Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருஸ்ணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருஸ்ணா

51TM-zoLpUL._SY445_QL70_ML2_.jpg


நூல் வாங்க: kindle


திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன். 

ஒரு நுாலைப் படிக்கும் போதும் அதன் பக்கங்களைப் புரட்டும் போதும் முன் பின்னாகத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த நுாலைக் கின்டிலில்  (kindle) படிப்பதால் பக்கங்களைப் புரட்டினாலும் குழம்பி விடுமோ என்ற பயமும் இடையிடையே தோன்றவே செய்தது. ஆனாலும் ஒருவாறு முழுமையாகப் படித்து முடித்த பின்பே இக்கட்டுரையை எழுதுகின்றேன். 

திரு குகநாதன் அவர்கள் இந்நுாலை எழுதுவதற்கு முன்னர் பெருந் தொகையான நுால்களைப் படித்த பின்பே எழுதியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஆய்வு செய்ய முனைந்த விடயங்களை  வெறுமனே செய்திகளாகச் சொல்லாமல் அதற்கான ஆதாரங்களையும் குறித்த இடங்களில் கொடுத்துக் கொண்டே போகிறார். அது அவர் சொல்ல வந்த விடயத்திற்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது. திரு.குகநாதன் இந்நுாலில் ஐந்து தலைப்புகளில் கட்டுரைகளைப் படலங்களாக வரைந்துள்ளார். இதுவும் பழைமையைத் தொட்ட ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன். 

1. முதலாம் படலம் - மொழியின் தோற்றம் - பெயரிற்கான காரணம்

2. இரண்டாம் படலம் - தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள்

3. மூன்றாம் படலம் - தமிழ் மறைப்பும் தமிழ் சிதைப்பும்

4. நான்காம் படலம் - மதம் கொ(ண்ட)ன்ற தமிழ்

5. ஐந்தாம் படலம் - தமிழும் சாதியும் 

இனி இவர் ஒவ்வொரு தலைப்பிலும் என்ன கூறுகிறார் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். 

முதலாவது படலத்தில் தமிழ் மொழியின் தோற்றம், தமிழ் என்ற பெயரிற்கான காரணம் என்பவற்றை நன்கு அலசி ஆராய்ந்துள்ளார். பழங்காலத்தில் தமிழ் என்ற சொல் எங்கெங்கே வந்துள்ளது. தமிழின் தொன்மை என்பவற்றை தொல்காப்பியத்தில் தமிழ், சங்க இலக்கியத்தில் தமிழ், கல்வெட்டுகளில் தமிழ் என்ற தலைப்புகளில் ஆராய்கின்றார். 

தமிழர் பொதுவாகத் தமிழின் தொன்மை, அதன் சிறப்பு என்பவை பற்றிக் கூறும் போது சற்று மிகைப்படுத்தல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வந்துள்ளது. கல்தோன்றி மண் தொன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய குடி நம் தமிழ்க் குடி என்றும் தமிழ் 5000 ஆண்டுப் பழைமையானது என்றும் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள் எழுதிக் கொண்டே வந்துள்ளனர். இவை எல்லாம் இக் கட்டுரையில் வினாக்களாகவும் அதற்கான விளக்கங்களாகவம் அமைகின்றன. 

தமிழ்மொழி தொன்மையான மொழி என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்று கூறுவது உயர்வு நவிற்சி என ஒதுக்கித் தள்ளுவதோடு புறப்பொருள் வெண்பாமாலையில் ஐயனாரிதனார் தமிழின் தொன்மையினைக் கூறுவதை அவர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். 

“பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?

வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன் தோன்றி மூத்த குடி” (புறப்பொருள் வெண்பாமாலை)

என்பதிலிருந்து உலகின் தொடக்க காலத்தில் நீர் சூழ்ந்திருந்த உலகில் நீர் விலக மக்களின் வாழ்வு தொடங்கியது. குறிஞ்சி வாழ்வு தோன்றி மருத வாழ்வு தோன்றாக் காலத்தில் கையில் வாளோடு தோன்றி இப்படி வீரமாகப் போர் செய்து ஆநிரைகளைக் காக்கின்ற தொன்மையான குடி தமிழ்க்குடி என்று அந்தப்பாடல் கூறுகின்றது. இதை ஆதாரம் காட்டி அன்றைய தமிழன் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி என்று சொல்வதற்கு இதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற தனது ஏற்றுக் கொள்ளலை வெளிப்படுத்துகிறார் திரு குகநாதன் 

