Jump to content

நாசி வதை/ கொலை முகாம்கள் – கொலைத்தொழிற்சாலைகள் - உலகப்போர் 2 - பாகம் 13


Recommended Posts

large.4960AC78-4A0B-4379-A40F-3B9329DEBEA3.jpeg.d4fca292695b10f4b24e9bd84224d712.jpegஜேர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு பதைபதைக்க வைக்கும் செய்திகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்தன. வதை முகாம்கள் பற்றி. இறைந்து கிடக்கும் யூதர்களி்ன் சடலங்கள் பற்றி. சிறைகளில் எலும்பும் தோலுமாக கிட்டத்தட்ட விலங்குகளைப் போல் சுருண்டு படுத்திருந்த யூத கைதிகள் பற்றி, யூத இனவொழிப்பு பற்றி. அதுவரை யூத ஒழிப்பை ஜேர்மனியின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஒன்றாகவே மேற்குலகம் கருதி வந்தது.

ஜுலை 23,1944 அன்று சோவியத் போலந்தில் உள்ள Majdanek என்னும் வதை முகாமை முதல் முதலாக கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தது ஐரோப்பா. பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகள் மேலும் சில முகாம்களை பின்னர் விடுவித்தனர். ஹிட்லரின் இனவழிப்பு பற்றி ஐரோப்பா முழுமையாக தெரிந்து கொண்டது. இவரையா ரைம் பத்திரிகை 1938ன் தலைசிறந்த மனிதராக தேர்ந்தெடுத்து அட்டையில் போட்டு கௌரவித்தது? சோவியத்தை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவரிடமா பிரிட்டனும் அமெரிக்காவும் தஞ்சம் அடையவேண்டும்?

1933ல் ஜேர்மனியில் அரை மில்லியன் யூதர்கள் இருந்தார்கள். 1945 ல் போர் முடிவடைந்தபோது பதினைந்தாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். யூதர்களின் சமூக மதிப்பை மட்டும் குறைப்பது நிரந்தர தீர்வாகாது. மீ்ண்டும் அவர்கள் பலம் பெற்றுவிடக்கூடும். மீண்டும் புனித ஆரியர்களை அவர்கள் அடிமைப்படுத்தக்கூடும், கொன்றொழித்துவிடலாம்.

Holocaust

Holoauston என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம், நெருப்பில் இட்டு செய்யப்படும் பலி. ஹோலோகோஸ்ட் (Holocaust) இதிலிருந்து வந்த சொல். யூதர்களைக் கொல்வது என்னும் பொருளில் இந்த வார்த்தை முதல் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது. 1190களில். உலகம் முழுவதும் ஹோலோகோஸ்டைப் பிரபலப்படுத்தியவர் ஹிட்லர். யூதர்களை மட்டுமல்ல, எந்த இன மக்களையும் கொத்தாக, கும்பலாக கொல்லும் முறையை ஹோலோகோஸ்ட் என்று உலகம் அழைக்க ஆரம்பித்தது.

விதவிதமான முறையில் யூதர்களை கொல்லுவதைக் கிட்டத்தட்ட முழுநேரப் பணியாக செய்துகொண்டிருந்தது ஜேர்மன் அரசாங்கம். தனித்தனி துறைகள். தனி தனி பொறுப்புகள். அனைத்தும் கச்சிதமாக ஒருங்கிணைக்கபட்டன. பாரிஷ்(Parish) தேவாலயங்களும் உள்துறை அமைச்சகங்களும் யூதர்களின் பிறப்புச் சான்றிதழையும் முகவரியையும் நாசிகளுக்கு வழங்கின. தபால் அலுவலகங்கள் யூதர்களை நாடு கடத்தும் உத்தரவையும் குடியுரிமை பறிப்பதற்கான உத்தரவையும் அச்சிட்டு தந்தன, யூதர்களின் உடைமைகளை பறிமுதல் செய்யும் பொறுப்பு நிதித்துறையை சார்ந்தது.

தொழிற்சாலைகளை, அலுவலகங்களை நிர்மாணித்து வரும் அத்தனை ஜேர்மனிய முதலாளிகளும் அரசாங்க உத்தரவு அனுப்பப்பட்டது. உங்களிடம் பணிபுரியும் யூதர்களை இந்தக்கணமே வெளியேற்றுங்கள். நாங்கள் சோதனையிடும் போது யூதன் ஒருவன் அகப்பட்டடாலும் உங்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். பங்குச்சந்தையில் யூதர்கள் செய்துள்ள முதலீடுகள் முடக்கப்பட்டன. தொழில்முனையும் யூதர்கள் விரட்டப்பட்டனர்.

பள்ளிகளில் இருந்து யூத ஆசிரியர்களும் பல்கலைக்கழகங்களில் இருந்து பேராசிரியர்களும் துரத்தப்பட்டனர். படித்துக்கொண்டிருந்த யூத மாணவர்களை வரிசையாக அழைத்து சீட்டு கொடுத்து அனுப்பினார்கள். பட்டப்படிப்பு படித்து வந்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இதில் அடக்கம். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவர மட்டுமே அவர்கள் அனுமதிக்கபட்டனர்.

யூதர்கள் கும்பல் கும்பலாக கைது செய்யப்பட்டனர். முகவரி முன்னரே கிடைத்துவிட்டது என்பதால் கதவை உடைத்து திறந்து உள்ளிருந்தவர்களை இழுத்து வருவார்கள். அரசாங்க ஊர்திகள் இவர்களை அள்ளிச்சென்று காம்ப்களில் தள்ளும். இன்றைக்கு இத்தனை பேர் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ற வாகனத்தை அரசாங்க அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள்.

மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவ சோதனைகளுக்கு எலி, முயல்களை போல் யூதர்களை பயன்படுத்திக் கொண்டன. இத்தனை பேர் வேண்டும் என்று சொல்லி அனுப்பினால் காம்ப்பில் இருந்து கொண்டு வந்து கொட்டுவார்கள். தோல், கண் தொடங்கி உடலின் எந்த பாகத்திலும் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளலாம். அங்கம் சிதைந்தாலோ, உயிர் போனாலோ பிரச்சனை இல்லை. இத்தனை போரை கொண்டுவந்தோம். இத்தனை பேர் காலி. மாற்று ஏற்பாடு செய்யவும் என்று எழுதிக்கேட்டால் புது சரக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண், பெண், குழந்தை என்று தேவைக்கேற்ப கேட்டுப்பெறலாம்.

large.172610112_DrMangele.jpg.b28e9a4bccf02780ffdd31e1f48f4cc2.jpgஅவுஷ்விட்ஸில் பணியாற்றிக்கொண்டிருந்த டாக்டர் ஜோசப் மெங்கலே Dr.Jesef Mengele) புகழ்பெற்றவர். இவர் யூதர்களை வைத்துப் பல்வேறு பரிசோதனைகளை செய்திருக்கிறார். ப்ரெஷர் சாம்பரின் வைத்து மூடுவது, குழந்தைகளின் கண்களில் ரசாயனங்களை பீய்ச்சி கண்களின் நிறம் மாறுகிறதா என்பதை கவனிப்பது பிய்ந்து போன உடல் பாகங்கை ஒட்ட வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள குழந்தைகளின் கை, கால்களை துண்டித்துப்பார்ப்பது. இன்னும் நிறைய. பரிசோதனை முடிந்ததும் உயிர் இன்னமும் ஒட்டிக்கொண்டிருந்தால் கொன்றுவிட்டு பிரேதத்தை அறுத்துப்பார்க்கும் சோதனை தொடங்கும்.

large.775029762_TwinsGuidoandIna.jpg.32fa0b7c2382addfdc21ab23c0222153.jpg

அவருக்கு குழந்தைகள் மீது தனி பிரியம் இருந்தது. குழந்தைகளை பார்க்க வரும் போது இனிப்பு, பொம்மை வாங்கி வருவார். குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்த ஒரு யூதப் பெண்மணியின் நினைவுக்குறிப்பு இது.

«ஏராளமான இரட்டையர்கள் எனது பொறுப்பில் இருந்தார்கள். கீடோ, இனா என்னும் இரு குழந்தைகளை என்னால் மறக்க முடியாது. நான்கு வயது இரட்டையர்கள். ஒரு நாள் டாக்டர் இருவரையும் அழைத்துச்சென்றார். அவர்களை கொண்டுவந்துவிடும்போது நான் அதிர்ந்துவிட்டேன். இருவரும் மயக்கத்தில் இருந்தனர். இருவரையும் அவர் முதுகோடு முதுகாக வைத்து தைத்திருந்தார். சியாமிஸ் இரட்டையர்களை போல். அவருக்கு இதுவும் ஒரு பரிசோதனை தான். வலியால் அந்த குழந்தைகள் துடித்துக்கொண்டிருந்தன. இரவும் பகலும் ஓயாமல் அழுதுகொண்டிருந்தன. ஒரு நாள் அந்தக் குழந்தைகளின் தாயார்(அவர் பெயர் ஸ்டெல்லா என்று நினைக்கிறேன்) சிறிது மார்ஃபின் எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து உண்ண வைத்து கொன்றார். குழந்தைகளின் வலியை நிறுத்த வேறு மார்க்கம் தெரியவில்லை.

large.199683455_ConcentrationcampDachau.jpg.22c2a98c95034b9aae33a5cc63548676.jpg

ஜேர்மனிய முதலாளிகள் சிலர் யோசித்தனர். நாள்தோறும், வாரம் தோறும், மாதம் தோறும் யூதர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள். உடல்களை என்ன செய்கிறார்கள்? இதை ஏன் ஒரு வியாபாரமாக பார்க்கக்கூடாது? அரசாங்கமே அதை தான் யோசித்துக்கொண்டிருந்தது யூதர்களை கண்டறிவதற்கு ஒரு துறை இருக்கிறது. ஏற்றி வந்து கேம்பில் அடைக்க ஒரு துறை. கொல்ல ஒரு துறை. சடலங்களை என்ன செய்வது? நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் குவியும் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது? தொழிலதிபர்கள் ஆலோசனை கூறினார்கள். மின் தகன மையங்கள் கட்டலாம். செலவு குறைச்சல். சாம்பல் கூட மிஞ்சாது. அரசாங்கம் ஒப்புக்கொண்டுவிட்டது என்றாலும் யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதில் சிக்கல். நிறைய பேர் விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். இறுதியில் டென்டர் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 

கொல்வதற்கு முன்னால் யூதர்களின் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்படும். தங்கப் பல் கட்டியிருக்கிறார்களா என்பதை பார்க்க தனி நபர்கள் இருப்பார்கள். தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்து சுரண்டுவது இவர்கள் வேலை. கைப்பற்றபட்ட உடைமைகள் பயன்படுத்தப்படும் அல்லது மறுசுழற்சி செய்யப்படும்.

யூதர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவோ ஆட்சேபிக்கவோ அங்கே யாருமில்லை. எந்தவொரு அரசியல் தலைவரும் எந்தவொரு சமூக அமைப்பும், எந்வொரு மதகுருவும் யூதர்களைத் தங்களுடன் இணைத்துப் பார்க்கவில்லை. பயம் காரணமாக இருக்கலாம். ஆனால் பயம் மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது. சில கிறிஸ்தவ தேவாலயங்கள், மதம் மாறிய யூதர்களை விட்டுவிடலாமே என்று மெல்ல முணுகின. அதன் பொருள் மதம் மாறாத யூதர்களைக் கொல்வதில் தவறில்லை என்பது தான். கிட்டத்தட்ட எதிர்ப்புகளே இல்லாமல் நடத்தப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பு இதுவாகத்தான் இருக்கும்.

யூதர்களைக் கொல்வதற்கு மிகவும் பேத்தலான காரணங்களையே ஜேர்மனி முன்வைத்தது. யூத இனம் சர்வதேச அளவில் ஒன்று பட்டு சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. தம்மைத் தவிர பிற இன மக்களை அவர்கள் அழிக்கப்போகிறார்கள். ஜேர்மனியை மட்டுமல்ல, உலகையும் கட்டியாள யூதர்கள் விரும்புகிறார்கள். நாம் அவர்களை விட்டுவைத்தால் அவர்கள் நம்மை விட்டுவைக்கமாட்டார்கள். ஆகவே, இனவழிப்பு அவசியமாகிறது. இதை எல்லோரும் நம்பினார்கள் என்பது தான் ஆச்சரியம். முழுக்க முழுக்க கற்பனையும் பைத்தியக்காரத்தனமும் கலந்த காரணத்தைச் சொல்லி நடத்தபட்ட மிகப்பெரிய வன்முறை இதுவே.

