Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.!

தலைமைச்செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்

2006-12-14

 

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

 பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

 

GCvgMD5krdevcfrCW93r.jpg

 

 பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

 

qWVAGUbYvungxOKIXwod.jpg

 

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

 ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

 

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

 

வே. பிரபாகரன்

தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள்
 

 

https://www.thaarakam.com/news/79ea8c84-554d-464e-8faa-83dfc4f95bf5

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

வீரவணக்கம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

  தேசத்தின் குரலுக்கு வீர வணக்கம்.

Bild

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மதியுரைஞர்... அன்ரன் பால்சிங்கம் அவர்களுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அவர்களுக்கு வீரவணக்கம்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் மாவீரர் வாரம் தவிர்த்து நான் கண்ட அளவில் தமிழ் மக்கள் அதிகளவு சமூகம் தந்த நிகழ்வாக பாலா அவர்களின் இறுதி நிகழ்வு இருந்தது. 

ஜெரி அடம்ஸ்சுக்கு ஐ ஆ ஏ- சின்பெயின் இல் இருந்ததை போன்ற ஒரு வகிபாகம் இவருக்கும் தமிழர் அரசியலில் இருந்திருந்தால் தமிழர் அரசியலின் போக்கு வேறு விதமாக அமைந்திருக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்

Voice-of-the-Nation-with-the-people-of-T

அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது.

வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்டிருந்தது. அது ‘பாலாண்ணையின் நினைவு நாள் வருகுது”. அந்த வரிகள் மன அடுக்குகளில் ஆழமாக உள்ளிறங்கி எண்ணற்ற நினைவலைகளை உருவாக்கி விட்டிருந்தன. இந்த எண்ணவோட்டத்துடன் கடல் அலைகளை பார்க்கும் போது அவையும் பாலாண்ணையின் நினைவுகளையே கரையை நோக்கி எடுத்துவருவது போல் ஒரு பிரம்மை… என் வாழ்நாளின் நிம்மதியற்ற இரவுகளில் அதுவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது.

இரண்டு வருடங்கள். போராட்டத்தின் தாங்கு தூண்களில் ஒன்றும் அதன் இயங்கு சக்திகளின் மையமுமாகிய ஒருவர் இல்லாமலேயே கடந்து விட்ட காலங்கள் இவை. ஒரு வகையில் கொடுமையான நாட்கள்.

காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்று தீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.

போராட்டம் மிக முக்கியமான வரலாற்றுக் கால எல்லைக்குள் பிரவேசித்திருக்கிற தருணம். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவர் இல்லையே என்ற ஏக்கமும் கவலையும் இயல்பாகவே தொண்டைக்குள் வந்து பந்தாய் அடைத்துக் கொள்கிறது. பாலசிங்கத்திற்கான நினைவுக்குறிப்பாய் இந்த பத்தியை எழுதி முடிக்கலாம். ஆனால் அவருக்கான உண்மையான அஞ்சலியும் நினைவும் அதில் தங்கியிருக்கவில்லை.

அவர் தன் வாழ் நாளில் எத்தகைய பணியை மேற்கொண்டிருந்தார். அது இன்று எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை ஆராய்வதும் அதிலுள்ள தேக்கங்களைக் கண்டடைந்து அதைக் களைய முற்படுவதும்தான் நாம் அவருக்குச் செய்யும் நிஜமான அஞ்சலியாகும். இதையொட்டி இந்தப் பத்தியினூடாக பன்முக ஆளுமை கொண்ட அவரது பணியின் ஒரு சிறு பகுதியை விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

Voice-of-the-Nation-with-the-people-of-T

இக் கட்டுரையின் தலைப்பு frantz fanon இன் wretched of earth நூலுக்கு jean paul satre எழுதிய முன்னுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராட்ட வடிவங்களை விபரிக்கும் frantz fanon இன் இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றது. அதைவிடப் பிரசித்தம் அந்நூலுக்கு satre எழுதிய முன்னுரை. உலக வரலாற்றிலேயே நூலின் உள்ளடக்கத்திற்கு நிகராக எதிர்வினையை எதிர்கொண்டதும் சிலாகிக்கப்பட்டதும் அனேகமாக சர்த்தரின் இந்த முன்னுரையாகத்தான் இருக்க முடியும்.

‘நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி” என்ற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்ட்டவர்களின் விடுதலையின் அடிநாதமாக இருக்கும் வன்முறையை சிலாக்கிக்கும் கசயவெண frantz fanon இன் நூலுக்கு முன்னுரை எழுதப்புகும் ளயசவசந பல படிகள் மேலேபோய் வன்முறையின் உச்சமாக நிகழும் பயங்கரவாதத்தை தூக்கிப்பிடிக்கிறார். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் sartre ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். பிரெஞ்சு வேர்ச் சொல்லிலிருந்து பிரித்தெடுத்து “terror” என்ற வார்த்தைக்கு ஒரு புதிய வியாக்கியானத்தை வழங்கியவர் சர்த்தார்.

