Mike-Pompeo-600-300x250.pngமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது.

பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில்லை என்பதையும் அது உண்ர்த்தியது. 

நேற்றைய தினம் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தினார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற வகையிலான அவரது கருத்து நிச்சயமாக சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்திருக்கும்.

“நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்ட மீறல்களையும் கொண்டுவந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார். 

இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமாண உதவிகளைச் செய்துவரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது. 

சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட டுவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை மையப்படுத்தி இரு நாடுகளும் இவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. 

இலங்கை எந்தளவுக்கு நிதானமாக நடுநிலை தவறாமல் நடந்துகொள்கின்றது என்பதில்தான் இதற்கான பதில் அமைந்துள்ளது. 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல் படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

“விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக்காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன.

அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்கமுடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது!

https://thinakkural.lk/article/84249