Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன் - உரையாடல் அனோஜன் பாலகிருஷ்ணன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன்

உரையாடல் அனோஜன் பாலகிருஷ்ணன்

நான் Copy என்று ஒருபோதும் சொல்லவில்லை. Plagiarism என்று எங்கும் சொல்லவில்லை. இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை உள்வாங்கும் எழுத்தாளரிடமிருந்து வருகின்ற வெளிப்பாடுதான் இலக்கியச் செயல்பாடு. அது ஏதோவொரு விடயத்தில் ஒன்றைப் பின்பற்றுதல், இன்னொன்றைப் பார்த்து எழுதுதல், போலச் செய்தல், சேர்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்றுதான் இயங்குகின்றது. இப்படிதான் இலக்கியம் இயங்க முடியும். நேரடியாக ஒன்றைப் பார்த்து அப்படியே எழுதிய சம்பவங்களும் உண்டு. அது தவறு. வேறு சிலர் சிலதை மட்டும் பார்த்து எழுதியும் இருக்கிறார்கள் அது மன்னிக்கக்கூடிய தவறு. இந்த எந்தக் குற்றச்சாட்டையும் இச்சா விடயத்தில் நான் வைக்கவில்லை. தெளிவாகச் சொல்கிறேன். ஐடியாஸ், (ideas) வடிவம் சார்ந்த ஐடியாஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கின்றேன்

லெயிட்டஸ்டோனில் அமைத்திருக்கும் Alfred Hitchcock பப்பில் என்னை மாலை சந்திப்பதாக சேனன் சொல்லியிருந்தார். போய்ச் சேர்ந்தபோது கறுத்த குளிரங்கியை அணிந்தவாறு கடும் களைப்புடன் அவருடைய வேலைத் தளத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தார். Alfred Hitchcock இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு சென்று திரைப்படங்களை இயக்கியவர். அவர் எடுத்த சைக்கோ திரைப்படம் பெரும் புகழ்பெற்றது. அவர் சிறுவயதில் வளர்ந்த வீட்டைத்தான் விடுதியாக மாற்றியிருந்தார்கள்.

அந்த விடுதியில் இரண்டு கின்னஸ் ஸ்டவுட் பியரை ஓடர் செய்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தோம். வெளியே குளிர் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.

சேனனின் முதல் நாவல் ‘லண்டன்காரர்’ வந்தபோது அதை வாசித்துவிட்டு சிறிய நூல் விமர்சனக் கூட்டத்தை யாழ்.நூலகத்தில் நண்பர்களுடன் இணைந்து ஒழுங்கமைத்து உரையாடியிருந்தோம். விமர்சனம் கடுமையாக இருந்தது. அதன் பின்னர் ஒருமுறை சேனனுடன் ஸ்கைப்பில் பேசக்கிடைத்தது. இங்கிலாந்து வந்த பின்னரே நேரில் சந்தித்தேன். எனது பல்கலைக்கழகம் லண்டனுக்கு வெளியே இருந்ததால் அடிக்கடி சேனனை சந்திக்க முடிந்ததில்லை. லண்டன் நகருக்குள் வரும்போது அவரது வீட்டிலும் இரவு படுத்துறங்கிச் சென்றிருக்கிறேன். அவரது சிறிய வீட்டில் ஒரு Sofa உண்டு. அடியில் பிடித்து இழுத்தால் படுக்கையாக விரிந்துவிடும். அந்த Sofa வில் படுத்துறங்கியவர்களின் கதைகளை தனி நாவலாக எழுதும் அளவுக்கு நீண்டது அக்கதை.

Senan.jpg?resize=1020%2C765&ssl=1

அவருடன் இங்கிலாந்தில் நிகழும் போராட்டங்கள் சிலவற்றுக்கு சென்றும் இருக்கிறேன். அப்போது அடுத்ததாக ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருந்தார். அது என்ன கதை, என்ன களம் என்பதைச் சொல்லவில்லை. சரி தலைப்பு என்ன என்று கேட்டுப் பார்த்தேன். பரம ரகசியம் என்றார். அடிக்கடி நாவல் என்ன ஆகிவிட்டது என்று விசாரிப்பது வழக்கம். இறுதியில் நாவல் வெளியாகிவிட்டது.

‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ ஈழ யுத்தத்தையும் புலம்பெயர் சிதைவையும் மறுபடியும் ஈழ இலக்கியத்தில் பேசியிருக்கக்கூடிய ஒரு நாவல். ஆனால், இந்த நாவல் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள வித்தியாசம்தான் இந்த நாவலை மற்றையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. இதுவரை யதார்த்தவாத பாணியில் சொல்லப்பட்ட ஈழப் போர்க் கதையாடலை அதிலிருந்து விலத்தி மிகுகற்பனை, மஜிக்கல் ரியாலிசம், நொன்-லீனியர் கதையமைப்பு என்று சொல்கிறது.

‘அல்லி ராணி’ என்ற தொன்மக் கதை இன்று பலருக்குத் தெரியாது. இலங்கையை அல்லி என்ற ராணி ஆண்டதாகவும், மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் அல்லியை மணப்பதகவும், யுத்தம் செய்வதாகவும் அக்கதை செல்லும். அந்தக் கதையை ஆதிக்க பெருங்கதையாடல்களுக்கான எதிர் கதையாடலாக எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கதை உருவாக்கப்பட்டதற்கு அதுவொரு காரணமாக இருக்கலாம். அல்லி என்ற வரலாற்றுக் கதாப்பாத்திரம் உறுதியான, போர் குணம் கொண்ட பாத்திரம். பிடிவாதம் மிக்க பெண்களை “நீ என்ன பெரிய அல்லியா” என்று விளிப்பது இலங்கையில் வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த அல்லி என்ற தொன்மப் பாத்திரமும், நிகழ்காலத்தில் அல்லி என்ற இன்னுமொரு பெண் பாத்திரமும் நாவலுக்குள் வருகிறது. இன்னுமொரு பக்கம் சாதனா என்ற பெண்ணின் கதை. தொன்மக் கதையையும் நிகழ்காலக் கதையையும் இணைக்கும் சரடாக சித்தார்த்தன் வருகிறான். அவன் காணும் வினோதச் சம்பவங்கள் தான் இந்த நாவல். வேகமான வாசிப்பில் இவற்றைக் குழப்பிக்கொள்ள நேரலாம். அதே நேரம் யதார்த்தவாத கதை விரும்பிகளுக்கு உகந்த நாவல் இதுவல்ல என்பதே என் துணிபு.

சின்னச்சின்ன சம்பவங்களாக பல்வேறு காலகட்டங்களுக்கு நாவல் தாவுகிறது. அரசியல் பிரச்சினையிலிருந்து சிறிய யுத்த சம்பவங்கள் வரை அனைத்துக்கும் பின்னே சித்தார்த்தன் இருக்கிறான். சித்தார்த்தனை அரூப நிலையில் வைத்துக்கூட அணுகலாம். பௌத்தமாக, பெளத்த அதிகாரமாக, கருணையாக என்று பல்வேறு பரிமாணங்களை எடுக்கிறது அந்த பாத்திரம். இந்த நாவலில் இருக்கக்கூடிய ஒரு சிக்கல் Reference எழுத்துமுறை. நாவல் ஆரம்பிக்கும்போதே 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி இராணுவம் ஏவிய குண்டு வெடித்துச் சிதறியது என்று ஆரம்பிக்கிறது. அன்றையதினம் ஈழ யுத்த வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்று தேடிப்பார்தாலே மேலதிக அர்த்தத்திற்குள் நுழைய முடியும். இது நாவல் பற்றிய விமர்சனம் இல்லை என்பதால் இதோடு அறிமுகக்குறிப்பை நிறுத்திக்கொள்கிறேன்.

‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் ஷோபாசக்தி எழுதிய இச்சா நாவலுக்கும் இடையே ஆச்சரியப்படுத்தும் சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஷோபாசக்தி தன்னுடைய நாவலை படித்துவிட்டு அதிலிருந்து தாக்கம் பெற்று இச்சாவை கொண்டுவந்துள்ளதாக சேனன் குற்றம்சாட்டுகிறார். ஷோபாசக்தி சேனனின் நாவலை தான் படிக்கவில்லை என்று மறுத்துள்ளார். அப்படி என்றால் இது எப்படிச் சாத்தியம் என்ற கேள்வி வருகிறது. சமகாலத்தில் அருகருகே இருக்கும் ஊரில் வாழ்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஒத்த அலைவரிசையில் சிந்தித்திருக்க முடியுமா? தற்செயலாக நடக்க முடியுமா?

இரண்டு நாவலையும் படிக்கும் எவரும் தங்களது வாசிப்புக்கு ஏற்றவகையில் ஒற்றுமைகளை பட்டியல்படுத்தலாம். அல்லது ஒற்றுமை இல்லை எனலாம். என்னுடைய வாசிப்பின்போது- புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாட்டுக்குள் நுழைந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவைதான்- என்று பார்த்தாலும்கூட கீழ்வரும் ஒற்றுமைகள் வியக்கவைக்கும் அளவுக்கு நெருங்கி இருக்கின்றன. 

இச்சா சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்
ஆலாவை அரபு நாட்டு விமான நிலையத்திலிருக்கும் விடுதியில் வைத்து கணவர் வாமன் புணர்கிறார். சாதனாவை இலண்டன் ஹீத்துரு  விமானநிலையத்திலிருந்து அழைத்துவரும் வழியில் லொஜ்ஜில் வைத்து கணவர் புணர்கிறார்.
சுல்த்தான் பாப்பா ‘ஆலா நிழலகம்’ சிறுவர்கள் இல்லம் நடாத்துகிறார். ‘அல்லி துயிலும் இல்லம்’ ஆரம்பிக்க எண்ணி பின்னர் ‘அல்லி மன்றம்’ நிறுவப்படுகிறது.
மர்லின் டேமியால் என்பவர் ஆலா தொடர்பான தகவல்களை கொடுக்க கதை சொல்லியை தேடிவருகிறார். ரோகிணி விஜயகுமார என்பவர் சாதனா தொடர்பான தகவல்களை அறிய கதை சொல்லியை தேடிவருகிறார்.

நாவலைப் பற்றியும் மேலே நான் எழுதிய பட்டியல் சேனன் சொல்லும் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்க போதுமானதா என்பதைப் பற்றியும் உரையாடவே இந்த சந்திப்பை ஒழுங்கு செய்தேன். அங்கு நிகழ்ந்த உரையாடலை அப்படியே எழுதியிருக்கிறேன். உரையாடல் நவீன இலக்கியப் போக்குகள் பற்றியும் விரிந்தமை கூடுதல் சிறப்பு.

senan3.jpg?resize=1020%2C762&ssl=1

2

நீங்கள் எழுதிய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலுக்கான கதை உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதா? ஏன் கேட்கிறேன் என்றால், நான் பகுதிநேரமாக வேலைக்கு செல்லும் இடத்தில் சாதனாவைப் போன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்டு திருமணமாகி புலம்பெயர்ந்து வந்து வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு கணவரால் கலைத்துவிடப்பட்டவர் ஒருவரை சந்தித்து இருக்கிறேன்…

இந்த நாவல் சமகால நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. சமகால அரசியல் சார்ந்ததுதான். நேரடியான அரசியலையும் பெயர்களையும் உபயோகித்து இருக்கிறேன். நடைமுறைக்கு அப்பாற்பட்டது, நம்பத் தகாதது என்று புராணம், தொன்மம் சார்ந்து சிலதைச் சுட்டிக்காட்டலாம். கற்பனையில் பலதை எழுதி இருந்தாலும் புலம்பெயர்ந்து வரும் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பொதுவான கதையாக தெரியலாம். பல்வேறு விதமாக இந்தப் பிரச்சினைகள் விரிவடையும். நான் எழுதியிருப்பது அதன் இன்னொரு பரிமாணம்.

இலண்டன்காரர் நேரடியான அரசியல் நாவல். அதன் மொழி அலங்காரமற்ற எளிமையான சொற்களால் ஆனது. ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ அரசியல் நாவல் தான். ஆனால் முன்னையை நாவலுடன் ஒப்பிட இயலாது. மொழியை தேர்வு செய்வதிலிருக்கும் பிரக்ஞையை எப்படி கையாள்கிறீர்கள்?

இலண்டன்காரர் நாவல் இங்கிலாந்தில் வசிக்கும் விளிம்புநிலை டயஸ்பெரா மக்களைப் பற்றி அவர்களது பிரச்சினை சார்ந்து எழுதப்பட்டது. முக்கியமான கதாபாத்திரங்கள் தமிழர்கள் அல்ல. அந்தக் கதையை எந்த மொழியில் எழுதுவது என்று சிக்கல் இருந்தது. இன்று பல மொழி பேசுபவர்களாக நாம் இருக்கிறோம். தவிர மொழிநடை எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வி இருந்தது. ஈழத்து நாவலில் வரும் பாத்திரங்கள் இந்தியத் தமிழில் உரையாடினால் அது ஏற்புடையதாக இருக்காது. ஒதுக்கப்பட்ட மக்கள் சார்ந்த மொழி பாரம்பரிய காப்பிய மொழியாக இருக்க முடியாது. டானியல், தமிழ்நாட்டு தலித் எழுத்தாளர்கள் எழுதும்போது இதேவகையாக எந்த மொழியை கையாள்வது என்ற பிரச்சினையை எதிர்கொண்டார்கள்.

அழகுணர்ச்சியை தரும் மொழியை பயன்படுத்தி அவர்களது வாழ்கையின் முக்கியத்துவத்தை எழுதிவிட முடியாது. அடிப்படையில் அப்படியான மொழியில் எழுதக்கூடாது என்று நேரடியான மொழியில் தெளிவாகத் திட்டமிட்டு இலண்டன்காரரை எழுதினேன். ஆனால் எமது விமர்சகர்கள் எனது மொழி நன்றாக இல்லை என்றும், அரசியல் செயற்பாட்டில் இறங்கியதால் இலக்கியம் விட்டுப் போய்விட்டதாக சொன்னார்கள். இதனைப் பார்த்துச் சிரிக்கத்தான் முடியும்.

ஒரு படைப்பு மொழி என்று எல்லாப் படைப்புகளுக்குமான மொழி ஒன்று இருக்க முடியாது. அதனை மாற்றி நாவலுக்கான தனித்த மொழியை தேட வேண்டி இருக்கிறது. சொல்ல வரும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப அந்த மொழி வெளிப்பட வேண்டும் என விரும்புகிறேன். ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் நேரடியாக யுத்தம் சார்ந்தது. அதற்கான மொழியில் இதனை எழுத விரும்பினேன். யுத்தம் சார்ந்து பல்வேறு விடயங்கள், உண்மைகள் அடிபட்டு போய்விடுவதாக ஒரு பயம் 2009-ல் எனக்கு ஏற்பட்டது. இங்கு யுத்தம் நடக்கும்போது பெரும்பாலான எழுத்தாளர்கள் மோசமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்கள். யாரும் தெட்டத்தெளிவான யுத்த மறுப்பை செய்யவில்லை. இன்றும் அந்த குற்றச்சாட்டைச் சொல்வேன். இதனைக் குறிப்பிட்டு கொலை மறைக்கும் அரசியல் என்ற புத்தகம் தொடங்கி பல்வேறு கட்டுரைகள் எழுதி உள்ளேன். நான் சொல்ல விரும்பிய பல விடயங்களை நாவலாக எழுத விரும்பினேன். அதுதான் இந்த நாவலுக்கான முதல் உந்துதல்.

பின்னர் பலர் யுத்தம் சார்ந்து எழுத வந்தார்கள். யுத்த மொழி என்பது தமிழில் அகநாறு, புறநாறு காலத்தில் இருந்து உண்டு. இன்று அது புது வடிவம் கண்டுள்ளது. ஆனால் இன்று யுத்த மொழி சார்ந்து குழப்பம் உள்ளது. அதனைப் பலர் புரிந்துகொள்ளவில்லை. அதே மொழியில் எழுத எனக்கு உடன்பாடில்லை. என்னைவிட யுத்தத்தை அறிந்தவர்கள் இன்று எழுதுகிறார்கள். அவர்களுடன் இருந்து நான் வித்தியாசப்படும் இடமாக நினைப்பது எனது அரசியல்ப் புரிதலைத்தான். அதைச் சார்ந்துதான் என்னால் எழுத இயலும். இந்த அடிப்படையில் இந்த நாவலை மீள அணுகி ஆராய்ந்தேன். எழுதுவதற்கான பல்வேறு உத்திகளை ஆராய்ந்தேன். மலேசியாவில் வாழும் எழுத்தாளர் நவீன் நடந்தும் வல்லினத்தில் சில அத்தியாங்களை எழுதிப்பார்த்தேன். ‘அப்ஸ்ராக்’ (abstract) எழுத்து முறை எனக்குப் பிடித்தது. அதில் முதலில் பரிசீலனை செய்தேன். யுத்தத்தை சுருக்க முடியாது. ஏற்கனவே அது சுருங்கிய ஒன்று.

யுத்தத்தில் சிறைபட்ட மக்கள் ஒரு பிரதேசத்திலிருந்து இன்னுமொரு பிரதேசத்திற்குப் போனேன் என்று சொல்வதைக் கேட்கும்போது ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டுக்கு போனதுபோல் சொல்வார்கள். வெளி பரந்து நேரம் சுருங்கிவிடும். மக்களிடம் பேசினால் அவர்களை அறியாமலே அது வெளிப்படுவதை அவதானிக்கலாம். முன்பு யுத்தம் சார்ந்து பாதிக்கப்ட்டவர்களின் தகவல்களை ஐ.நாவுக்கு அனுப்பும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னை மீறி யுத்த மொழி என்னை ஆட்கொண்டது. யுத்தத்தை அணுகும் மொழி கிடைத்தது. நாவல் எழுதுவதற்கு நான் தயராகிவிட்டதை அது உணர்த்தியது.

எனது அரசியல் ஈடுபாடு என் மொழியைத் தீர்மானித்தது. அந்த மொழியில் முற்று முழுவதாக எழுதவும் முடியாது என்பது உண்மையானது. யுத்தம் சார்ந்த பல்வேறு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் எப்படி இணைக்கலாம் என்று முயன்ற பரிசோதனை முயற்சிதான் இந்த நாவல். இது வெற்றி அல்ல.

உங்களது அரசியல் நிலைப்பாடுதான் உங்களது எழுத்தின் பலம் என்றால், ஏன் முதல் நாவல் வரைபை எழுதிவிட்டு பலருக்கு அனுப்பி கருத்துக்கேட்க வேண்டிய தேவையேற்பட்டது? சேனனின் பலவீனமா?

எந்த ஒரு படைப்பும் தனி மனிதன் சார்ந்துதான் பிறக்கிறது. பின்னர் அது சமூகமயப்படுகின்றது. சமூகத்தில் பல்வேறு வாசிப்புகள் நிகழும். கலை சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களாக இயங்கும். அதனால்தான் வசதிக்கு வகைமைகள் என்று பிரிப்பதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஈழத்தில் – தமிழ் நாட்டில் அப்படியல்ல. இங்கு எல்லாமே ஒன்று தான்.

நான் ஒருவருக்கு மட்டும் எழுதவில்லை. மக்கள் அனைவரையும் ஒன்றாக கருதியும் எழுதவில்லை. நான் தேர்வாக எழுதுகிறேன். சிலரை குறிவைத்து எழுதுகிறேன். அதனால் பல்வேறு வாசிப்பு கொண்டவர்களிடம் கொடுத்து கருத்துக் கேட்டேன். ‘வாசன்’ வித்தியாசமாக வாசிப்பார். அவரால் ஜனரஞ்சமாக வாசிக்க முடியாது. அதேசமயம் நேர்கோட்டு வாசிப்பில் வாசிப்பார். அதேபோல் இலக்கிய வாசிப்பு இல்லாத ஒருவர் இன்னுமொரு வகையில் கருத்துச் சொல்வார். இவர்களின் கருத்துக்களை தொகுத்து உள்வாங்கி செல்லவேண்டிய தேவை இருந்தது. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டியது. அதற்காகத்தான் பலரிடம் வாசிக்கக் கொடுத்து கருத்து எடுப்பது. இது இல்லாது தனிமையில் சுய விசாரணை செய்வது கடினம்.

