Jump to content

நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம் - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம்

நிலாந்தன்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாவதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரானது. அதைவிட ஆழமான பொருளில் அது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவது. அதையும் விட ஆழமான பொருளில் அது நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் உரிமைகளோடு சம்பந்தப்பட்டது.

முதலாவதாக துணைவேந்தர்.அவர் ஒரு கருவி. எந்த வாயால் போராடும் தரப்புக்களை  ஆர்வக்கோளாறுகள் என்று சொன்னாரோ அதே வாயால் தேவாரம் பாடியபடி அடிக்கல் நாட்டுகிறார். நீளக் காற்சட்டையை உயர்த்தி மடித்துவிட்டு சுலோகங்களை உச்சரித்தபடி நீர்நிறைந்த குழிக்குள் அவர் இறங்கும் காட்சி ஏதோ பிதுர்க்கடன் முடிப்பது போலிருந்தது.

இரண்டாவது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் பற்றியது. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டவை.அறிவுசார் மேதமைக்கு இருக்கவேண்டிய தன்னாட்சியை உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இந்த அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் தன்னாட்சி அதிகாரத்தை இயன்றளவுக்கு பிரயோகிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு பிரயோகிக்க முடியாது என்பதைத்தான் முன்நாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன் அகற்றப்பட்ட விதமும் அதற்கு கூறப்பட்ட காரணமும் காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியாக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் குருபரனுக்கு என்ன நடந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே  தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் அவற்றுக்குள்ள சுயாட்சி அதிகாரங்களை பிரயோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

துணைவேந்தர் சிறீசற்குணராஜா அவருடைய சொந்த பல்கலைக்கழகத்திலேயே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அனுமதி கேட்கும் அளவுக்கு மிகப் பலவீனமானவராக ; பரிதாபகரமானவராகக் காட்சியளிக்கிறார். அது அவருடைய பல்கலைக்கழகம். அதில் அவர்தான் அதிகாரமுடைய நிர்வாகி. ஆனால் ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு முன் அவர் அனுமதி கேட்டு நிற்கிறார். என்ன செய்யப்போகிறேன் என்பதனை அவர் அந்த போலீஸ் அதிகாரிக்கு விளங்கப்படுத்த வேண்டியிருக்கிறது. இதுதான் ஒரு தமிழ் கல்விமானின் நிலை. இதுதான் தமிழ் மக்களின் பண்பாட்டு தலைநகரம் என்று கருதப்படுகின்ற ஒரு பட்டினத்தில் காணப்படும் உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் துணைவேந்தரின் நிலை.அப்படிப்பட்ட ஒருவரை இலகுவாக கையாண்டு சிலையை உடைத்து விட்டார்கள்.

ஒரு உயர் கல்வி நிறுவனத்தின் சுயாதீனம் எப்படி இருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. தமிழ் மக்கள் ஒரு புறம் தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்கிறார்கள்.இன்னொருபுறம் தமிழ் புலமையாளர்கள் நமக்கு இருக்கக்கூடிய தன்னாட்சி அதிகாரங்களைக் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிடம் இழந்து வருகிறார்களா?தமது தன்னாட்சி அதிகாரங்களை பிரயோகிக்க தேவையான புலமைசார் மிடுக்கு அவர்களிடம் இல்லையா? புலமைசார் சுதந்திரம் இல்லை என்றால்  புலமையாளர்கள் அதிகாரத்தின் சேவகர்களாகவே தொழிற்பட வேண்டியிருக்கும். எனவே இது விடயத்தில் தமிழ் புலமையாளர்கள் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்கும் விதத்தில் துணிந்து போராடுவார்களா?அல்லது புலமைப் பரிசில்களுக்கும் பதவி உயர்வுகளுக்குமாகக் கூனப் போகிறார்களா?

spacer.png

மூன்றாவது மிக ஆழமானது. தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையை இப்போதிருக்கும் அரசாங்கம் மறுக்கிறது.அதைத் தனது உபகரணங்களான சட்டம்; நீதி பரிபாலனக் கட்டமைப்பு; காவல்துறை போன்றவற்றுக்கூடாக தடுத்துவருகிறது. இவ்வாறு நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமையை மறுக்கும் ஒரு அரசியல் போக்கின் ஆகப்பிந்திய சம்பவமாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது விடயத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட முழுத் தமிழ் மக்களும் நினைவு கூர்தலுக்கான உரிமையை கேட்டுப் போராட வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை மீளக் கட்டி எழுப்புவது என்பது நினைவு கூர்தலுக்கான உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதிதான்.

இது விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறார்கள். அதேசமயம் தமிழ் அரசியலின் இயலாமை ஒன்றையும் நிரூபித்திருக்கிறார்கள்.

முன்னுதாரணம் என்னவென்றால் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தது. தமிழ் கட்சிகளையும் தமிழ்க் குடிமக்கள் சமூகங்களையும் அரவணைத்துக் கொண்டு முழுக் கடையடைப்பு ஒன்றை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் உதவியோடு தமிழகத்திலும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் எல்லா தேசங்களிலும் பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் இது தொடர்பில் கண்டனங்களைத் தெரிவித்தார்கள். அதேபோல அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் இதுவிடயத்தில் கருத்துக்கூறும் அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் இந்த விவகாரம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பின்னணியில் இந்த விடயம் அங்கே அதிகரித்த அளவில் நொதிக்கத் தொடங்கியது.

