Jump to content

அமெரிக்க சனநாயகம் பிரத்தியேகமானதா? அண்மைய நாடாளுமன்றக் கலவரம் கூறும் செய்தி என்ன? – தமிழில் ஜெயந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சனநாயகம் பிரத்தியேகமானதா? அண்மைய நாடாளுமன்றக் கலவரம் கூறும் செய்தி என்ன? – தமிழில் ஜெயந்திரன்

Capture-6-696x466.jpg
 46 Views

அமெரிக்கத் தேர்தலின் பின்னர் மாநிலங்கள் ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் செலுத்திய வாக்கை எண்ணி, ஜோ பைடனே ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு தற்போது துணை அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் மைக் பென்ஸ் (Mike Pence) ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்க காங்கிரசின் இரண்டு சபைகளையும் கூட்டினார். வழமையாக இந்த நிகழ்வு மிக எளிமையான ஒரு நிகழ்வாகவும் ஒரு மணித்தியாலத்தில் நடந்து முடிகின்ற முழுக்க முழுக்கச் சம்பிரதாயபூர்வமான ஒரு நடைமுறையாகவுமே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை அப்படி வழமையானதொரு நிகழ்வாக அது அமையவில்லை.

முதலாவதாகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலர், ட்ரம்பைத் தொடர்ந்து அதிபராக வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு, அதிர்ச்சியூட்டத்தக்க விதத்தில் தேர்தலின் பின் தெரிவு செய்யப்பட்ட பிரதநிதிகளால் செலுத்தப்பட்ட வாக்குகள் தொடர்பாக தமது எதிர்ப்புகளை வெளியிட்டு, இந்த நடைமுறை ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டு போகச் செய்தார்கள். பின்னர், அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திருக்காத விதத்தில் தேர்தலின் முடிவுகளைத் தலைகீழாக மாற்றியமைக்கும் நோக்குடன் ஆயிரக்கணக்கான ட்ரம்புக்குச் சார்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் கப்பிற்றல் ஹில் (Capitol Hill) என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு அதனைத் தம்வசம் வைத்திருந்தார்கள். ‘அமெரிக்காவின் புகழை மீண்டும் நிலைநாட்டுங்கள்” என்ற சுலோகத்தைக் குறிக்கும் (Make America Great Again)  `MAGA’  என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து கொண்டு, ட்ரம்பின் பெயர் பொறித்த கொடிகளைப் பிடித்துக்கொண்டு, நாடாளுமன்றத்தின் பணிமனைகளை அடித்து உடைத்து நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் கட்டடத்துக்குள் நுழைந்தார்கள். அவ்வேளையில் நாடாளுமன்றத்தில் அவதானிப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பைத் தேடுமாறு அவ்வேளையில் அங்கிருந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பணிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் தலைநகரான வோஷிங்டன் டி.சி யின் நகர பிதாவான (May) மியூரியெல் பவ்சர் (Muriel Bowser) உடனடியாகத் தலைநகரில் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கியதுடன் அங்கு இரண்டு வாரங்களுக்கு அவசரகால நிலையையும் பிரகடனம் செய்தார்.

அமெரிக்க சனநாயகத்தின் மையமாக விளங்குகின்ற நாடாளுமன்றக் கட்டடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கலவரம் தொடர்பான படங்கள் தொலைக்காட்சித் திரைகளையும் சமூக வலைத்தளங்களையும் நிரப்பத் தொடங்க, அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் வாழும் பல மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இன்னொரு வகையில் பார்க்கப்போனால் இந்நிகழ்வுகள் அதிர்ச்சிக்குரியவை அல்ல என்ற விடயத்தையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்த வரையில், அவர் எந்தவொரு அடிப்படையுமின்றித் தேர்தலில் பரவலாக மோசடிகள் நடைபெற்றதாகவும் ‘அதிபர் பதவி தன்னிடமிருந்து களவாடப்பட்டு விட்டது” என்றும் கதை சொல்லி, மிகவும் அமைதியாக நடைபெறுகின்ற அதிகார மாற்றத்தை வன்முறைகள் மூலம் தடுத்து நிறுத்த தனது ஆதரவாளர்களைத் தூண்டிக்கொண்டிருந்தார். தன்னைப் பதவியில் வைத்திருப்பதற்காக அரசியலமைப்பின் சட்டதிட்டங்களை அலட்சியப்படுத்தும்படி தனது அதிகாரிகள் மேலும் குறிப்பாக துணை அதிபர் பென்சின் மேலும் வெளிப்படையாகவே அவர் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். இது மட்டுமன்றி ஜோர்ஜியா மாநிலத்தின் அரச செயலராகப் பணியாற்றுகின்ற பிரட் றவ்வென்ஸ்பேர்கர் (Brad Raffensperger) என்பவருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அந்த மாநிலத்தை வெல்வதற்குத் தனக்குத் தேவையான வாக்குகளைத் தேடிக்கண்டுபிடிக்கும் படியாகவும் அவரைக் கேட்டிருக்கிறார்.