மனிதன் தோன்றுவதற்கு முன்னர் தமிழ் தோன்றியது என்பதுவும் உயர்வுச் சிறப்புத் தான். இதைத் தவறு மட்டுமல்ல அறிவுக்குப் புறம்பானதும் என்கிறார் ஆசிரியர். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோர் வாயிலும் வந்து போகும் ஒரு தொடர். அதில் ஒருவராக கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது தமிழாற்றுப்படை என்ற தொடர் சொற்பொழிவில் கூறியுள்ளவற்றை மேற்கோள் காட்டி, இது தவறான கருத்து என்கிறார் குகநாதன் 

அறிவியல் அடிப்படையில் ஏற்படுகின்ற மாற்றங்களை பின்வருமாறு விளக்குகிறார். அதாவது பெருநிலப் பரப்பு புவித் தகடுகளின் அசைவினால் பல்வேறு கண்டங்களாகப் பிரிந்தது. இது 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வு ஆனால் இன்றைய மனிதர்கள் தோன்றிய காலம் 200000-300000 ஆண்டுகள். எனவே கண்டங்களின் பிளவுகளுக்கு முன்னரே தமிழர் தோன்றினர் என்பது அறிவியல் ரீதியில் பொருத்தமாகாது. குமரிக் கண்டத்தில் தமிழர் வாழ்ந்தனர் என்பது வெறும் கற்பனை எனவும் குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவன் தமிழன் என்று சொல்வோரை வெறும் கற்பனைவாதிகள் எனவும் வைகிறார் திரு குகநாதன் 

அடுத்ததாக, இன்று தமிழ் கற்கும் மாணவரின் பெருங்குற்றச் சாட்டுகளில் பொதுவானது, எழுத்துகளின் எண்ணிக்கையும் அதனைக் கற்றலின் சிரமமும் என்பதே.  தமிழ் எழுத்துகளின் வகையையும் தொகையையும் ஆய்வு செய்யும் ஆசிரியர் குகநாதன் அவர்கள், இந்த மாணவருக்குப் பதிலளிப்பது போல தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். தமிழ் எழுத்துகளில் இரண்டு வடிவங்களே உள்ளன. ஒன்று ஒலிவடிவம்  மற்றது வரிவடிவம். வரிவடிவில் 30 எழுத்துகளும் ஒலிவடிவில் 30 ஒலிகளுமே உள்ளன. அவற்றில் உயிர் ஒலிகள் 12, மெய்யொலிகள் 18. உயிர் எழுத்துகளின் சேர்க்கை மெய்யெழுத்துகளுக்கு இல்லாவிட்டால் மெய் எழுத்துகள் தனித்து இயங்காது. அதனால் தான் உயிர் மெய் எழுத்துகள் தோன்றின. ஆகவே தமிழ் மொழியைக் கற்பதற்கு எழுத்துகள் என்றுமே தடையாக இருக்கப் போவதில்லை என்கிறார். 

இரண்டாம் படலத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளை வரிசைப்படுத்தும் போது “ஐ” என்ற உயிர் நெடில் எழுத்து தனித்து நின்று பொருள் தரக்கூடிய எழுத்து என்பதும் 24 பொருள்களைத் தனித்து “ஐ” மட்டுமே கொண்டுள்ளது என்பதும் அதன் சிறப்பே என்று தமிழ்ப் பேரகராதியை ஆதாரம் காட்டி அச்சொற்களை வரிசைப் படுத்தி உள்ளார். 

மேலும் அதே படலத்தில் பெண்பால் நிலைச் சமத்துவத்தின் வீழ்ச்சிப் போக்கையும் ஆதாரம் கொண்டு விளக்குகிறார். நாகரிகம் உச்சக் கட்டத்தை அடைந்து உலகம் முழுவதும் தொழில் நுட்பத்தில் தங்கியிருக்கின்ற போதிலும் பெண்கள் இன்றும் இரண்டாம் தரமானவர்களாகத் தான் கணிக்கப்படுகின்றனர். ஆனால் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கப்புலவரான வெள்ளிவீதியார் தனது உள்ளத்து உணர்வை “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது” என்று காமஞ் சொட்டப் பாடிய பாடலை ஆதாரம் காட்டி அன்றைக்கு இருந்த பெண்களின் பால்நிலைச் சமத்துவத்தையும் இன்று விபச்சாரி என்ற சொல்லுக்கு ஆண்பாற் சொல் இல்லாத, பாலியல் சமத்துவம் இல்லாத,  ஒரு பக்கச் சார்பான சமூகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். 

