Jump to content

சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – தமிழர் தாயகத்திலும் நினைவு கூரல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று – தமிழர் தாயகத்திலும் நினைவு கூரல்

 
sunami.jpg
 15 Views

சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் என 14 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியது.

இலங்கையில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் பேரலையால் தாக்கப்பட்டன. இதனால், 35 ஆயிரத்து 322 மக்கள் கொல்லப்பட்டனர். 5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 90 ஆயிரம் பேர் வீடுகள், சொத்துக்களை இழந்தனர்.

பேரலை தாக்கிய நாடுகள் முழுவதிலுமாக 2 இலட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போயினர்.

இந்தப் பேரனர்த்தத்தின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று, கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நினைவேந்தப்படவுள்ளது. சுகாதார விதிகளை அனுசரித்து நினைவேந்தலை நடத்த நமது நாட்டிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=37927

Link to comment
Share on other sites

ஆழிப் பேரலையால் அழிவு ஒருபுறம் இருந்தாலும்.... ஆதாயமடைந்த  சிங்கள அரசையும் மறக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியும் நாமும்…

Sunamiyum-Naamum.jpg

26ஆம் திகதி இடம்பெற்ற அனர்த்தம் எமது மக்களைப் பொறுத்தளவில் இரண்டாவது சுனாமியே. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின் உராய்வு என்ற முக்காரணங்களால் ஆழிப்பேரலைகள் எழுகின்றன. கடலின் மேற்புறத்தில் காணப்படும் வழமையான அலை காற்றின் அழுத்தத்தாலும் சூரிய, சந்திரரின் இழுவையாலும் இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆழிப்பேரலை எதிர்பாராத சடுதி நிகழ்ச்சி. இதன் காரணமாக அழிவுகள் மிகக் கூடுதலாக ஏற்படுகின்றன. பசுபிக் மாகடலில் ஜப்பான் தொட்டு கலிபோர்னியா வரையிலான பகுதியில் ‘நெருப்பு வளையம்’ (RING OF FIRE) இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. பசுபிக் மாகடலின் இருபுறமுள்ள ஜப்பான், வட அமெரிக்காவின் கலிபோர்னியா ஆகிய தரைப்பரப்புகளுக்கு அண்மையில் நிலநடுக்க வளையம் காணப்படுகிறது. இதன் காரணமாக பசுபிக் மாகடலில் ஆழிப்பேரலைகள் எழுந்தவாறு உள்ளன. கூடுதலாக ஜப்பான் தீவுகள் பாதிப்படைகின்றன. இவ்வகை அலைகளுக்கு ஜப்பான் நாட்டவர் வைதத் பெயர் இன்று எல்லா மொழிகளுக்கும் பொதுவான சொல்லாக வழங்குகிறது.

அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமான ஹவாய் தீவுத்தொகுதி அமெரிக்காவின் முப்பத்தியொராவது மாநிலமான கலிபோர்னியாக் கடலோரத்திலிருந்து 2,400மைல் தூரத்தில் காணப்படுகிறது. இத்தீவுகளில் சுனாமித் தாக்கம் அதிகளவில் உண்டு. இங்குவாழும் மக்கள் கடலின் குண இயல்புகளை நன்கு உணர்ந்து உயிர்வாழக் கற்றுள்ளனர். கடல்நீர் வெகுதூரம் பின் நோக்கிச் செல்வதைக் கண்டால் இத்தீவு மக்கள் எதிர்த்திசையில் ஓடி மேட்டுப் பகுதிகளில் தஞ்சம் புகுவார்கள். பசுபிக் மாகடலின் நடுப்பகுதியில் இருக்கும் தீவுகளில் எரிமலைகள் வெடித்து அனல் கக்கிக்கொண்டே இருக்கும். கடலடியில் தோன்றிய எரிமலைகள் பல நூற்றாண்டு காலப் பகுதியின்பின் ஹவாய்த்தீவுகளாக எழுந்து நிற்கின்றன. சில தீவுகளில் இன்றும்
அணையாத எரிமலைகள் காட்சி தருகின்றன.

ஆழிப்பேரலை அனர்த்தங்கள் பசுபிக் மாகடல் பிராந்தியத்தில் கூடுதலாக நடந்தாலும் இந்து மாகடல், அத்திலாந்திக் மாகடல் போன்றவற்றிலும் அவை காலத்திற்குக் காலம் நடைபெறுவதை புவி வரலாறு உணர்த்துகின்றது. நவீன ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரும் சேதத்தை விளைவித்த ஆழிப்பேரலை 250 வருடங்களுக்கு முன்பாக நவம்பர் 01, 1755ஆம் நாள் போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்றது. இந்த நாட்டின் அத்திலாந்திக் கடலோரத்தில் நடந்த கடலடிப் புவிநடுக்கம் பிரமாண்டமான அலைகளைக் கிளப்பியது. தலைநகா லிஸ்பனில் (LISBON) மீது மோதிய கடலலைகள் லிஸ்பனில் மாத்திரம் 30,000வரையிலான மனித உயிர்களைக் காவுகொணடது. ஐரோப்பாவின் அப்போதைய நான்காவது மிகப்பெரிய நகரமாகவும், ஐரோப்பாவின் அதியுச்ச செல்வந்த நகரங்களில் ஒன்றாகவும் இருந்த லிஸ்பன் தனது பழைய நிலைக்குத் திரும்பாமல் இன்றுவரை நலிவுற்றுக் காணப்படுகிறது.

போர்த்துக்கல் நாட்டின் தென்கரையோரம், தென்மேற்கு ஸ்பெயின், வடஆபிரிக்கா, என்பனவும் இவ்வாழிப் பேரலையால் பாதிப்படைந்தன. பெல்ஜியம், பிரித்தானியா, பிரான்சு, அயர்லாந்து, நெதர்லாந்து எனப்பனவும் போர்த்துக்கல்லுக்கு சொந்தமான அத்திலாந்திக் கடலின் நடுவிலுளள் அஸோர்ஸ் தீவுகளும் கரையோர அழிவுகளைச் சந்தித்தன. அன்று பதிவான உயிர் தப்பியோரின் வாக்குமூலங்களின்படி அண்மையில் நடந்ததுபோல் கடல் பின்னோக்கிச் சென்ற சிறிது நேரத்தின்பின் முழுமூச்சுடன் முன்னோக்கிவந்து தரைப் பகுதிக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தியது. பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற போர்த்துக்கல் நாட்டில் இன்றும் ஆழிப்பேரலை சம்மந்தமான பீதி தீரவில்லை. தெற்கு ஆசியா சந்தித்த அனர்த்தத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு சிறியரக நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இப்போது போர்த்துக்கல் நாட்டு ஊடகங்கள் கேட்கும் முக்கிய கேள்வி இதுதான்: நவம்பர் 01, 1755இல் நடந்தது போல் மீண்டும் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாரா? தயாரில்லை என்று அவர்களே பதில் கூறுகிறார்கள்.

