Jump to content

காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’ நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் -முருகபூபதி


Recommended Posts

காலமும் கணங்களும்: ‘அதிசயங்கள்’   நிகழ்த்திய   பல்கலைவேந்தன்   சில்லையூர்  செல்வராசன் -முருகபூபதி

ஒக்டோபர் 14 நினைவு தினம் !!

  • முருகபூபதி

தேனாகப்    பொன்நிலவு     திகழ்கின்ற     ஓரிரவில்
தெய்வத்துள்      தெய்வம்    என் தாயானாள்     எம் மனைமுற்ற        மணல்திருத்தி      அன்பொடு   தன் அருகணைத் தென் விரலைப்பற்றி ‘ஆனா’ என்றோரெழுத்தை
அழித்தழித்தம்   மணல்   மீது   அன்றெழுதப்    பயிற்ற
இன்றோ   பேனாதனைப்    பிடித்தெழுதும்    உரையெழுத்தும்  கவியெழுத்தும்
தலையெழுத்தாய்ப்    பிழைப்பாய்க்    கொண்டென்
நானான    போதும்    தம்நாளாந்தச்    சோற்றுக்கும்     ஆடைக்கும்
நலிவோர்க்காய்ப்    பொருத   என்   வாளானாளே
தமிழ்   என்றிங்கன்ப ரெல்லாம்    போற்றுகின்ற
ஆச்சி  உனை    முதலில்    அடிபணிந்தேன்   போற்றி

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%பல்கலைவேந்தன்    சில்லையூர்   செல்வராசன் மேடையில்   தோன்றினால்  முதலில்  இந்தப் பாடலை  ராகத்துடன்  பாடிய பின்னரே  தமது  பேச்சை  தொடங்குவார்.  அவர்  கவியரங்கு களுக்கு   தலைமையேற்றாலும்   தப்பாமல்   பாடுவார்   இக்கவிதையை.

கணீரென்ற  கம்பீரமான  குரல்  அவருக்குக்  கிடைத்த  வரம்.

அடிக்கடி   உறக்கத்தில்   கனவு   காணும்  எனக்கு 1980 களில்  ஒரு  நாள் வந்த  கனவில்  நண்பர் சில்லையூர்  இறந்துவிட்டார்.  திடுக்கிட்டு  எழுந்து  நேரத்தைப்பார்க்கின்றேன்.  அதிகாலை   மூன்று மணியும்  கடந்துவிட்டது.  அதன்பிறகு  உறக்கம்   நழுவிப்போய்விட்டது.

காலை  எழுந்து  வேலைக்குப்புறப்படும்பொழுது  அம்மாவிடம்   நான்  கண்ட  கனவு பற்றிச் சொல்லிக் கவலைப்பட்டேன்.  எனது  அம்மாவுக்கு  சில்லையூரை  நேரில்  தெரியாது. ஆனால்  அவர்களுக்கு  சில்லையூரின்  குரல்  நல்ல  பரிச்சியம்.

வானொலியில்   சில  நிகழ்ச்சிகளில்  சில்லையூரின்   மதுரமான  குரலை  ரசிப்பார்கள்.   அவர்   எனது  நண்பர்   என்ற  தகவல்  தெரிந்து  மகிழ்ச்சியடைந்தார்கள். தொலைக்காட்சியின்  அறிமுகம் இல்லாத  அந்தக்காலத்தில்  இலங்கை  வானொலியின் தமிழ்   தேசிய  சேவையும்  வர்த்தக சேவையும்  இலங்கையில்  மட்டுமல்ல  தமிழகத்திலும்  நன்கு  பிரபல்யம்   அடைந்திருந்தது. மயில்வாகனம் –   செந்திமதி மயில்வாகனம்  சில்லையூர்,  கே.எஸ்.ராஜா,  அப்துல்ஹமீட், ராஜேஸ்வரி  சண்முகம்,  சற்சொரூபவதி  நாதன்,   ‘சுந்தா ‘ சுந்தரலிங்கம்,  புவனலோஜினி வேலுப்பிள்ளை, சரா இம்மானுவேல், ஜோக்கிம்  பெர்ணான்டோ,  ராஜகுரு சேனாதிபதி   கனகரத்தினம், ஜோர்ஜ்   சந்திரசேகரன், வி. என். மதியழகன், நடராஜசிவம்   முதலான  பலரது  குரல் நாடெங்கும்  பிரசித்தம்.

