Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்கள்

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

கோயில்கள்

மேசை மணிக்கூட்டின் அலாரம் பயங்கரமாக அலறியது. யோகன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு அதை அடித்து உதைக்க வேணும் போல் இருந்தது. ‘நான் முறுக்கி விட்டாலும் நீயேன் அடிப்பான்’ என்பது போல் அதனைப் பார்த்தான். மறுகணம் அவனுக்கு தன்னை நினைக்க சிரிப்புத்தான் வந்தது. நேரம் ஆறு மணியாகிவிட்டது. எழுந்து வெளியே வந்தான். வாசலில் அவனது தங்கை பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘இவளிட்டை இருந்து பேப்பரைப் பறிக்க வேணும், இது மூதேசி எடுத்தது எண்டால் இண்டு முழுக்க வைச்சு வாசிக்கும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் மனதில் திட்டம் உடனடியாகத் தயாரானது.

“வாணி இஞ்சை பேப்பரைக் கொண்டு வா, ஓ.எல் சோதனைக்கு இரண்டு கிழமை கிடக்கு. விடிய எழும்பி பேப்பர் பார்க்கிறா… ஒடு போய்ப்படி…’ அவள் முணுமுணுத்தபடி உள்ளே செல்வதை இரசித்தபடி பேப்பரை எடுத்தான். அன்று மாவீரன் வாரத்தின் கடைசிநாள். பல கவிதைகள், படங்கள் பிரசுரமாகியிருந்தன. உள்ளே இருந்த தாளை எடுத்தான். அது… அவனது நண்பன் ரவியின் படம். நெடிய வருடங்கள் ஓடிவிட்டன. யோகனின் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.

அது அந்தத் தவணையின் கடைசி நாள். அவர்களது விடுதிப் பாசையில் அதை ‘லாஸ்ற் டே’ என்று சொல்லுவார்கள். அந்த இரவு அவர்களைப் பொறுத்தவரை ஒரு சுதந்திரமான இரவு. விடுதியின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக அன்றைய தினம் பற்பசையால் மீசை வைத்தல், கட்டிலுக்குப் பொறி வைத்தல், மை ஒற்றுதல் போன்ற ‘திருகுதாளங்களில்’ ஈடுபட மாணவர்கள் திரைமறைவில் அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக அன்றைய சம்பவங்கள் பற்றி எந்த மாணவனும் விடுதிச்சாலை பொறுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்வதில்லை. அப்படியான ஒரு இரவில் தான் ரவியும் யோகனும் தம்மை விட ஒரு வகுப்புக் குறைந்த பத்தாம் ஆண்டு மாணவர்களுக்கு மீசை வைப்பதற்கு திட்டமிட்டார்கள். திட்டத்தின் சூத்திரதாரி ரவி. திட்டத்துக்கான காரணம் ஒரு கிறிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ‘கொழுவல்’. ‘மச்சான் யோகன், உவைக்குச் சரியான லெவலடா, இண்டைக்குப்பார் என்ன செய்யிறனெண்டு’ இது ரவி. ‘என்ன செய்யப் போறாய்.’ ‘இரவைக்கு எல்லாருக்கும் மீசை வைக்கப்போறன்இ அதுவும்… பற்பசையாலை… நரைச்ச மீசை எப்படி ஐடியா?’

‘ஐடியா நல்லம் தான், எங்கட வகுப்புப் பெடியள் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்தால் என்ன?’

‘யோகன் அது பேய் வேலையாய்ப் போயிடும் மச்சான், இரண்டு பேர் காணும். நீ வாறியோ?’ என்று ரவி கேட்டதும் யோகன் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டான். திட்டம் செயல்படுத்தப்படவேண்டிய இரவும் வந்தது. அவர்களும் விழிப்பாகத் தான் இருந்தார்கள்.

