Jump to content

தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள் - அ.கௌரிகாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன்

அ.கௌரிகாந்தன் – மாவோயிச முகாமிலிருந்து தேசிய விடுதலை இயக்கங்களுக்குள் தம்மை உள் நுளைத்துக்கொண்டவர். மலையகத்திலிருந்து உரும்பிராய் ஈறாக வன்னிவரை தனது வாழ் நாள் முழுவதும் போராட்டத்திற்காகவே அர்ப்பணித்துக்கொண்டவர். இன்று ஈழத் தமிழர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய அறிவுசீவி. 70 களிலிருந்து தமிழ் சிங்கள இடதுசாரி முகாமில் நன்கு அறியப்பட்ட கௌரிகாந்தன், தனது முதுமையிலும் எழுத்துப்போரை சமரசமின்றி நடத்திக்கொண்டிருக்கிறார். இத்தாலிய – ஜேர்மனிய அனுபவங்களை முன்வைத்து அவர் எழுதிய நூலானா “தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்” இனியொருவில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது. ஒன்பது பாகங்களாக நீட்சிபெறும் இந்த நூல் எமது காலத்தய அனுபவங்களை முன்வைத்து பல்வேறு அறிவு சார் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவிக்கவல்லது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றத்தின் போதான தவிர்க்கவியலாத தத்துவார்த்த மேற்கட்டுமானமாக உருவெடுக்கும் தேசியவாதம் அந்த நிகழ்வு முற்றுப்பெற்றதும் எவ்வாறு தேசியவாதம் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கான பதிலின் ஆதாரமாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கமுடியாது.

அத்தியாயம் 1

பாசிசவியல் ஒரு கதம்பம், இருந்த போதும் அது ஒரு தேசிய முழுமை

பாசிசவியலானது, தனக்குத்தானே முரண்பாடுகளைக் கொண்டுள்ள சித்தாந்தங்களினதும், முக்கியத்துவமிக்க நிர்வாக, நிறுவன, பொருளா தார மற்றும் சமூக நிர்பந்தங்களினது கட்டளைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய முறையில், சித்தாந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைத் திருத்தங் களினதும் அபூர்வமானதோர் கலவையாக பார்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

பாசிசவியல், முன்பின் முரண்களின் அபூர்வ கலவை

spacer.png

 

ஹிட்லரும்A1, முசோலினியும்M2 கடந்து போன நிகழ்வுகளாகும். ஆனால் பாசிசவியல் ஒரு கடந்துபோன நிகழ்வல்ல. அது கடந்த காலத்தில் இருந்தது, நிகழ்காலத்தில் இருக்கின்றது, எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது. அனைத்துவகையான ஏகாதிபத்தியங்களும் ஒழிந்து, தேசங்கள் அனைத்தும் அனைத்துலக அரங்கில் சம அரசியல் உரிமை பெற்றவை என்ற நிலை வரும் வரை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய இனங்களும், பிற இனக் குழுமங்களும் அரசியல் சமவுரிமை பெறும்வரை பாசிசவியலும் உலகில் இருக்கவே செய்யும், அதைப்பற்றிய விவாதங்களும் தொடரும், அவற்றுடனான போராட்டங்களும் தொடரும்.

பாசிசவியலின் அடிப்படை அறிவாற்றலாக இருப்பது அது பல்வேறு சித்தாந்தங்களின் முன்னெப்பொழுதும் கண்டிராத ஒருவகைக் கலவையாக இருப்பதுதான். இக்கலவையானது முற்போக்கு ஜனநாயக சித்தாந்தங்களில்48 இருந்து ஆரம்பித்து, அதற்கெதிரான பிற்போக்கு சித்தாந்தங்கள் வரையான பல்வேறு வகைச் சித்தாதங்களையும் உள்ளடக்கியதொன்றாகும். அத்துடன் இது இனம், மதம், பொருளாதாரம், சமூக நலன் பேணல், அறநெறி ஆகிய விவகாரங்களில் தமக்குள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகாத நிலையில் உள்ள கருத்தோட்டங்கைளை ஒன்று கூட்டியதொன்றாகவும் இருந்து வருகின்றது.