அதேவேளை தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றாக, பாகுபாடற்ற முறையில், முறையற்ற உறவு கொள்வோருக்கு முப்பாலிலும் சொற்கள் உண்டு என பழந்தமிழ் இலக்கியங்களின் வாயிலாக விளக்குகிறார். “வறுமொழியாளரொடு வம்பப்பரத்தரொடு” என்ற சிலம்பு கூறும் வரியிலுள்ள வம்பப்பரத்தர் என்பது புதிய காமநுகர்ச்சி விரும்பும் காமுகர் என்று பொருளாகும்.   அதாவது முறையற்ற காமநுகர்ச்சி விரும்புவோரைப் பரத்தன், பரத்தை, பரத்தர் என்று அழைக்கும் மரபு தமிழ்மொழியில் உண்டு என்பது அவருடைய வாதம். இவ்வாறு பிற்போக்கான ஒரு பண்பாடு தமிழ்மொழியினுள் நுழைந்து எம்மை என்ன பாகுபடுத்துகின்றது என்பதை அவரது கூற்றிலிருந்து உணர முடிகிறது. 

தமிழிசை அறிவு தமிழரிடையே எவ்வாறு செழித்து வளர்ந்து இருந்தது என்பதை விவாதிக்கிறார்.  “அளவு இறந்து இசைத்தலும் ஒற்று இசை நீடலும் உள என மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” (தொல் 33) என்றும் அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே (தொல் 1268) என்றும் இசைக்கான இலக்கணத்தை சங்கப் பாடல்கள் வகுத்துள்ளன. சங்கப் பாடல்கள் எல்லாம் சரிகமபதநி ஆகிய பண்களை அடிப்படையாகக் கொண்டே பாடப்பட்டுள்ளன என்கிறார்.  இப்பண்கள் ஆஈஊஏஐஓஔ ஆகிய நெட்டெழுத்தை ஆதாரமாகக் கொண்டு இருந்தது என்றும் காலப் போக்கில் சரிகமபதநி என மாற்றம் கொண்டது என்றும் எங்கோ படித்த நினைவு எனக்கு இத்தருணத்தில் வந்து போனது. 

தமிழ் மொழியில் ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமலும் விதைக்கப்பட்ட சொற்கள் வடமொழிச்  சொற்கள் காலங்காலமாக தமிழ் அறிஞர்கள் வடமொழிக் கலப்பை எதிர்த்து வந்தாலும் தொடர்ச்சியான கலப்பை யாராலும் தடுத்துவிட முடியவில்லை. குறிப்பாகத் தமிழ்க் குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. நமது மக்களுக்கு தமிழ்ச்சொல் எது? வடசொல் எது? என்ற அறியாமையே காரணம் ஆகும். இதை வெளிப்படுத்தும் நோக்கில் திரு.குகநாதன் அவர்கள் தமிழ் மறைப்பும் சிதைப்பும் என்ற தலைப்பைக் கையாண்டுள்ளார். 

நல்ல தமிழ்ச் சொற்களை மறைத்து வடமொழி, பாளிமொழி போன்ற மொழிகளைக் கலப்பதில் மதங்கள்  பெரும் பங்காற்றின. பௌத்த மதம் பாளிமொழிக் கலப்பையும் வைதீக மதங்கள் வடமொழிக் கலப்பையும் தொடர்ச்சியாகச் செய்து வந்துள்ளன. வணிகத்தின் மூலம் பிராக்கிருத மொழிக் கலப்பும் அன்றைய காலத்தில் இடம்பெற்றன என ஆசிரியர் கூறுகிறார். 