இந்த நாவலை சிலரை குறிவைத்து எழுதியதாகச் சொல்கிறீர்கள். அது யாரை?

ஈழ அரசியல் சார்ந்து புரிதல் அற்றவர்களுக்கு 

அவர்களுடன் உரையாடுவதற்கு கட்டுரைகள் எழுதலாம். முன்னமே நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். ஏன் நாவல் வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

இதுவொரு நல்ல தெளிவான கேள்வி. எனக்கே எழுதும்போது ஒரு சந்தேகம் வந்தது. நான் எழுதுவது புனைவா prose ஆ என்று. அதனை வாசிப்பவர்கள் தான் சொல்லவேண்டும். கலை prose ஐ விட பலமானது. குறிப்பிட்ட தளத்துக்கு நான் எழுதுகிறேன். அரசியற் செயற்பாட்டில் இருப்பவர்களின் தளம் அது. தவிர இது எல்லா இடங்களுக்கும் போய்ச் சேரவேண்டும் என்றும் விரும்புகிறேன். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நாவல் பேசும் அரசியல் தளம் பரந்துபட்டது அல்ல. சில விசயங்கள் பலருக்குத்தெரியாது. அதுபோய் சேரவேண்டும் என்பதற்காக நாவலாக எழுதியுள்ளேன். நாவல் படிப்பவர்களுக்கு இது புரிந்தால் சமூகத்தில் பல தளத்திற்கு இது நகரும் என்று நம்புகிறேன். அரசியல் நாவல்களின் பங்களிப்பே அதுதான்.

senan4.jpg?resize=1020%2C765&ssl=1

‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் யதார்த்தவாத நாவல் அல்ல. தொன்மக் கதைகள், மஜிக்கல் ரியலிச சித்தரிப்புகள் , காலத்தை கலைத்தல் என்று பல்வேறு உத்திகளை பயன்படுத்துகிறீர்கள். ஏன் இந்த வடிவம்?

வடிவம் முக்கியம். கலைப்படைப்பின் கரு எவ்வளவு முக்கியமோ அதபோல வடிவமும் முக்கியம். இதில் பலர் முரண்படலாம். முன்பு போர்மலிஸ்ட்கள் (formalist) என்று சிலர் இருந்தார்கள். அவர்கள் வடிவம் முக்கியம் கரு அல்ல என்றார்கள். மாயக்கோவஸ்கி கவிதைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டும் முக்கியம். வடிவம் தான் கருவை சரியாக வெளிப்படுத்தும் என்பது என் நிலைப்பாடு. ஒன்றை எழுதும்போது அது என்ன வடிவத்தை நோக்கி நகர்கிறது என்ற தெளிவு இருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் Gender neutral (பாலினம் அற்ற) – கதை ஒன்று எழுதினேன். பால் வேறுபாடு என்னவென்று வெளிப்படுத்தாமல் எழுதிய கதை. இறுதியில் மட்டுமே அதற்கான விடை சாதுவாக இருக்கும். அது பலருக்கு அன்று புரியவில்லை. இன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

வடிவத்தை கவனத்தில் எடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் ஒன்றையே பின்பற்றி மந்திரம் ஓதுவது போல திரும்பத்திரும்ப ஓதி அதற்குள்ளே முடங்கி மங்கிப்போனோம். அது எங்கள் இயல்பாகிவிட்டது. அதனால் புதிய வடிவங்களில் கதைகள் வரும்போது அதனை புரிந்துகொள்ள பலர் தடுமாறுகின்றார்கள். வரவேற்கத் தயங்குகிறார்கள். இதனால் புதிதாக சிந்தித்தல் தமிழ் இலக்கிய உலகத்தில் அதிகம் அடி வாங்குகின்றது. இதுபற்றி நிறைய உரையாடல்கள் தேவையாக இருக்கின்றது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருவர் பஸ்ஸில் வருகிறார். நிறுத்தத்தில் இறங்கி தான் வந்த அனுபவத்தை அப்படியே சொல்லலாம். அந்த விடயத்தை நிறுத்தத்தில் நின்ற ஒரு இயக்குனர் அச்சொட்டாக படமாக எடுக்கலாம். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? சொற்கள் மற்றும் பார்வை சார்ந்துதானே. கலைப்படைப்பு என்பது பிரதி செய்தல் அல்ல.

இருவரும் ஒரே சம்பவத்தைப் பார்த்தாலும், இருவருக்கும் இடையிலான அகம் என்பது வேறுதானே? ஒருவர் தன்னுடைய உணர்வு, சமூக அரசியல் புரிதலுடன் ஒரு சம்பவத்தைப் பார்ப்பதற்கும், இன்னுமொருவர் பார்ப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்காதா?

நல்ல படைப்பாளிக்கு அது போதாது. பல கோணங்கள் உருவாக்கலாம். ஒரு கலைப்படைப்பு என்பது சம்பவங்களை உள்வாங்கி படிமங்களை செரித்து கொள்ள வேண்டும். அதனை சரியாக படிமப் படுத்த வேண்டும். அங்கே தெரிவு, வரிசை இருக்கும். அதுதான் படைப்பாளியின் தனித்தன்மையை வெளிக்காட்டுகிறது.

யதார்த்தவாத நேர்கோட்டு கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்டு எழுதுவதால் என்ன பிரயோசனம்? உத்திகள் மேலதிக வாசிப்புக்கு எந்த விதத்தில் உதவுகிறன?

யதார்த்தவாத காலம் டோல்ஸ்டோய் காலத்தோடு முடிவடைந்துவிட்டது. அவர் அதில் ராஜா. அக்காலம் முடிந்துவிட்டது என்பதற்காக யாரும் எழுதாமல் இல்லை. பலர் எழுதுகிறார்கள்தான். என்னைப் பொறுத்தவரைவரையில் முடிந்துவிட்டது.

மனிதர்களுடையை புரிதல், இயக்கம், படைப்புலகம் எல்லாம் மாறிக்கொண்டுள்ளது. யதார்த்தவாத காலத்தில் படம்பிடித்துக் காட்டுதல் தேவையாக இருந்தது. இன்று அது தேவையில்லை. புகைப்படக் கலை வீடியோ பதிவுகள் வருவதால் மங்கிப்போகிறது. இப்படிக் காலம் மாறிக்கொண்டுள்ளது. யதார்த்தத்தை காட்ட வேறு எழுத்து முறைக்கு செல்லவேண்டியுள்ளது. இந்த நாவல் என்ற மீடியத்திற்கு என்ன தேவை என்ற கேள்வி வருகிறது. தொடர்ந்தும் யதார்த்தமாக இருந்தால் பேசாமல் படமாக எடுத்துவிடலாம். அதற்கும் மேலாக எழுத்தில் பல சிடுக்கான இடங்களையும் தொடவேண்டி உள்ளது.

ஒரு விடயத்தை சொல்லப் போனால், வரலாறு சார்ந்த பிரச்சினை இருக்கிறது, நடைமுறை சார்ந்த பிரச்சினை இருக்கிறது, கதாப்பாத்திரம் சார்ந்த பிரச்சினை இருக்கிறது. இப்படி பல்வேறு பரிமாணங்கள் இருக்கிறன. இவற்றை எல்லாம் சேர்த்து எழுத்தில் எப்படிக் கொண்டுவருவது என்ற கேள்வி வருகிறது. அதற்காக பல்வேறு வடிவ உத்திகளுக்கும், எழுத்து முறைகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. மஜிக்கல் ரியலிசம், மிகுகற்பனை எல்லாம் அதனால்தான் உருவாகி வந்தன. இரண்டாயிரம் பக்கங்களில் எழுதப்படும் யதார்த்தவாத நாவல் பேசுவதை இருநூறு பக்கங்களில் மஜிக்கல் ரியலிச நாவல்கள் பேசிவிடும்.

3

யுத்தம் சார்ந்த பல சித்தரிப்புகளை இந்த நாவலில் நிறைய எழுதி உள்ளீர்கள். இளம் வயதிலே நாட்டைவிட்டு புலம்பெயர்ந்துவிட்டீர்கள். அதற்கு முன்னர் ‘குழந்தைப் போராளியாக’ யுத்தத்தில் பங்குபற்றியிருந்தால் இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம் என்று நினைத்தது இல்லையா?

நல்ல கேள்வி. குழந்தைப் போராளி என்பதில் இரு பகுதி உண்டு. ஒன்று குழந்தை, மற்றையது போராளி. சிலர் குழந்தைகளாக மட்டும் இருந்தார்கள், போராளியாக அல்ல. போராளி என்பதை சும்மா சேர்த்துவிடுவது.

நான் சிறுவனாக இருந்தபோது என்னைப்போல பலரும் இயக்கம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தார்கள். அதைச் செய்து இருக்கிறோம் என்பதற்காக போராளி என்று சொல்ல முடியாது. பிற்பட்ட காலங்களில் நிஜமாகவே பல சிறார்கள் ஆயுதம் ஏந்தி களத்தில் மடிந்து இருக்கிறார்கள். இயக்கங்கள் உருவாகிய காலத்தில் அப்படி நிலைமை இருக்கவில்லை. விடலைகள் சுற்றிச்சுற்றி ஓடித் திரிந்தார்கள். ஆயுதங்கள் வைத்திருந்த அண்ணாமார்களின் பின்னே ஓடித்திரிந்தவர்கள் குழந்தைப் போராளிகள் அல்ல. அவர்களைப் போய் படியுங்கள் என்று துரத்திவிடுவார்கள். அதிகம் அடம்பிடித்தால் சிறிய வேலைகள் தருவார்கள். பங்கர் வெட்டச் சொல்வார்கள். இதையெல்லாம் மெருகூட்டி இயக்கத்தில் இருந்தேன் என்று சொல்ல முடியாது. எனது அனுபவங்களை அப்படிச் சொல்ல மாட்டேன். அது மோசடி.

குறைந்தபட்சம் வேலணையில் சுவரொட்டிகள் கூட ஒட்டவில்லையா?

யார் அப்படியெல்லாம் சொல்கிறார்கள்? அப்படியெல்லாம் நடக்கவில்லை. ஆரம்ப காலத்தில் பல்வேறு இயக்கத்தினர் வருவார்கள். நான் புலிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டி இருக்கிறேன். அப்போது வோக்கிடோக்கி முதலானவைகளை எடுத்துப் பார்ப்போம். அவர்களுடன் திரிவோம். பின்னர் சண்டை வரும். ஆமிக்காரர்கள் மக்களைத் துரத்துவார்கள். நாங்கள் ஓடித் தப்புவோம். இதனை குழந்தைப் போராளி என்று அடையாளப்படுத்தி என்னை சந்தைப்படுத்த மாட்டேன். அது நியாயம் அற்றது. அப்படிச் செய்து தமிழிலக்கியத்தில் புத்தகம் விற்பவர்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் நான் செய்ய மாட்டேன்.

நேரடியான யுத்த அனுபவங்கள் பெரிதாக உங்களுக்கு இல்லையா? பிற்பாடு எப்படி அதனை எழுதுவதற்கான முயற்சிகளை செய்தீர்கள்?

யுத்த அனுபவம் எனக்கு உண்டு. இந்திய இராணுவத்துடனான யுத்தம், இலங்கை இராணுவத்துடனான யுத்தம் போன்றவற்றில் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனக்கு யுத்தம் தெரியும். அதற்குள் இருந்திருக்கிறேன். துப்பாக்கி சூடு, காயங்கள், இரத்தம், படுகொலைகள் எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் 2009-ல் நடந்த இறுதியுத்த அழிவு என்பது மிகக் கோரமானது. அதனுடன் தொண்ணூறில் நடந்த யுத்தத்தை ஒப்பிட முடியாது. இறுதி யுத்த அனுபவம் எனக்கு இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியே அதனைப் புரிந்துகொண்டேன். அப்படியும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது சாத்தியம் அற்றது என்றே நினைக்கிறேன். அத்தனை கோரமானது அந்த அழிவு.

புலிகளின் யுத்த மீறல்களும் நாவலில் உள்ளன – இராணுவத்தின் போர் குற்றங்களும் நாவலில் உள்ளன. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இருமையில் சேனன் சிக்குவாரா?

ஆரம்பத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. புனைவில் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வைக்க முடியாது. என் நிலைப்பாட்டை அவ்வாறு வைக்கவில்லை. மேலோட்டமான மக்கள் சார்ந்த ஒரு நிலைப்பாட்டை நாவலில் பார்க்கலாமே தவிர புலிகளுக்கு சார்பானதோ, புலி எதிர்பாளர்களுக்கு சார்பானதோ அல்ல. இது புலி ஆதரவு நாவல், ஆகவே  சிலதை சொல்லவேண்டும் என்பதற்காக புலிகளின் தவறுகளை மென்மையாகச் சொல்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இங்கே இலக்கிய வட்டத்தில் புலி எதிர்பாளர்கள் என்று- அதை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வடிகட்டின முட்டாள்கள். வளர்ச்சியடையாதவர்கள். புலிகளை முற்றிலும் அடித்து எழுதினால் அவர்கள் திருப்திப்படுவார்கள். அதை நான் செய்ய மாட்டேன். செய்யவில்லை. அவர்களுக்கு இந்த நாவல் படுதோல்வியாக இருக்கும். வாசிக்க முடியாத நாவலாக, தோற்றுப்போன நாவலாகத் தோன்றும். அது எனக்கு சந்தோஷமான விஷயம். அதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களால் அந்த அளவுக்கு மட்டுமே சிந்திக்க முடியும்.

அதுபோல் புலிகளுக்கு முற்றிலும் ஆதரவானவர்கள் இருப்பார்கள். அவர்களும் கோபப்படுவார்கள். ஆனால் உண்மையை உள்ளபடிதானே எழுத முடியும். சாதனா புலம்பெயர்ந்து அனுபவித்த கொடுமைகள் இங்கு நடப்பது தானே. அதையும் மறைக்கவா முடியும்? வரலாற்றில் அவர்கள் வந்து சேர்ந்த இடம் அப்படியானது.

முடிவடைந்த ஈழ யுத்தம் சார்ந்து பத்து புத்தகங்கள் படித்து தெரிந்து கொள்வதைவிட, எனது நாவலை வாசித்து சில படிமங்கள் ஊடாக யுத்தம் பற்றி பலதைத் தெரிந்து கொள்ளலாம். அதுதான் எனது முழுமையான நோக்கம். அது வென்றதா என்பது போகப்போக தெரியும். பார்க்கலாம். அதனால்தான் பலதை படிமங்கள் ஆக்கியுள்ளேன்.

நீங்கள் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். உங்களுக்கு என்று திட்டவட்டமான தெளிவான அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. அப்படியிருந்து கொண்டு நாவலுக்குள் ஒரு திடமான அரசியல் தரப்போடு நின்று எழுதாமல், தள்ளி நின்று எழுதுதல் சவாலாக இருக்கவில்லையா?

முக்கியமான கேள்வி. டானியல் போன்றவர்கள் அமைப்பு சார்ந்து இயங்கும்போது இப்படியான சிக்கலை எதிர்கொண்டார்கள். தமிழ்நாட்டில் கம்னியூனிஸ்ட், திராவிட இயக்கத்தில் உள்ளவர்களும் எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

பராசத்தியிலிருந்து அன்று வெளிவந்த பல படங்கள் திராவிட கொள்கையை பரப்பும் படங்கள்தான். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை நிமிர்த்திவிட்டது நேரடியான திராவிட பிரச்சாரங்கள். எந்தவொரு எம்ஜியார் படத்தை- பிரச்சாரம் இல்லாத படம் இல்லை என்று சொல்ல முடியும்? பராசத்தி படம் கூட பிரச்சாரப் படம்தான். அதபோல் தான் ஜெயகாந்தன். இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் அமைப்பு சார்பு x கலை என்ற பிரச்சினை வரவில்லை. ‘ஜோர்ஜ் ஓர்வல்’ அமைப்பு சார்ந்து இயங்கியவர். அதேபோல மார்க்சிம் கார்க்கி. அவர்களது எழுத்தின் மீதெல்லாம் அமைப்புக்கும் அரசியலுக்கும் இடையிலான விவாதம் எல்லாம் நடந்துள்ளது. தமிழில் இப்படி நடக்கவில்லை. அது நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

நீயூற்றலாக எழுதுகிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி சாத்தியம் இல்லை. எந்த ஒரு இலக்கியவாதியும் நீயூற்றலாக இல்லை. எவருக்கும் ஒரு சார்பு இருக்கும். எந்தப் பாத்திரத்தை எப்படி வடிவமைகிறோம் என்பதிலே சார்பு வரும். இலக்கியவாதியை அதன் அடிப்படையில் ஒரு விமர்சகர் கட்டுடைக்கலாம். அமைப்பு சார்ந்து இயங்குபவர்கள் பிரச்சாரமாக முன்வைக்காமல், தங்கள் அரசியல் நிலைப்பாட்டில் நின்று உலகத்தைப் பார்ப்பதுதான் முக்கியமானது. ஜார்க் லண்டனை உதாரணமாகச் சொல்லலாம். இது இன்னுமொரு வகையான அழகியல்.

அல்லியை, சாதனாவை இரண்டு வெவ்வேறு பின்புலத்தில் வைத்து எழுதியிருப்பதாக கருதுகிறேன். அரசியல் தளத்தில் இயங்காவிடில் என்னால் அப்படி எழுதியிருக்க முடியாது. சாதரணமாக எழுதியிருப்பேன். திட்டமிட்டும் பலவிடயங்களை எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா என்னிடம் உள்ளது. கதாபாத்திரங்களை நீண்ட ஆய்வோடு எழுதியுள்ளேன். பொதுக் கதையாக பெண்களின் கதையை நீங்கள் சொல்லலாம். ஆனால் அது அப்படியல்ல. நிறைய விடையங்களை சேர்த்து படிமப்படுத்தியுள்ளேன்.

என்னுடைய நாவலையும் இம்சையையும் ஒப்பிட்டுப் பேசும் ஒருவர், ஷோபா பாலியல் வல்லுறவை அழகியலாக எழுதியிருக்கிறார் நீங்கள் வக்கிரமாக எழுயிருக்கிறீர்கள் என்று சாடியிருந்தார். வல்லுறவை அழகியலாக எழுத முடியுமா? அது அப்படிப்பட்டதா? வல்லுறவில் இருக்கும் அருவருப்பு எழுத்தில் வரவேண்டும் என்று தெளிவாக நான் எழுதினேன். ஆனால், இதனை ஒப்பிட்டுப் பேசும்போது என்னிடம் அழகியல் இல்லை என்கிறார். பாலியலை நீங்கள் கட்டமைத்திருக்கும் அழகியலாகப் பார்ப்பது வக்கிரமான சிந்தனை.

4

இச்சா நாவல் வாசிக்கும்போது என்ன தோன்றியது?

கலாமோகன் படைப்புகள் சார்ந்த கூட்டத்திற்கு வரும்போது வாசன் தோழர் நேரடியாக இரண்டு நாவல்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகச் சொன்னார். நீங்களும் அங்கு இருந்தீர்கள். உங்களுக்கு நடந்தது தெரியும். பின்னர்தான் நாவலை உங்களிடம் இருந்து இரவல் வாங்கிப் படித்தேன். ஆரம்பப் பக்கங்கள் வாசிக்கும்போது என்ன தொடர்புகள் இருக்கும்? என்ன இவர்கள் சொல்கிறார்கள்? என்றே தோன்றியது. போகப்போகத்தான் தொடர்புகள் இருப்பது எனக்குத் தோன்றியது. வாசித்து முடித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதைப்பற்றி வெளிப்படையாக பேசியே ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இதை ஏன் நீங்கள் அப்போது பொதுவில் பேசவில்லை?

