Jump to content

இணையவெளித் துன்புறுத்தல்கள் – சட்டப் பாதுகாப்பிற்கான சாத்தியங்களும் சவால்களும்: கோசலை மதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையவெளித் துன்புறுத்தல்கள் – சட்டப் பாதுகாப்பிற்கான சாத்தியங்களும் சவால்களும்: கோசலை மதன்

இணையவெளியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் குறித்த பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமாயின் இணையத்திலிருந்து விலகியிருத்தல் சரியான தீர்வு எனச் சிலர் ஆலோசனை கூறுவதுண்டு. இவ்வாலோசனை பாதிப்பிலிருந்து விடுபட உடனடித் தீர்வாக அமைந்தாலும் கூட, தவறேதும் புரியாத, குற்றமிழைக்காத நபரொருவர் மற்றவரால் புரியப்படும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இணையப் பாவனையை நிறுத்துவதும், விலகியிருப்பதும் முறையான தீர்வா என்ற கேள்வி எழுகிறது.

அறிமுகம்

நவீன தொடர்பு சாதனங்களின் புதிய பரிணாமங்களை அடுத்து மனித சமூகத்தின் கல்வி, பொருளதாரம், சமூகக் கட்டமைப்பு, தனிமனித உறவு முதலான இன்னோரன்ன தளங்களில் பல நேர்மறைத் தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் வழமையான  இயங்குநிலை பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் கல்வி, பொருளாதாரம் முதல் நாளாந்த செயற்பாடுகள் வரை  இணையச் சாதனங்களின் துணையோடு ஓரளவிற்காவது இயல்புநிலையில் செயற்பட்டிருந்தமை மிக அண்மைய உதாரணமாகும்.

இணையச் சாதனங்களின் பாவனையால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்குச்  சமாந்தரமான வகையில் பல தீமைகளையும் மனித சமூகம் முகங்கொடுக்க வேண்டியிருப்பதுவும் மறுபுறத்தில் மனங்கொள்ளப்படல் வேணடியது அவசியமாகும். 

இணையச் சாதனங்களின் தன்மை, அவற்றைப் பயன்படுத்துபவர்களின் மனநிலை, பயன்படுத்தப்படும் விதம் ஆகியவை காரணமாக தனிமனிதர்களையும் குழுவினரையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் துன்பத்தில் ஆழ்த்தக்கூடியதான பல்வேறுவிதமான பிறழ் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இணையவழித் துன்புறுத்தல்களின் பாரதூரத்தன்மை உணரப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் அதன் வடிவங்கள், விளைவுகள், தீர்வுகள் முதலானவை தொடர்பில் சட்டப்பின்னணியிலான ஆய்வொன்றை இக்கட்டுரையாளர் செய்ய முனைந்திருக்கிறார்.

இணையவழிச் சாதனங்கள்

கணணியை மையப்படுத்திய தொடர்பாடல்கள் இடம்பெறும் சுற்றாடலானது இணைவெளி எனப் பொதுவாக அறியப்படுகிறது. இணையவெளியில் கூகிள் (Google), யாகூ (Yahoo), முகப்புத்தகம் (Facebook), ருவிற்றர் (Twitter) ஆகிய சாதனங்களின் அதிகரித்த பாவனை காணப்படுகின்றது. இவை தவிர வைபர் (Viber) வட்ஸ்அப் (WhatsApp) முதலான தளங்களும் அதிகளவில் பயன்பாட்டிலுள்ளன.

இச்சாதனங்களை சமூக ஊடகங்கள், விளையாட்டுத் தளங்கள் (Gaming platforms), தகவல் அனுப்பும் தளங்கள் (Messaging platforms) மற்றும் கைத்தொலைபேசிகள் எனப் பொதுவில் வகைப்படுத்திக்கொள்ள முடியும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இத்தகைய இணையச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். UNICEF ஐச் சேர்ந்த Ramiz Behbudov இன் கருத்துப்படி இலங்கையில் 6ம் தரத்திலிருந்து 12ம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களில் 90சதவீதமானவர்கள் நவீன தொடர்பு சாதனங்களை  அணுகும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது. இவர்களுள் 53 சதவீதமானவர்கள் இணையவசதியைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 39 சதவீதமானவர்கள் இணைய வசதியற்ற தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துகிற பொழுதிலும் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகிறார். இலங்கையில் 67வீதமான  இணையப்பாவனையாளர்கள் ஆண்கள் என UNICEF இன் அறிக்கை தெரிவிக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை அதிபிரசித்தமான சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (61.7%) அடுத்தபடியாக வட்ஸ் அப்பும் (whatsapp) காணப்படுகிறது.

