Jump to content

யுவனும் Fanம்


Recommended Posts

யுவனும் Fanம்

 

இரண்டாயிரத்து ஏழாம் வருடம். நான் உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நான்காம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளின் கையிலிருந்த குடும்பி மலையின் வீழ்ச்சியோடு உக்கிரமாக ஆரம்பிக்கிறது. வழமையான புலிகள் - இராணுவ சண்டையப் போல அல்லாது இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது லேசான பயத்தைக் கொண்டுவருகிறது. கிழக்கில் சண்டை தொடங்கிய கையோடு வடக்கிலும் கடும் இராணுவக் கெடுபிடியாய் இருந்தது. . மன்னார் நகரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் நிலை கொள்கிறது. எங்கள் வீட்டிலிருந்து நானூறு மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னார் பொது விளையாட்டரங்கம் இராணுவத் தளமாகிறது. மூலைக்கு மூலை சோதனைச் சாவடிகள். அடிக்கடி சுற்றிவளைப்புகள் கைதுகள். நாங்கள் வழமையாக உதைபந்து ஆடும் மைதானமான 'Bang' இல் கிட்டத்தட்ட தினமும் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட ஆரேனும் ஒருவரது சடலம் கிடந்தது. உதைபந்தாட்டம் நின்று போனது. எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் கிரிக்கட் ஆட ஆரம்பித்தோம். இரவு ஏழு மணிக்கு முன்னர் வீட்டுக்குள் ஓடிவிட வேண்டும். அச்சொட்டாய் ஏழேகாலுக்கு தினமும் ஸ்டேடியம் இராணுவம் மீது விடுதலைப் புலிகள் கிரனைட் எறிவார்கள். அவன் கண்மண் தெரியாமல் சுட ஆரம்பித்துவிடுவான்.
கிரிக்கட் தவிர எனக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு யுவன். யார் பாடலென்றே தெரியாமல் " அடடே இந்தப் பாட்டு நல்லாருக்கே" என்று கோர்த்துச் சேர்த்த பாடல்கள் அனைத்தும் ஒருவனுடயவை என்று தெரியவருகிறபோது மனதின் அடியாளத்தில் கிளர்ந்து எழும் உணர்வுக்கு என்ன பெயர்? நிறைய பாடல்களை நல்ல பாடல்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் என் ஆன்மாவுக்கு சமீபமான பாடல்களை கொடுத்தவன் யாரென்று துணிந்தால் அது ஒருவனைக் கை காட்டியது. இப்படித்தான் யுவன் மீதான் என் பிரியம் ஆரம்பமானது. ஆள் மேல் உள்ள அபிமானத்தால் வந்த ரசனை அல்ல மாறாக யுவனின் பாடல்கள் தான் என்னை யுவனிடம் கூட்டிப் போயிருந்தன.
உயர்தரம் படிக்கும் போது நானும் என்னோடு இரண்டு நண்பர்களும் சேர்ந்து Yuvan Fans Authority என்று ஒரு informal fan club ஒன்றைத் தொடங்கினோம், நடாத்தினோம். ரசிகர் மன்றத்துக்கு Authority என்று பெயர் வைக்கக்கூடாது என்ற அறிவில்லாமல் வைக்கப்பட்டதாய் இருந்தாலும் யுவனுக்கு நாங்கள் தான் அத்தாரிட்டி போல் நடந்துகொண்டோம். எங்களுக்கு Logic வகுப்பெடுத்த வாத்தி தான் இதுக்கு போசகர். காதில் ஹெட்செட் கொழுவியபடி புன்னகைக்கும் ஒரு முகத்தை வரைந்து அதன் கீழ் அழகான எழுத்தில் YFA என்று எழுதினேன். அது லோகோவானது. எனது பள்ளிக்கூடப் புத்தகம் கொப்பிகளில் இந்த லோகோ இல்லாத முதற்பக்கங்கள் இருக்காது. பாடசாலை மேசை, ரியூட்டரி தூண்கள் அத்தனையிலும் YFA லோகோவை போட்டு வைத்தோம், கல்வி நிலைய இயக்குனரின் அறைச் சுவரும் இதில் அடக்கம்.
யுவன் எனக்கு கொண்டாட்டம். பச்சையாய் உண்மையை சொல்லப்போனால் இரண்டாயிரத்தி ஐந்துக்குப் பின்னர் தான் ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டத்தில் பாட்டுக் கேட்கக் கிடைத்தது. எங்களது சித்தப்பா டென்மார்க்கிலிருந்து ஒரு சோனி செட் கொண்டு வந்திருந்தார். நானும் அவருமாய் டவுணுக்கு போய் 150 திரைப்படங்களின் பாடல்கள் அடங்கிய DVD வாங்கிக்கொண்டு வருவோம். அத்தனையும் புத்தம் புதிய படங்கள். அந்த வாரம் வெளியானவை அல்லது ஆடியோ மட்டும் வெளியானவை. சித்தப்பா பெரிய Bhai இன் தீவிர ரசிகர். Bhai படம் எப்போது என்ன வருகிறது என்று தெரிந்துகொண்டு விடுகிறார். ஆனால் எனக்கு யுவன் படம் எப்போது வருகிறது ? அல்லது அந்த நூற்றைம்பது படங்களில் யுவன் படங்கள் எவை ? என்பதெல்லாம் அறிய கஸ்டமாய் இருந்தது. பெரிய நாயகர்களின் படங்கள் என்றால் தெரியவந்துவிடும், ஆனால் நம்மாள்தான் பட்ஜட் , பெரிய நடிகர்கள் சிறிய நடிகர்கள் பாராபட்சம் பாராமல் உழைப்பைக் கொட்டுகிற ஆளாயிற்றே.
