Jump to content

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள்

92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் 

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே  இது. 

இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார். 

பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த இவர் தற்போது ஒரு மாட்டை தானே பராமரித்து வருகிறார். இப்போது அவரது விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மகள் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றார்.  

தான் இன்றும் தன் அன்றாட கருமங்களை தானே பார்த்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு அன்றைய உணவுப் பழக்க வழக்கங்களே காரணம் என சொல்கிறார். எங்களோடு கதைத்துக் கொண்டிருக்கும் போதே மாட்டுக்கு புல்லுப் புடுங்க போக நேரமாகுது என ஆயத்தமாகிறார்.

அன்றைய கால உணவுப்பழக்கங்களையும் ஒரு வித சிலிர்ப்போடு எம்மோடு பகிர்ந்து  கொண்டார்.

அன்றைய காலங்களில் சாமி, குரக்கனை வருடாந்தோறும் தவறாமல் பயிரிட்டு வருவோம். அதனை காயவைத்து பக்குவமாக உரலில் தான் குத்துவோம். பின் தானியங்களை ஒரு வருடத்துக்கு கூடைகளில் போட்டு பாதுகாத்து அதனையே நாளாந்தம் சாப்பிட்டு வருவோம். அன்று செல்வாக்குள்ளவை தான் அரிசி வாங்கி சாப்பிடுவார்கள். 

முருங்கை இலைக்கறி, கஞ்சி அல்லது ஒடியல் கூழ் தான் பகல் சாப்பாடு, மரவள்ளிக்கிழங்கு என்றால் பலாலி தான் பேமஸ். கொவ்வை, குறிஞ்சா இலைகளை போட்ட குரக்கன் கூழும் நன்றாக இருக்கும். 

அன்றைய காலத்தில் காலை சாப்பாடு தினைச்சாமி கஞ்சி அல்லது பழஞ்சோறு, பழந்தண்ணீர் தான். 


அன்று பயிர்களுக்கு தண்ணீர் வழங்கும் துலா, பட்டை  இறைப்பு முறைகள் குறித்தும் விளக்குகிறார். ஒரு முறை இறைக்கவே மூன்று / நான்கு பேர் தேவை. விவசாயிகள் அன்று ஒருவருக்கொருவர் உதவி செய்து எவ்வாறு விவசாய கூலிகளை இயன்றளவு குறைத்து தாங்களே கூட்டாக எவ்வாறு இணைந்து வாழ்ந்தோம் என்றும் சொல்கிறார். 

வெறும் தோட்டக் காணிகளில் ஒரு பக்கத்தில் தொட்டிலில் மாடுகளும், அருகே அட்டாளையில் ஆடுகளும் கட்டப்பட்டிருக்கும். தொட்டிலை தோட்டக்காணியில் மாற்றி மாற்றி மாடுகளை கட்டுவோம். மாற்றும் போது ஏற்கனவே கட்டிய இடத்தை கொத்தி விடுவோம். அன்றிருந்த ஊர் மாடுகளின் பாலும் தரமாக தான் இருக்கும். 

சித்திரை 28 க்கு தினை தானியத்தை விதைத்து நாற்றுமேடை போட்டு விடுவோம். 21 ஆம் நாளில் பிடுங்கி கலப்பையால் உழுத தோட்டத்தில்  நடுவோம். மூன்று மாதத்தில் அறுவடை செய்து விடுவோம். 

சிறுதானியங்கள், பாகல், வெங்காயம், மிளகாய் என்று அந்ததந்த  போகத்துக்கு ஏற்றவாறு மாறிமாறி பயிர்களை நாட்டுவோம். மலை ஆமணக்கு, பூவரசு, வேம்பு போன்றவற்றின் இலை, தழைகளையும், மண்வீட்டுக் கூரையின் பழைய ஓலைகள், வெட்டிய பனை ஓலைகளையும் தாழ்த்து தான் இந்தப் பயிர்களையும் நடுவோம். 

பனை ஓலை தாழ்ப்பித்து தான் பாகலைப்  பயிரிடுவோம். இலந்தை கொப்புக்களை கட்டி அதன் மேல் படர  விடுவோம். பாகல் காயை பேப்பரால் சுற்றி காய்களை தாக்கும் பழ ஈக்களில் இருந்து காப்பாற்றுவோம். தோட்டத்தோடு தான் எப்போதும் இருப்போம். 

தோட்டத்தில் விளைந்த மரக்கறிகளை தலையில் சுமந்து கொண்டு தான் சுன்னாகம் போவோம். சிலர் சைக்கிளிலும்  போவார்கள்.

றோயல் டிஸ்பென்சரி என்று யாழ்ப்பாணத்தில இருந்தது. அவை தான் எங்களுக்கு கொண்டு வந்து பொலுடோலை அறிமுகப்படுத்தினர். அதை விசிற புழு, பூச்சிகளும் சாகும். அதனை சாப்பிடுகின்ற பறவைகளும் இறக்கும். இப்போது பல மருந்துகள் விவசாயத்தில் வந்துவிட்டது. மனிதனைத் தாக்கும் நோய்களும் கூடி விட்டது.     

அன்று பயிர்களுக்கு மாட்டு சாணமும், ஆட்டு புழுக்கைகளும் தான் பசளை. பிறகு செயற்கை உரம் வந்ததும் இரவிரவாக ஒழிச்சு தான்  போடுவினம்.   என்று தன் அன்றைய தற்சார்பு வாழ்வையும் பின் எவ்வாறு இரசாயனங்களுக்கு எம் விவசாயிகள் மாறினர் என்பதையும் விளக்கியுள்ளார். @Nimirvu

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.