இரண்டு நாவல்களும் முதலில் வாசகர்களுக்கு முன்னால் இருக்கவேண்டும். இரண்டையும் வாசிக்கும் ஒரு வாசகர்கள் இரண்டிலும் தொடர்புகள் இருப்பதை கண்டு பிடிப்பார்கள். இப்போது இதனை வாசித்து என்னை அடித்து நொறுக்கி எழுதியிருப்பவர்கள் கூட இரண்டு நாவல்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதைச் சொல்லி இருக்கிறார்கள். ஏனென்றால் அதனை மறைக்க முடியாது. ஒரு ஒற்றுமையும் இல்லை என்று இரண்டையும் வாசித்தவர்கள் எவருமே எழுதவில்லை.

ஒரு நாவலாசிரியர் அவசரமாக நாவலை கொண்டு வருகிறார். அதன் நிழலில் இன்னுமொரு எழுத்தாளன் மறைகிறான் என்ற சூழ்நிலையை உருவாக்கினால் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார் இல்லை. அதனை ஒருபோதும் விடுவதாக இல்லை.

இச்சாவை வாசித்துவிட்டு எனது நாவலை வெளியிடாமல் இதைப்பற்றி பேசியிருந்தால், முதலில் உன் நாவலை கொண்டுவா வாசித்துவிட்டு நாங்கள் முடிவு எடுக்கிறோம் என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் இதனை வாசித்துவிட்டு பேசவேண்டியது இதனைப் படிப்பவர்கள்தான். அதனால் நாவல் வெளியாகும் வரை பொறுமையாக இருந்தேன். நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே உரையாடி இருந்தேன். கொரோனா நோய்தொற்று அச்சாக்க பணியில் இன்னும் காலதாமதத்தை செய்துவிட்டது.

இந்த நாவலில் சில இடங்களில் ஒற்றுமை இருப்பதை மறுக்கவில்லை. (மேலே அட்டவணை இட்டுள்ளேன்) நாவலில் சாதனா புலம்பெயரும் பகுதிகளும் அதை ஒட்டிய சம்பவங்களும். இவை ஏன் தற்செயலாக இருக்கக்கூடாது?

வாய்ப்பேயில்லை. நீங்கள் சொல்லும் ஒற்றுமைகளை சாதாரணமாக வாசிக்கும் எவராலும் சொல்லிவிட முடியும். இதற்கு அப்பாலும் ஆரம்பத்தில் இயக்கத்தில் இணையும் கதாப்பாத்திரம் சார்ந்தெல்லாம் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

முதல் கேள்வியாகக் கேட்டீர்கள், உங்களுக்கும் இப்படியான பின்புலத்தில் வந்தவர் ஒருவரை வேலையிடத்தில் தெரியும் என்று. குற்றச்சாட்டுகளை பல்வேறு வகையில் வைக்கலாம்.

நான் Copy என்று ஒருபோதும் சொல்லவில்லை. Plagiarism என்று எங்கும் சொல்லவில்லை. இலக்கியம் என்பது தான்றோன்றித்தனமாக வருவதில்லை. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை உள்வாங்கும் எழுத்தாளரிடமிருந்து வருகின்ற வெளிப்பாடுதான் இலக்கியச் செயல்பாடு. அது ஏதோவொரு விடயத்தில் ஒன்றைப் பின்பற்றுதல், இன்னொன்றைப் பார்த்து எழுதுதல், போலச் செய்தல், சேர்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல் என்றுதான் இயங்குகின்றது. இப்படிதான் இலக்கியம் இயங்க முடியும்.

நேரடியாக ஒன்றைப் பார்த்து அப்படியே எழுதிய சம்பவங்களும் உண்டு. அது தவறு. வேறு சிலர் சிலதை மட்டும் பார்த்து எழுதியும் இருக்கிறார்கள் அது மன்னிக்கக்கூடிய தவறு. இந்த எந்தக் குற்றச்சாட்டையும் இச்சா விடயத்தில் நான் வைக்கவில்லை. தெளிவாகச் சொல்கிறேன் ஐடியாஸ், (ideas) வடிவம் சார்ந்த ஐடியாஸ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதைத்தான் குற்றச்சாட்டாக வைக்கின்றேன்.

ஷோபாசக்தி யதார்த்தவாத எழுத்தாளர். ஆரம்பத்தில் எழுதிய கதைகளைப் பாருங்கள். நேர்கோட்டில் எழுதிய கதைகள். ஷோபாவுக்கு வடிவம் சார்ந்த கற்பனைகள் சுட்டுப் போட்டாலும் வராது. கலாமோகன் போன்று கவித்துவமாக அல்லது கற்பனாவாதமாக வேறுவிதமாக யாரும் எழுதினால் சோபாவுக்கு பிடிக்காது. இதனை நேரடியாகச் சொல்கிறேன்.

ஷோபாசக்திக்கு பிடிக்காது, பிடிக்கும் என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

நான் அவருடன் இருந்திருக்கிறேன். நேரடியாக முரண்பட்டு இருக்கிறேன். கலாமோகன் கதைகள் ஆகட்டும், என்னுடையை one self சிறுகதை ஆகட்டும் இவைகள் வெளிவந்தபோது ஷோபாசக்தி வெளிப்படையாகவே பொறாமைப்பட்டார். இதெல்லாம் கதையா என்று பலருடன் அடிபட்டவர் ஷோபா. அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு இந்த விடயங்கள் தெரியும். அந்தவகையான எழுத்துகள் எழுந்தால் தன்னுடைய எழுத்துகள் அடிபட்டு போய்விடும் என்ற பயம் அவருக்கு இருந்தது. அவர் நல்ல எழுத்தாளன்தான். ஆனால், அவரிடம் இருக்கும் சுயநலம்தான் அவரது அழிவுக்கான தொடக்கம்.

அவர் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் சென்றபோது என்ன புத்தகங்கள் கொண்டு சென்றார்? அப்போது ஏதும் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருந்தாரா? அவரைச் சந்தித்த எழுத்தாளர்கள் நினைவுபடுத்தி இதனைச் சொல்ல வேண்டும். அவர் மோசடியான வியாபாரி என்பதெல்லாம் புதிய கதை அல்ல. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த கதை. அகதியாக ஐரோப்பாவுக்கு நுழைந்து விசா இல்லாமல் விளிம்பு மனிதர்களாக பலர் கடினப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இந்தியா சென்று வர ஷோபாவுக்கு மட்டும் தான் அப்போது வாய்ப்பாக இருந்தது. அந்தவாய்ப்பு அவருக்கு தன்னை சந்தைப்படுத்த உதவியது.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் வரலாற்றுடன் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான்.

ஷோபாசக்தியின் படைப்புகள் நன்கு பேசப்படுகின்றன. என்ன தான் வியாபாரப்படுத்தினாலும் திறமை இல்லாமல் இலக்கியத்தில் எதுவும் நிலைக்காது. இன்றைக்கும் ஷோபாவின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன தானே?

ஷோபாசக்தி நல்ல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். மறுக்கவில்லை. ஆனால் அவர் இன்னும் நாவல் எழுதவில்லை. கொரில்லா கூட நாவல் அல்ல. கொரில்லா நல்லதொரு எழுத்து நடையில் எழுதப்பட்ட பிரதி. யதார்த்தவாத எழுத்தின்படி கொரில்லா நாவல் இல்லை. அதன் நடைக்காகவும் பகிடிக்காகவும் அது பேசப்பட்டது.

தனிப்பட்ட ரீதியில் கொரில்லா எனக்கு பிடிக்கும். அதுவேறு விடயம். வடிவம் அதற்கான காரணம். ஆனால், கதை என்று கொரில்லாவில் என்ன இருக்கிறது. உங்களால் கதை என்ன என்று சொல்ல முடிகிறதா?

புதிய வடிவங்கள், சிந்தனைகளின் அடிப்படையில் படைப்பாக்க செயல்பாடு ஒவ்வொரு காலகட்டதிலும் முன்னகரும். ஷோபாவின் முயற்சிகளை அப்படிச் சொல்லலாம் தானே?

ஷோபாவுக்கு நாவல் என்ற வடிவம் சார்ந்து பிரச்சினைகள் உண்டு. அவர் யதார்த்தவாதி. அதனை மட்டும் வைத்துக்கொண்டு உத்திகள் ஊடாக கதைகள் சொல்வதை அவரால் மாஸ்டர் செய்ய முடியவில்லை. கொரில்லா நாவலில் இலக்கம் இட்டு அகதி விண்ணப்ப முறையில் நாவல் எழுதப்பட்டு இருக்கும். ஏற்கனவே அந்த வடிவத்தில் ‘அம்மா’ இதழில் நான் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறேன். அந்த உத்தி சார்ந்த ஐடியா எப்படி வந்தது? ஸ்மிலகிரம் என்று ஒரு கொன்செப்ட் இருக்கு. ஜாக் தெரிதா அதை புதிய முறையில் விளக்கி இருப்பார். அந்த தாக்கத்தில்தான் அந்தச் சிறுகதை எழுதினேன். அந்த உத்தி ஏற்கனவே இருப்பது. இதே வடிவத்தில் அவர் நாவல் எழுதி இருக்கிறார். ஆனால் எந்த கிரடிட்டும் கொடுக்கவில்லை. நான் எழுதவேண்டாம் என்று சொல்லவில்லை. இத்தகைய மறைப்பு நடைமுறைகள் வேண்டாம் என்று சொல்கிறேன். இதைப்பற்றி நான் இதற்கு முன்னம் எவருடனும் பேசியதில்லை. இப்போது சொல்ல வேண்டியுள்ளது. இவரது மோசடித்தனத்தின் வரலாறைச் சொல்ல வேண்டியுள்ளது. அந்தச் சிறுகதையை தான் படிக்கவில்லை என சொல்லி ஷோபா தப்பி விட முடியாது. அதைப் பாராட்டி சாரு நிவேதிதா பேச அதைக் கேட்டு ஷோபா பதறிப் பேசிய சம்பவம் ஓன்று உண்டு. மனுஷ்யபுத்திரன் வீட்டில் நடந்த சம்பவம். அவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களோ தெரியாது. எனக்கு நல்ல ஞாபகம். ஏனெனில் ஷோபாவின் போக்கை எண்ணி அப்பவே வருந்தி உள்ளேன்.

இப்போது உள்ளவர்களுக்கு முன்னர் இருந்த ஷோபாவை தெரியாது. நான் ஏதோ முழுமையாக எனது நாவலை திருடி ஷோபா கொப்பி அடித்துவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளேன் என்று நினைக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு வாளைச் சுழற்றுகிறார்கள். இவர்களுக்கு வரலாறு தெரியாது. ஆழமாக விடயங்களை பார்க்கும் விரிவும் கிடையாது.

ஷோபாவின் கடந்தகால வரலாறுகள் கூட எனக்கு பெரிய பிரச்சினை கிடையாது. ஆனால், இன்னுமொரு எழுத்தாளன் இருக்கிறான், அதுவும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த எழுத்தாளன். அவன் நாவலைக் கொண்டுவரப்போகிறான் என்று தெரிந்து அதற்கு முன்னம் வெளியிட்ட ‘அரசியல் அப்ரோச்’ தான் எனக்குப் பிரச்சினை. இந்தமாதிரிதியான நடைமுறைகளை தமிழ் இலக்கியத்தில் அனுமதிக்கக்கூடாது நாங்கள். இதன் மூலம் இலக்கியத் திருட்டு செய்வது, வியாபாரம் செய்வது போன்ற விடயங்களை எதிர்க்க விரும்புகிறேன். எழுத்தாளனின் வேலை எழுதுவது. அதில் நில்லுங்கள் என்கிறேன். இப்படியான மோசமான கலாச்சாரத்தை உருவாக்கியதில் ஷோபாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதை முடிந்தால் மறுத்து எழுதட்டும் பார்க்கலாம்.

இலக்கியச் சந்திப்பு விடயத்தில் ஷோபா நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் தெரிந்தது. அதனைக் குழப்பியதில் பெரும் பங்கு ஷோபாவுக்கு இருப்பது பலருக்குத் தெரியும். ஷோபாவின் நேர்மையற்றதனம் பலருக்குத் தெரியும். இல்லை என்று மறுத்து எழுதட்டும் பார்க்கலாம். மோசடி, இலக்கிய வியாபாரம் போன்ற ஒரு சில கடின சொற்களை அவர் நோக்கி வைத்து இருக்கிறேன். இது ஷோபாசக்தியை திருத்தும் நோக்கில் வைக்கவில்லை. மாறாக தமிழ் கலை உலகை பற்றிப் பிடித்திருக்கும் கேவல நடைமுறைகள் பலதுக்கும் எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்பாக வைக்கிறேன். தீவிர இலக்கிய உலகிலாவது சந்தை உறவுகளை மட்டுப்படுத்த நாம் முயல வேண்டும். இல்லை என்றால் நல்ல இலக்கியம் செய்யும் உந்தல் மழுங்கி விடும். அதற்கான குரலாக ஷோபா மாறட்டும். அத்தருணம் என் நிலைப்பாடு மாறும். ஆனால் சந்தை மோகத்தில் மூழ்கி விட்ட அவரிடம் இருந்து இனி நாம் அதை எதிர்பார்க்க முடியாது.

சரி நாவல் விடயத்திற்கு வருவோம். கொரில்லா நாவல் பற்றிச் சொன்னீர்கள். நீங்கள் எழுதிய சிறுகதையின் வடிவ ஐடியா சார்ந்து எழுதப்பட்டது என்று. அந்த வடிவம் பைபிள் தொடக்கம் இருக்கிறதல்லவா? ஷோபா எதில் ஒன்றிலோ தாக்கம் அடைந்து எழுதி இருக்கலாம் அல்லவா?

அவருடன் அந்தக் காலத்தில் அந்த வடிவம் பற்றி பேசியிருக்கிறேன். நாவல் எழுதுவதற்கோ கதை எழுதுவதற்கோ ஐடியா என்பது மிக முக்கியம். முன்பு யாராவது நான் சொல்லும் ஐடியாவில் இருந்து நல்ல கதை எழுதினால் சந்தோஷப்படுவேன். கொஞ்சம் கவலையாக இருந்தாலும் கதை நன்றாக வந்திருந்தால் திருப்தியே. ஐடியாவுக்கு எனக்கு பஞ்சம் இருந்ததில்லை. இன்று அப்படியல்ல. ஷோபாவின் எழுத்து நன்றாக இல்லை. அத்துடன் ஐடியாவை பொறுக்குவதை லேஜிச்டிமேட் பண்ணுகிறார். இரண்டும் எனக்கு பிரச்சினை. இதையே மோசடிகள் என்கிறேன்.

இச்சா நாவலே  மோசடி என்கிறீர்களா ?

மோசடியில்லாமல் வேறு என்ன? ஒரு ஐடியாவை எடுத்துக்கொள்ளுதல் மோசடிதானே. நான் எழுதிய நாவல் எப்படி அவருக்கு கிடைத்திருக்கும் என்ற சந்தேகம் இருக்கலாம். நியாயமான கேள்வி. இரண்டாவது தற்செயலாக (கோ இன்சிடென்ட்) இருக்கலாம். ஆனால் இங்கு தற்செயல் என்பது மிக அதீதம். அது எப்படி சாத்தியம் என்று வாசிப்பவர்கள் யோசிக்க வேண்டும். இரண்டாவது இரண்டு நாவல்களின் மெயின் ஸரக்சர்களே ஒன்றாக இருக்கின்றன. அவர் மிக நன்றாக அறியப்பட்ட எழுத்தாளர். ஷோபாவின் எழுத்தால் தாக்கம் அடைந்து சேனன் இப்படியொரு நாவலை போலச் செய்தார் என்று நீங்கள் ஒரு விமர்சனத்தை வைக்கலாம். இதனை முற்றாக மறுத்து கதைக்கவே இங்கே வெளிப்படையாக உரையாடுகிறேன். அவரிடம் இருக்கும் ஐடியாக்கள், கருத்துகள் போன்றவற்றில் என்னுடைய தாக்கமே அவரிடம் உண்டு. வரலாறை பின்சென்று தேடிப்பாருங்கள். அவரிடம் இருந்து கொப்பியடிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. அவருக்கு ஐடியாக்கள் சார்ந்த கற்பனை குறைவு. பலதை பொறுக்கி திரித்து எழுதியிருக்கிறார். இதுவே எனது குற்றச்சாட்டுகள்.

என்னுடைய நாவல் எப்படி ஷோபாவுக்கு முன்னமே சென்றது என்பது தொடர்பாக பேஸ்புக்கில் நடந்த உரையாடலில் ஷோபாசக்தியின் சகோதரி கவிஞர் தர்மினி என் மீது பல்வேறு வகையான குற்றச் சாட்டுகளை வைத்திருக்கிறார். தன்னிடம் தனியான கணினியும், ஷோபாவிடம் தனியான கணினியும் இருப்பதாகச் சொல்கிறார். இதனை நான் நம்பவில்லை. முன்னர் அப்படி இருந்ததில்லை. அது எனக்குத் தெரியும். பின்பு கணனி வாங்கிய கதை வேறு. இதை பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் விதம் எனக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. சகோதரத்துடனும் தோழமையுடனும் பழகிவிட்டு இப்போது தரக்குறைவாக எழுதுவது கடும் வேதனையைத் தருகிறது. இருக்கட்டும். அதற்காக நான் ஒருபோதும் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கப் போவதில்லை. நான் நினைக்கிறேன் -தர்மினிக்கு தெரியாமல் இது நிகழ்ந்து இருக்கும் என்று. அவர் தரவிறக்கி வைத்திருந்த பிரதியை அல்லது மின்னஞ்சலில் இருந்த பிரதியை ஷோபா நோட்டம் விட்டிருக்கலாம். தர்மினி என்னதான் மறுத்தாலும் நான் ஒருபோதும் ஷோபாசக்தி எனது நாவலை முன்னமே வாசிக்கவில்லை என்று சொல்வதை நம்பத் தயாரில்லை. ஷோபாசக்தி மீதுதான் முழு குற்றச்சாட்டையும் வைக்கின்றேனே தவிர தர்மினியின் மீதல்ல.

சமகால எழுத்தாளர்கள், ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இருவரும் ஒரே அலைவரிசையில் சிந்தித்து இருக்கிறீர்கள் என்று கருதவும் இடமுண்டு அல்லவா?

மோசடி நிகழாமல் எப்படி இரண்டு சமகால நாவல்கள் ஒத்ததாக வரும்? திரும்பவும் சொல்கிறேன், இரண்டு நாவல்களும் இப்போது இருகின்றன. இரண்டையும் வாசித்துவிட்டு வாசகர்கள் யோசிக்கட்டும். இரண்டு எழுத்தாளர்கள் தற்செயலாக ஒரே அலைவரிசையில் சிந்தித்து இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால், இதிலிருக்கும் அதீதத்தை யோசிக்க வேண்டும். அல்லாவிடில் யாராவது ஒருவர் முன்னமே படித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். எனது நாவலில் இயக்கத்தில் இணையும் சம்பவம் வரும். அதனை முன்னமே படித்த தர்மினி, இவை மிகையாகவுள்ளன, தவிர்க்கும்படி ஆலோசனை கூறினார். நன்றாக எனக்கு நினைவுள்ளது. அதன் அடிப்படையில் பலதை நீக்கியிருந்தேன். இச்சாவில் இதேபோல் ஒரு சம்பவம் வருகின்றது. அப்படியென்றால் இது எப்படி நிகழந்து இருக்கும் என்ற யோசனை எனக்கு வருமா.. வராதா? அடுத்ததாக எழுதப்போகும் நாவலில் ‘எஸ்பிராண்டோ’ மொழியை பயன்படுத்த போகிறேன் என பேசி இருக்கிறேன். அதற்காக அந்த மொழியை படிக்கிறேன் என்று பேசி உள்ளேன். அந்த டெக்னிக் (உரோவன் மொழி) இச்சாவில் வந்துள்ளது. படிக்கும்போது எனக்கு அந்திரமாக இருக்குமா இருக்காதா? இப்படி நிறைய உள்ளன.

