Jump to content

லெப். கேணல் ஞானி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் ஞானி

Commander-Lieutenant-Colonel-Gnani.jpg

வெல்வோமெனச் சென்று வென்றவள்:

கப்டன் அன்பரசி படையணி துணைத் தளபதி லெப். கேணல் ஞானி

சகல ஆயத்தங்களோடும் தயாராவிட்ட ஒரு போர்ப்பயணத்திற்கு இறுதிக்கணங்கள் அவை, கூட்டங்கூட்டமாக கூடிநின்று ஆடியும், பாடியும், பேசிக்களித்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் போராளிகள். ஒரு திசையிலிருந்து பல குரல்கள் ராகத்தோடு எழுகின்றன.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு
வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்”
என்று ஒலித்த அந்தக் குரல்களையும் மீறி,

“வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் வெல்லுவோம் போங்கள்”

என ஓங்கி ஒலித்தது ஒரு குரல், அந்த இனிமையானதும் உறுதியானதுமான, நம்பிக்கையோடு எல்லோரையும் மீண்டும் சேர்ந்து பாடவைத்ததுமான குரலுக்குரியவள் தான் லெப்.கேணல் ஞானி.

தென்தமிழீழத்தில் சிறீலங்கா அரச படைகளினதும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதி அது. சுற்றிவளைப்புக்களும், இளைஞர், யுவதிகள் கைதாவதும், காணாமல் போவதும், கண்டகண்ட இடங்களில் எல்லாம் சுட்டு வீசப்படுவதும், வீதிகளில் இரத்த ஆறு பாய்வதும் வழமையான செயற்பாடுகளில் ஒன்றாகிப்போனது. இவைகளுடன் அயற் கிராமமான கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் சேர்ந்து அன்றைய ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சூரியாவும் (பேரின்பநாயகம் சூரியகுமாரி) இன்றைய எமது லெப். கேணல் ஞானியுமான இவளுக்கு விடுதலைப் போராட்டத்திற்கான அத்திவாரக் கற்களாக அமைந்தது.

தொண்ணூறின் (1990) இறுதிப் பகுதியில் மட்டு – 02 பயிற்சிப் பாசறையுள் நுழைந்து, பல சிரமங்களுக்கு மத்தியில் கஸ்ரப்பட்டு சூழ்நிலைக்கேற்ப தன்னை புடம்போட்டுக்கொண்டு பயிற்சியெடுத்தவளைப்பற்றி இன்றும் அவளுடன் பயிற்சியெடுத்த போராளிகள் கதை கதையாய் கூறுகின்றனர். அவர்களுள் ஒருத்தி ஞானியுடனான தன் பயிற்சிக்கால நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றாள்.

‘அங்க கொட்டில் அடிக்கிறதில இருந்து கிணறு வெட்டுறதுவரை நாங்கள் தான், ஞானி நல்லா மாஞ்சு வேலை செய்யும், என்ன வேலை செய்தாலும் நல்லாத்தான் இருக்கும், எங்கட பயிற்சி நேரம், எங்கடமுகாம் இருந்த பகுதிகள் எல்லாம் இராணுவம் சுற்றி வளைச்சு, காடு காடா ஓடித்திரிஞ்சு தான் பயிற்சியெடுத்தம், ஒரு முறை எங்கட பழைய இடத்தில் இருந்து இராணுவம் பின்வாங்கிப் போய்விட்டது எண்டாப்போல, நாங்கள் திரும்பி எங்கட இடத்திற்கு போவம் எண்டு போனம். ஒருத்தருக்கும் இருபது நாளா சாப்பாடே இல்லை. காட்டில் உள்ள மிருகங்களை அடிச்சு, உரிச்சு உப்புப்போட்டு அவிச்சுத்தான் சாப்பிட்டது. எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுறது. அந்தப்பகுதியிலே மிருகங்களும் இல்லாமப்போச்சு, பின்னே இருபது நாளா பட்டினிதான். எல்லோருக்குமே சரியான களை. போய் ஒரு இடத்தில் எல்லோரும் படுத்திட்டம்.

