Jump to content

கொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்

சுஜாதா ராஜீஷ்
 
படக்குறிப்பு,

சுஜாதா ராஜீஷ்

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி இன்று (ஜனவரி 16) தொடங்கியது. தமிழ்நாட்டில், புதுச்சேரியில் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி உணர்கிறார்கள்?

புதுவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ தொழில்நுட்ப ஊழியர் சுஜாதா ராஜீஷ் பிபிசி தமிழிடம் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'இந்த தடுப்பூசியைப் போடுவதற்கு முன்பு இதை நாம் எடுத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? இதனால் ஏதும் பக்க விளைவுகள் இருக்குமா என்ற அச்ச உணர்வு இருந்தது.

இருந்தாலும் நான் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தேன். இதை வைத்து யோசித்து போது, எனது குடும்பத்தில் வயதானவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுத்தாக வேண்டிய சூழல் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது "ஒரு மருத்துவப் பணியாளராக நாம் ஏன் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது?" என்று தோன்றியது.

"நான் இளமையாக, ஆரோக்கியமாக உள்ளேன். எனது உடலில் இந்த கொரோனா தடுப்பூசியைத் தவிர்க்கும் அளவுக்கு எந்த சிக்கலும் கிடையாது. எதாவது ஒவ்வாமை வந்தால்கூட அதை நம்மால் எதிர்கொள்ள முடியும். ஆகவே நாம் ஒரு முயற்சி செய்தால், எனது முயற்சியின் மூலமாகப் பிறருக்கு நம்பிக்கை ஏற்படும் என்ற ஒரு காரணத்திற்காக இதை நாம் எடுத்துக்கொள்வது நல்லது என்று எனக்குள் தோன்றியது," என்றார் அவர்.

"நான் நலமாக இருப்பதை என் உறவினர்களும், நண்பர்களும், என்னைச் சுற்றி இருப்பவர்கள் பார்க்கும் போது அவர்களுக்கு அச்ச உணர்வு நீங்கும்" என்கிறார் சுஜாதா.

15 நிமிடம் யோசித்தேன்

"முதற்கட்டமாக தடுப்பூசி போடுகிறவர்களுக்கான பட்டியலில் எனது பெயர் இருந்தாலும், முதல் நாளில் எனக்கு தடுப்பூசி போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. காலை பணிக்குச் செல்ல தயாரானபோது, முதல்நாள் கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்கள் வரிசையில் எனது பெயரும் இருப்பதைக் கண்டு ஒரு 15 நிமிடங்கள் யோசித்தேன்.

கோவிஷீல்டு தடுப்பூசி
 
படக்குறிப்பு,

கோவிஷீல்டு தடுப்பூசி

என் கணவரும் கூட இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அடுத்தகட்டமாக போட்டுக் கொள்ளலாமா என்று தோன்றியது. ஆனால் அனைவரும் இப்படி நினைத்தால், யார்தான் முதலில் போட்டுக்கொள்வது என தைரியமாக இன்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளச் சென்றேன். பிறகு என்னுடன் நிறைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என நிறையப் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நான் உட்பட அங்கே தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள், ஒவ்வாமை போன்ற எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை.

தற்போது வரை நான் நலமாக இருக்கிறேன்" என்கிறார் சுஜாதா.

ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் - மருத்துவ அலுவலர்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அனுபவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில்,

"மாவட்ட தடுப்பூசி அலுவலர் என்கின்ற முறையில் முதலில் நான் இந்த கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டேன்.

காரணம் இந்த தடுப்பூசி குறித்து பொது மக்கள் இடையே உள்ள அச்சம் நீங்குவதற்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் நபராக இன்று காலை தடுப்பூசி போட்டு கொண்டேன்.

கொரோனா தடுப்பூசி
 
படக்குறிப்பு,

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மருத்துவர் - கோவை

ஊசி போட்டு கொண்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகிறது இதுவரை என் உடல் ஆரோக்கியமாக உள்ளது. இந்த தடுப்பூசி போட்டு கொண்டது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார்.

"வலியே இல்லை"

மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த ஊசியை போட்டு கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பின்னர் 0.5 மிலி அளவு மருந்து போடப்பட்டது வலியே இல்லை.

என் நண்பர்கள் சிலர் வெளி நாடுகளில் உள்ளனர். அவர்கள் இந்த கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட போது வலியிருந்ததாகவும், ஊசி போட்ட இடம் சிவப்பு நிறமாக இருந்ததாகவும் கூறினர் ஆனால் எனக்கு இதுவரை அவ்வாறு எதுவும் ஏற்படவில்லை.

மீண்டும் 28 நாட்களுக்கு பின் இரண்டாவது ஊசியை நான் போட்டு கொள்வேன்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது குறித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கொரோனா முதல் தடுப்பூசி வலி இல்லாமல் எனக்கு போடப்பட்டது.

எனக்கு தடுப்பூசி போட்டு 2 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. வலியோ, பக்க விளைவோ இதுவரை ஏற்படவில்லை என்றார்.

"நன்றாகத்தான் இருக்கிறது"

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர் கண்ணம்மாவிடம் கேட்ட பொழுது "கொரோனா வார்டில் வேலை பார்த்து வந்தேன். கொரோனா காலத்தில் தைரியத்துடன் வேலை பார்த்தேன்.

தற்போது தடுப்பூசி வந்துள்ளது. அதை கண்டு பயப்பட வேண்டாம். இப்பொழுது எனக்கு பயம் கிடையாது. தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கிறது" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.