சர்தாரினதும் பனானினதும் வியாக்கியானப்படி அரசின் வன்முறைக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் ஒரு இனத்திலிருந்து அந்த அடக்குமுறைக்குள்ளிருந்தே திமிறியெழுந்து வன்முறையின் துதிபாடியபடி வரலாறு ஒன்று மேலெழும் என்பது ஒரு கோட்பாடாகக் கட்டவிழ்கிறது. அப்போது அந்த வரலாற்றின் மீது பேரொளி ஒன்று வந்து குவிகின்றது. அப்போது ஒடுக்கப்பட்ட அந்த இனம் மட்டுமல்ல எதிரிகள் உட்பட ஒட்டு மொத்த உலகமுமே அந்த வரலாற்றுப் பேரொளியின் தரிசனத்தைக் காண்கிறார்கள். அது ஒரு முடிவிலி. அந்த இனத்தின் வரலாறாகவும் வழிகாட்டியாகவும் அது இயங்கிக் கொண்டேயிருக்கும். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி. தமிழினத்தின் இயங்கியலும் வரலாறும் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

கால நீரோட்டத்தில் தமிழினத்தின் இயங்கியலையும் வரலாற்றையும் இனங்கண்டு அதனோடு இணைந்து இசைந்து அந்த வரலாற்றினது ‘குரல்” ஆக பரிமாண மாற்றமடைந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அந்த இயங்கியல் வரலாற்றினுள் வெடித்துக் கிளம்பியவர் என்றுதான் தற்போது தோன்றுகிறது.

காலனியாதிக்கத்திற்கெதிராக தனது வாழ்வின் இறுதிவரை போராடிய கறுப்பின வீரரான பிரான்ஸ் பனானை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை சர்த்தாரையே சாரும். இருவரும் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல பனான் இறந்த பிற்பாடும் அவரது கோட்பாடுகளை – கொள்கைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த பெருமையும் சர்த்தாரையே சாரும். அதன் அடையாளம் தான் jean paul satre தொகுத்த frantz fanon இன் wretched of earth நூல்.

கால வெளியில் வைத்து யோசித்துப் பார்க்கும் போது ஒரு கோணத்தில் பனானுக்கு ஒரு சர்த்தார் போல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று இப்போது புரிகிறது. வரலாறு என்பது எவ்வளவு அற்புதமானது. சும்மாவா சொன்னான் ஜெர்மானிய தத்துவக் கிழவன் கேகல் (hegal) ‘வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும்” என்று…

“war and terror” என்ற பெருங்கதையாடல்களுடன் ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்” புரியக் கிளம்பியிருக்கும் மேற்குலக வல்லரசுகளின் ஒற்றை அறத்தையும் நீதியையும் இன்று எதிர்கொள்ள எம்முடன் பனானும், சர்த்தாரும் இல்லாமல் போனது ஒரு வகையில் துரதிர்ஸ்டவசமானதுதான். இதை ஒரு வகையான காலக்குழப்பம் என்றுதான் கூற வேண்டும். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் வாழ்நாள் பணியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது விழத் தொடங்கியிருந்த ‘பயங்கரவாத” சாயத்தை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட வண்ணமிருந்தார். அவருடைய அந்த பணியின் ஆழத்தைத்தான் இன்று நாம் சர்த்தரினதும் பனானினதும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ‘அழகு” பார்க்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சர்த்தாரின் மீள் வருகை ஒன்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் ஈழச்சூழலின் உச்சத்தில் நிறுத்தப்பட வேண்டிய சர்த்தார், பனான் போன்றவர்கள் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பின் தட்டடையான ஒற்றையான வழிநடத்தலினால் மறக்கடிக்கப்பட்டதும் காணாமல் போனதும் துரதிர்ஸ்டவசமானது.

இவர்களின் பரிச்சயம் ஈழச்சூழலுக்கு பழக்கப்பட்டிருந்தால் இன்றுள்ளது போல் தற்போதைய மோசமான களநிலவரங்களை முன்வைத்து ஒரு ஈழத்தமிழன் பிதற்றிக் கொண்டிருக்கமாட்டான். புலிகள் தமது பின்னகர்வினூடாக போராட்டத்தைத் தக்க வைப்பதையும் போராட்ட வடிவத்தை புலிகள் மாற்றிக் கொண்டிருப்பதையும் சுலபமாக இனங்கண்டிருப்பான். தமிழ்த் தேசிய ஊடகங்கள் இனியாவது தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமது பன்முகத் தன்மையை கட்டிக்காக்க முன்வரவேண்டும்.

இந்த வரலாற்றுப் பின் புலத்திலிருந்து துதி பாடலாக இல்லாமல், மிகையுணர்ச்சி சார்ந்து இயங்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தோற்றுவாயை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தோற்றுவாயுடன் பொருத்தப்படுவதை ஒரு கட்டத்தில் அவதானிக்கலாம்.

வெற்றியின் விளிம்பில் நின்று ஆரவாரங்களுடன் ஒரு ஆய்வை முன்வைப்பதை விட தற்போதுள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு தேடலை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையானதாகவும் இருக்கும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மகிந்தவின் படைகள் குமுழமுனை, அலம்பில் தொடங்கி மாங்குளம் கனகராயன்குளம் வரை நீண்டு பரந்தன் வரை ஒரு பிறை வடிவ முற்றுகைக்குள் புலிகளை அடக்கி வைத்திருக்கும் செய்தி வந்து சேர்கிறது. ஒரு வகையில் உண்மையிலேயே இது ஒரு அற்புதமான தருணம். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கக்கூடிய இடமும் காலமும் இதுதான்.

போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை- வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.