டிசெம்பர் 26, 2004வரை இந்திய – இலங்கை கடற்பகுதியில் ஆழிப் பேரலைகளுக்கு வாய்ப்பில்லை என்ற பரவலான கருத்து நிலவியது. கடற்கோள் என்பது தமிழர்தம் தொன்மை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சொற்றொடர். நிலவியல் நிபுணாகள் கூற்றுப்படி மடகஸ்கார், இலங்கை, இந்தியா உட்பட டெக்கான் பள்ளத்தாக்கு வரையிலான பிரதேசம் ஒரே நிலத்தொகுதியாக இருந்ததென்றும் அது லெமூரியா கண்டம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். தமிழ் இலக்கியத்தில் இது குமரிக்கண்டம் எனப்படுகின்றது. அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் கொன்ட்வானா என்ற பெயரில் இலங்கை நாடு மடகஸ்கார் தொட்டு அவுஸ்ரேலியா வரை பரந்து கிடந்ததாகவும், இப்போதைய இலங்கைத்தீவு அதன் ஒரு சிறுபகுதி என்றும் தெரிவிக்கின்றனர். மாலைதீவு மற்றும் இலட்சதீவுத் தொகுதிகளின் விலங்கியல் மற்றும் புவியியல் (THE FAUNA AND GEOGRAPHY OF MALDIVES AND LACCADIVES ARCHIPELAGO) என்ற நூலை எழுதிய ஜே.எஸ்.கார்டினர், “இலங்கை, மடகஸ்கார், மாலைதீவு ஆகியவை முன்னொருகால் இணைந்திருந்தன.” என்கிறார். மடகஸ்கார் தீவு கோமார் (KOMAR) என்ற பெயரால் வழங்கப்படுவதும், அங்குவாழும் மக்கள் கொம்றி (KOMARI) என்று அழைக்கப்படுவதும், அங்குள்ள கடல் கொமோறொஸ் (COMOROS) என்றும், சில தீவுகள் கொமேரோ (COMERO ISLANDS) எனப்படுவதும் குமரிக்கண்டம் முதலாயவற்றை நினைவுபடுத்துகின்றன. கடலில் மூழ்கிய முதுதமிழ் நிலமான குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகள் முழுமை பெறாதிருப்பது கவலைக்குரியது.

ஆழிப்பேரலைகள் பெருமளவு நிலப்பரப்பை விழுங்குகின்றன, புதிய நிலப்பரப்புகளை உருவாக்குகின்றன. கடலடி நிலங்கள் மேலெழுந்து காலப்போக்கில் மனித வாழ்விடங்களாக மாறுகின்றன. மாற்றம் என்பதே மாறாத விதி என்ற நியதிக்கு அமைவாக இது நடைபெறுகின்றது. இலங்கைப் புதைபடிவத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ்.யூ.தெரனியகல (Dr.S.U.DERANI YAGALA, FORMER DIRECTOR GENERAL OF ARCHAEOLOGY) செய்த ஆய்வுகளின்படி கடற்கரையோரத்தில் காணப்படும் சரளைக் கற்கள் (GENERAL) இலங்கைத்தீவின் பல பாகங்களில் கானபடுவதாக அறிகிறோம். இலங்கையின் கீழ்ப்புறத்தே புந்தல (BUNDALA) எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து பதினைந்து மீற்றர் உயரத்தில் இவ்வகைக் கற்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இவை 125,000 வருடங்கள் பழமை வாய்ந்தவை என்று காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பழமைவாய்ந்த கடலோரச் சரளைக் கற்கள் மாங்குளத்தில் காணப்படுவதாகவும், அவை கடல் மட்டத்திலிருந்து 60 தொடக்கம் 80மீற்றர் வரையிலான உயரத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது. தான் இப்படிவத்தை காலக்கணிப்புச் செய்யவில்லை என்று டாக்டர் தெரனியகல தெரிவித்துள்ளார்.

ஆதி மனிதர்கள் பயன்படுத்திய புராதனக் கருவிகள் மாங்குளம் உள்ளிட்ட மேற்கூறிய கடலிலிருந்து எழும்பிய பகுதிகளில் கிடைப்பதாகவும் தெரனியகல தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். புவித் தகடுகளின் மோதல் காரணமாக இப்பகுதிகள் மேலெழும்பியுள்ளன. அது ஒரு மில்லியன் வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நடந்திருக்கலாம் என்பது ஆய்வாளர் முடிவு. இதில் கூறப்பட்ட ஆய்வுத்தரவுகள் அமெரிக்க பல்கலைக்கழகங்களான கோர்னெல் (CORNELL) மற்றும் ஹவட் (HARVARD) ஆகியவற்றில் வைப்பிலிடப்பட்டுள்ளன. தகடுகளின் உராய்வுப் பகுதிக்கு அப்பால் மிகவும் பாதுகாப்பான பகுதியில் இன்றைய இலங்கை இருக்கிறது என்று சொல்வது தவறு. இலங்கையின் கரையோரம் வேகமாக மாறிவருகிறது. அதன் உருவமைப்பும் வரைபட விம்பமும் மாற்றம் அடைகின்றன. கரையோரத்தில் குடியிருப்புக்களை அமைப்பது மிகவும் ஆபத்தானது. யால சரணாலயத்திலும் கடல் மட்டத்திலிருந்து 40மீற்றர் உயரத்தில் கடலோரச் சரளைக் கற்கள் காணப்பட்டுள்ளன. பூமிப்பந்தில் 71வீதமானது நீராகவும் 29வீதம் நிலமாகவும் காணப்படுவதால் நிலப்பரப்பு மூழ்குவதற்கு கூடுதல் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் புதிய நிலம் தோன்றுவதற்கும், ஏற்கனவே உள்ள நிலம் உருவமைப்பு மாற்றம் அடைவதற்கம் சம அளவு வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பூமிப்பந்தின் உட்புறத்தே அதன் நடுப்பகுதியில் பூமியை ஒத்த வட்ட வடிவில் ஒரு இரும்பு மற்றும் நிக்கல் உலோக உருண்டை இருக்கிறது. இதுபற்றி ஆய்வுசெய்த அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லமொன்ற் – டொகேர்றி புவி ஆய்வு நிலையம் (LAMONT DOHERTY EARTH OBSERVATORY) ஜுலை 1996இல் பல வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சந்திரனின் பருமனுடைய இந்த உருண்டை பூமியைப் போல் தன்னைத் தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமி தன்னைத் தான் ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணிநேரம் எடுக்கிறது. ஆனால் இந்த உட்பகுதி உருண்டை சற்றுக் கூடுதலான வேகத்தில் தன்னைத் தான் சுற்றுகிறது. அதனுடைய சுற்றுவேகம் எப்போதும் ஒரே வேகத்தில் இருப்பின் 400 வருடங்களில் பூமியிலும் பார்க்க ஒருசுற்றுக் கூடுதலாகச் சுற்றிவிடும் என்று இந்த ஆய்வு நிலையம் கூறுகின்றது. இப் பரபரப்பான ஆய்வுச் செய்தி ஜுலை 29, 1996 ரைம் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. பூமியின் நடுவே திடமான உருண்டை இருப்பது விஞ்ஞானிகளுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை, அது சுற்றிக்கொண்டிருக்கிற செய்தி 1996இல் தான் தெரிந்தது.