இப்படியாக உலகம் முழுவதும் சின்னம் உடைக்கப்பட்டதற்கு எதிராக ஒரு கொதிநிலை தோன்றியது. அரசாங்கம் பணிய வேண்டிவந்தது. அதன் விளைவாகவே துணைவேந்தரும் பணிய வேண்டிவந்தது. எனினும் அவர் வாக்குறுதிதான் வழங்கியிருக்கிறார்.அதை எங்கே கொண்டு போய் முடிப்பார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சின்னம் உடைக்கப்பட்டதும் மாணவர்கள் அதை எதிர்ப்பது என்று முடிவு செய்தமை இங்கு முக்கியமானது.அந்த எதிர்ப்பை அவர்களும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் ஏனைய செயற்பாட்டாளர்களும் அனைத்துலக மயப்படுத்தியமையும் முக்கியமானது. இதுவிடயத்தில் மாணவர்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறார்கள். இதை ஒரு சட்டப் பிரச்சினையாக அவர்கள் குறுக்கவில்லை. மாறாக ஒரு அரசியல் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அதற்கு எதிராக அரசியல் ரீதியிலான எதிர்ப்பை அவர்கள் காட்டினார்கள்.அதில் சிவில் சமூகங்களினதும் அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டார்கள். இது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணம். எதிர்ப்பது என்று முடிவெடுத்து சாகும் வரை உண்ணாவிரதத்ததில் குதித்தமை  ஒரு முன்னுதாரணம்.

spacer.png

அதேசமயம் அந்த உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டவிதம் தமிழ் அரசியலின் இயலாமையை காட்டுகிறது. துணைவேந்தர் நள்ளிரவில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருக்கிறார். அதேபோல அதிகாலை வேளையில் பார்வையாளர்கள் இல்லாத ஒரு நேரத்தில் அடிக்கல்லை நாட்டியிருக்கிறார். இந்த விடயத்தை இப்படியே விட்டால் அது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சி இரவிரவாக அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் அவர்களுக்குப் பக்கபலமாக பெருந்தமிழ் பரப்பில் கணிசமான பகுதி அவர்களோடு நின்றது. போராட்டம் மாணவர்களைக் கடந்து பல்வேறு மட்டங்களுக்கும் பரவிவிட்டது. யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்ட பின்னரே தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஐரோப்பாவிலும் அமெரிக்கக் கண்டத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்து விட்டார்கள்.  ஆனால் அவர்கள் தொடங்கிய போராட்டத்தின் விளைவாக நொதிக்க தொடங்கிய தமிழகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. போராட்டத்தை தொடங்கிய மாணவர்கள் அதை முடித்துக்கொண்ட பின்னரே கனடாவின் மிக நீண்ட வாகனப் பேரணி தொடங்கியது.

இது போராடும் மாணவர்களுக்கும் பக்கபலமாக பெருந்தமிழ்ப் பரப்பில் எதிர்ப்பைக் காட்டிய ஏனைய அமைப்புகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய ஒருங்கிணைப்பின்மையைக் காட்டியது. பெருந்தமிழ் பரப்பில் ஒரு பொது புள்ளியில் இவ்வாறு வெவ்வேறு கண்டங்களில் வாழ்ந்த தமிழர்கள் ஒன்றிணைவது என்பது மிக அரிதாகவே நடக்கிறது. நினைவுச்சின்னத்தை உடைத்த விவகாரம் அவ்வாறான ஒரு பொது உணர்ச்சிப் புள்ளியாக மாறியது. ஆனால் அந்த நோதிப்பை  அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்குத் திரட்டி எடுக்கக் கூடிய நிலைமை தாயகத்தில் காணப்பட்டவில்லை.

இதில் மாணவர்களைக் குறைகூற முடியாது. தாங்கள் தொடங்கிய போராட்டத்தை அவர்கள் முடித்துக் கொண்டார்கள். உண்ணாவிரதமிருந்த மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடிய ஒரு பின்னணியில் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கிடையில் துணைவேந்தர் பணிந்து போன காரணத்தால் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஆனால் இதில் துணைவேந்தருக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. பெரும்பகுதி எனப்படுவது நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமைக்கானது.

அது விடயத்தில் தமிழ் மக்கள் இனியும் போராட வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு திலீபன் நினைவு நாளையொட்டி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் ஒருநாள் போராட்டம்தான். இப்பொழுது பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்.

சில மாத கால இடைவெளிக்குள் ஒரே காரணத்துக்காக தமிழ்மக்கள் தெட்டம் தெட்டமாகப் போராடுகிறார்கள். ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப் படாமல் போராடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் ஒரு மையத்தில் இணைத்து திட்டமிட்டு தொடர்ச்சியாக போராடி நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமை; அரசியல் கைதிகளுக்கு விடுதலை;  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி; காணிகளை விடுவிப்பது; மேய்ச்சல் தரைககளை விடுவிப்பது; மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாப்பது போன்ற எல்லா  விவகாரங்களுக்குமான தீர்வைத் தரும் வகையிலான நீண்ட தொடரான பரவலான படைப்புத்திறன் மிக்க போராட்டங்களை தமிழ் தரப்பு ஒருங்கிணைக்க வேண்டும்.  அதுவும் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு இரண்டு மாதங்களே இருக்கும் ஒரு பின்னணிக்குள் இதுபோன்ற போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக இருக்கிறது.

உரிமைப் போராட்டத்தை சட்டவிவகாரமாகக் குறுக்கும்  அரசியல்வாதிகள் பொறுத்த நேரத்தில் ஸ்பைடர் மான்களாக வந்து குதிக்கிறார்கள். போராடும் மாணவர்களோடு தெருவோரத்தில் உறங்குகிறார்கள். ஆனால் மாணவர்களுக்கு வழிகாட்டி போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி தொடர்ச்சியாக முன்னெடுக்க யாருமில்லையே

 

http://samakalam.com/நினைவாக-மாறிய-ஒரு-நினைவு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.