Jump to content

சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும்.. உருவெழு கூளியரும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் .. உருவெழு கூளியரும் ..

Screenshot-2020-11-04-15-32-37-893-org-m

சங்க இலக்கியங்கள் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுகின்றன. சங்கக் கலைஞர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டுள்ளனர். கலைவேறு வாழ்கை வேறு என்று அறிய முடியா வண்ணம் அவர்களின் வாழ்வியல் கலையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவ்வகையில் இரவலர்க் கலைஞர்களாக அறியப்பெறும் குறுங்கூளியர் குறித்தும், அவரில் மற்றொரு பிரிவினரான உருவெழு கூளியர்கள் குறித்துமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவியேக் காணப்படுகின்றன. இக்கலைஞர்கள் குறித்து உரையாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவற்றில் உள்ள சில புரிதல்களை முன்வைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.

குறுங்கூளியர்

கூளியர் பற்றிய பதிவு சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன. பொதுவாக குறள் உருவம் கொண்ட நாடகக் கலைஞர்கள் என்று இவர்களைக் கூறுவர். பத்துப்பாடலில் மட்டும் மூன்று இடங்களில் கூளியர் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

“வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்

சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி”
(திரு.282-283)

“கொடுவிற் கூளியர் கூவை காணில்” (மலை.422)

“வேல்கோ லாக ஆள்செல நூறிக்

காய்சின முன்பிற் கருங்கட் கூளியர்

ஊர்சுடு விளக்கில் தந்த ஆயமும்”
(மதுரை.690-692)

ஆகிய பாடலடிகளைச் சான்றாகக் கூறலாம். பத்துப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இம்மூன்று இடங்களில் வரும் கூளியர் என்ற சொல்லிற்கு மூன்று வேறு வேறு பொருள்களை எழுதிச் சென்றுள்ளார் என்று உ.வே.சா கூறுவார்.

“கூளியர் என்பதற்குச் சேவித்து நிற்போர் என்று திருமுருகாற்றுப்படையிலும், நாடு காக்கும் வேடர் என்று மலைபடுகடாத்திலும், வேட்டுவர் என்று மதுரைக்காஞ்சியிலும் பொருள் செய்திருக்கின்றார் நச்சினார்க்கினியர்” (1) என்பது அக்கருத்து.

இவ்வாறு கூளியர் என்பவர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் அவர்கள் ஒரு கலைஞர்கள் என்பதற்குச் சில சான்றுகளைக் கொண்டு அறியலாம்.

மேற்சொன்ன மலைபடுகடாமில் வரும் கூளியர் என்பார் ‘வில் வேட்டுவர்’ என்பதை ‘கொடுவில்’ என்ற அடையால் உணரலாம். மதுரைக்காஞ்சியில் வரும் கூளியர் கையில் வேல் வைத்திருக்கிறார்கள். “வேலையே பசுக்களைச் செலுத்தும் கோலாகக் கொண்டு, பசுத் திரளைக் காவல் காத்திருந்த காவல் ஆட்களை வெட்டி எறிந்து காய்கிற சினத்தையுடைய கூளியர், எதிரியின் ஊரைச் சுட்டெரித்த ஒளியிலேயே ஓட்டி வந்தனர். இங்கே வேட்டுவர் என்றது பொருந்தா உரையாகும். இக்கூளியர் பசுத்திரளைக் களவாடும் கூட்டத்தினர்! வெட்சி மறவர் என்று கருதுவாரும் உளர். வேட்டுவர் எனினும் பெரிய வழு இல்லை” (2) என்பர் வெ.மு.ஷாஜகான் கனி. திருமுருகாற்றுப்படையில் வரும் கூளியர் என்பவர் ‘சேவித்து நிற்போர்’ என்ற நச்சினார்க்கினியரின் கருத்தை வெ.மு.ஷாஜகான் கனி மறுப்பார். பல்கூளியர் என்பதால் கூளியர் பலராகக் கூட்டமாக உள்ளனர். குறும் என்ற அடையால் அக்கூளியர், சித்திரக் குள்ளர் என்பது பெறப்படும். வேறுபல் உருவில் என்ற அடையால், அவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு பல உருவத் தோற்றத்தில் ஒப்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் தெளிவாகும். சாறு (திருவிழா) நடைபெறும் இடத்தில், அரசர் போலவும் கடவுளர் போலவும் வேடப் புனைவு கொண்டதால் வீறுபெறத் தோன்றிக் கலைநிகழ்வு நடத்தி யாசித்தவர்கள் எனலாம். முன் அடையால் நோக்கக் கூளியர் என்பது கலைஞர்களே என்பது அறியலாம். இங்குக் கூளியர் என்பார் ‘சித்திரக்குள்ளர்’ என்று இன்று நாம் குறிப்பிடும் குறள் உருக்கொண்டவர் ஆவர். சர்க்கஸ் (Circus) நிகழ்வில் நகைச்சுவைக்காக அவ்வினத்தார் பணிசெய்வது இன்று வழக்கம். இதுபோல், அன்றும் அத்தகைய பிறவி ஊனம் எய்திய குறள் உருவினர் இரவலர்க் கலைஞர்களாக இருந்துள்ளர் என்ற கருத்தையும் குறிப்பிடுகிறார். எனவே குறள் உருவம் கொண்ட குறுங்கூளியர்கள் நகைச் சுவைகள் புரிந்தும், பல்வேறு வேடங்கள் தரித்தும் இரவலர்க் கலைஞர் என்பதை அறியலாம். குறுங்கூளியர் என்பவர் இரவலர்க் கலைஞர் என புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. இதனை,