குறிப்பிட்ட இனத்தை தேர்ந்தெடுத்து மொத்தமாக அழிக்கவேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு போட்டு இதுவரை இப்படியொரு இனவொழிப்பை நடத்தியது இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ், துறைகளை தனித்தனியே பிரித்து தகுந்த நிர்வாகிகளை நியமித்து ஓர் இனப்படுகொலையை இதுவரை சரித்திரத்தில் எந்தவொரு அரசும் நிகழ்த்தியது கிடையாது.

நாசிகள் எங்கெல்லாம் பரவியிருந்தார்களோ அங்கெல்லாம் யூத அழிப்பு நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 ஐரோப்பிய நாடுகளில் கொலை வெறியாட்டம் நடந்திருந்தது. பெரும்பாலும், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த யூதர்களே அதிகம் கொல்லப்பட்டனர். 1939ல் இங்கே ஏழு மில்லியன் யூதர்கள் இருந்தனர். இவற்றில் ஐந்து மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். போலந்தில் 3 மில்லியன் பேர், நெதர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், யூகோஸ்லாவியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான யூதர்கள் அழிக்கப்பட்டனர். கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக சில பகுதிகளில் யூதர்கள் மதம் மாறிக்கொள்ள அனுமதிக்கபட்டனர்.

1922ம் ஆண்டே ஹிட்லர் மேஜர் ஜோஸப் ஹெல் என்னும் பத்திரிகையாளரிடம் தன் விருப்பத்தைப் பதிவு செய்திருந்தார்.

«எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்துவிட்டால் நான் செய்யும் முதல் வேலை யூத இனஒழிப்பாக இருக்கும். மூனிச்சில் (München) வரிசை வரிசையாக தூக்குமேடைகளை அமைப்பேன். எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு. பிறகு, யூதர்கள் தூக்கில் போடப்படுவார்கள். துர்நாற்றம் வரும்வரை உடல் அங்கேயே தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். சுகாதாரம் அனுமதிக்கும் வரை அங்கேயே தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். பிறகு கயிற்றில் இருந்து விடுவித்து அடுத்த குழுவை தூக்கில் மாட்டுவோம். இப்படியே வரிசையாக தூக்கு தண்டனைகள் விதிக்கப்படும். மூனிச்சில் கடைசி யூதன் இருக்கும் வரை இது தொடரும். பிற நகரங்களும் இதை நடைமுறைப்படுத்தும். ஜேர்மனியில் இனி யூதர்களே கிடையாது என்னும் நிலை ஏற்பட வேண்டும்.

பின்னால், மைன் காஃம்பில் (Mein Kampf) இதுபற்றி விரிவாக சிந்தித்து எழுதினார். இரண்டு பாகங்களாக வெளிவந்தது அந்தப் புத்தகம். முதல் பாகத்தை சிறையில் இருக்கும் போதே முடித்துவிட்டார். இரண்டாவது பாகம், சிறையில் இருந்து வெளிவந்ததும் எழுதப்பட்டது. முதல் பாகம் ஜுலை 1925ல் வெளியானது. இரண்டாவது டிசம்பர் 1926ல். தன் புத்தகத்தின் மீது ஹிட்லருக்கு இருந்த நம்பிக்கை அதைப் பதிப்பித்த ஜேர்மானிய பதிப்பாளருக்கு இல்லை. ஆரம்பத்தில் 500 பிரதிகள் மட்டுமே அச்சிட்டார்கள். இதையெல்லாம் யார் வாங்கி படிக்கப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியில் இருந்த சமயம் (1933–1945) இந்தப் புத்தகம் மூன்று பதிப்புகள் வெளிவந்தன.

இது ஹிட்லரின் முழுமையான தன் வரலாற்று நூல் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஹிட்லரின் வாழ்வில் இருந்து சில அத்தியாயங்களை மட்டுமே இந்நூலின் வாயிலாகத் தெரிந்து கொள்ளமுடியும். இது ஒரு அரசியல் சாசனம். ஹிட்லரின் அரசியல் அறைகூவல். ஹிட்லர் என்னும் தனிமனிதனின் புத்தியில் தோன்றிய சிந்தனை வீச்சுக்கள். கூர்மையான, ஆக்ரோஷமான பல வாதங்களை ஹிட்லர் தன் நூலில் முன்வைத்திருக்கிறார். ஜேர்மனியைப் புரட்டிப்போடும் மாபெரும் மாற்றத்திற்கான விதையை இந்நூலில் தூவியிருப்பதான ஹிட்லர் நினைத்துக்கொண்டார். ஜேர்மனியை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போடும் சக்தி அவர் சிந்தனைகளுக்கு இருந்தன.

யூதர்களுக்கு எதிரான நியூரம்பர்க் சட்டங்கள் (Nuremberg Laws) 1935ல் இயற்றப்பட்டன. அறிவியல்பூர்வமான ஆய்வுக்குப் பிறகே இதை அறிவிக்கிறோம் என்னும் விளக்கமும் கொடுக்கப்பட்டது.

முதலில், ஜேர்மனியன் யார் என்பதை இந்தச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. உங்கள் அப்பா, உங்கள் தாத்தா, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா இந்த நான்கு பேரும் ஜேர்மனியராக இருந்தால் நீங்களும் ஜேர்மானியர் தான். உங்கள் உடலில் உயர்ந்த ஜேர்மன் ரத்தம் ஓடுகிறது என்று அர்த்தம். நான்கு தலைமுறைகள் கூட வேண்டாம், மூன்று தலைமுறையைச் சார்ந்தவர்கள் யூதர்கள் என்றாலும் நீங்களும் ஒரு யூதர்தான். ஒருவேளை உங்கள் தந்தையும் தாத்தாவின் தாத்தாவும் யூதர் என்றால் நீங்கள் Mischling என்று அதாவது கலப்பினத்தவர் என்று அழைக்கபடுவீர்கள். அதாவது உங்கள் உடலில் ஓடுவது கலப்பின ரத்தம்.

ஜேர்மனி என்னும் தேசம் உயிர்த்திருக்கவேண்டுமானால், ஜேர்மன் மக்கள் வளமுடன் வாழவேண்டுமானால் ஜேர்மனிய ரத்தம் என்றும் உயர்வாக இருக்கவேண்டும். இதில் எந்தவிதமான சமரசத்தையும் மக்கள் செய்துகொள்ளக்கூடாது. அரசாங்கம் இதை அனுமதிக்காது. ஆகவே, இந்தச் சட்டம் அவசியமாகிறது.