மொழிச் சிதைவைக் கூறும்  போது தமிழ்ச் சொற்களைக் களவாடி அவற்றைச் சமஸ்கிருதமாக மாற்றி மீண்டும் சிதைந்த ஒரு வடிவத்தினை தமிழ் மொழியில் கலந்து விட்டார்கள். சொற்களைக் கலப்பதுடன் மட்டும் நின்றுவிடாது சொற்களை ஒலிப்பதிலும் கலப்பு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவே தமிழில் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு என்று ஆசிரியர் கூறுகிறார். இதுவரை கிரந்த எழுத்து என்ற ஒன்று இருக்கிறது. அது வேற்று மொழிச் சொற்களை ஒலிக்கப் பயன்படுகிறது என்ற அறிவு மட்டுமே எனக்கிருந்தது. ஆனால் திரு. குகநாதன் அவர்கள் கிரந்த எழுத்துப் பற்றிக் குறிப்பிட்ட விடயம் எனக்குப் புதியதாக இருந்தது. அவரது கூற்றின்படி 10-30 விழுக்காடு கிரந்தச் சொற்கள் தமிழ்மொழியில் கலந்துள்ளன. இடைக்காலத்தில் இவை வலிந்து திணிக்கப்பட்டுள்ளன என்றும் ஸ,ஷ, ஜ, ஹ.ஸ்ரீ, கூஷ ஆகிய ஆறு கிரந்த எழுத்துகளுடன் எமது உயிர் எழுத்துகள் 12உம் சேர்ந்து 72 எழுத்துகளை உருவாக்கித் தமிழ் எழுத்துகளுடன் சேர்ந்துள்ளன. வடமொழிச் சொற்களைத் தேவையான அளவு தமிழ்மொழியில் சேர்ப்பதற்கு இவ்வெழுத்துகள் உதவுகின்றன என்றும் இவை தமிழ்மொழியில் ஒலிப்பதற்கும் எழுதுவதற்கும் எவ்வளவு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியரும் தற்பவம், தற்சமம் என்ற பெயரில் விதிகளைப் பிறப்பித்துள்ளார். அதாவது எந்தச் சொல்லில் கிரந்த ஒலி ஒலிக்கிறதோ அச்சொல் தமிழ்ச்சொல் அல்ல. எடுத்துக் காட்டாக, வருஷம் என்ற சொல்லுக்குப் பதிலாக வருடம் என்று  எழுத முடியும் என்பது தொல்காப்பியர் கருத்து. ஆனால் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர் என்று கவலை கொள்கிறார் குகநாதன் அவர்கள். இதை எல்லாம் விட மிகுந்த துயரமான விடயம் சில சொற்களுக்கு வலிந்து கிரந்த எழுத்துகள் புகுத்தப்பட்டமை. வேட்டி என்ற நல்ல தமிழ்ச்சொல்லை வேஷ்டி என்றும் புத்தகம் என்ற சொல்லை புஸ்தகம் என்றும் கூறுவது துயரமான விடயம் இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர். 

எனவே இவ்வெழுத்துகளைத் தவிர்ப்பதற்காக அவர் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். பிறமொழிச் சொற்களைத் தமிழ்மொழியில் எழுதுதல் வேண்டும் ஜாதி என்பதை சாதி என்று எழுத வேண்டும். புதிய சொற்களுக்கான தமிழ்மொழி ஆக்கம் செய்தல் வேண்டும். இது பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்சொற்கள் இல்லை என்ற குறைபாட்டை நிறைவேற்றும். 

மொழிச் சிதைவுக்குக் காரணம் மொழிக் கலப்புத் தான் என்று கூறும் இவர் அதிலும் வடமொழிக் கலப்பு என்பது கலக்கப்படுகிறது என்று தெரியாமலேயே கலக்கப்பட்டு வருகின்றது என்கிறார். வடமொழிக் கலப்பைத் தவிர்க்கத் தனித்தமிழ் மொழிப் பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் அதற்கான சில உத்திகளையும் ஆசிரியர் முன்வைக்கிறார். 

வடமொழிச் சொற்கள் இன்றைக்கு 2000 ஆண்டுக் காலமாகத் தமிழ் மொழியில் புகுத்தப்பட்டு வந்துள்ளமையால் வடமொழிச் சொற்கள் எவை, தமிழ் மொழிச் சொற்கள் எவை என்ற வினா எல்லோர் மத்தியிலும் எழாமலில்லை. அதற்கும்  ஆசிரியர் விடையளிக்கிறார். கிரந்த எழுத்துக்கெனத் தனித்த ஒலி உண்டு. எந்தச் சொல்லில் கிரந்த ஒலி உண்டோ அச் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. எ-கா வருஷம் என்பதும்

முன்னொட்டுக் கொடுத்து ஆக்கப்படும் சொற்களும் தமிழ்ச் சொற்கள் அல்ல. எ-கா சாதாரணம் – அசாதாரணம்  என்பதும் அவரது ஒரு தெளிவான விளக்கமே

மேலும் தமிழ்மொழியில் டணலரழறய ஆகிய எழுத்துகள் முதலெழுத்துகளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அவ்வெழுத்துகளைக் கொண்டு வரும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல என இலகுவில் அடையாளம் காணமுடியும் என்கிறார். அவ்வாறு வரும் சொற்கள் ஒன்றில் வடமொழிச் சொற்களாகவோ அல்லது வேற்று மொழிச் சொற்களாகவோ தான் இருக்கலாமேயோழிய தமிழ்மொழிச் சொற்களாக இருக்க முடியாது என்று கூறி எடுத்துக்காட்டுகள் தருகிறார். யதார்த்தம், லட்சம், லட்டு போன்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. அதேபோல சௌ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களும் தமிழ் மொழிச்சொற்கள் அல்ல. சௌபாக்கியவதி, சௌக்கியம் என்பன எமது மொழியில் கலக்கப்பட்ட சொற்கள் என்கிறார். நாம் இவற்றைப் புரிந்து கொண்டு கலப்படத்தை அகற்ற முயல வேண்டும் என்பது அவரது பேரவா. 

