Jump to content

மூமின் -  ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மூமின் -  ஷோபாசக்தி

ன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். 

அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிகளும் தலையில் தொழுகைத் தொப்பிகளும் அணிந்து எதிரே வந்த இரண்டு முதியவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” எனக் கண்கள் பளிச்சிட சலாம் சொன்னான். 

புற்தரையைக் கடந்ததும் சிறிய கடைத் தொகுதியும், அதற்கப்பால் ‘சித்தே’ எனச் சொல்லப்படும் நெருக்கமான அடுக்குமாடிக் குடியிருப்புகளுமிருந்தன. அங்கேதான் அஸ்லமின் வீடிருந்தது. இப்போது அஸ்லமின் கால்களில் வேகம் அதிகமாயிற்று. 

இங்கேதான் அஸ்லம் பிறந்து வளர்ந்தான். ஆனால், இன்று எல்லாமே அவனுக்குப் புதிதாகத் தோன்றின. எப்போதும் இல்லாததுபோல இந்த தெருவும் சூழலும் மாலைப் பொழுதால் சிவந்து கிடந்த வானமும், அதன் நடுவே மறைந்தும் ஒளிர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்த பிறையும் அவனுக்கு மனதில் பெருத்த அமைதியைக் கொடுத்தன. இவ்வளவுக்கும் அந்த கடைத்தெருவும் குடியிருப்பும் எப்போதும் போலவே கீயா மாயாவென்று ஒரே சந்தடிச் சத்தமாகத்தானிருந்தது. 

இந்த குடியிருப்பிலிருக்கும் பதினாறு அடுக்குமாடிக் கட்டடங்களிலும் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். வெளிநாடுகளிலிருந்து வந்த குடியேற்றத் தொழிலாளர்களின் பரம்பரையும், அகதிகளாகக் குடியேறியவர்களின் குடும்பங்களுமே இங்கே நிறைந்திருந்தன. ஒட்டுமொத்தக் குடியிருப்பிலும் ஒன்றோயிரண்டோ வெள்ளைக் குடும்பங்கள் மட்டுமே எப்போதுமிருந்தன. அந்த வெள்ளையர்களும் கிழக்கு அய்ரோப்பாவிலிருந்து வந்த பஞ்சப்பட்ட குடியேறிகளாகவே இருப்பார்கள்.

அஸ்லமின் தந்தை முருகவேளும், தாயார் தாட்சாயினியும் இந்தக் குடியிருப்புக்கு அகதிகளாக வந்து சேர்ந்து, இரண்டு வருடங்கள் கழித்துத்தான் அஸ்லம் மூத்த குழந்தையாகப் பிறந்தான். அடுத்தடுத்த வருடங்களில் இரு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முருகவேள், பிள்ளைகள் மூவருக்கும் பிரஞ்சு தேசத்தின் புகழ்பெற்ற மலர்களையே பெயர்களாக வைத்திருந்தார். மூத்தவனுக்குப் பெயர் துலீப். பெண் குழந்தைகளுக்கு மிமோஸா, டொறின் எனப் பெயர்கள். 

முருகவேள் தனது மனைவியை ‘துலிப் மம்மோ’ என்றும், தாட்சாயினி தனது கணவரை ‘துலீப் பப்பா’ என்றும்தான் ஆசையாசையாக அழைத்துக்கொள்வார்கள். துலீப் என்ற அந்தப் பெயரை நிரந்தரமாக மாற்றிவிட்டுத்தான், இப்போது அஸ்லம் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். அவன் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவிக்கொண்ட செய்தியை இன்னும் சற்றுநேரத்தில் வீட்டில் சொல்லத்தான் போகிறான். அஸ்லம் என்ற பெயரும் ஏப்பை சாப்பைப் பெயர் கிடையாது. அந்தப் பெயருக்கு ‘பாதுகாக்கப்படுபவன்’ என்று அர்த்தம்.