பனானின் மொழியில் கூறினால் ‘இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள் வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது.” இதை நாம் எமக்கு தெரிந்த வேறு ஒரு மலினமான சொல்லாடலில் தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் குறிப்பிட்டால் ‘சின்னப்புள்ளத்தனமா இல்லை”.

சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், ‘தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப் படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றை எழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல.” எத்தகைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம். அதுதான் அவரால் இறுதிவரை ‘பயங்கரவாத” பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலக அரங்கில் துணிச்சலுடன் முன்மொழிய முடிந்தது. அன்ரன் பாலசிங்கத்தின் வழி ஒவ்வொரு தமிழனும் வரலாற்றினுள் வெடித்தெழுவோம். நமது தாக்குதலால் அவ் வரலாற்றை உலகளாவியதாக மாற்றுவோம். நாம் போராடுவோம். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை- ஆயுதங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை – காத்திருக்கும் கத்திகளின் பொறுமை போதும். அன்ரன் பாலசிங்கத்திற்கான நிஜமான அஞ்சலிக்குரிய வார்த்தைகள் அவை. ஏனெனில் சர்த்தார் குறிப்பிடுவது போல் தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்டான் எதிரி.

அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத் தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார் என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.

இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.

அந்த ஆய்வின் தொடர்ச்சி பயங்கரவாதம், புரட்சிகர வன்முறை, வன்முறையின் அறவியல் தொடர்பான கோட்பாடுகளை உய்ந்துணர்ந்து கொள்வதுடன் மட்டுமல்ல தற்போதைய களநிலவரங்களின் கன பரிமாணத்தை உணர்த்துவதுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய வடிவ மாறுதலையும் இனங் காட்டும்.

அன்ரன் பாலசிங்கம் குறித்து இன்னும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் இல்லை என்று நிறுவ முயன்றார் என்பதுதான் அது. இதைத்தான் நாம் தவறு என்கிறோம். ஏனெனில் அவர் அவ்வாறு செய்ய முற்படவில்லை என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை முன்வைத்து ஒரு முக்கியமான விடயம். பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை முன்வைத்து இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் விடயம் மிகச் சிக்கலானது மட்டுமல்ல நுட்பமானதுமாகும். எமது போராட்டத்தின் மீது தொடர்ச்சியாகத் தடவப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ‘சாயத்தை” கேள்விக்குள்ளாக்குவதுடன் அதிலிருந்து வெளியேறும் நோக்குடனுமே நாம் இது குறித்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே இந்த சிறு பத்தியினுடாக நாம் தேடும் விடயத்தின் பன்முக பரிமாணத்தை துல்லியமாக – விரிவாக ஆய்வு செய்து உலகத்தின் முன்வைக்க வேண்டிய பெருங்கடமை ஈழத்து அறிவுஜீவிகளின் முன் கிடக்கிறது. வரும் நாட்களில் அப் பணியை சேர்ந்து முன்னெடுப்போம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

மேற்கண்ட வரிகளை முன்வைத்து ஒருவர் அப்படியென்றால் ‘புலிகள் என்ன பயங்கரவாதிகளா? பாலசிங்கம் அதை முன்மொழிந்தாரா?” என்று கேட்டு வாதாட முன்வரலாம். இது ஒரு ஒற்றைப் பார்வை. பன்முகக் கோணத்தில் அது உண்மையல்ல. இதன் அடிப்படையில்தான் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாக இனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் – கொண்டாடினார்.

ஏனெனில் நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.

சர்த்தாரின் மொழியிலேயே எமது ‘பயங்கரவாதத்திற்கு” நாம் வியாக்கியனம் கூறினால், எமது வன்முறை வெறும் கோபக் குமுறல் அல்ல, வன்மத்தின் விளைவுமல்ல, அது எம்மை நாமே திருப்பி படைப்பது. எந்த ஒரு நளினத்தாலும் மேன்மையாலும் சிங்களத்தின் வன்முறையை அழிக்க முடியாது. எமது வன்முறையால் மட்டுமே அதை அழிக்க முடியும். ஆயுதத்தின் முலம் ஆக்கிரமிப்பாளனை நாம் வெளியேற்றுவதன் மூலம் அடக்குமுறை மனநோயிலிருந்து எம்மை குணப்படுத்திக் கொள்கிறோம். எமது கையில் இருக்கும் ஆயுதம் எமது மனிதத்தன்மையின் அடையாளம். ஒரு சிங்கள ஆக்கிரமிப்பாளனை சுட்டு வீழ்த்துவதன் மூலம் ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக் கட்டுகிறோம். எமது காலடியில் கிடப்பது ஒரு பிணம். ஆனால் அங்கு எழுந்து நிற்பது சுதந்திரமான ஒரு ஈழத்தமிழ் உயிரி.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் எம்மை பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம். இப்போது எங்களை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். எங்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறீர்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் நாம் அதை எமதாக்கிக் கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாம் வன்முறையின் குழந்தைகள்.

Voice-of-the-Nation-with-the-people-of-T

அன்ரன் பாலசிங்கம் பேசிய – கொண்டாடிய ‘பயங்கரவாதம்” இதுதான். ஆனால் இந்த அறத்தையும் நீதியையும் தவற விட்டுவிட்டு கேடுகெட்ட சர்வதேச சமூகம் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் மீது நியாயத் தீர்ப்புக்களை வழங்குவதற்கு முண்டியடிப்பது காலத்தின் விசித்திரம் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. பிரச்சினையின் மூலத்தையும் வேரையும் விட்டுவிட்டு அதற்கு தீர்வை முன்வைக்காமல் ‘பயங்கரவாத” பட்டியலிடும் சர்வதேச்தின் மனச்சாட்சிகளோடு நாம் தொடர்ந்து போராடுவோம். பாலசிங்கத்திற்கான அஞ்சலி அதில்தான் தங்கியுள்ளது. அவர் முன்னெடுத்த பணியும் அதுதான்.