தமது பிரச்சனைகளுக்கு பாசிசவியல்த் தீர்வை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் தமது வெவ்வேறு பட்ட சமூக மேற்கட்டுமான தேவைகளுக்கு பொருந்தி வரக்கூடிய முறையில் பாசிசவியல் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகக் கூடியதாக, தமது சொந்த சித்தாந்தங்களில் பல தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

தகுந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் அவசியமான நடைமுறைத் திருத்தங்கள் வெவ்வேறு சூழலுக்கு ஏற்றவிதமாக பிரயோகிக்கப்படுவதுடன், பாசிசவியல் கோட்பாடுகளுள் சேர்க்கப்பட்டும் வருகின்றன. ஆர்.என் கறுஹண்ட் பொதுவுடமை பற்றிய தனது திட்டவட்டமான ஆய்வில் பின்வருமாறு கூறியுள்ளார்.

தம்மால் மிக ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அறிவியல் பூர்வமானது என்று தம்மால்நம்பப்படுவதுமான ஓர் சித்தாந்தத்தையே நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்பத் தாம்பிரயோகிப்பதாக பொதுவுடமைவாதிகள் நம்புகிறார்கள். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் பாசிசவாதிகளாகிய நாமோ, எமது சொந்த நிறுவனங்களுக்குப் பின்னால் ஏதாவதோர்சித்தாந்தம் இருக்கிறது என்பதை மறந்துவிடும் சுபாவம் கொண்டவர்களாகவே உள்ளோம்,மாறாக பொதுவுடமைவாதிகளோ தமது சொந்த சித்தாந்தக் கோட்பாடுகளை என்றுமே மறந்துவிடுவதில்லை. 

இது காலப்பரிமாணம் சம்பந்தப்பட்ட விவகாரமாகவும் உள்ளது. சமீப காலவரலாற்றுள்ள பொதுவுடைமை இயக்கங்கள் எப்பொழுதுமே நீண்டகால வரலாறுள்ள இயக்கங்களை விட சித்தாந்த நிலைப்பாட்டில் அதிக அக்கறை கொண்டனவாகவே உள்ளன. ஆனால்,அதைவிட மேலானது, அவர்கள் இவ்விதம் நடந்துகொள்வது மார்கிசியம் என்ற அறிவியல் உண்மையையும், கண்டிப்பான தர்க்கரீதியான தொகுப்பும், பகுப்பும் என்ற ஆய்வு முறையைக் கொண்டே தமது மூல உத்தியையும், தந்திர உத்தியையும் வகுத்துக்கொள்கின்றன என்ற உண்மையினது வெளிப்பாடேயாகும். இவற்றில் அநேகமானவை பாசிச சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல அதன் நடைமுறைக்கும் கூடப் பொருத்தக் கூடியனவாகும். இருந்தும் நித்தம் நித்தம் நடந்துவந்த இந்த உள்வாங்கல்கள் பாசிசவியலர்களுக்கு மிக அருமையாகவே சில வெற்றிகளைத் தந்துள்ளன.

ஆகையினால் கடந்தகால நிலமைகளை நோக்கும் போது பாசிசவியலானது தனக்குத்தானேமுரண்பாடுகளைக் கொண்டுள்ள சித்தாந்தங்களினதும், முக்கியத்துவமிக்க நிர்வாக, பொருளாதார மற்றும் சமூக நிர்ப்பந்தங்களினது கட்டளைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியமுறையில் சித்தாந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைத் திருத்தங்களினதும் அபூர்வமானதோர்கலவையாக பார்க்கப்பட வேண்டியது கட்டாயமானதாகிறது.

இக்கலவை அறிஞர்களின் கண்டுபடிப்பல்ல. 