அஸ்லமுக்கு இருபது வயதாகிறது. ஆறடி உயரமும் தொண்ணூறு கிலோ பாரமுமாக அவனது உடல் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. சில மாதங்களாக வளர்ந்திருக்கும் இளம் தாடி அவனது முகத்திற்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தந்தையிடமிருந்து சுருட்டைத் தலைமுடியும், தாயிடமிருந்து வெள்ளை வெளேரென்ற நிறமும் அவனுக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தக் குரல்தான் யாரிடமிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. கரகரவென்று ஒரு கனத்த குரல் அஸ்லமுக்கு வாய்த்திருக்கிறது. அவன் பேசும் தொனியும் முரட்டுத்தனமாகவேயிருக்கும். ‘சாப்பிட்டீர்களா’ என்று துலீப் கேட்கும்போது, கத்தியால் குத்த வருவது போலவே துலீப்பின் உடல் மொழி இருக்குமென அவனது கூட்டாளி மதுசன் சொல்வான். இந்த இரண்டு கூட்டாளிகளும் பதினேழு வயதிலேயே சிறைக்குப் போய் வந்தவர்கள்.

அந்த குடியிருப்புப் பகுதியில் நான்கைந்து தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்றாலும், சந்தையிலோ தெருவிலோ காணும்போது ஆளையாள் மெலிதாகத் தலையசைப்பதோடு அவர்களது உறவு முடிந்துவிடும். ஒருவரின் வீட்டுக்கு அடுத்தவர் போய் வருகிற பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால், குழந்தைகளால் அப்படியிருக்க முடியாதல்லவா. தங்களையொத்த தோற்றத்துடன், தாங்கள் பேசும் மொழியையும் பேசும் குழந்தைகளுடன் அவர்களுக்கு இயல்பாகவே நட்பு உருவாகிவிடுகிறது. அப்படித்தான் துலீப்புக்கும் மதுசனுக்கும் மழலையர் பள்ளியிலேயே நட்பு உருவாகிவிட்டது. எப்போதும் இருவரும் சேர்ந்துதான் திரிவார்கள். ஆனால், மதுசன் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். துலீப்புக்கோ பாடப் புத்தகத்தைப் பார்த்தாலே தூக்கம் தூக்கமாக வந்தது. 

படிப்பு அவனது மண்டையில் ஏறாததற்கு அவன் என்ன செய்வான்! மாறாக அவனது இரண்டு தங்கைகளும் படிப்பில் சூரப் புலிகளாக இருந்தார்கள். இதற்கும் ஒரு காரணத்தை துலீப் யோசித்துக் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். துலீப்பின் பெற்றோருக்கு இன்றுவரை பிரஞ்சு மொழி சரிவரப் பேசத் தெரியாது. வீட்டில் தமிழையே கேட்டும் பேசியும் வளர்ந்ததால், அவனுக்குத் தமிழ் நன்றாகப் பேச வந்தது. ஆனால், அவன் நான்கு வயதில் பாடசாலையில் சேர்க்கப்படும்போது, பிரஞ்சில் ஒரு வார்த்தை கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனுடைய சக மாணவர்கள் பிரஞ்சில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, இவன் எதுவும் புரியாமல் பயந்துபோயிருந்தான். மதுசனோடுதான் அவன் பேசத் தொடங்கினான். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால் துலீப்புக்கு பிரஞ்சு பேச ஆளில்லை. அவனது சகோதரிகள் பாடசாலைக்குப் போகத் தொடங்கியபோது, அவர்களோடு பிரஞ்சு மொழி பேச துலீப் தயாராக இருந்தான். ஆனால், அவனின் சகோதரிகளுக்குத் தமிழ் சரியாகப் பேச வராது. இரவை ‘இருட்டு’ என்பார்கள். நேற்று என்பதை ‘அன்னிக்கு’ என்பார்கள்.

பன்னிரண்டு வருடங்கள் பாடசாலையில் படித்ததைவிட, சிறுவர்களுக்கான சிறையில் மூன்று மாதங்கள் இருந்தபோது துலீப் கற்றுக்கொண்டவை அதிகம் என்றே சொல்லலாம். அவன் சிறையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது கூட முருகவேள் எதுவும் கடிந்து பேசவில்லை. “ஏன் மகன் இப்பிடிச் செய்தாய்?” என்று கேட்டு அவர் கண் கலங்க மட்டுமே செய்தார்.

