Jump to content

வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..! - கழுகார் அப்டேட்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...

``பொங்கல் வாழ்த்துகள்... ஊருக்குக் கிளம்பிவிட்டேன். தகவல்கள் வாட்ஸ்அப்பில் வந்துசேரும்” என்று சொல்லிவிட்டு கழுகார் கிளம்பிய சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தன தகவல்கள்!

``மூணு மாசத்துல நம்ம ஆட்சிதான்!”
வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்பு வட்டாரம்...

தி.மு.க-வின் வாரிசு பிரமுகருக்கு நட்பு வட்டாரம் அதிகம். சமீபகாலமாக வாரிசின் நட்புப் புள்ளிகள், முக்கியத் தொழிலதிபர்கள் பலருடனும் நட்சத்திர விடுதிகளில் சந்திப்புகளை நடத்திவருகிறார்கள்.``இன்னும் மூணு மாசத்துல நம்ம ஆட்சிதான். உங்க வேலையைக் கச்சிதமா முடிச்சுத் தர்றோம்’’ என்று`உற்சாக’த்துடன் டீலை முடிக்கிறார்களாம்.

அண்ணா அறிவாலயம்
 
அண்ணா அறிவாலயம்

தொழிலதிபர்கள் மட்டுமன்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தரப்பினர் சிலரும் வாலன்ட்டியராக வாரிசின் நட்புப் புள்ளிகளிடம் துண்டுபோட்டு தங்களுக்கான பதவிகளை ரிசர்வ் செய்துவருகிறார்களாம். இப்போதே வசூல் வேட்டை தொடங்கிவிட்டது என்கிறார்கள். ``இவங்களே மொத்தமா வாரிச்சுருட்டிக்கிட்டா, நாங்க என்ன செய்யறது?” என்று விழிபிதுங்குகிறார்களாம் கட்சியின் சீனியர் நிர்வாகிகள்.

நண்பேன்டா காட்டுல நல்ல மழை!

சிறுபான்மை வாக்குகளைக் கவர...
அ.தி.மு.க-வின் புதிய வியூகம்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர அ.தி.மு.க தலைமை புதிய வியூகம் வகுத்திருக்கிறது. கட்சியிலிருக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பதவிகளை வழங்கிவரும் அ.தி.மு.க தலைமை, ஜெ.எம்.பஷீருக்கு சிறுபான்மை நலப்பிரிவின் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறது.

வாரிச்சுருட்டும் தி.மு.க வாரிசின் நட்புகள் முதல் திட்டித் தீர்த்த வேலுமணி வரை..! - கழுகார் அப்டேட்ஸ்
 

பதவி கிடைத்த கையோடு ஜமாத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் பஷீர், அ.தி.மு.க சார்பாக சிறுபான்மை மக்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்தவும் ஆயத்தமாகிறாராம். இதைக் கட்சித் தலைமைக்கும் அவர் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வின் சிறுபான்மை வாக்குகளில், முடிந்த அளவு சேதாரம் ஏற்படுத்துவதே அ.தி.மு.க-வின் திட்டமாம்.

அதெல்லாம் சரி... சட்டசபையில பெருபான்மை கிடைக்குமா?!

அன்று பெரியாருக்கு வரவேற்பு...
இன்று கொரோனாவை விரட்ட பூஜை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்காக, திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் விசேஷ பூஜைகள், யாகங்கள் நடத்திவருகிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். இதற்கிடையே, நீடாமங்கலம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரி கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அ.தி.மு.க பூஜை
 
அ.தி.மு.க பூஜை

இதுதான் ஏரியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், அரி கிருஷ்ணன் அ.தி.மு.க-வில் மிகவும் சீனியர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியில் பல பொறுப்புகளில் இருக்கிறார். தவிர, பெரியார் மீது பெரும் அபிமானம்கொண்டவரான இவர், பெரியாருக்கு வடுவூரில் மிகப்பெரிய அளவில் விழா நடத்தி வரவேற்பு கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவர், தற்போது காமராஜுக்காக விசேஷ பூஜைகள் செய்திருப்பது திராவிடர் கழகத்தினர் இடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அது அந்த வருஷம்... இது இந்த மாசம்!

