Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு!

spacer.png

பேரா.நா.மணி

1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார்.

வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் துறையை சார்ந்தவர்களுக்கு இந்த அச்சமும் பீதியும் திகிலூட்டியது. கோபம் வெறுப்பு கலந்தும் இருந்தது. 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் " மலைப்புற அறிவியல் விழிப்புணர்வு கலைப் பயணம்" என்ற ஒன்றை நடத்தியது. இது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை உதவியோடு நடத்தப்பட்டது. இந்தக் கலைக் குழு, மலைக்குள் செல்ல அதிரடிப்படை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை ஆகிய இரண்டும் இரண்டு வாகனங்களில், இருபது ஆயுதம் தாங்கிய போலீசாரோடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. சிறுநீர் கழிக்கக் கூட இரண்டு ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் வந்தனர். இதன் விளைவாக, பொது மக்கள் கண்டுகளிக்க வேண்டிய கலைநிகழ்ச்சிகளை அதிரடிப்படை காவலர்கள் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்பட்டது.

spacer.png

இத்தகைய வீரப்பனைப் பற்றி வெளி வந்துள்ள செய்திகள், அவன் யாரையேனும் கடத்தி வைத்து இருத்தல், சுட்டுக் கொல்வது ஆகிய நேரங்களில் வரும் செய்திகள் எனப் பலவும் உணர்ச்சி பூர்வமாகவே இருந்தது. அந்த செய்திகளில் பல ஒன்று, மிகை மதிப்பீடாக இருந்தது. அல்லது, குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த இரண்டுக்கும் இடையில் வீரப்பன் யார்? அவனது உண்மையான வரலாறு என்ன? என்று அறிந்து கொள்ள தக்க ஆதாரப்பூர்வமான புத்தகங்களே இல்லை என்றே கூற வேண்டும். வீரப்பன் பற்றிய மிகை மதிப்பீடு அல்லது குறை மதிப்பீடு அல்லது அவதூறு என்பதைத் தாண்டி, வீரப்பன் யார் என்பதற்கு சிறு விளக்கம் அளித்த புத்தகம் " வீரப்பனுடன் பதிநான்கு நாட்கள்" என்ற புத்தகம் மட்டுமே. கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட வன உயிரியல் பத்திரிகையாளர்கள் தாங்கள் வீரப்பனோடு இருந்தது பற்றி எழுதிய புத்தகம் அது.

வீரப்பன் நூலின் உருவாக்கமும் சிக்கல்களும்

இந்தக் குறையை போக்கியது மட்டுமல்ல, வீரப்பனின் முழு உண்மை வரலாற்றையும் தமிழ் சமூகத்திற்கு படைத்து அளிக்கும் பணியை பத்திரிக்கையாளர் பெ. சிவசுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்கள், காவல் துறை, வனத்துறை, மத்திய மாநில அரசுகள் ஆகிய எல்லோருக்கும் உண்மையில் இது ஒரு பாடப்புத்தகம். வனம், வன உயிரிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், பாதுகாப்பு, அதன் மேலாண்மை போன்ற விசயங்களில் தக்க விழிப்புணர்வு கல்வியை இப்புத்தகம் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" என்ற இந்த நூலின் ஆசிரியர் சிவசுப்பிரமணியம், இவ்வளவு காத்திரமாக, இந்தப் படைப்பை உருவாக்க என்ன காரணம்? ஒரு பத்திரிகையாளராக யாரும் செய்யத் துணியாத இந்த பணியை செய்ய வேண்டும் என்ற துணிவும், நேர்மையும், என்ன விலை கொடுத்தேனும் வெளி உலகிற்கு இந்த விசயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்ற பத்திரிகை அறம் சார்ந்த அற்பணிப்பு உணர்வுமே காரணம். அந்த அற்பணிப்பு உணர்வுக்காக அவர் கொடுத்த விலை மிக மிக அதிகம். இதைவிடவும் மோசமான சிக்கல்கள் சவால்கள் அடக்குமுறைகளை சந்தித்து தான் எதிர்கால சக பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதற்காக இவர் வாழ்ந்து காட்டி உள்ளார் என்றும் கூறலாம்.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் என்று எட்டு கடுமையான பொய் வழக்குகளை இதன் நிமித்தம் அவர் சந்திக்கிறார். ஊடகத் துறையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பாக இருக்கும் சட்டங்கள் கூட பயன்படாத அளவுக்கு கிரிமினல் வழக்குகள் அவர் மீது புனையப்படுகிறது. இந்த எட்டு வழக்குகள், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர், கோவை, கோபி என பல நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்த வழக்குகள் காரணமாக அவரது வாலிப வயது முழுவதும் (32 வயது முதல் 42 வயது வரை) நாசமடைகிறது. வழக்குகளில் ஆஜராக, வாய்தா பெற என்று பத்தாண்டுகள் கழிந்து விடுகிறது. இதற்காக, இவர் 4,85,000 கிலோமீட்டர் இரவு பகலாக பயணம் செய்து உள்ளார். 1993 ஆம் ஆண்டு முதல் 2000 வரை, பல்வேறு காலகட்டங்களில் வீரப்பனை சந்தித்து பேட்டி எடுத்து வெளி உலகிற்கு சொன்னது இவரது மிக முக்கிய பங்களிப்பு.