துலீப்பும் மதுசனும் பாரிஸ் நகரத்துக்கு தமிழ் சினிமா பார்க்கச் சென்றுவிட்டு, இரவு இரயிலில் திரும்பிவரும்போது, ஒரு பிரஞ்சுக்காரனோடு ஏற்பட்ட தகராறால் அவனைக் கடுமையாகத் தாக்கி விட்டார்கள். இவர்கள் இருவரது கைகளிலும் ஆளுக்கொரு பியர் போத்தலிருந்தது. மதுசன் பியர் போத்தலாலேயே பிரஞ்சுக்காரனின் தலையில் அடித்து இரத்தக் காயம் உண்டாக்கிவிட்டான். இரயிலில் இருந்த பயணிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து இரயிலை நிறுத்திவிட்டார்கள். இருவரையும் காவற்துறையினர் கைது செய்ய வந்தபோது, காவற்துறையினரோடும் இவர்கள் சண்டை போட்டார்கள். இவர்கள் பார்த்துவிட்டு வந்த திரைப்படத்திலும் அப்படி நாலைந்து காட்சிகளிருந்தன.

பையன்கள் சிறையிலிருந்து திரும்பிய பின்பு, மதுசனின் குடும்பம் அந்த குடியிருப்பிலிருந்தே வெளியேறிவிட்டது. துலீப், கல்லூரிக்குத் திரும்பவும் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் பிற்பகல் இரண்டு மணிவரை அவன் மாடு போலத் தூங்கினான். எழுந்து சாப்பிட்டுவிட்டு வெளியே புறப்படுவான். சாப்பாட்டு மேசையில் அவனுக்காக ஒவ்வொரு நாளும் பத்து ஈரோக்களை வைத்துவிட்டு முருகவேள் போயிருப்பார். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனால், அதிகாலையில்தான் துலீப் வீட்டுக்குத் திரும்பிவருவான்.

முருகவேளும் தாட்சாயினியும் முடிந்தவரை அவனுக்குப் பொறுமையாகப் புத்திமதி சொல்லிப் பார்த்தார்கள். “உங்களுக்கு ஒன்றுமே தெரியாது” என்பதுதான் எப்போதுமே துலீப்பின் பதிலாகயிருக்கும். அதையும் பிரஞ்சு மொழியில்தான் சொல்வான். தந்தையோ தாயோ தப்பித் தவறி அவனை ‘மூட் அவுட்’ ஆக்கிவிட்டால், தனது தங்கைகளைப் பிடித்துவைத்து அடித்தான். மூத்த தங்கை, காவற்துறையை அழைக்கப் போவதாக ஒருமுறை மிரட்டினாள். இரண்டு அடிகள் சேர்த்துக்கொடுத்தான்.

இந்தத் தலைப்பிள்ளை என்னவாகும் என்பதுவே முருகவேளினதும் தாட்சாயினியினதும் நித்திய கவலையாகப் போய்விட்டது. அவனுக்கு ஒரு வழிகாட்டவும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அந்நிய நாட்டில் யாரிடம் போய்த்தான் உதவி கேட்பது. சொந்த பந்தமென்று அவர்களுக்கு இந்த நாட்டில் யாருமே கிடையாது.

பல வருடங்களாக முருகவேள், ஒரு காய்கறிக் கிட்டங்கியில் வாகனச் சாரதியாக வேலை செய்கிறார். அவரே பெட்டிகளையும் மூடைகளையும் ஏற்றியும் இறக்கியும் அடுக்கியும் வைக்கும் கடுமையான வேலை. அதிகாலையில் வேலைக்குக் கிளம்பிப் போனால், மாலை நான்கு மணிக்குத்தான் வீடு திரும்புவார். சில நாட்களில் இரவு பத்துமணி கூட ஆகும். அவர் திரும்பிவரும்போது, தெருவிலோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழுள்ள பொது முற்றத்திலோ துலீப்பைக் காண்பார். தோழர்கள் புடைசூழ அவன் நின்றிருப்பான். அரபுக்கள், ஆபிரிக்கர், சீனர் என எல்லா இனத்திலும் துலீப்புக்குக் கூட்டாளிகள் இருந்தார்கள்.