“குரங் கன்ன புன்குறுங் கூளியர்

பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ”
(புறம்.136:13-14)

என்ற பாடல் வழி உணரமுடிகிறது. இப்பாடலில் ‘குறுங்கூளியர்’ என்று வந்திருப்பது கவனத்திற்குரியது. குரங்கு போன்ற குறுங்கூளியர் என்றது அவர்களின் வழிப்பறி குறித்த கிழக்கிடு பொருள் பற்றிய உவமை. புலவர் ஈரும் பேனும் பசியும் எனப் பல பக்கமாகத் தன்னை வருத்தியிருக்க, அது தெரியாத அவ்விரவலர் தன்னிடம் இருந்த சிறிது பொருளையும் குரங்கு போலப் பறித்தனரே என்ற புலம்பல் குறிப்பாக இதனைப் பாடினர் புலவர். அவர்களின் ஆட்டம்பாட்டம் குறித்த எள்ளல் பொருளாகவும் இதைக் கூறலாம். கோடியர் வீட்டுச் சிறுவர்கள் தம் பெற்றோர் ஆடிய கூத்தினைப் போல பாவித்து ஆடிய கோமாளித்தமான ஆட்டத்தைக் கடுவனுக்கு உவமை கூறுவது சங்கப் புலவர் வழக்கமாகும்.

“கடும்பறைக் கோடியர் மகா அர் அன்ன

நெடுங்கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும்”
(மலை.236-237)

என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இன்று நம் கோவில் சிற்பங்களில் குள்ள உருக்கொண்ட பூதம் போன்ற தோற்றத்தில் சில உருவங்களைப் பார்க்கலாம். அவை பூதகணங்கள் என்பர். ‘கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇ’ (பட்டி.259) என்று கூறும் கணங்கொள் கூளி என்பாரும் இவரே. இப்பூதகணங்கள் அக்காலக் குறுங்கூளியர் என்ற கூத்துக் கலைஞராதல் வேண்டும். தம் குறளுருவின் இழிவு நீங்க, அவர்கள் தம் உருவ நிலைக்குத் தெய்வத்தன்மை ஏற்றித் தம்மைத் தெய்வத்தின் அடியவர் போலவும் பூதங்கள் போலவும் ஒப்பனை செய்து ஆடினர். அத்தகைய செயல்களையே பக்தர்களான சிற்பிகளும் கோயில் உருக்களாக வடித்திருக்க வேண்டும்.

உருவெழு கூளியர்


குறுங்கூளியர் என்ற இனத்தாருள் வேறொரு வகைக் கலைஞர் உருவெழு கூளியர் ஆவர். கோமாளிகளினின்றும் வேறுபட்டு, சமூக மக்கள் மதிக்கத்தக்க உருவம் எழுப்பும் கூளியர் உருவெழு கூளியர் எனப்பட்டுள்ளனர். இவர்கள் பேய் போல் உருவம் புனைந்து ஆடியுள்ளனர். இவரைப் பேய் மகளிர் என்று கூறுவார் கரு.அழ.குணசேகரன்.

“துணங்கையஞ் செல்விக்கு அணங்கு தாங்கு” (பெரும்.459)

“பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு” (கலித்.89:8)

போன்ற வரிகள் மேற்சொன்ன கருத்திற்குச் சான்று பகர்கின்றன. கொற்றி என்பவள் கொற்றவை. பேய் நொடித்தல் என்பது, கொற்றவைக்குப் பின்நின்று பேய்கள் அவள் புகழைப் பாடி ஆடுவது எனலாம். உண்மையில் பேய்கள் ஆடுவதில்லை. கூளியரே பேய்போல் புனைந்து ஆடியுள்ளனர். அடியோராகிய கூனும் குறளும் உறழ்ந்து கூறியதாக (கலித்.94) ஒரு பாடல் உண்டு. ‘நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு’ என்று பரத்தையரை இழித்துப்பாடிக் கோயிலில் பேய்போல் புனைந்து, பேயும் துள்ளி விழுவது போல ஆடுவர். அதுகண்டு யாரும் நகைத்தல் கூடாது என்பர்.