இணையவெளித் துன்புறுத்தல்கள்

துன்புறுத்தல்களும், வன்முறைகளும் தனிமனித மற்றும் சமூகத் தாக்குதல்களும் இணையச் சாதனங்களின் அறிமுகம் மற்றும் பாவனைக்கு முற்பட்ட காலத்திலேயே ஆரம்பித்திருந்தன. இன்றைக்கும் தொடர்கின்றன. இணையத்தோடு தொடர்புபடாமல் நிகழ்த்தப்படுகிற அவமதிப்பு, பாலியல் தொந்தரவு, மிரட்டல், வதந்திகளைப்  பரப்புதல், தற்கொலைக்குத் தூண்டுதல் முதலான குற்றங்களுக்கு மேலதிகமாக இத்தகைய குற்றங்கள் இணையச் சாதனங்களின் துணையோடு புரியப்படுவதானது நவீன சவால்களுள் ஒன்றாகும்.

மேலே விபரித்த இணையச் சாதனைகள் மூலமாக பல்வேறு தன்மைத்தான துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்படுகின்றன. பொய்ச்செய்திகளைப் பரப்புதல், முகம் சுழிக்க வைக்கும் படங்களைப்  பிரசுரித்தல், மனம் புண்படத்தக்க செய்திகளை அல்லது அச்சுறுத்தல்களை அனுப்புதல், ஆள்மாறாட்டம் செய்தல், அதன் பின்னர் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டவர் சார்பில் மற்றவர்களுக்குச் செய்தி அனுப்புதல், வெறுப்புப் பேச்சுப் பேசுதல், பாலியல் கருத்திடல், நிர்வாணப் படங்கள் பிரசுரிக்கப்படும் அல்லது பாலியல் தகவல்கள் பகிரப்படும் என அச்சுறுத்தி பாலியல் நடத்தைகளில் ஈடுபடக்  கட்டாயப்படுத்துதல், இணையத்தில் இல்லாத போதும் (offline) குற்றங்களைச் செய்யக்கூடிய வகையில் வாய்ப்புக்களை (இணையத்தளத்தைப் பாவித்து) உருவாக்கிக் கொள்ளுதல் என்பன அடங்கும்.

இத்தகைய துன்புறுத்தல்கள் ஆரம்பத்தில் பகிடிகளாகவே ஆரம்பிக்கின்றன. பின்னர் தனிமனித கௌரவத்தைப் பொதுவெளியில்  சேதப்படுத்துகின்ற மோசமான கைங்கரியமாக மாறிவிடுகின்றன. இணையவெளித் துன்புறுத்தல்கள் தனிமனிதர்களையும் குழுக்களையும் இலக்கு வைத்து அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுபவவையாகும். இத்துன்புறுத்தல்கள் சம்பந்தப்பட்டவர்களை உடல்ரீதியாகவும், உளரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பாதிக்கவல்லது என்பதோடு இப்பபாதிப்புகள் நீண்டகாலம் தொடரக் கூடியன என்பதுவும் கவலைக்குரிய விடயமாகும். தான் சிரிப்புக்கிடமான ஒருவராக மாற்றப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் ஒருவனை அல்லது ஒருத்தியை மிகப்பெரிய அளவில் பாதிக்க இடமுண்டு. பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் தைரியத்தை இழக்கச் செய்வதோடு பிரச்சினை பற்றிப் பேசுவதற்கான துணிவையும்  இழக்கச் செய்து விடுகிறது. இத்துன்பம்  உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான  விளைவுக்கு இட்டுச் செயன்ற சம்பவங்களும் இடம்பெறாமல் இல்லை. இணையவெளியில் இத்தகைய துன்புறுத்தல்கள் மீளமீள (repeatedly) நிகழ்த்தப்படுவதே அதன் பாரதூரத்தன்மைக்கான அடிப்படைக் காரணமாகும்.

இணையவெளித் துன்புறுத்தல்களால் சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் சுகாதார மற்றும் உணர்வுசார் நலன்கள் பாதிக்கப்படுவதோடு கல்வி நடவடிக்கைகளும் பாரியளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை அவர்களது வாழ்வில் நீண்டகாலத் தாக்கங்களை தவிர்க்க முடியாதபடி ஏற்படுத்துகின்றன. சிறுவர்களின் அதிகரித்த  இணையப்பாவனையே அவர்களை இணையத் துன்புறுத்தல்களின் பலிக்கடாவாக்கியிருக்கிறது.