அப்போது தான் சித்தப்பா விடுப்பு டாட் காம் என்கிற தளத்தைச் சொன்னார். அதன் சினிமா பக்கத்தில் புதிய படங்கள் மற்றும் கலைஞர்கள் விபரமெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றார். இரண்டாயிரத்து ஏழின் பிற்பகுதியில் எங்கள் பாடசாலைக்கு பின்னால் மன்னார் வலயக்கல்வி பணிமனைக்கு சொந்தமான கணினி ஆய்வுகூடம் இருந்தது. கணினி தொடர்பான கருத்தரங்குகள் அங்கு தான் நடக்கும். மன்னார் மாவட்டத்திலேயே அந்த நேரத்தில் இணையம் பார்க்க முடிந்த ஒரே இடம் அது தான். பாடசாலை முடிந்ததும் பிரத்தியேக வகுப்புகளுக்கு போவதற்கு முன்பாக ஒரு மணிநேரம் அங்கே ஓடிவிடுவேன். ஒரு மணி நேரத்திற்கு முப்பது ரூபாய். இப்படியாக 2007க்கு பிறகு தான் யுவன் தொடர்பில் கொஞ்சம் updates தெரிய ஆரம்பித்தது. என்ன படம் வருகிறது? எந்த படங்களுக்கு பேச்சு நடக்கிறது? இத்யாதி இத்யாதி. படங்களிப் பெயர்களை கூடவே கொண்டு போயிருக்கும் கொப்பியில் குறித்துக்கொள்வேன். இதனால் சித்தப்பாவின் DVD இல் படங்களைக் கண்டுபிடிக்க இலகுவாயிருக்கும்.
இரண்டாயிரத்து எட்டின் ஆரம்பத்தில் மன்னார் கிரிக்கட் நடுவர்களின் சம்மேளன பரீட்சையில் சித்தியடைந்து மன்னார் கிரிக்கட் லீக்கின் தொழில் முறை நடுவரானேன். வார விடுமுறை நாட்களில் மன்னார் கிரிக்கட் லீக்கிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் போட்டிகள் நடக்கும். நடுவராகப் போவேன். சாப்பாடும் அறுநூறு ரூபாவும் கொடுப்பார்கள். எனக்குரிய கொஞ்சம் சில்லறை செலவுகள் போக மீதிப் பணம் தொடர்பில் என்னிடம் திட்டங்கள் இருந்தது. பாடசாலையில் நான் மாணவத் தலைவராய் இருந்தேன். பிரதான வாயிலில் கடமையில் இருக்கிற போது சப்பாத்து அணியாத, tie கட்டாத, பாடசாலை காலுறைகளை அணியாத , சின்னம் அணிந்திருக்காத ஆட்களை வெளியே தடுத்து நிறுத்துவது வழக்கம். கொழுப்பில் வருபவர்களை கொண்டு போய் கக்கூஸ் கழுவ விடுவேன். ஆனால் அனைவரும் அப்படியல்ல. மிகுந்த வறுமையால் யாரும் அப்படி வருவார்கள். அவர்கள் வகுப்பை கேட்டுத் தெரிந்து கொள்ளுவேன். பிறகு மிச்சப்படுத்திருக்கும் பணத்தில் சப்பாத்து, tie , காலுறை அல்லது அப்பியாசக் கொப்பிகள் என்று வாங்கிக் கொடுப்பேன். கொடுக்கும் பொருளின் கண்மறைவுப் பிரதேசங்களில் YFA லோகோ இருக்கும். Tie என்றால் பிறப்பக்கம் திருப்பி உள்ளே இருக்கிற வெள்ளை துணியில் வரைந்து வைப்பேன். சப்பாத்தென்றால் பெட்டியின் மேல் இருக்கும். அப்பியாசக் கொப்பி என்றால் முன்பக்கத்தில் இருக்கும். ' யுவன் பெயரில் நற்பணி'. நான்கைந்து தடவைகள் இப்படி கொடுத்திருக்கிறேன். To be honest , அது எனக்கு கர்வமாயிருந்தது. மனதுக்கும் லேசாயிருந்தது.யுவன் பாடல் பற்றி சிலாகிப்பதற்கு நண்பர்கள் என்னைத் தேடுவார்கள். யுவன் பெயரில் உதவியைப் பெற்றுக்கொண்டவர்கள் புன்னகைப்பார்கள். இது இரண்டும் என் பாடசாலை நாட்களை சிறப்பாக்கியதில் முக்கியமானவை. எது செய்தாலும் யுவன். எங்கேயும் யுவன். இன்னமுமே என்னை யுவா என்று அழைக்கிற பாடசாலை நண்பர்கள் இருக்கிறார்கள். பாடசாலை பரீட்சைத் தாள்களில் கிஷோகர் என்று என் பெயர் இருக்காது. 'இளையபல்லவன் யுவா' என்று இருக்கும். ஆசிரியர்கள் முதற்கொண்டு அது நான் தான் என்று தெரியும். திருத்திய விடைத்தாள்களை கொடுக்கும் போது "இளைய... " என்று ஆரம்பித்துவிட்டு என்னிடம் கொடுத்துவிடுவார்கள். இளையபல்லவன் என்ற பெயர் கடல்புறா நாவலின் தாக்கம். நண்பர்களுக்கு நான் யுவா. ஒரேயொரு தடவை மட்டும் என் அரசியல் ஆசிரியர் சொன்னார் " தம்பீ... நல்லா படிக்கிற பொடியன். யுவன் யுவன் எண்டு விசர் புடிச்சு திரிஞ்சு துலையப் போறாய்". அவருக்கு என் மேல் மிகுந்த பிரியமும் அக்கறையும். உயர்தர பரீட்சைக்கு சில மாதங்கள் தான் இருந்தது.