``கூடவே இருந்து கழுத்தறுத்துட்டாங்க!’’
அப்செட்டில் அமைச்சர் வேலுமணி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏகத்துக்கும் அப்செட் ஆகியிருப்பது அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். குறிப்பாக, பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட அருளானந்தம், வேலுமணியுடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதில் கடுப்பானவர், அலுவலகத்தில் தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் திட்டித் தீர்த்துவிட்டாராம். போதாக்குறைக்கு தி.மு.க இளைஞரணியினர், `மிஸ்டர் வேலுமணி... பதவி விலகுங்கள்’ என்று பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள்.

வேலுமணி
 
வேலுமணி

பொள்ளாச்சியில் தி.மு.க-வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கனிமொழி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி ஆகியோர் ஆஜராகி விட்டார்கள். பொள்ளாச்சி அ.தி.மு.க-வில் துணை சபாநாயகர் ஜெயராமனும், நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டுவந்தார்கள். இதில், கிருஷ்ணகுமார் அணிக்குத்தான் வேலுமணியின் ஆதரவும் இருந்தது. கிருஷ்ணகுமாருக்கு நெருக்கமானவர்தான், கைதுசெய்யப்பட்ட அருளானந்தம். இதனால், ``கூட இருந்தே கழுத்தறுத்துட்டாங்க’’ என்று புலம்பிவருகிறாராம் வேலுமணி.

சகவாசம் முக்கியம் அமைச்சரே!

``சீட்டுக்காகச் சாதியை முன்னிலைப்படுத்துகிறார்!’’
 

அடகு நகைகளை மீட்டு, விலைக்கு வாங்கும் கடைகளை தமிழகம் முழுவதும் நடத்திவருகிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ரா. சில பல அரசியல் கட்சிகளில் இணைந்து எந்த முன்னேற்றமும் இல்லாததால், சில வருடங்களுக்கு முன்னர் ,`24 மனை தெலுங்கு செட்டியார்’ என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரையில் பெரிய அளவில் கோரிக்கை மாநாட்டை நடத்தினார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அனைத்துச் செட்டியார் சாதிகளையும் இணைத்து,`தேசிய செட்டியார்கள் பேரவை’ என்ற அமைப்பை நிறுவியிருப்பதாகக் கூறி ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார். `வருகிற சட்டமன்றத் தேர்தலில் செட்டியார் சமூகத்துக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்’ என்பதே அண்ணனின் தற்போதைய மிஷன். ஜனவரி 10-ம் தேதி திருச்சியில் மகளிரணி மாநாட்டை நடத்தியவர், அடுத்த மாதம் சென்னையில் ஒரு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். இதன் பின்னணியை விசாரித்தால், ``பன்னீருடன் தொடர்பிலுள்ள ஜெகன்னாத் மிஸ்ரா, அ.தி.மு.க கூட்டணியில் கம்பம் தொகுதியைப் பெறுவதற்காக இப்படி பில்டப் கொடுக்கிறார்’’ என்கிறார்கள். கம்பத்துக்காக கம்பு சுத்துறாருன்னு சொல்லுங்க!

மலையைக் குடைந்த அதிகாரிகள்!
நீலகிரி ஆட்சியர் ஆக்‌ஷன்

`நீலகிரி மாவட்டத்தில், தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களால் மலைகளைக் குடைந்து பாறைகளை வெட்டியெடுத்து விற்கிறார்கள்; இதில் லஞ்சத் தொகை ஏராளமாகப் புரள்கிறது’ என்று சொல்லியிருந்தேன் அல்லவா... கூடுதலாக மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யாவின் பெயரைக் குறிப்பிட்டு, ``இன்னசென்ட் மேடம், இதுக்கு மேலயும் இன்னசன்ட்டா இருக்காதீங்க!” என்று `பன்ச்’ எழுதியிருந்தேன். இதையடுத்து, அதிரடி ஆய்வில் இறங்கிய இன்னசென்ட் திவ்யா, லஞ்சத்தில் புரண்ட குன்னூர் வருவாய்த்துறை அலுவலர் ஒருவரை கூடலூருக்குத் தூக்கியடித்திருக்கிறார்.

