Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

அந்த நிலவறை மனிதன் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிலவறை மனிதன் யார்?

book-review  
 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ்தான், நவீன தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தது. குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்ததற்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னர், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தனது மிகச் சிறந்த படைப்பான கரமசோவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்ஸின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயேவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்ள மனம். அந்த ஆழ்மனத்தில் நனவிலி என்று சொல்லப்படும் பகுதியில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை தஸ்தயேவ்ஸ்கியிடமிருந்து கற்றுக்கொண்டதாக நவீன உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் அதனாலேயே குறிப்பிடுகிறார். குற்றமும் குற்றவுணர்வும் பழியும் வெறுப்பும் வேதனையும் காதலும் சாகசமும் நேசமும் ஒருசேரக் கொந்தளிக்கும் ஒரு பாதாள நீரூற்றுதான் தஸ்தயேவ்ஸ்கி படைத்த ‘நிலவறைக் குறிப்புகள்’.

காட்டில் வாழ்ந்த பருவத்தைக் கடந்து மனிதன் நாகரிகமாகிவிட்டான்; விலங்குப் பிரக்ஞையிலிருந்து வெகுதூரம் கடந்துவர அவனுக்குத் துணைசெய்த அறிவு, அவனை முற்றிலும் சந்தோஷமாக, நல்லுணர்வு கொண்டவனாக, நன்மை செய்பவனாக மாற்றியுள்ளதா? இத்தனை நாகரிகவாதியாக, இத்தனை ஒழுக்கங்களைப் போதிப்பவனாக அவன் வெளிப்பட்டாலும் அவன் சகமனிதனை ஏன் இன்னும் துன்புறுத்துகிறான்? ஏன் வெறுக்கிறான்? அவன் ஏன் சில நிமிடங்கள்கூட நிறைவாக, மகிழ்ச்சியாக இல்லை? இப்படியான கேள்விகளை, நிலவறை போன்ற ஒரு வறிய, சிறிய அறையில் வாழும் குமாஸ்தாவின் வாக்குமூலத்திலிருந்து எழுப்புகிறார்.

 

மனிதன், தான் மனிதன் என்று உணர்வதிலிருந்து கொள்ளும் அதீத தன்னுணர்வுதான் அவனைக் கூடுதலாக வேதனைப்படுத்துகிறது என்பதை நமக்கு உணர்த்தும் தஸ்தயேவ்ஸ்கி, மனிதனை உயிர்ப்பாக இருக்க வைக்கும் இழுவிசை அழிவுக்கான விருப்பம்தான் என்றும், அவனது கருப்பை, அவன் சுகித்திருக்கும் நித்திய வீடு நிறைவின்மைதான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

உலகம் முழுவதும் சமதர்மம் மலர்ந்துவிடுமென்ற நம்பிக்கையும் பேச்சும் உருவாகியிருந்த ஒரு தேசத்தில் வாழ்ந்தவர் தஸ்தயேவ்ஸ்கி. சோஷலிஸம் என்னும் சித்தாந்தம் குறித்த அந்த நம்பிக்கை, உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்த கார்ல் மார்க்ஸின் சமகாலத்தவராகவும் இருந்தவர். அந்த சோஷலிஸ நம்பிக்கை உருவாக்கிய படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த நூலில் பதில் சொல்கிறார். மனித இயல்பின் உணர்ச்சிகள் முழுமையாக அறிவுபூர்வமாக வகைப்படுத்தப்பட்டு பொருளாதாரத் தொடர்புகளும் உறவுகளும் துல்லியத்துடன் கணக்கிடப்பட்டு உருவாக்கப்படும் பொற்காலத்திலும் மனிதர்கள் சலிப்பில்லாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறுகிறான் அந்த நிலவறை மனிதன். மனிதனின் எழில் என்பது சுயேச்சையான நிகழ்வுகளிலும் சாகசங்களிலும் அடங்கியுள்ளது என்பதை நினைவூட்டுகிறான். பழிப்பும் வெறுப்பும் எந்தக் கிண்ணங்களில் உள்ளதோ அதற்கு அருகே உள்ள கிண்ணங்களில்தான் படைப்பூக்கமும் நேசமும் புத்தார்வமும் இருக்கின்றன என்ற செரிக்க முடியாத உண்மையைச் சொல்லியிருக்கும் வன்மையான அறிக்கைதான் ‘நிலவறைக் குறிப்புகள்’.