 

இப்போது இவர் "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதனைப் படிக்கும் போது, வீரப்பன் வரலாற்றை நூலாகக் கொண்டு வர, நூலாசிரியர் சிவசுப்பிரமணியம் எடுத்த முயற்சிகள் தெரிகிறது. சுமார் 1000 பேரை இதற்காக சந்தித்து உரையாடி உள்ளார். அந்த வனம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து உள்ளார். நம்மையும் கூட அவரோடு பயணிக்க வைக்கிறார். வீரப்பன் வரலாற்றில் தொடர்புடைய பல மனிதர்களின் அரிய புகைப்படங்கள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எனத் தேடிச் சேர்த்துள்ளார். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் துடிப்பான நடையில் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளார். நூலைக் கையில் எடுத்தவர் எவரும், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை, உட்கரு. அற்புதமான புனைவு இலக்கியவாதிகள், மிகச் சிறந்த துப்பறியும் கதாசிரியர்கள் என யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உள்ளடக்கம். திருப்பங்கள்... சம்பவங்கள்... இவை திகிலூட்டுகிறது. மனதை படபடக்க செய்கிறது. இதயத்தை வலிக்கச் செய்கிறது. கண்ணீரையும் வர வரவழைக்கிறது. பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்தக் காட்டை விட்டு வெளியே வர மனம் மறுக்கிறது.

வீரப்பன் வரலாற்றின் முதல் பகுதி, நமக்கு என்ன சொல்கிறது? மேட்டூர் அணை கட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்ட வீரப்பன் உள்ளிட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருந்தால் இந்த அவலச் சுவை மிகுந்த வரலாறு உருவாகாமல் தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தில் வாழும் மக்களுக்கு, அவர் தம் வயிற்றுப் பாட்டிற்கு உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டிருந்தால் மதிப்பிடவே முடியாத யானைத் தந்தம், சந்தன மரங்கள் உள்ளிட்ட செல்வங்கள் கொள்ளை போனது தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய துறைகளின் ஊழியர்கள், அத்தி பூத்தது போல வெகு சிலரே அத்துறையின் நோக்கங்களுக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அது தான் இந்த அவலத்திற்கு காரணமா?

 

spacer.png

தமிழக கர்நாடக அதிரடிப்படையில் பி. ஸ்ரீ நிவாஸ், சிதம்பரம் போன்று விரல் விட்டு எண்ணும் அளவிலான ஊழியர்களே காட்டின் உண்மையான காவலர்களாக உள்ளனர். உயிரைப் பணயம் வைத்து உயிர் கோளத்தின் ஒரு பகுதியை பாதுகாக்க துடித்து உள்ளனர். உயிரைப் பணயம் வைக்க தயாராக உள்ளனர். எல்லோரும் இவ்விருவராக இருந்திருந்தால் வீரப்பன் எப்போதே பிடிபட்டு இருப்பானே! அல்லது உருவாகாமல் கூட தடுக்கப் பட்டிருக்குமோ? அப்படி இல்லாமல் பெரும்பாலானவர்கள் அரசுத் துறைகளில் அதன் அடிப்படை இலக்குகளுக்கு எதிராக இருப்பது எதனால்? அரசியல்வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் இல்லாமல் இருந்தால் இத்தகைய செயல்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாமோ? இவை எல்லாம் தாண்டி பணம் பணம் பணம் என்ற படத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பொருளாதார சூழல் தான் காரணமா? என்ற கேள்விகளை இந்த புத்தகம் வீரப்பன் வாழ்க்கை வழியாக ஆழமாக எழுப்புகிறது.