இரவோட இரவா இராணுவம் எங்களைச் சுற்றிவளைச்சிட்டுது. எங்களுக்குத் தெரியாது. விடியவும் தான் தெரிஞ்சு அந்த இடத்தில நல்ல சண்டை. அப்ப நாங்கள் புது ஆக்கள் தானே. காயக்காரரையும் தூக்கிக்கொண்டு திரும்பி நின்ற இடத்திற்கு ஓடினோம். காயக்காரரை கட்டுவதற்கோ, தூக்கிப் போடுவதற்கோ ஒரு வசதியுமே இல்லை. ஞானிதான் உடனேயும் கிடந்த உடுப்புக்களைக் கிழித்து காயத்திற்கு கட்டுகள் போட்டு, தன்ர கையாலேயே காட்டுத்தடி முறித்து சாரத்தை அதனுள் புகுத்தி காயக்காரரை தூக்கிச் செல்வதற்கு வசதியாக வழி செய்து அனுப்பினாள்.

வேறொரு சமயமும் இப்படித்தான், எமது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரவேண்டுமானால் ஒரு அருவி கடந்து தான் வரவேண்டும். உணவுக்காகவே அந்த அருவியிடம் நாம் பல போராளிகளைப் பறிகொடுத்துள்ளோம். அப்படியான பெரிய அருவி அது. ஞானியுடன் நாங்கள் ஜந்து பேர் மரக்கறி எடுக்கச்சென்றோம். பத்துமைல் நடந்து அருவியைக் கடக்கவேண்டும். ஒருநாள் வேலை, அன்று முழுதும் எங்களுக்கு காட்டுக்காய்கள் தான் சாப்பாடு. கட்டி நீந்துவதற்கு கயிறு இல்லை. எம்மைக் கரையில் விட்டுவிட்டு ஞானி தனிய நீந்தி அக்கரைக்கு சென்றாள். மறுகரையிலுள்ள போராளிகளுக்கெல்லாம் பெரிய அதிசயம் எப்படி இவர் கயிறில்லாமல் நீந்தி வந்தார் என்று, ‘என்னென்று இதால வந்தனீங்கள்’ என்று கேட்டவர்களுக்கு ‘நான் ரெயினில் வந்தனான்’ சிரிக்காமலேயே பதில் செல்லிவிட்டு, அங்கே கயிறு வாங்கி மரக்கறியை கட்டிவிட்டு தானும் நீந்திவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.

அப்படி சொல்லிக் கொண்டு போனால் நிறையவே சொல்லலாம். அங்கே நடந்த ஒவ்வொரு செயற்பாட்டின் முடிவிலும் ஞானிக்கும் பங்கிருக்கும். என்று கூறினாள் அந்தப் போராளி.

பயிற்சிப் பாசறையில் இவளின் இந்தச் செயற்பாடுகள் தான் பயிற்சிகளின் முடிவில் ஒரு பயிற்சி ஆசிரியராக இவளை இனம்காட்டியதுபோலும், பயிற்சி முடிந்ததும் பயிற்சி ஆசிரியராகச் செயல்பட்ட இவள், தான் சண்டைக்குப் போகவேண்டும் என்று பொறுப்பாளருடன் சண்டையிட்டு வெற்றியும் பெற்றாள்.

இவளின் முதற்சண்டை அருந்தலாவை சிங்களப் பகுதியில் நடந்த சண்டை. ரோந்துவரும் இராணுவத்தை தாக்கவேண்டும். எல்லோரும் நிலையெடுத்திருந்தனர். நேரம் காலை 10.45 மணி, பதினொன்று, பன்னிரெண்டு, பன்னிரெண்டரை என நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, இராணுவம் வருவதாக காணவில்லை. என்னடா இவங்களை காணவில்லை என்று கூறிய ஞானி தனது நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்லவென பிறணைத்தூக்கித் தோளில் அடித்துக் கொண்டு நடந்தவேளை திடீரென அதே இடத்தில் நிலைஎடுத்தாள். முன்னால் பார்த்தாள் இராணுவம் வந்து கொண்டிருந்தது. ஞானியின் முதல்சண்டையை ஞானியே தொடக்கிவைத்தாள். நல்ல உக்கிரச் சண்டை. இவளின் முன்னாலேயே நான்கு இராணுவத்தினரின் உடல்கள் வீழ்ந்து கிடந்தன. முதல் சண்டையே வெற்றிகரமாக முடிந்ததையிட்டு ஞானிக்கு மனதில் அடங்காத பெருமை.