பெண்கள் பலர் இணையவெளித் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இணையவெளித் துன்புறத்தல்கள் தொடர்பாக யாழ்மாவட்டத்திலுள்ள புதுமுக பெண் அரசியல்வாதிகள் சிலரோடு கலந்துரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தின்போது அவர்கள் பல்வேறுவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தமையை அறிய முடிந்தது. ஒருவரது பெயரில் போலி முகப்புத்தகக் கணக்கொன்று உருவாக்கப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டமை ஒரு உதாரணமாகும். மற்றொரு பெண் அரசியல்வாதிக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொய்யான செய்தி பரப்பப்பட்டு விளைவாக பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இன்னொருவரது விடயத்தில் உத்தியோக செயற்பாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று முகநூலில் பகிரப்பட்டு குறித்த படத்தில் இருந்த ஆணிற்கும் குறித்த பெண் அரசியல்வாதிக்கும் இருக்கும் உறவை விமர்சித்து பின்னூட்டல்கள் செய்யப்பட்டமை அவரது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பகிரப்பட்டது. மற்றொரு பெண் அரசியல் ஆர்வலர் சக பெண் அரசியல்வாதியொருவரை ஆதரித்து முகநூல் பதிவொன்றைச் செய்ததன் பிற்பாடு எதிர்கொண்ட மிக மோசமான முகநூல்வழித் தாக்குதல்களையும் அவை அவரது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் கூறக்கேட்டு அறிய முடிந்தது. தவிரவும் சமூக செயற்பாட்டாளர்களாக உள்ள பெண்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் இணையவழியில் நடந்தேறுகின்றன. இத்தகைய பெண்ணொருவரை பாலியல் உறவுக்கு அழைத்து தொடர் மின்னஞ்சல்கள் வெவ்வேறு இணையக் கணக்குகளிலிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மோகனதர்சினி என்கிற பெண் தன்னுடைய முகநூலில் பதிந்து கொண்ட தகவல்களுக்காக அவரைக் குறிவைத்து அரச அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக வசைபாடுவதும், முறைகேடாக நடந்துகொள்வதும் தற்போது முகநூல் உலகில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற விடயமாகவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கொரோனா கால சூழ்நிலையில் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களை இணையவழியில் பகிடிவதை செய்யும் சம்பவங்கள் பற்றித் தற்போது பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பன இந்த பகிடிவதை வடிவங்களைப் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளில் முனைப்போடு ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

இணையவழித் துன்புறுத்தல்கள் வயது, பால், சமூக, பொருளாதார அந்தஸ்து இத்தியாதிகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கவல்ல ஒரு வன்முறை வடிவமாக உருவெடுத்து வருவதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தடுப்பு, நிவாரணம், பாதுகாப்பு பற்றி அதிக சிரத்தை கொள்ளவும் கடமைப்பட்டுள்ளோம்.

பாதுகாப்பும் தீர்வும்

மேலே சொன்ன விதங்களில் இணையவெளித் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நபர் ஒருவருக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைக்கின்றது என்பது கரிசனைக்குரிய விடயமாகும்.

இணையவெளியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் குறித்த பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமாயின் இணையத்திலிருந்து விலகியிருத்தல் சரியான தீர்வு எனச் சிலர் ஆலோசனை கூறுவதுண்டு. இவ்வாலோசனை பாதிப்பிலிருந்து விடுபட உடனடித் தீர்வாக அமைந்தாலும் கூட, தவறேதும் புரியாத, குற்றமிழைக்காத நபரொருவர் மற்றவரால் புரியப்படும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக இணையப் பாவனையை நிறுத்துவதும், விலகியிருப்பதும் முறையான தீர்வா என்ற கேள்வி எழுகிறது.