‘என்னடா செய்யிறது… அவங்கள் முழிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்? ‘என்ரை’ கசியோவில அலாரம் வைச்சிட்டு அதை காதுக்கருகில் வைச்சுக்கொண்டு கிடக்கப்போறன், விடிய 2:00 மணிக்கு அலாரம் அடிக்கும். அப்ப உவங்கள் படுத்திடுவாங்கள்’

ரவியின் திட்டமிடல்படி இருவரும் படுத்து விட்டார்கள். சரியாய் காலை 2:00 மணிக்கு ரவி யோகனை எழுப்பி விட்டான். இருவரும் எழுந்து பார்த்தனர். பத்தாம் ஆண்டு மாணவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். பாவம் எவ்வளவு நேரம் தான் அவர்கள் விழித்திருப்பது?

‘யோகன் இந்தா பற்பசை. போய் மெயின் சுவிச்சை நிப்பாட்டிப்போட்டு வா’

‘மெயின் சுவிச்’ நிப்பாட்டப்பட்டதும், ‘மீசை வைத்தல்’ ஆரம்பமானது. திடீரென… ‘டேய் மீசை வைக்கிறாங்களடா எழும்புங்கோடா லைற்றைப் போடுங்கோ’ அது பத்தாம் ஆண்டு சுரேசின் அலறல். தொடர்ந்து தடபுட சத்தங்கள், ‘மெயினை ஓப் பண்ணிப் போட்டாங்கள்’ என்ற குரல்கள். யோகன் திகைத்துப் போய் விட்டான். பிடிபட்டால் எல்லோரும் சேர்ந்து துவைச்செடுத்துப் போடுவாங்கள்.

போடிங் மாஸ்ரரிடமும் முறையிட முடியாது. யோகன் கால் போன போக்கில் ஓடத்தொடங்கினான். பின்னால் பலர் கலைத்தனர். ஓடிப்போய் குளியலறைக்குள் புகுந்ததும் சரமாரியாக கல்வீச்சுக்கள் நடந்தன. இறுதியில் சரணடைய வேண்டி வந்துவிட்டது. ‘அண்ணைப்பிள்ளை வசமாக மாட்டியிட்டார்’ இது வாகீசனின் ஏளனக்குரல். ‘ஐயாவுக்கு இண்டைக்கு சாணித்தண்ணி அபிஷேகம் செய்ய வேணும்’ இது காந்தன். காந்தன் தான் பத்தாம் ஆண்டு மாணவர்களின் முடிசூடா மன்னன். இவனால் எதுவும் பேச முடியவில்லை. அபிஷேகம் நடக்கத்தான் போகிறது என்ற நிலையில் அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் தயாராகிவிட்ட நிலையில்…

‘டேய், விடியப்புறத்திலை மனிசரை நித்திரை கொள்ள விடமாட்டியள் போல கிடக்கு. என்னடா சத்தம்?’ அதட்டியபடி பதினோராம் ஆண்டு மாணவர்கள் புடைசூழ ரவி வந்து கொண்டிருந்தான்.

‘இவர் எங்களுக்கு மீசை வைச்சவர்’ வாகீசனின் குரல் ஈனஸ்வரமாக ஒலித்தது.

பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியிலி ரவி சொன்னான்,

“அவன் மீசை வைச்சால், நீங்களும் மீசை வையுங்கோ. அதைவிட வேறை ஏதாவது செய்தால் பிரச்சினை வரும்”

வேறு வழியின்றி யோகனுக்கு மீசை வைப்பதுடன் சடங்கு பூர்த்தியாகிவிட்டது. எல்லாம் முடிந்ததும் யோகன் ரவியிடம் மெதுவாகக் கேட்டான்,

‘நீ என்னெண்டடா தப்பினனீ?’ ‘அவங்கள் எழும்பினதும் நான் பக்கத்தில கிடந்த வெறும் கட்டில் ஒன்றில் நித்திரை போலக் கிடந்திட்டன்’

யோகன் அவனை அதிசயமாகப் பார்த்தான்.

Maaveerar-Thuyilum-Illam-1.jpg

‘ரவி இயக்கத்துக்கு போட்டானாம்’ இரண்டாம் தவணைக்காக பெட்டி படுக்கைகளுடன் விடுதிக்கு வந்தவனின், காதில் விழுந்த முதல் செய்தி இது தான்.