நம்முறைய பெற்றோர் தமது குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது இரண்டு விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். ஒன்று தன்னுடைய குழந்தையின் பெயர் 2 அல்லது 3 எழுத்துச் சொற்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். மற்றது குழந்தையை அழைக்கும் போது அப்பெயர் நாகரிகமானதாக இருக்க வேண்டும். இதை மட்டுமே கவனத்தில் கொண்டு பெயர் சூட்டும் போது அவை  வெறும் வெற்றுச் சொற்கள் பெயராக அமைகின்றன. அதுமட்டுமல்லாது வடமொழி, ஆங்கிலம், பிரெஞ்சு என தமக்குத் தெரிந்த மொழிச் சொற்களையும் பெயர்களாகச் சூட்டுகின்றனர். அப்பெயர்களின் எதிர்மறையான பொருள் இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். எ-கா அபர்ணா என்பது ஆடையில்லாதவள் என்ற பொருளையும் ஜாசிக்கா என்பது பிச்சைக்காரி என்ற பொருளையும் தருகின்றன. இதை ஆசிரியர் குறிப்பிட்டு தமிழர்களைத் தமிழில் பெயர் சூட்டி மகிழுமாறு வேண்டுகின்றார். 

ஊர்ப்பெயர் சூட்டல்கள் கூடத் திட்டமிட்ட முறையில் தமிழையும் தமிழ்மொழியையும் அழித்தலுக்காகவே நடத்தப்படுகின்றன. தமிழர்கள் வாழும் பகுதியில், இலங்கையில் வடக்குக் கிழக்கும், தமிழ்நாட்டிலும் இவ்வூர்ப் பெயர்கள் வேற்றுமொழியில் சூட்டப்படுதல்  தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. வடக்குக் கிழக்குப் பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்றும் வகையில் சிங்களப்  பெயர்களை தமிழ் ஊர்களுக்குச் சூட்டுதலும், தமிழ்நாட்டில் வடமொழிப் பெயர்களை அங்குள்ள ஊர்களுக்குச் சூட்டுதலும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. மதம், சோதிடம், சாதி ஆகிய மூன்றுமே இதற்கான காரணங்களாகும் என்பது ஆசிரியரது கருத்து

தமிழர் வரலாற்றைப் பேசுவன பழந்தமிழ் இலக்கியங்கள். அதை அனல்வாதம், புனல்வாதம் என்ற பெயர்களில் தீக்கும், நீருக்கும் பலி கொடுத்துவிட்டார்கள் என்கிறார் இவர். இதற்கு பழந்தமிழ் நுால்களைப் பதிப்பித்த உவேசா கூறியவற்றை மேற்கோள் காட்டியுள்ளார். “ஆகம சாத்திரத்தில் சொன்னபடி அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட்டார்கள்”. இடைக்காலத்தில் பக்தியில் கண்ணை மூடிய தமிழன் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை என்று பொருமுகிறார் ஆசிரியர். திருக்குறள், மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களுக்குள் கடவுள் வாழ்த்தைப் புகுத்தி, தமிழரது கொள்கையையே மாற்றிய பெருவீரர்கள் என்று எரிச்சல் படுகிறார் இவர்.  ஆத்திசூடியில், “அறனை மறவேல் என்பதில் உள்ள “ற” என்ற எழுத்தை “ர” வாக மாற்றி கடவுளாக மாற்றியவர் சங்கராச்சாரியார் என்று கொதிக்கிறார். 

பெண்கல்வியைப் போற்றிய தமிழ் நாட்டில் மனுதர்மம் என்ற பெயரில்  பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் மன்னர்களாலேயே கல்வி மறுக்கப்பட்டது. அன்று வீட்டுக்குள்ளேயே இருத்தப்பட்ட பெண்கள் இன்றுவரை வெளியில் வரமுடியாமல் தவிக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் பல அவதுாறுகளையும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுதலையும் அனுபவிக்கிறார்கள். எவ்வளவு பெண்ணியம் பேசினாலும் பெண்கள் பற்றியும் பெண் அடக்குமுறை பற்றியும் பக்கம் பக்கமாக எழுதினாலும் இன்றும் பெண்கள் ஆண்களால் அடக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதும் எரிச்சல் தரும் உண்மையான செய்தியே.  