அஸ்லம், தனது தலையிலிருந்த தொழுகைத் தொப்பியைக் கழற்றி மேலங்கியின் பைக்குள் வைத்துக்கொண்டான். அவன் குடியிருப்பு முற்றத்துக்குள் நுழைந்தபோது, அங்கே அவனது கூட்டாளிகள் ரம்ஸியும் ஜாபரும் பாம்போவும் நின்றிருந்தார்கள். அவர்கள் அவனைப் பேச அழைத்தார்கள். வீட்டுக்குப் போய்விட்டு வருவதாக அவர்களிடம் சொல்லிவிட்டு, குடியிருப்பின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். லிஃப்டுக்கு அருகே பெரிய கூட்டமே நின்றிருந்தது. அங்கிருந்து விலகி மாடிப் படிகளில் விரைவாக ஏறிச் சென்றான். பன்னிரண்டாவது மாடியில் அவனது வீடிருந்தது.

2

வீட்டுக்குள் நுழைந்து மேலங்கியைக் கழற்ற முன்பே, அவனைச் சாப்பிட வருமாறு தாட்சாயினி அழைத்தார். அவன் இந்த நேரத்தில் வீடு திரும்பியிருந்தது அவருக்கு ஆச்சரியமாகயிருந்தது. முருகவேள் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். தங்கைகள் அவர்களது அறையிலிருந்தார்கள். அஸ்லம் தங்கைகளது அறைக் கதவைத் தட்டிவிட்டு நின்றான். மூத்தவள் கதவைத் திறந்து, தமையனைக் கொஞ்சம் பயத்துடனேயே பார்த்தாள். “டொறினையும் அழைத்துக்கொண்டு வா..கொஞ்சம் பேச வேண்டும்” என்று பிரஞ்சு மொழியில் சொல்லிவிட்டு, அஸ்லம் சமையலறை வாசலில் போய் நின்றுகொண்டான். முருகவேள் அவனைப் பார்த்து “என்ன மகன் சாப்பிடல்லையா?” என்றார். “கொஞ்சம் கதைக்க வேணும் பப்பா” என்றான் அஸ்லம்.

இவன் சாதாரணமாக இப்படியெல்லாம் பேசக் கூப்பிட மாட்டான். இவன் முருகவேளோடு பேசியே பல மாதங்களிருக்கும். பாதி மகிழ்ச்சியும் பாதி குழப்பமுமாகக் கைகளைக் கழுவித் துடைத்துக்கொண்டே முருகவேள், மகன் பேசுவதைக் கேட்கத் தயாரானார். தாட்சாயினி கண்களை விரித்துக்கொண்டு நின்றார். இரண்டு பெண் பிள்ளைகளும் அஸ்லமுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டார்கள். எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அஸ்லம் நிதானமாகச் சொன்னான்:

“இப்ப என்ர பெயர் முஹமெட் அஸ்லம். நான் முஸ்லிமா மாறிட்டன்”. 

அஸ்லமுக்குப் பின்னால் நின்ற இளைய தங்கை பாய்ந்து அவனுக்கு முன்னால் வந்தாள். அவளுக்குத் தமிழ் அவ்வளவாகப் புரியாது. எனவே அவளுக்காக மறுபடியும் ஒருமுறை பிரஞ்சு மொழியிலும் அஸ்லம் சொன்னான்.

“நான் முஸுல்மோன் ஆகிவிட்டேன்”

முருகவேள் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டார். அவரது பற்கள் அவரது கீழுதட்டைக் கவ்விக்கொண்டன. சமையலறை வாசலை நோக்கி அவர் மெதுவாக வந்தார். வாசலை அடைத்துக்கொண்டு நின்ற அஸ்லம் மெல்ல விலகி வழிவிட்டான். அவனைக் கடந்து போன முருகவேள் சாப்பாட்டு மேசையைச் சுற்றியிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்துகொண்டார். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார். எல்லோரும் அவரவர் இடங்களில் உட்கார்ந்துகொண்டார்கள்.