மூலதன நூலுக்கு இணையாக பாசிசவியல் நூல் ஒன்றுகூட இல்லாதது விசயத்தை மேலும் சிக்கல் மிகுந்ததாக்குகிறது. ஹிட்லரின் மெயின்காம்ப் என்னும் நூல் முக்கியத்துவம் மிக்கதும் கவர்ச்சிகரமானதும் என்பது உண்மைதான். ஆனால் அது செயல் படுவதற்கான வேலைத்திட்டத்தைக் கொண்டதோ அல்லது சமூக அரசியல் பொருளாதாரத்துக்கான வேலைத்திட்டத்தைக் கொண்டதோவல்ல. அதாவது இவர்களுக்கு ஒரு மார்க்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் பாசிசவியலை ஆய்வு செய்வதற்கு எமக்கோர் கருவி கிடைத்துள்ளது. அதுதான் மார்க்சியமாகும்

எவ்விதமும், இவ்விதக் கதம்பத்தை உருவாக்கியதற்கான பொறுப்புகளை கல்வி ஞானங்களில் சிறந்த அறிஞர்களின் மீது ஏற்றி வைப்பதன் முன்பாக நாம் ஒரு விடயத்தை கவனத்திலும், நினைவிலும் கொள்ள வேண்டியுள்ளது. அதி உயர் வல்லவர்களாகவும் சாதனைமிகு வெற்றிகளைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்து பாசிசவாதிகளான ஹிட்லரும்A1, முசோலினியும்M2 தாம் அதிகாரத்தில் இருந்தபோது சித்தாந்தவாதிகளாக இருக்கவில்லை என்பதே அதுவாகும். தமது அரசியல் போராட்டத்தின்போது, இவர்கள் அவ்விதம் ஆவதற்கான அதிக நேரத்தைக் கொண்டிருக்கவில்லை. இவர்களின் இரண்டாவது அணியைச் சேர்ந்தவர்களிடையேதான் சித்தாந்தவாதிகள் காணப்பட்டார்கள்.

பாசிசவியல் எழுத்தாளர்களினதும், சிந்தனையார்களினதும் படைப்புகள் எதிரும் புதிருமான இயல்புகள் கொண்டவையாகும். இதில் இருந்து நாம் கண்டு கொள்ளக்கூடியது பாசிசவியல் சித்தாந்தமானது ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதும் இறுக்கமாகப் பின்னர்ப்பட்டதுமான கருத்துக்களின் தொகுப்பல்ல என்பதேயாகும். அதாவது பாசிசவியல் சித்தாந்தமானது ஒழுங்காக நெறிப்படுத்தப்பட்டதோ அல்லது பூரண வளர்ச்சி பெற்றதோவான ஒரு சிந்தாந்தம் அல்ல. வெவ்வேறு பண்பாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத பெருமளவு கருத்துக்களின் தொகுப்பே பாசிசவியலாகிறது.

சமுதாயத்தின் ஆக்கத்திறனுள்ள சக்திகளினதும் நாசகார சக்திகளினதும் கூட்டிணைவாக உருவானதே பாசிசமாகும். இது அதிகளவு சீரற்றதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான ஓர் கலவையாகும். இக்கலவையினுள் அல்லது கதம்பத்தினுள் ஒன்றிணைந்திருந்த இயலகளில் பிரதானமானவற்றை, “நூலில் குறிப்பிடப்படும் இயல்களுக்கான தலைப்புகள்”, எனும் தலைப்பில் பெயரின் நூலின் பத்தாவது அத்தியாயமாக இணைத்துள்ளோம்.

இவ் இருவகை இயல்களையும் ஒன்றாகக் கலந்ததுவும், ஆக்கத்திறனுள்ள இயல்களை தனது நாசகார நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதுவுந்தான் பாசிசவியலின் வெற்றியாகும். பல்வேறுவகை சமூக குழப்பக்கங்கிளனதும், தேசிய சீரழிவுகளினதும், மரபினவாத25 மற்றும் குருதியினவாத24 ஒடுக்கு முறைகளினதும், வர்க்க ஒடுக்குமுறைகளினதும், இனக்குழு மோதல்களினதும் விளைவுகளை தமக்குச் சாதகமான சந்தர்பங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற முறையில் தம்மை தகவமைத்துக் கொள்வதில் அதிக வெற்றிகளைப் பெற்றிருந்த எழுத்தாளர்களும், அரசியல்வாதிகளும், இராணுவவாதிகளும் இருந்த இடங்களில்தான் பாசிசவியல் செழித்து வளர்ந்து காணப்பட்டது. இவ்விதம் வளர்ந்து வந்த பாசிசவியல், பலவீனர்களின் மேல் பலமானவர்களின் ஆட்சியையும், சமூகத்தில் தம்முடன் ஒத்துப்போகாத சக்திகளை இல்லாமல் செய்யும் செயற்பாட்டினையுமே தனது இருத்தலுக்கான அடித்தளமாகக் கொண்டிருந்துள்ளது. இது முதலாம் உலக யுத்தத்திற்கும் இரண்டாம் உலக யத்தத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், தீர்க்கப்படவே முடியாது எனத் தோற்றமளித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதாக பாசாங்குபண்ணி, பிரச்சனைகளை மேலும் குழப்பிவிடுவதற்கானதோர் முயற்சியாகவே அமைந்திருந்தது.