இயற்கையோடு இயைந்த விழாக்களைப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். அதில் தைப்பொங்கலும் ஒன்று. கதிரவனின் வடசெலவு (வடக்கு நோக்கிய நகர்வு) என்பதைச் சங்கராந்தி என வடமொழிப் பெயராகச் சூட்டி சமய விழாவாக மாற்றியுள்ளார்கள். அதில் பல புராணப் புனைகதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அக்கதையின் படி இந்திரனுக்குப் படைக்காமல் ஏன் கதிரவனுக்குப் படைக்கிறார்கள் என்ற வினாவுக்கு அவர்களிடம் பதிலில்லை என்கிறார் ஆசிரியர். இதை நானும் எனது பட்டறிவு வாயிலாக நன்கு உணர்ந்து வருகிறேன். எனது மாணவர்களிடம் தைப்பொங்கல் பற்றி ஒரு சிறுகுறிப்போ, கட்டுரையோ எழுதும்படி கேட்டால் அவர்கள் தகவல் தேடுகிறோம் என்ற பெயரில் இணையத்தின் துணைகொண்டு சங்கராந்தி என்றும், புண்ணியகாலம் என்றும் புதிய செய்திகளைக் கொண்டு வருகின்றனர். காரணம் தைப்பொங்கலுக்கான கட்டுரைகளை இணையத்தில் எழுதுகிறோம் என்ற பெயரில் மதவாதிகள் தைப்பொங்கலுக்கு மதச்சாயம் பூசி விடுகிறார்கள். அதேபோல தமிழர் பண்டிகைகளான விளக்கீடு, பாவை நோன்பு என்பனவும் சமய விழாக்களாக மாற்றப்பட்டு இன்று கோயில்களில் தங்கிக் கொண்டன என்று கோபப்படுகிறார் குகநாதன். 

நான்காம் படலம் சங்க காலத்தில் மதஞ் சாராத இயற்கையான வாழ்வு வாழ்ந்த மக்களிடையே மதம் எவ்வளவு துாரம் தனது செல்வாக்கைச் செலுத்தியுள்ளது என்பதை தெளிவாக ஆராய்கிறது. தமிழ் மொழியில் செல்வாக்குச் செலுத்திய மதங்களை வரிசைப்படுத்துகிறார் ஆசிரியர். ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிருத்தவம் ஆகிய மதங்கள் தொடர்ந்து தமிழ்மொழியில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. 

ஆசீவகம், சமணம் என்ற இரண்டு மதங்கள் தமிழர் மத்தியில் இருந்திருக்கின்றன. நான அறிந்தவரையில் ஆசீவகம், சமணம் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. திரு.குகநாதன் அவர்கள் இவை இரண்டையும் தெளிவாக்கியுள்ளார். ஆசீவகம் என்றொரு மதம் மற்கலி கோசலார் என்பவரால் இந்தியாவின் வடக்கே தோற்றம் பெற்றுள்ளது. இவர் மகாவீரருக்கு சமகாலத்தவர். ஆசீவகம் பெற்றிருந்த செல்வாக்கை புத்தர், ”ஆற்றுக் கழிமுகத்தில் இருந்து மீன்களைப் பிடிப்பது போல மற்கலி கோசலார் மக்களைக் கவர்ந்திழுக்கிறார்” என்று கூறுவதாக திரு. குகநாதன் கூறுகிறார். அதிலிருந்து பார்க்கும் போது ஆசீவகம், சமணம், புத்தம் ஆகிய மூன்று மதங்களும் ஒரே காலத்தவை. இலங்கையில் கூட ஆசீவகம் இருந்திருக்கிறது என்பதற்கு தேவநம்பியதீசன் ஆசீவகத்தைப் பின்பற்றி வாழ்ந்தான் என்றும் அசோக மன்னர்களின் துாதுவர்களாலேயே அவன் பௌத்த மதத்திற்கு மாறினான் என்றும் ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார். ஆசீவகத்தின் பண்புகளும் சமண மதத்தின் பண்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போயிருப்பதாக ஆசிரியர் கருதுகிறார். 

ஆசீவகம் என்றொரு மதம் இருந்து அது சமண மதக் கருத்துகளுடன் ஒத்துப் போய் பின்னர் வைதீக மதங்களுடன் இரண்டறக் கலந்து விட்டதாகக் கூறும்  குகநாதன், ஆசீவகத்தின் அடையாளமாக யானையும் காளை மாடும் இருந்ததாகவும், ஐயனார் என்பவரின் தோற்றம் ஆசீவகத்தின் தோற்றுவிப்பாளரான மற்கலி கோசலாரே என்றும் கூறுகிறார். இது உண்மையாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. நான் அறிந்தவரையில் ஐயனார் என்பது ஒரு சிறு தெய்வம். கிராமங்களில் ஐயனார் கோயில்களில் கிடாய் வெட்டுவதையும் படையல் படைத்து நேர்த்திக்கடன் நிகழ்த்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த ஐயனாருக்கும் ஆசீவகத்திற்கும் உள்ள தொடர்பு பெருவியப்பை அளிக்கிறது. 