கொஞ்சம்கூட ஞானி அந்த இடத்தில் அலட்சியமாக இருந்திருந்தாலும் சண்டை தோல்வியில் முடிந்திருக்கும். தானாகவே முடிவெடுத்து செயல்பட்டதால்தான் எமக்கு அது வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதில் ஞானியின் பிறணுக்கு சின்னக்காயம். இவள் மயிரிழையில்தான் தப்பியிருந்தாள்.

அதன் பின்னர் இவளுக்கு சண்டையோகம்தான். எங்கு போனாலும் ஒரே பதுங்கித்தாக்குதல்கள்.

அடுத்தது பள்ளித்திடல் மினிமுகாம் மீதான தாக்குதல் இதுவும் ஒரு மக்கள் குடியிருப்போடு சேர்ந்த மினிமுகாம். சண்டை ஆரம்பமாகிவிட்டது ஞானியின் மறுபக்கத்துக்கு பிறண் தேவையாக இருந்தது. அழைப்புக் கிடைத்ததும் விரைந்தோடிய ஞானியின் முன்னால் வீரிட்டு அழுதபடியிருந்த சிறு குழந்தை ஒன்று. வாரியணைத்து குழந்தையை ஒரு கையிலும், பிறணை மறுகையிலும் பிடித்துக்கொண்டு வந்து அந்தக் குழந்தையை காவும் குழு மூலம் பின்னால் அனுப்பிவைத்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கக் கூறிவிட்டுத்தான் தொடர்ந்து சண்டையிட்டாள். இச்சண்டையிலும் இராணுவத்தின் பல உடல்கள் கைப்பற்றப்பட்டு, கொண்டுவரமுடியாத காரணத்தால் தகனம் செய்துவிட்டு வந்தனர். ஞானி செல்லும் சண்டைகளில் எல்லாம் ஒரு அதிஷ்ரம் தான், எதிரியின் உடல்கள் எடுக்காமல் விடமாட்டார்கள்.

அடுத்ததாக சிங்கபுரவில் ரோந்து அணிமீதான தாக்குதல். வெலிகந்தையில் கொழும்பு வீதியில் நடந்த பதுங்கித்தாக்குதல், கள்ளிச்சை – வடமுனையில் நடந்த தாக்குதல் எனக்கூறிக்கொண்டே போகலாம்.

கள்ளிச்சை வடமுனைத் தாக்குதல், இது மட்டக்களப்பில் முதல் பெண்போராளி களத்தில் வீரச்சாவடைந்த தாக்குதல், ஞானியும், நிலாவும் பக்கத்து பக்கத்து நிலையில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இந்த சண்டையணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற நிலா இச்சண்டையில் வீரச்சாவடைய, அவரின் வோக்கியை எடுத்து மற்றவர்களுக்கு நிலைமையை அறிவித்து தொடர்ந்தும் சண்டையிட்டாள். சண்டைமுடிந்து திரும்பும்போது அவளின் கையில் தனது பிறணும், தோளில் நிலாவின் உடலும் சுமந்துவந்தாள்.

தொடர்ச்சியாக சண்டைகளும், பதுங்கித் தாக்குதல்களும் என்று பயிற்சி எடுத்த காலம் முதல் தொண்ணூற்றி மூன்று (1993) வரையும் இருபது சண்டைகளுக்கு மேல் ஞானி சென்றுவந்திருந்தாள்.