இவர்கள்  தமிழ்வானொலி   நேயர்களை   வானொலியின்    அருகே  அழைத்து கட்டிப்போட்டவர்கள்   என்று   சொல்வது கூட  மிகையான  கூற்று  அல்ல.

இக்காலத்தில்   தொலைக்காட்சி  நாடகங்களை  அலுப்புச் சலிப்பின்றி   பார்த்து  ரசிக்கும்    எண்ணிறந்த    மக்களைப் போன்று  அந்நாட்களில்   தமது  ரஸனைக்கு  விருப்பமான  தொடர்   நிகழ்ச்சிகள்,   நாடகங்கள்    இலங்கை   வானொலி யில்   ஒலிபரப்பாகும்   வேளைகளில்    தமது  அன்றாடக்கடமைகளையும்    ஒருபுறம்  வைத்துவிட்டு   வானொலிக்கருகே   வந்துவிடுவார்கள்.

அல்லது.   குறிப்பிட்ட  நிகழ்ச்சிகளை   செவிமடுப்பதற்கு  ஏற்றவாறு  தமது   வீட்டுப்பணிகளுக்கு   நேரவரையறை   செய்துகொள்வார்கள்.

மக்கள்  வங்கி  விளம்பரத்தில்   “அத்தானே   அத்தானே   எந்தன்  ஆசை  அத்தானே…  கேள்வி  ஒன்று  கேட்கலாமா…  உனைத்தானே…  என்ற   சில்லையூர் – கமலினி  இணைந்து  பாடிய  பாடலை  மிகவும்  ரசித்துக்கேட்ட   வானொலி  ரசிகர்கள்  ஏராளம்.

“எங்கள்  சில்லையூர்  இறந்துவிட்டதாக  கனவு  கண்டேன்   அம்மா.  மிகவும்  கவலையாக இருக்கிறது” என்று   சொன்னதும், “இதிலென்ன  கவலைப்பட  இருக்கிறது.  நல்ல  கனவுதான்.   அவருக்கு  நீண்ட  ஆரோக்கியம்  இருக்கும்.  உனக்கு  கவலையாக   இருந்தால்   அவரைப்போய்  பார். அல்லது  வேலைக்குப்போனதும்  அவருக்கு  தொலைபேசி   எடுத்து  சுகத்தை  விசாரித்துக்கொள்”   என்று  அம்மா  எனக்கு    ஆறுதல்     சொன்னார்.

அம்மா     சொன்னவாறு    சில்லையூரை  தொலைபேசியில்   தொடர்புகொண்டு  சுகம்  விசாரித்தேன்.

அவர்  மறுமுனையிலிருந்து    பெருங்குரலெடுத்து    சிரித்தார்.

“என்   மீதான  அக்கறைக்கு  மிக்க  நன்றி  நண்பரே.   உமது   அம்மா  சொன்னவாறு    நல்ல  கனவுதான்.  நான்   நன்றாக   இருக்கிறேன்.  பிறகு  சந்திப்போம்”  என்றார்.

இச்சம்பவம்  நடந்து  சுமார்   15  ஆண்டுகளின்  பின்னர்தான் 1995  இல் இதே ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி   சில்லையூர்  மறைந்தார்.

அப்பொழுது    நான்  அருகிலும்   இல்லை.  கனவும்   காணவில்லை.

நீண்ட  இடைவெளிக்குப்பின்னர்   கொழும்பு  பொரளையில்   கனத்தை  மயானத்தில் அமைந்துள்ள   சில்லையூரின்   நினைவுக்கல்லறையையும்   அவரது  கவிதைத்தொகுப்பின்    முதலாவது     பாகத்தையும் தான்   பார்த்தேன்.