அவர்களின் கதவு இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். அவர்கள் திறக்கவில்லை என்பதற்காக நாம் தட்டுவதை நிறுத்த வேண்டாம். நாம் தொடர்ந்து தட்டுவோம். என்றாவது ஒரு நாள் அது திறந்தே தீரும்.

வன்னியில் நிலங்களை ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து சொத்துக்களை சூறையாடி பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கி விட்டிருக்கிறது சிங்கள இனவாதம். தொண்டு நிறுவனங்களும் இல்லை. துயர் துடைக்க நாதி இல்லை. விச ஜந்துக்களோடு காட்டில் காலம் கழிகிறது. போதாததற்கு இயற்கையின் சீற்றம் வேறு. எறிகணைகளும் குண்டு வீச்சு விமானங்களும்தான் தினமும் துயிலெழுப்புகின்றன. போததற்கு ‘கிளஸ்ரர்” குண்டுகளை வேறு சிங்களம் வீசத் தொடங்கியிருக்கிறது. உலகம் கண்ணை மூடிப் பாhத்துக் கொண்டிருக்கிறது. இது ‘பயங்கரவாதம்” இல்லையாம்.

‘அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் முன்பு கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை அன்று நாம் வெளிப்படுத்தினோம். எம்மை ‘பயங்கரவாதிகள்” என்றீர்கள். இப்போது அதனிலும் பன்மடங்காக எதிரி எமக்கு கற்பிக்கிறான். இதை ஏன் உங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அது ‘பயங்கரவாதம்” இல்லையா!” ஈழத்திலிருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலிருந்தும் எழும் குரல் இது.

எல்லா சமன்பாடுகளையும் கலைத்துப் போட்டு எதிரியானவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அத்தாக்குதலை முன்னிறுத்தி பிரபல பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்திரியா “டந அழனெந” பத்திரிகையில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ‘ஒரு அதிகார அரசும் ஒரு அமைப்பும் நடத்திய விளையாட்டில் மறு தரப்புக்கு சீட்டுக்களை சரியாகப் பகிர்ந்தளிக்காமல் அதிகார அரசு விளையாட்டை ஆரம்பித்தது. விளைவு மறு தரப்பு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்கு தள்ளப்பட்டது. விளைவு இரட்டைக் கோபுரம் தகர்ந்தது. மாற்றப்பபட்ட அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்” என்று குறிப்பிட்டார். இன்றும் சிங்களம் இதைத்தான் நமக்கு எதிராகச் செய்கிறது.

இப்போது தமிழீழத்திலும் விளையாட்டின் விதிகள் மாற்றப்படவேண்டிய புறநிலை உருவாகியிருக்கிறது. அன்ரன் பாலசிங்கம் இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லியிருப்பார். இது வன்முறையின் மூன்றாம் கட்;டம். தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதிலிருந்து ‘கிளஸ்ரர்” குண்டுகள் வரை உலகின் மௌனம் தொடர்கிறது. இன்று நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்கிற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. மிஞ்சி இருப்பது உயிர் மட்டுமே. நாளை அவையே அவர்களுக்கு ஆயுதம். அவர்களது உயிர்கள் ஆயுதங்களாக வெடிக்கும் போது மட்டும் உலகின் யோக்கியர்கள் ‘பயங்கரவாத பட்டியலை” காவிக்கொண்டு ஓடி வரலாம். அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. இது சிங்கள ஏகாதிபத்தியயம் வீசிய வளைதடி. அதை நோக்கி திரும்பும் காலம் நெருங்குகிறது. அன்ரன் பாலசிங்கத்தின் இன்றைய நினைவு நாளில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அதைச் சாத்தியமாக்குவோம். இதுதான் அவருக்கான அஞ்சலி மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையும் கூட.

நினைவுப்பகிர்வு: பரணி கிருஸ்ணரஜனி.

 

https://thesakkatru.com/anton-balasingham-exploded-into-history/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல்

Negotiations-in-the-Vanni-2.jpg

அங்கீகரிக்ப்படாத தேசத்தின் அங்கீகரிக்ப்பட்ட இராஜதந்திரி தேசத்தின் குரல் பாலா அண்ணா.

“பாலா அண்ணா” என ஈழத் தமிழ் மக்களினால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக் கத்தின் அரசியல் ஆலோசகரும், தத்துவா சிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்தும், உலகத்தில் இருந்தும் பிரிந்து சென்றுவிட்டார். தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு மேதை இன்று உலகில் இல்லை.

‘தேசத்தின் குரல்’ என மகுடம் சூட்டப்பட் டுள்ள அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பல்வேறு வடிவில் உல கிற்கு அறியப்பட்டவர். ஒரு ஊடகவிய லாளராக, ஒரு படைப்பாளியாக, ஒரு தத் துவ ஆசிரியராக, ஒரு இராஜதந்திரியாக, ஒரு விடுதலை அமைப்பின் ஆலோசகராக, இவையாவற்றிற்கும் மேம்பட்டதாக ஒரு பண் பட்ட மனிதராக அவர் அடையாளம் காணப் பட்டவர். இதுவே அவரை ‘தேசத்தின் குரல்’ என்ற உயர் நிலைக்கு உயர்த்தியது.