இந்தக் காலப்பகுதியில் தான் தேசியத்தலைவர் அவர்களின் பணிப்பின் பேரில் தென்தமிழீழத்தில் இருந்து பல அணிகள் வடதமிழீழம் நோக்கி அழைக்கப்பட்டன. அதில் பெண்கள் படையணியும் அடங்கும். அதில் ஞானியும் தெரிவு செய்யப்பட்டாள். புறப்படும் வரை அவளின் கால் நிலத்தில் நிலையாக நிற்கவில்லை.

நாங்கள் யாழ்ப்பாணம் போகப்போகிறோம். அண்ணையைப் பார்க்கப்போறம். அண்ணைக்கு முன்னாலும் நிறைய சண்டைகள் பிடிச்சுக் காட்டுவம் என்று துள்ளித்திரிந்தாள்.

பயணநாளும் ஆரம்பமானது. பெண்போரளிகள் வண்டி மூலமும், ஆண்போராளிகள் கால்நடையாகப் போவதும் எனத் திட்டம். ஆனால் இவள் விடவில்லை. ஏன் நாங்கள் மட்டும் வண்டியில் போகவேணும், எங்களுக்கு நடக்கத்தெரியாதோ, நாங்களும் நடப்போம் என அடம்பிடித்து, ஆண் போராளிகளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினர். சேறுகளும், தண்ணீர்களும், அருவிகளும் தாண்டி ஏழுநாட்கள் தொடர்ந்து நடை. பதினாறு அருவிகள் நீந்திக்கடக்க வேண்டும். கடந்தனர், ஆனால் இவர்கள் கொண்டுவந்த உலர் உணவு எல்லாம் அருவியோடு போய்விட்டது. பசியோடு நடந்து திருமலையை அடைந்தனர். அங்கு உணவுப்பொருட்கள் சேகரித்து ஆற்றங்கரையோரத்தில் சமைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து பார்த்தால் சமைத்துவைத்த இடத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள்கூட இல்லை எல்லாவற்றையும் ஆறு அள்ளிக்கொண்டு போய்விட்டது. எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம். அங்கு நின்ற போராளிகளின் தயவால் சிறிது வயிறுகளை நிரப்பிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து பன்னிரண்டாம் நாள் வடதமிழீழத்தில் கால் பதித்தது ஞானியுடனான படையணிகள்.

அங்கிருந்து வந்த பெண்கள் அணி இங்கே செயல்ப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் படையணியுடன் இணைக்கப்பட்டது. பரந்துபட்ட சிந்தனையும் தமிழீழம் எங்கள் நாடு, நாம் ஒரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட கிளைகள் எமது உழைப்பு, இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தேவை என்பவற்றை தெளிவாக உணர்ந்து கொண்ட ஞானியால் இங்கேயே நீண்டகாலங்களுக்கு நின்று செயற்பட முடிந்தது. தனது ஆளுமையாலும், அயராத கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும், மாலதி படையணியிலும் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டாள்.

இங்கு இவளது முதல்களம், ஒப்பரேசன் தவளை இதில் காலில் விழுப்புண்ணேந்தினாள். அதன்பின் புலிப்பாய்ச்சல், சூரியக்கதிர், ஓயாத அலைகள் – 01, என பல களங்களில் இவள் பதிவானாள்.

சூரியக்கதிர் – 01 நடவடிக்கை புன்னாலைக்கட்டுவன் பகுதியூடாக எதிரிப்படைகள் தமது வேகமான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். எமது அணிகளை பின்னால் நகர்த்தி நிலைப்படுத்தினால் தான் எம் தரப்பு இழப்புக்களை கொஞ்சமேனும் குறைக்கலாம். நகர்துவதற்கான அவகாசமோ மிகமிகக் குறைவு. அந்தளவுக்கு எதிரிப்படைகளின் நகர்வு வேகமாக இருந்தது. அந்த இடத்தில் ஞானியும் அவளின் 50 கலிபரும்தான் எமக்குக் கைகொடுத்தது. நாம் பாதுகாப்பாக நிலை எடுக்கும் வரைக்கும் காப்புச்சூடு கொடுத்தது. குறுகிய நேரத்திற்கு எதிரிகளின் நகர்வைத் தடுத்து தாக்குதல் தொடுத்தாள்.