வீரப்பனுக்கு பிந்தைய வனம், வன வளம், விலங்குகள் எப்படி இருக்கிறது? வீரப்பன் மரணத்திற்கு பிறகு வனத்திற்குள் உருவாகியிருக்கும் இராட்சத பண்ணைகள், ஆழ்துளை கிணறுகள், வெட்டப்பட்ட மரங்கள், அங்குள்ள பணப் பயிர்கள் உறிஞ்சி குடிக்கும் நீர், ரிசார்ட்டுகள், உயர்ந்து நிற்கும் நிலத்தின் மதிப்பு இவை எல்லாம் எந்தவிதமான பாதிப்புகளை வனத்தின் மீது உருவாக்க இருக்கிறது? என்று நினைத்து பார்க்க கூட யாருக்கும் இப்போது நேரமில்லை. அப்போது வீரப்பன் ஒருவரே இப்போது?

வயிற்றுப் பாட்டுக்காக, வீரப்பனுக்கு உதவி செய்த ஒரு சில வன மக்கள், பழங்குடிகள் ஆகியோருக்காக ஒட்டு மொத்த வன மக்களின் வாழ்க்கை முறையே மாறிப்போகும் வேலையை தமிழக கர்நாடக வனத்துறை காவல் துறையினர் செய்து விட்டனர். அம்மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வில் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வனத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்! இதைப் பற்றிய கணிப்புகள் யாரிடம் உள்ளது? இந்த கேள்விகளையும் சேர்த்தே தான் இந்தப் புத்தகம் எழுப்புகிறது.

வீரப்பன் ஓர் காவிய நாயகன் போன்ற ஓர் பிம்பத்தை கட்டி எழுப்பும் முயற்சியும் நடைபெறுகிறது. அது வீரப்பன் உயிரோடு இருக்கும் போதே தொடங்கி ஆட்டம். அதற்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. யானைத் தந்த வேட்டை, சந்தனக் கட்டை கடத்தல், காடுகள் அழிப்பு ஆகியவற்றை பாதுகாக்க புறப்பட்ட கதாநாயகன் பி. ஸ்ரீ நிவாஸ், அவனது தோழர்கள் சிதம்பரம் போன்றோர் ஆட்டத்தின் துவக்கத்திலியே மிக மிக கொடூரமான முறையில் வில்லன் வீரப்பனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள். கதாநாயகனாக இருந்துதிருக்க வேண்டிய வனத்துறை, சில தனிநபர்களை கதாநாயகன் வேடம் புனைய வைக்கிறது. இதை அறிந்து கொண்ட வில்லன், கதாநாயகர்களை துவக்கத்திலேயே துவம்சம் செய்து விடுகிறான். வீரப்பன் வரலாறு வழியாக வனத்துறை கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இது.

வீரப்பனாலும், அதற்கு முன்பும் பின்பும் அழிக்கப்பட்ட வனத்தை சரியாக மதிப்பீடு செய்யவும் இல்லை. வீரப்பனின் இதிகாசத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் இல்லை என்றே தோன்றுகிறது.

வீரப்பன் வரலாற்றின் வழியாக, காடுகள், சந்தன மரங்கள் எப்படி வெட்டிச் சாய்க்கப்பட்டது? எப்படி யானைகள் வானம் இடறும் படி துடிதுடித்து செத்தன? ஒரு நாள் வயிற்றுப் பாட்டுக்கு ‌நான்கு நாட்கள் ஆறு கிலோ எடை கொண்ட மூங்கில்களை தூக்கித் திரிந்தனர்? அந்த மக்களை இரக்கமில்லாமல் மோகனையா தினேஷ் வகையராக்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தார்கள் என்று மட்டும் சொல்லவில்லை? இனி வரும் காலங்களில் இந்த வனத்தை எப்படி பாதுகாப்பது என்ற விடைகளும் இந்தப் புத்தகத்தில் புதையுண்டு கிடக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமூகம், அதனைத் தேடிப் படித்து, ஆற அமர யோசித்து விடைகளை தேடத் தயாராக வேண்டும்.