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அறிவு, ஆற்றல், ஆளுமை என் பவை ஒரு புறம் எனின், அவரின் தோழமை என்னும் இயல்பு அவரின் பண்பட்ட மனித தத்துவத்தின் உயர்ந்த வெளிப்பாடு. அவரால் அறியப்பட்டவர்கள் அவருக்கு பழக்கப்பட்ட வர்கள் அவரின் தோழமையை அறிந்திருக்க முடியும், அனுபவித்தும் இருக்க முடியும்.

அவரால் அறியப்பட்ட ஒரு போராளியில் இருந்து, ஏன் ஒரு பொதுமகனில் இருந்து இராஜதந்திரிகள் வரையில் அவர் தோழமை கொண்டவராகவே இருந்துள்ளார். அவரின் இக் குண இயல்பு அவர் மீதான பற்றுதலை யும், பாசத்தையும் ஒருபுறம் வளர்த்ததெனில் இன்னொருபுறம் அவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தியது எனில் மிகையில்லை.

அவரது அறிவு, ஆற்றல், ஆளுமை என்பன பல தடவை வெளிப்படுத்தப்பட்ட துண்டு. இதேசமயம் அவர் தன்னைச் சார்ந்தவர்களையும் சரி, பிறரையும் சரி தம் மைச் சந்தித்த அனைவரையும் அவர் தனது ஆளுமைக்குள் கொண்டு வரும் ஆற்றல் மிக்கவராகவே இருந்தார். இதனால் அவருடன் பழகியவர்கள், தொடர்பு கொண்டவர்கள் எப்பொழுதுமே அவருடன் நெருங்கியே இருந்தனர்.

அது மட்டுமல்ல, அவர் ஒரு பண்பட்ட மனிதர், பெருந்தகை, தன்னுடன் இருந்தவர் கள், பழகியவர்கள், அவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களின் துன்பதுயரங்களை விளங் கிக் கொண்டவர். அதற்கென தன்னால் உதவுவதற்கென இயன்றவரை செய்வதற்கு முற்பட்டவர். ஆயினும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கவில்லை.

தன்னுடைய உழைப்பு தேசத்திற்கானது என்ற பரந்த சிந்தனை கொண்டவர். இதனால் தனது உழைப்பிற்கான பயனை எதிர்பார்க் காதவர், கோராதவர், இத்தகையவரின் முப்பது வருடகால அரசியல் வாழ்வு குறித்து, மதிப்பீடுகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆயினும் தற்பொழுது அதுகுறித்த முடிவிற்கு எவரும் வந்துவிடுதல் முடியாது.

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பானது அவர் சார்ந்திருந்த அமைப்பிற்கானது அவரைச் சார்ந்திருந்தவர் களுக்கானது அவர்களினால் அது இட்டு நிரப்ப முடியாதது ஈடுசெய்ய முடியாதது என்ற வாதம் பலரால் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், உண்மையில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பா னது தமிழர் தேசத்திற்கானது. தமிழ் மக்களுக்கானது. தனிநபர்களுக்கானதோ, அன்றி ஒரு அமைப்பிற்கானதோ மட்டு மானதல்ல. ஆகையினால் இது தமிழர் அனைவருக்கும் ஆனது.

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழர் தேசத்திற்காற்றிய பணி இரண்டு வகைப்பட்டது.

1. தமிழ் தேசத்தின், தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை, நியாயப் பாட்டை தத்துவார்த்த அடிப்படையிலும், கொள்கை அடிப்படையிலும் தெளிவுபட சர்வதேச மட்டத்தில் நிலை நிறுத்தினார்.

2. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட் டத்தை வழி நடத்திய அதன் தலைமைத்து வத்தை, அவ் அமைப்பைப் பலப்படுத்தினார், வளப்படுத்தினார்.

இவை இரண்டும், ஒன்றில் ஒன்று தங்கி யிருந்தன. அதாவது தமிழர் தேசம் என்பதும் இதன் இருப்பும் விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தினதும், அமைப்பினதும் இருப்பிலும், வளர்ச்சியிலுமே தங்கியிருந்தது என்பது ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பால சிங்கம் அவர்களினால் தெளிவாகவே உறுதி செய்யப்பட்டிருந்தது, நம்பப்பட்டது.

இதேசமயம் பௌத்த-சிங்களப் பேரின வாதம் இதிகாசங்களின் கற்பனை வாதத்திற்குள் மூழ்கிப்போய்க் கிடக்கின்றது என்பதையும் அது அதில் இருந்து விடுபட்டு இன்றைய அரசியல் யதார்த்தத்திற்குள் வரப் போவதில்லை என்பதையும் அவர் நன்கு விளங்கிக் கொண்டும் இருந்தார். அதாவது சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் இறங்கி வந்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கப் போவதோ அன்றிப் பகிர்ந்தளிக்கப் போவதோ இல்லை என்பதை அவர் தெளி வாகவே உணர்த்தியிருந்தார்.