அந்த நிலவறை மனிதன் யார்? ஒரு எளிய குமாஸ்தாவாகவும், அதீத சுயமுனைப்பு கொண்டவனாகவும், கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவனாகவும் எழுத்தாளனாகவும், சமூக உறவுகளில் எல்லோராலும் வெறுக்கப்படுபவனாகவும், ஆனால் நேசத்தைத் தன் நிலவறையில் அடைகாப்பவனாகவும் தனியனாகவும் இருக்கிறான். அந்தக் கடைப்பட்ட மனிதனுக்கு, தான் கடைப்பட்டவன் என்பது தெரியும். கடைப்பட்டவன் என்று உணரும்போது கொள்ளும் சுய இரக்கமும் அதிலிருந்து அவன் மீள்வதற்குச் செய்யும் போராட்டமும் மீள முடியாத உழல்வும் அதன் வாயிலாகக் கொள்ளும் கழிவிரக்கமும் அந்தரீதியில் அடையும் ஆன்மசுத்தியால் கிடைக்கும் கண நேர ஆறுதலுமாக தனது வாழ்க்கையை வாழ்பவன் அவன்.

அந்த நிலவறை மனிதனின் வாக்குமூலத்தைக் கேட்கும்போது, படிப்படியாக வாசகன், தானும் அவனிடம் பிரதிபலிப்பதை பார்த்துவிடுகிறான். நாம் நமது நண்பர்களிடமும் நம்மிடமுமே சொல்லக் கூசும் நமது கீழ்மைகளை அவன் வெளிப்படையாகச் சொல்கிறான்.

அவன் வாழும் நிலவறையில் வேதனைக்கு உள்ள ஈர்ப்பு சந்தோஷத்துக்கு இல்லை. சந்தோஷம் நம் மேல் இறங்கியதும், அது மலிவான தன்மையை அடைந்துவிடுகிறது. அந்த சந்தோஷத்தைச் சலித்து நிறைவின்மையின் பாதையைத் திறந்து வேதனையை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்குகிறோம். இறுதியில் அந்த நிலவறை மனிதன் கேட்கும் கேள்வியில் அவன் வேறு யாருமல்ல என்பது தெளிவாகிவிடுகிறது. அவனது தேர்வு எது என்பதும். “உண்மையில் எனக்குள் நானே இப்படி ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக்கொள்கிறேன். எது நல்லது? மலிவான சந்தோஷமா அல்லது உன்னதமான வேதனையா? இவற்றுள் சிறந்தது எது?” இன்னமும் நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ளப் பொருத்தமானதுதான் இந்தக் கேள்வி.

அந்த நிலவறை மனிதன், அவனுக்கு அரிதாகக் கிடைக்கும் சந்தோஷ சந்தர்ப்பங்களையும் குலைத்துவிடுபவன். நண்பர்களுடன் விருந்துண்ணும் நிகழ்ச்சிக்கு, அழையாத விருந்தாளியாகச் சென்று நண்பர்களின் மனம்கோண நடந்து முற்றிலும் அந்த இரவையே குலைத்துப் போடுகிறான். ஆனால், அது அவனது திட்டம் அல்ல. அந்த நண்பர்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்காகப் போகும் இடத்தில் எதிர்பாராத விதமாக லிசா என்னும் இளம் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கிறான். லிசாவின் பரிதாபகரமான நிலையை அவளுக்குத் தெரியப்படுத்தி, அவளை ஈர்க்கிறான். அடுத்த சில நாட்களில் நிலவறை மனிதனின் வீட்டைத் தேடி நேசத்துடன் சந்திக்க வரும் லிசாவையும் அந்த நிலவறை மனிதனால் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆதுரத்துடன் அவனைத் தழுவி அவனுக்கு ஆறுதலாக இருக்கத் துணிந்தவளையும் தனது சுடுசொற்களால் காயப்படுத்திவிட்டு, அவள் சென்ற பிறகு அவளைத் தொலைத்த வேதனையில் உலவும் அந்த நிலவறை மனிதனுக்கு என்னதான் பிரச்சினை என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. அவன் சற்று வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அந்த லிசா அவனுடன் இருந்துவிடுவாளே என்று பதைபதைக்கிறோம். அப்படியென்றால் நாம் பேசும் பேச்சு, நமது மொழி நம்மைக் காப்பாற்றுகிறதா? நம்மைக் கைவிடுகிறதா?

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைத் தொடர்ந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திவரும் எம்.ஏ.சுசீலாவுக்கு தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டுள்ளது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

நவம்பர் 11 : ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி பிறந்த நாள்

 

https://www.hindutamil.in/news/literature/599263-book-review-2.html

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.