ஆனாலும், தனது இந்த முயற்சியின் இறுதியில், தான் அதிகாரவலுப்பற்றிருந்த நாடுகளில் பாசிசவியல் தனது அதிகாரத்தை இழந்துபோனது, தோல்வி அடைந்து போனது. இதனால் அது மதிப்பிழந்துபோனது உண்மையே. ஆயினும், பாசிசவியல் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்கிறது. பாசிசவியல் தோன்றவும், வளரவுமான சமூக சூழல் இன்னமும் தொடர்வதே இதற்கான காரணமாகும். எந்த சமூக சூழலில் பாசிசவியல் பிரயோகிக்கப்படுகிறதோ அந்த சமூக சூழலில் இருந்து இதைப் பிரித்தெடுக்க முடியும் என்று எண்ணுவது தவறாகும்.

பாசிசவியல் தன்னைத்தானே ஓர் அரசாக நியமித்துக் கொண்டது, கொள்கிறது. கொள்ளக்கூடியது இது கூட்டமைவு12 பெற்றதான ஓர் அரசை உருவாக்கும் திறன் கொண்டது. இவ்வித பாசிசவியலை ஓர் ஒட்டுமொத்தச் சமூக செயற்பாடாகப் பார்க்காது வெறுமனே ஓர் கட்சியின் அல்லது இயக்கத்தின் அரசியல் செயற்பாடாக மட்டும் பார்ப்பது சாதாரண தவறல்ல. ஆபத்துகள் நிறைந்த தவறுமாகும். அதிலும் வெறுமனே ஒரு வாக்கு வங்கி அரசியலுக்கான ஒரு தூண்டிலாக மட்டுமோ அல்லது ஒரு ‘தலைவன்’ அல்லது இயக்கம் தனது மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வன்முறையாக மட்டும் பார்ப்பதோ மிகப் பெரும் ஆபத்தானதாகும். இவ்விதம் பார்த்தவர்கள் ஒன்றில் பாசிச இயக்கங்களால் அழிக்கப்பட்டுள்ளார்கள், அல்லது அதனிடம் சரணடைந்தள்ளார்கள்.

ஹிட்லரும்A1, முசோலினியும்M2 கடந்து போன நிகழ்வுகளாகும். ஆனால் பாசிசவியல் ஒருகடந்துபோன நிகழ்வல்ல. அது கடந்த காலத்தில் இருந்தது, நிகழ்காலத்தில் இருக்கின்றது, எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது. அனைத்துவகையான ஏகாதிபத்தியங்களும் ஒழிந்து, தேசங்கள் அனைத்தும் அனைத்துலக அரங்கில் சம அரசியல் உரிமை பெற்றவை என்ற நிலைவரும் வரை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய இனங்களும், பிற இனக் குழுமங்களும் அரசியல் சம்வுரிமை பெறும்வரை பாசிசவியலும் உலகில் இருக்கவே செய்யும், அதைப்பற்றியவிவாதங்களும் தொடரும், அவற்றுடனான் போராட்டங்களும் தொடரும்.

இத்தாலிய, ஜெர்மன் வகைப் பாசிசவியல் இவற்றில் ஒரு ரகம். இவைதான் எல்லோராலும் பிரபல்யமாக அறியப்பட்டது என்ற காரணத்தால் அவையே இங்கு ஆராயப்பட்டுள்ளன.

பொருளடக்கத்தில் குறிப்பிட்டுள்ள அத்தியாயம் 2 ல் இருந்து அத்தியாயம் ஒன்பது வரையான தலைப்புகளின் கீழ் அவதானிப்போம்

 

 

 

https://inioru.com/the-destructive-dimension-of-nationalism/

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.