Jump to content

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Screenshot-2021-01-21-11-32-23-340-org-m

இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி நிலவுவதற்கான புறச்சூழல் தென்படுவதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் 06.01.2021 இல் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதந்த போதே அத்தகைய சூழல் ஆரம்பித்துள்ளது எனலாம். ஆனாலும் முழுமையாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா முரண்பட்டுக் கொள்ளும் போக்கு எழவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மறுபக்கமாக குறிப்பிடுவதாயின் எதிர்காலத்தில் அத்தகைய நிலை தோன்றுவதை தடுக்க முடியாத போக்கு ஏற்படவும் வாய்புள்ளது. ஆனால் அதற்காக இரு தரப்பிலும் அரசாங்கள் அமைந்திருப்பதோடு பிராந்திய சர்வதேச சூழலும் வாய்ப்பானதாக அமைய வேண்டும். இக்கட்டுரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்திற்கு பின்பான அரசியலை தேடுவதாக அமைந்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் அதிக தெளிவுகளை தந்திருந்தது. குறிப்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவின் வற்புறுத்தல்கள் முதன்மையாகவும் இலங்கை-இந்திய உடன்படிக்கை மற்றும் மகாணசபைகளின் நிலைத்திருப்பு பற்றிய விடயங்களில் தெளிவான உரையாடல் நிகழ்ந்தது. இலங்கை ஜனாதிபதி பிரதமப் தமிழ் தரப்புடனான உரையாடல் மட்டுமன்றி ஊடக சந்திப்பிலும் அவரது உடல்மொழி மிகத் தெளிவான செய்தியைத் தந்திருந்தது.ஜெய்சங்கர் அவர்களது விஜயத்தினி பின்பு மூன்று பிரதான விடயங்கள் இலங்கைக்குள் நடந்துள்ளன.அவை ஒவ்வொன்றினதும் முக்கியத்துவம் இலங்கை -இந்திய உறவில் தனித்துவமான பக்கங்களை தந்துள்ளது. அவற்றை அவதானிப்பது மிக முக்கியமானது.

முதலாவது இந்திய வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் அவசியப்பாட்டை புதுடில்லி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் குறுக்கீடுகள் மற்றும் செல்வாக்குகள் நிலவுவதாகவும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை சீன புலனாய்வுப் பிரிவினர் ஊக்குவிப்பதாகவும் இந்தியா இலங்கையில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களை குழப்புவதே அவர்களின் நோக்கம் எனவும் புதுடில்லி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டு மீளவும் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை அதிக நெருக்கடியை தந்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வலியுறுத்திய விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அதிக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதற்கான பதிலை வழங்க வேண்டிய நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கலாம். அதனால் அரசாங்கத்தின் தெரிவு இந்தியாவுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.அவ்வகைச் செய்தி எதுவென்பது உலக நாடுகளுக்கு தெரியாது விட்டாலும் இந்தியாவுக்கு நன்கு தெரிந்திருக்கும்.அதற்கான பதிலை இந்தியா உடனடியாக வழங்க வேண்டிய நிலைக்குள் தமிழகத் தேர்தலும் அதன் களநிலைகளும் அமைந்திருந்தன. தமிழக முதலமைச்சரின் அறிக்கை மற்றும் தமிழக எழுச்சி அதனையே வெளிப்படுத்தியது. டில்லியின் ஒப்பிதலின்றி அசையாத முதலமைச்சர் என்ற பெயரைக் கொண்டவர் பழனிச்சாமி என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வெளியிட்ட அறிக்கை பின்பு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதரகம் விரைந்தமை பின்னர் மானியங்கள் ஆணைக்குழுவினது முடிபுகள் என்பன இதன் பின்னாலுள்ள அரசியலை தெளிவாக்குகிறது. ஆனால் தூபி இடிக்கப்பட்ட பின்பான சந்தேகங்கள் அல்லது ஐயங்கள் இலங்கை அரசாங்கத்தின் தந்திரமான அணுகுமுறையைக் காட்டுகிறது.இதில் இந்தியாவும் இலங்கையும் வெற்றி பெற்றனவென்றே கூறமுடியும். இரு தரப்பும் தமது இலக்குகளில் வெற்றி பெற்றுள்ளதையே காட்டுகிறது. மறுபக்கத்தில் கொழும்பின் கிழக்கு முனையத்தை இத்தகைய நகர்வை வைத்து கையாளுவதும் இந்தியாவின் பதில் செய்தியாக அமைந்திருந்தது. இவ்வகையான தெரிவுகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா என்ற கேள்வியும் நியாயமானதாகவே அமையும். அது தனித்து நினைவிடங்கள் மட்டுமல்ல என்பதே தற்கேபாதைய செய்தியாகும். இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் சந்தர்ப்பம் எல்லாம் வடக்கு கிழக்கு மட்டுமல்ல ஏனைய பாகங்களிலும் அதன் அதிர்வலைகள் ஏற்படும் என்ற செய்தி தற்போதைய நகர்வு காட்டி நிற்கிறது.

மூன்றாவது இலங்கையின் ஜனாதிபதி கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது. நாட்டுக்குள் மேறட்கொள்ளப்படும் முதலீடுளில் போது நாட்டின் இறைமைக்கும் சுயாதீனத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு முனையத்தின் 51 சதவீதமான பங்கு இலங்கைக்கும் மீதி 49 சதவீதம் இந்தியாவின் அதானி கம்பனிக்கு எனவும் தெரிவித்துள்ளார். மிக நீண்ட குழப்பத்திற்கும் மத்தியில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவின் பங்கினை வரையறுத்திருப்பதுடன் அதற்கான அணுகுமுறைகளை தொழில் சங்கங்கள் மத்தியில் ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்ந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார் இத்தகைய முடிபிலும் இந்தியா திருப்தியற்றதாகவே உள்ளதாக தெரியவருகிறது.