ஓயாதஅலைகள் – 01, சமருக்குச் சென்று வந்தவள் தென்தமிழீழம் சென்று தன் போராளித் தங்கையையும் அழைத்துக்கொண்டு விடுமுறையில் வீட்டுக்குச் சென்று திரும்பிய அந்த மூன்று மாதங்களிலும் கூட அங்கே இரண்டு பதுங்கித்தாக்குதல்களில் பங்குபற்றி அங்கேயே புதிதாக பயிற்சி முடித்த போராளிகளுடன் மீண்டும் வந்துசேர்ந்தாள். இவளது திறமைகளையும் செயற்பாடுகளையும் கண்ட பொறுப்பாளர்களும், தளபதிகளும் இவள் அழைத்துவந்த பிள்ளைகளையே இவளிடம் ஒப்படைத்து ஜெயசிக்குறுய் களத்திற்கு அனுப்பினர். பல வழிகளில் அன்பரசி படையணியின் வளர்ச்சிக்காக உழைத்து, ஜெயசிக்குறுய்க் களத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அணியொன்றுக்கு பொறுப்பாக செயற்பட்டு, ஓயாதஅலைகள் – 02 தாக்குதல் சம்பவம் வரை ஓயாதிருந்து ஓய்ந்து போன லெப். கேணல் ஞானிபற்றி அன்பரசி படையணியின் சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில்…

“இவரைப் பற்றிக் கூறுவதானால் நான் கூறிக்கொண்டே போகலாம். இவரைக் கண்டாலே மற்றவர்களுக்கு தானாகவே ஒரு வீரம் வரும். அப்படியான ஒரு நிமிர்ந்த தோற்றமும், உறுதியும் கொண்டவர். தொண்ணூற்று ஆறாம் (1996) ஆண்டுதான் திரும்பி அன்பரசி படையணிக்கு வந்தவர்.

மட்டக்களப்பில் இருந்து இவர் புதிய போராளிகளைக் கூட்டிவரும் போது கடவான வீதி என்று ஒரு வீதி அது கடந்து தான் வரவேண்டும். வரும்போது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கத்தொடங்கிவிட்டனர். அப்போ அதில நல்ல சண்டை. அதில் திறமையாகச் செயல்பட்டு ஒரு போராளிகள் கூட விடுபடாமல், காயப்படாமல், வீரச்சாவடையாமல் கூட்டிவந்தார். இவர்கள் வரும்போது நிறையவே கஸ்ரங்கள், புதிய போராளிகள், தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை. ஏழுநாட்கள் தொடர்ந்து நடை, இடைஇடையில் பதுங்கித்தாக்குதல்களுக்கும் முகங்கொடுத்து பன்னிரண்டாம் நாள் வந்துசேர்ந்தனர்.

அவர் கூட்டிவந்த அந்த அணியையே அவரிடம் கொடுத்து, இந்த அணி உங்களுக்குரியது என்று கூறிய மறுவினாடியே நாங்கள் கூறாமலே அணிக்குரிய வேலைகளைத் தொடங்கிவிட்டார். அணியிலுள்ள பொறுப்பாளர்களுடன் கதைத்து, மேலதிக பயிற்சிகளுக்கு ஒழுங்குசெய்து, தானே நேரே நின்று சூட்டுப் பயிற்சி எல்லாம் கொடுத்து இரணைமடுப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் வந்த மூன்றாம்நாளே அவர்களுக்குச் சண்டை கிடைத்தது. நல்ல மழை எல்லா இடமுமே தண்ணீரும் சேறும், காப்பரண்களும் எதுவுமில்லை. அதில் நின்று சண்டையிட்டு, இரண்டு ஏ.கே.எல்.எம்.ஜி. எடுத்தனர். இதில் ஞானிக்கு காலில் காயம். அவர் அப்படியேதான் நின்று சண்டைபிடித்தவர். நான் நேரே போய்த்தான் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கே கூட சும்மா இருக்கமாட்டார். நான் போகும் போதெல்லாம் தன் போராளிகளைப் பற்றித்தான் கேட்பார். காயம் மாறும் முன்னே அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எந்த அலட்சியப் போக்கையுமே காணமுடியாது.