" மிஸ் நான் கம்பஸ் போகாட்டி பாதி மொட்ட அடிக்கிறன்".
" ஓ! உன்ர பாதி மொட்டைக்கு வேலை தருவாங்க ".
நான் பரீட்சையில் சித்தியடைந்து, எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததை முதலாவதாகச் போய்ச் சொன்ன ஆசிரியர் அவர்தான்.
" ஆ... வாங்க யுவா. என்ன மாதிரி? ".
" District Rang பதினொண்டு மிஸ் "
" கெட்டிக்காரன் ".
நான் படிப்பை எதனோடும் எப்போதும் குழப்பிக்கொண்டதேயில்லை. என் நண்பி ஒருத்தியின் அம்மா எங்கள் அம்மாவிடம் வந்து முறைப்பாடு சொன்னார்.
" இஞ்ச புள்ள... எக்சாம் இன்னும் ரெண்டு மாசத்தில வருகுது. ஆனா நான் பாக்கிற நேரம் எல்லாம் உன்ர பொடியன் ரோட்டில நிண்டு கிரிக்கட் விளையாடுறான். ராவானா காதில வயரைக் கொழுவிக்கொண்டு மதில்ல படுத்துக் கிடந்து பாட்டுக் கேக்கிறான். பாக்க எனக்கே பதறுது. இவன் படிக்கிறது இல்லையா?"
பக்கத்து வீட்டிலிருந்த நிரூபன் அண்ணாவிடம் ஒரு MP3 player இருந்தது. அப்போது MP3 player எல்லாம் பத்தாயிரம் பேரில் ஒருவரிடம் தான் இருந்திருக்கும். தொலைபேசிகள் கூட back and white basic models தான். 2007,2008,2009 எல்லாம் யுவனின் அதிரி புதிரி வருடங்கள். 'தீபாவளி, சென்னை -28, சத்தம் போடாதே, பில்லா, பையா , பருத்திவீரன், யாரடி நீ மோகினி என்று யுவன் Stadium out sixes அடித்த ஆண்டுகள். நிரூபன் அண்ணாவும் ஒரு யுவன் விசிறி. அவரது MP3 இல் யுவன் collection இருக்கும். புதிய பாடல்களையும் தரவேற்றி வைத்திருப்பார். அவ்வப்போது இரவல் வாங்கி வளைந்திருக்கும் எங்கள் சுற்றுமதிலில் கிடந்தபடி மணிக்கணக்கில் பாடல் கேட்பேன். அப்போது தான் நண்பியின் அம்மா கண்டிருக்க வேண்டும்.
உயர்தர குழுச் செயற்திட்டம் உரிய நேரத்துக்குச் செய்யவில்லை என்று நானும் எனது நண்பர்களும் பாடசாலையில் இருந்து ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்கள் வீட்டில் நண்பர்கள் அனைவரும் கூடி இரண்டே நாட்களில் project ஐ முடித்தோம். மீதி நாட்கள் எல்லாம் பெரியகடையில் இருந்த நண்பன் நிரோஜன் வீட்டில் கழிந்தது. நிரோஜன் வீட்டு ஆட்கள் எல்லாம் மன்னாரில் இருந்து நீர்கொழும்புக்கு போய்விட்டிருந்தார்கள். வீட்டில் அவன் மட்டும் தான் இருப்பான். நல்ல Sound system வேறு வைத்திருந்தான். யாரடி நீ மோகினி பாடல்கள் வெளியாகியிருந்தது. **** the project... MP3 quality நன்றாயிருக்காது என்று மொஹம்ட் அண்ட் சன்ஸ் இல் ஒரிஜினல் CD வாங்கினேன். அப்போதே முந்நூறு ரூபாய்கள். 150 படங்கள் இருக்கிற DVD அறுபது ரூபாய்.
CD தேய்ந்து ஓட்டை விழும் அளவுக்கு அது கிடந்து சுற்றியது. எனக்கு ஞாபகமிருக்கிறது , நான் முதலே குறிப்பிட்ட Logic வாத்தியான மயூரனும் நானும் இதே நிரோஜனின் வீட்டில் இருந்து " இரவா பகலா குளிரா வெய்யிலா" பாடலை மட்டும் பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தோம். யுவன் பற்றிய சம்பாசனைகள் நான் இல்லாமல் நடவாது. என்னைச் சுற்றி யுவனை நேசிக்கிற வெறித்தனமான ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தேன். நண்பர்களான அம்மு, மைக்கேல், சுதன் , ஸ்டனிஸ்லஸ் எல்லோரும் YFA லோகோவை தங்கள் கொப்பிகளில் வரைய ஆரம்பித்தார்கள். காதலித்த நண்பர்கள் என்னிடம் வந்தார்கள். தமிழ்மொழித்தின போட்டிகளுக்கு நான் போய் வருவதனால் தங்கள் காதல் கடிதங்களில் இடைச்செருகலாக சேர்த்துக்கொள்ள கவிதைகள் எழுதித்தரக் கேட்டார்கள். புத்தம் புதிதாய் வெளிவந்து இன்னமும் பிரபலமாகாத யுவனின் காதல் பாடல் ஒன்றிலிருக்கும் வரியை தூக்கிப் போடுவேன். 2010இல் இது ஒரு நாள் Back fire ஆனது. " காதல் சொல்ல வந்தேன் " படத்தின் "அன்புள்ள சந்தியா" பாடலில் வருகிற,
" என்றோ யாரோ உன் கையை தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாகக் கூடாதா ?"