உருவெழு கூளியர், பேய்போல் புனைந்து, பூசாரி (சடங்காளி) போலச் சங்க காலத்தில் பணி செய்துள்ளனர். பலியிட்ட விலங்குகளின் குறுதி குடித்து வெளிவந்தவர்களாக ஆடிச் சடங்கு நடத்தியுள்ளனர். இவர்கள் கவர்கால் கூளியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். “கவர்கால் கூளியரும் உருவெழு கூளியரும் ஒருவரே ஆவர். சடங்கு செய்யும்போது தெய்வம், பேய் என வேண்டிய உருவம் எழுப்பி ஆடுவதால் உருவெழு கூளியர் எனப்பட்டனர். தம் இரு கால்களும் நெருங்காமல் அகல விரித்து நடப்பதால் கவர்கால் கூளியர் என்ற பட்டப்பெயர் தாங்கினர் எனத் தெரிகிறது” (3) என்று விளக்குவர். இவர்களின் சடங்கு இக்கால மாசானக் கொள்ளையினை ஒத்திருக்கிறது. அதாவது, குருதி சிந்திய அல்லது குருதி பிசைந்த சோறு அல்லது தானியம் போன்றவற்றை உண்ணும் பூசாரிகளை நாம் இன்றும் நாட்டுப்புறங்களில் காண முடிகிறது. மாசானக் கொள்ளை என்றும், மயானக் கொள்ளை என்றும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் குருதி சிந்திய உடல்களை மேனிகளில் அணிந்து ஆடுகின்ற காட்சிகளை ஆண்டுதோறும் தமிழகத்தின் பல இடங்களில் காண நேரிடுகிறது. வட நாட்டில் அகோரிகள் என்று சொல்லத்தக்கவர்கள் எரியும் பிணங்களைத் திண்பவர்களாக இன்றளவும் நாம் ஊடகங்களின் வழி அறிய நேரிடுகிறது. மேற்சுட்டிய நடைமுறை நிகழ்வுகளை வைத்து எண்ணிப் பார்க்கும்போது உணர்ச்சி வெறியால் உந்தப்பட்டு இரத்தம் சிந்திய பிணங்களோடு உறவாடிய பாணர் மகளிர் தொல்குடிச் சமூகத்தில் விளங்கி உள்ளனர் எனக் கணிக்க முடிகிறது. இங்கு பேய் போல ஆடியவர்கள் பாணர் மகளிர் என்றும் விறலியர் இல்லை என்றும் புலப்படுகிறது. எனவே அவ்ஆடல் புரிந்தவர்கள் உருவெழு கூளியர் என்றும் கவர்கால் கூளியர் என்றும் துணியலாம்.

“கொள்ளை வல்சிக் கவர்கால் கூளியர்” (பதிற்.19:1)

இங்கு கொள்ளை வல்சி என்று வந்திருப்பது கவனிக்கத்தக்கது. இது இன்று நம் கிராமங்களில் வழங்கும் மயானக் கொள்ளை என்ற வழக்குச் சொல்லோடு ஒப்பு நோக்கத்தக்கது. இவர்கள் எருமையைப் பலியிட்டு அதன் குருதியை உண்டு மகிழ்ந்தாடுவர்.

“உருவெழு கூளியர் உண்டு மகிழ்ந்தாட” (பதிற்.36:12)

என்ற பாடலால் இன்றைய மாசானக் கொள்ளை என்ற சடங்கு நிகழ்த்தும் கலைஞர்கள் போல் சங்க காலத்தில் உருவெழு கூளியரும் சடங்கு செய்துள்ளனர் என்று துணியலாம். மேற்கண்ட கருத்தாக்கங்களின் வழி குறுங்கூளியரும் உருவெழு கூளியரும் கலைகளை நிகழ்த்தி பரிசு பெற்று வாழ்ந்த இரவலர் கலைஞர்கள் என்பதை ஒருவாறு தெளிய முடிகிறது.

செ. ராஜேஷ் கண்ணா

முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
காந்தி கிராமியப் பல்கலைக்கழகம்.

http://www.muthukamalam.com/essay/literature/p250.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.