பூமிப்பந்து உட்புறத்திலிருந்து வெளிப்பகுதி வரையில் மூன்று முக்கிய படலங்களைக் கொண்டது. மேற்கூறிய திடமான உட்புற உருண்டையை விட இன்னும் இரு பாகங்கள் இருக்கின்றன. உருண்டையைச் சுற்றி திரவநிலைப் பாறைகளும் உலோகங்களும் இருக்கின்றன. திரவப் பகுதிக்குமேல் 1,800மைல் வரையான தடிப்பில் மான்றில் (MANTLE) எனப் பெயரிடபப் டட் பாறைப்படலம் காணப்படுகிறது. மான்றிளுக்கு மேல் ஒப்பீட்டில் தடிப்புக் குறைந்த புவி மேலோடு இடம்பெறுகிறது. புவி மேலோட்டுப் பகுதியை கிறஸ்ற் (CRUST) என்று அழைப்பார்கள். புவி மேலோட்டின் தடிப்பு தரையில் 30 மைலாகவும் ஆழ்கடலடியில் 03 மைலாகவும் இருக்கலாமெனக் கணிப்பிடப்படுகிறது. புவி ஆய்வாளர் நோக்கில் (01) உட்புற உருண்டையும் அதைச் சுற்றியுள்ள திரவப்பகுதியும் ‘கோர்’ (CORE) என்றும் (02) அதற்கு மேலுள்ள பகுதி ‘மான்றில்’ (MANTLE) என்றும் (03) மேற்புற ஓடு ‘கிறஸ்ற்’ (CRUST) என்றும் அடையாளம் காணப்படுகின்றன. பூமியின் மேற்புறம் ‘லிதொஸ்பியா (LITHOSPHERE) என்றும் அழைக்கப்படுவதுண்டு.

புவி மேலோடு 40கி.மீ தொடக்கம் 800கி.மீ வரையிலான தடிப்புள்ள 7 பெரிய மற்றும் 20 சிறிய துண்டுகளாக இடம் பெறுகின்றன. இவை ‘ரெக்ரோனிக் பிளேற்ஸ்’ (TECTONIC PLATES) எனப்படுகின்றன. தமிழில் கண்டத் தகடுகள் எனலாம். கண்டங்களும், கடல்களும் இத்தகடுகளின் மேற்புறத்தில் இருப்பதால், தகடுகள் நகரும்போது அவையும் சேர்ந்து இடம்பெறுகிள்றன. ‘கண்டப் பெயர்ச்சி’ என்ற கோட்பாடு 1910இல் அல்பிறெட் வேக்கினர் (ALFRED WEGENER) என்ற ஜேர்மன் விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படி 200 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரேயொரு கண்டம் மாத்திரம் இருநத் தாகவும் அது பகுதி பகுதியாக காலப்போக்கில் உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடைவுக்கு புவித் தகடுகள் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 1960கள் வரை வேகினரின் கோட்பாடுகள் ஆதரவு பெறவில்லை. தகடுகளின் இருப்பும் செயற்பாடுகளும் இக்காலப்பகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் கண்டப் பெயர்ச்சிக் கோட்பாடு வலுப்பெற்றது.

தகடுகள் அசைவதற்கான காரணம் பூமியின் அசாதாரண உள்வெப்பம் எனப்படுகிறது. பூமியின் உட்புற வெப்பம் 5000பாகை பரனைற் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். ஒரு பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் நீரில் கொதிநீர் மேலும் கீழுமாகச் சுற்றுவதுபோல பூமியின் வெப்ப ஆவியும் சுற்றுகிறது. இது தகடுகளை அசைக்கப் போதுமானதாக இருக்கிறது. எல்லாக் கண்டங்களும் அசைந்தபடியே இருக்கின்றன. இதற்கு தகடுகளின் நகர்வு காரணமாகிறது. இதுதான் கண்டப் பெயர்ச்சியின் விளக்கம். கடந்த 30 வருடங்களாக தகட்டு நகர்வு விளக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது. நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்ஸ்ரன் ஸ்ரோறெற்வெற் (KARSTEN STORET VEDT) வெளியிட்ட கருத்துப்படி பூமி தன்னைத் தான் சுற்றுவதால் ஏற்படும் நீர், நிலக் குலுக்கல் பூமியின் நடுப்பகுதியில் இருக்கும் உலோகம் செலுத்தும் புவியீர்ப்பு என்பனவற்றையும் தகட்டு அசைவின் கூட்டுக் காரணங்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். எது எவ்வாறாக இருப்பினும் தகடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன, புவிமாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன என்பன மறுக்கமுடியாத உண்மைகளாகும்.

பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் புவி நடுக்கங்கள் மேற்கூறிய தகடுகள் உராயும்போது அல்லது பலமாக மோதும்போது ஏற்படுகின்றன. புதிய தகடுகள் உருவாகும்போது, புவிநடுக்கம் அதற்குக் காரணமாக அமைகின்றது. அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சிக் கழகம் (US GEOLOGCAL SURVEY) வெளியிட்ட தரவுகளின்படி வருடமொன்றுக்கு மூன்று மில்லியனுக்கும் கூடுதலான புவிநடுக்கங்கள் நடைபெறுகினற் ன. அதாவது, நாளொன்றுக்கு 8,000 புவிநடுக்கங்கள் என்ற விகிதத்தில். ஆனால் சில வருடங்களுக்கு ஒருமுறை நடப்பவைதான் ஊயிரழிவையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தும் வலுவுள்ளவையாக அமைகின்றன. புவிநடுக்கத்தின் வலு அளவீடு றிச்ரர் ஸ்கேல் (RICHTER SCALE) என்று அழைக்கப்படுகிறது. புவிநடுக்க அளவீடை உருவாக்கியவர் சாள்ஸ் றிச்ரர் என்ற அமெரிக்கப் புவியியல் விஞ்ஞானி. அவர் இவ்வளவீடை 1935இல் உருவாக்கினார். இந்த அளவீடின்படி 1 அல்லது 2 வலுவுள்ள புவிநடுக்கத்தால் யாதொரு ஆபத்தும் இல்லை. அவற்றை உணர்வதும் கடினம். வலுக்கூடியவை 10வரை செல்கின்றன. அவை பேரழிவை ஏற்படுத்துகின்றன.