அவ்வாறே துன்புறுத்தலுக்குள்ளாகுபவர் அதனைச் செய்பவர் அல்லது அவரது கணக்குத் தொடர்பில் முறைப்பாடு செய்தல் என்பது மற்றொரு தீர்வாக கொள்ளப்படுகிறது. முறையிடலைப் பாதிக்கப்பட்டவர் நேரடியாகச் செய்யலாம். தனது நண்பர்கள் மூலமாகவும் செய்து கொள்ளலாம். முறையிடலைத்  தொடர்ந்து துன்புறுத்தலைச் செய்பவருடைய கணக்கு முடக்கப்படும். Facebook, Instagram, Twitter ஆகிய இணையச் சேவைகளில் இத்தகைய முறையிடலுக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் SRI LANKA COMPUTER EFFECTIVE READINESS TEAM என்கிற அமைப்பிடமும் இத்தகைய முறைப்பாடுகளைச் செய்ய முடியும். தவிரவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் இவ்வகை முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.

முறைப்பாடுகளைச் செய்வதற்கான பலவிதமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், இவற்றைத் தீர்வு முறைகளாகக் கருத்தில் கொள்ளுதல் சரியாகுமா என்கிற விவாதம் காணப்படுகிறது. முறையிடுவதன் மூலம் குறித்த துன்பம், துன்பங்கள் மேற்கொண்டு நிகழாமல் அல்லது தொடராமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அந்தவகையில் முறையிடல் பொறிமுறையானது உடனடி அல்லது குறுங்காலத் தீர்வாக அமையும். ஆனாலும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பை (உடல், உள, உணர்வுசார்) ஈடுசெய்யும் வகையில் அல்லது நட்டஈடு வழங்கும் வகையில் நீண்ட காலத்தீர்வொன்றாக முறையிடல் அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.

முறையிடல் என்பது காத்திரமான குறுங்காலத் தீர்வாகத் தன்னிலும் அமைகிறதா என்ற சந்தேகம் அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்றது. உதாரணமாக மோகனதர்சினி என்பவர் மீதான முகநூல் தாக்குதல் (இச்சம்பவம் பற்றி மேலே வேறோர் இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) தொடர்பில் முகநூல் வழியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டபோது குறித்த துன்புறுத்தும் நபரின் கணக்கு தொடர்ந்து இயக்கப்படுவதற்கு தடைவிதிக்காத அதேநேரம் குறித்த மோகனதர்சினியின் முகநூல் கணக்கு ஒரு சில தினங்களுக்கு இயக்கப்பட முடியாமல் தடை விதிக்கப்பட்டமை பற்றி முகநூல் பக்கங்களில் கடும் விமாசனங்கள் நிகழ்த்தப்படுவதைக் காண முடிகிறது. முகநூல் குற்றவாளிகள் பக்கம் சார்ந்திருப்பதாக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

உடனடி மற்றும் குறுகியகாலத் தீர்வுகளுக்கு அப்பால் பாதிக்கப்பட்டவருக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் உறுதியான சட்டக் கட்டமைப்பொன்று இருத்தல் அவசியமாகும். இலங்கையில் இணையவெளித் துன்புறுத்தல்களுக்குத் தீர்வு தரும் வகையில் சட்டக் கட்டமைப்பொன்று உண்டா என ஆராய்தல் இவ்விடத்தில் பொருத்தமான செயலாகும்.

சட்டத்தின் கீழ் ஒருவரை அவமதித்தல் என்பது தீங்கியல் குற்றமாகும்

சட்டப் பாதுகாப்பு

இணைய வழித்துன்புறுத்தல் வடிவங்களாக அடையாளங் காணப்பட்டவற்றுள் அநேகமானவை தனிநபர் அவமதிப்புக் குற்றங்களே. சட்டத்தின் கீழ் ஒருவரை அவமதித்தல் என்பது தீங்கியல் குற்றமாகும். அவமதித்தல் நிகழ்ந்திருக்கிறது என நிரூபிக்கப்படும் பட்சத்தில் தீங்கியல் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு அல்லது நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட உரிமை உண்டு. சாதாரண சூழ்நிலைகளில் நிகழும் அவமதிப்புக் குற்றங்களுக்கு தீங்கியல் சட்டத்தின் மூலம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நிவாரணம் பெறும் வழமை காணப்படுகிறது. அவமதிப்புக் குற்றத்திற்கான அதே மூலக்கூறுகளைக் கொண்ட குற்றம் இணையவெளியில் நிகழ்த்தப்படும்போது மேலே ஆராய்ந்த முறையிடல் மற்றும் கணக்கை முடக்குதல் என்பவற்றிற்கு அப்பால் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யக்கூடிய சட்டவெளி காணப்படுகின்றது. இருந்த போதிலும் அவமதிப்பு என்கிற வகையில் இணையவெளித் துன்புறுத்தல்கள் கையாளப்படுவது அரிதலும் அரிதான நிகழ்வாகவே காணப்படுகிறது.