என்ற வரியை எழுதிக் கொடுதேன். அப்போது நான் பல்கலைக் கழகத்தின் புகுமுக மாணவன்.
அன்றிரவு அவன் தொலைபேசி எடுத்தான்.
" சனி நாயே... பாட்டையா எழுதின்னீ?"
" ஏண்டா ?"
" அவள் அது பாட்டு எண்டுறாள். சொந்தமா முதல் கவிதை எழுதட்டாம். பிறகு லவ் பண்ணலாமாம் எண்டு சொல்லிட்டாள் ".
" விடு மச்சான். அடுத்த படம் வரட்டும், செட் பண்ணிரலாம்"
" போடா ********** "
Matter of fact, ஒரு யுவன் பைத்திய நிலை. உயர்தரம் எழுதியாயிற்று. பரீட்சை முடிவுகள் வர நான்கைந்து மாதங்கள் ஆகலாம். கிரிக்கட் ஆடினோம், ரெஸ்லிங் பார்த்தோம் , இரவானால் வெளிய அலைய முடியாது. எங்கே எப்போது கிளைமோர் வெடிக்கும் , யாரைச் சுடுவார்கள் , யாரை தூக்குவார்கள் என்பதெல்லாம் சொல்ல முடியாது. நண்பர்கள் யாரேனும் ஒருவனின் வீட்டில் கூடிக் குடித்தார்கள். நான் காதில் ஹெட்ஃபோனுடன் வீட்டு மதிலின் மேல் கிடப்பேன்.
உயர்தரப் பரீட்சை முடிந்து அடுத்தவாரமே ஒரு கணினி பயிற்சிநெறியில் நேர்ந்தேன். முதன் முதலில் ஒரு ஈ-மெயில் ID திறந்தது அப்போது தான். வயது பத்தொன்பது. yfamnr@yahoo.com.
Mnr என்பது மன்னாரைக் குறிக்கும். Mail திறந்த அடுத்த நாள் ஒரு யோசனை. யுவனிடமும் ஒரு ஈ-மெயில் ஐடி இருக்கும் அல்லவா? இதை நினைத்த மாத்திரத்திலேயே சந்தோசம் விரவி உடலெங்கும் பாய்ந்தது. கணினி மையத்துக்கு ஓடினேன். மூன்று நான்கு நாட்கள் மணிக்கணக்கில் தேடியதில் இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பும்படியான ஒரு ஈ-மெயில் ஐடி கிடைத்தது. அப்போதெல்லாம் Yahoo தான் பிரபலமான search engine. இப்போதைய கூகிள் போல அவளவு friendly கிடையாது. தரவுகளும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. கிடைத்த விலாசத்துக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன். அது யுவனுடைது என்பதிலோ அல்லது அங்கிருந்து பதில்வரும் என்பதிலோ எனக்கு ஐமிச்சமே இருந்தது.
அடுத்தநாள் போய் ஈ-மெயிலை திறந்தால், எனது மெயிலுக்கு பதில் வந்திருந்தது. மின்னஞ்சலைத் திறந்துவிட்டு படிக்காமலே பார்த்துக்கொண்டிருந்தேன். சந்தோசத்தில் கண்களில் நீர் கட்டியது. பெரிய சத்தமாய் ஹூ என்று கத்தினேன். நிலைய இயக்குனரான மடுத்தீன் சேர் வந்து " இஞ்ச தம்பி.. இந்தக் குரங்கு சேட்டை விடுறதா இருந்தா வர வேணாம் " என்றார். யுவனிடம் இருந்து பதில் வந்தமைக்கு நான் பெருஞ்சத்தமாய் 'ஹூ' அடித்ததே குறைந்தபட்சம் தான். சட்டையக் கழற்றி சுற்றிக்கொண்டு ஓடவேண்டும் போலவும், அங்கிருந்த அத்தனை பேரையும் வாரியணைத்து அன்பொழுக முத்தமிட வேண்டும் போலவும் தோன்றியது. கூட வந்திருந்த நண்பன் நிஷாந்தனிடம் சொன்னேன். அவன் நமீதா HD wallpaper தரவிறக்குவதில் குறியாய் இருந்தான்.