மொத்தம் நான்கு பகுதிகள்

1.   ஒரு யூதனையோ கலப்பினத்தவனையோ ஒரு ஜேர்மானியன் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். ஒருவேளை வெளிநாடுகளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அந்தத் திருமணம் இங்கே செல்லுபடியாகாது.

2.   யூதர்களிடம் உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

3.   யூதர்கள் 45 வயதுக்கு உட்பட்ட ஜேர்மனிய பெண்களை வீட்டு வேலைக்காவொ பணியாளர்களாகவோ அமர்த்திக்கொள்ளக்கூடாது.

4.   யூதர்கள் ஜேர்மன் தேசியக்கொடியையோ தேசியக்கொடியில் உள்ள வர்ணங்களையோ அரசாங்கச் சின்னமாக பயன்படுத்தக்கூடாது. யூதர்களுக்கு என்று அளிக்கப்பட்டிருக்கும் வர்ணங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தலாம்.

ஒரு வழக்கறிஞராகவோ, மருத்துவராகவோ, பத்திரிகையாளராகவோ ஒரு யூதனால் வளரமுடியாது. வளரவேண்டிய தேவையும் இல்லை. ஏற்கனவே அத்தகைய பொறுப்புக்களை வகித்துக்கொண்டிருப்பவர்களின் வேலை சட்டப்படி பறிக்கப்பட்டது.

இறந்து போன யூதர்களுக்கு அரசாங்கம் அளித்திருந்த அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது, போர்வீரர்களின் கல்லறைகளில் காணப்பட்ட யூதப்பெயர்கள் அழிக்கபட்டன. யூதர்களுக்கு லாட்டரியில் பணம் விழக்கூடாது. அப்படி விழுந்தாலும் பணம் கிடையாது.

யூதர்களுக்கு தனி அடையாள அட்டைகள். ஆண்கள் அனைவருக்கும் நடுப்பெயர் இஸ்ரேல். பெண்களாக இருந்தால் சாரா. வேண்டாம் என்று மறுக்கமுடியாது. உங்கள் பெயர் என்ன என்று யாராவது கேட்டால் புதிய பெயரையும் சேர்த்து முழுவதுமாக சொல்லவேண்டும். தவிரவும் அட்டையின் ஓரத்தில் ஆங்கில எழுத்தான `J` பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இன்னார் யூதர் என்பதில் குழப்பம் வந்துவிடக்கூடாது அல்லவா? பிறகு கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக நட்சத்திரங்களை நாசிகள் பயன்படுத்தினார்கள். மஞ்சள் நட்சத்திரம். எந்த ஆடை அணிந்தாலும் பளிச்சென்று தெரியும் படி இந்த நட்சத்திரத்தை யூதர்கள் அணிந்து செல்ல வேண்டு. அணியாவிட்டால் தண்டனை. (அணிந்தாலும் தண்டனை என்பது வேறு விடயம்)

1933ல் ஐரோப்பாவில் யூதர்களின் எண்ணிக்கை 9 மில்லியன். உலக யூத மக்கள் தொகையான 15 மில்லியனில் 60 சதவீதம் பெரும்பாலானவர்கள் ஜேர்மனிக்கும் ஜேர்மனி பின்னால் ஆக்கிரமிக்கப்போகும் தேசங்களுக்கும் குடிபெயர்ந்து சென்றது சோகம். குறிப்பாக, கிழக்கு ஐரோப்பாவில் யூதர்கள் அதிகம் பரவியிருந்தனர். எங்கே இருந்தாலும் சரி எங்கிருந்து வந்தவர்கள் என்றாலும் சரி. யூதர்கள் என்ற ஒரு காரணம் போதும் என்றார் ஹிட்லர். «The Final Solution» யூத இன அழிப்புக்கு நாசிகள் சூட்டிய பெயர் இது.

போலந்து பகுதிகளில் கெட்டோக்கள் (Chettos) உருவாக்கப்பட்டன. கொன்ஸன்ட்ரேஷன் காம்ஃப் களுக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்னால் யூதர்களை கெட்டோக்களில் தான் கொண்டு வந்து தள்ளுவார்கள். பன்றிகளை அடைத்து வைக்கும் தொழுவமே பரவாயில்லை என்று நினைக்கத்தோன்றும் பகுதி. நெருக்கியடித்துக்கொண்டு இருக்கவேண்டும். நல்ல உணவு, காற்று, உடை எதுவும் கிடையாது. அப்படியும் தாக்குப்பிடித்துக்கொண்டு வாழ்கிறாயா, வா காம்ஃப்க்கு.

நிற்க வைத்து சுட்டுக்கொல்லும் தண்டனை முறையே அதிகம் பயன்படுத்தப்பட்டது. பிரச்சனை எதுவும் இல்லை என்றாலும் நிறைவேற்ற கடினமாக இருந்தது. உச்சுக்கொட்டினார்கள் அதிகாரிகள். பத்து, நூறு என்றால் சுட்டு விடலாம், சிறை நிரம்பி வழிகிறது. பல ஆயிரக்கணக்கான யூதர்கள் அடைந்து கிடக்கிறார்கள். கை வலிக்க வலிக்க எத்தனை பேரைச் சுடமுடியும்? நாள் கணக்கில் சுட்டாலும் ஆயிரத்தை தொடமுடிவதில்லை. ஏதேனும் மாற்று வழி கண்டுபிடியுங்களேன்.