டிசெம்பர் 26, 2004ஆம் நாள் சுமாத்திரா தீவின் ஆச்சே மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள கடலில் மிகப் பிரமாண்டமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமியின் அச்சை உலுக்கியதோடு பூமியில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தின் றிச்ரர் அளவீடு 9 என்று கணிப்பிடப்பட்டுள்ளது. 1964 மார்ச்சு 27ஆம் நாள் அமெரிக்காவின் 49வது மாநிலமான அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான அன்கறேஜ் (ANCHORAGE) பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு நிகரானதாக சுமாத்திராவின் 9 அளவீடு இடம்பெறுகிறது. 26ஆம் நாளுக்குப்பின் தொடர்ச்சியாகச் சில நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டன. அவற்றின் சராசரி அளவீடு 5. பெரும்பாலான நிலநடுக்கங்களும் எரிமலைகளும் புவித்தகடுகளின் முட்டிமோதலால் ஏற்படுகின்றன என்று முன்பு கூறினோம். அதுதான் இங்கும் நடைபெற்றது. கடலடிப் பூகம்பத்தின் மிக முக்கிய விளைவாக சுனாமி அலைகள் தோன்றுகின்றன. பெரும் பாறைகளும் களிமண் குவியல்களும் கடலின் ஒரு பகுதியிலிருந்து இன்னோர் பகுதியில் விழும்போதும் சுனாமி அலைகள் கிளம்புகின்றன.

சுனாமி என்ற ஜப்பான்மொழிச் சொல் “நாமி” என்றால் அலைகள் “ற்சு|” என்றால் துறைமுகம் அல்லது ஒடுக்கமான நிலப்பகுதி என்ற இரு சொற்களின் கூட்டாகும். சுனாமி என்றால் புயல் என்றும் அர்த்தம் கூறுவோர் உள்ளனர். பலநூறு கிலோமீற்றர் நீளமானதாகவும் பத்து மீற்றருக்கும் கூடிய உயரமுள்ளதாகவும், ஜெற் விமானத்தின் பறப்பு வேகத்திலும் கூடிய வேகமுடையதாகவும் சுனாமி அலைகள் இடம்பெறுகின்றன. டிசெம்பர் 26ஆம் திகதிச் சுனாமி அலை 600கி.மீ தூரத்தை 75 நிமிடங்களில் கடந்தது. இது மணிககு; 480கி.மீ என்று அளவிடப்படுகிறது. கடலின் ஆழமான பகுதிகளில் சுனாமி அலைகளின் உயரம் அசாதாரணமாக இருப்பதில்லை. அப்படியான கடலில் பயணிக்கும் கப்பல்களின் கீழால் சுனாமி அலைகள் செல்வதை கப்பலில்
இருப்போர் அவதானிப்பது கடினம். கரையை நெருங்கும்போது சுனாமி அலைகள் உயரக் கிளம்புகின்றன. 1960இல் தென் அமெரிக்காவின் சிலிநாட்டு கரையோரத்தில் 8.5 றிச்ரர் வலுவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து கிளம்பிய சுனாமி அலைகள் பசுபிக் மாகடலை குறுக்கறுத்துப் பாய்ந்து ஜப்பான் கரையோரம்வரை சென்றன. இதனால் ஜப்பான் பேரழிவைச் சந்தித்தது. பசுபிக் மாகடலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு 24 மணிநேரத்தில் சுனாமி அலைகள் முன்னோக்கிச் செல்லமுடியும். இலங்கையின் கிழக்கு, தெற்குப் பகுதிகளைத் தாக்கிய அலைகள் 1400கி.மீ தூரத்தைக் கடந்து வந்துள்ளன. இத்தூரத்தைக் கடப்பதற்கு அவை ஒன்றரை மணிநேரம் எடுத்தன. அலை வருவதுபற்றி முன்னறிவித்தல் கிடைத்திருந்தால் பல மனித உயிர்களையும் பெறுமதிமிக்க சொத்துக்களையும் நிச்சயமாக காப்பாற்றியிருக்க முடியும். தவறுகளைச் சாதகமாக்கியபடி நாம் எதிர்வரும் காலத்தில் உயிர்காக்கும் திட்டங்களை வகுத்தல்
வேண்டும்.