தாயின்   கரத்தால்  மண்ணிலே  எழுதப்பழகி   கவிஞனாக   உயர்ந்து  பல்கலைவேந்தனாக   வலம்வந்து    தனது    பூர்வீக   ஊரை  இலக்கிய உலகத்தில்  நிரந்தரமாக   பதிவுசெய்துவிட்டு   நினைவுகளை   தந்து  மறைந்துவிட்ட   சில்லையூர்   செல்வராசன்   என்னால் மறக்கமுடியாத சுவாரஸ்யமான   நண்பர்.

தமிழகத்தில்   வாத்தியார்    என்றால்   அது   மக்கள்திலகத்தையே   குறிக்கும்.   இலங்கையில்     வானொலி   வட்டாரத்தில்   வாத்தியார்   என்றால்   அது   எங்கள்   சில்லையூர்   செல்வராசனையே   குறிக்கும்.

வானொலி   ஊடகத்தின்   நுட்பங்கள்   பலவற்றை    குறிப்பாக   விளம்பரம்,  நாடகம்,  ஒலிச்சித்திரம்   முதலான   துறைகளில்    அவர்   பலருக்கு   அங்கு  வாத்தியாராகவே   திகழ்ந்தார்.   காரணம்   அவருக்கு நல்ல   குரல்வளம்,  நடிப்பாற்றல்,   அதற்கும்   அப்பால்   படைப்பாளுமையும்    கற்பனைத்திறனுமுள்ள     கவிஞர்.

எழுத்தை   முழுநேரத்தொழிலாககொண்டிருந்து  வாழ்ந்தவர் களை  பார்த்திருக்கின்றோம்.  சில்லையூர்  தனது  குரலையே  மூலதனமாக  வைத்து  வாழ்ந்தவர்.  அவர்  இருக்கும்  இடம்   எப்பொழுதும்  கலகலப்பானதுதான்.  அவருக்கு  அருகில்   பாடும்  ஆற்றல்  உள்ள  ஒருவர்  இருந்தால்,  உடனுக்குடன்    பாடல்  புனைந்துகொடுத்து  பாடவைத்துவிடுவார்.

இதுபற்றி     பிரான்ஸில்  வதியும்    நண்பர்  இளங்கோவனின்  பதிவொன்றையும்  கண்ணுற்றேன்.
பாரதி   நூற்றாண்டு   காலத்தில்   எங்கள்  ஊரில்  நாம்  நடத்தியபாரதிவிழாவுக்கு   சில்லையூரை   கவியரங்கிற்கு   அழைத்திருந்தோம்.  அத்துடன்  எம். ஏ. குலசிலநாதனையும்    இசைநிகழ்ச்சி   நடத்துவதற்கு   அழைத்தோம்.

விழா  முடிந்ததும்   மன்றத்தின்  தலைவர்  மயில்வாகனன்   மாமா  இல்லத்தில்  நடு இரவு வரையில்  கச்சேரிதான்.  சில்லையூர்  புதிதாக   பாடல்கள்  இயற்றகுலசீலநாதன்  அதற்கு  மெட்டமைத்துப்பாடினார்.   பொழுது  சென்றதே  தெரியவில்லை. அதன்பிறகு  தமது  மோட்டார்  சைக்கிளில்   சில்லையூர்  தமது  மகனுடன்  கொழும்புக்கு  புறப்பட்டுச்செல்லும்பொழுது    அதிகாலையாகிவிட்டது.

பாரதி  நூற்றாண்டு    காலத்தில்   வீரகேசரி   வாரவெளியீட்டில்    சில்லையூரும்   புதுவை  ரத்தினதுரையும்   நடத்திய   கவிதைச்சமர்   தொடர்    இலக்கிய  சுவைஞர்களுக்கு   விருந்துபடைத்தவை.      1983   அமளியின்பொழுது    இடப்பெயர்வில்   தொலைத்துவிட்ட     அந்த       அச்சுப்பிரதிகளை   தேடிக்கொண்டிருக்கின்றேன்.