காஸ்? பூச்சிகளை கொல்வது போல் காஸ் அடித்துக் கொன்றால் என்ன? கணக்கு போட்டு பார்த்தார்கள். கொத்துக்கொத்தாய் பிணங்கள் சரியும். நேரமும் அதிகம் ஆகாது. கார்பன் மோனாக்ஸைட் விலையும் குறைச்சல் தான். திட்டத்தை செழுமைப்படுத்தினார்கள். சீர் செய்யப்பட்ட வான். மேலே ஒரு குழாய். அந்த குழாய் வழியாக விஷவாயுவை செலுத்தி மூடிவிடவேண்டும். எத்தனை பேர் முடியுமோ அத்தனை பேரை உள்ளே தள்ளி கதவை தாளிட்டுவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து கதவை திறக்கும்போது, தொப்பென்று பிணங்கள் சாய்ந்து விழும். அப்படியே மண் போட்டு மூடிவிடலாம். 1941ம் ஆண்டு இந்ந கொலைகார வான் அறிமுகம் செய்யப்பட்டது. பரீட்சித்துப்பார்த்தார்கள் திருப்திகரமான தீர்வு.

van2வதை முகாம்கள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டன. இருப்பதிலேயே பெரிய முகாம் ஆஸ்விட்ச் (Auschwitz). ஒன்று, இரண்டு, மூன்று என்று மூன்று தனிப்பிரிவுகள். முதல் பிரிவு மே 1940ல் திறக்கப்பட்டது. இங்குள்ள முகாமில் மொத்தம் 70,000 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் போலந்து மற்றும் சோவியத் கைதிகள். இங்கு அமைக்கபட்டிருந்த அலுவலகம் வதை முகாம்களை நிர்வகிக்க பயன்படுத்தப்பட்டது. இரண்டும் தனித்தனிக் கட்டடங்களில் அமைந்திருந்தன. இரண்டையும் பிரிக்க கம்பி வேலிகள் போடப்பட்டன.

கைதிகள் கடினமான பணிகளை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். சொல்பேச்சு கேட்காதவர்கள் கொடுக்கபட்ட பணிகளைச் செய்யாமல் இருப்பவர்கள், ஒழுங்கீனம் செய்பவர்கள் தனிப்பிரிவில் அடைக்கபட்டனர். இதை சிறைக்குள் சிறை என்று அழைக்கலாம். நிற்கும் அறை என்றொரு இடம் உண்டு. பதினாறு சதுர அடிகள் கொண்ட அறை. இதில் நான்கு பேர் நிற்கவைக்கப்படுவார்கள். பகலில் கடினமான வேலைகளை செய்து முடித்த பிறகு இரவு முழுவதும் தொடர்ச்சியாக இந்த அறையில் நிற்கவேண்டும்.

பாதாள அறையும் உண்டு. கனமான கதவுகளும் ஒரே ஒரு சிறிய ஜன்னலும் கொண்ட சிறிய அறை. உள்ளே அடைக்கப்படுபவர்கள் அறைக்குள் நிறைந்திருக்கும் ஆக்ஸிஜனை சுவாசித்த பிறகு காற்று போதாமல் மூச்சு முட்டி இறக்கவேண்டியது தான். சிலசமயம், வேகமாக மரணம் சம்பவிக்கவேண்டும் என்பதற்காக உள்ளே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிடுவார்கள். இருக்கும் கொஞ்சநஞ்ச ஆக்ஸிஜனையும் அந்த மெழுவர்த்தி உறிஞ்சிவிடும்.

இரண்டாவது அவுஷ்விட்ஸ் பிரிவு (Birkenau) 1941 ல் தொடங்கப்பட்டது. முதல் முகாம் போதாது என்ற நிலையில் இதை ஆரம்பித்தார்கள். இங்கு ஆரம்பிக்கபட்ட முதல் காஸ் சாம்பரின் பெயர் The little red house. காற்று புகாத கடினமான கற்களை கொண்டு அமைக்கப்பட்ட ஒரு சிறு வீடு அது. மேலும் பல சாம்பர்கள் உருவாக்கப்பட்டன. ஆஸ்விட்ச் முதல் பிரிவை விட இது மிகப்பெரியது. கிட்டத்தட்ட பத்து லட்சம் கைதிகள் இந்த முகாமில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் காஸ் சாம்பர் மூலமாக.

large.1447130114_AuschwitzContcentrationcamp.jpg.2c7757f42acf132371ad86e8d9582305.jpg

கைதிகளை வகைப்படுத்தும் முறைக்கு Seleciton என்று பெயர். ஓவ்வொரு நாளும் கும்பல் கும்பலாக கொண்டுவரப்படும் கைதிகளை பிரிக்கும் பணி முதலில் நடக்கும். உடனே கொல்லப்பட வேண்டியவர்களை தனியே பிரித்தெடுப்பது முதல் வேலை. குழந்தைகள், குழந்தைகளுடன் வரும் தாயார், வயதானவர்கள், தேறாது என்று அங்குள்ள மருத்துவர்களால் சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் முதலில் தனியே பிரிக்கப்படுவர். இவர்களைப் பிரிப்பது சுபமானது. அப்படியே தள்ளிக்கொண்டு போய் குழு குழுவாக பிரித்து காஸ் சாம்பருக்குள் தள்ளி கதவை மூடிவிட வேண்டியது தான்.

காஸ் சாம்பர் என்று சொல்லமாட்டார்கள். அதோ அங்குள்ள அறைக்குள் எல்லோரும் செல்லுங்கள். உடைகளை களைந்து விடுங்கள். அங்கு பெரிய ஷவர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முதலில் குளித்துவிடுங்கள்.  உடலில் உள்ள நுண்கிருமிகள் அனைத்தும் சாகவேண்டும். உடைகளை களைந்த பின்னர் கைதிகள் அறைக்குள் அனுமதிக்கப்படுவர். அங்கே போலியான ஷவர்கள் பொருத்தப்பட்டிருக்கும். உடல் கூசியபடி எப்போது தண்ணீர் வரும் என்று நிமிர்ந்து பார்த்தபடி அவர்கள் நின்றிருப்பார்கள். ஜன்னல் கதவுகளில் உள்ள சிறிய துவாரங்கள் திறக்கப்படும். சயனைற் காஸ் வீசப்படும். பிறகு, கதவை திறந்து பிணங்களை மின்சார இடுகாட்டுக்கு கொண்டு செல்வார்கள். ஒரு நாளைக்கு இருபதாயிரம் வரை இங்கே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Zyklon B என்னும் சயனைற் பூச்சிமருந்து பயன்படுத்தப்பட்டது. காற்று புகாத குடுவைகளில் இதை பொதுவாக வைத்திருப்பார்கள். லட்சக்கணக்கில் மனிதர்களை கொல்வதற்கு இதைப் பயன்படுத்தமுடியும் என்பதை முதல் முதலில் கண்டு பிடித்தவர்கள் நாசிகள். செப்ரெம்பர் 1941 ல் முதல் சோதனையை நிகழ்த்தினார்கள். அறுநூறு சோவியத் கைதிகள். இருநூற்று ஐம்பது நோய்வாய்ப்பட்ட போலந்து கைதிகள். ஆஸ்விட்ச் முதல் பிரிவில் இவர்களை அடைத்து சிறிது சிறிதாக காஸ் கொடுத்தார்கள். சுமார் இருபது மணி நேரங்கள் உள்ளே அடைத்து சோதனை நடத்திய பின்னர் கொன்றார்கள்.