“என்ன மகன் இது? இது வேணாம்” என்று சொன்னபோது முருகவேளின் கண்கள் மேசையை நோக்கித் தாழ்ந்திருந்தன. தாட்சாயினி நாற்காலியில் சிலை போல அமர்ந்திருந்தார். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே அவரது கண்ணிமைகள் அடித்துக்கொள்வதால் தான் தெரிகிறது. சகோதரிகள் இருவருக்கும் உண்மையில் உதடுகளில் வேடிக்கையான புன்னகை அரும்பி எந்த நேரத்திலும் நழுவி மேசையில் விழத் தயாராகயிருந்தன. அஸ்லம் அமர்ந்திருந்தவாறே ஒவ்வொருவராகப் பார்த்தான். சகோதரிகளின் கண்களைப் பார்த்தபோது, அவனது உதடுகளிலும் புன்னகை துளிர்த்தது.

முருகவேளின் கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்துத் தாட்சாயினியும் மூக்கை உறிஞ்சிக்கொண்டார். முருகவேள் இப்போது அஸ்லமைப் பார்த்துக்கொண்டே மெதுவாக ஆரம்பித்தார்:

“மகன்…உனக்கு நாங்க என்ன குறை வைச்சிருக்கிறம் சொல்லு…நீ ஒரு வேலைக்கு கீலைக்குப் போய் நல்லா வரவேணும், அதவிட வேறொண்டும் நாங்கள் கேக்கல…”

“ஜாபர் வேலை செய்யிற மரக் கடையில வேலை இருக்கு. திங்கக்கிழமை என்னை கூட்டிக்கொண்டு போவான்…” இதைச் சொன்னபோது அஸ்லமின் கண்கள் ஒருமுறை மூடித் திறந்தன. 

“ஜாபர் ஆரு?”

“என்ர ஃபிரண்ட், அல்ஜீரியன் பொடியன்”

“அவனா உன்னை முஸ்லீமா மாறச் சொன்னது?”

“ஏன் எனக்குப் புத்தியில்லையா? இது கடவுளின்ர அழைப்பு!”

இப்போது முருகவேள் எழுந்து நின்றார். அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

“மகன் நீ எங்கிட குடும்பத்தப் பற்றி யோசிக்க வேணாமா? உனக்கு தங்கச்சிமாரும் இருக்கெல்லா..”

தான் முஸ்லீமாகியதற்கும் தங்கச்சிமாருக்கும் என்ன தொடர்பு என்று அஸ்லமுக்கு விளங்கவேயில்லை. இப்போது தந்தையோடு வாதம் செய்து பிரச்சினையைப் பெரிதாக்கவும் அவன் விரும்பவில்லை. தனது குடும்பத்தையும் இஸ்லாத்துக்கு அழைத்துச் செல்வதும் அவனது நோக்கமில்லை. அது சாத்தியம் என்று அவனுக்குத் தோன்றவும் தோன்றாது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எந்தக் கடவுள் நம்பிக்கையும் இருந்ததை அவன் பார்த்ததில்லை. வீட்டில் சமயச் சடங்குகள் எதுவுமே நடந்ததில்லை. ஒரு சாமி படம்கூட வீட்டில் கிடையாது. 

முருகவேள் இப்போது நடந்துவந்து மகனுக்குப் பின்னால் நின்று கொண்டார்.

“மகன் இந்த நாட்டில முஸ்லீமா நீ எப்பிடி இருப்பாய்? பொலிஸ் உனக்கு முன்னுக்கும் பின்னுக்கும் திரியும்… நாளைக்குப் பின்ன அரசாங்கத்தில ஒரு வேலை எடுக்க ஏலுமோ? முகமது, பாத்திமா எண்டெல்லாம் பேர் இருந்தாலே சிம்பிள் வேலைகூடக் கிடைக்காது… நீ ஒரு வீடு வாடகைக்கு எடுக்கிறது எண்டால் கூட பிரச்சினைதானே…”

‘அரசாங்கத்தையும் பொலிஸையும் விட, இறைவனே கோடி மடங்கு பெரியவனும் அதிகாரமுள்ளவனும்’ என்று சொல்லத்தான் அஸ்லம் யோசித்தான். ஆனால், இப்போது எது பேசினாலும் இவர்களுக்குப் புரியாது என நினைத்துக்கொண்டே அமைதியாக இருந்துவிட்டான்.

இப்போது தாட்சாயினி வாயைத் திறந்தார்.