1980  களில்  மலையகம் தலவாக்கல்லையில்  முழுநாள்  பாரதிவிழாவை  ஒழுங்குசெய்துவிட்டு, என்னையும்  சில்லையூரையும்   அவரது  மனைவி   கமலினியையும்  அழைத்திருந்தார்  நண்பர்   இ.தம்பையா.   (இவர்  தற்பொழுது  கொழும்பில்  பிரபல  சட்டத்தரணி. மனித உரிமை  செயற்பாட்டாளர், இவரது அரசியல் ஆய்வுகளை தினக்குரலில் பார்த்திருப்பீர்கள்)

இரவு  நானு   ஓயா  எக்ஸ்பிரஸ்  ரயிலில்  புறப்பட்டோம்.   நண்பர் தம்பையா  சில்லையூர் தம்பதியருக்கு   முதலாம்  வகுப்பில்   இருக்கைகள்  பதிவுசெய்திருந்தார்.  நானும்  தம்பையாவும்   மூன்றாம்  வகுப்பில்   பயணித்தோம்.

நடு  இரவில்  சில்லையூர்  எழுந்து   எம்மைத்தேடிக்கொண்டு   வந்துவிட்டார்.  எங்கள்  இருவரையும்  மூன்றாம்  வகுப்பில்   விட்டுவிட்டு  தானும்  கமலினியும்  முதல்  வகுப்பில்  சௌகரியமாக  பயணம்  செய்வது  குற்ற  உணர்வாக  இருக்கிறது   என்று  சொல்லி  வருந்தினார்.

“கமலினி   ஆழ்ந்த  உறக்கம்.  எங்களுடன்  உரையாடிக்கொண்டு  வருவதற்கே விருப்பமாக  இருக்கிறது  “ என்றார்.  அதிகாலை  தலவாக்கல்லையில்  இறங்கும்   “ வரையில்  சில்லையூர்  இலக்கிய  புதினங்களையும்  தனது   வானொலி  திரைப்பட  அனுபவங்களையும்  எம்முடன்   பகிர்ந்துகொண்டிருந்தார்.

தலவாக்கல்லையில்   மலையக அரசியல்  தலைவர்  சந்திரசேகரனின்  (பின்னாளில்  மலையக  மக்கள்  முன்னணியை  உருவாக்கிய  முன்னாள்  அமைச்சர்) இல்லத்தில்  சில்லையூர் – கமலினி  தம்பதியர்  தங்கினர்.

நானும்   தம்பையாவும்   ஒரு  நண்பர்  இல்லத்தில்  தங்கினோம்.

தலவாக்கல்லை  தமிழ்  மகா  வித்தியாலயத்தில்  பாரதிவிழா.  காலை முதல்  இரவு  வரையில்  நிகழ்ச்சிகள்  ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

சில்லையூர்  தலைமையில்  கவியரங்கு.  பங்கேற்ற  கவிஞர்கள்   காதலையும்  இயற்கையையும்தான்   பாடினார்கள்.

சபையிலிருந்த   எனக்கு    ஏமாற்றமும்   சற்றுக்கோபமும்   வந்துவிட்டது.  அக்காலப்பகுதியில்   ஐக்கிய  தேசியக்கட்சி   பதவியில்  இருந்தது.  பிரதமர்  பிரேமதாச  தமது  கிராமோதய  திட்டத்தில்   நாடெங்கும்    பல    மாதிரிக்கிராமங்களை   அமைத்துக்கொண்டிருந்தார்.  ஆனால்,  மலையக  மக்களான  தோட்டத்தொழிலாளர்கள்   தொடர்ந்தும்  மோசமான    லயன்    குடியிருப்புகளில்    வசதிக்குறைபாடுகளுடனேயே  வாழ்ந்துகொண்டிருந்தனர்.  கவியரங்கு  கவிஞர்களின்  கவிதைகளில்   தோட்டத்தொழிலாளரின்  துயரம்  பதிவாகவில்லையே   என்று  சிறுகுறிப்பை   எழுதி    மேடையிலிருந்த   சில்லையூருக்கு   அனுப்பினேன்.

சில  நிமிடங்களில்  அவரே  தேயிலைத்தோட்டத்தொழிலாளர் களின்  குடியிருப்பு  அவலம்  குறித்த  கவிதையை  எழுதி  பாடினார்.  இதர  கவிஞர்கள்  தவறவிட்ட  அந்தப்பக்கத்தை   அழுத்தமாகச்சுட்டிக்காண்பித்தார்.