காஸ் சாம்பரில் அடைக்கப்படுபவர்கள் இறக்க பொதுவாக, இருபது நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. மற்றபடி, விஷ வாயுக்கு எத்தனை அருகில் நிற்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து நேரம் கூடலாம், குறையலாம். எப்படி இறக்கிறார்கள் என்பதையும் ஜன்னல் வழியாக பார்த்து பதிவு செய்திருக்கிறார்கள். நிறைய கத்துவார்கள். மூச்சுவிட பிரயத்தனப்படுவார்கள். அலறுவார்கள். தோல் பழுப்பு நிறத்துக்கும் சிவப்புக்கும் மாறிவிடும். இடையிடையே பச்சைப் புள்ளிகள் காணப்படும். வாயில் நுரை பொங்கும். காது வழியாக குருதி ஒழுகும்.

ஆஸ்விட்ச் இன் மூன்றாவது பிரிவில் நாற்பதுக்கும் மேற்பட்ட முகாம்கள் இருந்தன. அவற்றுள் பெரியது, Monowitz. மே 1942ல் இது தொடங்கப்பட்டது. மூன்றாவது பிரிவு கொலைக்களம் அல்ல. பணிக்களம். Monowitz முகாமில் 11,000 தொழில் அடிமைகள் பணியாற்றினர். எட்டாயிரம் பேர் சுரங்கங்களில் வேலை செய்தனர். பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளில் சுமார் 7,000 பேர் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒய்வில்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் முதுகு ஒடிய வேலை செய்யவேண்டும். மறுத்தால் அப்போதே இறக்க நேரிடும். இரண்டாவது பிரிவில் இருந்து மருத்துவர்கள் அவ்வப்போது வந்து பார்த்து, பலவீனமடைந்த கைதிகளை காஸ் சாம்பருக்கு கொண்டு போய்விடுவார்கள்.

ஆஸ்விட்ச்சில் இறந்து போனவர்களின் மொத்த எண்ணிக்கையை அறிய முடியாமல் போனதற்கு காரணம் ஆவணங்கள் அனைத்தையும் நாசிகள் எரித்துவிட்டது தான். ஆஸ்விட்ச்சின் கொமாண்ரடான Rudolf Hoess பின்னர் கைது செய்யப் பட்டபோது அவர் அளித்த புள்ளிவிபரம் இது. இரண்டரை மில்லியன் பேர் காஸ் சாம்பரில் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு மில்லியன் பேர் இயற்கையான முறையில் இறந்து போயினர். எப்படியும் இரண்டரை முதல் நான்கு மில்லியன் வரை இங்கே இறந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.

யூத இனவழிப்பை தலைமை தாங்கி நடத்தி வைத்தவர். ஹென்ரிஹ் ஹிம்லர் (Heinrich Luitpold Himmler). SS(Schutzstaffel) என்னும் சிறப்பு காவல் படை மற்றும் Gestapo என்னும் ரகசிய காவல் படையின் தலைவர். லட்சக்கணக்கான யூதர்கள் இவர் மேற்பார்வையின் கீழ் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், மனநலம் குன்றியவர்கள், உடல் கேடு கொண்டவர்கள் போன்றவர்களை வகைப்படுத்தி கொன்றொழிக்கச் செய்தார் ஹிம்லர். மார்ச் 22, 1933 அன்று ஹிம்லர் முதல் வதை முகாமை Dachau என்னும் பகுதியில் தொடங்கிவைத்தவர். ஹோலோகோஸ்டின் வடிவமைப்பாளர் இவரே. நாசிகளின் சித்தாந்தத்தை வடிவமைத்தவரும் இவரே. யூதர்களை போலவே போலந்து மக்களையும் கொல்லவேண்டும் என்று ஹிம்லர் அறிவித்தார்.

இவர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் ஹிம்லர் வெளிப்படையாகவே பல முறை பேசியிருக்கிறார். யூதர்களைக் கொல்வதை பெரிய விஷயமாக எடுக்கவேண்டாம். அவர்களை அழிப்பது எமது கடமை. நம் கட்சியின் கடமை. இதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஜேர்மனியின் முன்னேற்றத்திற்காகவாவது அவர்களை நாம் கொல்லவேண்டும்.

பசியில் வாடுபவர்களுக்கு உணவு கொடு, தாகத்தால் தவிப்பர்களுக்கு நீர் கொடு, ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடு, வீடில்லாதவர்களுக்கு வீடு கொடு. இது போன்ற கருத்துகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நமக்கு ஆரோக்கியமான மக்கள் மட்டுமே வேண்டும். குறைபாடுள்ளவர்களை வைத்துக் கொண்டு மாரடிக்க முடியாது. 1938ம் ஆண்டு கொயபல்ஸ் (Joseph Goebels) இப்படிக் குறிப்பிட்டார்.

Aktion 24 என்றொரு திட்டம் 1939ல் வகுக்கப்பட்டது. புனித ஜேர்மனியின் உருவாக்கத்திற்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் அல்லது ஈடுகொடுக்க முடியாதவர்கள் நீக்கப்படலாம் என்பது இந்தத் திட்டத்தின் பொருள். மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ பாதிக்கபட்ட ஜேர்மன் மற்றும் ஆஸ்திரிய பிரஜைகளை் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, கொல்லப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதால் அர்த்தம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தார்கள். 1939 முதல் 1941 வரை, மனநிலை சரியில்லாதவர்கள் என்று கருதப்பட்ட 80,000 முதல் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.

கம்யூனிஸம், சோஷலிசம் பேசுபவர்கள், ரகசியமாக தொழிற்சங்கம் நடத்துபவர்கள் நாசிகளின் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களைத்தான் முதலில் வதை முகாம்களில் கொண்டு சென்று தள்ளினார்கள். கம்யூனிசம் என்பது யூதர்களின் சித்தாந்தம் என்றார் ஹிட்லர். தொழிற்சங்கவாதிகளும் சோஷலிஸ்டுகளும் யூதர்களுடன் கைகோர்த்து செயற்படுகிறார்கள் என்று எச்சரித்தார்.