எங்கும் நடக்கலாம், எப்போதும் நடக்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருப்பினும் உலகின் மிகக் கூடுதலான சுனாமி அலைகள் பசுபிக் மாகடலில்தான் தோன்றுகின்றன. இதற்கு ஆயிரத்திற்க்கும் கூடுதலான எரிமலைகள் பசுபிக் கடலடியில் இருப்பது காரணமாக இருக்கிறது. மிகக் கூடுதலாக சுனாமியால் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பான் முதலிடமும், அமெரிக்காவின் மேற்குக்கரைப் பகுதியும், ஹவாய்த் தீவுகளும் அடுத்த இடம் வகிக்கின்றன. இந்த நாடுகள் சுய பாதுகாப்புக் கருதி மிகவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. கருத்தூட்டல் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானியப் பல்கலைக்கழகங்களில் இதுபற்றிய ஆய்வுகளுக்கு ஒரு கல்விப்பீடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பசுபிக் கடலடியில் நிறுவப்பட்ட முன்னறிவித்தல் சாதனங்கள்மூலம் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களுக்கு தகவல் வழங்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்து மாகடலிலும் இப்படியான ஒழுங்குகள் செய்வது பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன. டிசெம்பர் 26 அனர்த்தங்களை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தொழில் வசதிக்குத் தன்னும் கடலோரத்தில் வாழ்வதைத் தவிர்க்கவேண்டும். கள்ளப்பாடு போன்ற தாழ்வு நிலங்களில் குடியிருப்புக்களை அமைக்கக்கூடாது. அதேபோல், முல்லைத்தீவு போன்ற கடலுக்குள் நீண்டிருக்கும் தரைப்பரப்பின் ஓரத்தில் வாழாது உயரமான பின்பகுதிகளில் குடிபுகவேண்டும். தடுப்புச் சுவர்களை எழுப்புவது மூலம் ஆழிப்பேரலையின் மூச்சைத் தணிகக் முடியும். வருமுன் தடுப்பது எமது வருங்காலத் திட்டங்களின் அடிப்படை நோக்காக இருத்தல்வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதநேயத் தலையீடு என்ற புதிய சர்வதேச அரசியல் கோட்பாடு தோற்றம் பெற்றுள்ளது. இதன் சாராம்சம் பின்வருமாறு: எந்தவொரு நாட்டில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடக்கின்றனவோ, அல்லது எந்தவொரு நாட்டில் அரச நிர்வாகம் முற்றாகச் சீர்குலைந்து பாரிய குழப்பமும் மனித அவலமும் நிகழ்கின்றதோ அலல்து இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழப்பும் பாரிய அழிவுகளும் நடைபெறுகின்றனவோ அவை தனியொரு நாட்டின் விவகாரம் அல்ல. மூன்றில் எதுவானாலும் அது உலகநாடுகள் யாவற்றின் பொது விவகாரம் என்பதால் பாதிக்கப்பட்ட நாட்டிற்குள் மனிதநேயப் பணியாற்றும் நோக்கில் உட்பிரவேசிக்கும் உரிமை உலகநாடுகளுக்கு உண்டு. இந்த அடிப்படையில் நாடுகளும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்களும் டிசெம்பர் 26 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் படையெடுத்துள்ளன. மனிதநேயப் பணிகளுக்கென வந்துள்ள பிறநாட்டு ஆயுதப்படைகளும் மருத்துவக் குழுக்களும் இக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே வந்துள்ளன. உலகநாடுகளும் பிற ஸ்தாபனங்களும் நிவாரணப் பணிகளுக்காக பெருமளவு நிதியைத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளன. 1998ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் “மிற்ச்” (MITCH) எனப் பெயரிடப்பட்ட பெரும் புயலால் பாதிக்கப்பட்டது. உலகநாடுகள் பெருமளவு நிதியைத் தருவதாக வாக்குறுதி அளித்தன. பல வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. வாக்குறுதிகளை மாத்திரம் நம்பியிராது எமது நாட்டை நாமே கட்டியெழுப்ப எமது மக்களுக்கு எது தேவையோ அதை இனங்கண்டு நாமே அவற்றை நிறுவ வேண்டும். இரு தசாப்தம் நீடித்த சுனாமியிலும் கொடிய போர் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த நாம் மிக அண்மையில் எம்மைத் தாக்கிய சுனாமியில் இருந்து மீள நிச்சயம் முடியும்.

எழுத்துருவாக்கம்: கலாநிதி க.சோமாஸ்கந்தன்
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 2005).

 

https://thesakkatru.com/sunamiyum-namum/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டவர்கள் சொல்கின்ற ‘கடலாடு காதை’கள்

Kadalodu-Kathaikal.jpg

யாரும் நம்பமுடியாத காலமொன்று வந்திருக்கிறது. அது உலகையே உலுக்கியுமிருக்கிறது. கொடுஞ்சுழி திரண்டுவந்து ஆசியாவின் கரைகளில் கூத்தாடியுள்ளது. நம்பிய கடல் நாசமாய் வந்து எல்லாவற்றையும் தின்றிருக்கிறது.

ஊருக்குள் கடல் வருமா? வீடுகளுக்குள் அது நுழையுமா? என்றெல்லாம் யாரும் ஒருபோதும் கடலைச் சந்தேகித்ததில்லை. எல்லோரும் கடலை நம்பியிருந்தோம். அதன் கரைநீளம் வேர்பாய்ச்சி வாழ்ந்திருந்தோம்.

ஒரு காலையில், ஒரு ஞாயிற்றில் வஞ்சம் கொண்டதுவாய், கோபமுற்றதுவாய் சீற்றத்தோடெழுந்த கொடுஞ்சுழி பெருந்துயரை எங்கும் விரித்தது.

சாவும் அழிவும் கரைநீளம் படலமாயிற்று.

கடல் எழுந்துவரக் கண்டவர்கள் ஓடினார்கள். ஓடியவர்களைக் கடல் துரத்தியது. வெறிகொண்டு கலைத்தது. உயிரோடு கொடுஞ்சுழி அடித்துச் சென்றது. சிலர் திகைத்து நின்றார்கள். நின்றவர்களைப் பேரலைகள் தூக்கி எறிந்தன.

வீடுகள் தரைமட்டமாகின. மரங்கள் சரிந்தன. படகுகள் கரையேறி, வானுயர்ந்து அங்குமிங்கும் மோதிச் சிதைந்தன. பள்ளிகள் இடிந்து வீழ்ந்தன. கோவில்கள் நொருங்கின. தேவாலயங்கள் பலிபீடத்தோடு பாறி வீழ்ந்தன.

கடல் ஊழிக்கூத்தாடியது. வாழ்வைத் தந்த கடல் வடுவள்ளி வீசியது. நெய்தல் நில மக்கள் நெஞ்சடைத்துப் போனார்கள்.

அலைதிரண்டு படையெனப் பாய்ந்து வருகையில் இந்த அப்பாவிகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர்கள் அறிந்த கடல் தாயாக இருந்தது. கரைநீளம் அலைக்கரங்களால் கால் தடவியது. மடிநிறைய அள்ளித் தந்தது அது. அவர்களருகில் அழகாயிருந்தது கடல். யாரும் அதைக்கண்டு அஞ்சவில்லை. அலையெறிந்து அலையெறிந்து அழகாகவேயிருந்தது அது. அதனால் அதனோடு அவர்கள் அருகாயிருந்தார்கள்.

தாயின் மீது எவருக்குச் சந்தேகம் வரும்? தாய்க்குப் பசியெடுத்ததா? வெறிபிடித்ததா? ஏனிந்தக் கோபம் வந்தது? அவர்களுக்குப் புரியவில்லை புரியவேயில்லை.

கொடுஞ்சுழி எல்லாவற்றையும் வெறியோடு புரட்டியெறிந்தது.

பிள்ளைகளை இழந்தனர் தாய்மார். மனைவியை இழந்தனர் கணவன்மார். எல்லோரையும் இழந்து தவித்தன பிள்ளைகள். சொந்தங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு மரமொன்றைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள் முல்லைத்தீவில் ஒரு குடும்பப்பெண். பயணத்துக்காக ஏறியிருந்த பஸ்ஸிலிருந்து கடல் வருகுதென்று பயத்தால் குதித்தோடிய குடும்பமொன்று அப்படியே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஒரேயொருவர் மட்டும் தப்பியுள்ளார். அவர் பஸ்ஸிலிருந்து ஏனோ இறங்காமல் இருந்தபடியால் தப்பியதாக நினைவெடுத்துச் சொல்கிறார்.

அலைகள் திரண்டுவந்து அடித்த அடியில், அவற்றின் வேகத்தில் எல்லாமே தூக்கியெறியப்பட்டன. எதிர்பாராத நிகழ்ச்சி அது. கற்பனையே செய்திராத அலைக்கூத்து. யாரையும் யாரும் காப்பாற்ற முடியாதென்ற நிலையின் அந்தரிப்பு.