அவ்வாறே 2005ம் ஆண்டின் 34ம் இலக்க குடும்ப வன்முறைத் தவிர்ப்புச் சட்டம் இணையவெளித் துன்புறுத்தல்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழ்த்தப்படும்போது பாதுகாப்புத் தரக்கூடிய சட்டமாகக் காணப்படுகிறது. குடும்ப வன்முறைத் தவிர்ப்புச் சட்டமானது குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே வீட்டிற்குள்ளேயும், வெளியேயும் நிகழ்த்தப்படும் உடல் மற்றும் உளம்சார் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் ஆக்கப்பட்ட சட்டமாகும். இணையப் பாவனை அதிகரித்த பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான உறவில் பாதிப்புக்கள் பல ஏற்பட்டிருப்பது வெளிப்படை. இத்தகைய தனிப்பட்ட உறவுமுறைசார் பிரச்சினைகள் இணையவெளியில் ஏற்படுத்தப்படும்போது கூட குடும்ப வன்முறைத் தவிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம். ஆனாலும் இணையவெளித் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் சட்ட வழியாக குடும்ப வன்முறைத் தவிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படுவது மிகக் குறைவு என்பதே உண்மை.

பல்கலைக்கழக மாணவர் மத்தியில் இணையவெளியில் நிகழ்த்தப்படும் பகிடிவதைகள் பற்றி ஏலவே பார்த்திருந்தோம். பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறைகளைத் தடுக்கம் வகையில் உருவாக்கப்பட்ட 1998ம் ஆண்டின் 20ம் இலக்கச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் இணையவெளியில் நிகழ்த்தப்படும் பகிடிவதைகளும் உள்ளடக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிப்பதற்கு இடமுண்டு. இணையவெளிப் பகிடிவதை முறைப்பாடுகள் அதிகரித்துவரும் இக்காலத்தில் பகிடிவதை தொடர்பான சட்ட ஏற்பாடுகளைப் பரந்தளவில் வியாக்கியானம் (Interpretation) செய்து செயற்படுத்துவது பல்கலைக்கழகங்கள் மற்றும் உயாகல்வி நிறுவனங்களின் தலையாய கடமையாகும்.

அவ்வாறே இலங்கையைப் பொறுத்தவரையில் குற்றங்களை இனங்கண்டு, வகைப்படுத்தி அடிப்படை மூலக்கூறுகளை விபரித்து தண்டனைக்கான ஏற்பாடுகளை விதந்துரைக்கிற சட்டமாகத் தண்டனைச் சட்டக்கோவை காணப்படுகிறது. இணையவெளித் துன்புறுத்தல்களாக அடையாளங் காணப்படக்கூடிய மூன்று குற்றங்கள் தண்டனைச் சட்டக்கோவையில் காணப்படுகின்றன.

பிரிவு 345 ஆனது பாலியல் தொந்தரவு என்பதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. அவ்வாறே பிரிவு 372 ஆனது குற்றமுறையாகப் பணம்பறித்தல் (Criminal extortion) என்பதைக் குற்றமொன்றாக வரையறுக்கிறது. அவ்வாறே பிரிவு 483ல் குற்றவியல் மிரட்டல் (Criminal intimidation) என்பது அதாவது ஒருவர் சட்டரீதியாகச் செய்ய வேண்டிய செயல் அல்லாதவொன்றைச் செய்யும்படி தூண்டுதல், அச்சுறத்தல் முதலானவை குற்றமொன்றாகச் சொல்லப்படுகிறது. இம்மூன்று குற்றங்களும் இணையவெளியில் நிகழ்த்தப்பட்டதென்பதை நிரூபிக்கக்கூடியதாக உள்ள பட்சத்தில் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குற்றம் புரிபவரைத் தண்டிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் நிகழ்த்தப்படும் குற்றங்கள் கையாளப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் சிறுவர்களின் அதி சிறந்த நலனைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன்கீழ் சிறுவர்களைப் பாதிக்கும் இணையவழித் துன்புறுத்தல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல் சாத்தியமே. ஆபாசப்படங்களைப் பிரசுரித்தல் தொடர்பான கட்டளைச் சட்டமும் (Obscene Publication Ordinance No. 04 of 1927) செயற்பாட்டிலுள்ளது. ஆபாசப்படங்களை பிரசுரித்தல், திருத்தப்பட்ட (Edited) நெருக்கமான புகைப்படங்களைப் பிரசுரித்தல் முதலானவை இச் சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் தடுக்கப்பட்டுள்ளது.