அதில் இருந்து மாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதிக்கு சென்ற அணி பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்தது. அதேபோன்றுதான் ஒலுமடுப் பகுதியிலும், இந்த கஸ்ரங்களின் மத்தியிலும் போராளிகளின் மனம் சோராது வழிநடத்திய பெருமை ஞானிக்குரியதே.

அவரிடம் ஒருவேலையைக் கொடுத்தால் நான் திரும்பிப்போய்ப் பார்க்கவேண்டி அவசியமே இராது. அந்த வேலை சரியாகத்தான் செய்து முடிக்கப்பட்டிருக்கும். அதனால் அவரின் அணியென்றால் எல்லோருக்குமே விருப்பம், அப்படி மென்மையான, ஆளுமையான போராளி.

ஒருநாள் நான் காவலரண்கள் பார்த்துக்கொண்டு வரும்போது, தோளில் கட்டையுடன் வந்தார். முன்னால் இரண்டு பிள்ளைகள் பின்னால் ஞானி, ஏனென்றால் கட்டை தூக்கிறதில கஸ்ரம் தனக்கும் தெரிய வேண்டுமாம்.

பொதுவாகக் கூறப்போனால் இவர் தாக்குதலுக்கு ஒரு திறமையான தளபதி. இவருடைய இந்தத் திறமைகள் தான் இவரை அன்பரசி படையணியின் மூன்றாவது தளபதியாக உயர்த்தியது. இவர் பொறுப்பெடுத்தது ஆறுமாதங்கள் தான் அந்த ஆறுமாதத்துக்குள்ளும் படையணிக்குள் பல பொறுப்பாளர்களை எமக்கு இனம்காட்டினார். இன்னும் இருந்திருந்தால் நிறையவே செய்திருப்பார். இவரின் இழப்பு எமது படையணிக்கே பெரிய இழப்பு. ஓயாதஅலைகள் – 02 சமரில் ஒரு பகுதி வெற்றிக்குக் காரணமானவர்களுள் ஞானியும் ஒருவர். படையணியின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அவரின் முதல்களம் இது. இந்தக்களத்திலேயே பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்த ஞானியை நாம் இழந்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டார் அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதி அவர்கள்.

எமக்குப் பல புதிய போராளிகளையும், பொறுப்பாளர்களையும், தளபதிகளையும் புடம்போட்டு வளர்த்துத்தந்த பெருமை ஜெயசிக்குறுய் சமருக்கேயுரியது. எமது போராட்ட வளர்ச்சிக்கு பல வழிகளில் கை கொடுத்ததும், இந்தக் களம் தான். அந்த வகையில் ஞானியின் களமுனைச் செயல்பாடுகள் பற்றி மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில்,

“ஞானியைப் பொறுத்தவரையில் அவர் சரியான ஒரு வேலைக்காரி. கஸ்ரங்களுக்குத் தாக்குப்பிடிக்க கூடியவர். விடுமுறையால் வந்ததும் அவரை கொம்பனிப் பொறுப்பாளராகத்தான் நியமித்தோம். பின்னர் சண்டைகளில் அவரின் திறமைகளைப் பார்த்து அன்பரசி படையணிக்குத் துணைத் தளபதியாக நியமித்தோம்.

மாங்குளம் பகுதியில் இவர்கள் நின்ற பகுதி சரியான பிரச்சினைக்குரிய பகுதி. எந்தநேரமும் சினைப்பிங்தான். அப்படி ஒரு துன்பமான கட்டத்துக்குள் தான் இவர்கள் நின்றார்கள். இரவு – பகல் நித்திரையில்லை. ஒரே சண்டைதான். ஞானியும் பிள்ளைகளுடன் தானும் சேர்ந்து கஸ்ரப்படுவார். அதனால் தான் அன்பரசி படையணிக்குள் அவரால் வேகமாக வளர்ச்சி எடுக்கக்கூடியதாக இருந்தது.