கடற்கரையோரத்தில் கூடியிருந்த வீடுகளுள்ள இடங்கள் முற்றாக அழிந்துவிட்டன.

அம்பாறையில், கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, மருதமுனை, மட்டக்களப்பில் நாவலடி, கல்லாறு, காத்தான்குடி, வாகரை என்று ஏராளம் கிராமங்கள் இருந்தும் இல்லாமற் போயுள்ளன. முல்லைத்தீவில், வடமராட்சி கிழக்கில், வடமராட்சியில் என்று கடலோரமெங்கும் ஒரே சிதைவுகளும் அழிவுகளும் சாவுகளும்தான். எங்கும் கடலின் சீற்றம். கொடுத்த வாழ்வைக் கெடுத்த மாதிரி வாழ்வள்ளியெறிந்த கொடுமை.

மின்னல் தாக்கியதுபோல, கணநேர வேகத்தில், சுதாகரித்துக் கொள்ளமுன் அலைகள் அடாத்தாடின.

பிள்ளைகள் தண்ணீரால் அறுத்துச் செல்லப்பட்டு முக்குளிக்கும்போது பெற்றதாய் கண்ணால் பார்த்திருக்கிறாள். ஆனால் காப்பாற்றமுடியாத நிலை. அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவளும் உயிருக்காகப் போராடி ஏதோ ஒரு மரக்கொப்பில் பிடிப்பதைத்தவிர பிள்ளையைத் தூக்க முடியவில்லை. கடல் ஒரு கொடும் விதியாக அவள் முன் நின்றாடியது. எதுவுமே செய்யமுடியாத சிறு தூசாகினாள் அவள்.

‘தண்ணீருக்குள் மூழ்கியவாறு ஏறக்குறைய மயங்கும் நிலையில் ஒரு பெண் தத்தளிக்கிறாள். அவளுடைய கண்கள் ‘தன்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சுகின்றன. ஆனால், என்னால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது’ என்கிறார் அலைகளால் அடித்தெறியப்பட்டு காயங்களோடு உயிர்தப்பிய ஒருவர்.

‘இன்றும் கெஞ்சிக்கொண்டிருந்த அந்தக் கண்கள் என் நினைவில் தெரிந்துகொண்டேயிருக்கின்றன. அதை மறக்கமுடியவில்லை’ என்கிறார் அவர்.

வழிபாட்டுக்காக கூடியிருந்தவர்களை அப்படியே அலைகள் வந்து அமத்திவிட்டன. ஒருவர்கூட மிஞ்ச முடியாத அளவுக்கு கட்டடமே இடிந்துவிட்டது ஓரிடத்தில்.

இன்னோரிடத்தில் தளிர்களாகக் கூடியிருந்த சிறுவர்கள் அனைவரையும் அலைகள் பசியாறின. அத்தனை மழலைகளின் குரல்களையும் காற்றிலிருந்தே பறித்தன அலைகள். பறித்து விழுங்கின அவை.

தன்னுடைய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என நாற்பத்தியாறு பேரை பலிகொடுத்துவிட்டு தனிமரமாக நிற்கிறார் வடமராட்சி கிழக்கில் ஒரு முதிய பெண். அழுவதைத் தவிர வேறுவழியில்லை என்றமாதிரி ஒரு வாழ்க்கையை அந்தக் கணங்கள் உருவாக்கிவிட்டன. ஆனால், அழுதுகொண்டேயிருக்க முடியாது என்பது வேறு.

எங்கும் சாவோலங்கள். பிள்ளைகள், குழந்தைகள்தான் அதிகமாக இறந்தவர்கள். கொடுஞ்சுழிக்குத் தாக்குப்பிடிக்க முடியாது உடனே இறந்தவர்கள் அதிகம் அவர்கள்தான்.

ஆழக்கடலோடிய அனுபவமுடையவர்களால்கூட பெருகிவந்த பேரலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமற் போய்விட்டது.

கடலம்மா, ஏனெங்களை இப்படிவந்து அள்ளுகிறாய் என்று கேட்கவே முடியாத கணத்தில், நினைவேயெழ முடியாத விதமாய் கடல் கொண்டது கரைகளை; கரையின் உயிர்களை; நெய்தலின் ஆன்மாவை.

வாழ்வில் இப்படியும் ஒரு நிலையோ என்றுகூட அப்போது யோசிக்கமுடியவில்லை என்றார் அலைகள் அடித்துக் காயப்படுத்தி, உயிருக்குப் போராடி மீண்ட ஒருவர்.

கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கடல் கொண்டுபோன உயிர்கள் கொஞ்சமல்ல. கரையேறிவந்து எல்லாரின் சுவடுகளையும் அழித்துவிட்டு மீண்ட கடல், தான் வந்துபோன அடையாளமாய் விட்ட சுவடுகள் கற்குவியல்கள், இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான சடலங்கள், கண்ணீரோடும் கதறலோடும் விம்முகின்ற உறவுகள், ஆதரவற்ற குழந்தைகளைத்தான்.

தன் மடியிற் பிறந்தவர்களைத் தானே எடுத்துக்கொள்ளுகிறேன் என்ற உரிமையில்தான் கடல் அப்படிச் செய்ததா?

புயலை தன்மடியிற் சுமந்தவள் கடலன்னை. பெரு மழையையும் வெள்ளத்தையும் தன் வயிற்றில் ஏந்தியவள் அவள். கோடையிலும் வாடையிலும் தன் பிள்ளைகளை வாழவைத்தவள் அவள்.

கடலோடக் கடலோட தன்னை விரித்து தன்னை விரித்துத் தந்தவள் அவள். பாதையாக நின்றவள். வாழ்வாக மலர்ந்தவள். பயணத்தில் தோழியாக நின்றவள். அவள் அழகி. கரைநீளம் அலைமுகம்கொண்டு சிரித்தவள். நீலப்பெண். பேரியற்கையாய் பரந்தவள். மூத்தவள். ஆதியானவள்.

தன்னைப்பற்றி மனதில் எழுதப்பட்டிருந்த அத்தனை படிமங்களையும் அவளுடைய கொடுஞ்சுழிகள் அடித்து நொருக்கிவிட்டனவா?

இனிக் கடலுக்கு அஞ்சும் காலம்தான் என்றவள் உணர்த்தினாளா?

அப்படியல்ல. அப்படியே அல்ல. அவள் என்ன செய்வாள்? அவள் நல்லவள்.

நிலம் பிளந்து அவள் நிம்மதியைக் குலைத்தது. நிம்மதி கெட்டவள், அமைதி குலைந்தவளின் சீற்றம் எங்கள் வாழ்வின் வயிற்றைக் கலக்கியது. அவளுடைய குமுறல்கள் எங்களில் மோதியிருக்கின்றன. அவை எங்களை வீழ்த்தியிருக்கின்றன.