 

நிலக்கரியோ பெட்ரோலோ ஒரு முறை தோண்டி எடுத்துவிட்டால் திரும்பவும் உற்பத்தி செய்ய இயலாது. ஆனால் வனம் உயிர்த்தெழும் ஆற்றல் படைத்தது. ஆனால், அதற்கு ஒரு காலமும் இடைவெளியும் இருக்கிறது. அந்த கால இடைவெளியில் இந்தப் பணிகளை செய்து முடிக்கப் போகிறோமா ? என்ற கேள்வியையும் பெரு மூச்சையும், சிவசுப்பிரமணியம் அவர்களின் " வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" பகுதி ஒன்று ஒருசேர எழுப்புகிறது. அத்தோடு, மீதமுள்ள வீரப்பனின் வாழ்வு, அது நிகழ்த்திய பயங்கரம். வீரப்பன் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரம், அவனால் வீழ்ந்து பட்ட மக்கள், செத்து மடிந்த சந்தன மரங்கள்... என்று தெரிந்து கொள்ள சிவா அவர்களின் அடுத்த பகுதிக்காக படபடப்போடு மனம் காத்துக் கிடக்கிறது.

spacer.png

நூலின் விலை: ரூபாய்: 400/-

வெளியீடு:

489/A அண்ணா நகர்

ஆத்தூர்-636102

சேலம் மாவட்டம்.

தொடர்புக்கு: 94434 27327

 

https://minnambalam.com/public/2020/11/19/18/veerappan-life-story-book-valdhadhum-veelndhadhum

 

Link to post
Share on other sites
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்: நூலோடு ஒரு நாள்!

spacer.png

நா.மணி - செ‌.கா 

மலைத்தொடர், வனம் என்றாலே அது பேரழகுதான். நீண்ட நெடிய பசுமை மாறா மரங்களை உள்ளடக்கியிருந்தாலும் சரி , இலையுதிர்த்து கோடையை எதிர்க்கத் தயாராகும் வறண்ட புதர்க் காடுகளுமாக இருந்தாலும் சரி. ஈர்ப்பும் அதிசயமும் அற்புதமும் கலந்த ஆதிக் கவர்ச்சியாக மனிதர்களைக் கவர்ந்திழுப்பதில் வல்லவை.

தினமும் இவற்றைப் பார்த்து இன்புற்று வந்தாலும்கூட , தினந்தோறும் புதுவகையான இன்பத்தை அள்ளித் தர வல்லது. அழகின் பல பரிமாணங்களைத் தரிசிக்க இயலும். தரிசிப்பதையும், உள்ளூர் உணர்வதையும் எழுத்துகளால் மூலம் கடத்துவதென்பது மிக சவாலான ஒன்று. ஒவ்வொரு பருவத்திலும் காடு, அதற்கேற்ற இன்பத்தையும் , மலர்ச்சியையும் தருகின்றன.

 

தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லையின் விளிம்புநிலை வறண்ட காடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியான பாலாறுக்கும் , ஹொகேனக்க லுக்கும் இடையிலான காட்டுப்பகுதி, 15 ஆண்டுகளாக மனிதர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்குவதற்கு உகந்ததாக இருந்தது. குறிப்பாக யானைகளும், சந்தன மரங்களுமே நடுங்கினால், அப்பாவி மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

பகல்,இரவு என எந்த நேரத்திலும் காட்டு மக்கள் அஞ்சிக் கொண்டே இருந்தனர். நிலையற்ற வாழ்க்கையில், சுட்டுக்கொல்லப்பட்ட சடலங்களை முறையாக அடக்கம் செய்யக்கூட வழியில்லா அவலநிலையில் தவித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கு காரணம், வீரப்பனும் அவனைப் பிடிக்கப் போகிறோம் என்று புறப்பட்ட கர்நாடக, தமிழக காவல் மற்றும் வனத்துறையினர் செய்த அராஜக செயல்களும்தான்.

வீரப்பன் கொல்லப்பட்டு, 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும்கூட வீரப்பனின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. வீரப்பன் கதைகளோ அல்லது வீரப்பனைப் பற்றிய கதைகளோ சாகசம் நிறைந்த வீரதீரக் கதைகளாகக் கட்டமைக்கப்பட்டுக் கொண்டுவருகின்றன. ஆனால், இருமாநில வனத்துறை - காவல்துறை அட்டூழியங்களோ கடுகளவுக்குக் கூட பொதுத் தளத்தில் புழங்கப்படவில்லை (சில விதிவிலக்குகளைத் தவிர).