நண்பர்களைப் போல நானும் யுவனும் ஈ-மெயில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். நான் நண்பர்களைப் போல என்று குறிப்பாய் சொன்னதற்கு காரணம் உண்டு. சில ஈ-மெயில்களுக்கு பிறகு யுவனின் Humbleness ஐ sense செய்துகொண்டேன். தான் ஒரு பெரும் பிரபலம் என்ற மண்டைக்கனமோ தனது லட்சோப லட்சம் ரசிகர்களில் அடிமட்ட ரசிகன் ஒருசவனுடன் தான் பேசிக்கொண்சிருக்கிறேன். இவன் ஒன்றும் முக்கியமானவன் அல்ல என்ற அசிரத்தோயோ யுவனிடம் இருந்ததில்லை. பதின்மவயது, ஆர்வக்கோளாறு, யுவனிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற மிதப்பு இவை எல்லாம் சேர்ந்து இப்போது நினைத்தால் சிரிப்பாய் வருகிற silly ஆன கேள்விகளை எல்லாம் யுவனிடம் கேட்டு வைப்பேன். அத்தனைக்கும் பதில் வரும். ஒரு நண்பன் தான் அதைச் செய்வான். Yuvan this, Yuvan that என்று யுவனின் குணாதிசயங்கள் அருமை பெருமைகளை எல்லாம் இப்போது போல சமூக வலைத்தளங்களில் அப்போதேல்லாம் காணமுடியாது. இப்போதிருக்கும் intense fan trend அப்போது சமூக வலைத்தளங்களில் ஆரம்பித்திருக்கவில்லை. Facebook அறியப்படக்கூட இல்லை. இரண்டாயிரத்துப் பத்தில் நான் ஃபேஸ்புக் தொடங்கிய போதும் Facebook மிகவும் basic ஆக இருந்தது. ஒரு dating site ஆகவும் barn buddy விளையாடுகிற இடமாகவும் அது இருந்தது. ஃபேஸ்புக்கில் Kishoker Andres Lionel Yuva என்ற பெயரில் அக்கவுண்ட் திறந்தேன். என் பெயருக்குப் பின்னால் மெஸ்ஸியும் யுவனும். டுவிட்டர் அக்கவுண்ட் கூட Kishoker Yuva தான். இலங்கைக்கான ஃபிரான்சின் உதவி தூதுவராக இருந்த நண்பனான் விக்டர் மயூரின் இப்போதும் என்னை யுவா என்று தான் கூப்பிடுவான்.
தினமும் ஒரு மின்மஞ்சல் அனுப்புவேன். அடுத்த நாள் அதற்கான பதில் யுவனிடமிருந்து வந்திருக்கும். டென்மார்க்கில் வசிக்கும் என் மச்சானிடம் யுவன் எனக்கு மின்னஞ்சல் அனுப்புகிற கதையைச் சொன்னேன். அவனும் பெரிய பாய் ரசிகன். அவன் சொன்னான் " டேய் அது அவனா இருக்காதுடா. யாரும் அசிஸ்டெண்ட் வச்சு தான் இதெல்லாம் செய்வாங்க. உனக்கு மினக்கெட்டு யுவன் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறானா? ஆளையும் மண்டையையும் பார் " என்றான். குடுகுடு என்று ஓடிப்போய் யுவனிடமே இதைச் சொன்னேன். " இல்லை. அது நான் தான் " என்ற பதில் யுவனிடமிருந்து வந்ததும் ஆசுவாசமானது. நண்பர்கள் மத்தியில் the guy who speaks with Yuvan என்பது எவளவு பெரிய மகோன்னதமான உணர்வையும் மரியாதையையும் தந்தது என்பதை எழுதி மாளாது. "வேற்று மொழிப் படங்களுக்கு எல்லாம் இசையமைக்கு திட்டமே இல்லையா ?" என்று கேட்டேன். " சித்தார்த் நடிக்கப்போகும் ஒரு ஹிந்தி படத்திற்குப் பேச்சு நடக்கிறது. ஒரு ஆங்கிலப் படத்துக்கும் பேச்சு நடக்கிறது " என்றார். சித்தார் நடித்த Striker என்ற ஹிந்திப் படத்துக்காய் பாடலொன்றை யுவன் போட்டிருந்தார். இந்தச் செய்தியை சில மாதங்களுக்குப் பிறகு விடுப்பு டாட் காம் சொன்னது. ஒரு சினிமா செய்தித் தளத்துக்கும் முன்பதாக exclusive ஆக எனக்குத்தான் அந்தச் செய்தி தெரியும் என்பதும், அந்த நேரத்தில் யுவனையும் என்னையும் சேர்த்து ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேச்சுக்களின் விபரம் தெரியும் எனது எப்படியான Privilege? சந்தோச மிகுதியில் தூக்கமில்லை. காண்பவரிடமெல்லாம் இதை ஒப்பித்தேன். அவளவு புழுகமாய் இருந்தது. " அடுத்த என்ன படம் மச்சான் வருது?" நண்பர்கள் என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். Dude.. Yuvan just made me a ******** celebrity. யுவனுக்கும் எனக்குமான உரையாடல்கள் மாதங்கள் கடந்து நீண்டது.
அடிக்கடி என் குடும்பத்தைப் பற்றியும் யுத்த நிலவரம் மற்றும் எனது பாதுகாப்பு பற்றி விசாரிப்பார். நான்காம் கட்ட ஈழப்போரின் போது ராணுவம் அதிககாலம் சண்டையிட்டது எங்கள் மாவட்டமான மன்னாரில் தான். ஆவணி முதல்வாரம் வெள்ளாங்குளம் இராணுவத்தின் கையில் விழுந்தது. அதன்பிறகு எட்டுமாதங்கள் அனல்பறந்த சண்டை மன்னாரில் நடந்தது. மன்னார் இராணுவத்தின் கையில் விழுந்து நான்கு மாதங்கள் ஒட்டுமொத்த சண்டையுமே முடிந்துவிட்டது. மன்னாரில் எட்டு மாதங்கள் இராணுவம் தேங்கேவேண்டியிருந்த காரணம் பிரிகேடியர் பால்ராஜ். அவர் அடம்பன் முன்னரங்க களத்தில் நின்றார். பால்ராஜ் அண்ணை மாரடைப்பில் இறந்த பின் மன்னாரும் ராணுவம் வசமானது.