இச்சாவில் ஆலாவின் புலம்பெயர் வாழ்வு கற்பனைக் கதையாகிவிடுகிறது, சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களில் சாதனாவின் புலம்பெயர் வாழ்வு தன்னுடைய அடையாளத்தை அழிக்கிறது. இதைத் தவிர்த்து சில சம்பவங்கள் ஒற்றுமையைக் கொண்டுள்ளன என்பதில் மறுப்பதற்கில்லை. உங்கள் நாவலில் இருந்துதான் ஐடியாவுக்கான தாக்கம் பெற்று இருக்கிறார் என்றால், ஏன் முன்னைய பகுதியில் அவர் செய்யவில்லை?

இச்சாவில் முன்பகுதியில் என்னுடைய நாவலின் தாக்கங்கள் இருக்கின்றன. அவர் அவற்றை மாற்றி எழுதியிருக்கிறார். நான் நினைக்கிறேன் ஷோபாசக்தி தான் எழுதிவைத்திருந்த கதையை, எனது நாவலை படித்துவிட்டு மேம்படுத்தியிருகிறார். எனது நாவலில் இருக்கக்கூடிய மஜிக்கல் ரியாலிசம், அப்ஸ்ரக் எழுத்துமுறை அவருக்கு தொந்தரவைக் கொடுத்திருக்கலாம். என்னுடைய நாவலிலுள்ள புதுமை அதிகம் கவனிக்கப்பட்டுவிடும் என்று நினைத்திருக்கலாம் என்றே நான் அறிந்த ஷோபாசக்தியை வைத்து மதிப்பிடுகிறேன்.

நான் எழுதிய தொன்மகக் கதைகளை அவரால் கொண்டுவர முடியவில்லை. காரணம் அதற்குரிய மொழி அவரிடம் இல்லை. அப்படியான விடயத்தை எழுதக்கூடிய சக்தி அவருடைய மொழிக்கு கிடையாது. அவரால் ஒரேமாதிரித்தான் எழுதமுடியும். கொரில்லாவையும் , ம் நாவலையும் புதிய வாசகனுக்கு வாசிக்கக் கொடுத்துப்பாருங்கள், இரண்டும் ஒரே சமயம் எழுதியது என சொல்லும் சாத்தியம் உள்ளது. அவருக்கு என்று ஒரு பாணியுள்ளது. அதில் மட்டும்தான் பயணிக்க முடியும். என்னுடைய நாவலில் ஒரு அத்தியாயம் புத்த மத கதைகளை சொல்வது போன்ற பாணியில் இருக்கும். அப்படியெல்லாம் சொல்லும் திறன் ஷோபாவுக்கு இல்லை. அவர் நிறைய எழுதி இருக்கிறார். நீங்களே இதை தீர்மானிக்க முடியும்.

ஷோபா என்னுடைய நாவலின் ஸ்டக்சரை வைத்தே தன்னுடயை நாவலை முடித்துள்ளார். சேனனது நாவல் இப்போதைக்கு வராது என்று அவர் எதிர்பார்த்துவிட்டார் போல. நான் அதிகம் அரசியல் செயற்பாட்டு வேலையில் இருப்பதால் இலக்கியம் எழுதுவது குறைந்துள்ளது. அதனால் இந்த இலக்கிய சோம்பேறி நாவலை கொண்டுவரப் போவதில்லை என்று நினைத்திருக்கலாம். இச்சா நாவலை அவசரமாக கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். அதற்கு என்னுடைய நாவல் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

இச்சா நாவல் வர முதலே – சில ஆண்டுகளுக்கு முன் அந்தக் கதையை தமக்கு ஷோபாசக்தி சொல்லி உள்ளார் என ஒரு சிலர் பதிவு செய்து உள்ளார்கள். இதை சொல்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என எனக்கு விளங்கவில்லை. ஒரு கதையை நேரடியாகவும் ஒட்டு மொத்தமாகவும் பிரதி செய்யும் அளவுக்கு முட்டாளா ஷோபா? அல்லது அப்படி ஒரு கேவலமான குற்றச் சாட்டை வைக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லையா? ஆம் கதை சொல்லி இருக்கலாம். இதில் என்ன பிரச்சினை. எழுதும் ‘வடிவ ஐடியா’ என்பது சொல்லப்படும் கதை சார்ந்த விடயம் மட்டும் அல்ல. நாவல் கொப்பிதான் என்ற முன் முடிவோடு இவர்கள் பேசுகிறார்கள் போல. அதிலிருந்து அவதூறுகளுக்கு தாவ முதல் சற்று சிந்திக்க கூடாதா..?

மூன்று வருடங்களுக்கு முன் எனது முதல் வரைவை பார்த்தவர்கள் இருக்கிறார்கள். படித்து விட்டு அல்லைப்பிட்டியை ஆண்டது அல்லி ராணி என ஒரு கதை உண்டு என மூன்று வருடத்துக்கு முன் ஒருவர் எனக்கு மெயில் போட்டது ஞாபகம் உண்டு (தமிழ் பேசும் மக்கள் வாழும் ஈழப் பகுதி முழுவதும் அல்லி பற்றிய பல்வேறு கட்டுக் கதைகள் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது). இந்த தகவல்களை வைத்து நான் என்ன செய்ய முடியும்? அத்தகைய சில்லறை விவாதத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

ஷோபாசக்தி தன்னுடைய பேஸ்புக்கில் உங்களது நாவலை படிக்கவில்லை என்று குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார். அதனை படித்தீர்களா?

சேனனின் விநோத சம்பவங்கள்:

தோழர் சேனன் சில வருடங்களிற்கு முன்பு வெளியிட்ட நூலைப் பற்றிய செய்தியொன்றை, அந்நூல் வெளிவந்தபோதே சேனன் என்னிடம் சொல்லியிருந்தார். அச் செய்தியை நானும் வேடிக்கையாக இரண்டொரு தடவைகள் என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமுள்ளேன். சேனன் தனது நூலுக்கு வைத்திருந்த தலைப்பு கொலை மறைக்கும் அரசியல்‘. ஆனால் நூலை வெளியிட்ட பதிப்பாளர் ஷோபாசக்தியை முன்வைத்து கொலை மறைக்கும் அரசியல் எனத் தலைப்பு வைத்தால்தான் நூல் தமிழகத்தில் கவனம் பெறும் எனச் சொல்லியிருந்ததால் ஷோபாசக்தியை முன்வைத்து கொலை மறைக்கும் அரசியல் என்ற தலைப்போடு நூல் வெளியாகியது. (யப்பா எவ்வளவு பெரிய தலைப்பு!).

இப்போதும் அப்படியான ஒரு விநோத வேலையில் தோழர் சேனன் இறங்கியிருக்கிறார் என நினைக்கிறேன். எனது இச்சா நாவல் வெளிவந்து சில மாதங்கள் கழித்து, அவரது ஒரு நாவல் வெளியாகியிருக்கிறது. பத்து மாதங்கள் கழித்துப் பொறுமையாக ஓர் அவதூறை சேனன் பொதுவெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அவரது கதையின் பாதிப்பில் நான் இச்சா எழுதியுள்ளேனாம். முறைப்படி நான்தான் இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் இச்சா தான் முதலில் வெளியானது.

இச்சாவுக்கு முன்பே, தான் தன்னுடைய நாவலை எழுதி, அதைத் திருத்தம் செய்யவோ படித்துப் பார்க்கவோ கொடுத்த இடங்களிலிருந்து ஷோபாவுக்குத் தகவல் கசிந்து ஷோபா தன்னுடைய எழுத்தைப் பிரதி பண்ணிவிட்டதாக சேனன் தகவல் பரப்பிவருவதாகத் தெரிகிறது. முதலில் அவரது தன்னம்பிக்கையைப் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனினும் கண்ணதாசன் சொல்லிய ஓர் உவமையையும் சேர்ந்தே சொல்கிறேன்: வயிற்றில் பசியிருக்கிறது என்பதுக்காக எவனும் மலத்தை உண்பதில்லை.

இந்த இரண்டு நாவல்களுக்கும் முன்பே வெளியாகியது  மு.பொ. அவர்களின் சங்கிலியன் தரை‘. மு.பொ. சங்கிலியன் தரைக்கும் இச்சாவுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாகக் கருதியபோது, அதை உடனடியாகவே முகநூலில் நேர்மையுடன் பதிவு செய்தார். நானும் உடனேயே “அய்யா, நான் இதுவரை உங்களுடைய நாவலைப் படிக்கவில்லை. உங்களது பதிவு உங்களின் நாவலைப் படிக்கத் தூண்டுகிறது” எனப் பதிலளித்தேன். அத்தோடு அது நல்லபடியாகவே முடிந்து போயிற்று. கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பதும் உறுதியாகிற்று.

தோழர் சேனனும் இச்சாவைப் படித்துவிட்டு, அப்படியொரு கருத்தைப் பொதுவெளியிலோ அல்லது என்னிடமோ தெரிவித்திருந்தால் ” இல்லை நண்பனே, உங்களது நாவலை நான் படித்ததில்லை, இனியும் படிக்கப் போவதில்லை. ஏனெனில் உங்களின் முந்தைய நாவல் லண்டன்காரர் கொடுத்த மரணப் பாதிப்பிலிருந்தே நான் இன்னும் முழுதாக மீளவில்லை” எனச் சொல்லி, குணமாகவே பிரச்சினையை முடித்துவைத்திருப்பேன். 

மாறாக, பத்து மாதங்கள் கழித்து வதந்தியைச் சேனன் கசிய விடுவது அவ்வளவு சரியாக எனக்குத் தோன்றவில்லை. அனுபவத்திலிருந்து அவர் ஏன் பாடம் கற்கத் தவறுகிறார் என்பதும் புரியவில்லை. எனது பெயரை விளம்பரத்துக்காக முன்வைத்து வெளியிட்டதால் அவருடைய முந்தைய நூலான கொலை மறைக்கும் அரசியல் புத்தகம் வாசகப் பரப்பில் கவனம் பெற்றுவிட்டதா என்ன! அப்படியெல்லாம் ஒரு இழவும் நடக்கவில்லையே. இப்போது மட்டும் எனது பெயரை முன்வைத்து வதந்தியைக் கிளப்பினால் அவரது நாவல் கவனம் பெற்றுவிடப் போகிறதா என்ன! நாவலுக்கு உள்ளே காட்டவேண்டிய டெக்னிக்கையெல்லாம் வெளியில் காட்டுவதால் ஏதும் பயனில்லை. இலக்கிய வாசகர்கள் எப்போதுமே தெளிவாக இருப்பார்கள்!

நன்றி, வணக்கம்.

(எழுத்தாளர் ஷோபாசக்தி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய விளக்கம்)

அவருக்கு அப்படிச் சொல்ல எல்லாவித உரிமையும் உள்ளது. அவர் சொல்வதை நான் நம்ப விரும்புகிறேன். அப்படி நம்புவதற்கு யாராவது உளவியல், இலக்கியம் ரீதியாக ஆராய்ந்து எப்படி இருவர் ஒன்றுபோல் எழுத முடியும் என்று சொல்லட்டும் ஏற்றுக்கொண்டு போகிறேன். மற்றதை நான் வாசகர்களின் பொறுப்பில் விடுகிறேன்.

இந்த நாவலைப் படித்த சிலர் சட்டரீதியாக எதிர்கொள்ளலாமே இதனை என்றனர். ஒரு வக்கீல் கூட இலவசமாக செய்கிறேன் என்றார். நான் அதனை மறுத்தது மட்டுமல்லாமல், நான் ஷோபா மீது அப்படியான Plagiarism குற்றச்சாட்டை வைக்கவில்லை. ஐடியா சார்ந்த பிரச்சினை என்று விளங்கப்படுத்தினேன்.

ஷோபாவுக்கு சேனனைத் தெரியாது என்றுதான் ஷோபாவின் புதிய வாசகர் பலர் நினைப்பார்கள். ஏனென்றால் சேனன் என்ற எழுத்தாளர் இருப்பது ஷோபா ஊடாக யாருக்கும் தெரியவரவில்லை. சிலர் மோசமாக எழுதுவதால் இதை பதிவது அவசியம். ஆனால் தொடர்ச்சியாக ‘கொலை மறைக்கும் அரசியல்’ புத்தகத்தை முன்வைத்து ஒற்றைக் கருத்து ஒன்றை மட்டும் பேசிவருகிறார் ஷோபா. அந்த புத்தகம் தற்போது இலவசமாக கிடைக்கும். அதை முழுக்க வாசித்துப் பார்க்கவும். அதில் ஷோபாவை வைத்து வியாபாரம் செய்யும் விதமாக ஏதும் இருக்கின்றதா என்று தெரியும். தன்னைப் பற்றிய அளவுக்கு மீறிய கற்பனையில் மிதக்கும் மன வியாதி கருத்தாக அதை நான் தட்டிக் கழிக்க விரும்புகிறேன்.

ஷோபாசக்தி இரண்டு நாவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவரது குறிப்பில் மறுக்கவில்லை. தான் முன்னமே நாவலை எழுதிவிட்டேன் என்கிறார். இதன் மூலம் நாவலை மோசடி செய்தது நான் என்கிறேன் என்கிறாரா? நேரடியாக ஷோபா பேசவேண்டும்.

வயிற்றில் பசியிருக்கும் என்பதற்காக யாரும் மலத்தை தின்பதில்லை என்று எழுதுகிறார். இதனைப் பின்பற்றி பலரும் எழுதுகிறார்கள். இந்த மொழியே பிரச்சினை. ஒடுக்கப்பட்டவர்களை வசையாட பயன்படுத்தப்படும் சொற்கள் இவை. அதிகாரத்திலிருந்து வெளிப்படுபவை. இவ்வாறு சொல்வதன் அர்த்தம் என்ன? ஷோபா இதனை விளங்கப்படுத்த வேண்டும்.

“அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்கிறார். நான் பெரிய எழுத்தாளான் நன்கு அறியப்பட்டவன். ‘நான் கற்பனை வளம் கொண்டவன். சேனன் ஒன்றுமேயில்லை. இவரிடம் என்ன உள்ளது’ என்ற தெனாவெட்டுத்தான் இதிலிருப்பது. என்ன கதை இது? நான் நிறைய எழுதாமல் இருக்கலாம். ஆனால் எழுதியிருக்கிறேன். ஒருபோதும் ஒப்பீட்டுப் பிரச்சினைக்கு நான் சென்றதில்லை. ஷோபா மிகுந்த தெனாவெட்டுடன் சொல்கிறார். இதனை கேள்விக்குள்ளாக்கிறேன்.

இச்சாவை வாசித்து என்னுடைய நாவலை நான் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருப்பேன். ஷோபா எனது நாவலை வாசித்து மோசமாக எழுதியிருக்கிறார். நன்றாக எழுதியிருந்தால் நான் இந்தப் பிரச்சினையை எடுத்தே இருக்கமாட்டேன். இச்சா நாவலைவிட என்னுடைய நாவல் ஆழமானது. இப்படி நான் எங்கும் சொல்வதில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன். இச்சாவை விட ஆழமாக சென்று சரியான முறையில் அரசியலையும் அணுகியுள்ளது எனது நாவல். நேரடியாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுடன் உரையாடியிருக்கிறது.

முதலில் இச்சாவை நானும் படிக்கவில்லை. அவரது எழுத்தின் மீதான ஈர்ப்பு எப்போதோ குறைந்துவிட்டது. அதற்காக அவரது எழுத்துகளை குப்பை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அப்படி விமர்சிப்பவன் அல்ல நான். ஜெயமோகனின் படைப்புகள் எனக்கு உடன்பாடனவை அல்ல. அதற்காக அவற்றை குப்பை என்று எல்லாம் எழுதவில்லை. எழுத்தில் விமர்சனமாக நான் இன்னும் வைக்கவில்லை. காரணம் முழுமையாக அவற்றைப் படிக்கவேண்டும். அப்படி படிக்காமல் எழுதுவது தவறானது. அந்த நேர்மை எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும். அப்படி படிக்காமல் ஷோபா சொல்கிறாராம். அதை பின்பற்றி அதேபோல் வாசிக்க முதலே சிலர் வியாக்கியானம் தொடங்கி விட்டனர். அந்த நடைமுறை அவர்களை வெறும் ‘வால்கள்’ என மட்டுமே காட்டுகிறது.

“லண்டன்காரர் நாவலை படித்த மரண பீதியில் இருந்து தான் மீளவில்லை” என்கிறார். இதன் அர்த்தம் என்ன? அதனை வாசித்தவுடன் இவருக்கு மிக கேவலமாக இருந்தது என்கிறாரா? இன்றுவரை அவர் எந்த விமர்சனத்தையும் வைத்ததில்லை. உண்மையில் லண்டன்காரர் எழுதிய போது ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் வாரித் தூற்றும், காறித்துப்பும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் இவர்களைப் பொருத்தவரை அது குப்பையானது. இப்ப நினைப்பார்கள் அப்பவே அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் என்று. ஏன் அப்பவே செய்யாமல் இப்போது சொல்கிறார்கள்? இதற்குப் பின்னே மோசமான அரசியல் உள்ளது. ஷோபாசக்தி நேரில் பேசும்போது இதில் அறுபது பக்கங்கள் தேறும் என்று முன்பு சொன்னார். அப்போது ஒரே மூச்சில் படித்தது – இப்பதான் மரண பீதி வருகிறது. இத்தகைய நடைமுறைகள் பின் இருக்கும் சுயல நல அரசியலைக் கட்டுடையுங்கள்.

“பத்து மாதங்கள் கழித்து சேனன் இதனை எழுதுகிறார்” என்று சொல்கிறார். முதலே ஷோபாவுக்கு இது தெரியும். பலருக்கு இந்த விடயம் பரவிவிட்டது. என்னுடைய நாவல் முதலில் வரட்டும் என்றே நான் அமைதியாக பொதுவில் பேசாமல் இருந்தேன்.

“நாவலுக்குள் இருக்கும் டெக்னிக்குகளை வெளியே காட்டக்கூடாது” என்கிறார். நான் நாவலுக்குள் இருக்கும் டெக்னிக்குகளைத்தான் கதைக்கிறேன்.

senan2.jpg?resize=1020%2C765&ssl=1

நீங்கள் எழுதிக்கொண்டிருந்த நாவலை ‘இச்சாவை’ படித்துவிட்டு மேம்படுத்தித் திருத்தி எழுதவில்லை என்று எப்படி நம்புவது? அதற்கும் வாய்ப்பு இருக்கிறதல்லவா..

இதற்கு பலவேறுபட்ட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. யார் யாருக்கு அனுப்பினேன் என்ற மின்னஞ்சல் பதிவுகள் என்னிடம் உள்ளன. 2017 இல் முழுமையாக நாவலை படித்ததாக யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் கிரிஷாந்த் இச்சா நாவல் வெளிவர முன்னரே என்னுடைய நாவலை முழுமையாக வாசித்துவிட்டு இந்த நாவல் நிச்சயம் பதிப்பிக்கப்பட வேண்டும் என்று என்னிடம் பேசினார். வாசன் எழுத்தில் கட்டுரையாக எழுதியிருக்கிறார். நான் நிறைய விடயங்களை படிமப்படுத்தியிருந்ததால் எல்லோருக்கும் இந்த நாவல் புரியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதனால் காலதாமதமாகியது. பின்னர் சில அத்தியாயங்களை நீக்கி, மீள எழுதிச் சேர்த்தேன். இவர்கள் காலபோக்கில் தங்களது கருத்துகளை பதிவார்கள் என்று நம்புகிறேன். வரலாற்றில் உண்மை நிலைக்கும். வரலாறு நீண்டது.