ஐயனார் கோயில்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் ஆங்காங்கே இருந்திருக்கின்றன. இலங்கையில் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான், கல்முனை, காரைநகர் ஆண்டிக்கேணி, சிலாபம் போன்ற இடங்களில் ஐயனார் கோயில்கள் இருந்திருக்கின்றன என்றும் இவை காலப்போக்கில் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் சிலாபம் முன்னீஸ்வரன் கோயில், காரைநகர்ச் சிவன்கோயில் என்பன இத்தகைய மாற்றத்தின் விளைவே என்பது குகநாதன் அவர்களது வாதம்.  யாழ்ப்பாணத்தில் தீவுப்பகுதிகளில் அமைந்துள்ள ஐயனார் கோயில்கள் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகின்றன என்கிறார் ஆசிரியர்.  மேலும் சிங்கள மக்கள் ஐயனாரை ஜயநாயக்க என்ற பெயரில் வழிபடுவதாகவும் திரு குகநாதன் கூறுகிறார். 

இவ்வாறு நன்றாக வளர்ந்திருந்த ஆசீவக மதத்தை சமணம், பௌத்தம், சைவம் ஆகிய மதங்கள் எதிர்த்தன. இவ் வெதிர்ப்பைத் தாங்க முடியாத ஆசீவகத் துறவிகள் தற்கொலை செய்ய முயன்றதாக ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர். சைவமும் கஜாரி வடிவில் சிவன் ஆசீவகத்தை அழித்ததாகக் குறிப்பிடுகிறார். ஆசீவகக் கோயில்கள் சைவக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. எங்கெல்லாம் யானை, முதலையிடம் அல்லது சிங்கத்திடம் அடிவாங்கும் ஓவியம் அல்லது சிற்பம் உள்ளதோ அக் கோயில்கள் ஆசீவகக் கோயில்களாக இருந்து வைதீகக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்று முனைவர் நெடுஞ்செழியன் கூறியதை ஆதாரம் காட்டி இவர் கூறுவது எனக்குப் புதிய செய்தியே. 

நடுகல் வழிபாடு அதன் தோற்றம் வளர்ச்சி பற்றியும் அதற்கு மதச் சாயம் பூசப்பட்ட வழிபற்றியும் ஆராய்கிறார். மூதாதையருக்காக தோன்றிய நடுகல் வழிபாடு பின்னர் போரில் வீரர்கள் வீரச் சாவடைந்தவர்களுக்கான நடுகல் வணக்கமுறை தோற்றம் பெற்றதாக பேரா.கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றை ஆதாரம் காட்டுகிறார். 

அவரது நடுகல் வழிபாடு காலப்போக்கில் எவ்வாறு முருக வழிபாடாக மாறியது பற்றிய விளக்கமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. தொல்காப்பியத்தில், “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதை சான்றாகக் கொண்டு முருகன் குறிஞ்சித் தலைவனாகப் போற்றப்படுவதனுாடாக முருக வழிபாடு தோன்றுகிறது. இவர் கந்தன், வேலன் போன்ற முருகனுடைய மறுபெயர்களுக்கான விளக்கங்களையும் தெளிவாக முன்வைக்கிறார். கல் 10 துாண் - கற்றுாண். இதன் சுருங்கிய வடிவம் கந்து, கந்தன் ஆகினான் என்றும், வேட்டையாடுதலிலும் உணவு சேகரித்தலிலும் வேல் முதன்மையான பங்கு வகிப்பதால் வேலன் என்ற பெயர் வந்தது என்றும் முருக வழிபாடு தமிழர் மத்தியில் நிலைத்து நிற்பதற்கான காரணத்தை தெளிவாக முன்வைக்கிறார்.  வேட்டைக்குப் போனவன் திரும்பி வந்து செய்து காட்டியதே கூத்துக்களின் தொடக்கமாகக் கூறுகிறார். இதுவே வேலன் வெறியாட்டு என்று கூறுகிறார் பேரா.க.கைலாசபதி அவர்கள். 