மன்னாரில் சண்டை கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம் மன்னாரின் நகரப்பகுதிய பொதுமக்களை விட இராணுவத்தினரே அதிகமிருந்தார்கள். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை ராணுவம் கையகப்படுத்தியது. இராணுவ வீரர்களுக்கு வைத்தியம் பார்த்த மிச்சம் தான் பொதுமக்களுக்கு. மன்னார்-தலைமன்னார் வீதியில் சகட்டு மேனிக்கு கிளைபோர் வெடித்தது. பெருமளவான படையினர் கொல்லப்பட்டார்கள். அந்த கடுப்பில் இராணுவத்தினர் பொதுமக்களை கொன்றார்கள். தள்ளாடியில் இருந்து ஆட்டிலெறி அடிக்கும் சத்தம் 24/7 கேட்டுக்கொண்டிருந்தது. மன்னார் பாலம் கட்ட வந்திருந்த ஜப்பானியர்கள் காதைப் பொத்திக்கொண்டு தெருவில் நிற்பார்கள். முன்பு போல சகஜமாக நடமாட முடிவதில்லை என்றாலும் பகல் நேரத்தில் ஒரு மணிநேரமாவது கணினி நிலையத்துக்ப் போய்விடுவேன். ஒருநாள் இரவு எங்கள் வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவிலிருந்த மன்னார் பொதுவிளையாட்டரங்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது புலிகளின் ஈருடக படைப்பிரிவு தாக்குதல் நடாத்தியது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாய் சண்டை நடந்தது. இந்தத் தொடர் நிகழ்வுகளாலும், மன்னாரில் விடுதலைப் புலிகளின் தொடர்புகளை துண்டித்துவிடும் நோக்குடனும் இராணுவம் மன்னாரின் தொலைபேசி மற்றும் அது சார்ந்த சேவைகளை துண்டித்தது. அடுத்த நாள் கணினி நிலையம் போனேன். என் ஒட்டுமொத்த சந்தோசத்தையும் குலைத்துப் போட்ட செய்தியை அந்த ஊழியர் சொன்னார்.
" ஆமி நெற்றையும் கட் பண்ணிட்டான்".
அவளவு தான், முடிந்தது. என் சில மாத சந்தோசத்தை , என் ஆறுதலை, என் இளைப்பாறுதலை, என் யுவனை இலங்கை இராணுவம் என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. நண்பர்கள் காதல் தோல்வியா என்று கேட்கும் அளவுக்கு என் மனநிலை மோசமாய் இருந்தது. அதுவும் ஒருவகையில் காதலில் விழுந்த அடி தான். என் யுவனுடன் இனிமேல் பேச முடியாது. அழுகையாய் வந்தது. எதுக்கு வரட்டுக் கௌரவம்? கணினி நிலையத்தின் பின்னால் இருந்த குருசுக்கடலின் கரையில் நின்று அழுதேன்.
சண்டை முள்ளிவாய்க்காலில் உக்கிரமாய் நடந்துகொண்டிருக்கிறது அல்லது முடிந்த முதலாவது வாரம். யுவனுக்கு ஒரு விருது அல்லது கௌரவம் கிடைக்கிறது. விழா மேடையில் யுவன். இதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேனா அல்லது ஏதேனும் DVD இல் பார்த்தேனா என்று சரியாய் ஞாபகம் இல்லை. அப்போது DTH கிடையாது. சன் டிவி மட்டும் TELO அமைப்பின் புண்ணியத்தில் வரும். ஆனால் நட்சத்திரக் கலைவிழாக்கள், விருதுவழங்கும் விழாக்கள் , பேட்டிகள் என்பனவற்றை DVD ஆக அடித்து விற்பார்கள்.
விருதைப் பெற்றுக்கொண்ட யுவன் பேசுகிறார்.