சோவியத்தில் 1942ல் Ivangorod என்னும் பகுதியில் இருந்த யூதர்கள் கும்பலாக அழிக்கப்பட்டனர். ஆளுக்கு ஒரு தோட்டா கட்டுப்படியாகாது என்பதால் குழந்தையை முன்னால் நிற்க வைத்து அவருக்குப் பின்னால் குழந்தையின் தாயை நிற்கவைத்து சுட்டார்கள். ஓரே தோட்டாவில் இரண்டு உயிர்கள் பிரிந்தன, சோவியத் போர்க்கைதிகளில் 57 சதவீதம் பேர், அதாவது இரண்டு முதல் மூன்று மில்லியன் பேர் நாசி வதை முகாம்களில் இறந்து போயினர்.

ஜிப்சி வகையைச் சேர்ந்த ஐரோப்பிய ரோமாக்கள் (Romas) சிறைப்பிடிக்கப்பட்டனர். பிடிக்கப்ட்ட அனைவரையும் உடனே கொன்றுவிடவில்லை. கொல்வதற்கு முன்னால் இவர்களிடம் இருந்து எதையாவது பெற்றுக்கொள்வதில் தவறில்லையே. செல்வம் இருந்தால் செல்வத்தை. உடைகள் , பொருட்கள் எது கிடைத்தாலும் அபகரித்துக்கொள். அளிப்பதற்கு ஒன்றுமே இல்லாத பரதேசிகளா, பிடித்து கட்டி வை. வேலை வாங்கு. எதற்கு தண்டத்துக்கு உடலை வளர்த்து வைத்திருக்கிறார்கள்?

சாப்பாடு,உறக்கம், நீர் கிடையாது வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும். இனி முடியாது என்று சோர்ந்து மயங்கி விழும்போது மார்பில் தோட்டா பாயும். பணியில் ஈடுபடும் போதே இறந்துவிடும் ரோமாக்களும் உண்டு. வெடிமருந்து வெடிக்கிறதோ இல்லையா? ஒரு துப்பாக்கியின் திறன் என்ன போன்ற கேள்விகளுக்கு விடை காண ரோமாக்கள் உபயோகப்படுத்தப்பட்டனர்.

Einsatzgruppen என்று ஒரு பிரிவினர் உண்டு. கொலைப்படையினர். ரோந்து சுற்றிக்கொண்டே இருப்பார்கள். வா என்று அழைத்தால் உடனே தோன்றி கொல்ல வேண்டியவர்களைக் கொன்றுவிட்டு அடுத்த காரியம் பார்க்க நகர்ந்துவிடுவார்கள். பல ஆயிரக்கணக்கான ரோமாக்களை இவர்கள் கொன்றொழித்திருக்கிறார்கள். தேசம் முழுவதும் பரவியிருந்த கொன்ஸன்ட்ரேஷன் காம்ஃப் களிலும் ரோமாக்கள் அடைத்து வைக்கப்பட்டு குழுவாக கொல்லப்பட்டனர். போலந்து, நெதர்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, அல்பானியா, யூகோஸ்லாவியா என்று பல்வேறு தேசங்களில் உள்ள ரோமாக்கள் தேடிப்பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். ஐரோப்பிய ரோமா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் ஹோலோக்கோஸ்ட் ஆல் அழிந்து போனது.

பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் டிம்பிளே, பெல்சன் முகாமில் தான் கண்ட காட்சியை விவரிக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் நிலம். கீழே மனித உடல்கள் உயிரிழந்தவர்கள் யார், உயிருடன் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிவது கடினம். சடலத்தின் மீதே சிலர் படுத்துக்கிடந்தனர். சிலரால் நன்றாக பார்க்க முடிந்தது. அசையவும் முடிந்தது. ஆனாலும் ஏதோவொரு பயங்கரத்தைக் கண்ட மிரட்சியில் அவர்கள் அசைவற்று இருந்தனர். இந்த உடல் குவியலுக்கு மத்தியில் அப்போதுதான் பிறந்த குழந்தைகளும் காணக்கிடைக்கின்றன. பிரிட்டன் வீரர் ஒருவரிடம் ஒரு பெண் சத்தம் போட்டு கத்திக்கொண்டிருக்கிறார். என் குழந்தைக்கு கொஞ்சம் பால் கொடுங்கள்! என் குழந்தைக்கு கொஞ்சம் பால் கொடுங்கள்! கையில் ஒரு பொட்டலத்தை ஏந்திக்கொண்டிருந்தார் அவர். அந்த அதிகாரி கையை நீட்டி பெற்றுக்கொண்டார். துணியை விலக்கிப் பார்த்தபோது துரும்பு போல் ஒரு குழந்தை சுருண்டு கிடந்தது. இறந்து சில தினங்களாவது ஆகியிருக்கும்.

செப்ரெம்பர் 29 மற்றும் 30,1941. இந்த இரு தினங்களில் மட்டும் கிழக்கு போலந்திலும் சோவியத்யூனியனிலும் நாசிகள் கொன்றொழித்த யூதர்களின் எண்ணிக்கை 33,771. உக்கிரேனின் தலைநகரமான கீவில் நடந்த படுகொலையின்போது தப்பிப்பிழைத்த Dina Pronicheva என்னும் யூதப் பெண்ணின் வாக்குமூலம் இது.

«வரிசையில் நிற்கவைத்து ஒவ்வொருவரையாகச் சுட்டு, குழியில் தள்ளிக்கொண்டிருந்தார்கள். மிகப்பெரிய குழி அது. என்னுடைய முறை இதோ வந்துவிடும். எனக்கு நடுக்கம் பிறந்துவிட்டது. கை, கால்கள் ஆட ஆரம்பித்துவிட்டன. சட்டென்று ஏதோ தோன்ற குழிக்குள் விழுந்துவிட்டேன். குண்டடிபட்டு சாவதற்கு பதில் குழிக்குள் விழுந்து உயிரைவிடலாம். ஆனால் நான் இறக்கவில்லை. கீழே இருந்த சடலங்களின் மீது பத்திரமாக வந்து விழுந்தேன். அச்சத்தால் கண்களை மூடிக்கொண்டேன். என் மீது புதிதாக சில உடல்கள் வந்து விழுந்தன. உடலகளுக்கு மத்தியில் புதைக்கப்ட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் மேலும் பலர் வந்து விழுந்தனர். பெரும்பாலானோர் குழிக்குள் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். சிலர் முனகிக்கொண்டிருந்தனர். சிலருக்கு விக்கல். சிலர் சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தனர். பிறகு, நாசிகள் குழிக்குள் டார்ச் லைட் அடித்து அசையும் உடல்களை சுட ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் கழித்து குழிக்குள் மண்ணை தள்ள ஆரம்பித்தனர். மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். என் மீதே மண் வந்து விழுந்தது. தலை, முகம், கை, கால் முழுவதும் மண். இமைகளைப் பிரிக்கமுடியவில்லை. ஓரே இருட்டு. எத்தனை நேரம் அப்படியே கிடந்தேன் என்று நினைக்கவில்லை. பிறகு மெல்ல மெல்ல அசைந்து, போராடி குழியில் இருந்து மீண்டு வெளியில் வந்தேன்.»