வீரப்பனை சுற்றி வளைக்க முயன்ற அதிகாரிகள், வீரப்பனோடு வாழ்ந்தவர்கள், அவரைப் பற்றி அறிந்தவர்கள் இன்னும் வாழும் காலத்திலேயே , வாய்மொழி பகிர்தலின் வழியேயும், இருமாநில அரசு ஆவணக் காப்பகங்களில்இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் ,தமது நேரடிக்கள அனுபவத்தில் கண்டறிந்தவற்றின் மூலம் , திரட்டப்பட்ட தகவல்களை, காலவரிசையோடு, சுவாரஸ்யமாக தொகுத்து, புலனாய்வுத் தன்மையோடு வரலாற்றை அணுகுகின்ற புதிய பரிமாணத்தில், கடுமையாக உழைத்து சிவா மீடியா சிவசுப்பிரமணியம் அவர்கள் மூன்று பாகங்களாக வீரப்பனின் வரலாற்றை வெளியிட்டு இருக்கிறார். அதிகாரக் கொடுமைகளுக்கெதிரான செயல்பாடுகளில் இது மிக முக்கியமான நகர்வு.

 

முதல் பாகத்தைப் படித்து முடித்ததுமே , வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் DCF ஸ்ரீநிவாஸ். அதுவரை நம்முள் எஞ்சியிருந்த வீரப்பனைப் பற்றிய நாயகபிம்பம் ஸ்ரீநிவாஸ் சாய்ப்ரூவின் காந்திய அணுகுமுறைகளுக்கு முன்னே உடைந்து நொறுங்கிவிடுகிறது.

வீரப்பனின் சொந்த ஊர் செங்கம்பாடி.மேட்டூர் அணை கட்டப்பட்ட 1900களின் தொடக்கக்காலத்தில் மூழ்கடிக்கப்பட்ட 66 ஊர்களில் வீரப்பனின் பூர்வீகமும் அடங்கும். பிழைப்புக்காக செங்கம்பாடிக்கு நகர்ந்து அதை உருவாக்கி வாழ்ந்தனர். அவ்வூரின் வழிபாட்டுக் கடவுள் மாரியம்மன். அதிகாரக் கொடுமைகளுக்குப் பயந்து சிதறிக்கிடந்த ஊர் மக்களை அழைத்து , இருக்க வீடுகள் தந்து , குடிசை மாரியம்மனை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கிறார் DCF ஸ்ரீநிவாஸ். வீரப்பன் குடும்பத்தால், ஒட்டுமொத்த செங்கம்பாடியும் அழிந்து வருவதை ஸ்ரீநிவாஸ் விரும்பவில்லை. வேதனைப்பட்டார். அதைத் தடுக்க தம்மாலான சாத்வீக அணுகுமுறைகளை, வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் மேற்கொள்கிறார்.

இவற்றையெல்லாம் படித்துக்கொண்டு வரும் வாசகர்கள், ‘நம்பவைத்துக் கழுத்தறுத்தலின்’ மூலம், கொழுந்தனால் சுடப்பட்டு, பின் வீரப்பனால் தலையைக் கொய்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கர்நாடக வனத்துறை ஒரு சிறிய நினைவிடத்தை எழுப்பியுள்ளது.வீரப்பனின் சொந்த ஊர் மக்களும் கூட ‘கோபுர மாரியம்மனுக்கு’ நிகராக கருவறைக்கு நெருக்கத்தில் DCF ஸ்ரீநிவாஸின் உருவப்படத்தை வைத்து வணங்கியும் வருகின்றனர் என்கிற தகவலைப் படித்த உடனே, அந்த இடத்தை நானும் பார்த்து வணங்கவேண்டுமென்கிற எண்ணம் நெஞ்சைக் கவ்விப் பற்றிக்கொண்டது

 

மூன்று பாகத்தையும் படித்து முடித்தவுடன், ஒரு காத்திரமான மதிப்புரையை வழங்கிய நண்பர் செ.கா, மூன்று பாகங்களையும் எனக்கு முன்பே படித்துவிட்டு எந்நேரமும் அதைப்பற்றியே பேசி வந்த என் மகன் சச்சின் , நாங்கள் பேசிய கதைகளைத் தொடர்ந்து கேட்டு ஆர்வமாகி , உடன்வர ஒப்புக்கொண்ட என் மனைவி என மூவரும் இணைந்து நூலாசிரியர் பெ.சிவசுப்பிரமணியம் அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு மார்ச் 7ஆம் தேதி ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ நூலின் பிரதான கதைக்களம் தேடி புறப்பட்டோம்.

