Jump to content

ஜெயசங்கரின் விஜயம் : தமிழர் தரப்பிற்கு கூறியதும் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டியதும் - யதிந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசங்கரின் விஜயம் : தமிழர் தரப்பிற்கு கூறியதும் தமிழர் தரப்பு விளங்கிக்கொள்ள வேண்டியதும் - யதிந்திரா

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஜெயசங்கரின் கொழும்பு வருகையைத் தொடர்ந்து, இந்திய – இலங்கை விவகாரம் மீளவும் பேசு பொருளாகியிருக்கின்றது. இந்தியாவின் எதிர்பார்ப்புக்கள் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் இதனால் இந்திய – இலங்கை உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சில அபிப்பிராயங்கள் வெளிவருகின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு நாட்;டுக்கும் விற்கும் நோக்கம் இல்லையென்று தெரிவித்திருக்கின்றார். அதே வேளை, ஜெயசங்கர் கொழும்பில் தங்கியிருக்கும் போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச, கிழக்கு கொள்கலன் முனையத்தை எவருக்கும் வழங்கும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்தார்.

முன்னையை ஆட்சியில், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு ரணில் விக்கிரமசிங்கஇணங்கியிருந்தார் ஆனால் மீளவும் ராஜபக்சக்கள் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து விடயம் மறுபரீசீலனைக்கு உள்ளானது. கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒரு முதலீட்டு திட்டமாக விருத்திசெய்யும் யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. இந்த அடிப்படையில், 51 வீதமான பங்குகள் இலங்கை துறைமுக அதிகார சபையிடமும் ஏனைய பங்குகளில் 49விகிதம், இந்தியாவின் அடானி குழுமத்திடமும், மிகுதி ஏனையவர்களிடமும் இருக்கும் என்றவாறு தற்போது திட்டமிட்டிருக்கின்றது.

சீனாவின் திட்டங்கள் அனைத்தும் எந்தவொரு குறுக்கீடுகளும் தடைகளுமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில்தான், இந்தியாவின் திட்டங்கள் தொடர்ந்தும் தடைகளை எதிர்கொண்டுவருகின்றது. இதற்கு பின்னால் சீனா இருப்பதான சந்தேகமொன்று புதுடில்லில் இருப்பதாக சில இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டிருக்கின்றன. கொழும்பு கிழக்கு கொள்கலன் விடயத்தை குழப்புவதில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருபபதாகவும் அண்மையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இவ்வாறான செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பதற்கு அப்பால், இந்தியாவின் திட்டங்கள் தொடர்ந்தும் தடைகளை எதிர்கொண்டுவருகின்றது என்பது மட்டும் வெள்ளிடைமலை.

விவாதங்களுக்கு அப்பால், சீனா இலங்கையில் வலுவான காலூன்றிவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு நகரத் திட்டம் இரண்டும் சீனாவின் நிரந்தர தளங்களாகவே இலங்கையில் இருக்கும். ஜனாதிபதி கோட்டபாயவின் இந்திய விஜயத்தின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார் ஆனால் அது இடம்பெறவில்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியதால் இந்தியா கடும் அதிருப்தியடைந்திருந்தது. அதனை சமநிலைப்படுத்தும் நோக்கிலேயே மத்தள விமான நிலையத்தை இந்தியா கோரியிருந்தது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அதற்கு இணங்கியிருந்தது. ஆனால் அதுவும் முன்நோக்கிச் செல்லவில்லை. கிட்டத்தட்ட அதுவும் தற்போது கிடப்பிற்கு சென்றுவிட்டது. பாலாலி விமான நிலைய அபிவிருத்தியும் முன்னோக்கி செல்வதாக தெரிவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் புதுடில்லி இலங்கை தொடர்பில் அதிருப்தியடைந்திருப்பதான தகவல்கள் வெளியாகின்றன. புதுடில்லி இலங்கை தொடர்பில் புதிதாக அதிருப்தியடை ஒன்றுமில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விடயங்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஜெயசங்கரின் அண்மைய விஜயம் இடம்பெற்றிருந்தது. இதன் போது ஜெயசங்கர், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஈடுபாட்டை வலியுறுத்தியிருந்தார். 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக் கொண்டு அரசாங்கம் இந்த விடயத்தை கையாள்வது இலங்கைக்கு நல்லதென்றும் குறிப்பிட்டிருந்தார். தென்னிலங்கையில் 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிரான குரல்கள் அதிகம் மேலெழுந்திருக்கின்ற நிலையில்தான், ஜெயசங்கர் 13வது திருத்தச்சட்டத்தின் மீதான இந்தியாவின் ஈடுபாட்டை வலியுறுத்தியிருக்கின்றார். இது கொழும்பிற்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்காது.