‘எந்த இயக்கம்?’ ‘ரைகேஸ்’ ‘சீ… எனக்குக் கூடச் சொல்லாமல் போட்டான்’ என்று யோகன் சொல்லிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் மாலை ரவி விடுதிக்கு வந்திருந்தான். சற்றுக் கறுத்து, மெலிந்து, முழங்கைகளில் உரசல் காயங்களுடன் அவனைப் பார்க்க யோகனுக்குப் புதுமையாக இருந்தது. கதையோடு கதையாகக் கேட்டான்,

‘என்ரா நீ எனக்குச் சொல்லாமல் போனனீ?’

‘உனக்குச் சொல்லுறதென்றால் கடிதம் போடவேணும். இதைப்பற்றி எழுதுகிற கடிதம் ஆமியிட்டை அகப்பட்டால், அதுவும் உங்கட ஊரிலை அவன் ரோந்து திரியுறவன். கடைசியா உனக்குத்தான் ஆபத்து…’ யோகனுக்குக் கண்கள் பனித்தன. எவ்வளவு ஈரநெஞ்சம் இவனுக்கு? இப்படியான ஈரநெஞ்சம் உள்ளவர்களால்தான் தங்களையிழந்து மற்றவர்களுக்காகப் போராட முடியும் என யோகன் நினைத்தக் கொண்டான்.

அது தமிழீழத்தின் வரலாற்றில் ஒரு இருள் சூழ்ந்த காலப்பகுதி. ஆம்… இந்திய தேசத்து எருமைகளின் பாதக்குளம்பில் அகப்பட்டு தமிழீழம் இரத்தச்சேறாகிக் கொண்டிருந்தது. அப்படியான ஒரு நாளில் ஒரு மாலைப்பொழுதில் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்தவனின் காதில் யாரோ கூப்பிடுவது கேட்டது. எட்டிப்பார்த்தான். ரவி நின்றுகொண்டிருந்தான்.

‘உள்ளுக்க வா மச்சான்’ உள்ளே அழைத்தவன், ரவியைப் பார்த்துக் கேட்டான்,

‘என்னெண்டடா வந்தனீ? உது வழிய எல்லாம் அவங்கள் திரியிறாங்கள்’

‘நான் இருக்கிற ஏரியா ரவுண்டப்’ அது தான் வெளிக்கிட்டனான். இரவுக்கு படுக்கவும் இடமில்லை…’ ரவி சொன்னதும், யோகனுக்குத் துயரம் தொண்டையை அடைத்தது.

இந்த மண்ணின் மக்கள் நிம்மதியாக படுத்துறங்கி நிம்மதியாக மூச்சுவிட்டுத்திரிய வேண்டும் என்பதற்காக, சிலுவை சுமக்கும் இந்தப் புனுதனுக்குப் படுப்பதற்கும் இடமில்லை என்றால்…

‘ஏன் மச்சான் உப்பிடிக் கதைக்கிறாய், நீ இஞ்சைப்படுத்தால் என்ன?’ யோகன் கேட்டான்.

டேய், நான் இயக்கம். குப்பி வைச்சிருக்கிறன். ஆமி வந்தாலும் என்னைப் பிடிக்க முடியாது? ஆனால் நீ… நீ படிக்கிறனி… ஆனால் தப்பித் தவறி நான் தங்கினது தெரிஞ்சாலும் உனக்குத்தான் ஆபத்து.

நான் இப்ப இஞ்சை வந்தது தங்கிறதற்கில்லை… ஒரு கடிதம் தாறன். அதை நாளைக்கு உன்னிட்டை வாற சிறியிட்டைக் குடுத்து விடு… நான் போய் இந்த வைரவர் கோயில் பூக்கண்டுக்கை கிடக்கப் போறன்’ யோகனுக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. சாகும் போதுகூட இவர்களால் எப்படி மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது? யோகன் சிந்தித்தான். வைரவர் கோயிலடி, அங்கை எல்லாம் ஆமி இரவில திரியிறவன், இஞ்ச படு அப்பிடி ஒண்டும் நடக்காது, நடந்தால் நீ குடிக்கிற குப்பியில பாதியை எனக்கும் தா’

ரவி அவனை நன்றி உணர்வுடன் பார்த்தான். ‘எங்கள் தேசத்து மக்கள் உணர்வுடன் தான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் போராட்டம் வெல்லத்தான் போகிறது’ ரவி நினைத்துக்கொண்டான்.