வோஷிங்ரன் டி.சியில் இந்தக் கலவரம் நடைபெறுவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் 70 நிமிடங்கள் தொடர்ந்து ஆற்றிய உரையின் போது, நடைபெற்ற தேர்தலின் முடிவை ‘எமது சனநாயகத்துக்கு விழுந்த பலத்த அடி” என விபரித்ததோடு, ‘நாடாளுமன்றத்துக்கு நடந்து செல்லுங்கள்” ‘பலவீனமாக இருந்து கொண்டு எமது நாட்டை நாங்கள் மீளவும் எமதாக்க முடியாது” என்று மிகவும் வெளிப்படையாகவே ட்ரம்ப் தனது ஆதரவாளர்களைக் கேட்டிருந்தார்.

புதன்கிழமை நடைபெற்று முடிந்த கலவரத்துக்குத் தனியே ட்ரம்ப் மட்டுமே பொறுப்பு என்று சொல்லிவிட முடியாது. குடியரசுக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அதிகாரிகள் பலரும், பழமைவாதக் கொள்கையுள்ள ஊடகவியலாளர்களும் ஆயிரக்கணக்கான ட்ரம்பின் ஆதரவாளர்கள் ‘தேர்தல் தங்களிடமிருந்து களவாடப்பட்டு விட்டது” என்ற விடயத்தை முழுமையாக நம்புவதற்குக் காரணமானவர்களாக இருந்திருக்கிறார்கள். தமது கொள்கை மேல் கொண்டிருந்த பற்றின் காரணமாகவோ, மிகக் குறுகிய நோக்குள்ள அரசியல் நடைமுறைத்தன்மை காரணமாகவோ அல்லது வெறும் கட்சியின் நலனை நோக்காகக் கொண்டோ வன்முறையில் ஈடுபடத் தனது ஆதரவாளர்களை ட்ரம்ப் தூண்டி விடவும் அமெரிக்க அரசியலமைப்பை அவர் அவமதித்து தேர்தல் நடைமுறையைக் கேலிக்கூத்தாக்க அவர்கள் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

பல மில்லியன் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்கள், தமக்குத் தந்துகொண்டிருக்கின்ற ஆதரவை இழந்துவிடக் கூடும் எனப்பயந்து, குடியரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் பலர் கடைசி நிமிடம் வரை தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றியமைக்க ட்ரம்ப் எடுத்த சட்டவிரோத முயற்சிகளைக் கண்டிப்பதற்குத் தவறியிருக்கிறார்கள். அதே நேரம் இன்னும் பலர் அதிபர் ட்ரம்பின் முயற்சிகள் விரைவில் சக்தியிழந்துவிடும் என்று சொல்லிக்கொண்டு ட்ரம்பின் முயற்சிகளை அலட்சியப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதற்கிடையில் வலதுசாரிகளின் தீவிரவாதம் மிகப்பலமான ஒரு நிலையை எட்டியிருக்கிறது.

