கே. என். வி. சேயோன் (K. N. V. Seyon) என்னும் நிலஅளவையாளர் பல நூற்றுக்கணக்கான நாணயங்களை மன்னார், மாதோட்டம், கந்தரோடை போன்ற இடங்களில் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, இவ்வகையான நாணயங்கள் பல 1991 ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

pushparatnam.jpg

பேராசிரியர் புஷ்பரட்ணம்

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தம் 2009 இல் நிறைவுக்கு வந்தது. ஆயினும் யுத்த காலப் பகுதியான 2001 ஆம் ஆண்டு ‘இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்’ என்னும் நூலையும், 2002 ஆம் ஆண்டு ‘Ancient Coins of Sri Lankan Tamil Rulers’ என்னும் நூலையும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எழுதி, வெளியிட்டிருந்தார். ஈழத் தமிழர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நூல்களாக அவை வரலாற்றில் பதிவாகின்றன. யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக தமிழ் நாணயங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை தமிழ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட நாணயங்கள் என்ற கருத்தே பொதுவாகக் காணப்பட்டது. ஆனால் அக்கருத்து முற்றிலும் தவறானது என்பதை பேராசிரியர் எழுதிய குறித்த இரண்டு நூல்கள் ஊடாகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொள்வதற்காக 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் தஞ்சாவூருக்கு சென்றபோது, வட இலங்கையில் கிடைத்த நாணயங்களின் புகைப்படங்களையும் பேராசிரியர் தமிழகத்திற்கு தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தனிநபர் நாணய சேகரிப்பாளர்களிடம் இருந்த நாணயங்களை அவர் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்ததுடன், இங்கிருந்து தமிழகத்திற்கு எடுத்துச் சென்ற நாணயங்களின் புகைப்படங்கள் தொடர்பில் நாணயங்கள் தொடர்பான ஆய்வாளர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு பேராசிரியருக்கு கிடைத்திருந்தது. பெரும்பாலான தமிழ் நாணயங்கள் தமிழக அரச வம்சங்களால் வெளியிடப்பட்டமைக்கான எவ்விதமான ஆதாரங்களும், சான்றுகளும் அங்கு கிடைக்கவில்லை என்பதுடன், இலங்கையில் பெருந்தொகையாகக் கிடைக்கப் பெறுகின்ற நாணயங்களில் ஒன்று கூட தமிழகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் கிடைத்த நாணயங்களுக்கும் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்களுக்கும் இடையில் கலைமரபு, வடிவமைப்பு மற்றும் சின்னம் ஆகியவற்றில் பெரும் வேறுபாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் கிடைக்கப்பெற்ற தமிழ் நாணயங்கள் ஏறத்தாழ கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணய மரபுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டுள்ளன. சிங்கள மன்னர்கள் தாங்கள் வெளியிட்ட நாணயங்களில் சிங்க உருவத்தை அரச இலட்சினையாகப் பிரதானப்படுத்தியிருந்தார்கள். ஆனால் தமிழ் மன்னர்கள் சிங்கள மன்னர்களுக்கு முன்னரே நந்தி சின்னத்தை அரச இலட்சினையாக பிரதானப்படுத்தி நாணயங்களை வெளியிட்டிருந்தார்கள். ஆயினும் அந்நாணயங்கள் வெளியிடப்பட்ட பிற்பகுதியில் சிங்கள அரசர்களும் இலங்கைத் தமிழ் அரசர்களும் வெளியிட்ட நாணயங்களில் ஒரே வகையான சின்னங்கள் இடம்பெற்றதை அவதானிக்கலாம். அதாவது அந்நாணயங்கள் இலங்கை நாட்டை அல்லது அநுராதபுர அரசைக் குறிப்பதாக அமையலாம் என்று பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் ஏற்கனவே கூறிய கருத்தை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