“பப்பா சொல்லுறத கேளுங்கவன் மகன்.. உங்கிட நல்லதுக்குத்தானே சொல்லுறார்.”

அஸ்லம் சடாரென எழுந்துகொண்டே சொன்னான்:

“என்ன பிரச்சினை வந்தாலும் அல்லாஹ் பாதுகாப்பாயிருப்பான்”

சொல்லி முடித்ததும், மேலங்கியை எடுத்துக் கொழுவிக்கொண்டே, கதவைத் திறந்து வெளியே போய்விட்டான். அவன் மாடிப் படிகளில் குட்டி யானைபோலத் துள்ளி இறங்கும் சத்தம் வீட்டுக்குள் கேட்டது.

முருகவேளும் தாட்சாயினியும் ஆளையாள் பார்த்துக்கொண்டு என்ன பேசுவதெனத் தெரியாமல் நின்றிருந்தார்கள். முருகவேள் ஏதோ யோசனை வந்தவராக விறுவிறுவென்று நடந்துபோய், வீட்டுக்குள் நுழையும் கதவை உட்புறமாகத் தாழிட்டார். பின்பு, மெதுவாக மகனின் அறைக்குள் நுழைந்தார். சில வருடங்களாகவே அவர் இந்த அறைக்குள் வந்ததில்லை. அவர் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒழுங்கற்று இருக்கவில்லை. படுக்கை விரிப்புகள் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. அறைப் பொருட்கள் அவற்றுக்குரிய இடங்களில் ஒழுங்காகயிருந்தன. மேசையில் ஒன்றிரண்டு பிரஞ்சு மொழிப் புத்தகங்கள் கிடந்தன. அலுமாரியைத் திறந்து பார்த்தார். உடைகள் ஒழுங்காக மடிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் சிறையில் கற்றுக்கொண்டதாக மகன் ஒருமுறை தாட்சாயினியிடம் சொல்லிக்கொண்டிருந்தது முருகவேளின் ஞாபகத்திற்கு வந்தது.

அவர் தேடி வந்தது மகனின் பாஸ்போர்டை. அவர் எத்தனையோ சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறார். முஸ்லிமாக மாறிய பிரஞ்சு இளைஞர்கள், லிபியாவுக்கோ சிரியாவுக்கோ போய் சண்டையில் ஈடுபடுவதாகப் பேசிக்கொள்கிறார்கள். பகல் இரண்டு மணிவரை தூங்கும் தன்னுடைய மகன் அப்படியெல்லாம் போகக் கூடியவன் என்று அவர் நம்பவில்லை. ஆனாலும், அவரது மனது அதைப் பற்றியும் யோசிக்கத்தான் செய்தது. மேசையின் வலது பக்க இழுப்பறையைத் திறந்து பார்த்தார். உள்ளே பிரஞ்சு மொழியில் ‘திருக்குர் ஆன்’ நூல் இருந்தது. அதற்குக் கீழே, அழகிய பூ வேலைப்பாடுகளைக் கொண்ட மூன்று தொழுகைத் தொப்பிகள் இருந்தன. உள்ளங்கை அளவேயிருந்த புத்தகத்தை எடுத்து விரித்துப் பார்த்தார். அந்தப் புத்தகம் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் பக்கங்களில் மஞ்சள் நிறத்தால் கோடுகள் போடப்பட்டிருந்தன.

நண்பர்களின் சேர்க்கையால், மகன் ஏதோ விளையாட்டுத்தனமாக இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டான் என்றுதான் முருகவேள் இப்போதுவரை நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவன் முன்கூட்டியே திட்டமிட்டு நிதானமாகத்தான் செயற்படுகிறான் என இப்போது ஊகித்தார். அவரது கைகள் நடுங்கத் தொடங்கின. அந்த இழுப்பறையில் மகனின் பாஸ்போர்ட் இருக்கவில்லை. கடந்த சில மாதங்களாக மகனின் முகத்தில் தாடி வளர்வதற்கான காரணமும் இப்போதுதான் அவருக்கு உறைத்தது.

