Jump to content

பாஜகவின் பரிதாப அரசியல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: பாஜகவின் பரிதாப அரசியல்!

spacer.png

 

ராஜன் குறை

பாரதீய ஜனதா கட்சிக்கென்று ஒரு கொள்கை உண்டு என்பதை முதலில் கூற வேண்டும். அது என்னவென்றால் ஒரு ஒற்றை இந்து கலாச்சார, மத அடையாளம் கொண்ட இந்தியா ஒரு வல்லரசு நாடாக, உலக நாடுகளிடையே வலிமை வாய்ந்த நாடாக விளங்க வேண்டும் என்பதுதான் அது. இது நல்லதுதானே என்று பலருக்கும் தோன்றும். ஒற்றுமை, வலிமை என்பதெல்லாம் நல்ல விஷயங்கள்தானே என்று யாரும் நினைப்பார்கள். இந்த ஒற்றுமை சமத்துவத்தின் அடிப்படையில் உருவானதா அல்லது ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் உருவானதா என்பதே கேள்வி. இந்த வலிமை தேசத்தின் வலிமையா அல்லது அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் வலிமையா என்பதும் முக்கிய கேள்வி.

சமத்துவத்தை அங்கீகரிக்கும் ஒற்றுமை, தனித்த அடையாளங்களைப் பன்மையை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கும். ஏற்றத்தாழ்வை, படிநிலையை ஆதாரமாகக் கொண்ட ஒற்றுமை பன்மையை, தனித்துவத்தை மறுத்து ஒற்றை அடையாளத்தையே வலியுறுத்தும். அதாவது பாஜக ஒற்றை அடையாளம் என்று சொல்லும்போது அவர்கள் பிற அடையாளங்கள் இருக்கவே கூடாது என்று சொல்ல மாட்டார்கள். மற்ற அடையாளங்கள் மேலாதிக்க அடையாளத்துக்குக் கட்டுப்பட்டதாக, உறுத்தாததாக, இந்த வல்லரசு திட்டத்துக்கு ஒத்துழைப்பதாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள்.

உதாரணமாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இஸ்லாமியர் என்பதிலோ, தமிழர் என்பதிலோ பிரச்சினை இல்லை. ஆனால், அவர் இஸ்லாமியர்களின் நலன், அவர்கள் பிரச்சினைகள், உரிமைகள் என்றெல்லாம் பேசாமல், அணுசக்தி, வல்லரசு இந்தியா என்று பேசியதால் அவரை நேசிப்பார்கள். வேறு விதமாகச் சொன்னால் எல்லா அடையாளங்களும் தேசிய அடையாளத்தினுள் உருகி கலந்துவிட வேண்டும்.

மானுடவியலாளர் கிளிஃபோர்ட் கீர்ட்ஸ் தேசிய ஒற்றுமைக்கு இரண்டு விதமான உருவகங்களை சாத்தியமாகக் கூறினார். ஒன்று “சாலட் பெளல்”. மற்றொன்று “மெல்டிங் பாட்”. நேருவும் காங்கிரஸும் ஓரளவு சாலட் பெளல் என்னும் காய்கறிகளோ, கனிகளோ தனித்தனியாகவே சேர்ந்து இருக்கும் கிண்ணத்தில் இருக்கும் ஒற்றுமையை ஏற்றுக்கொண்டார்கள். இந்துத்துவ சிந்தனை “மெல்டிங் பாட்” என்னும் குழம்பு சட்டியில் கொதிக்கவிட்டு அடையாளம் தெரியாமல் கரைக்கும் ஒற்றுமையையே விரும்பியது.