ஈரோடு – பவானி – வெள்ளித்திருப்பூர் – சென்னம்பட்டி - கொளத்தூர் வழியாக செங்கம்பாடி செல்ல, அடிவாரம் கோவிந்தபாடிதான். அங்கு மிக நிறைவான காலை உணவு. அந்த சிற்றுண்டிச் சாலையில், குடல் குழம்பு வெறியரான செ.காவை 70 ரூபாயில் சாய்த்தே விட்டார்கள்.

பாலாற்றுப் பாலம்.தமிழக,கர்நாடக எல்லையைப் பிரிக்கும் இடம். கார்டு மோகனய்யாவை வீரப்பன் சுட்டுக்கொன்ற இடம். நூலாசிரியரின் விவரிப்பின் வழியே , அந்த இடத்தையும் சம்பவத்தையும் மனதில் காட்சிப் படிமங்களாக செதுக்கிவைத்துக் கொண்டதெல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிடுகின்றன. பாலத்தின் மேல் அவர் சுடப்பட்ட இடம், தொலைவில் இருந்து சுட மிக சவாலான ஒன்று. இந்த ஒரு நிகழ்விலேயே வீரப்பனின் துல்லியமான குறிவைக்கும் திறமை வியக்கவைத்து விட்டது.

அவ்வளவு தேடுதல் வேட்டைகளுக்கும் தப்பி, அவ்வளவு பெரிய கொலைகளையெல்லாம் செய்து, எப்படி அவ்வளவு காலம் வீரப்பன் வாழ்ந்தார் என்பதற்கு அந்தக் கொலைக்களத்தை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். இதுவே கதைக்களப் பயணத்தின் காட்சி இன்பத்தின் ஒரு துளி.

இந்த இன்பத்துளியைச் சுவைத்தவாறே செங்கம்பாடிப் புதூரைச் சென்றடைந்தோம். அங்கு அபி (எ) அபிமன்னனின் அருமையான தேநீர் உபசரிப்போடு, எறக்கியம் பள்ளத்தில் DCF சாய்ப்ரூ நினைவிடத்தை நோக்கி நகர்ந்தோம். கரடு முரடான சாலைகளும், யானை லத்திகளும் பயணத்தை திகிலூட்டின.

ஸ்ரீநிவாஸ் யார் யாரோடு எந்தெந்த இடத்தில் சேர்ந்து வீரப்பன் பேச்சை நம்பி , எந்த வழியாக எறக்கியம் நோக்கி வந்தார்?

எல்லோரும் வீரப்பன் பேச்சை நம்ப வேண்டாம் என சொல்லியும்கூட,

"அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, அவற்றை மதிப்பது, அவை எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப் போல் நம்பும் உள்ளம் படைத்த ஸ்ரீநிவாஸ், வழிநெடுக என்னவெல்லாம் நினைத்துக்கொண்டு நடந்து வந்திருப்பார். வீரப்பனை மட்டும் அழைத்து வந்து அவரைத் திருத்திவிட்டால், ‘எல்லோரும் இன்புற்று இருக்கும் காலம் வந்துவிடும்’ என்றல்லவா மகிழ்ச்சியோடு நடந்துகொண்டு வந்திருப்பார் என்கிற என் கற்பனை சித்திரங்களில் பொய் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நினைவுகள் ஒருபக்கம் , யானை நடமாட்டங்கள் பற்றிய பேச்சு மறுபக்கம். இவற்றினூடே அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்த ஸ்தூபியைப் பார்த்தோம். வாழ்நாளில் முக்கிய தருணங்களில் ஒன்றாகவே அதனை உணர்ந்தோம். அன்று புதர் மண்டிக்கிடந்த அந்தப் பகுதி, இன்று வெட்டவெளிப் பகுதியாக காட்சி அளிக்கிறது.

 

ஸ்ரீநிவாஸை நேசித்த, பூஜித்த , அவரோடு உடன் இருந்த அங்குராஜ் என்பவர் இப்போது DCF வரை பதவி உயர்வு பெற்று வந்துள்ளார். அவரது ஆர்வமிகு முயற்சியால், அருமையான நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. வனத்துறையினர், காட்டுயிர்க் காவலர்கள், அந்த மண்ணில் அவர் நேசித்த மக்கள் என எல்லோரும், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி அங்கு வந்து நிம்மதியாக நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதை நேரடியாகக் கண்டு உணர முடிந்தது.