இப்போது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பும் பைடனின் வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அரசியற் கொள்கையின் இருபக்கங்களையும் சார்ந்த அரசியல்வாதிகள் ட்ரம்பின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே கண்டித்திருப்பதோடு புதிய நிர்வாகமும் நாடும் எதிர்நோக்கியிருக்கும் சவால்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ‘வெளிநாட்டவர்களை வெறுப்புடன் பார்த்துப் பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடிய முறையில் உரையாற்றி வந்த ட்ரம்பின் செயற்பாடுகள் இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன்?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தேர்தலைத் தொடர்ந்து வந்த வாரங்களிலும் அவர் அதிபராகப் பணியாற்றிய காலம் முழுவதும் சட்டத்தின் ஆட்சியையும் அதிகார வரம்புகளையும் அவமதிக்க ட்ரம்ப் ஏன் அனுமதிக்கப்பட்டார்? வெள்ளை இனமே உயர்ந்தது என்று எண்ணுவோருக்கும் இனவாதிகள், வன்முறையை ஏற்படுத்தும் பாசிசவாதிகள், போன்றோரையும் உசுப்பேத்தி விடும் வகையில் ட்ரம்ப் பேசியது  அலட்சியம் செய்யப்பட்டது ஏன்? மிகவும் பகிரங்கமாகவே ட்ரம்பாலும் அவரது ஆதரவாளர்களாலும் தூண்;டப்பட்டு, புதன்கிழமை நடைபெற்ற கிளர்ச்சியைத் தடுக்க அமெரிக்க அரசு தவறியது ஏன்?

இவ்வாறான ஒரு வன்முறையை எதிர்கொள்ள ஊடகங்கள் கூட ஆயத்தமாக இருக்கவில்லை. பல வகைகளில,; பல மாதங்களாக, வெளிப்படையாகவே ஒரு சதிப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஆயத்தங்களை ட்ரம்ப் செய்துகொண்டிருந்தார். ‘களவாடுவதை நிறுத்துங்கள்” என்று கோசமிட்டுக்கொண்டு தமது துப்பாக்கிகளைத்         தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கணக்கானோர் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். உண்மையில் அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்வு, இலத்தீன் அமெரிக்காவிலோ, தென் ஐரோப்பாவிலோ அல்லது கிழக்கு ஐரோப்பாவிலோ அல்லது ஆபிரிக்காவிலோ அல்லது உலகின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் நடைபெற்றிருந்தால், அமெரிக்க ஊடக நிறுவனங்கள் தமது செய்தியாளர் குழுக்களை அவசரம் அவசரமாக சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத்துக்கு அனுப்பித் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக நிலவுகின்ற உறுதியற்ற தன்மைகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஏராளமான செய்தியறிக்கைகளை வெளியிட்டிருக்கும். அமெரிக்காவில் அப்படி நடைபெறவில்லையே. அதற்கான காரணம் என்ன?

அமெரிக்க சனநாயகம் மிகப் பலமாக இருப்பதன் காரணமாக அது தோல்வியடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்ற எண்ணமே இதற்கான ஒரு காரணமாகும். அமெரிக்காவின் பிரத்தியேகத் தன்மையையும் ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் உள்ள சுயாதீன நிறுவனங்கள் உயர்ந்தவை என்ற எண்ணம் என்பவற்றை இணைத்துப் பார்க்கும் போது, அமெரிக்காவின் தற்போதையை நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