book-03.pngமன்னார் – நானாட்டான் பகுதியில் கிடைத்த பழங்காலத்து நாணயங்கள் போன்ற நாணயங்களின் தகவல்களை ஏற்கனவே பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தனது ‘இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்’ மற்றும் ‘Ancient Coins of Sri Lankan Tamil Rulers’ என்னும் நூல்களில் ‘வட இலங்கை அரசு கால நாணயங்கள்’ மற்றும் ‘Coins of Northern Sri Lanka’ ஆகிய தலைப்புகளில் தனித் தனி அத்தியாயமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியுள்ளார். அதில் கிட்டத்தட்ட 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு இடையேயான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றைக் கால அடிப்படையில் வரையறை செய்து பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறித்த நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் குறித்த நாணயங்கள் தொடர்பான காலக் கணிப்பும் வரலாற்று ஆய்வாளர்கள் பிரிட்செப், மிச்னர் (Mitchner) மற்றும் எப். ஹுல்சே (F. Hultzsch) ஆகியோரின் காலக் கணிப்பும் ஒன்றாக உள்ளன. ஆயினும் இலங்கையில் கண்டெடுத்த நாணயங்களில் உள்ள மீன் சின்னத்தை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, இலங்கைத் தமிழ் மன்னர்களின் நாணயங்களில் சில தனித்துவமான பண்புகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அதேவேளை, அவை தமிழ் நாட்டு அரசர்களால் வட இலங்கைக்கு என தனித்துவமாக வெளியிட்ட நாணயங்கள் என்ற கருத்தையே முன்வைத்திருந்தார்கள். ஆனால் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் எழுதிய நூல்களில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அநுராதபுரத்திற்கு வடக்கே உள்ள திருகோணமலையில் ஒரு தனி அரசு இருந்ததமைக்கான ஆதாரங்கள் பாளி இலக்கியங்களில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

book-01-660x1024.jpgமேலும் அநுராதபுரத்திற்கு தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பிரதேசங்களில் அரசனின் சார்பாக ஆட்சி புரிவதற்கான பிரதிநிதிகளை நியமித்த வேளைகளில், அநுராதபுரத்தின் வடக்கில் பிரதிநிதிகளை நியமித்தமைக்கான எந்தவிதமான சான்றுகளும் கிடைக்கவில்லை எனவும், அதேவேளை அநுராதபுரத்திற்கு தெற்கே மிக நீண்ட தொலைவில் அமைந்திருந்த தென்னிலங்கையில் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு மற்றும் வரலாறு ஆகியவற்றைக் குறிப்பிடும் பாளி இலக்கியங்கள் வட இலங்கை தொடர்பான அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் தொடர்பான உறவுகளை அதிகம் குறிப்பிடவில்லை எனவும் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.

மேலும் குறித்த பாளி இலக்கியங்கள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அநுராதபுரத்திற்கு வடக்கில் அமைந்திருந்த பிரதேசம் தொடர்பான அரசியல் உறவுகள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றன. அந்த உறவுகள் கூட வடக்கில் இருந்து அநுராதபுர அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் படையெடுப்புக்கள் பற்றியதாகவும், தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுத்த தமிழ் அரசர்களுக்கு இங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதரவு வழங்கி, அநுராதபுர அரசிற்கு எதிராக சேர்ந்து செயற்பட்டு, அநுராதபுர அரசை தோற்கடித்ததாகவும் பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் பல ஆதாரங்கள் காணப்படுவதாகவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பாகக் கூறுகின்ற தமிழ் இலக்கியங்கள் 8 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வருகையைத் தொடர்ந்து கந்தரோடையில் இருந்த தமிழ் அரசு சிங்கை நகருக்கு மாறியதாகக் கூறுகின்றன. மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பின்புலங்களையும் அநுராதபுர அரசிற்கும் வட இலங்கைக்கும் இடையில் இருந்த தொடர்புகளையும் பார்க்கும்போது, அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய அரசுகளின் ஆட்சிக்குள் வட இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது புலனாகிறது. இவற்றை உறுதிப்படுத்துவதற்கு முன்பக்கத்தில் நந்தி சின்னமும் பிற்பக்கத்தில் மீன் சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பேராசிரியரின் வாதமாகும்.