இந்த நாவலில் காதல் பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் இது காதல் நாவல் அல்ல. அதே போல பலவந்தமாக நிகழும் வல்லுறவையும் எழுதியிருக்கிறேன். கழிவறைகளை வர்ணம் பூசி காட்சிப்படுத்தியிருப்பார்கள் என்பதற்காக Slumdog millionaire திரைப்படம் வெளிவந்தபோது கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தேன்.  என்னுடைய நாவலையும் இம்சையையும் ஒப்பிட்டுப் பேசும் ஒருவர், ஷோபா பாலியல் வல்லுறவை அழகியலாக எழுதியிருக்கிறார் நீங்கள் வக்கிரமாக எழுயிருக்கிறீர்கள் என்று சாடியிருந்தார். வல்லுறவை அழகியலாக எழுத முடியுமா? அது அப்படிப்பட்டதா? வல்லுறவில் இருக்கும் அருவருப்பு எழுத்தில் வரவேண்டும் என்று தெளிவாக நான் எழுதினேன். ஆனால், இதனை ஒப்பிட்டுப் பேசும்போது என்னிடம் அழகியல் இல்லை என்கிறார். பாலியலை நீங்கள் கட்டமைத்திருக்கும் அழகியலாகப் பார்ப்பது வக்கிரமான சிந்தனை.

இச்சா நாவலில் பெரிதாக அரசியல் இல்லை. புலிகளை சில இடங்களில் படிக்க வேண்டும் என்று பலவந்தமாக புலி எதிர்ப்பாளர்களை திருத்திப்படுத்த எழுதுகிறார்.

உங்கள் அமைப்பு சார்ந்த கொள்கை பிரச்சாரங்கள் நாவலில் வந்துவிடுகிறதா?

லண்டன்காரனில் வரும் கறுப்பி என்ற பாத்திரத்தை நன்றாக வடிவமைத்துவிட்டு இறுதியில் சோஷலிச கட்சியில் ஏன் இணைத்தீர்கள் என்று பலர் கேட்டார்கள். இந்த இடத்தில் இந்த நிலைப்பாட்டில் வேறு எதனை எழுதலாம்? அதுவும் முற்போக்காக சிந்திக்கக்கூடிய எழுத்தாளன் வேறு எதனை எழுதி முடிக்க முடியும்? நான் இயங்குவதற்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதனை கறுப்பியின் கதாபாத்திரம் ஊடாகப் பார்த்தேன். நான் நாவலின் அடுத்த கட்டம் பற்றியும் சிந்தித்தேன். இந்த நாவலுக்கு அடுத்த பாகம் உள்ளதா என்று. அதனைத்தான் என்னுடைய பார்வைக் கோணத்தில் வைத்திருக்கிறேன். ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலில் ‘தமிழ் சொலிடாரிட்டியின் பிரச்சாரம் என்று சொல்வது அவர்களது பிரச்சினை. அமைப்பின் பெயரை வேணும் என்று ஒரு இடத்தில மட்டும் பயன்படுத்தியிருக்கிறேன். அதற்குக்காரணம் உண்டு. நிஜமாகவே இங்கிலாந்தில் ஒட்டுக்கப்பட்ட மக்கள் சார்ந்து இயங்கக்கூடிய அமைப்பு தமிழர்கள் மத்தியில் அதுமட்டும்தான். அதற்கான தேவை நாவலில் இருந்தது. அதனையும் ஓர் இடத்தில மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். நாவல் சம காலத்துக்கு மட்டுமானது அல்ல. சம காலத்தின் பதிவாக எக்காலத்துக்கும் இருக்க வல்லது. இத்தகைய தொலைதூர வரலாற்று பார்வையுடன் இந்த பிரச்சினையை அணுகவும்.

அடுத்ததாக என்ன எழுதப் போகிறீர்கள்?

காதலை முன்வைத்து நாவல் எழுதப் போகிறேன். தமிழில் காதலை முன்வைத்து நாவல் எழுதுவது கடினமானது. இதுவரை நான் காதலை எழுதியதே கிடையாது. ‘காதலாகிக் கசிந்து’ என்று ஒரு சிறுகதை மட்டும் எழுதியிருக்கிறேன்.

ஏன் உங்களுக்கு காதல் அனுபவம் இல்லையா?

அது நிறைய இருக்கிறது. அதற்காக அதனை எழுதிவிட முடியாது. நான் அரசியலில் மூழ்கி இருப்பவன். அது சார்ந்தே நிறையப் பேசவேண்டி எனக்கு இருந்தது. இன்னும் நிறைய இருக்கிறதுதான். ஆனால், குறிப்பிட்ட காதல் நாவல் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

காதலை தமிழ் எழுதுவது ஏன் கடினம்?

டைட்டானிக் என்று முன்னம் ஒரு படம் வந்தது அல்லா? எக்கசக்கமான விருதுகளை வென்றது. மேற்க்கத்தைய உலகில் அதிகம் பேசப்பட்டது. ஆனால் தமிழில் ஒவ்வொரு வருடமும் பல நூறு டைட்டானிக் வெளிவருகிறது. எல்லாமே ஒரே கதையை மாற்றி மாற்றி அலட்டுகிறது. சின்ன சின்ன மாறுதல்களோடு ஒரே கதை தான் திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது. தமிழ் இலக்கியத்திலும் இதே சூழல்தான். நான் இவற்றிலிருந்து மாறுபட்டு எழுத யோசித்து இருக்கிறேன். அது ஒரு பெரும் சவால்தான்.

 

அனோஜன் பாலகிருஷ்ணன் 

 

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

 

https://akazhonline.com/?p=2786

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் எல்லோரும் எல்லாவிதமாகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே யாரையும் புண்படுத்தியோ கிண்டல் செய்தோ எழுதக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டைத் தவம் போல பேணிவருகிறேன். இந்த எஸ்.பி.பி - எழுத்தாளன் அஞ்சலி சர்ச்சையில் குதிக்க மனம் உந்தியபோது கூடத் தவத்தைக் கலைய விடாது காத்துவந்தேன். 

இன்று 'அகழ்' மின்னிதழில் சேனனை அனோஜன் பாலகிருஷ்ணன் செய்திருக்கும் நேர்காணலில் சில பகுதிகள் என் குறித்தும் உள்ளன. அதைக் குறித்துப் பக்குவமாக நான்கு வார்த்தைகள் சொல்லிவிடலாமென நினைக்கிறேன். அதுகூட  யாரையும் புண்படுத்திச் சொல்லப் போவதில்லை. இந்த நேர்காணலுக்காக உழைத்த தம்பி அனோஜன் பாலகிருஷ்ணனுக்காகச் சொல்ல வேண்டியுள்ளது. நேர்காணலில் ஒரு நடுநிலமைத் தன்மையைப் பேணிவிட வேண்டுமென அனோஜன் கடுமையாகப் பாடுபட்டிருப்பது தெரிகிறது. அதற்குப் பாராட்டுகள்.

'சித்தார்த்தனின் விநோத சம்பவங்கள்' நாவலின் ஒரு துண்டையோ துணுக்கையோ கூட நான் இதுவரை படித்ததில்லை என்பதை முன்பே எழுதியிருக்கிறேன். 'அப்படியிருக்கலாம்', 'இப்படியிருக்கலாம்', 'என நம்புகிறேன்' போன்ற ஊகங்கள், வதந்திகளைப் பொருட்படுத்தி விவாதிக்குமளவுக்கு நான் வேலையற்றவனல்ல. 

சேனனும் வின்சன்ட் போலும் நானும் பாரிஸில் ஒண்டடிமண்டடியாகச் சுற்றித் திரிந்து செயற்பட்ட காலங்களில் நாங்கள் எங்களுக்குள்ளே எவ்வளவோ விவாதித்துள்ளோம், கனவுகள் கண்டுள்ளோம், எழுதியுள்ளோம், சிலபல இலக்கியக் கலகங்கள் செய்துள்ளோம் என்பதெல்லாம் புலம் பெயர் இலக்கியம் நன்றாக அறிந்த சேதிதான். சிறுபத்திரிகைகளில் பதிவான சங்கதிகள்தான்.

காலத்துக் காலம் இலக்கிய வெளிகளில் இவ்வாறான கூட்டுகள் உருவாவது, சேர்ந்து இயங்குவது, கலைவது, முரண்படுவது, விலகுவது, மறுபடியும் சேருவது என்பதெல்லாம் மிக இயல்பான ஒன்றுதான். இவையெல்லாம் இனிய நினைவுகளாக தங்கிவிடக் கூடியவையே அன்றி ஒருவர் மீது அவதூறு சாற்றுவதற்கான அனுமதிக் காலம் ஆகிவிடாது. 

ஷோபா என்னுடைய கதைகளைத் திட்டுவார், ஏனெனில் அவருக்கு என்மீது பொறாமை என்பதெல்லாம் என்னவகையான கூற்று என்பது எனக்குத் தெரியவில்லை. நான் எஸ்.பொ, சிவத்தம்பி போன்றவர்களைக் கூடத் திட்டியிருக்கிறேன். அதற்குப் பெயர் பொறாமையா என்ன? எனக்கு அவர்கள் எழுதியது பிடிக்கவில்லை அல்லது அவற்றை எதிர்க்கிறேன் என்பதுதான் அதற்கு அர்த்தம். வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசும் கெட்ட பழக்கம் என் கூடவே பிறந்தது. அதற்கு பொறாமை, கீழறுப்பு வேலை என்றா பொருள்? 

இந்த நேர்காணலில் மிகவும் நகைச்சுவையான விசயம் நான் இலக்கிய வியாபாரம் செய்கிறேன் என்பதுதான். தமிழில் எழுதும் எந்த இலக்கிய எழுத்தாளருக்கும் புத்தக வியாபாரம் என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். ஒரு புத்தகத்தின் அச்சு வேலைகளைப் பார்ப்பதற்காகவோ, அல்லது புத்தக அறிமுகக் கூட்டத்திற்காகவோ இந்தியா சென்றுவரும் பயணச் செலவில் மூன்றில் ஒரு பங்குகூட நமக்கு உரிமத் தொகையாகக் கிடைக்காது. ஏனெனில் நம்முடைய புத்தகம் விற்பனையாகும் தொகை அவ்வளவுதான். ஒவ்வொரு புத்தகம் வெளியாகும் போதும் கையால் நட்டமடைவதுதான் நம் இலக்கியப் பாரம்பரியம்.

ஒருவேளை இலக்கிய வியாபாரம் என்பதை வேறுபொருளில் சேனன் குறிப்பிடுகிறாரோ தெரியவில்லை. அதாவது அடிக்கடி இந்தியா சென்று அங்கிருக்கும் இலக்கியவாதிகளோடு நட்புப் பாராட்டி என்னை நிலைநிறுத்திக்கொண்டேன் என அவர் கருதுவாராக இருந்தால் அதுவும் பாமரத்தனமான கருத்து. அப்படி உள்ளடி வேலை பார்த்து ஒரு புத்தகக் கூட்டம் வேண்டுமானால் விமரிசையாக நடத்தலாம். ஆனால் ஒரு நூலை அவ்விதம் தூக்கி நிறுத்தவே முடியாது. பத்திருபது வருடங்களுக்கு உங்களது இடத்தை வாசகர்களிடம் தக்கவைக்கவும் முடியாது. ஏம்பா! ஒருவன் இந்தியாவுக்கு வருடத்திற்கு ஒருமுறை சென்றுவருவது அவ்வளவு தவறா என்ன? அவனுக்கு அங்கே ஆயிரம் வேலையிருக்கும்!

சரி இதையெல்லாம் சேனன் ஏதோ அறியாமல் சொல்கிறார் என்று கடந்துவிடலாம். ஆனால் ஷோபாவின் எழுத்துலகம் சேனனது அய்டியாக்களின் தாக்கத்தால் கட்டி எழுப்பப்பட்டது என்ற தொனிப்பட சேனன் சொல்லும் போதுதான் என்ன சொல்வது எனத் தெரியாமல் நான் திகைத்துப் போய் நின்றுவிடுகிறேன்.  அப்படியானால் இவ்வளவு நாளும் பல நேர்காணல்களிலும் கருத்தரங்குகளிலும் நான் " என் எழுத்துலகம் கு.அழகிரிசாமியாலும் எஸ்.பொவாலும் அ.மார்க்ஸாலும் ரமேஷ் - பிரேமாலும் சாருவாலும் ஜெயகாந்தனாலும் டால்ஸ்டாயாலும் ட்ராட்ஸ்கியாலும் கட்டப்பட்டது" என்று சொல்லி வந்ததற்கு எந்த அர்த்தமுமே இல்லையா முருகா! இது என்ன சோதனை!!

இவ்வளவுக்கா ஒரு மனிதர்  அறியாமையிலும் நாணமின்றியும் இருப்பார்! ஏன் தம்பி அனோஜா! இலக்கியத்தில் சேனனது இடம் எதுவென்று அவருக்கு உண்மையிலேயே தெரியாதா? 

ஞமலி மின்கம்பத்தின் கீழ் சிறுநீர் கழிக்கும்போது ஒற்றைக் காலைத் தூக்கி வைத்துக்கொள்வதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் சொல்வார்கள். தான் பெய்யும் மூத்திரத்தின் வீச்சுச் சக்தியால் மின்கம்பம் சாய்ந்துவிடக் கூடும் என ஞமலி நினைப்பதாலேயே, சரியப் போகும் மின்கம்பத்தைத் தாங்கிக்கொள்வதற்குத் தயாராகவே அது காலைத் தூக்கி வைத்துக்கொள்ளுமாம். 

 வேற லெவல் தன்னம்பிக்கை!
 

 