கடலம்மா! நீ கேள்.

கல்முனையில் நீ விளையாடிய வினையில் வேலியினுள் சிக்கி நாலுபிள்ளைகள் விழி பிதுங்கிக் கிடந்தார்கள். அந்தச்சாவின் அவலம் கண்டு கதறுகிறார்கள் இரண்டு தாய்மார். பிள்ளைகள் எல்லோரையும் பறிகொடுத்து விட்டு மணலில் கைபரப்பி அடித்துக் கதறுகிறார்கள் நிந்தவூரில் இரண்டு பெற்றோர்கள். பிள்ளைகளையும் தன் துணையையும் தொலைய விட்டு தனித்த பறவையாக விம்முகிறார்

நாவலடியில் ஒருவர். நாவலடி என்ற ஓரிடமே இல்லை என்ற மாதிரி, கடலழித்து நிற்கிறது அங்கே. அங்கிருந்த ஒருவட்ட உறவுகள் அத்தனையையும் கடல் தின்றுவிட்டது.

மிஞ்சியவர்கள் சொல்லுகின்ற கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ‘கடலாடு காதை’கள்.

முதல்நாள் நத்தார்க் கொண்டாட்டங்கள் இரவிரவாக நடந்தது. இரவு பாலன் பிறந்தார். அலைகள் அதைப்பாடின. எல்லோரும் விழித்திருந்தார்கள். அலைகளுக்கு அந்தத் தோத்திரங்கள் கேட்டிருக்கும்.

விடியவும், பாலனையும் அடித்துச்சென்றது கொடுஞ்சுழி. யாராலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை வெள்ளமாய் பெருகிநின்றது துயரம். சாவுகள் எண்ணப்பட்டுக் கொண்டேயிருந்தன.

தலைமுறைகள் அறியாத கொடுமையான அனுபவத்தை நாங்கள் அறியும்படியானோம். பேரழிவுகளைத் தெரிந்தவர் நாம். அகதி வாழ்க்கை நமக்குப் புதிதல்லத்தான்.

ஆனால், அலை கொண்டுவந்த பேரழிவு மிகப்பெரிது. அது கொடுமையிலும் கொடுமை.

அலைகளால் வெற்றிபெற்றவர் நாங்கள். ஓயாத அலைகளால் வாழ்வைக் கண்டெடுத்தவர் நாங்கள். அலை முதுகேறிப் படகோடிப் பயணம்போய் திரவியம் தேடி வந்தவரால் வென்றவர் நாம். அலையாடும் கடலோடிப் பகை மோதி வெடித்து வெற்றிபெற்றவர் நாம். கொடுஞ்சுழியாய் வந்த அலைகடலில் என்றால் வென்றிருப்போம் என்கிறான் ஒரு வீரன்.

கடல் கரையேறி வந்தது அபத்தம். அது கட்டுக்கடங்காத திமிர். அதன் திமிரை தென்தமிழீழத்தில் பார்ப்பதே ஆகக் கொடுமையாகவுள்ளது.

சில கிராமங்கள் முற்றாக இல்லை. கடலை அறிந்தவர்களில் பாதிக்கு மேலானவர்களைக் கடல் அள்ளியே விட்டது. இனி கடலை அறியவேண்டும். புதிதாய் வாழக் கடலை நெருங்கவேண்டும்.

வழியற்ற விதியா விதியற்ற வழியா இனியென்று கொடுஞ்சுழி தந்தது என்று எங்கும் மிஞ்சிய உறவுகள் சொல்லிமுடியாத வேதனைக் கதைகளோடு அகதிமுகாம்களில் இருக்கிறார்கள்.

வாழ்வை அள்ளிக் குடித்துவிட்டு நெய்தலின் மனிதர்களை அகதி முகாம்களில் தள்ளிவிட்டது கொடுஞ்சுழி.

அகதி முகாம்களில் துயரோடும் வேதனையோடும் கூடியிருக்கிற சனங்களை முட்களின்மேல் படுங்கள் என்ற மாதிரிச் சூழ்ந்திருக்கின்றன அதிரடிப்படைகள்.

பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதைபோல அலையால் அடித்து அகதியாக்கப்பட்டவர்களை அதிரடிப் படை வளைத்து நிற்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் மனதை ஆற்றுப்படுத்த வேண்டியதற்குப் பதிலாக ஆறாத காயத்தின்மேல் புதுக்காயம் என்பதாக படையினரின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

கண்ணீரும் கவலையுமாக இருக்கின்ற மக்களின் கவலைகளைத் துடைத்து அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய காரியங்கள் ஆயிரம் உண்டு. அதற்கு அரவணைக்கக் காத்திருக்கும் கைகளை நீளவிடாமல் தடுக்கப் பார்க்கிறது படை.

உலகம் எல்லாம் இருந்து உதவிகள் வந்து குவிகின்றது. ஏன்? துயரத்தைப்பகிரும் பெரார்வத்தொடும் அவலத்தைத் தீர்க்கின்ற பெரும் கரிசனையோடுமல்லவா. இழப்புகளைச் சுமந்த மக்கள் பேசட்டும், அவர்களின் சொந்தக் கதைகளை. அது அவர்களுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருக்கும் மனச்சுமை குறைவதற்கு ஏதுவாகும். அவர்கள் தங்களின் உணர்வுகளைச் சொல்வதற்கும் விருப்பங்களை வெளிப்படுத்து வதற்கும் அதைவிட வேறு வழியென்ன. தங்களுக்குத் தேவை யானவற்றை கேட்பதற்கு அவர்களுக்கு உதவும் உறவுகளோடு இணைவதற்கு, கூடி ஆறுதல் பெறுவதற்கு ஏன் இடையில் தடைகள் வேண்டிக்கிடக்கிறது. கொடுஞ்சுழியின் அழிவுத்துயரங்கள் வரலாற்றின் வழி நெடுகவும் பெருகிக் கிடக்கத்தான் வேண்டுமா?

அலையெறிந்த மனிதர்களை அரவணைத்து அவர்கள் சொல்லத்துடிக்கின்ற வார்த்தைகளைச் செவிமடுக்க வழிவேணும்.

கொடுஞ்சுழி வந்தடித்தது. ஒரு நிகழ்வுதான் ஆனால் அது ஆயிரமாயிரம் கதைகளை, பேசித்தீராத ஆச்சரியங்களை உருவாக்கிவிட்டுப் போய்விட்டது.

ஆழிக்கதைகள் சொல்லிக்கொண்டேயிருப்பர் எங்கள் மனிதர். மனதில் படிந்துவிட்ட நினைவுகளில் இருந்து அந்தக் கதையூற்று பெருகியபடியே இருக்கும்.