ஏனெனில் யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது நாணயங்களை விட வகையிலும் தொகையிலும் நந்தி சின்னமும் மீன் சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. இந்தியாவின் தமிழகத்தில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் மீன் சின்னத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், தமிழகம் மற்றும் இலங்கையில் கிடைக்கப்பெற்ற இரண்டு மீன் சின்னங்களுக்கும் இடையில் எந்தவிதமான ஒற்றுமைகளும் காணப்படவில்லை. சங்க காலத்தில் பாண்டியர்கள் மீன் சின்னத்தை கோட்டு உருவில் பயன்படுத்தியபோது, இலங்கையில் குறித்த மீன் சின்னம் முழுமையான உருவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பாண்டியர் காலத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டாலும், அதன் முன்பக்கத்தில் நந்தி சின்னம் பொறிக்கப்பட்டமைக்கான காரணம், நந்தி சின்னம் மாத்திரம் பொறிக்கப்பட்ட அரச நாணயங்கள் இருந்தமைக்கான எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் இல்லை எனவும் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.

அண்மையில் மன்னார் – நானாட்டான் பகுதியிலும் வேறு பல இடங்களிலும் கிடைத்த நாணயங்களை பேராசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, குறித்த நாணயங்களில் பொறிக்கப்பட்ட நந்தி சின்னமானது, மூன்று கோடுகளாலான பீடத்தின் மேல் அமைந்துள்ளமையையும், குறித்த மூன்று கோடுகளாலான பீடம் இலங்கையில் கிடைத்த தமிழ் – சிங்கள அரச நாணயங்களைத் தவிர இந்தியா – தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஆதி கால அல்லது இடைக்கால நாணயங்களிலோ காணப்படவில்லை என்பதையும் பேராசிரியர் குறிப்பிட்டார். ஆகவே அதன் மூலம் குறித்த வகையான நாணயங்கள் இலங்கைக்கு உரிய தனித்துவமான பண்புகளுடன் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்டவாறு மூன்று பீடத்தின் மேல் நந்தி சின்னம் பொறிக்கப்படும் மரபானது, இலங்கைத் தமிழர்களிடம் கி.பி. 3 நூற்றாண்டு தொடக்கம் தோற்றம் பெற்று வளர்ச்சிடைந்துள்ளது. ஆகவேதான் மீன் சின்னமும் நந்தி சின்னமும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வட இலங்கை அரசுகளுடன் மாத்திரம் தொடர்புபடுத்த முடியும் என பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக தமிழர்களுக்கு சார்பாக கலிங்கமாகன், சாவகன் அரசுகள் வன்னிப் பெருநிலப்பரப்பிலும் குடநாட்டிலும் இருந்தமைக்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் அவர்களின் படைவீரர்கள் தங்கியிருந்த இடங்களாக மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, திருகோணமலை, பதவியா, கந்தளாய், கோணாவில், ஊற்காவற்துறை, வலிகாமம் முதலிய இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஆகவே குறித்த விடயங்களை கருத்தில் கொள்ளும்போது, அண்மையில் மன்னார் – நானாட்டான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வெளியிடப்பட்ட நாணயங்கள் என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும். பொதுவாக பாண்டிய மன்னர்கள் இந்தியா – தமிழகத்தில் இருந்து வேறு நாட்டின் மேல் படையெடுத்து, குறித்த நாட்டைக் கைப்பற்றிய சந்தர்ப்பங்களில் தங்கள் மீன் சின்னத்தை நாணயங்களில் பொறிக்கும் மரபைப் பின்பற்றினார்கள். முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு அரசு ஒன்றைத் தோற்றுவித்தவர்கள் பாண்டியர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் ஆவார்கள். ஆனாலும் அவர்கள் நல்லூரில் அமைக்கப்பட்ட அரசுக்கான நாணயங்களில் மீன் சின்னத்தை பொறிக்கவில்லை.

மாறாக ஆரியச்சக்கரவர்த்திகள் நந்தி சின்னத்தையே பொறித்திருந்தர்கள். அதற்கான பிரதான காரணம் யாழ்ப்பாண அரசுக்கு முந்தைய காலத்தில் நந்தியை அரச இலட்சினையாகக் கொண்டு ஆட்சி புரிந்த தமிழ் அரசு இருந்தமை காரணம் என பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/79462

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.