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி
   நேர்காணல்
    
   இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்காலஇலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா?
   சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை அடையத்தான் முடியும். எனக்கு அதை உருவாக்கவே தெரியும். மகிழ்ச்சி என் சுண்டுவிரல் அசைவுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி. எனவே வாழ்வின் எந்தக் கட்டத்திலும் என்னை எதிர்மறை எண்ணங்கள் நெருங்கியதேயில்லை. எதிர்காலத்தில் முதுமையோ, நோயோ என்னை விரக்தியில் வீழ்த்திவிட வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். அப்போதும் என் கற்பனை வழியாக நான் தப்பித்துக்கொண்டேயிருப்பேன்.
   இலக்கியம் ஒருபோதும் சலிப்பை  உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! பாரதியுடையதோ அன்னா அக்மதோவாவுடையதோ கவிதை வரிகைளை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கவுரவமாகவும் அமைதியாகவும் செத்துப்போங்கள்.
   தற்கால இலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? எனக் கேட்டிருந்தீர்கள். பொதுவாக நல்ல இலக்கியத்தையும் போலி எழுத்துகளையும் நூலின் ஒன்றிரண்டு பக்கங்களை வாசிக்கும்போதே அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். இப்போதெல்லாம் அந்தச்  சிரமம் கூடக் கிடையாது. புத்தகத்தின் பின்னட்டையில் பதிப்பகத்தால் எழுதப்பட்டிருக்கும் குறிப்பைப் படித்தாலே நூலின் யோக்கியதை பெரும்பாலும் புரிந்துவிடுகிறது. தண்ணீரிலிருந்து பாலைப் பிரிக்கும் நுட்பமறித்த பறவைக்குச் சலிப்பு ஏற்படாது. மாறாக, பாலின் மீதான வேட்கை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
   அண்மைக் காலமாக உங்களது ‘இச்சா’ நாவல் மீது பல வெரைட்டியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே; தேர்ந்த வாசகன் என்ற அடிப்படையில் எப்படி பார்க்கிறீர்கள்?
   ஓர் எழுத்தாளனுக்கு விமர்சனத்தைத் தவிர மகிழ்ச்சியைக் கொடுப்பது வேறெதுவாக இருக்கும்!  நல்வாய்ப்பாக என்னுடைய முதற் கதையிலிருந்தே நான் தொடர்ந்து வாசிக்கப்படுகிறேன், அதனாலேயே எப்போதுமே விமர்சிக்கப்படுறேன் என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே. என் கதைகள் மீதான விமர்சனங்கள் எப்போது நிறுத்தப்படுகின்றனவோ, அப்போது நான் மூளை செத்தவனாகிவிட்டேன் என்பதே பொருளாகும். விமர்சனங்கள் என்பதற்குள் நீங்கள் பச்சையான அவதூறுகளைச் சேர்த்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஓர் இலக்கிய இதழின் வேலை அவதூறுகளைப் பொருட்படுத்தி விவாதிப்பதும், சமார்த்தியமாகக் கோள்மூட்டி விடுவதுமல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
   ஒருவர் எழுதிய புத்தகத்துக்கு, நீங்கள் அறிமுகமோ வாழ்த்தோ  சில சொற்களில் சொல்லிச் சென்றுவிடலாம். அதில் தவறில்லை. ஆனால், நீங்கள் அந்த நூலை விமர்சனம் செய்யப் பொறுப்பு எடுத்துக்கொண்டால், அந்த விமர்சனம் முழுமையாக அமைய வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். இடப் பக்கத்து வாயில் கடலை வடையைக் கடித்துக்கொண்டே, வலப் பக்க வாயில் நூலைக் கடித்துக் குதறுவதெல்லாம் அநீதி. ஒரு நூலை எழுதுவதற்காகப் படைப்பாளி கொட்டிய உழைப்பையும் நேரத்தையும் நீங்கள் மதித்தே ஆக வேண்டும். அந்த மதிப்புடன் உங்களது விமர்சனங்கள் அமைய வேண்டும். விமர்சனத்துக்கே அந்த நூல் தகுதியற்றது என நீங்கள் கருதினால் விட்டுவிடுங்கள். விமர்சிக்கும் வேலையை நீங்கள் வருத்தப்பட்டு ஸூமில் சுமக்கக் கூடாது.
   இத்தகைய பொறுப்பற்ற விமர்சனப் போக்குகளால் எந்தப் படைப்பாளியும் நிச்சயம் வேதனையுறவே செய்வார். ஒரு படைப்பாளியை வேதனையுறச் செய்வதில் கிளர்ச்சியடைவது அருவருப்பானது. இப்போது ஒரு ட்ரெண்ட் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். என்னைப் பற்றிக் கூட அப்படிச் சிலர் சொல்கிறார்கள். அதாவது இந்திய வாசகர்களுக்காக நான் எழுதுகிறேனாம். இலக்கிய வாசகர்களில் ஈழமாவது இந்தியாவாவது மலேசியாவாவது மயிராவது! எல்லோரும் தமிழ் இலக்கியம் என்ற தொன்மையான நீண்ட பரப்புக்குள்  இயங்கிக்கொண்டிருக்கிறோம். முடிந்தால் சர்வதேச இலக்கியப் பரப்புக்குள் போகவும் எத்தனிக்கிறோம். இலக்கியம் என்ன இறால் சொதியா ஈழத்துக்கு மட்டும் தனித்துவமாகப் படைப்பதற்கு?
   நான் தெரியாமல்தான் கேட்கிறேன்…என்னுடைய கதைகளை ஈழத்தவர்கள் படிப்பதில்லையா என்ன! ஈழத்து வாசகர்களிடமோ, புலம் பெயர்ந்த வாசகர்களிடமோ நீங்கள் தேடிப் படிக்கும் எழுத்தாளர் யாரென்று கேட்டால் அவர்கள் என் பெயரையும் சொல்வார்கள்தானே. இல்லையென்று மறுக்க யாருக்கும் தைரியமிருக்காது என்றே நம்புகிறேன். பிறகென்ன தமிழக வாசகர்களை மட்டுமே இலக்கு வைத்து எழுதுகிறேன் எனக் குற்றச்சாட்டும் குதர்க்கமும்!
   இந்த நொட்டை விமர்சகர்களுக்கு முகநூலைத் தெரிந்தளவுக்கு,  தீவிர  இலக்கிய வாசகர்களைப் பற்றித் தெரியாது. இலக்கியத்தின் மீதான அவர்களது கூர்மையான வாசிப்பை இவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். போலி இலக்கியமெல்லாம் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கேயுமே செல்லுபடியாகாது. தகுதியே இல்லாமல் தீவிர இலக்கியத்திலோ, சிறுபத்திரிகை உலகிலோ கவனம் பெற்ற ஒரேயொரு படைப்பாளியைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். கிடையவே கிடையாது. நீங்கள் நூலுக்காக எத்தனை விளம்பரம் செய்தும், நடிகர்களைக் கூப்பிட்டு நூல் வெளியீடு செய்தும், முகநூலில் லைவ் போட்டும் உங்களுடைய தகுதியற்ற நூலை இலக்கியமென ஒருபோதும் தூக்கி நிறுத்தவே முடியாது. அப்படிச் செய்துவிட முடியுமென்றால் என்னுடைய அருமை நண்பர் அராத்து  தான் தமிழின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக அடையாளம் பெற்றிருப்பார். அப்படி ஏதாவது எதிர்கால வரலாற்றில் நிகழ்ந்தால் நான் உயிரோடேயே இருக்கமாட்டேன் என உங்களிடம்  சத்தியமே செய்து தருகிறேன். இலக்கியத்தைப் பொறுத்தவரை நானெல்லாம் அசுணப் பட்சி போல. அந்தப் பறவை கெட்ட சங்கீதத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே உயிர் துறந்துவிடுமாம்.
   கண்டி வீரனுக்கு பிறகு சிறுகதை ஓட்டத்தில் உங்களை காண முடிவதில்லை. ரம்ழான் போன்றபுதுரக வாசிப்பு சிறுகதை மனத்தினை விட்டு ஒதுங்கிக் கொண்டதன் சூழல் எத்தகையது?
   பார்த்தீர்களா பேசிக்கொண்டிருக்கும் போதே பொசுக்கென்று ஒரு விமர்சனத்தை போகிற போக்கில் வீசிவிட்டீர்கள். உண்மையிலேயே உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை நான் எழுதப்போகும் அடுத்த  கதை உங்களுக்குப் பதிலளிக்கலாம். அது என்ன பதில் எனத் தெரிந்துகொள்ள நானும் உங்களைப் போலவே ஆர்வமாகயிருக்கிறேன்.
   இலங்கையின் கதை மாந்தர்களையும், இங்கிருக்கும் நிலப்பரப்பினையும் வைத்து ஷோபாசக்தி படைப்பரசியல் செய்கிறார் எனும் விமர்சனம் பரவலாக உள்ளதே; இதற்கான மாற்றுகருத்தியலை எப்படி முன் வைக்கிறீர்கள்?
   மாற்றுக் கருத்தெல்லாம் கிடையவே கிடையாது. மாறாக, இந்த விமர்சனத்துக்கு மன மகிழ்வோடு நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய மாந்தர்களையும் நிலத்தையும் அதனுடைய பண்பாட்டையும் அரசியலையும் நான் எழுதாமல் அருந்ததி ராய் வந்தா எழுதுவார்!
   ஈழத்தில் அலையும் உங்களது ஆத்மாவிற்கு ஓய்வேயில்லையா?
   எனக்கு இந்த வகையான கேள்விகள் புரிவதேயில்லை. புகலிட தேசங்களின் கதைகளை, வாழ்க்கையை புலம் பெயர்ந்து சென்ற எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைக் கருத்தை, ஒரு தீவிர இலக்கிய விமர்சனம் போன்ற பாவனையில் சிலர் முன்வைக்கிறார்கள். உலகம் சுற்றும் வாலிபன் கதைகளை எழுதுவதற்குத்தானே அ.முத்துலிங்கம் அண்ணரை நேர்ந்துவிட்டிருக்கிறோம். அது போதாதா உங்களுக்கு?
   இருபது வயதிலேயே பிரிந்து வந்த ஈழத்தையும், நான் கண்ணாலேயே பார்த்திராத வன்னியையும் அம்பாறையையும்; இல்லவே இல்லாத இலுப்பங்கேணியையும் பெரிய பள்ளன் குளத்தையும்  என்னால் தனி நாவல்களாகவே எழுத முடிகிறதென்றால், நான் முப்பது வருடங்களாக வாழ்ந்துவரும் பாரிஸ் குறித்து எனக்கு எழுத முடியாதா என்ன!
   ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாகப் புலம்பெயர்ந்த காலித் ஹுசைனிக்கு கிட்டத்தட்ட என்னுடைய வயதுதான். அவர் படித்தது கிடித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். ஆனால், ஏன் அவர் திரும்பத் திரும்ப ஆப்கானிஸ்தானையும் போரையும் பற்றியே எழுதுகிறார் என்றா கேட்பீர்கள்? அல்லது Three Daughters of China-வை எழுதிய யங் சாங்கிடம் ஏன் சீனாவைக் குறித்தும் கலாசாரப் புரட்சிக் காலத்தைக் குறித்தும் எழுதுகிறாய் என்றா கேட்பீர்கள்?
   எங்களில் எந்த நிகழ்வுகளும் சம்பவங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவோ அவை குறித்துத்தான் நாங்கள்  எழுத விரும்புவோம். என்னுடைய புகலிட வாழ்க்கையில் அவ்வாறான பாதிப்புகளும் சம்பவங்களும் இல்லையா எனக் கேட்டீர்களானால், எவ்வளவுக்கு இருக்கிறதோ அவ்வளவுக்கு எழுதியிருக்கிறேன் என்பதே என் பதில்.
   யுத்தம் முடிந்த பிறகும் எழுத்துகளில் ஊசலாடும் யுத்தம் முடியாமலிருக்கிறதே? இதனை வைத்துஅரசியல் செய்கிறீர்கள் என எடுத்துக் கொள்ளளலாமா?
   பஞ்சம் போகும் பஞ்சத்தால் பட்ட வடு போகாது என்றொரு பழமொழி உள்ளது. பஞ்சத்தின் வடுவே அப்படியென்றால் கொடிய யுத்தத்தின் வடுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். நாஸிகளால் யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தைக் குறித்து,  இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தைக் குறித்தெல்லாம் இப்போதுவரை இலக்கியத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இலங்கையில் நடந்த யுத்தத்தைக் குறித்தும் இன்னும் நூறாண்டுகளுக்கும் என் சந்ததிகள் எழுதத்தான் போகிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் உலகின் பல மொழிகளிலும் அதை வருங்காலத் தலைமுறையினர் எழுதுவார்கள்.
   இலங்கையின் குடிகள் எல்லோருமே யுத்தத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆனால்,  அவற்றிலும் அளவு வித்தியாசங்களுள்ளன.  அந்த வித்தியாசங்களுக்கு ஏற்பத்தான் யுத்தம் குறித்த அவர்களது பார்வைகளும், ஞாபகங்களும், மனப்பதிவுகளும், உணர்வெழுச்சியும் இருக்கும்.
   நான் யுத்தத்தின் பார்வையாளனாக இருக்கவில்லை. இந்த யுத்தத்தைச்  செய்தவர்களில் ஒருவனாக இருந்தேன். என் நண்பர்களை இயக்கத்திற்கு அழைத்துப் போய், அவர்களைச் சாகக் கொடுத்திருக்கிறேன். யுத்தத்தில் நூற்றுக்கணக்கான எனது உறவுகளையும் நண்பர்களையும் பலிகொடுத்துள்ளேன். இலங்கை அரசின் சிறையில் இருந்திருக்கிறேன். சித்திரவதைகளை எதிர்கொண்டிருக்கிறேன். புலம் பெயர்ந்து வந்த பின்பும் யுத்தம் என்னைத்  தொடர்ந்தே வந்திருக்கிறது. யுத்தத்தின் விளைவுகளை நாங்கள் பாரிஸிலும் சந்தித்தோம். சனநாயகத்தைப் பேசிய எங்கள் மீது, புலிகளால் இரகசிய யுத்தமொன்று நிகழ்த்தப்பட்டது. இங்கே கொலைகளும் தாக்குதல்களும் நடந்தேறின.  யுத்தம் எனக்குக் கதை எழுதுவதற்கான கச்சாப் பொருள் அல்லவே அல்ல. நான் யுத்தத்தாலும் யுத்த நினைவுகளாலும் வடிவமைக்கப்பட்ட உயிரி. யுத்தத்தைப் பற்றி நான் எழுதுவது என்னையே எழுதுவதுதான். யுத்தத்தைக் குறித்து நான் இதுவரை எழுதியது கால்வாசி கூட இல்லை. மிகுதியை இனிமேற்தான் எழுத வேண்டும்.
   யுத்தத்தை எழுதி அரசியல் செய்கிறீர்களா எனக் கேட்டீர்கள். ஆம்! நிச்சயமாகவே அதைத்தான் செய்கிறேன். நடந்து முடிந்த யுத்தத்தை மட்டுமல்ல, தற்போது சிறுபான்மை இனங்கள் மீது இந்த அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கும் மறைமுக யுத்தத்தையும் நான் பல்வேறு கோணங்களில் துல்லியமாகத் திரும்பத் திரும்ப இலக்கியத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நாட்டில் தேசிய கீதத்தைத் தாய்த் தமிழ் மொழியில் பாடும் அற்ப உரிமை கூட உங்களுக்கும் எனக்கும் மறுக்கப்பட்டிருக்கிறது. ‘அரசியல் கைதிகளே எங்களிடம் இல்லை’ என்கிறார் இலங்கையின் நீதி அமைச்சர். கவிதை எழுதிய சிறுவன் பயங்கரவாதி எனக் கைது செய்யப்படுகிறான். ஒரு சிறுகதை எழுதியவர் சிறையில் கிடக்கிறார். காணாமற்போன பல்லாயிரக்கணக்கானவர்களைக் குறித்துப் பொறுப்புச் சொல்ல அரசு மறுக்கிறது. பத்திரிகைச் சுதந்திரம் கிழிந்துபோய்க் கிடக்கிறது.
   ஒரு படைப்பாளி தன்னுடைய நாவலில் அரசை விமர்சித்தால், அரசின் ஆதரவாளர்களுக்குச் சுள்ளென்கிறது. புலிகளையோ இன்னொரு இயக்கத்தையோ விமர்சித்தால், அவர்களுடைய ஆதரவாளர்களுக்குச் சுடுகிறது. மதத்தை விமர்சித்தால் மதவாதிகள் கடுப்பாகிறார்கள். சாதிய ஒடுக்குமுறையை எழுதினால் சாதி வெறியர்கள் கொந்தளிக்கிறார்கள். இது மிகவும் அடிப்படையான உண்மை. இந்த உண்மையை நன்றாகத் தெரிந்துகொண்டே எழுதுகிறோம். இலக்கியத்துக்குச் சம்மந்தமே இல்லாத இத்தகைய அதிருப்தியாளர்கள் நம்மை நேரடியாகத் தாக்குவார்கள். நாயே பேயே என்றெல்லாம் முகநூலில் எழுதுவார்கள்.
   ஆனால், அரசினதும் அல்லது இயக்கங்களினதும் அல்லது மதத்தினதும் சாதியினதும் ஆதரவாக இருக்கும் அதேவேளையில், இலக்கியத்திலும் ஓரஞ்சாரமாக இயங்குபவர்கள் நம்மை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். இலக்கியப் போர்வை போர்த்தியபடியே உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். ‘யுத்தத்தை தொடர்ந்து வாசிக்கச் சலிப்பாகயிருக்கிறது’, ‘யுத்தத்தை தமிழக வாசகர்களுக்கு விற்பனைப் பண்டமாக்குகிறார்கள்’  என்றெல்லாம் சுற்றிவளைத்துச் சுண்ணாம்படித்து தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள். நடந்தவற்றை மறந்துவிடுமாறு நமக்குப் புத்திமதி சொல்வார்கள்.
   ஓர் இனப்படுகொலை என்பது அவ்வளவு சுலபத்தில் மறக்கக்கூடிய விசயமா என்ன! எனக்கு அப்படி இல்லை! நான் என் எழுத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, நிகழ்ந்த இனப்படுகொலையை வெவ்வேறு மொழிகளில் பதிவாக்கி வைக்கவும் முயற்சிகளைச்  செய்கிறேன். அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கிறேன்.
   இலக்கியத்தில் சமகால அரசியலைப் பேசக் கூடாது, அரசியல் முழக்கங்களைப் பொதிந்துவைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்லப்படும் விமர்சனங்கள் எனக்கானவை அல்ல. நான் எழுத வரும்போதே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்கள்’ எனச் சொல்லிக்கொண்டே வந்தவன். இலக்கியம் என்று வரும்போது அழகியல், ரசனை, போக்குவரத்து எல்லாம் தேவைதான். ஆனால், அவற்றை உருவாக்குவது எழுத்தாளரின் தனித்திறன் என்றுதான் நான் நினைக்கிறேன். அரசியல் முழக்கத்தை உருவாக்குபவனிடம் அது இல்லையென்று நீங்களாக நினைத்தால் எப்படி?
   இலக்கிய அழகியலைக் குறித்து எழுதப்படும் கோட்பாடுகள் குறித்தோ, நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் குறித்தோ, விவாதங்களைக் குறித்தோ எனக்கு அதிக ஆர்வமில்லை. பாலியல் உறுப்புகளின் செயற்பாடுகளைக் குறித்து நீங்கள் புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நிறைவான கலவி செய்வது எப்படியென்று நீங்களாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதுகூட சோடிக்குச் சோடி, ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறுபடும். இலக்கிய அழகியல் என்பது படைப்பாளியின் கூருணர்வை மட்டுமல்லாமல், வாசிப்பவரின் கூருணர்வையும் பொறுத்தது. சமகால அரசியலும், அரசியல் முழக்கங்களும்  இலக்கியத்திற்கு அடுக்காதவை எனச் சொல்பவர்கள் முதலில் பாரதியையும் கார்க்கியையும் தான் நிராகரிக்க வேண்டியிருக்கும். நான் நிராகரிப்பதாகயில்லை.
   யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் வடமாகாணத்திலிருந்து  விரட்டப்பட்ட முஸ்லிம்களின் கையறுநிலை குறித்து உங்களது படைப்புக்கள்  பேசவில்லை என்பதை மறுப்பதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளதா?
   மறுக்கமாட்டேன். புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களைக் கொள்ளையிட்டு விரட்டியதையும்,  புலிகள் முஸ்லிம்களைக் கூட்டுப் படுகொலைகள் செய்ததையும், இனச் சுத்திகரிப்பையும் கட்டுரைகளிலும் நேர்காணல்களிலும் கருத்தரங்குகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன்.
   கொரில்லா, மிக உள்ளக விசாரணை, மூமின் போன்ற சில பிரதிகளில் முஸ்லிம்களை நான் கதாபாத்திரமாக்கியுள்ளது உடனடியாக ஞாபகம் வருகிறது.  ஆனால், அந்தப் பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி எழுதப்பட்டவை அல்ல.  யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பற்றி வாசு முருகவேல் ‘யப்னா பேக்கரி’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். படித்திருக்கிறீர்களா? நான்  அதற்கு ‘நாஸி பேக்கரி’ என்றொரு விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
   புலி எதிர்ப்பாளர் எனும் நிலைப்பாட்டில் உங்களை அணுகுவதாக பலரும் எழுதுகின்றனர். புலிஎதிர்ப்பு என்பதையும், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பதையும் உங்களது நிலைப்பாட்டில் எப்படி அணுக நினைக்கிறீர்கள்?
   இல்லாத புலியை எதிர்க்க எனக்கு மூளை சுகமில்லையா என்ன! அதையெல்லாம் கைவிட்டு ஏழெட்டு  வருடங்களாகின்றன. இப்போதும் யாராவது புலிக் கருத்தியலைச் சுமந்து வரும் போது, கிண்டல் செய்து கடந்துவிடுகிறேனே தவிர சீரியஸாக எதிர்கொள்வதில்லை. இந்த சீமானை ஹாண்டில் பண்ணும் அதே டெக்னிக்தான். கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் புலிகள் அமைப்பு மிகத் தீவிரமான இயக்கம். அதன் உறுப்பினர்கள் அர்ப்பணிப்பின் உச்சம். எனவே புலிகளையும் இந்தக் கோமாளிகளையும் ஒப்பிடவே முடியாது.
   எந்த ஈழத் தமிழ் அரசியல் சிந்தனையாளரும் புலிகளின் அரசியலைப் பின்பற்றி போரையோ, தமிழீழத்தையோ இப்போது கோருவதில்லை. அதிகபட்சமாக ‘புலிகளின் காலம் பொற்காலம்’ என்று வாய் வார்த்தையாகச் சொல்வார்கள். அவர்களின் பொற்காலம்  மற்றவர்களுக்கு கற்காலம் எனச் சொல்லிவிட்டு போகவேண்டியதுதான். எனக்கும் புலிகளுக்கும் ஒன்றும் பரம்பரைப் பகையில்லை. அவர்கள் செயற்பட்டபோது அவர்களைக் கடுமையாக விமர்சித்தேன். அவர்கள் இல்லாதபோது அதற்குத் தேவையற்றுப் போகிறது. ஆனால், எங்களது வரலாற்றில் புலிகளின் காலம் ஓர் இருண்டகாலம். அதை யாருமே மறக்க முடியாதளவிற்குத்தான் புலிகள் பலமாகப் பொறித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
   தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கேட்டீர்கள். சிங்களப் பேரினவாதம் ஒற்றைத் தேசியம் என்ற பெயரில் சிறுபான்மைத் தேசிய இனங்களை நசுக்கும்வரை, சிறுபான்மை இனங்கள் தங்களைப் பாதுகாக்க  தேசிய இன அடையாளத்தின் வழியே திரள்வார்கள். இந்தத் திரட்சி இல்லாவிட்டால் பெருந்தேசிய இனம், சிறுபான்மை இனங்களைச் சிறிது சிறிதாகத் தன்னுள் கரைத்துவிடும். அதற்கான முயற்சிகள்தானே இப்போது நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன.
   இப்போது மட்டுமல்ல எப்போதுமே சிங்களத் தேசியவாதமே நாட்டின் முதன்மையான ஆபத்தாகயிருக்கிறது. சிங்களப் பெருந் தேசிய இனவெறி இருக்கும் வரை, ஒடுக்கப்பட்ட இனங்கள் அரசியலில் தேசிய இன அடையாளத்துடன் அணிகுவிக்கப்படுவதை நான் எதிர்க்கமாட்டேன். தமிழ்த் தேசியம் மட்டுமல்ல, முஸ்லீம் தேசியமும் அவசியமே. சிங்களப் பேரினவாதத்தை ஏற்றுக்கொண்டு மற்றைய சிறுபான்மை இனங்கள் அதன் கீழே அமைதியாக வாழ வேண்டும் எனச் சொல்வது சிங்கள ஒற்றைத் தேசிய இனவாதக் கருத்தியல். அதைத் தமிழரே சொன்னாலும் அப்படித்தான்.
   தேசியவாதம் என்ற கூர்மையான கத்தி மிக ஆபத்தானதே. இன்னொரு தேசிய இனத்தின் மீதான வெறுப்பாக அது மாறிவிடும்போது அதைக் கடுமையாக நாம் நிராகரிக்க வேண்டும். ஆனால், இப்போது இலங்கையில் தமிழர்களோ முஸ்லீம்களோ அதைத் தற்பாதுகாப்புக்கான கருவியாகவே உயர்த்துகிறார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நிகழ்ந்த நடைபயணத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். அதனாலேயே அதைப் பலமாக ஆதரித்தேன்.
   ஷோபாவின் அடுத்த கலை முயற்சிகள் என்ன?
   தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ‘ஓநாய் குலச்சின்னம்’ மற்றும் உம்பர்தோ ஈகோவின் ‘Name of the rose’ நாவல்களைத் திரைப்படமாக்கிய Jean Jacques Annaud எழுதி இயக்கும் ‘Notre-Dame brûle’ என்ற புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கயிருக்கிறது. அடுத்த நாவலையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு ‘அந்தர விலாசம்’ என நாவலுக்குத் தலைப்பு வைத்துள்ளேன். நாவல் அகதிகள் குறித்ததுதான். எத்தனையோ பேர்கள் சிறிதும் பெரிதுமாக ஏற்கனவே எழுதிச் சென்ற சித்திரங்கள்தான். கடந்து வந்த பயணம்தான். ஏராளமான திரைப்படங்கள் வேறு இருக்கின்றன. ஆனால், நான் பயணங்களின் கதையையோ இரக்கத்துக்குரிய அநாதைகளைக் குறித்தோ எழுதப் போவதில்லை.  நான் அகதிகளின் அந்தர உலகத்தில் தலைகீழாக வாழ்ந்தவன். எனவே, அந்த உலகத்தைக் குறித்த என் பார்வையும் தலைகீழாகவேயிருக்கும். நான் அகதிகளுக்கான பைபிளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
   நேர்காணல் செய்தவர்கள்:-
   சாஜித் அஹமட்
   ஷாதிர் யாசீன்
   https://vanemmagazine.com/அகதிகளுக்கான-பைபிளை-எழுத/
    