 

தெற்கில் மிகவும் பலமானதொரு அரசாங்கம் இருக்கின்ற நிலையில், அதனை பயன்படுத்தி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நீர்த்துப் போகச் செய்யமுடியுமென்றே சில தென்னிலங்கை தரப்புக்கள் கருதுகின்றன. இது அவர்களின் நெடுநாள் அவாவாக இருக்கலாம். 13வது திருத்தச்சட்டத்தை நீக்கவும் வேண்டும் அதே வேளை இந்தியாவின் தலையீட்டிற்கான வாய்ப்பையும் வழங்கக் கூடாது. புதிய அரசியல் யாப்புத்தான் அதற்கான ஒரேயொரு வழியென்றும் அவர்கள் கருதுவதுபோல் தெரிகின்றது. தமிழ் மக்களால் தெரிசெய்யப்படுவர்களும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருப்பதையும், தென்னிலங்கை தங்களுக்கான வாய்ப்பாகவே கருதுகின்றது. இதன் காரணமாகவே அண்மையில் கூட்டமைப்பை சந்தித்த, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் உங்களின் திட்டம் என்னவென்று கேட்டிருக்கின்றார். அதாவது, நீங்கள் இருப்பதை பாதுகாக்க விரும்புகின்றீர்களா அல்லது புதிய ஒன்றை நோக்கிச் செல்ல எத்தணிக்கின்றீர்களா – புதிய ஒன்றை நோக்கிச் சென்று, அது தோல்வியில் முடிந்தால் என்ன நடக்கும்? ஜெயசங்கர் இவ்வாறானதொரு கேள்வியை கேட்டமைக்கான பிரதான காரணம் – 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழர் தரப்பிடம் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லைமையே! இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களின் புரிதல் குழப்பமானது. அதாவது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கின்றோம் ஆனால் 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் 13வது திருத்தச்சட்டம் என்பதும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் ஒன்றோடொன்று தொடர்பற்ற பகுதிகளல்ல. ஒன்றை ஏற்றுக்கொண்டு இன்னொன்றை கைவிடலாமென்னும் புரிதல் தவறானது. இரண்டும் வேறுவேறல்ல. அதாவது அஸ்த்நாரீஸ்வர வடவடிம். இந்த விடயத்தை சிங்கள – பௌத்த தேசியவாத தரப்புக்கள் மிகவும் துல்லியமாக கணிப்பிடுகின்றன. இதன் காரணமாகவே அவர்கள் 13வது திருத்தச்சட்டத்தில் கைவைக்க முயற்சிக்கின்றனர். 13வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று வாதிடும் சிங்கள தரப்புக்கள் எவையுமே இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் பேசவில்லை. ஆனால் 13வதை நீக்கிவிட்டால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்து விடலாமென்பதே அவர்கள் போடும் கணக்கு. அவர்களின் கணக்கு சரியானதுதான். ஆனால் இதனை சரியாக விளங்கிக்கொள்ள முடியாத தமிழ் தரப்புக்களோ, தடுமாறுகின்றன.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் ரீதியான பிரச்சினையிருக்கின்றது. அதனை தீர்த்து வைக்கும் நோக்கிலேயே இந்தியாவின் நேரடித் தலையீடு நிகழ்ந்தது. இதுதான், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை. இதன் விளைவாக வந்ததே 13வது திருத்தச்சட்டம். அதாவது இந்தியாவின் தலையீட்டின் விளைவு. அந்த விளைவு இப்போதும் இலங்கையில் சட்டமாக இருக்கின்றது. இப்போது சட்டமாக்கப்பட்ட அந்த விடயம் அரசியல் சாசனத்தில் இல்லாமலாக்கப்பட்டால், அதன் பின்னர் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பொருள் என்ன? ஒரு வேளை இந்தியா இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டுமென்று முயற்சித்தால் – அதன் பின்னர் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் விவாதிக்க ஒன்றுமிருக்காது. ஆனால் இந்தியாவோ தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி வருகின்றது. அந்த வகையில் இருக்கின்ற இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது. உண்மையில் 13வது திருத்தச் சட்டமென்பது, இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பதால்தான் – இந்தியா அதனை தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அதற்கான உரித்து தனக்கிருப்பதாக கருதுகின்றது. எனவே 13 வேறு – இந்திய – இலங்கை ஒப்பந்தம் வேறு என்று சிந்திப்பது தவறானது. எனவே 13 வேண்டும் என்றால் அங்கு இந்திய – இலங்கை ஒப்பந்தம் இருக்கும் – 13 வேண்டாம் என்றால் அங்கு இந்திய – இலங்கை ஒப்பந்தம் இருக்காது.

இந்தியா நிலைமைகளை எவ்வாறு சமாளிக்கப் போகின்றது என்பதை ஊகிக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவின் அணுகுமுறைகள் வெற்றியளித்திருப்பதாக கூறமுடியாது. இந்தியாவின் திட்டங்கள் தொடர்ந்தும் பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு – கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் அவிவிருத்தி பணிகளில் இந்தியா ஈடுபடவிரும்புவதான செய்தியும் வெளியாகியிருக்கின்றது. ஆனால் அதுவும் இந்தியா நினைப்பது போல் முன்னோக்கி நகருமா?

 

http://samakalam.com/ஜெயசங்கரின்-விஜயம்-தமிழ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.