கடல் அமைதியாக இருக்கிறது இப்போது. அது இப்படி எத்தனை நிகழ்ச்சிகளைத் தன் வாழ்வில் பார்த்திருக்கிறது. அதற்கு எல்லாம் ஒன்றுதான்.

அது பேரியற்கை. நாளை நாங்கள் படகேறும்போது மீண்டும் அலைபாடி வரவேற்கும் மடிநிரைக்கும். வாழ்வள்ளித்தரும்.

கரைநீளம் குடி வந்தால் மீண்டும் அலை முகங்காட்டி வரவேற்கும். காற்றாக வருவோர்க்கு கையசைத்து மகிழும்.

அவள் தாய். ஆதி. எல்லாவற்றிற்கும் அப்பாலானவள்.

எழுத்துருவாக்கம்: கருணாகரன்.
நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 2005).

 

https://thesakkatru.com/kadalodu-kathaikal/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி பேரழிவுகளின் நினைவுகளுடன் மீள்வாழ்வுக்காக எழுவோம்

Aazhiperala-Tsunami-Memorial-Eelam.jpg

26.12.2004 அன்று இந்தோனேசியா, சுமத்திரா தீவில் மையம் கொண்டு ஒரு சில மணித்தியாலங்களில் தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கிய சுனாமி கடல்கோள் அனர்த்தத்தினால் சாவடைந்தோர்களின் 16ம் ஆண்டு நினைவலைகள்.

“இந்த இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து, ஆற்றற்றமுடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எனது அன்பையும், ஆறுதலையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

Tsunami-Eelam-2004.jpg

ஊருக்குள் கடல்புகும்… அதுவும் ஆழிப் பேரலையாக நூழைந்து உயிர்க்கொலைகள் புரியும் என்று எவரும் கற்பனை செய்திருக்கவில்லை. ஐம்பெரும் பூதங்களென நிலத்தை – நீரை – நெருப்பை – காற்றை – ஆகாயத்தை எம் முன்னோர்கள் உருவகப்படுத்தியதை நேற்றுவரை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.பூதம் என்று நாம் இதுவரை கருதியது இனவாதப் பேயையும் அதன் ஏக புதல்வனாகிய இராணுவ பூதத்தையும்தான்.

ஆனால் தனது அழிவுச்சக்தியை இயற்கை எம்மீது காட்டிவிட்டதே! 1500 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் நிலம் என்ற பூதம் நடுங்க – அங்கிருந்து நீர் என்ற பூதம் நெளிந்து – அசைந்து கரையில் சிறகுமுளைத்து வாய் பிளந்து – எம்மக்களை விழுங்கிவிட்டதே.

சிலநிமிட கடல் சீற்றம் தமிழீழத்தின் இருபதினாயிரம் வரையான மக்களை அழித்து விட்டது. எத்தனையோ குடும்பங்கள் முற்றாக அழிந்துவிட்டன. தாய் – தந்தையை இழந்த பிஞ்சுகள் ஏராளம். இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நீடிக்கப்போகும் அந்தச் சோக நினைவுகளை சுமந்துநிற்கும் சில விபரங்களை இங்கே காணலாம்.

யாழ். மாவட்டம்: பருத்தித்துறை, மணற்காடு, நாகர்கோவில், தாளையடி, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு.

இறப்புக்கள் – 1256
காயங்கள் – 1647
இடம்பெயர்ந்தவர்கள் – 41013
சேதமான பாடசாலைகள் – 11
சேதமான வீடுகள் – 7198
சேதமான வைத்தியசாலைகள் – 03

முல்லைத்தீவு மாவட்டம்: மாவட்டத்தின் கூடுதலான பகுதி சுனாமியால் தாக்கப்பட்டது

இறப்புக்கள் – 2771
காயங்கள் – 2590
இடம்பெயர்ந்தவர்கள் – 21178
சேதமான பாடசாலைகள் – 12
சேதமான வீடுகள் – 4000
சேதமான வைத்தியசாலைகள் – 02

கிளிநொச்சி மாவட்டம்:

இறப்புக்கள் – 30
காயங்கள் – 670
இடம்பெயர்ந்தவர்கள் – 1603
சேதமான பாடசாலைகள் – விபரம் இல்லை
சேதமான வீடுகள் – 7500
சேதமான வைத்தியசாலைகள் – 01

திருகோணமலை மாவட்டம்: குச்சவெளி, நிலாவெளி, திருகோணமலை, கிண்ணியா.

இறப்புக்கள் – 1076
காயங்கள் – விபரம் இல்லை
இடம்பெயர்ந்தவர்கள் – 69212
சேதமான பாடசாலைகள் – 23
சேதமான வீடுகள் – 16378
சேதமான வைத்தியசாலைகள் – 09

மட்டக்களப்பு மாவட்டம்: வாகரை, நாவலடி, காத்தான்குடி, பெரிய கல்லாறு

இறப்புக்கள் – 2840
காயங்கள் – 1575
இடம்பெயர்ந்தவர்கள் – 61912
சேதமான பாடசாலைகள் – 39
சேதமான வீடுகள் – 21126
சேதமான வைத்தியசாலைகள் – 08

அம்பாறை மாவட்டம்: பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, கோமாரி, பொத்துவில்.

இறப்புக்கள் – 9051
காயங்கள் – 6771
இடம்பெயர்ந்தவர்கள் – 137960
சேதமான பாடசாலைகள் – 40
சேதமான வீடுகள் – 19077
சேதமான வைத்தியசாலைகள் 29

Kadarkol.jpg

ரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.

தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.

இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.

தமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.

பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.

26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.

கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.

அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.

தலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.

ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.

இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.

கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன.

வரலாற்றில் நாம் சந்தித்திராத ஒரு பேரழிவை கடல் தந்திருந்தாலும் அது எங்களது எதிரியல்ல. மாறாக, அது எங்களது தேசியச் சொத்து. இயற்கையை அனுசரித்து அதை வசப்படுத்துவதில்தான் மனிதரின் வெற்றி தங்கியுள்ளது. அறிவியலின் வழிகாட்டலுடன் பெற்ற அனுபவங்களையும் துணையாகக்கொண்டு, எதிர்காலத்தில், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வோம்.

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை 2005)

Tsunami-2004.jpg

நீளும் நினைவுகளாகி…

Kadalaadu-Kaathaikali-Thesakkaatru.jpg

 

 

 

 

 

கடற்கரும்புலிகடலுடன் சங்கமமானவர்களை இந்நாளில் எம்மனங்களில் நிறுத்தி நினைவில் கொள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://thesakkatru.com/tsunami-memorial-eelam/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.