DCF நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது , செங்கம்பாடி அணைக்கரை முனியப்பன் கோயிலைப் பார்த்தோம்.இந்தக் கோயிலில்தான் வீரப்பன் தலைமையில் முக்கிய முடிவுகளும், ஊர் பஞ்சாயத்தும் எடுக்கப்பட்டதாக அபியும், மற்றுமொரு ஊர்க்காரரும் கூறினர். இவற்றை அசைபோட்டவாறே செங்கம்பாடி ஊருக்குள் சென்றோம்.

ஊரின் முகப்பிலேயே இருந்தது மாரியம்மன் கோயில். அதன் வெளிப்புற வாயில் அருகிலும், உள்ளே கருவறைக்கு அருகிலும் முழு உருவ சாந்த ரூபத்தில் DCF சாய்ப்ரூவின் படம் மாட்டப்பட்டு வணங்கி வருகின்றனர். அதனருகே நின்று நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எனது உள்ளத்தில் எழுந்து அடங்கிய உணர்வுகளை இங்கே சாதாரணமாக விவரிக்க முடியாது. உணர்வதன் வழி மட்டுமே உள்வாங்க முடியும். புரட்டாசியில் நடைபெறும் கோயில் திருவிழாவில் மாரியம்மனுடன் இணைந்து அவருக்கும் பூஜை செய்து வழிபடும் மக்களைக் காண வர வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டோம்.

எதிரே இருந்த தேநீர் கடையில் நல்லூர் மாதையன் அமர்ந்து இருந்தார். முன்னே இவர் வீரப்பனின் உற்ற நண்பனாக இருந்தவர். பின்னர் இவரது உயிரை எடுக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளார். எனவே, உயிருக்கு பயந்து 15 ஆண்டுகளுக்கு மாதேஸ்வரன் மலையில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பின்கீழ் வாழ்ந்து வந்தவன். தற்போதுதான் ஊரில் வாழ்கிறார். அப்படியான ஒரு கதை மாந்தர் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி மிகுந்த தருணம்.

நூலாசிரியர் தனது நூலை அவருக்குக் கொடுத்தார். ஆசையாகப் பக்கம் பக்கமாக ஆர்வத்துடன் புரட்டிக்கொண்டே வந்தார். DCF ஸ்ரீநிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்டு உடல் முண்டமாகக் கிடப்பதைப் பார்த்தவுடன் சிரித்தார். ‘நானும் அன்று உடன் சென்றிருந்தால் என் உடம்பும் இப்படித்தான் கிடந்திருக்கும்’ என்று கூறி சிரித்தார். கதையின் களத்தில் இதுபோன்ற உரையாடல்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.

உதவிக் காவல் ஆய்வாளர் தினேஷ் கொல்லப்பட்ட இடம், செங்கம்பாடி இரட்டைப் படுகொலைகளான கோட்டையூர் மாதையன், தங்கவேலு படுகொலை செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவற்றையும் பார்த்தோம். அங்கே சில எஞ்சிய சான்றுகளும் பாறையிலும், மரத்திலும் இன்னும் இருப்பதைக் கண்டோம்.ஏன் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது ? எப்படி குறி வைத்தார்கள்? எப்படி தப்பிச் சென்றனர்? என்பதையெல்லாம் அபியும்,சிவாவும் விளக்கிக் கொண்டே வந்தனர்.

 

இக்கரை ஒகனேகல்லில் மதிய உணவை ஆர்டர் செய்துவிட்டு,மீண்டும் ஆலாம்பாடி கோட்டையைப் போகும்போது நாங்கள் பார்த்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.

சாலையின் வலது புறத்தில் கொடுமணலில் கண்டது போன்ற கல்திட்டைகள் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கில் மலைச்சரிவில் ஆற்றை நோக்கியவாறு அமைந்திருந்தன. புனைபாவை தந்த ஆச்சரியத்தால் நாங்களும் தொல்லியாளர்களாக மாறினோம். அந்த இட அமைப்பு குறித்து பல்வேறு அனுமானங்களை தர்க்க ரீதியாக விவாதித்துக்கொண்டோம். இவ்வளவு எண்ணிக்கையிலான இந்த சான்றுகளின்மீது இதுவரை கர்நாடக அரசு எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