தான்தோன்றிக்கவிராயர்   என்ற  புனைபெயரையும்   கொண்டிருந்த  சில்லையூர்   ஒரு  வரகவிதான்   என்ற   உண்மையை  அன்றுதான்    தெரிந்துகொண்டேன்.

இரவு  நிகழ்ச்சியில்   நானும்   கமலினி  செல்வராசனும்   சந்திரசேகரனும்   உரையாற்றினோம்.
இந்த   விழாவில்   அமைச்சர்   தொண்டமான்   பிரதம   விருந்தினராக   கலந்துகொண்டார்.

சுதந்திரன்,   வீரகேசரி,   தினகரன்   ஆகிய  பத்திரிகைகளில்   பணியாற்றியபின்னர்   வானொலி –  திரைப்படம் –  விளம்பரம்  முதலான  துறைகளில்  தனது  ஆற்றலை வெளிப்படுத்தி  பிரபல்யமாக  இருந்த  வேளையிலேயே  அவர்   எனது   நண்பரானார்.

1970 களில் ஈழத்துத்  தமிழ்  நாவல்  வளர்ச்சி   பற்றி  அவர்  எழுதிய  நூல்   பின்னாட்களில்   இத்துறை  சார்ந்து  ஆய்வுகளில்  ஈடுபட்டவர்களுக்கு  உசாத்துணையாக  விளங்கியது.
ஞானசவுந்தரி,  சங்கிலியன்,   பண்டாரவன்னியன்   முதலான  கூத்துக்களிலும்  மதியூக  மங்கை   மதமாற்றம்  (அ.ந.  கந்தசாமி   எழுதியது)  திறந்த  கல்லறை, பை  பை  ராஜூ,   நெவர்  மைண்ட்  சில்வா    ஆகிய  நாடகங்களிலும்  நடித்திருக்கிறார்.

தணியாத   தாகம்  திரைப்படச்சுவடியை  அவர்   துரிதகதியில்     எழுதநேர்ந்தமைக்கு   எதிர்பாராதவிதமாக   தாம்  சந்தித்த   கசப்பான  அனுபவங்களே  காரணம்   என்று  அது   வெளிவந்தவேளையில்   என்னிடம்   சொன்னார்.   வி.எஸ்.  துரைராஜா  தயாரித்து  வெளியிட்ட   குத்துவிளக்கு   படத்தை  ஒரு  நாள் கொழும்பு  கொட்டாஞ்சேனை  செல்லமஹால்  திரையரங்கில்   பார்த்துவிட்டு   எங்கள்  ஊர்   பிரமுகரும்   உறவினருமான    மயில்வாகனன்  மாமாவிடம்  அந்தப்படம்பற்றி  பிரஸ்தாபித்தேன்.

எங்கள்    பாடசாலை   பழையமாணவர்   மன்றம்  ஒரு   விஞ்ஞான  ஆய்வு  கூடத்தை   அமைப்பதற்காக   நிதிதிரட்டிக்கொண்டிருந்தபொழுது  மயில்வாகனன்   மாமா   ஒரு  நல்ல   ஆலோசனை  சொன்னார்.

“குத்துவிளக்கு    படத்தின்   மூலக்கதை   எங்கள்  சில்லையூருடையது   என்ற  பேச்சு  அடிபடுகிறது.   அவர்   எனக்கும்   உனக்கும்   நண்பர்.  அந்தப்படத்தை   நிதியுதவிக்காட்சிக்கு   காண்பிப்போம்”   என்றார்   மாமா.

பின்னர்   அவரே   பழைய  மாணவர்  மன்ற   உறுப்பினர்களை   கட்டிடக்கலைஞர்   வி.  எஸ்.  துரைராஜாவிடம்   அழைத்துச்சென்றார்.  நிதியுதவிக்காட்சிக்காக   ஈழத்து  தமிழ்த்திரைப்படத்தை   நாம்   தெரிவுசெய்தது   துணிச்சலான   செயல்   என்று   துரைராஜா   பாராட்டியதுடன்    படத்தை   இலவசமாகவே   தந்து  உதவினார்.   பின்னர்   சிலோன்  தியேட்டர்ஸ்   அதிபர்   செல்லமுத்துவை   அவரது  அலுவலகத்தில்   சந்தித்தோம்.