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
 
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, பொக்லைன் கும்பலுக்கு ஆதரவாக இருக்கும் கேத்தியைச் சேர்ந்த பெண் வருவாய் அலுவலர் ஒருவர் மட்டும், எதுவும் தெரியாததைப்போல தப்பித்துக்கொண்டதுதான் நீலகிரி அதிகாரிகள் மட்டத்தில் `பரபர’ டாக்.

கலக்குங்க கலெக்டர் மேடம்!

 
கன்னியாகுமரியில் சுமுக உடன்பாடு
அ.தி.மு.க - பா.ஜ.க டீல் ஓகே!

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதாம்.

தளவாய் சுந்தரம்
 
தளவாய் சுந்தரம்

மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர் தொகுதிகள் அ.தி.மு.க-வுக்கும், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகள் பா.ஜ.க-வுக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசி முடித்திருக்கிறார்களாம்.

பங்கப் பிரி... பங்கப் பிரி!

வாசுதேவநல்லூரில் கிருஷ்ணசாமி மகன்?!
 

2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் நான்கு இடங்களில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதன் பின்னர் அ.தி.மு.க கூட்டணிக்குச் சென்றவர், இந்த முறை எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி
 
டாக்டர் கிருஷ்ணசாமி

இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க தலைமை, டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக ஜான் பாண்டியனை வளர்த்துவிடுவது டாக்டரை டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இந்தச் சூழலில் கடந்த முறை புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வாசுதேவநல்லூர் தொகுதியில், தன் மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை களமிறக்கும் முயற்சியில் இருக்கிறாராம் டாக்டர்.

அப்படியே கட்சிக்கும் புதுத் தலைவர் ரெடி!

களமிறங்கிய பொன்னார்...
அமைதி காக்கும் காங்கிரஸ்!

தமிழக சட்டசபைத் தேர்தலுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்ட பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதற்கான களப்பணியை இப்போதே தொடங்கிவிட்டார்.

பொன். ராதாகிருஷ்ணன்
 
பொன். ராதாகிருஷ்ணன்

தொண்டர்களின் இல்லத் திருமணம் உள்ளிட்ட நிகழ்வு தொடங்கி கோயில் விழாக்கள் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டுகிறார் பொன்னார். சத்தமில்லாமல் களப்பணியை அவர் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் வட்டாரத்திலோ கனத்த அமைதி நிலவுகிறது. குமரி மாவட்டத்துல `வசந்தம்’ மலருமா, மலராதா?

மயிலாடுதுறை பசுமை வீடுகள் கோல்மால்!
 

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் 40 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில், ஆளுங்கட்சிப் புள்ளிகள் புகுந்து விளையாடுகின்றனர்.

ஏற்கெனவே, இந்தத் திட்டத்தின்கீழ் வீடு பெற்றவர்களுக்கே மீண்டும் வீடு கட்டித் தருவதாக, தி.மு.க-வினர் பிரச்னை செய்யவே... அதிகாரிகள் நேரில் சென்று மறு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கெனவே வீடு வழங்கப்பட்ட 15 பேருக்கு மீண்டும் வீடு வழங்க தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பெயர்களை நீக்கியவர்கள், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அடுத்தகட்ட ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்கள். அடுத்தவன் வீடு... அது என்னைக்குமே கேடு!

 

https://www.vikatan.com/news/politics/dmks-problem-to-velumanis-angry-kazhugar-updates

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.