  • By கிருபன்
   காயா
   ஷோபாசக்தி
    
   ஒன்பது வயதுச் சிறுமியும் பாரிஸின் புறநகரான சார்ஸலின் ‘அனத்தலே பிரான்ஸ்’ பள்ளி மாணவியும் எனது உற்ற தோழன் திருச்செல்வத்தின் ஒரே மகளுமான செல்வி. காயா கொல்லப்பட்டதற்குச் சில நாட்களிற்கு முன்னதாக நடந்த ஒரு சம்பவமே ‘காயா’ என்ற இந்தக் கதையை நான் எழுதுவதற்குக் காரணமாகிறது.
   முதலில் காயாவின் அப்பா திருச்செல்வத்தைக் குறித்துச் சொல்லிவிடுகிறேன். நானும் திருச்செல்வமும் ஒரே கிராமத்தில் ஒரே நாளில் ஒரே மாதத்தில் 1967-ம் வருடம் பிறந்தவர்கள். முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தவர்கள். பத்தாவது வகுப்பு இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்பாக நான் படிப்பைத் தொடரவில்லை. திருச்செல்வம் அதற்குப் பின்பு யாழ்ப்பாணம் சென்று படித்துப் பேரதனைப் பல்கலைக்கழத்திற்கும் தேர்வாகினான்.
   பள்ளிக்காலங்களில் நானும் திருச்செல்வமும் அப்படியொரு கூட்டாளிகள். இரண்டுபேரும் எப்போதுமே சோடி போட்டுத்தான் திரிவோம். நாங்கள் இரண்டுபேருமே கிராமத்திற்குள்ளும் பள்ளிக்கூடத்திலும் பெரிய குழப்படிகாரர்களாகயிருந்தோம். ஆனால் நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளிதான். திருச்செல்வம் முரடன். பேசிக்கொண்டிருக்கும்போதே ஓங்கி அடித்துவிடுவான். பல நிற ‘வயர்’களால் தானே பின்னிய பட்டியை இடுப்பில் எப்போதுமே கட்டியிருப்பான். என்னோடு யாராவது பையன்கள் சண்டை வலித்தால் அவர்களைத் திருச்செல்வம் ‘வயர்’ப் பட்டியால் அடித்து மூஞ்சி முதுகெல்லாம் பிய்த்துவிடுவான்.
   அப்போது எங்களிற்கு பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். பள்ளிக்கூட மண்டபத்தில் போயிருந்து சேர்ந்து படிக்கப்போகிறோம் என வீடுகளில் சொல்லிவிட்டு இரவுகளில் கிளம்பிவிடுவோம். இருட்டின் போர்வைக்குள் கிராமத்தின் மணல்மேடுகளில் ஏறுவதும் வயல்வெளிகளிலே நடந்து திரிவதும் வாய்த்தால் யாருடைய தென்னைகளிலாவது ஏறிக் களவாக இளநீர் பறித்து அதைக் கல்லால் குத்தி உடைத்துத் திறக்கப்பண்ணிப் பருகுவதுமாகத் திரிந்துகொண்டிருந்தோம். இரவுகளில் இலக்கற்றுப் பேசியவாறு திரிவதில் அப்படியொரு விறுவிறுப்பு எங்களிற்கு.
   எங்களது கிராம அபிவிருத்திச் சபையில் ஒரு சிறிய நூலகமிருந்தது. அந்த நூலகத்தில் நூலகராக திருச்செல்வத்தின் அக்கா இருந்தார். அந்த நூலகத்திற்கு நூற்களை தெரிவு செய்து வாங்கிய புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, அகிலன், ஜி.நேசன் என்றெல்லாம் நான் அங்குதான் படிக்கத்தொடங்கினேன். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ நூல் அப்போது என்னை வெகுவாக ஈர்த்ததற்கு அந்நூலில் வரும் மெலிதான பாலுறவுச் சித்திரிப்புகளே காரணமாகயிருந்தன.
   அந்த நூலகத்தில் தமிழ்வாணன் எழுதிய சில பாலுறவு விளக்க நூல்களுமிருந்தன. ‘உடலுறவில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?’, ‘இல்லற இன்ப விளக்கம்’ போன்ற தலைப்புகளில் அந்த நூல்களிருந்தன. நூலகத்திற்கு வரும் சிலர் அந்தவகை நூல்களை இரவலாக எடுத்துப் போவதை ஓரக்கண்ணால் கவனித்திருக்கிறேன். ஒருநாள் திருச்செல்வத்தின் அக்காவின் மேசையிலேயே அப்படியான நூலொன்று விரித்தபடியிருப்பதை நான் பார்த்தேன். திருச்செல்வம் அந்தவகை நூல்களில் இரண்டை நூலகத்திலிருந்து திருடிக்கொண்டே வந்துவிட்டான். கடற்கரையில் தாழம்புதர்களிடையே உட்கார்ந்து நானும் திருச்செல்வமும் அந்த இரண்டு புத்தகங்களையும் அவசர அவசரமாகப் படித்து முடித்த பின்பாகத் திருச்செல்வம் மறுபடியும் அந்தப் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் நூலக அலுமாரியில் வைத்துவிட்டான்.
   கிராமத்திற்கு ஒதுக்கமாகக் கடற்கரையில் அன்னை வேளாங்கன்னி கோயில் உள்ளது. இரவு வேளையில் அந்தக் கோயில் மண்டபத்தில் நானும் திருச்செல்வமும் படுத்துக் கிடந்தபோதுதான் இருவரும் முதன்முதலாகச் சுய இன்பம் செய்வதில் ஈடுபட்டோம். முதல் தடவை விந்து வெளியேறிய அந்த அனுபவம் இப்போதும் அரளிப் பூ மணத்துடனும் ஈரப்பசையுடனும் என் நெஞ்சிலுள்ளது.
   உண்மையில் அதுவொரு அச்சமூட்டும் கிறுகிறுப்பாகவே அப்போது இருந்தது. அடுத்த மூன்று நாட்களிற்கு விந்துவின் மணம் என் உடலிலிருந்தது. சிலநேரங்களில் வாந்தி வருவதுபோலவுமிருந்தது. அன்னை வேளாங்கன்னி கோயிலில் படுத்துக்கிடந்து சுய இன்பம் செய்ததால் கடவுள் என்னைத் தண்டிக்கிறாரோ என்றுகூடப் பயந்தேன். சில நாட்களிலேயே மெதுமெதுவாக அச்சம் தணிந்து போயிற்று. இரவுகள் வருவதே சுய இன்பம் செய்து திளைப்பதற்காகவே என ஆகிப் போயிற்று எனக்கு.
   நான் இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்த காலங்களில் இரவுக் காவல் கடமையிலிருக்கும்போது சுய இன்பம் செய்வதுண்டு. இயக்கத்தில் சுய இன்பம் செய்யக்கூடாது என நானறியக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. அப்போது எங்களது இயக்கத்தில் இயக்க உறுப்பினர்கள் காதலிக்கவோ கல்யாணம் செய்யவோ தடையிருந்தது. தனிநாடு கிடைக்கும்வரை சுய இன்பத்தைத் தவிர வேறு என்னதான் வழி.
   காவல் கடமையிலிருந்து சுய இன்பம் செய்யும்போது உச்சம் நிகழும் தருணத்தில் எதிரி நுழைந்துவிட்டால் உடனடியாக நான் துப்பாக்கியை எடுப்பேனா என்பது சந்தேகம்தான் என நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்வதுண்டு. சுய இன்பத்தில் உச்சம் நிகழும் தருணம் அப்படியொரு மயக்க அனுபவத்தை எனக்குக் கொடுத்தது. அடி வயிற்றில் தீ கனன்று கடக்கும். உடல் அப்படியே காற்றாக மாறி மாயமாக அலையும். உச்சி மண்டையில் குளிர்ந்த அருவி உடைந்து கடகடவெனக் கொட்டும்.
   எனது கிராமமும் அடங்கிய ஏரியாவிற்குப் பொறுப்பாளராக நான் இயக்கத்தால் நியமிக்கப்பட்டபோது எனக்கு இருபது வயது. திருச்செல்வம் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் படித்துக்கொண்டிந்தவன் விடுமுறைக்கு கிராமத்திற்கு வந்திருந்தான். கிட்டத்தட்ட மூன்று வருடங்களிற்குப் பிறகு நான் அவனைச் சந்திக்கிறேன்.
   திருச்செல்வம் ஆளே மாறிப்போயிருந்தான். நவீனரக உடைகள், காலிலே சப்பாத்துகள், கண்களிலே மெல்லிய சட்டகங்களாலான கண்ணாடியோடிருந்தான். சிங்களவர்கள் போல மீசையை  மழித்திருந்தான். வார்த்தைகளை அளந்து அளந்து நிதானமாகப் பேசினான். நான் ஒரு இரண்டு நிமிடங்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவனிடம் பேசினேன். புன்னகையுடன் கண்களைச் சுருக்கியவாறு கேட்டுக்கொண்டிருந்தான். நான் புறப்படும்போது “வைச்சிரு” என நூறு ரூபாய் தாளொன்றை என் சட்டைப் பைக்குள் திணித்தான். எனக்கு அப்போது அது தேவையாக இருந்தது. அந்தப் பணத்தில் ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுப்பை வாங்கினேன்.
   இப்போது எங்களது கிராம நூலகத்தில் திருச்செல்வத்தின் அக்காவிற்குப் பதிலாக மாயோள் என்ற விநோதமான பெயரைக்கொண்ட ஒரு வெளியூர் இளம்பெண் நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்தாள். அவள் புளியங்கூடலிலிருந்து பஸ்ஸில் வேலைக்கு வந்துபோய்க்கொண்டிருந்தாள். ஒருநாள் காலையில் அந்தப் பெண் தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு நான் பொறுப்பாயிருந்த முகாமிற்கு வந்தாள்.
   திருச்செல்வம் நூலகத்திற்கு அடிக்கடி போவானாம். அவனது கண்கள் விஷமத்தனமானவை என்றும் அவனுடைய பேச்சுகள் எப்போதுமே பாலியல் சீண்டலானவை என்றும் அந்தப் பெண் சொன்னாள். நேற்று நூலகத்தில் மாயோள் தனியாக இருந்தபோது அங்கே திருச்செல்வம் போயிருந்தானாம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது புத்தக அலுமாரியில் ஏதோ தேடுவதாகப் பாவனை செய்துகொண்டிருந்த அவன் அவளை அருகே வருமாறு அழைத்தானாம். இந்தப் பெண் போகவில்லை. வெறித்தனமான பார்வையுடன் வேகமாக இந்தப் பெண்ணை நோக்கி திருச்செல்வம் வந்தபோது இவள் பயத்துடன் எழுந்து நிற்கவும் திருச்செல்வம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் இந்தப் பெண்ணைத் திட்டி மிரட்டிவிட்டுப் போனானாம்.
   நான் அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்தேன். அவளது கண்களில் அச்சமிருக்கவில்லை, ஆனால் கடும் சினமிருந்தது. அவளது முழு முகமும் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது. நான் திருச்செல்வத்தை விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என மாயோளிடம் சொன்னேன். என்ன நடவடிக்கை என எனக்குத் தெரிய வேண்டும் என என்னை அச்சுறுத்தும் தொனியில் மாயோள் சொன்னாள். அவர்களை நான் போகலாம் எனச் சொன்னபோது அவளது தந்தை கவனிக்காத கணப்பொழுதில் மாயோள் எனது மேசையில் ஒரு துண்டுச்சீட்டை வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.
   அவர்கள் போனதும் நான் அந்தத் துண்டுச் சீட்டை எடுத்துப் பார்த்தேன். அந்தச் சீட்டில் ஆங்கிலத்தில் ஒருவரி எழுதப்பட்டிருந்தது. அது என்னவென்று தெரியவில்லை. முகாம் பொடியன்களிலும் யாருக்கும் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது. அந்தச் சீட்டை சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்செல்வம் வீட்டை நோக்கிப் போனேன்.
   திருச்செல்வம் அவர்களது வீட்டுப் படலையருகே நின்றிருந்தான்.
   “என்ன திரு படலையடியில நிக்கிறாய்?” என்று கேட்டேன்
   “உன்ர மோட்ட சைக்கிள் சத்தம் கேட்டுது அதுதான் வந்தனான்” என்றான். அவனது குரலில் பதற்றமிருந்தது.
   நான் வருவேன் என்று எதிர்பார்த்து நிற்கிறான்.
   “திரு… இதை ஒருக்கா படிச்சு என்னெண்டு சொல்லு” என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுச் சீட்டை அவனிடம் கொடுத்தேன்.
   மெதுவாக அந்தச் சீட்டை வாங்கிய திருச்செல்வம் சீட்டில் எழுதப்பட்டிருந்த வரியைப் படித்ததும், கண்கள் திடீரெனச் சிவந்துபோக அமைதியாக நின்றான். தனது மூக்கை வேகவேகமாக உறிஞ்சிக்கொண்டான்.
   “என்ன மச்சான் உனக்கும் இங்கிலிஷ் தெரியாதா?” என்றேன்.
   தெரியும் என்பதுபோல மெதுவாகத் தலையசைத்தான்
   “அப்ப சொல்லு”
   திருச்செல்வம் மறுபடியும் ஒருமுறை துண்டுச் சீட்டைப் பார்த்துவிட்டுச் சொன்னான்:
   “அவன் எனது மார்பைப் பிடித்துக் கசக்கிவிட்டுப் போனான்”
   அவனது தலை நிலத்தை நோக்கிக் குனிந்தபோது அதை வானத்தைப் பார்க்க வைக்குமாறு ஓங்கியொரு அறை கொடுத்தேன். திருச்செல்வம் தனது கன்னத்தைக் கையால் பொத்தியவாறு “ப்ளீஸ் மச்சான்” என முணுமுணுத்தான்.
   நான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு முகாமிற்குப் போனேன்.
   முகாமின் ஓர் அறை சிறையாக மாற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் ஏற்கனவே நான்கு திருடர்களைப் பிடித்து வைத்திருந்தோம். முகாமின் முற்றத்தில் திருச்செல்வத்தை நிற்க வைத்துவிட்டு அந்த நான்கு திருடர்களையும் முற்றத்திற்கு அழைத்துவருமாறு பொடியளிடம் சொன்னேன். திருடர்கள் வெடவெடுத்து நடுங்கியபடியே வரிசையாக வெளியே வந்தார்கள். முற்றத்திற்கு அழைத்தாலே பச்சைப் பனைமட்டை அடி என்பது அவர்களிற்குப் பழக்கமாயிருந்தது.
   அந்தத் திருடர்களிடம் நான் திருச்செல்வத்தைக் காட்டிச் சொன்னேன்:
   “இவர் என்ர கூட்டாளி திருச்செல்வம். என்னோடதான் படிச்சவர். நான் நாட்டுக்காக இயக்கத்துக்கு வர இவர் எஞ்சினியருக்குப் படிக்க யூனிவர்சிட்டிக்குப் போனவர். அங்க என்ன படிச்சாரெண்டா பொட்டையளின்ர பாச்சியப் பிடிக்கத்தான் படிச்சிருக்கிறார்…”
   திருச்செல்வம் எனது முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மனதில் வன்மம் நுழைகிறாதாக்கும் என நினைத்துக்கொண்டேன். முகத்தைத் திருப்பிக்கொண்டு திருடர்களைப் பார்த்து “ஆள் மாறி ஆள் இவன்ர கன்னத்தில அடிச்சுக்கொண்டே இருக்கவேணும். சத்தம் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருக்க வேணும்” என்றேன். திருடர்கள் தங்களது பலத்தையெல்லாம் திரட்டி திருச்செல்வத்தை அறையத் தொடங்கினார்கள்.
   சற்றுநேரத்திலேயே திருச்செல்வத்தின் முகம் அழுகிய ஈரப்பலாக்காய் போல ஆகிவிட்டது. அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நூலகத்திற்குப் போனேன். அங்கே மாயோளும் அவளது தந்தையுமிருந்தார்கள். திருச்செல்வத்தை மாயோளிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னேன். திருச்செல்வம் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினான். “இங்கிலிஸில மன்னிப்புக் கேள்..என்ர கூட்டாளி இங்கிலிஸ் பேசுறது எனக்குப் பெருமைதானே” என்றேன்.
   திருச்செல்வத்தை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போய் அவனது வீட்டுப் படலையடியில் இறக்கிவிட்டேன்.
   நான் கிளம்பியபோது திருச்செல்வம் எனது தோளைத் தொட்டு “மச்சான் நான் செய்தது பெரிய பிழை” என்றான்.
   2
   நான் பிரான்சுக்கு வரும்போது திருச்செல்வத்தின் தொலைபேசி எண் எழுதியிருந்த துண்டுச்சீட்டு மட்டுமே என்னிடமிருந்தது. ரஷ்யாவில் இருந்து தரை வழியாகப் பல நாட்களாக, பல எல்லைகளைக் கடந்துவந்த பயணத்தில் நான் இலங்கையிலிருந்து எடுத்து வந்த பயணப் பையை என்னோடு எடுத்துவர எல்லை கடத்துபவர்கள் அனுமதிக்கவில்லை. மூன்று சோடி உடுப்புகளும் ஒரு ஆங்கில – தமிழ் லிப்கோ அகராதியும் வைத்திருந்த அந்தப் பையைத் தூக்கி அவர்கள் ஆற்றிற்குள் வீசி எறிந்துவிட்டுத்தான் என்னைச் சிறு ரப்பர் படகில் ஏற்றி ஆற்றைக் கடக்க வைத்தார்கள்.
   ஓர் உறைபனி அதிகாலையில், பாரிஸின் இருளிற்குள் என்னைக் கடத்திக் கூட்டிவந்தவர்களின் கார் ஒரு பொதுத் தொலைபேசிக் கூண்டருகே என்னை இறக்கிவிட்டுச் சென்றது. பொதுத் தொலைபேசியில் அழைப்பதற்குச் சில ‘ப்ராங்’ நாணயக் குற்றிகளைத் தந்திருந்தார்கள். நான் திருச்செல்வத்தைத் தொலைபேசியில் அழைத்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் திருச்செல்வம் கையில் ஒரு பெரிய குளிரங்கியோடு என்னைத் தேடி வந்துவிட்டான்.
   “முதலில ஜக்கெட்டைப் போடு மச்சான்” எனக் குளிரங்கியை என்னிடம் தந்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். நாங்கள் சந்தித்த அந்த நாள் எங்கள் இருவரது முப்பதாவது பிறந்தநாளாக இருந்தது. அவனது வீடு அன்றுமாலை எனக்கான வரவேற்புக் கொண்டாட்டமாகவும் இரட்டைப் பிறந்தநாள் விழாவாகவும் அமளிதுமளிப்பட்டது.
   அப்போது பாரிஸில் தமிழர்களது வாழ்க்கை கொஞ்சம் சிக்கல்பிக்கலாயிருந்தது. செல்வம் அண்ணர் எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பாரிஸ் வாழ்க்கை நினைவுச் சித்திர நூலிலுள்ள அளவுக்கு இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஒரு சிறிய அறைக்குள் நால்வர் அய்வராக இருந்துகொண்டு விசா, வேலைப் பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்த காலமது.