ஒரு சமயம் லித்துவேனியாவில் உள்ள கோவ்னோ என்னும் பகுதியில் ஜேர்மானியர்கள் யூதர்களைத் தேடி வேட்டையாடிக்கொண்டிருந்தார். அவர்களிடம் இருந்து எப்படியாவது தன் மகனை மீட்டுவிடவேண்டும் என்று ஒரு தாய் ஓடோடி மறைவிடம் ஒன்றில் பதுங்கிக் கொண்டார். திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. வீரர்கள் அந்த மறைவிடத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். அழுகையைக் கட்டுப்படுத்த என்ன செய்வதென்று அந்த தாய்க்கு தெரியவில்லை. குழந்தையின் வாயில் கையை வைத்து அழுத்தினார். வீரர்கள் முற்றிலுமாக அகலும் வரை கையை எடுக்கவேயில்லை. சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவர் குழந்தையை விடுவித்தார். ஆனால், குழந்தை எப்போதோ இறந்துபோயிருந்தது.

வதை முகாமில் இருந்து மீட்கப்பட்ட போலந்து சிறுமி தெரஸாவிடம் பின்னர் பேச்சுக்கொடுத்து பார்த்தார்கள்.

எப்படி இருக்கிறாய்?”

பயத்துடன் நிமிர்ந்து பார்த்த தெரஸா, ஒரு வார்த்தையும் பேசாமல் தன்னுள் ஒடுங்கிக்கொண்டாள்.சரியா?

பதிலில்லை.

சரி, இந்தா சாக்பீஸ். பலகையில் ஏதாவது படம் வரை பார்க்கலாம்.

கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள் தெரஸா. கண்கள் முழுவதும் அதிர்ச்சி. பிரயத்தனப்பட்டுத்தான் எழுப்பி நிற்க வைத்தார்கள். பயப்படவேண்டாம் என்று மேலும் ஒரு முறை சொன்னதும் கரும்பலகை நோக்கி நடந்தாள் தெரஸா. கையில் சாக்பீஸோடு குழம்பி நின்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் வரைந்து முடித்துவிட்டு மீ்ண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டாள். தெரஸா. பலகையைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். குழப்பமான பல்வேறு வட்டங்கள். கோணல், மாணலாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் கோடுகள். சில நிமிடங்கள் கழிந்த பிறகு தான் புரிந்தது அவள் அறிந்த வீடு அது தான். அது மட்டும் தான். அவை கோடுகள் அல்ல. கம்பிகள். முட்கம்பிகள்.

நூல் :  இரண்டாம் உலகப்போர் 

 இது பற்றிய முன்னைய ஒரு பதிவின் இணைப்பு

நாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள் - உலக நடப்பு - கருத்துக்களம் (yarl.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனப்படுகொலையை முடிந்து  வாழும் இனப்படுகொலை எனலாம்.

கொங்கோவில் பெல்ஜியம் செய்தது, இறந்த இனப்படுகொலை (10 மில்லியன்). கைவெட்டு, கால் வெட்டு, கண் பிடுங்குதல், பிறப்புறுப்பு அறுப்பு இவைகள் மட்டுமல்ல அந்த அந்த நேரத்தில் விரும்புயது செய்யப்பட்டு தண்டனையாக அழுக விடப்பட்டது. 

சொல்லி மாளாது. 

மேற்கு நாடுகள் மறைத்து விட்டன. 

https://www.theguardian.com/theguardian/1999/may/13/features11.g22

ஹிட்லர் கருணையுள்ளவரா அல்லது  ஹிம்லேர் வினைத்திறன் குறைந்தவரா கொல்வதில்?

ஹிம்மலர் பல்வேறு பரிசோதனைகளுயும் செய்தவர் எப்படி குறைந்த நேரத்தில், கூடிய வலியுடன் கொல்வது என்று.  

அதில் ஒன்று, தலைகீழாக தொங்கவிட்டு, இரத்தம் தலைப்பகுதியில் தேங்கிய பின், தலை உச்சியில் கூரிய ஆயுதத்தால் (வாள் போன்ற) குத்துவது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு.

யூதர் உட்பட்ட மக்களை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து நுணுக்கமான முறைகளால் கொன்ற வரலாறு பல நூல்களில் பதியப் பட்டிருக்கிறது. இந்த திரி சம்பந்தப் பட்டிருப்பதால் இது தொடர்பான எனக்குத் தெரிந்த இரண்டு நூல்களை ஆர்வமுள்ளோருக்காக பெயரிடுகிறேன்:

Ken Follet இன் Winter of the World : இது வரலாற்று நாவல் வடிவில் உண்மைச் சம்பவங்கள்/இடங்கள்/பெயர்களை வைத்து எழுதப் பட்டிருப்பதால் ஆர்வத்துடன் வாசிக்கக் கூடிய ஒரு புத்தகம். Ken Follet இன் பல நூல்கள் இப்படிப்பட்டவை.

51We-mp8dHL._SX326_BO1,204,203,200_.jpg

 

Bloodlands: Europe Between Hitler and Stalin by Timothy Snyder: இது ஹிற்லர் மட்டுமன்றி ஸ்ராலினும் எப்படி மில்லியன் கணக்கான சாதாரண மக்களைப் பலிகொண்டனர் என விவரிக்கும் புனைவல்லாத நூல். உங்கள் சொந்த நூலகத்தில் வைத்திருக்க கூடிய வரலாற்று நூல்.

51QEj3YyixL._SX329_BO1,204,203,200_.jpg

நன்றி: புத்தக முகப்புகள் அமேசன் தளத்திலிருந்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.