தமிழக மீனவர்கள் கேரள கடற்பரப்புக்குள் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் மலையாளிகள் அடித்து இவர்களை விரட்டி விடுவார்கள் என்று தெரியும், புத்தளம் போன்ற பகுதி கடற்பரப்புக்குள் கூட செல்ல மாட்டார்கள், சிங்கள மீனவர்கள் விரட்டி விடுவார்கள் என்ற பயம் (ஆனால் மன்னார் தமிழ் மீனவர்கள் செல்ல முடியும்). இவர்கள் வருவது எல்லாம் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் மட்டுமே.
யுத்தகாலத்தில் தமிழ் மீனவர்களின் எல்லை மிகச் சுருங்கி இருந்தது. ஆழ்கடல் மீன் பிடிப்பு அறவே இல்லாமல் இருந்தது. யுத்தகாலப் பகுதியில் தமிழக மீனவர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான இந்த ஆழ்கடல் எல்லாம் மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இப்ப யுத்தம் இல்லாமையால் வடக்கு தமிழ் மீனவர்கள் தமக்குரிய கடற்பரப்பில் மீன் பிடிக்க முனையும் போதுதான் இந்த பிரச்சனை பெரியளவில் வெடிக்கின்றது.
30 வருட யுத்தத்தாலும், சுனாமியாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எம் மீனவர்களின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்லாமல், மீன்வளத்தையே நாசம் செய்யும் தமிழக மீனவர்கள் வந்து கொள்ளையடித்து போகட்டும் என்று சொல்லும் அளவுக்கு உடையார் போன்றோருக்கு தமிழக விசுவாசம் பெருகியிருப்பது தான் வேதனை.
இது வரை காலத்தில் ஒரு தமிழக அரசியல் தலைவர்களாவது, ஆகக் குறைந்தது ஈழத்தமிழர்கள் மேல் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு தமிழக தலைவர்களோ செயற்பாட்டாளர்களோ, தமிழக பிரமுகர்களோ, தமிழக மீனவர்களைப் பார்த்து, ஈழத்தமிழர்களின் மீன் வளத்தை அடாத்தாக பறிக்க வேண்டாம், எல்லை தாண்டி அவர்களின் கடற்பரப்பிற்குள் (கரையில் நின்று பார்த்தாலே தெரியக் கூடிய அளவுக்கு) சென்று, கடல்தாயின் அடி வயிற்றில் இருந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டும் உபகரணங்கள் கொண்டு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு இருக்கின்றார்களா?
சிங்களம் இதனை சரியாக பயன்படுத்துகின்றது. அது அப்படித் தான் செய்யும். சிங்களத்திற்கு இருக்கும் பயங்களில் பெரிய பயமே தமிழர்களின் அருகில் தமிழகம் இருப்பதுதான். இப் பிரச்சனையை சிங்களம் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்தும், எனவே அவர்களின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம், தமிழக + ஈழ மீனவர் உறவு இதனால் கெட்டு விடும் என்றாவது எந்த தமிழக அரசியல்வாதிகள் / தலைவர்கள் தம் மீனவர்களை நோக்கி கூறி அறிவுறுத்தி உள்ளார்களா?
அவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால் மிகவும் நலிவுற்று இருக்கும் ஈழத்தமிழ் மீனவர்கள் தான் மேலும் மேலும் குனிந்து போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
நலிந்தவன் முதுகில் சவாரி செய்வது தொப்புள் கொடி உறவுகளாலும் நடைபெறுவது தான் யதார்த்தம்.
Recommended Posts