எமது   பணிக்கு   அவரது  நீர்கொழும்பு  ரீகல்   திரையரங்கை  தந்து  உதவவேண்டும்   என்றோம்.   எமது   நல்ல  நோக்கத்தை  புரிந்துகொண்ட   செல்லமுத்துää    ஒரு  சனிக்கிழமை   முற்பகல்  காட்சிக்கு  ரீகல்  தியேட்டரை  தந்துதவ  முன்வந்து   எம்முன்னிலையிலேயே  தொலைபேசி  ஊடாக  தியேட்டர்   முகாமையாளருக்கு   பரிந்துரைத்தார்.

திட்டமிட்டவாறு    குத்துவிளக்கு   படம்   நீர்கொழும்பில்  மண்டபம்  நிறைந்த   காட்சியாக   காண்பிக்கப்பட்டது.   தயாரிப்பாளர்  துரைராஜா   அவரது  நண்பர்  கண்சிகிச்சை   நிபுணர்  மருத்துவர்  ஆனந்தராஜா  மற்றும்  திரைப்படத்தில்   நடித்த  ராமதாஸ்,  ஜெயகாந்த்  உட்பட  வேறும்  சில  கலைஞர்களும்    வருகைதந்து  இடைவேளையின்பொழுது   அரங்கில்   தோன்றி  உரையாற்றினர்.

இந்தத்தகவல்களைத்தெரிந்திருந்த  சில்லையூரிடம்    ஒரு  நாள்  உரையாடியபொழுது,  தாம்  தமது  தணியாத  தாகம்   திரைப்படச்சுவடியை   அவசர  அவசரமாக  அச்சிட்டு  வெளியிட்டதன்  பின்னணிக்  காரணங்களைச்சொன்னார்.

தணியாத  தாகம்   கதையே   குத்துவிளக்கு   படம்   என்பது   சில்லையூரின்  வாதம். ஆனால்,   படம்   வெளியானபொழுது  கதை  துரைராஜா   என்றும்  வசனம்  ஈழத்து  இரத்தினம்   என்றும்  டைட்டிலில்   காண்பிக்கப்பட்டது.

சில்லையூர்    நீதிமன்றம்   வழக்கு    என்று  அலையவில்லை.   மிகவும்  துரிதமாக  தணியாத  தாகம்   திரைப்படச்சுவடியை   வெளியிட்டார்.

தமிழில்   முதல்  முதலில்  அச்சில்  வெளியான  திரைப்படச் சுவடி  தணியாத  தாகம்தான்   என்ற  புகழையும்   பெருமையையும்   பெற்றது.

கவியரசு  கண்ணதாசன்,  இயக்குநர்   பாலுமகேந்திரா  முதலானோரும்   குறிப்பிட்ட  திரைப்படச்சுவடியை   சிலாகித்துப்பேசியுள்ளனர்.

நானும்   முதல்  முதலில்   தமிழில்   பார்த்த  படித்த     திரைப்படச்சுவடி  சில்லையூரின்  தணியாத  தாகம்தான்.   அதன்பிறகுதான்  ஜெயகாந்தனின்   சிலநேரங்களில்  சில   மனிதர்கள்   முள்ளும்  மலரும்  மகேந்திரன்   எழுதிய  மெல்பன் நண்பர் நடேசனின்  வண்ணாத்திக்குளம்  ஆகிய  தமிழ்த்திரைப்படச் சுவடிகளை  பார்த்திருக்கின்றேன்.

திரைக்கதை    எழுதுவது   எப்படி?   என்று  சுஜாதாவும்   ஒரு   நூலை   எழுதியிருக்கிறார்.
திரைப்படச்சுவடி   எழுதுவதும்   ஒரு  நல்ல  கலை.   அதற்கு   தமிழில்  ஒரு  சிறந்த  முன்னோடி   எங்கள்  சில்லையூர்   செல்வராசன்.