" என்னோடு ஒரு இலங்கை பையன் தொடர்பில் இருந்தான். சண்டை கடுமையான பிறகு அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவன் உயிரோடு இருக்கிறானா என்பது கூட தெரியாது. அவன் உயிரோடு இருக்கிறான் என்றால் சந்தோசப்படுவேன். அப்போது இந்த விருதை என்னால் கொண்டாட முடியும் "
இதை நான் பார்க்கிறேன். கண்களில் நீர் கோர்த்து வழிந்தது. இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்? லட்சக்கணக்கான அவர் ரசிகர்களில், நான் யுவனின் ஞாபகத்தில் இருக்கிறேன் எனதை விட ஒரு யுவன் ரசிகனுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? என் ஆதர்ச நாயகன் என்னைக் குறித்து பேசுகிறான். கிஷோகரைப் பற்றி பேசுகிறான். இலங்கையின் ஏதோவொரு மூலையில் இருக்கிற ஒரு Nobody பற்றி பேசுகிறான். அந்தக் கணத்தில்தான் யுவன் என்ற மனிதன் மேல் என்றைக்கும் இல்லாத ஒரு மரியாதை உணர்வு வந்தது. என்னைக் குறித்துப் பேசியதால் வந்தது அல்ல மாறாக vulnerable ஆக இருந்த தன் ரசிகனை குறித்த அந்த கலக்கம் என்னை அசைத்துப் பார்த்தது. Why the Fuck he should bother ? " இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இந்த விருதை வாங்கியதில் பெருமையாய் உணர்கிறேன். இதுக்கு காரணமாக இருந்த இயக்குனர் , தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி " என்று சொல்லிவிட்டு மதுரமான அந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடிவிட்டு மேடையிறங்கியிருக்கலாம். ஆனால் அப்பழுக்கற்ற அந்த ஆத்துமம் , தான் பெருமைப்படுத்தப்பட்ட அந்தக் கணத்திலும் தனது ரசிகனை நினைத்தது. அவனுக்காய் வருத்தப்பட்டது. அந்த மனிதன் தான் யுவன், பிறகு தான் இசையமைப்பாளன் என்று புரிந்து கொண்ட நாள் அது. யுவன் என்னைக் குறித்துப் பேசியதை நான் அறிந்துகொண்டேன். ஆனால் யுவனுக்கு இதை தெரியப்படுத்த முடியாது. அதற்கான மார்க்கமிருக்கவில்லை. ஆனால் " தலைவா.. இதோ நான் இருக்கிறேன். நீ அந்த விருதை கொண்டாடித் தீர்த்திரு" என்று சொல்லிவிட வேண்டும் என்ற ஒரு வெறி அன்றிலிருந்து மனதுக்குள் கனன்றுகொண்டிருக்க ஆரம்பித்தது.
இது நடந்து தோராயமாக ஒருவடம் கழித்து மொரட்டுவைப் பல்கலைக் கழகம் போனேன். அதற்குள் ஃபேஸ்புக் , டுவிட்டர் , Blogging எல்லாம் trend இல் வந்து ஈ மெயில் என்பது வெறும் தொழிமுறைக்குரிய பரிவர்த்தனை ஊடகமாகிப் போயிருந்தது. பல்கலைக்கழகம் போனதும் வாய்ப்புக்கிடைத்த தருணத்தில் முதல் வேலையாக எனது ஈ-மெயிலை access செய்ய முயற்சித்தேன். ஏன் என்று ஞாபகமில்லை, இன்று வரைக்கும் yfamnr@yahoo.com என்ற அந்த முகவரியை என்னால் recover செய்ய இயலவில்லை. வேறொரு ஈ-மெயில் விலாசத்தில் இருந்து யுவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். Reception not found என்பது போல செய்தி வந்ததாய் ஞாபகம்.
பல்கலைக்கழக்கத்தின் இறுதியாண்டில் நான் தற்கொலைக்குத் துணிந்த என்னை உடைத்துப்போட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது. உடந்து கிடந்த என்னை கொஞ்சம் கொஞ்சமாய் ஒட்டவைக்க நான்கு விசயங்கள் தான் உதவின.
வாசிப்பு
மெஸ்ஸி & பார்சிலோனா
Temple monkeys
And யுவன்.
தீவிரமாய் இவை நான்கையும் என் நாளாந்த வாழ்க்கைக்குள் கொண்டு வந்தேன். கொஞ்சம் ஆசுவாசிக்க முடிந்தது. வெறுமையான என் இரவுகளை நிரப்பியது யுவன் தான். யுவன் பாடல்கள் depression ஐ போக்கிவிடும் என்று இங்கே நிலவும் பொதுமைப்பாடான கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. யுவன் பாடல்கள் ஒரு போதும் என் டிப்ரஷனை போக்கியதில்லை. மனமுடைந்து துவண்டிருக்கும் ஒருவனுக்கு " நினைத்து நினைத்துப் பார்த்தேன் " எப்படி டிப்ரஷனை போக்குகிற மருந்தாகும்? மாறாக யுவன் பாடல்கள் என்னோடு கூட இருந்து அழும். எனக்காய் அந்த இசை இரங்கும். என்னோடு கூட வருகிற இசை அது. நான் என்ன மனநிலையில் இருந்தாலும் அந்த ஒருவன் எனக்காய் பாட்டு வைத்திருந்தான். ஆண்டுகள் தோறும் என் கூட வந்தான்.
கடந்து ஓடிவிட்ட இந்த பனிரெண்டு ஆண்டுகளில் என்றேனும் ஒருநாள் " நான் உயிருடன் இருக்கிறேன், அந்த விருதைக் கொண்டாடு தலைவா " என்று யுவனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு மட்டும் அணையால் கிடந்து என்னை அருட்டிக்கொண்டேயிருக்கும். தூயதொரு இதயம் கொண்ட அந்த உள்ளத்து ஆறுதல் கிடைக்கவே வேண்டும் என்று தீர்க்கமாய் முடிவெடுத்திருந்தேன்.
