Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?


Recommended Posts

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

 

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:25

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். 

இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர்,  ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான். 

இன்று, அந்தப் புரட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டியிருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.  இப்போது ‘எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன’ என்ற பழைய பல்லவியை, திரும்பத் திரும்பக் கேட்கிறோம். ஆனாலும், இன்றும் இலங்கையின் வடபுலத்தில் புரையோடிப் போயுள்ள ஒரு சமூகப் பிரச்சினை சாதியம் சார்ந்தது. நுழையமுடியாத கோவில்கள், பிடிக்க முடியாத வடங்கள், பாட அனுமதியில்லாத தேவாரங்கள் எனக் கடந்த சில ஆண்டுகளில், எத்தனையோ உதாரணங்களைக் கண்டிருக்கிறோம். இனியாவது, பேசாப் பொருளைப் பேசத் துணிவோம். 

அண்மையில், இதே ஒக்டோபர் மாதத்தில், கிளிநொச்சியின் பெரிய பரந்தனில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில், பாடசாலை மாணவனுக்கு, அவனது சாதிய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, தேவாரம் பாடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இது தனித்த நிகழ்வல்ல. 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், முன்புபோல இன்றும் தமிழ்ச்சமூகத்தில் தகர்க்கப்படாத அம்சமாக இருப்பது சாதியமே. தமிழ் மக்கள், சொல்லொணாத் துயரங்களைக் கடந்த 40 ஆண்டுகளில் அனுபவித்துள்ளார்கள். உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அகதிமுகாம் வாழ்க்கை என எல்லாவற்றிலும், அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகள் தலைமைப் பாத்திரமேற்ற போராட்டத்திலும், சாதியம் தகர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. 

இலங்கைச் சமூக அமைப்பின் அசைவியக்கத்தில், சாதியம் ஒரு கூறாக நிலைத்து, நீடித்து வந்துள்ளது. குறிப்பாக, இலங்கைத் தமிழர்களிடையே சாதியமும் அதன் உடன்பிறப்பான தீண்டாமையும், தீவிரமான சாதிய முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் இருந்து வந்துள்ளன. 

இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமொன்று, இதே வடபுலத்தில் வெற்றியடைந்த கதையை, அடுத்த தலைமுறைக்குச் சொல்லியாக வேண்டும். 1966ஆம் ஆண்டு ஒக்டோபரில், வடபுலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன. 

1966-71 வரையான காலப்பகுதியில், நடத்தப்பட்ட கடுமையான போராட்டங்களால், இலங்கையின் வடபுலத்தில் பொது இடங்களில், தீண்டாமை ஒழிக்கப்பட்டதுடன் சாதியத்தின் தீவிரமும் பலமான எதிர்வினைகளின் மூலம் பலமிழக்கச் செய்யப்பட்டது. ஈழத்தமிழர் வரலாற்றின் சில முக்கியமான பக்கங்களை, இப்போராட்டங்களும் அதுசார்ந்த அரசியல் நிலைப்பாடுகளும் நிரப்பியுள்ளன. ஆனால், இன்றும் ‘அடக்கி வாசிக்கப்படுகின்றது’, ‘இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது’ என்றவாறாகவே, இந்த வரலாறு இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையின் பெயரால், இந்த மறைப்புகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், இவை கட்டாயம் பேசப்பட வேண்டியவை. 

மனிதனை மனிதன், சாதியத்தின் பேரால் ஒடுக்குகின்றதும், புறந்தள்ளுகின்றதுமான ஒரு சமூகம், அரசியல் விடுதலைக்கு இலாயக்கற்றது. சமூக விடுதலையை பெறாத, சமூகநீதியை வலியுறுத்தாத ஒரு சமூகம், அரசியல் விடுதலையைப் பெற்றுவிட முடியாது. அகஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவராமல், புறஒடுக்குமுறைகளின் பேரால், ஈழத்தமிழ்ச் சமூகம் அகஒடுக்குமுறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ச்சியாகப் பணயிக்க முடியாது.  

செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குழுவினருக்கான அடையாளத்தை மட்டுமின்றி, அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு விடயங்களை, அவர்கள் மறுதலிக்க முடியாதவாறு தீர்மானிக்கின்ற சமூகக் கட்டமைப்பாகச் சாதியம் தோற்றம் பெற்றது. இது, கீழைத்தேய குழு வாழ்க்கை முறையின் பாதகங்களின் ஒன்றாகும். 

இச்சமூகக் கட்டமைப்பு, தேசிய அரசுகளின் தோற்றத்துடன், எவ்வாறு அரச அதிகாரக் கட்டமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பதைப் பார்த்தால், தேசிய அதிகாரத்தின் உருவாக்கமும் நிலைப்பும் சாதியக் கட்டமைப்புகளுக்கூடாக இயங்குவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஏனெனில், இந்தப்பிரிவுகள் சமூகங்களில் நிலைப்பதை, ஏகாதிபத்திய உலகமயமாதல் விரும்புகிறது. தமிழ் மக்களின் அரசியலும் போராட்டமும் வாழ்க்கையும் பண்பாட்டுக் கூறுகளும், சாதியத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டவையாகவும் அதனடிப்படையில் வழிநடத்தப்படுபவையாகவே இன்றும் இருக்கின்றன. இதன் பின்புலத்தில், 1960களில் நடந்த சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தல் தகும். 

அஹிம்சை வழியில் போராட்டம், சத்தியாக்கிரகம் எனத் தமிழ்த் தேசிய அரசியல், பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்களின் பரந்துபட்ட எழுச்சியுடன், வடபுலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கப்படக் கூடாத பக்கங்களை உடையன. 

சுமார், ஐந்து (1966-71) வருடங்கள் நீடித்த வெகுஜனப் போராட்டங்கள், சாதியத் தீண்டாமையை உடைத்தெறிந்தன. தேநீர்க் கடைகள், கோவில்கள், பாடாசாலைகள், பொது இடங்களில் சமத்துவமும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டன. சட்டரீதியாகவும் சட்டமறுப்பாகவும் ஆயுதங்களைக் கையாண்ட அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களில், 15 பேர் தமது இன்னுயிர்களை இழந்து, தியாகிகள் ஆகினர். 46 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற ஒக்டோபர் எழுச்சியும் அதன் பாதையிலான போராட்டங்களும், பெறுமதிமிக்க அனுபவங்களையும் பட்டறிவுகளையும் தந்துள்ளன. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம், பின்னடைவைச் சந்தித்திருக்கும் இன்றைய சூழலில், அன்றைய புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் அனுபவங்கள், மிகக் கனதியும் பெறுமதியும் மிக்கவையாகும்.

சாதிய மறுப்பே, இன்றும் யாழ். உயர்சாதியினரின் ஆயுதமாக இருக்கிறது. அவர்கள் இன்றும், பழைமைவாதத்தையும் சாதியத்தையும் கொண்டிருப்பவர்களைத் தூக்கி நிறுத்திப் புகழ் பாடுகிறார்கள். அதேவேளை, அவற்றுக்கு எதிரான கருத்துக்களை நிராகரிப்பதுடன், இருட்டடிப்பும் செய்கிறார்கள். உதாரணமாக, பொன்னம்பலம் இராமநாதனைப் போற்றிப் புகழுவோர், அவரது தம்பியான அருணாசலத்தைக் கவனிப்பதில்லை. காரணம், தனது சூழலையும் மீறிய வகையிலான சமூகச் சார்புக் கருத்துகளை, அருணாசலம் முன்வைத்தமையே ஆகும். 

அவ்வாறே, எஸ்.ஜே.வி செல்வநாயகம் சாதியத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்று கூறும் தமிழ்த் தேசியவாதிகள், அவரது காலத்தில், கண்ணெதிரே இடம்பெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி வாயே திறப்பதில்லை. சாதியம், இழிவாகவும் ஒடுக்கு முறையாகவும் இருப்பதையிட்டுத் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதை அம்பலப்படுத்துவதும் எதிர்த்துப் போராடுவதும் தான், அவர்களுக்குப் பிரச்சினையாகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், இச்சாதியம் இப்போதும் பேணப்படுவதைக் காணலாம். இவை, வளமான ஒரு சமூகத்தின் நற்கூறுகளல்ல. 