இந்நிலையில், அவர் ஆரம்பம் முதலே இலங்கையில் தமிழ் மக்களின் அடையாளத் தைத் தெளிவாகவே தத்துவார்த்த ரீதியில் வரையறை செய்யவும் அடையாளம் செய்ய வும் முற்பட்டார். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் திம்புப் பேச்சுவார்த் தையை நெறிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அவ ருக்கு வழங்கியபோது அதனை அவர் இலங்கையில் தமிழரின் அடையாளத்தை, இருப்பை உறுதிப்படுத்துவதற்கான தளமாக ஆக்கிக் கொண்டார்.

தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பன தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான அடித்தளமாக அன்று முதல் கொள்ளப்பட்டது. இன்று அது கேள்விக்கிட மற்றதொன்றாக, நியாயப்பாடுமிக்கதாக சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதொன்றாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தேசத்தின் குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்கள் அடையாளப்படுத்திய இவ்விட யத்தை எவரும் புறம்தள்ளிவிட முடியாத தொன்றாக இருந்தது என்பதை நோர்வேயின் சிறப்புத்தூதுவரான ஹான்சன்பௌயர் அவர்கள் கூடச் சுட்டிக்காட்டியிருந்தார். “எமக்கு நல்ல நண்பனையும், தமிழ் மக் களின் உரிமைக்காக வாதாடிய யாராலும் தோற்கடிக்க முடியாத மிகப் பெரும் சக்தி யையும் இழந்துவிட்டோம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தமிழ் மக்களின் உரிமைக் கான போராட்டத்தின் நியாயப்பாட்டை, அதற்கான அடிப்படையினைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளி வான நியாயப்பாட்டை வெளிப்படுத்தியவர். இலங்கையில் இரு அரசுகள் உருவாவது குறித்த சர்வதேச அரசுகளின் அபிப்பிராயம் என்பது பூகோள அரசியல் – இராணுவ நலன் கள் சார்ந்தவை.

ஆனால் இலங்கையில் தமிழ் மக்களின் உரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை சார்ந்தவை. இவ்விட யத்தில் சர்வதேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தமைக்கு ‘தேசத்தின் குரல்’ பாலசிங்கம் அவர்களின் பங்கு, பணி மகத்தானது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமும் – அதன் தலைமைத்துவமும் கடந்த காலத்தில் அரசியல், இராஜதந்திர, இராணுவ ரீதியில் பெரும் சவால்களையும் நெருக்கடியும் சந்தித்ததுண்டு. ஒரு புறத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மைய சக்தியான விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் ஓரம் கட்டிவிடவும் அதனை அழித்துவிடவும் பெரும் சக்திகள் கூட பெரும் முயற்சிகள் மேற்கொண்டதுண்டு.

இவற்றைத் தேசியத் தலைமை அரசியல் – இராணுவ- இராஜதந்திர வழி முறைகளில் எதிர் கொண்ட போது அரசியல் மற்றும் இராஜதந்திர வழிவகைகளை வகுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றிருந்த ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அவ்வேளை களில் ஆற்றிய பெரும் பணியானது தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்திய தோடு, விடுதலை அமைப்பின் வெற்றிகரமான நகர்வுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இதேவேளை இன்று தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டமானது, இனப் பிரச்சினை என்ற வடிவத்தில் சர்வதேசத்தின் கவனத்தைக் கவர்ந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தைத் தெளிவான தடத்தில் சர்வதேசத்தின் முன் கொண்டு செல்வதற்கான இராஜதந்திர வழி முறையை அவர் ஏற்படுத்திக் கொடுத்துச் சென்றுள்ளார் எனக் கூறின் அது மிகையாக மாட்டாது.

இராஜதந்திர நகர்வுகளும் அரசியல் அணுகுமுறைகளும் களயதார்த்தம், சர்வதேச சூழ்நிலை என்பனவற்றிற்குஏற்ப மாற்றம் காண்பவை, செய்யப்படவேண்டி யவை என்பது பொதுவானதொன்றே. ஆயி னும், இராஜ தந்திர நகர்வுகள், சூழ்நிலைக் கேற்ப மாற்றம் காணப்பட வேண்டியவை ஆயினும் போராட்டத்தளத்தின் அடிப்படை யில், மாற்றம் ஏற்படாதவாறு உறுதியாக அதனை தத்து வார்த்தை அடிப்படையில் இட்டுக்கொடுத்ததில் ‘தேசத்தின் குரல்’ பாலசிங்கம் அவர் களின் பாத்திரம் மிகவும் முக்கியமானதாகும்.

இதேவேளை ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அரசியல் , இராஜதந்திரம் சார்புலமை, சமாதானத்தின் பால் கொண்டிருந்த பற்றுறுதி பேச்சுவார்த்தை மேசைகளில் அவர் காட்டிய ஆர் வம் என்பன அவரை ஒரு அங்கீகாரம் பெறா ததொரு நாட்டின் அங்கீகாரம் பெற்றதொரு இராஜதந்திரியாகவே ஆக்கியிருந்தது.

Negotiations-in-the-Vanni-1.jpg

குறிப்பாக நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாட்டுப் பிரதிநிதிகள் இக் கௌரவத்தை அவருக்கு வழங்கியிருந்தனர். அவருடைய இராஜதந்திர நகர்வுகள், வெற்றி கொள்ளப்பட முடியாத விவாதத்திறன், எவ் வேளையிலும் உண்மை பேசும் உயர் பண்பு, அவற்றிக்கும் மேலாக அவரின் தோழமைப் பாங்கு என்பன அதற்கான அங்கீகா ரத்தை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்த தெனலாம். அவரை இராஜீக ரீதியில் சந்தித்த பலர் பின்னர் நட்புறவுடன் பழக்கத்தை வளர்த் துக்கொண்டனர்.