மேலே பார்த்த சட்டங்களிலெல்லாம் இணையவெளித் துன்புறுத்தல்களை குறிப்பாக உள்ளடக்குகிற ஏற்பாடுகள் இல்லை என்பது ஒரு சவாலாகும். இச் சட்டங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் இணையவெளித் துன்புறுத்தல்கள் தொடர்பில் உணரப்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் இருந்தமை காரணமாக இது நேர்ந்திருக்கலாம். ஆனாலும் குற்ற மூலக்கூறுகளின் ஒத்த தன்மையினை அடிப்படையாகக் கொண்டு மேற்சொன்ன அங்கீகரிக்கப்பட்ட குற்றங்கள் இணையவழியாக நடைபெற்ற போதும் இச்சட்டங்களின் உதவியுடன் பரிகாரம் பெறுவது சாத்தியமே.

இது தொடர்பில் சட்டத்தரணிகள், நீதிமன்றங்கள், காவல்துறையினர் ஆகியோர் விழிப்புணர்வு பெறுவதும், அறிவூட்டப்படுவதும் அவசியமாகும். இத்தகைய சட்டவெளிகளைப் பயன்படுத்தி இணையவெளித் துன்புறுத்தல்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சட்டத்தரணிகள், நீதிபதிகள், காவல்துறையினர் காத்திரமான பங்களிப்புச் செய்ய முடியும். இத்தகைய சட்டங்களைப் பயன்படுத்தி இணையவெளித் துன்புறுத்தல்களுக்கான நிவாரணம் பெற முடியுமா என்பது இரண்டாம் பட்சமான கேள்வி. இச் சட்டங்களிலுள்ள வெளியை (Space) பரீட்சாாத்தமாகவேனும் முயற்சித்துப் பார்ப்பதுதான் முதற்பட்சமான கடமையாகும்.

சில சிரேஷ்ட சட்டத்தரணிகள் குடியியல் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தைப் (ICCPR 2007) பயன்படுத்திச் சில உரிமை மீறல் விடயங்கள் இணைவெளியில் செயற்படுத்தப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முன்மாதிரியான சம்பவமொன்றாகும். இப்படியான முயற்சிகள் மற்றும் முனைப்புக்கள் பரவலாக இடம்பெறும்போது தற்போதிருக்கக்கூடிய சட்டக்கட்டமைப்பு வெளியைப் பயன்படுத்திப் பெறக்கூடியதாகவுள்ள உச்ச நன்மைகளை அடைதல் சாத்தியமாக்கப்படும்.

தவிர 2007ம் ஆண்டின் Computer Crimes Act இனைப் பயன்படுத்தி இணையவெளித் துன்புறுத்தல்களுக்குத் தீர்வு பெறமுடியுமா என்கிற ஒரு வினா காணப்படுகிறது. இச் சட்டத்திலும் இணையவெளித் துன்புறுத்தல்கள் குற்றமாக அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனாலும் பிரிவு 6 ஆனது பொது ஒழுங்கைப் (Public order) பாதிக்கும் வகையில் கணனியைப் பயன்படுத்தி வேண்டுமென்றே செய்யப்படும் செயல்கள் குற்றமாகும் என வரையறை செய்கிறது. பொது ஒழுங்கு என்பதால் குறிக்கப்படுவது யாது என்பது இச்சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அரசியலமைப்பிலும் அதற்கான வரைவிலக்கணமில்லை. ஆனாலும் இணையவெளித் துன்புறுத்தல்கள் பொது ஒழுங்கைப் பாதிக்கும் செயல்கள் என்பதாக நீதிமன்றம் பொருள் கோடல் செய்கிறபோதே அவை உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தைப் பெறும். இது தொடர்பில் நீதிமன்றங்களும், சட்டவாளர்களும் சிரத்தை கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதுவரையில் ஏற்கெனவே இருக்கிற சட்டவெளியைப் பயன்படுத்தி இணையவெளித் துன்புறுத்தல்களுக்கான பாதுகாப்புப் பற்றியும், அதன் போதான சவால்கள் பற்றியும், சாத்தியங்கள் பற்றியும் ஆராய்ந்திருந்தோம். அடுத்து சட்டக் கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய  அவசியமான மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆராய்வோம்.