சாதியத்தின் தாக்கம் என்பது, ஒடுக்கப்பட்ட சாதியினரின் பிரச்சினைகள் தான். ஆனால், அதற்கு எதிரான போராட்டங்களும் தீர்வுகளும் அவர்களுக்குரிய பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலல்ல. சாதியம் என்பது, இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள விசேட சமூகக் கட்டுமானமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. அதிலும், இலங்கையின் சாதியக் கட்டமைப்பு, இந்தியக் கட்டமைப்பிலும் வேறுபட்டதாகும்.

இலங்கையிலும் வடக்கு, சாதியக்கட்டமைப்பு கிழக்கிலிருந்து வேறுபடுவதுடன் சிங்கள, மலையகத் தமிழ் மக்களிடமும் முஸ்லிம்களிடமும் வித்தியாசமான சாதியம் இருப்பதை அவதானிக்க முடியும். ஆனால், ஒடுக்கப்படும் சாதிகளும் ஒடுக்கும் சாதிகளின் ஆதிக்கமும் அரசியலிலும் பொருளாதார சமூகப் பண்பாட்டு அம்சங்களிலும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான அம்சமாகும்.

தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் என்ற பொதுவான கோஷத்துக்குள், சாதியம் முற்றாக தகர்க்கப்படாது மறைக்கப்படுகிறது; மறைந்து கொண்டுள்ளது. பொதுவாக, தேசிய அரசுக்கான  அல்லது சுயாட்சிக்கான போராட்டம் என்பதால் மட்டும், அதற்குச் சாதியத்தைத் தகர்க்கும் வலிமை வந்து விடுவதில்லை. ஏனெனில், தேசிய அரச அதிகாரம் கொலனித்துவ, ஏகாதிபத்திய அதிகாரம் ஏகாதிபத்திய உலகமயமாதலின் ஆதிக்கம் ஆகியன வேறுவேறு விதங்களில், சாதிய சமூகக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொள்கின்றன. 

சமூக மாற்றத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டங்களே, உண்மையான சாதியத் தகர்ப்பைக் கொண்டிருக்க முடியும். அதற்கான கொள்கை நடைமுறைகளே, வெறும் சுலோகங்களையும் வார்த்தைகளையும் விட, அர்த்தம் நிறைந்ததாகும். போராட்டங்களின் பொதுவான போக்கும் எதிர்பார்ப்பும் ஆயுத நடவடிக்கைகளும் சாதியமைப்பை வலுக்குறைந்துள்ளதாகத் தோன்றினாலும், அது உண்மையல்ல என்பதை, இன்று நடைமுறையில் காண்கிறோம்.

போர் ஓய்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. கடந்த பத்தாண்டுகளில், சாதியம் மீண்டும் முனைப்புப் பெற்றுள்ளது. அதனிலும் மேலாக, இப்போது அது வெளிவெளியாகத் தென்படுகிறது. நாங்கள் மீண்டும் பழைய காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். வடபுலத்தில் இன்னொரு தீண்டாமை ஒழிப்பு, வெகுஜன இயக்கத்துக்கான தேவை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்றும் பேசாப் பொருளாய், பேச விரும்பாத ஒரு பொருளாய் சாதியம் தமிழ்ச்சமூகத்தில் இருக்கிறது. எமது மனங்களில் ஆழப்பதிய வைக்கப்பட்ட எண்ணங்களில் இருந்து, நாம் வெளிவரல் வேண்டும். சமூகநீதி குறித்துப் பேசாமல், செயலாற்றாமல் தமிழ் மக்களின் விடுதலை என்று பேசுவது பயனற்றது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்ச்-சமூகத்தில்-சாதியம்-பேசாப்-பொருளை-பேச-நாம்-துணிவோமா/91-257440

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.