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம் தேசத்திற்கு விட்டுச் சென்றவற்றில் மற்றுமொரு சொத்து தமிழரின் விடு தலைப்போராட்டத்தின் வரலாற்றுப் பதிவான “போரும் சமாதானமும்” என்னும் நூலாகும். விடுதலைப்புலிகள் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறும் இந்நூலுடன் அவரின் ‘விடுதலை’ மற்றும் அவரின் பாரியார் அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது கணவரின் ஒத்துழைப்புடன் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்பன தமிழ் மக்களின் விடு தலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய வர லாற்றுப் பதிவுகள் ஆகும்.

இந்நூல்கள் தமிழ் மக்களின் – விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றை மட்டுமல்ல, தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் விடுதலை உணர்வை, அவரின் தீர்க்க தரிசனமான, உறுதியான முடிவுகள், போராட்ட வரலாற்றின் திருப்பங்களையும் கூறுவதோடு, விடுதலைப்போராட்டத்தில் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும் பங்கு பற்றியும் வெளிப்படுத் துபவையாக உள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று நூல் களாகவே இவை மதிப்பிடத்தக்கவை யாகயுள்ளன.

இந்தவகையில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது பன்முகப்பட்ட ஆளுமையை தமிழ் மக்களின் உரி மைக்கான போராட்டத்திற்காக அர்ப்பணிப்புச் செய்தார். அத்தகையவரின் இழப்பானது ஈடு செய்ய முடியாதது என்பது கேள்விக்கு இடமற்றது. ஆனால் ஒருவரின் வாழ்வுடன் ஒரு தேசத்தின் வரலாறு முடிந்து போய் விடுவ தில்லை என்பதன் அடிப்படையில் அவர் விட்டபணியைத் தொடர்வதே அவரின் உழைப்பிற்குத் தமிழ் மக்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

எழுத்துருவாக்கம்: ஜெயராஜ்
நன்றி – ஈழநாதம் நாளிதழ் (2006).

 

https://thesakkatru.com/bala-anna-is-the-voice-of-the-recognized-diplomat-nation-of-the-unrecognized-nation/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எம்மிடமி௫ந்த பெருமதிமிக்க அரசியல்மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் . அவர்களுக்கு வீரவணக்கம்.     

நிறய வைத்தயார்கள்........நிறையபொறியியாலார்கள்.........

உருவாக்கினோம்.ஆனால் ஒர் அரசியல்மதியுரைஞரை உருவாக்கானோமா?

Link to comment
Share on other sites

 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

Quote

பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன்

December 14, 2021
 
spacer.png
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும் வாழ்தல் வேண்டும் என்பது 2009இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்ட மகிந்த சிந்தனை. பத்தாண்டுகளின் பின்னர் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என அவ்வழியைச் “சிறிலங்காவினர்க்கான அபிவிருத்திகள்” என்ற வார்த்தைஜாலங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான புது வழியாக கோத்தபாய சிந்தனை காட்ட முற்பட்டிருக்கிறது.

எப்பொழுதுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதுடன் இணைத்து, ஈழத்தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற தொன்மையும் தொடர்ச்சியுமான உரிமைகளை மறுத்து, சிறிலங்கா என்னும் நாட்டு அடையாளத்துடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மையினமாக அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்திச் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து அவற்றில் பங்கெடுக்க வரும் சர்வதேச அரசுக்களின் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் பெற்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மேல் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வது சிறிலங்கா அரசின் வழமையாகத் தொடர்கிறது.

spacer.png

 

இவ்வாறு தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil’s National Question)என்ற ஒன்றே இலங்கையில் இல்லை எல்லாமே அபிவிருத்திப் பிரச்சினையெனச் சிறிலங்கா உலகுக்குக் காட்ட முற்படும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்றால் (Tamil’s National Question) இதுதான் என உலகுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்து வந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தெளிவான அரசியல் சிந்தனைகள் நினைவுக்கு வருகின்றன.

spacer.png

ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நாளான டிசம்பர் 14ம் நாளன்று உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செய்வது தமிழர் சமுதாய வழமையாக உள்ளது.

இவ்வாண்டு அவரின் 15வது ஆண்டு நினைவேந்தல் காலமான டிசம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பது சாலப்பொருத்தமாக அமைகிறது.

“மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றார்கள்” (போரும் சமாதானமும் 647) என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் தெளிவாக உலகுக்கு மீளவும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறது.