இணையவெளிக் குற்றங்களானவை பிரத்தியேகமான சட்ட அங்கீகாரத்தைப் பெற்றிராமை அல்லது குற்றங்களாக இனங்காணப்படாமை என்பது ஒரு பாரிய குறைபாடாகும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இத்தகைய குற்றங்களை ஏற்கனவே உள்ள சட்டங்களுக்குள் உள்ளீர்த்துக் கொள்வது ஒரு பரிந்துரையாகும். இந் நடைமுறை அமெரிக்காவில் பின்பற்றப்பட்டுள்ளது.

இணையவெளித் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்திப் பாதுகாக்கும் நோக்கில் தனித்த, பிரத்தியேகமான சட்டமொன்றை ஆக்குவது மற்றொரு பரிந்துரையாக முன்வைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வெவ்வேறு இணையவெளிக் குற்றங்களைக் கையாளவென தனித்தனிச் சட்டங்கள் ஆக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் இணையவெளித் துன்புறுத்தல்களைக் கையாளக்கூடிய சட்டங்கள் உள்ளன. பாலியல் தொந்தரவு, குற்றமுறையான அச்சுறுதல், பணம் பெறல் ஆகியவை அத்தகைய சட்டங்களிற்கான உதாரணங்களாகும். ஆனாலும் பாதுகாப்பை வினைத்திறனாக்கும் வகையில் சட்டங்களை ஒருமைப்படுத்தல் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய சட்டமொன்றை இணையவெளித் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்புத் தரக்கூடிய சட்டமொன்றினை உருவாக்கல் காலத்தின் தேவையாகும் எனச் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரஷானி மீஹம (Rashani Meegama) ஐக்கிய நாடுகள் சபையின் பால்நிலைக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொள்கை ஆய்வு நிகழ்வொன்றில் (2016ல்) தெரிவித்திருந்தார்.

எனவே இலங்கைக்குப் பொருத்தமானதொரு சட்டக் கட்டமைப்பை உருவாக்கி இணையவெளித் துன்புறுத்தல்களிலிருந்து சட்டரீதியாகப் பாதுகாப்புப் பெறும் வகையில் இலங்கைச் சட்டவாளர்கள் காய்நகர்த்த வேண்டியுள்ளது. சட்டச் சீர்திருத்தங்களோடு இணைந்ததாக தகவல் பாதுகாப்புக்கான பொறிமுறைகள் மற்றும் இலங்கைக்கு வெளியில் இருந்து புரியப்படும் இணையவெளித் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் முதலானவற்றை உருவாக்குவதிலும் கவனஞ் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.

முடிவுரை 

இணையவெளித் துன்புறுத்தல்களின் வடிவங்களும், அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் இலகுவில் கடந்து செல்ல முடியாதவை. பொருத்தமான சட்டக் கட்டமைப்பொன்றினூடாக ஆக்கபூர்வமான தீர்வினைப் பெறக்கூடியதாக இலங்கைச் சட்டங்கள் பிரயோகிக்கப்படல் வேண்டும், கட்டமைப்புச் செய்யப்படல் வேண்டும். இணையவெளித் துன்புறுத்தல்களிலிருந்து மீள்வதற்கு சமூக விழிப்புணர்வு அவசியம் என்பதும் உணரப்பட வேண்டும் இணையப்பாவனை நெறிப்படுத்தப்பட்ட விதத்தில் அமைய வேண்டும் என்பதை சமூகத்திலுள்ளவர்கள் உணர்ந்து செயற்படுவது உறுதிப்படுத்தப்படுவதோடு மீறி ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுத்தரும் வகையில் சட்டக்கட்டமைப்பு அமைந்திருத்தல் என்பதுவும் சமாந்தர முக்கியத்துவம் கொண்டவை.  

கூட்டுப் பொறுப்பின் மூலமே நல்ல விளைவுகள் சாத்தியப்படும். 

 

கோசலை மதன் 

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். கற்பித்தலுக்கு அப்பாலும் சமூகத்தில் பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள்,தொழிலாளர் உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், வழக்காற்றுச் சட்டங்கள் முதலானவை தொடர்பில் மக்களை அறிவூட்டும் வகையில் தனது பங்களிப்பை வழங்கிவருபவர்

 

 

https://akazhonline.com/?p=2851

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.