   ஆனால் திருச்செல்வத்திற்கு அவனது படிப்புக் கைகொடுத்திருந்தது. ஓரளவு நல்ல வேலையும் திருப்தியான சம்பளமும் அவனுக்குக் கிடைத்தன. ஓர் அழகிய சிறிய வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அவனுக்குப் பவானியுடன் கல்யாணம் ஆகும்வரை நான் அவனுடன்தான் இருந்தேன்.
   என்மீதான நேசமும் அன்பும் அவனுக்கு அப்படியே மாறாமலிருந்தன. மிகப் பொறுப்புள்ள மனிதனாக மாறியிருந்தான். கொஞ்சம் பணம் சேர்க்கவேண்டும், அழகான மனைவியும் குழந்தைகளும் வேண்டும் என்பது மட்டுமே அவனது கனவுகளாகயிருந்தன. “இலக்கியம் படி திரு..” என்பேன். படித்தால் தூக்கம் வருகிறது என்பான். என்னுடைய கதைகளை மட்டும் படித்து படித்துக் கெக்கடமிட்டுச் சிரிப்பான். ஏனெனில் நான் பெரும்பாலும் என்னுடைய கதைகளில் என் கிராமத்து மனிதர்களைத்தான் சற்று மாறிச்சாறிப் பதிவு செய்கிறேன். என்னுடைய கதைகளில் வரும் அநேக பாத்திரங்களும் அநேக சம்பவங்களும் அவனுக்கும் தெரிந்தவையாகவே இருக்கும். அவன் கதையைப் படித்தபின்பு அந்த மனிதர்களைக் குறித்தும் சம்பவங்களைக் குறித்தும் நாங்களிருவரும் நனவிடை தோய்வோம்.
   ஆனால் ஊரில் இருக்கும்போது, மாயோள் என்ற பெண்ணின் மார்பை அவன் பிடித்ததற்காக நான் அவனைத் தண்டித்தது குறித்து ஒருநாள் கூட நாங்கள் சாடைமாடையாகக் கூடப் பேசிக்கொண்டதில்லை.
   அவனுக்கும் பவானிக்கும் திருமணமாகி எட்டு வருடங்கள்வரை குழந்தை இல்லை. திருகோணமலையில் ஒரு மந்திரவாதி குழந்தைப் பாக்கியம் பெற்றுக்கொடுக்கிறாராம் எனக் கேள்விப்பட்டு திருச்செல்வமும் பவானியும் இலங்கைக்குப் போய் வந்தார்கள். மந்திரவாதி பவானியைத் தனியாக அழைத்துச் சென்று தன்னிடம் தனியாக மூன்றுநாட்கள் பூஜையில் அமர வேண்டும் என்றும் பவானியினது அந்தரங்க உறுப்பிலிருந்து ‘குவியம்’ எடுத்துப் பூஜை செய்ய வேண்டும் என்றும் சொன்னாராம். பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பவானி இதைத் திருச்செல்வத்திடம் சொல்லவும் திருச்செல்வம் மந்திரவாதியை அடிக்கப்போய்விட்டானாம். மந்திரவாதி பேய்களை திருச்செல்வத்தின் மீது ஏவிவிடுவதாகவும் பவானியின் வயிற்றை நிரந்தரமாகவே திறக்காமல் பண்ணிவிடப்போவதாகவும் சொன்னாராம்.
   இதை என்னிடம் திருச்செல்வம் சொன்னபோது அதை மையமாக வைத்து ‘குவியம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதினேன். பெயர்களை மாற்றியும் பிரான்ஸைக் கனடாவாக மாற்றியும் கதையை எழுதியிருந்தேன். அந்தக் கதையின்படி மனைவி குவியம் எடுக்கச் சம்மதித்துவிடுகிறாள். குழந்தையைத் தவிர அவளிற்கு வேறெதுவும் ஒரு பொருட்டேயல்ல. அந்தக் கதை எக்ஸிலிலோ அம்மாவிலோ பிரசுரமானது. அந்தக் கதையைப் படித்துவிட்டு திருச்செல்வம் பவானியைக் கூப்பிட்டு அந்தக் கதையைப் படிக்கச் சொன்னான்.
   கடைசியில் அவனது நாற்பதாவது வயதில், பவானியின் வயிறு திறந்து காயா பிறந்தாள். அப்போது நான் பாரிஸ் நகர வாழ்க்கை பிடிக்காமல் நோர்வேக்குச் சென்றுவிட்டேன். நோர்வே வாழ்க்கையும் பிடிக்காமல் நான் திரும்பப் பாரிஸ் வந்தபோது காயாவுக்கு ஒன்பது வயதாகியிருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது மாலையில் நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போவேன். கொஞ்சம் மதுவருந்திக்கொண்டும் பேசிக்கொண்டும் திருச்செல்வம் சமைப்பான். பவானி பத்து மணிக்குத்தான் வேலை முடிந்து வருவாள். பவானிக்கு எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமென்று ஆசை.
   “வயசு போச்செண்டு நினைக்காதேயுங்கோ..ஊருக்குப் போய் ஒரு விதவைப் பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு வாங்க..அதுகளுக்கும் உதவியாயிருக்கும்” என்று ஒருமுறை பவானி சொன்னபோது நான் புன்னகைத்தபடி சும்மாயிருந்தேன்.
   “நீங்கள் எல்லாம் எழுதுற கதையிலதான் புரட்சி..” என்றாள் பவானி. நான் அதற்கும் புன்னகைத்தேன்.
   குழந்தை காயா நல்ல கறுப்பு நிறம். உயரமாகவும் ஒல்லியாகவுமிருப்பாள். சுருள் சுருளாக முடி. முன்வாய்ப் பற்கள் இரண்டு சற்றே முன்தள்ளியிருக்கும். பற்களிற்கு க்ளிப் போட்டிருந்தாள். அவள் எப்போதும் திருச்செல்வத்தோடு ஒட்டிக்கொண்டேயிருப்பாள். திருச்செல்வத்தை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகரவிடமாட்டாள். தாய்க்காரி வேலையிலிருந்து திரும்பிவரும்வரை தூங்கவும்மாட்டாள். இளமையில் திருச்செல்வம் இருந்ததுபோலவே காயாவும் கொஞ்சம் துடியாட்டமாகவே இருந்தாள்.
   அன்று நான் திருச்செல்வம் வீட்டுச் சமையலறை மேசை முன்னால் அமர்ந்திருந்தேன். என் முன்னால் ஒரு க்ளாஸ் விஸ்கி இருந்தது. திருச்செல்வம் கையில் விஸ்கிக் க்ளாஸோடு சட்டியில் பன்றி இறைச்சித் துண்டங்களைப் பொரித்துக்கொண்டிருந்தான். எனக்கு அன்று உடம்பு சரியில்லாததுபோல இருந்தது. உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்ந்துகொண்டிருந்தது. விஸ்கியை குடிக்கலாமா வேண்டாமா என நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது காயா “உங்களுக்கு பிரான்ஸே படிக்கத் தெரியுமா” என்ற கேள்வியோடு என்னிடம் வந்தாள். நான் ‘ஆம்’ என்றதும் எனக்கும் மேசைக்கும் நடுவாகத் தனது மெல்லிய உடலை நுழைத்துவந்து எனது மடியில் ஏறி உட்கார்ந்தவாறே கையிலிருந்த புத்தகத்தை விரித்து எனக்கு கதை வாசித்துக்காட்ட ஆரம்பித்துவிட்டாள். குட்டி இளவரசி குறித்த கதையது.
   காயாவின் முதுகு என் மார்பில் சாய்ந்திருந்தது. அவளது பிடரியில் வழிந்த சுருட்டை முடி என் கழுத்தில் படர்ந்திருந்தது. அவள் தனது குச்சிக் கால்களை எனது தொடைகளின் இருபுறங்களிலும் போட்டபடி உடலையும் தலையையும் அசைத்து அசைத்து உரக்க ராகம் போட்டு வாசித்தபடியிருந்தாள்.
   “Et elle pensait combien il etait étranger de se trouver à un certain moment sous le soleil…”
   அப்போது எனது உடல் மேலும் குளிரத் தொடங்கியது. எனது கால்கள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். வயிற்றின் அடியில் குறுகுறுக்கத் தொடங்கியது. கண்களைச் சடாரென மூடித்திறந்தேன். காயா எனது மடியில் ஆடியவாறு வாசிப்பில் லயித்திருந்தாள். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனது உடல் மாறிக்கொண்டே வருவது தெரிகிறது.
   “எனக்கு கால் நோகுது” எனச் சொல்லிக்கொண்டே சட்டெனக் காயாவின் இடுப்பில் கைகொடுத்து அவளைச் சடுதியில் தூக்கி என் மடியிலிருந்து கீழே இறக்கும்போது எனக்கு விந்து வெளியாவதை உணர்ந்தேன்.
   நான் காயாவை அவசரமாகத் தூக்கி இறக்குவதைப் பார்த்துக்கொண்டிருந்த திருச்செல்வத்திடம் முகத்தைச் சுழித்துக்கொண்டே “காலில ஏதோ பிரச்சினை” என்றேன்.
   “இந்தக் குளிருக்கு கால் குறண்டும்..விஸ்கியைக் குடி” என்றான் திருச்செல்வம்.
   இப்போது காயா திருச்செல்வத்திற்கு அருகே போய் நின்று புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் அவளது பின்புறத்தைக் கடைக்கண்ணால் பார்த்தேன். அங்கே ஏதாவது ஈரம் பட்டிருக்கிறதா எனக் கவனித்தேன். எதையும் அனுமானிக்க முடியவில்லை.
   அப்படியே குனிந்து எனது மடியைப் பார்த்தேன். ஒரு துளியாகக் காற்சட்டையில் ஈரம் துளிர்த்திருந்தது. எழுந்து தலையைக் குனிந்தவாறே குளியலறைக்குள் நுழைந்தேன். எனக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. உடம்பு முழுவதும் அந்தக் குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. காற்சட்டையை அவிழ்த்துப் பார்த்தேன். தொடையிடுக்கில் விந்து படிந்திருக்கிறது. உள்ளாடை நனைந்துபோயிருந்தது. தண்ணீரைத் திறந்து தொடையிடுக்கைக் கழுவினேன். மறுபடியும் காற்சட்டையை அணிந்துகொண்டு சமையலறை வாசற்படிக்குச் சென்று உடலைச் சுவரில் முடிந்தளவுக்கு மறைத்துக்கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டி எனக்கு உடம்பு சுகமில்லை என்று திருச்செல்வத்திடம் சொன்னேன்.
   “சாப்பிட்டிட்டு போ” என்றான் திருச்செல்வம்.
   “வேணாம்’ என்றுவிட்டு நான் வெளியேறினேன். காயா உரத்துக் கதை படித்துக்கொண்டிருந்தாள். நான் கதவைத் திறந்துகொண்டு தெருவுக்கு இறங்கி நடந்தபோது தூரத்தே பவானி நடந்து வருவது தெரிந்தது. சடாரெனத் திரும்பி எதிர்ப்புறமாக நடந்தேன். அப்படியே நடந்துகொண்டேயிருந்தேன்.
   எனது மூளை வெட்டப்பட்ட ஆட்டு மூளைபோல உறைத்திருப்பதை உணர்ந்தேன். நான் சிறுமிகளைப் புணர்வதாக ஒரு போதும் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. சொல்லப்போனால் எனக்குள் காமம் இப்போது மங்கிக்கொண்டிருக்கிறது. பெண் உடல் முன்புபோல இப்போது என்னை ஈர்ப்பது குறைவு. அந்தக் குறைபாடுதான் சிறுமிகள் மீதான காமமாக எனக்குத் தெரியாமலேயே என்னுள் புகுந்திருக்கிறதோ எனத் திடீரென என் மரத்துப்போன மூளை கேட்கப் படாரென என் கன்னத்தில் ஓங்கி அறைந்துகொண்டேன்.
   தலையைக் கவிழ்ந்து என் எச்சிலை என் மார்பில் பலமுறை உமிழ்ந்துகொண்டேன். என்னுடைய இளம் வயதில் எனக்கு வாரத்திற்கு மூன்று தடவைகளாவது தூக்கத்தில் விந்து வெளியாகும். முப்பத்தைந்து வயதைக் கடந்த பின்பு அது நடப்பதில்லை. என்னை ஆட்டிப் படைத்த காமம் என்னைக் கடந்துபோனதாகத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மகாத்மா காந்திக்கே எழுபது வயதில் தூக்கத்தில் விந்து வெளியேறியிருக்கும்போது நாற்பத்தொன்பது வயதில் நீ காமத்தைக் கடந்திருப்பதாக நினைத்திருப்பது அடிமுட்டாள்தனமானது என எனது மரத்துப்போன மூளை சொன்னது. அப்படியே நடந்துபோய் ஆற்றுக்குள் இறங்கி மூழ்கிவிடலாம் போலிருந்தது. மகள் காயா என் மனம் முழுவதும் துண்டு துண்டாகக் குட்டிக் குட்டி அரூபங்களாகவும் ஒலியாகவும் என்னை வதைக்கலானாள். அதன் பின்பு நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. இது நிகழ்ந்த ஆறாவது நாள் நான் காயாவைப் பிரேதமாகத்தான் பார்த்தேன்.
   காலையில் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த காயாவை கட்டுப்பாட்டை இழந்து நடைபாதைக்கு ஏறிய கார் கொன்று போட்டுவிட்டு நிற்காமல் தப்பித்து ஓடியது. காயா வெண்ணிற நீண்ட அங்கியும் வெண்ணிறப் பட்டுக் கையுறைகளும் அணிவிக்கப்பட்டு தேவதைபோல மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் அந்த வெண்ணிற உடையில் எனது விந்தின் வாசனை வருகிறதா என என் மரத்துப்போன மூளை அச்சத்துடன் தேடியது.
   காயாவை அடக்கம் செய்ததன் பின்பாக நான் ஒவ்வொருநாள் மாலையும் திருச்செல்வம் வீட்டிற்குப் போனேன். திருச்செல்வம் தளர்ந்து போயிருந்தாலும் மூர்க்கம் கொண்டிருந்தான். காயாவைக் கொன்றவனை அடையாளம் தெரிந்தால் அவனைத் தனது கையாலேயே கொன்றுவிடப் போவதாகச் சொன்னான். திடீர் திடீரெனத் தேம்பி அழுதான். ஒருநாள் “அந்தத் திருகோணமலை மந்திரவாதி உண்மையில பேய்களை ஏவி விட்டிருப்பானா மச்சான்?’ எனக் குழந்தையைப் போல என்னிடம் கேட்டான். இன்னொருமுறை “மச்சான் நான் அந்த லைபிரரிப் பொட்டைக்குச் செய்த பாவம்தானோ இது” என்று அழுதான்.
   அந்த நாட்களில் நான் உயிரோடு செத்துக்கொண்டிருந்தேன். என் ஆண்குறியை அறுத்துப்போடலாமா என்றுகூட யோசித்தேன். என் கையால் ஆண்குறியை அழுத்திக் கசக்கிப் பிசைந்து இப்போது இல்லாமல் அன்று மட்டும் ஏன் அப்படியானது என யோசித்தேன். எங்கோ ஓரிடத்தில் உன்னிடம் அப்போது காமம் ஒளிந்திருந்தது என என் மரத்துப்போன மூளை சொல்லியது. இல்லவே இல்லை என என் இருதயம் சொல்லிற்று. முப்பது வருடங்களிற்குப் பின்பாக நான் மீண்டும் என் மார்பில் சிலுவை குறி இட்டுக்கொண்டேன். கடற்கரை அன்னை வேளாங்கன்னியை நினைத்துக்கொண்டேன்.
   காயா இறந்த இருபதாவது நாள் நான் திருச்செல்வம் வீட்டிற்குப் போயிருந்தேன். பவானி வேலைக்குச் சென்றிருந்தாள். திருச்செல்வம் இப்போது கொஞ்சம் தேறியிருப்பது போலயிருந்தது. சமையலறை மேசையில் இரண்டு க்ளாஸ்களை வைத்து விஸ்கியை ஊற்றினான். பின்பு காயாவுடைய ஓர் அழகிய நிழற்படத்தைக் கொண்டுவந்து என் முன்னே மேசையில் வைத்துவிட்டு ” இதை எடுத்துக்கொண்டு போ!” என்றான். பின்பு “காயாவைப் பற்றி எழுது மச்சான்” என்றான்.
   காயாவின் 31 -வது நினைவு தினத்துக்கு நான் அஞ்சலிக் கவிதையொன்றை எழுதிக் காயாவின் அந்த நிழற்படத்துடன் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று திருச்செல்வம் என்னைக் கேட்டுக்கொண்ட அந்தத் தருணத்தில் நான் எதைப் பற்றியும் யோசியாது கடகடவென நடந்த அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவில்லாமல் அவன் முன்னே வைத்தேன். அப்போது எனக்கு வெட்கமே வரவில்லை. நான் விடுதலையாகிக்கொண்டிருக்கும் உணர்வே என்னோடிருந்தது.
   நான் சொன்னவற்றை எங்கோ பார்த்தவாறு திருச்செல்வம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு தனது தலையைக் கவிழ்ந்துகொண்டு ” நீ வேணுமெண்டு செய்யேலத்தானே” என்று மெல்லிய குரலில் சொன்னான்.
   நான் அவனது கைகளைப் பற்றிக்கொண்டேன்.
   தனது கைகளை என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவன் ” சிலவேளை காயா இப்ப உயிரோட இருந்தா நான் வேற மாதிரி யோசிச்சிருப்பன்” என்று முணுமுணுத்தான்.
   பின்பு விஸ்கிக் கோப்பையை எடுத்து என்னிடம் தந்துவிட்டுத் தனது கோப்பையை உயர்த்தி “காயாவின் ஆன்ம சாந்திக்காக” என்றான்.
   3
   ‘காயா’ என்ற மேற்கண்ட கதையை எழுதி முடிக்கும்வரை நான் திருச்செல்வத்தின் வீட்டிற்குப் போகவில்லை. காயாவின் இறுதிச் சடங்கு நிகழ்ந்த அன்று அவனை இடுகாட்டில் பார்த்ததுதான் கடைசி.
   காயா இறந்த இருபதாம் நாள் மாலை நான் திருச்செல்வம் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.
   கதவைத் திறந்தவன் “எங்க போனாய் இத்தின நாளா ?” எனக் கேட்டான்.
   “கதை எழுதிக்கொண்டிருந்தன்” என்றேன்.
   அவன் என்னை ஆழமாகப் பார்த்தான். “வா” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.
   நானும் அவனும் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். நான் எடுத்துச்சென்றிருந்த தாள்களை மேசையில் அவன் முன்னே ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு ” நான் எழுதின கதை..நீ படிக்கவேணும் திரு” என்றேன்.
   அவன் தலையைக் குனிந்துகொண்டே “நான் இப்ப படிக்கிற மனநிலையிலயா இருக்கிறன் மச்சான்” என்றான்.
   “இது காயாவைப் பற்றிய கதை..நீ கண்டிப்பாகப் படிக்கவேணும்” என்றேன்.
   சடாரெனத் தலை நிமிர்த்தியவன் மேசையில் இருந்த தாள்களை வாரியெடுத்துக் கண்கள் ஒளிரப் படிக்கத் தொடங்கினான்.
   நான் அவனது கண்களைப் பார்த்தவாறே காத்திருக்கலானேன். அவன் எந்த இடத்தில் படிப்பதை நிறுத்துகிறானோ அந்த இடத்தில் ‘காயா’ என்ற இந்தக் கதை முடிவுறும்.
   (காலம் – 50வது இதழில் வெளியாகியது)
     http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.