பேர்லின் சுவர், சோவியத் ஒன்றியம் ஆகியவை வீழ்ச்சியடைந்ததன் பின்னர், அமெரிக்க சனநாயகமும் அமெரிக்க நிறுவனங்களும் என்றுமே ‘வெற்றிகொள்ளப்பட முடியாதவை” என்ற குறுகிய எண்ணம் பலமாகத் தொடங்கியது. பலரது பார்வையில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து சனநாயகம் வெற்றிகொண்டிருக்கிறது என்றும் இதற்கு மேலாக வரலாற்றில் எதுவும் உருவாகப் போவதில்லை என்ற சிந்தனையும் உருவாகத் தொடங்கியது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தமது பிரதிநிதிகள் அதி தீவிர தேசியவாதத்தையும் வன்முறைமிக்க வலதுசாரித் தீவிரவாதத்தையும் தமது அரசியல் ஆதாயத்துக்காக ஊக்குவிக்கும் ஒரு காலப்பகுதியில், ‘தமது சனநாயகம் என்றுமே தோல்வியடைய முடியாதபடி மிகவும் பலமாக இருக்கின்றது” என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களுக்கும் (மேற்குலகைச் சேர்ந்த அனைவருக்கும்) இந்த நாள் ஆழ்ந்த சிந்தித்துப்பார்க்க வேண்டிய ஒரு நாளாகும். தமது நாடு ஒரு விதிவிலக்கு என்று இன்றும் பார்ப்பதை விடுத்து, தமது நாட்டின் அண்மைய வரலாற்றையும் ஏனைய நாடுகளின் வரலாற்றையும் உற்றுநோக்கி, பாசிசச் செயற்பாடுகளையும் சனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளையும் பொறுத்துக் கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஐரோப்பாவில் இருந்த பழமைவாதக் கொள்கையுடையோர் அதிதீவிர தேசியவாதத்தையும் வன்முறைச் செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகக் கருதினார்கள். பாசிசத்தைப் பயன்படுத்திக்கொண்டே சமகாலத்தில் தமது நாடுகளின் சனநாயகத் தன்மையையும் பேணிப்பாதுகாக்கலாம் என்றும் அவர்கள் எண்ணினார்கள். இதன் விளைவாக, ஐரோப்பாவின் பல நாடுகளை பாசிசக் கொள்கையுடைய சர்வாதிகாரிகள் ஆளுகின்ற நிலை ஏற்பட்டது, வலதுசாரித் தீவிரவாதப் போக்குடையோரின் வன்முறைக்கு ஆளாக நேரிட்டது, அல்லது சர்வாதிகார அரசுகளை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இருபதாம் நூற்றாண்டைப் பின்னோக்கிப் பார்க்கும் போது, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை, சர்வாதிகாரிகளும் பாசிசவாதிகளும் தேர்தல்கள் மூலமாக சட்டபூர்வமாகவே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்கள் நிறுவனங்களைப் படிப்படியாக அழித்து, சட்டத்தின் ஆட்சியை அவமதித்ததோடு தமது ஆட்சிக்காலத்தில் தமக்கு எதிராகக் குரல் கொடுப்போரை இல்லாதொழிக்கத் தொடங்கினார்கள். இப்படிப்பட்ட விடயங்கள் பல ஆண்டுகளுக்கு மட்டுமல்ல பல தசாப்தங்களுக்கும் தொடர்ந்ததே வரலாறு. சர்வாதிகார ஆட்சிகள் மேற்கொள்ளப்பட்ட இக்காலப் பகுதிகள் சனநாயக ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளாகவோ அன்றேல் அவற்றின் வீழ்ச்சியாகவோ பார்க்கப்பட்டன.

இங்கே கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதே வேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து போலந்து வரை உள்ள மேற்குலக நாடுகளிலும் இன்று அமெரிக்காவிலும் சனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியையே இது பிரதிபலிக்கின்றது. வலதுசாரித் தீவிரவாதம,; பொது அரசியல் நீரோட்டத்தில் பலமாகும் வேளையில் அறிவு சார்ந்து சிந்திக்காது மக்களின் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் தீனிபோடுகின்ற தலைவர்கள் ஆண்டாண்டு காலமாக அரசியல் நிறுவனங்களை அவமதிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமது நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள காயங்களைக் குணமாக்கி, தமது சனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அமெரிக்காவின் புதிய தலைவர்கள் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவின் ‘பிரத்தியேகத்தன்மையைக்” கைவிட்டு, தமது சக அரசியல்வாதிகள் மேற்கொள்ளுகின்ற சனநாயகத்துக்கு விரோதமான, பாசிச செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் சனநாயக நெருக்கடிகளைச் சந்தித்த நாடுகளின் வரலாற்றிலிருந்து இன்னொரு பாடத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது ~ட்ரம்பிசம்~ போன்ற ஆபத்தான அரசியல் கொள்கைகள், தேர்தல்களிலும் நீதிமன்றங்களிலும் தோற்கடிக்கப்பட்டாலும் கூட, இரவோடிரவாக மறைந்துவிடப் போவதில்லை.