கல்திட்டைகளைக் கடந்த பின் ஆஞ்சநேயர் கோயிலைக் கடந்தோம். அந்த கோயில் பூசாரியான ராசுக்கவுண்டரைத்தான் தினேஷ் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றது. வீரப்பன் கோயிலுக்கு வரும்போது தீப ஆராதனை காட்டியதுதான் அவர் செய்த உச்சபட்ச குற்றம். கூட இருந்த அவர் மனைவி கோவிந்தம்மாவும் அவன் தாக்குதலுக்குத் தப்பவில்லை.உயிர்

மட்டும் போகவில்லை. இந்த சம்பவம் நடக்கையில் சுற்றி இருந்த மக்கள் ஓடி ஒளிந்து தம்மை தற்காத்துக் கொண்டனர். ராசுக்கவுண்டரின் மரண ஓலம் அனைவரின் காதுகளுக்கும் கேட்டவாறே இருந்ததையும் பலர் பதிவு செய்து இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட அவரது அலறல் என் காதுக்குக் கேட்பது போல திடீர் பிரமை ஏற்பட்டது.

ஆலம்பாடியில் இரண்டு கிடங்குகளும், சில வழிபாட்டுச் சிலைகளும் உடைய, அகழி வெட்டப்பட்ட சிதிலமான கருங்கல் கோட்டையை நாம் யாருக்கு உரிமை கொண்டாடுவது எனத் தெரியவில்லை. திப்பு சுல்தானா அல்லது விஜயநகரப் பேரரசா? அதுபோல பரந்து விரிந்துகிடந்த கல்திட்டைகளும். குடித்து குளித்துக் கூத்தாடிக் கொண்டிருந்த தமிழக ஹொகேனக்கல்லை,

இக்கரையில் சலசலவென ஓடும் காவிரி ஓசையோடு மட்டும் இணைந்து பார்த்தது எங்கள் பசியை மறக்கச் செய்துவிட்டது.

அதுமட்டுமா?அதே இக்கரை ஹொகேனக்கல்லிலும் சிறந்த சுவையுடன் பரிமாறப்பட்ட சூடான மீன் குழம்பும் வறுவலும், பயணத்தை குழம்பைப் போலவே சுவையுள்ளதாக்கியது.

இவை யாவும் நூலைக் கடந்து எங்களுக்குக் கிடைத்த இலவச இணைப்புகள்.

‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ நூலில் நாம் காணும் ஒரு முக்கியமான கதை மாந்தரில் ஒருவர் ‘காமராஜ்பேட்டை கோவிந்தன்’. அவர் காவிரி ஆற்றின் மறுகரையில் முழுவடைக்காடுகளில் விவசாயம் செய்து வருகிறார். பரிசல் பயணம் வழியே அவரை சந்தித்து உரையாடுவது, மாலைவேளையை மேலும் இனிமையாக்கும் என நம்பினோம். ஆனால் அவர் , அவசர வேலை காரணமாக கோவிந்தபாடி சென்றுவிட்டதால், திரும்ப வரும் வழியில் அங்கே அவரை சந்தித்துவிட்டு தேநீர் நினைவோடே வீடு திரும்பினோம்.

மலைகள் விழிக்கத் தொடங்குகையில் உள்நுழைந்து,அவை மீண்டும் துயிலுக்குச் செல்லும்போது அவற்றைவிட்டு விலகிச் சென்றது,

பொருத்தமாகவும், பொறாமையாகவும் இருந்தது. ஏனெனில்,

ஊராட்சிக் கோட்டை தாண்டியதும் வீசத் தொடங்கிய இனம்புரியா தோல் ஆலை நெடி, சூளை வரையிலும் தொடர்ந்ததை என்னவென்று சொல்ல?

பாலாறும் காவிரியும் சந்திக்கும் பகுதியில் ஒரு தனி யானை ஒன்று நீண்ட தந்தங்களுடன் குதியாட்டம் போட்டது இதுவரை வேறெங்கும் கண்டிராத அரிதான நிகழ்வு. அதையும் கண்டுகளித்து , பின் கண்டவனவற்றையெல்லாம் ஒருவருக்கொருவர் விவாதித்துப் பேசிவர, மணி ஒன்பதாகிவிட்டது. ஆனாலும் உரையாடல்கள் தீர்ந்தவாறில்லை. தீரப்போவதுமில்லை.

"வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" நூல் திறனாய்வு!

கட்டுரையாளர்கள்:

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர். மாநில செயற்குழு உறுப்பினர்.

  •  

 

https://minnambalam.com/politics/2021/04/22/13/Veerappan-book-review

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.