ஊடகம்,  எழுத்து,   நடிப்பு,   திரைப்படம்,  விளம்பரம்,   விவரண  சித்திரம்   முதலான  துறைகளில்  தனது   ஆற்றலையும்  ஆளுமையையும்   வெளிப்படுத்தி  தனக்கென    தனித்துவமான   இடத்தை  தக்கவைத்துக்கொண்ட  சில்லையூருக்கு   அவரது  ஊர்மக்கள்   வழங்கிய  பல்கலைவேந்தன்     பட்டம்   சாலவும்  பொருத்தமானதுதான்.

தனது  எழுத்துலகிலும்  தனிப்பட்ட  வாழ்விலும்   அதிசயங்கள்  புரிந்த  சில்லையூருக்கும்  கமலினிக்கும்    பிறந்த   ஆண்குழந்தைக்குப்பெயர்   அதிசயன்.

மகன்  பிறந்த  செய்தியையும்   சூட்டிய   பெயரையும்  சில்லையூர்   சொன்னபொழுது  அவரை  வாழ்த்தியவாறே “   உங்கள்   புதிய  வாழ்வின்  அதிசயமா?  “ “  என்று  கேட்டேன்.
அவரது   கண்கள்   ஒரு  கணம்  மின்னியது.

வடமாகண  மக்களின்   விவசாயம்  குறித்து  கமம்   என்ற   விவரணப்படத்திற்கும்   வசனமும்    நடிப்பும்  வழங்கிய  சில்லையூர்  தமிழ், சிங்கள,  ஆங்கிலத்திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்.
கமம்   விவரணப்படம்   பெர்லின்   திரைப்படவிழாவில்   பாராட்டுப்பத்திரம்   பெற்றது.

தி   அட்வென்ஷர்ஸ்   ஒஃப்   டெனிஸி   பஃக்  (அமெரிக்கா)  த லாஸ்ட் வைஸ் றோய்   லோர்ட்   மவுண்ட்   பேர்ட்டன்    (அவுஸ்திரேலியா)     தஷடோ   ஒஃப்  த  கோப்ரா  (கனடா)  ஆகிய  ஆங்கிலப்படங்களிலும்    நடித்தவர்.

எஸ்.எஸ்.  சந்திரனின்  ஆதரகதாவ   சிங்களப்படத்தில்  தமது   மகன்   ஒருவருடன் தமிழ்த்தந்தை   பாத்திரமேற்று   நடித்துள்ளார்.   இந்தப்படம்   திரைக்குவருமுன்னர்    பத்திரிகையாளருக்கான   பிரத்தியேக   காட்சியை    திரைப்படக்கூட்டுத்தாபன     தரங்கணி     அரங்கில்   சில்லையூருடன்    இருந்தே   பார்த்து    ரசித்தேன்.

மனைவி  கமலினியுடன்   இணைந்து  நடித்த  படம்   ராமதாஸின்  கோமாளிகள்.   இந்தப்படங்கள்  வசூலிலும்   வெற்றிபெற்றவை.

தணியாத  தாகம்   திரைப்படச்சுவடியின்    நாடக   வடிவம்   இலங்கை  வானொலியில்   பல   மாதங்கள்   ஆயிரக்கணக்கான   நேயர்களினால்  விரும்பிக்கேட்கப்பட்டது.  அதில்  குமார்   என்ற   முக்கிய  பாத்திரத்தில்    நடித்த   கவிஞரும்   வானொலி  ஊடகவியலாளரும்   எனதும்   சில்லையூரினதும்   நண்பரான   சண்முகநாதன்  வாசுதேவன்  அவுஸ்திரேலியா   குவின்ஸ்லாந்தில்   ஒரு   புதுவருடப்பிறப்பு     நாளில்     தூக்கிட்டு   தற்கொலை  செய்துகொண்ட   செய்தி    அறிந்ததும்     இலங்கைக்கு  நான் முதலில்  தகவல்  தெரிவித்தது   சில்லையூரிடம்தான்.
தணியாத   தாகம்   நாடகத்தில்   சில்லையூர்     வழங்கிய     பாத்திரத்திற்கு    உயிரூட்டிய    கலைஞன்   வாசுதேவனின்     தற்கொலை   அவரது   நண்பர்களாகிய  எனக்கும்   சில்லையூருக்கும்   அதிர்வூட்டியது.