தமிழகத்தின் வித்தியாசம்

பாரதீய ஜனதா கட்சியின் மூல அமைப்புகளான இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க் என்னும் ஆர்எஸ்எஸ் போன்றவை தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பே வேர்விடவில்லை. காரணம், வடநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு இந்து அடையாளத்தை மராத்திய பார்ப்பனர்களால் உருவாக்க முடிந்தது. தமிழகத்திலோ சைவ, வைணவ மதங்கள் கூட பார்ப்பன எதிர்ப்பை உள்வாங்கியிருந்தன. அது தவிர பெளத்த, சமண சிந்தனைகள், அவைதிக மரபுகள் ஆகியவற்றின் தாக்கங்களும் தமிழ் பண்பாட்டில் ஊறியிருந்தன. தமிழகத்தில் பதினேழாம் நூற்றாண்டில் உருவான தஞ்சை மராத்திய அரசு கூட பார்ப்பன பேஷ்வாக்களின் ஆதிக்கத்திற்குள் போகவில்லை. மாறாக ஐரோப்பிய கல்வி பயின்ற சரபோஜி அதன் முக்கிய மன்னராக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பதவியேற்றார். இவ்வாறான நெடுங்கால வரலாற்றுக் காரணங்களால் தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பகுத்தறிவு சிந்தனைகளும், பார்ப்பன எதிர்ப்பு சிந்தனைகளும் உருவாயின. அதன் முக்கியமான பகுதியாக சம்ஸ்கிருதத்தை மூல மொழியாக கருதாமல், தமிழின் தனித்துவமான வரலாற்றை முன்மொழியும் சிந்தனைகளும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள், உள்ளூர் சிந்தனையாளர்கள் கூட்டுறவில் மலர்ந்தன.

வடநாட்டில் பெருவாரியாக புழங்கிய ஹிந்துஸ்தானி பேச்சு மொழியில் உருது கலந்திருந்தது. உருது மொழி இஸ்லாமியர்களுடையது என்று கருதிய பார்ப்பனர்கள், ஹிந்துஸ்தானி மொழியிலிருந்த உருது கலப்பை சுத்திகரித்து, சம்ஸ்கிருத வேர்களால் நிரம்பிய இந்தி மொழியை உருவாக்கினார்கள். இந்த இந்தி மொழியே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று நினைத்தார்கள். காந்தி மக்களிடையே புழங்கிய ஹிந்துஸ்தானியை பொது மொழியாகலாம் என்று கூறினாரே தவிர உருது நீக்கம் செய்யப்பட்ட சம்ஸ்கிருத இந்தியை ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் இந்த இந்தியைத் திணிக்க 1937இல் இரட்டையாட்சி முறையில் பதவியேற்ற ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு முயன்றபோது, ஏற்கனவே பரவலாக இருந்த பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத மேலாதிக்கத்திற்கான எதிர்ப்பு, தமிழுணர்வு ஆகியவை இந்தி எதிர்ப்பாகவும், வடநாட்டு ஆதிக்கத்தின் எதிர்ப்பாகவும் மாறியது. இது 1944இல் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் தோன்றியபிறகு திராவிட நாடு கோரிக்கையாக மாறியது.

தமிழகத்தில் வெகுகாலம் மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட சைவ, வைணவ சமயங்களும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும், மிக ஆழமான தமிழ் பக்தி மரபைக் கொண்டவை. வட இந்திய இந்து மத அமைப்புகளிலிருந்து வேறுபட்டவை. தமிழகத்தில் மக்களால் பரவலாக வழிபடப்படும் தெய்வங்களும் தனித்துவமானவை. சோமசுந்தர பாரதியார் போன்ற சைவ தமிழறிஞர்கள், பார்ப்பனர்களின், சமஸ்கிருதத்தின், இந்தியின் மேலாதிக்கத்தை ஏற்காதவர்கள். இதன் பொருட்டு இவர்கள் நாத்திக வாதம் பேசிய பெரியாருடன் நட்பு பாராட்டினார்கள். இதைத்தொடர்ந்து சுதந்திரத்திற்குப் பிறகு சாமானிய மக்களை அணிதிரட்டி, அரசியல் கட்சி அமைப்பை உருவாக்கி தேர்தல் களம் புகுந்த திராவிட முன்னேற்றக் கழகம் பார்ப்பன, இந்தி மொழி, வடநாட்டு ஆதிக்க எதிர்ப்பை பரவலாக்கியது. அதனூடாக சமூக நீதி சிந்தனைகளை வேர்பிடிக்க வைத்தது.