உதாரணமாக பேர்லுஸ்கோணியின் கொள்கையை (Berlusconism) நாம் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலியின் ஊடகத் துறையில் கொடிகட்டிப் பறந்தவரும் அந்த நாட்டின் முன்னாள் பிரதமருமான பேர்லுஸ்கோணி, தான் அதிகாரத்தில் இருந்த ஒன்பது ஆண்டுகாலப் பகுதியில் பிரதிநிதித்துவ முறையை அவமதிக்கும் வகையில் செயற்பட்டு, நீதிநிர்வாக நடைமுறைகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி ஊழலைச் சாதாரண நடைமுறையாக்கி முறையாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒருவராகவே செயற்பட்டார்.

ஒரு ஐரோப்பிய சனநாயக நாட்டை ஆளுவதற்குப் பொருத்தமற்ற, அடிக்கடி பாலியல் விவகாரங்களிலும் ஊழல்களிலும் சிக்குப்படுகின்ற, நடத்தைப்பிறழ்வைக் கொண்ட ஒருவரே பேர்லுஸ்கோணி என்று சொல்லப்பட்டாலும், 2011இல் தனது பதவியைத் துறக்கும் வரை இரண்டு தசாப்த காலமாக இத்தாலிய அரசியலில் அவர் முன்னணி வகிப்பவராகவே இருந்தார். இத்தாலிய அரசியலின் தலைமைப் பதவியிலிருந்து அவர் வெளியேறி இருந்தாலும் அது அவரது கொள்கையின் முடிவாகப் பார்க்கப்படவில்லை. அதிகாரத்துக்கு மீண்டும் திரும்புவதற்கு தொடர்ந்து அவர் முயற்சி எடுத்தது மட்டுமன்றி, இத்தாலிய ஊடகங்களுக்கும் அரசியலுக்கும் அவர் அறிமுகம் செய்த, சாதாரண மக்களைத் திருப்திப்படுத்துகின்ற அணுகுமுறையும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியவாதமும் புதிய பாசிசமும் இன்று வரைக்கும் இத்தாலிய அரசியலை ஆட்டிப்படைப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஊடகங்களிலும் அரசியலிலும் தொடரும் அவரது பிரசன்னமும் மத்தேயோ சல்வீனி (Matteo Salvini) போன்ற அதீத வலதுசாரிக் கொள்கையுடையவர்களின் பிரபல்யமும் பேர்லுஸ்கோணியின் கொள்கைகள் இத்தாலியில் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

இதே நிலைமை அமெரிக்காவில் ட்ரம்பின் கொள்கையைப் பின்பற்றுபவர்களுக்கும் ஏற்படலாம். வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் இறுதியாக வெளியேற்றப்பட்டாலும், அமெரிக்காவில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது தள்ளி வைக்கப்பட்டிருந்த நடத்தைகளை அங்கீகரித்ததன் மூலம் அவர் விளைவித்திருக்கும் சேதம் எதிர்வரும் காலங்களில் சனநாயகத்தைச் சீர்;செய்ய முன்னெடுக்கப்படவிருக்கின்ற குணமாக்கும் செயற்பாடுகளுக்கு தொடந்தும் முட்டுக்கட்டைகளைப் போடப்போகின்றது.

ஆகவே, சுருங்கச் சொல்வதாயின், அமெரிக்கா எந்த விதிக்கும் விதிவிலக்கல்ல. தோல்வியடைய முடியாதபடி அமெரிக்க சனநாயகம் எவ்விதத்திலும் பலமானதல்ல. அதிபர் ட்ரம்பின் கொள்கைகள் தொடரத்தான் போகின்றன. புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஜோ பைடன் சொல்வதைப் போன்று ‘மீண்டும் சிறப்பான விதத்தில் அமெரிக்காவைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின”; இந்த யதார்த்தபூர்வமான உண்மைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

 

நன்றி: அல்ஜசீரா

 

https://www.ilakku.org/?p=39442

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.