எனவே இலங்கை -இந்திய அரசியல் களம் புதிய வடிவத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அத்தகைய திசை திருப்பம் இந்திய இலங்கை நலன்களைக் கடந்து சீன இலங்கை நலன்களுக்கானதாக அமையவுள்ளது. அது தமிழரது நலன்களில் கரிசனையாக நகர வேண்டுமாயின் தமிழ் அரசியலி; தலைமைகள் முயலவேண்டும். இந்திய வெளியுறவு அமைச்சர் மட்டுமல்ல இலங்கைத் தமிழ் மக்களும் மிக நீண்டகாலமாக கோருவதும் தமிழ் தலைமைகளின் ஒற்றுமைiயாகும். அதன்வழியே தமிழ் மக்கள் சார்பு நிலைக்குள் இந்தியாவையும் இலங்கை அரசாங்கத்தையும் நகர்த்த முடியும். அதற்கான வாய்ப்பான சூழல் ஒன்றினை புவிசார் அரசியல் தந்துள்ளது. அதனை பயன்படுத்துவது தமிழ் தலைமைகளில் தங்கியுள்ளது.

இந்தியாவினது நிலை தனித்து இலங்கை அரசாங்கத்தை கையாளுவதல்ல. பிராந்திய மட்டத்திலும் பூகோள ரீதியிலும் சீனாவினது போக்கினை கையாளுவதாகவே தெரிகிறது. சீனா உலகளாவிய சக்தியாக வளர்ச்சியடைந்து வருவதனையும் அமெரிக்கா பலவீனமடைவதையும் கணக்கிட்டுள்ள இந்தியா இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தவறுமாயின் ஏற்படவுள்ள விளைவுகளை முதன்மைப்படுத்துகிறது. பாகிஸ்தான் சீனா மட்டுமல்ல இலங்கையும் இந்தியாவுக்கு விரோதமான சக்திகளுடன் செயல்படுமாயின் இந்தியாவின் இருப்பே ஆபத்தானதாக அமைவயும் என்பதை இந்தியா கரிசனை கொள்ளத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அத்தகைய போக்கினை நோக்கியே இலங்கை செயல்படுகிறது என்பதை இந்தியா கருத்தில் கொள்ளத் தவறியிருந்ததும் அதன் பலவீனத்திற்கு முக்கிய காரணமாகும். பெருமளவுக்கு இலங்கை இந்தியாவை கையாளும் நிலையிலேயே காணப்படுகிறது. அது சுதந்திரத்திலிருந்து அத்தகைய கொள்கையை பின்பற்றியே வந்துள்ளது. இலங்கை இந்தியாவை விட்டு விலகி அதிக தூரம் பயணித்துவிட்டது. அத்தகைய பயணமே இலங்கைக்கு பாதுகாப்பானதென இலங்கை கருதுவதும் வினோதமானதென்றும் இல்லை. இதில் இந்தியக் கொள்கைவகுப்பாளர் மட்டுமே தவறிளைத்தார்கள் என்று கூறவிடமுடியாது. இலங்கைத் தமிழ் தரப்பும் அத்தகைய தவறுக்கு காரணமானவர்களாக விளங்கினர். இந்தியா தனது நலனுக்குட்பட்டே செயல்பட்டதேயன்றி இலங்கைத் தமிழர் தரப்பின் நலனை அதிகம் கருத்தில் கொள்ளவில்லை. தமிழரின் நலனுக்குள்ளால் இலங்கையை அணுகுவதை விடுத்து இலங்கை நலனுக்குள்ளால் இலங்கைத் தமிழரை நோக்கியது. அதுவே தற்போது ஏற்பட்டுள்ள கையறு நிலைக்கும் நெருக்கடிக்கும் அடிப்படைக்காரணமாகும். இனியாவது அதர்தகைய நிலையை இந்தியா எடுக்குமா என்பதுடன் அதனை நோக்கி இலங்கைத் தமிழ் தலைமைகள் செயல்படுவார்களா என்பதும் பிரதான கேள்வியாகும்.

எனவே சிறந்த இராஜதந்திரியும் மூத்த அரசியல் செயல்பாட்டாளரும் பலமான இந்திய தேசிய சிந்தனையுள்ளவருமான இந்திய வெளியுறவுதத் துறை அமைச்சர் ஜெய்சங்கரது இலங்கை விஜயம் தனித்துவமான அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவை புவிசார் ரீதியிலும் பூகோளரீதியிலும் பலப்படுத்தும் நகர்வென்றுக்கான அடியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஏறக்குறை வெங்கடேஸ்வரன் வெளியுறவைக் கையாண்டதற்கு பின்னர் அதிக மாற்றத்தையும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியவராக ஜெய்சங்கர் விளங்குகிறார்.தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான அறிவிப்பு பெருமளவுக்கு இந்தியத் தரப்புக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அது தொடர்பில் அதிக குழப்பம் நிலவுவதாகவும் தெரியவருகிறது. எனவே கிழக்கு முனையம் இரு அரசுகளுக்கு முக்கிய பொறியாக மாறுவதற்கான புறச் சூழல் வலுவடைகிறது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

http://aruvi.com/article/tam/2021/01/21/21790/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல வெள்ளம் போனால் சாண் ஏறினா என்ன? முழம் ஏறினா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.