இந்தக் காலத்துக்குள் ஃபேஸ்புக்கில் நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்திருந்தது. நண்பர் ஹமீத் யுவனுடன் எடுத்த புகைப்படங்கள் பதிவேற்றுவதை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஹமீதுடன் நட்பாகி ஒரு வருடத்துக்கும் மேலாக இது பற்றி எதுவுமே பேசியிருக்கவில்லை. அவர் யுவனை சந்தித்திருக்கிறார், யுவனுக்கு அவரை தெரிந்திருக்கிறது என்தற்காய் அவரைப் போய் கடமைப்படுத்துவது அநாகரீகமாய்ப் பட்டது. அதனால் பேசாமல் இருந்தேன். பிறகும், கிட்டத்தட்ட இறந்து போய்விட்டதாய் நம்பப்பட்டுக்கொண்டிருக்கும் நான் உயிருடன் இருப்பதாவது யுவனுக்கு தெரியவேண்டும் என்பதற்காய் விசயத்தை பதிவு செய்து ஹமீதுக்கு அனுப்பினேன். வாய்ப்பு கிடைக்கும் போது யுவனிடம் இதை தெரியப்படுத்துங்கள் என்று சொல்லியிருந்தேன்.
சில மாதங்கள் கடந்து போனது. இரண்டு நாட்களுக்கு முன் ஹமீதிடம் இருந்து வாட்சாப்பில் ஒரு செய்தி. " ப்ரோ ரெடியா இருங்க. இன்றைக்கு யுவனை பாக்குறோம்".
ஆஸ்திரேலியாவில் சாமம் இரண்டரை. நெஞ்சு கிடந்து அடிக்கிறது. வெளிப் பிராக்கை தவிர்த்துவிட்டால் என் இதயம் அடித்துக்கொண்டிருப்பது எனக்கு கேட்கிறது. எதிர்பார்த்த அந்த அழைப்பு வருகிறது. வீடியோ கோல். எதிர் முனையில் யுவன். இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது என்கிற பூரண நம்பிக்கை வரவில்லை. மிகுந்த கஷ்டப்பட்டு பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொள்கிறேன். எதிர் முனையில் என் தலைவன் " ஹாய் ஹாய்.. எப்புடி இருக்கீங்க என்கிறான் ". எனக்கு Gaspar Noe படங்களில் வருகிற காட்சிகள் போல அத்தனையும் Magical realism ஆக இருக்கிறது. வாய் வரண்டு நாக்கு அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. மிகுந்த நெகிழ்ச்சியோடு எதிர்முனையில் தலைவன் ஏதோ பேசுகிறான். நானும் ஏதோ பேசுகிறேன். என்ன ஏது என்று realize செய்வதற்கான ஸ்தூலமாக மனது இல்லாமல் கிடந்து அடித்து அல்லோலகல்லோலப் படுகிறது. அதுவும் , " All these years I have been think of you. உங்களுக்கே தெரியும். stage ல கூட அத சொன்னேன் " என்று யுவன் சொல்லியபோது எனக்கு எழுந்த உணர்வை எப்படி எழுதித் தீர்ப்பேன்?
சாதாரணமாக யுவனைப் பார்க்கவோ இரண்டொரு வார்த்தைகள் பேசவோ ஒரு வாய்ப்பு என்போல் யுவன் வெறியனுக்கு கிடைத்தாலே அதைப் பொன்னெனப் போற்றுவேன். அப்படியிருக்க, பனிரெண்டு ஆண்டுகள் கழித்தும் நான் குறித்த ஞாபகங்களைச் சுமந்து கொண்டு அதை என்னிடம் express செய்கிற தருணம் அவளவு பவித்திரமானதாய் எனக்கு இருக்கும்? என் வாழ்க்கையில் நடந்த மிகச் சொற்பமான நல்ல விடயங்களில் இது முக்கியமானது.
இரண்டு தடவைகள் network பிரச்சினையால் அழைப்பு துண்டிக்கப்பட்டபோதும் மீண்டும் அழைத்தான் என் தலைவன். பிறகு ஒரு voice note வந்தது. மீண்டும் மிகச் சீக்கிரமாய் பழைய நாட்களைப் போலவே உன்னுடன் இணைந்து கொள்கிறேன் என்று அந்த voice note சொன்னது. நான் சொன்னதை யுவனிடம் ஹமீத் சொன்னபோது யுவன் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டதாய் சொன்னார். என்னுடன் பேசிக்கொண்டிருந்த தலைவன் முகத்தில் அது அப்பட்டமாய் தெரிந்தது.
Do you know how ********** emotional I am?
தமிழ் திரையுலகின் இசை இளவரசனும் அவனது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனுக்கும் இடையிலான பிணைப்பு இதைவிட அழகான fairy tail ஆக முடிந்திருக்க முடியாது. யுவனிடம் பேசியதை ஒரு சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலர் " இது ஒரு சினிமா போல " இருக்கிறது என்றார்கள். Yeah... One hell of a emotional one.
Last but not least , யுவனை எப்படியும் சந்தித்தோ அல்லது யார் மூலமாகவோ எப்படியேனும் என் தகவலைச் சொல்லியிருப்பேன். ஆனால் இவளவு விரவிலும் மனதுக்கு மிக நெருக்கமான வகையிலும் இந்த reunion ஐ மாற்றிய பெருமை நண்பர் ஐ சேரும். பெண்ணின் மனது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒரு யுவன் வெறியனின் மனதும் இன்னொரு யுவன் வெறியனுக்கு தான் புரியும். மிகுந்த effort எடுத்து இதை சாத்தியமாக்கினார். ஹமீது, லவ் யூ டார்லிங் ❤️
சிரித்த எங்கள் இரண்டு முகங்களும் இனிமேலும் பிரியாதிருப்பதாக ! To be continued...
 
 
 
 
play_72dp.png
 
 
 
 
 
 
 
 
123322279_3920046184681759_6501018434224
 
 
123161990_3920086848011026_2820910658656
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.