இந்தி மொழி திணிப்பும் ஜனசங்கமும்

 

இன்றைய பாரதீய ஜனதா கட்சி 1977-க்கு முன்னால் ஜனசங்கம் என்றுதான் அழைக்கப்பட்டது. ஐம்பது அறுபதுகளில் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும், ஆங்கிலம் நீடிக்கக்கூடாது என்று நேருவின் காங்கிரஸ் அரசிற்கு அழுத்தம் கொடுத்ததில் ஜனசங்கத்தின் பங்கு முக்கியமானது. தமிழகத்திலோ இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக மாறக்கூடாது, ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருந்தது. தமிழக காங்கிரஸிற்கு தி.க. தி.மு.க கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த திராவிட கோரிக்கைக்கு நேர் எதிரியாக விளங்கியது ஜனசங்கம். காங்கிரஸ் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அழுத்தத்தையும், வடநாட்டில் ஜனசங்கத்தின் அழுத்தத்தையும் சந்திக்க வேண்டி இருந்தது. இந்த பிரச்சினை 1965 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாணவர் கிளர்ச்சியாக தமிழகத்தில் வெடித்தது. சின்னச்சாமி, அரங்கநாதன் என பலர் தீக்குளித்து மாண்டார்கள். பரவிய கிளர்ச்சி அலைகளில் போலீஸ் மற்றும் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு பலர் பலியானார்கள். இறுதியில் காங்கிரஸ் அரசு பணிந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்ற கழகம் தமிழக பள்ளிகளில் இந்தி போதிக்கப்பட மாட்டாது என்றும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளே பயிற்றுவிக்கப்படும் என்ற இருமொழிக்கொள்கையை அறிவித்தது. தமிழகத்தின் அன்றைய கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்க்க விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த இயக்கம்தான் இன்றைய பாஜக-வின் அன்றைய வடிவம் ஜனசங்கம். ஆனால் தமிழகத்தில் ஐம்பதாண்டுகளாக நடைபெறும் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி, இந்தி திணிப்பு என்பதை முற்றிலும் சாத்தியமற்றதாக செய்தன. மக்களின் பேராதரவும் அவற்றுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய தமிழக பாஜக-வின் தவிப்பு

எப்படியோ காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களைப் பயன்படுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாரதீய ஜனதா கட்சிக்கு, அனைத்து மாநிலங்களிலும் தாங்களே ஆளவேண்டும்; மொத்த இந்தியாவையும் தாங்கள் விரும்பும் ஒற்றை இந்துத்துவ அடையாளத்திற்குள் கொண்டுவர வேண்டும்; தங்களை ஆதரிக்கும் பெருமுதலாளிகளின் செயல்பாடுகளுக்கு முழு நாட்டையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் தமிழகம் மட்டும் அவர்கள் வசம் சிக்காமல் இருக்கிறது.

தமிழகத்திலுள்ள இரண்டு கட்சிகளில் தி.மு.க தீவிரமாக திராவிடக் கருத்தியலை பேசுவது. அதில் மாநில சுயாட்சி, பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு, சமஸ்கிருத-இந்தி ஆதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, மக்கள் நல சிந்தனை ஆகியவை முக்கியமானவை. அதற்கு மாற்றாக உருவான அ.இ.அ.தி.மு.க எப்போதுமே இந்திய நடுவண் அரசுடன் இணங்கிப்போக முனைவது. ஜெயலலிதாவின் இருபத்தைந்தாண்டு தலைமையில் கொள்கை வலுவற்ற சுயநல சக்திகளின் கூடாரமாக மாறிப்போன கட்சி அ.இ.அ.தி.மு.க. ஆனாலும் அது தி.மு,க-வுடன் களத்தில் போட்டியிட வேண்டியிருப்பதால் தானும் திராவிட அரசியலை பேசியாக வேண்டிய நிலையில் உள்ள கட்சி.

இந்த நிலையில் சுப்ரமண்ய சுவாமி ‘தி.மு.க ஆட்சிக்கு வராமல் தடுப்பதுதான் முக்கியம். அதனால் அ.இ.அ.தி.மு.க-வை வலுப்படுத்தி அதன் பின்னணியில் இருப்பதுதான் பாரதீய ஜனதா கட்சிக்கு நல்லது’ என்று நினைக்கிறார். ஆனால் பிற பாஜக-வினருக்கு ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகான அ.இ.அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தி அந்த இடத்தை தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்று ஆசை. எப்படியாவது தி.மு.க-வின் எதிரி தாங்கள்தான் என்ற நிலை வந்துவிட்டால் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் தி.மு.க-வை தோற்கடித்து ஆட்சிக்கு வந்துவிடலாம். அப்படி வந்துவிட்டால் தமிழகத்தின் தனித்துவத்தையும் இந்துத்துவ குழம்பில் போட்டு கரைத்துவிடலாம் என்று ஒரு ஆசை. இந்த எதிர்கால திட்ட த்திற்காக உடனடியாக நிகழ்காலத்தில் அ.இ.அ.தி.மு.க-வை ஒரேடியாக பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை.