‘என்ன யோசிக்கிறாய், இந்தா சாப்பாட்டுப் பார்சல், சாப்பிட்டிட்டுப் படு.’

யோகன் தனக்காக எடுத்து வந்த பார்சலை நீட்டினான்.

‘நீ சாப்பிட்டனியோ?’

‘ஓம்’

‘பொய் சொல்லுறாய்’

‘இல்லையடா பின்னேரம் கொத்து ரொட்டி சாப்பிட்டனான். இது வழமையாய் வாற இடியப்பப் பார்சல்’

ஒரு பொய்யை சாமர்த்தியமாகக் கூறிவிட்ட மகிழ்ச்சியில் யோகன் இருக்க, ரவி சாப்பிடத் தொடங்கினான்.

‘சத்தியமாய் யோகன் காலமையும், மத்தியானமும் ஒண்டுமில்லை’ சாப்பிட்டு முடித்ததும் ரவி சொன்னான். யோகனுக்கு வேதனையாக இருந்தது. இப்படி எத்தனை இளசுகள் பட்டினி கிடக்கின்றனவோ?

எல்லாம் இந்தியர்களால் வந்த வினை. நினைத்துக் கொண்டவன் ரவியிடம் சொன்னான்

‘படு மச்சான்’…., ‘படுக்கிறன், கொஸ்ரல்லிலை போல மீசை வைச்சிடாதை’ ரவி சொன்னதும். இருவரும் சூழ்நிலையை மறந்து சிரித்தனர்.

இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போரும் ஆரம்பமாகிவிட்டது. ரவி இப்பொழுது இயக்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பாளராகி விட்டான். ஒருமுறை வீதியில் அவனைச் சந்தித்த போது யோகனால் மட்டெடுக்க முடியவில்லை. நிறத்தப் பூரித்து புத்தொலிவுடன் இருந்தான். ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’

கடைசியாக அவன் சொன்ன வார்த்தை அதுதான். சரியாக மூன்று மாதம் கழித்து அவன் பலாலியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த செய்தியை பத்திரிகையில் பார்த்ததும் யோகன் துடித்துப் போனான். உடனடியாகப் புறப்பட்டு ரவியின் ஊருக்குச் சென்ற அவனால் ரவியின் சமாதியைத்தான் தரிசிக்க முடிந்தது. அந்தத் துயிலுமில்லத்தின் சுமர் ஒன்றில் எழுதியிருந்த வாசகம் அவனது கண்களில் பட்டது.

‘மாவீரர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்’

அவனது காதுகளில் ‘மச்சான் இனி எனக்குச் சாவில்லையடா’ என்ற வார்த்தைகள் ஒரு முறை எதிரொலித்தன.

‘அண்ணா, இந்தாங்கோ தேத்தண்ணி. ஏழுமணியாகுது. முகம் கழுவாமல் யோசிச்சுக் கொண்டிருக்கிறியள்’ வாணியின் வார்த்தைகள் அவனது சிந்தனையைக் கலைத்தன.

‘வாணிக்குஞ்சு, உந்த மல்லிகைப் பூவெல்லாத்தையும் பிடுங்கி தண்ணி தெளிச்சுவையம்மா’

‘ஏன் அண்ணா? இண்டைக்கு கோயிலுக்குப் போகப் போறியளோ?’ வாணி அதிசயமாகக் கேட்டாள்.

‘ஓம்’

‘எந்தக் கோயிலுக்கு?’

‘மாவீரர் துயிலுமில்லத்துக்கு’ யோகன் அமைதியாகப் பதிலளித்தான். அவனுக்குத் தெரியும் புனிதம் அங்கே குடிகொண்டிருக்கிறது என்று.

நன்றி: சூரியப்புதல்வர்கள் 1995.

 

https://thesakkatru.com/maaveerar-thuyilum-illam/

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.