முருகன் என்பவன் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவன். இவனை ஆரியர் படையெடுப்பின் விளைவாக சுப்பிரமணியனாகி, இயற்கையோடு இயைந்த வாழ்வு இருண்டு போனது பற்றித் தெளிவாக ஆராய்கிறார் குகநாதன். ரிக், யசுர் போன்ற வேதங்களினுாடாகப் போற்றப்படுபவனாகவும் அக்னியுடன் தொடர்புடையவனாகவும் மாற்றப்படுகிறான் முருகன். இதனை நிரூபிக்க பல புராணக் கதைகள் உருவாக்கப்பட்டன. முருகனுக்குப் பல பெயர்கள் மட்டுமல்ல, பல பெற்றோரையும் உருவாக்கி, ஆதிக்குடி மக்களின் ஆதார தெய்வம் ஆரியர் வசம் அடிமைப்பட்டுப் போன வரலாற்றை பலவேறு ஆதாரங்களினுடாக மெய்ப்பிக்கிறார். 

முருகனுக்கும் தமிழருக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. அதை மேலே ஆசிரியர் கூறியவற்றை வைத்துக் கொண்டு இன்றும் வேலன் வெறியாட்டுக் கூத்துகள் வேல் என்பவை நிலைத்து நிற்பதைக் கொண்டு உணரக்கூடியதாக உள்ளது. இன்றும் முருகன், கந்தன் என்ற பெயர் ஸ்கந்தா, சுப்பிரமணியன் என்ற பெயர்களின் மூலம்  உயர்வு தாழ்வைப் பார்க்க முடிகிறது. 

ஐந்தாம் படலத்தில் தமிழும் சாதியும் என்ற தலைப்பில் தமிழ் மக்களிடையே புரையோடிப் போன சாதிப் பாகுபாட்டைத் தெளிவாக விளக்குகின்றார் திரு குகநாதன். சாதிப்பாகுபாடு 2000 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டது. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று பாட ஔவைக்கு என்ன தேவை ஏற்பட்டது என்று உணர இவரது இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றது. சாதிகள் தொழில் கருதி உருவாக்கப்பட, சாதிகள் மூலம் உயர்வு, தாழ்வு கற்பித்தது பார்ப்பனியம். தமிழில் சாதிக்கு இணையான தமிழ்ச் சொல் இல்லை என்கிறார் ஆசிரியர். ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே சாதி. சாதிப்பாகுபாடு தோன்றிய வரலாற்றைத் தெளிவுபடுத்தி, பகவத்கீதை மற்றும் பன்னிருபாட்டியல் என்னும் இலக்கணநுால் போன்றவற்றின் திட்டமிட்ட பார்ப்பனியச் சாதித் திமிரையும் கூறி, சமண பௌத்த மதங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் அழிந்து போகாத சாதியம் இன்றுவரை நிமிர்ந்து நின்று பல கொடுமைகளைச் செய்து வருகிறது என்பது ஆசிரியரது ஆய்வு. 

தமிழன் சூத்திரனாகவும் தமிழிலேயே சிறப்பு எழுத்தாகக் கொள்ளப்பட்ட “ழ” கரம் சூத்திர எழுத்தாகவும் மாறிப் போய் நிற்கிறது. “ற”கரமும் “ழ”கரமும் வடமொழியில் ஒலிக்க முடியாத எழுத்துகள். அவற்றை முயற்சி செய்து ஒலிக்க முடியாமல் அதனைச் சூத்திர எழுத்துகளாக மாற்றிய பெருமை பன்னிரு பாட்டியல் ஆசிரியரையே சாரும் என அவரது பாட்டுகளில் இருந்து ஆதாரம் காட்டுகிறார் திரு குகநாதன். 

இவ்வாறு தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற தலைப்பில் ஒரு விரிவான விளக்கத்தைதை் தந்த ஆசிரியர் திரு குகநாதன் அவர்களை மிகவும் பாராட்டுவதோடு அவரது இத்தகைய முயற்சிகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்னும் எனது அவாவினையும் பதிவு செய்து நிச்சயமாக இதுவரை இவர் சொன்ன விடயங்கள் எல்லாம் தெரிந்தது போல இருந்தது. ஆனால் தெரியாமல பல விடயங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் மேலே சுட்டிக் காட்டியுள்ளேன். 

தமிழர் வரலாற்றில் இவ்வாறு பேசப்படாமல் இருப்பவை ஏராளம். எல்லாம் பேசப்பட வேண்டும். ஆசிரியர் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன். ஒவ்வொரு தலைப்பும் ஆழமாக ஆய்வு செய்யக்கூடிய தலைப்புகள். அவற்றை ஆய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற எனது அவாவையும் முன்வைத்து இதனை நிறைவு செய்கிறேன். 

நன்றி 

கிருஸ்ணா

 

 

http://poovaraasu.blogspot.com/2020/12/blog-post_28.html

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.