இவர்களுக்கு ஓயாதஅலைகள் – 02 சமருக்கு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. இரண்டு கொம்பனி நுழையவேண்டிய பாதை. அதில் ஒரு பாதையை இவர்கள் உடைத்து கொடுக்கவேண்டும். இவர்களுக்கு அது முக்கியமான வேலை. தற்செயலாக தவறுதலாக இருந்தால் இந்தச் சண்டையே பிழைத்திருக்கும். இந்தச் சண்டையில் நான்கு பாதை முக்கியமானது. நான்கும் உடைத்து நான்கு அணிகள் உள்நுழைய வேண்டும். இந்த நடவடிக்கையில் முதல் பாதை பிடித்தது ஞானி ஆக்கள்தான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதையை குறிப்பிட்ட நேரத்திலேயே பிடித்துவிட்டார்கள். இதில் அவரின் செயற்பாடு ஒரு வேகமான செயற்பாடாக இருந்தது.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து உள்ளே அனுப்ப வேண்டிய அணிகளை அனுப்பிவிட்டு, பக்கத்து பாதை உடைபடாததால் அந்தப் பகுதியால் செல்லும் அணிகளையும் எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு, தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தான் வீரச்சாவடைந்தார். மற்றப்படி அவருக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டார். இது பாராட்டத்தக்க ஒரு விடயம்.

ஞானி உண்மையிலேயே தன்னம்பிக்கை மிகுந்த ஒரு போராளி. அவரின் தனிப்பட்ட குணாம்சங்கள் என்று கூறினால், போராளிகளுடன் நன்றாகச் சேர்ந்து போகக்கூடியவர். மகளிர் படையணியின் தனித்துவத்தையே விரும்புபவர். எதையும் நாங்கள் தனிச்சுச் செய்யவேணும், இன்னும் நிறைய சாதித்துக் காட்டவேணும் என்றெல்லாம் எண்ணமுடையவர். ஞானியும் ஜெயசிக்குறுய் சமர் முழுவதும் நின்ற ஒரு பொறுப்பாளர் அவர். இந்தச் சமர்; இவர்களுக்கு பெரிய ஒரு அனுபவம், அவர் இருந்திருந்தால் பெரிய ஒரு வளர்ச்சியை நோக்கிப் போயிருப்பார். நான் நேரடியாகக் கவனித்த சில விடயங்களில் தங்களது காவலரண்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் வைத்திருப்பார். தலைவரின் படமெல்லாம் வைத்து ஒவ்வொரு இடமும் நன்றாகத்தான் இருக்கும். கட்டளைகளை நிறைவேற்றுவதில் கூட ஒரு வேகம் இருக்கும். ஓயாதஅலைகள் – 02 இல்கூட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் திறம்படச் செய்வதற்குக் காரணம் அவரின் அர்ப்பணிப்புத் தன்மைதான்.” என்று கூறினார் மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள்.

லெப். கேணல் ஞானி தனது நீண்டகள வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துக்கொண்டவள். போராட்ட வரலாற்றின் பல வெற்றிப்பாதைகளுக்கு வழித்துணையாக நின்றவள். அன்பரசி படையணியின் வளர்ச்சிக்கு படிக்கல்லாக அமைந்த ஞானியின் வீரமும், செயல்திறனும், வளர்ச்சியும் இன்றும் அவள் வளர்த்த போராளிகளில் தெரிகின்றது. தன்னை வளர்த்த தளபதிகளும்,தான் வளர்த்த போராளிகளும் மனமுருக,

“வேங்கைகள் ஆனவர்கள் நாங்கள்
எந்த வேளையும் வெல்வோம் போங்கள்”

என்று பாடிச் சென்றவள். இந்த சமரில் வென்றோம். ஆனால் ஞானி வரவில்லை. அவள் லெப். கேணல் ஞானியாய்…

அவள் இறுதியாகப் பாடிச்சென்ற அந்த இரண்டு பாடல் வரிகளும் எல்லோரின் காதுகளுக்குள்ளும் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி: களத்தில் இதழ் (23.09.1999).

 

https://thesakkatru.com/commander-lieutenant-colonel-gnani/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.