 

அதனால் அவர்களே திடீரென ஊழல் ஆட்சி என்பார்கள். கோட்டையிலேயே ரெய்டு நடக்கும். பின்னர் அவர்களே ஆட்சியின் சாதனைகளை பாராட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்துவதும் தேவையென நினைப்பார்கள்; ஆனால் அவருடன் கூட்டணி வைக்கவும் முனைவார்கள். நான்கு ஆண்டுகளாக இந்த ஓயாத தவிப்பில், குழப்பத்தில் இருக்கிறார்கள். இது எந்த அளவு செல்கிறது என்றால் இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரத்திற்கு வரவேண்டாமே என்று அ.இ.அ.தி.மு.க பாரதீய ஜனதாவிடம் கோரிக்கை வைக்குமளவு இருக்கிறது. அதாவது ஆளும் கட்சி அவர்கள் பிடியில் இருந்தாலும் அதைக் கொண்டு அவர்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறமுடியவில்லை. களமட்டத்தில் ஊடுருவ கடுமையாக முயன்று வருகிறார்கள். தாதாக்களை, ரெளடிகளை கட்சியில் சேர்த்து வலுச்சேர்க்க பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் நூறாண்டுகால திராவிட இயக்க வேர்களை பெயர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.

திரையுலக பிரபலம் குஷ்பு காப்பாற்றுவாரா?

இந்த தவிப்பின் உச்சத்தில்தான் சமீபத்தில் முன்னாள் திரை நட்சத்திரம் குஷ்புவை காங்கிரஸ் கட்சியிலிருந்து கவர்ந்திழுத்து மிகுந்த ஆரவாரத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது தமிழக பாஜக. எல்லா ஊடகங்களும் குஷ்பு எப்படி நேற்றுவரை காங்கிரசில் இருந்துவிட்டு, பாஜகவை விமர்சித்துவிட்டு இன்று பாஜகவிற்கு போகலாம் என்று கேட்டனவே தவிர, இவ்வளவு பெரிய தேசிய கட்சி, கொள்கை குன்றாக தேசபக்த சுடராக தன்னை வர்ணித்துக்கொள்ளும் கட்சி எப்படி தங்களை கடுமையாக விமர்சித்து வந்த ஒருவரை அவர் திரை நட்சத்திர பிரபலத்தை மட்டும் கணக்கில் கொண்டு கட்சியில் ஆரவாரமாக சேர்த்துக் கொள்ளலாம் என்று கேட்கவில்லை. புதுடெல்லியில் கூட்டிப்போய் சேர்த்ததும், தமிழகத்தில் அவருக்குக் கொடுத்த வரவேற்பும், ஊடக வெளிச்சமும் பாஜக எவ்வளவு பரிதாபமான நிலையில் இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. குஷ்பு இதுவரை தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தாலும் கட்சி பொறுப்புகளில் இருந்ததில்லை. செய்தித் தொடர்பாளராக இருந்தார். தேர்தல்களில் நின்றதில்லை. மக்களிடையே பணியாற்றுபவர் இல்லை. அவர் ஒரு ஊடக பிரபலம். அவ்வளவுதான். அவர் கட்சியில் இணைவதை பாரதீய ஜனதா கட்சி அரங்கேற்றிய விதம்தான் வியப்பாக இருக்கிறது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது சொல்வடை. ஆனால் பாரதீய ஜனதா துரும்பையே ஓடமாக்கி பயணம் செய்துவிடலாம் என்று நினைக்குமளவு தமிழகத்தில் பலவீனமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

 

https://minnambalam.com/politics/2020/10/19/6/bjp-politices-in-tamilnadu-kushboo

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.