சுயநிர்ணய உரிமை

அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்பொழுதும் மையப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அதிகாரத்தை மற்றைய மாநிலங்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியே தவிர இலங்கைத் தீவு போன்ற வரலாற்றில் இருதேசியங்களின் இறைமைகளை இறைமை இழப்பு ஏற்படாது பகிர்ந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் “பிரதேச சுயாட்சி” என்பதே தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுடைய தன்னாட்சி உரிமை இழப்பின்றி இறைமை பகிரப்படுவதற்கான நேர்மையான வழியாக அமையலாம்.

spacer.png

 

ஒரு அரசு தனது மக்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுதே அந்த அரசுக்கு பிரதேச ஒருமைப்பாடு உள்ளதென்பதையும் தனது மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் போது அந்த அரசு அந்த மக்கள் மீதான பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையைத் தானே இழந்து விடுகிறது என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கியூபெக் மாநிலத்தின் பிரிவினைப் பிரச்சினையை கனடிய உச்ச நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பின் பின்வரும் வாசகங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார் :-

‘தன்னாட்சி உரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது வளர்ந்து வரும் ஒரு கருத்துருவம். பரிணாமம் பெற்று வரும் ஒரு கோட்பாடு. சர்வதேசச் சட்டத்துறையில் புத்தாக்கம் பெற்று வரும் விதியாகவும், சர்வதேச மனிதஉரிமை நியமமாகவும் இது கொள்ளப்படுகிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, ஆரம்பத்தில் மேற்குலக வல்லரசுகளின் குடியேற்றத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1970ம் ஆண்டுக்குப் பின்பு இக்கோட்பாடு புத்தாக்கம் கண்டது. பிரத்தியோகமாகக் குடியேற்ற நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான தகைமையை நிர்ணயிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ‘அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச சட்டவிதிகள்’ என்ற புதிய பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

spacer.png

 

இப்பிரகடனத்தில் “சுயநிர்ணயமும் சம உரிமை விதிகளும்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட ஒரு விதி பின்வருமாறு உள்ளது:- “ஐநா சாசனத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க, எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியல் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமுக,கலாசார வளர்ச்சியைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்திற்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

“இப்போதுள்ள அரசுக்கள், கனடா உட்பட தமது பிரதேச ஒருமைப்பாட்டைப் பேண விழைவதற்கும், ஒரு ‘மக்கள்’ ஒரு சுயநிர்ணய உரிமையை முழுமையாகப்; பெற்றுக் கொள்ள முனைவதற்கும் இடையில் மத்தியில் முரண்பாடு எழுவதற்கு அவசியமில்லை. எவ்வித பாகுபாடுமின்றி முழு மக்களையும் அல்லது மக்கள் சமுகங்களையும் தனது ஆட்சி அமைப்பில் பிரதிநிதப்படுத்தி, உள்ளீட்டான ஆட்சி ஒழுங்கில் சுயநிர்ணயத்தின் விதிகளுக்கு ஒரு அரசு மதிப்பளிக்குமானால், சர்வதேச சட்டத்திற்கு அமைய தனது பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அந்த அரசுக்கு உரிமையுண்டு.

ஒரு அரசின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஒரு அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.எனவே இந்த விளக்கத்தின் மூலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் மேலான தனது அடக்கு முறைகளால் தமிழர் தாயகப் பகுதிகளில் தானாகவே தனது பிரதேச ஒருமைப்பாட்டை இழந்து விட்டது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.

spacer.png

ஒருதலைபட்சமான பிரிவினையைப் பிரகடனம் செய்யும் பிரத்தியோகச் சூழ்நிலை பற்றிய கனடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: –

அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை இரு வகுப்பினரான மக்களுக்கு (குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு அல்லது அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள மக்களுக்கு) உரித்தாகும். ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்குக் குடியேற்ற நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு என்பது இப்பொழுது விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகி விட்டது. குடியேற்றத்திற்கு வெளியான சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு மக்கள் சமுகம் அந்நிய அடக்கு முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டல் முறைக்கும் ஆளாகும் பொழுது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.

ஒருதலைபட்சமான பிரவினைக்கு சுயநிர்ணய உரிமையைப் பாவிக்கும் மூன்றாவது சூழ்நிலை பற்றியும் சில மதிப்புரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த மூன்றாவது சூழ்நிலை குறித்துப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், ஒரு மக்கள் சமுகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள முறையில் அடைவதற்குத் தடையேற்படுமானால், இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.” என்கிறது.

எனவே ஒரு அரசு தனது மக்களின் சமமான உரிமைகளையும் உள்ளக சுயநிர்ணய உரிமையையும் தனது அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே நிறைவு செய்யாவிட்டால் அந்த மக்கள் இயல்பாகவே வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க உரிமையுடையவர்கள்.

spacer.png

 

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவற்றைத் தெளிவுபடுத்தியது பிரிவினையைத் தூண்டவல்ல அரசின் கடமையையும் மக்களின் உர்pமையையும் இருதரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவே. இதனை உறுதி செய்யக் கூடிய முறையிலேயே 2003ம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார் :-

“தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடின்றி, சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இனஅடையாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமதுமக்களின் அரசியல் அபிலாசை, உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது” என்பது தேசியத் தலைவரின் கருத்து. தமிழ் மக்களின் பிரதேச சுயாட்சி என்றால் என்ன என்பதை இதில் மிக அழகாக எடுத்துரைத்தார்.

தமிழ் மக்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை தேசியத் தலைவர் அவ்வுரையில் வலியுறுத்தி வேண்டினார். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்று விடவில்லை.

 

https://www.ilakku.org/balasingham-their-thoughts-are-the-need-of-the-hour/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலுக்கு வீரவணக்கங்கள்!🙏

Link to comment
Share on other sites

 • 1 year later...
 • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலுக்கு வீரவணக்கங்கள்!🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு வீர வணக்கம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மதியுரைஞர் அன்ரன் பால்சிங்கம் அவர்களுக்கு வீர வணக்கம்

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.