தமிழ்நாட்டில்   தஞ்சாவூரில்   டானியல்   மறைந்த   தகவலை   சில்லையூருக்கு   முதலில்   தெரிவித்தார்   டானியலுடன்   இருந்த   நண்பர்  இளங்கோவன்.    சில்லையூர்   அச்செய்தியை   என்னுடன்  பகிர்ந்துகொண்டதும்    பத்திரிகைகளில்   செய்தியை   பரவவிட்டேன்.

பின்னர்   எமது   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கமும்   கொழும்பு   வலம்புரி  கவிதா  வட்டமும் (வகவம்)  இணைந்து   24-04-1986  ஆம்  திகதி   ஒரு  போயா  தினத்தன்று  முஸ்லிம்  லீக்   வாலிப   முன்னணி   மண்டபத்தில்    நடத்திய   டானியல்   நினைவுக்கூட்டத்தில்   சில்லையூரும்   உரையாற்றினார்.

அதுவே   நாம்   சந்தித்துக்கொண்ட   இறுதி   நிகழ்ச்சி.

நான் 1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியா வந்துவிட்டேன். அதன்பிறகு
சில  வருடங்களில்  சில்லையூரும்   மறைந்துவிட்டார்.   அவரது  நண்பர்   கவிஞர்  கங்கைவேணியனின் ( கொழும்பு  மாநகர  சபை முன்னாள்  உறுப்பினர்)   முயற்சியினால்  பொரளை  கனத்தை  மயானத்தில்   அமைக்கப்பட்டுள்ள  நினைவுச்சின்னத்தை   கொழும்பு சென்று தரிசித்தேன்.    சில்லையூரின்    பெயர்சொல்லும்   அவரது   வாரிசு    அதிசயனை    கம்பன்  விழாவில்   தாயார்   கமலினியுடன்   சந்தித்து அணைத்துக்கொண்டேன்.

மீண்டும்    ஒரு சந்தர்ப்பத்தில்      இலங்கையில்   நின்றபொழுது     அதிசயனுடன்    தொலைபேசியில்   உரையாடினேன். தாய் கமலினி செல்வராசன் மறைந்த செய்திகேட்டதும் புதல்வன் அதிசயனுடன் பேசி ஆறுதல் சொன்னேன். கமலினி பற்றியும் ஒரு நினைவுப்பதிகை எழுதினேன்.

சில்லையூரின்  முதல்  மனைவியும்   பிள்ளைகளும்   கனடாவில்  வசிக்கிறார்கள்.

மனிதர்கள்   வேறுபாடுகளைக்கடந்து   இணையவேண்டும்   என்ற  சிந்தனையின்  வெளிப்பாடாக    சில்லையூர்  எழுதியிருக்கும்  இருசம   கோடுகள்   இணையும்   என்ற கவிதையுடன்   இந்தப்பத்தியை    நிறைவு   செய்கின்றேன்.

புகைவண்டிப்  பயணம்  புதியதோர் அனுபவம்
தண்டவாளங்கள்   சந்திப்பதில்லையா?
முன்னே  பார்த்தால்  முடியாது  போலத்
தெரிந்தது – ஆனாலோ   திரும்பிப்பார்த்தால்
ஒடுங்கி    ஒடுங்கி    நெருங்கி    நெருங்கி
எங்கோ  ஓர்   முனையில்    இரண்டும்  ஒருமித்தோர்
புள்ளியில   சங்கமம்   புரிதல்    தெரிந்தது
மனித   இனங்களே    மறுபடி   இணையப்
பாதையைத்    திரும்பியே    பாரீர்.
கடந்தகாலத்தை    நிகழ்காலத்துடன்
கலந்தெதிர்    காலத்தை     இருகோட்டிணைவாய்ப்
புனைந்திடலாகும்      புதிதாய்
பேதம்     அகற்றிடும்    போதம்     புலர்கவே
இருசம    கோடுகள்     இணையும்.

நினைக்கத் தெரிந்த மனதால் மறக்கவும் முடியாதல்லவா..?

அவ்வாறுதான் எனது நண்பர் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசனையும் அவர் பற்றிய நினைவுகளையும் மறக்க முடியாது.

letchumananm@gmail.com

https://thinakkural.lk/article/79495

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.