மேசையின் இடதுபக்க இழுப்பறையைத் திறந்து பார்த்தார். அங்கே சில ஆவணங்களோடு, மகனின் பாஸ்போர்டும் இருந்தது. பாஸ்போர்டை மெதுவாக எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். பாஸ்போர்டை எரித்துவிடலாமா என்ற யோசனை கூட மனதில் வந்தது. எதற்கும் சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் என முடிவெடுத்தார். பாஸ்போர்டை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு இழுப்பறையை மெதுவாக மூடினார். அவர்கள் எல்லோரும் தூங்கும்வரை, அஸ்லம் வீடு திரும்பவில்லை.

3

அதிகாலையில் எழுந்து, முருகவேள் குளியலறைக்குச் சென்றபோது, வழமைக்கு மாறாகக் குளியலறைக்குள் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ‘உள்ளே யார்?’ எனக் கேட்கலாம் என அவர் வாயைத் திறந்தபோது, குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு அஸ்லம் வெளியே வந்தான். எங்கேயோ கிளம்புவதற்குத் தயாராக, திருத்தமாக ஆடைகள் அணிந்திருந்தான். முருகவேளுக்கு மனதில் பாஸ்போர்ட் ஞாபகம்தான் வந்தது.

“எங்க மகன் வெள்ளணக் காலையிலேயே?” 

“பள்ளிவாசலுக்கு” என ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிட்டு அஸ்லம் வெளியே சென்றான். முருகவேளுக்கு மறுபடியும் கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. சமையலறைக்குள் சென்றவர், தண்ணீர் குழாயைத் திறந்து மடமடவென நீரை விழுங்கினார். நிமிர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். இன்னும் இருள் பிரியவில்லை. சாலை விளக்குகளுக்குக் கீழே தன்னுடைய மகன் நடந்துபோவதை அவர் பார்த்தார். மகன் பள்ளிவாசல் இருக்கும் திசையில்தான் நடந்துகொண்டிருந்தான். இங்கிருந்து பார்த்தால் தூரத்தே புற்தரையின் நடுவில் பள்ளிவாசலின் விளக்குகள் தெரியும். முருகவேள் அந்த விளக்குகளையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றார். தாட்சாயினி வந்து அவரைத் தொடும் வரை, அவர் மனது அவர் வசத்திலில்லை.

4

முருகவேள், மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, இன்றைக்கு எப்படியாவது மகனிடம் பேசி, அவனது மனதை மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானகரமான எண்ணம் அவருக்கிருந்தது. மகன் செல்லும் பள்ளிவாசலில் எப்போதுமே பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும். ஒருமுறை பள்ளிவாசலுக்குள் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைக் கூட வீசினார்கள். சென்ற மாதம் பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆயுதப்படையினர், சிலரைக் கைது செய்துகொண்டு போனார்கள் என்றும் கேள்விப்பட்டிருந்தார். அந்தப் பள்ளிவாசலை நிரந்தரமாகவே மூடிவிட நகரசபை கடுமையாக முயன்றுகொண்டிருந்தது. இப்படியான நாட்களில் அந்தக் குடியிருப்பே அமளிதுமளிப்படும். சந்தையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து அரபு மொழியில் முழங்குவார்கள். இரவில் திடீர் திடீரென வெடிச் சத்தங்கள் கேட்கும். தெருவில் நிற்கும் வண்டிகளும் குப்பைத் தொட்டிகளும் தீ வைத்துக் கொளுத்தப்படும். சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், அரசாங்கம் நான்கு நாட்களுக்கு ஊரடங்குச் சட்டம் கூடப் போட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் இந்த ஊரில் அப்போதுதான் மறுபடியும் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருக்கிறது என மூத்த மகள் முருகவேளிடம் சொன்னாள்.

முருகவேள் வீட்டுக்குள் நுழையும்போது, வீடு மரண அமைதியாகயிருந்தது. பெண் பிள்ளைகள் இருவரும் இன்னும் பாடசாலையிலிருந்து திரும்பவில்லை. தாட்சாயினி உணவு மேசைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அவரருகே இருந்த நாற்காலியில் மகனின் மேலங்கி கொழுவப்பட்டிருந்தது. ‘மகன் இருக்கிறானா?’ என்று மனைவியிடம் முருகவேள் சைகையிலேயே கேட்டார். தாட்சாயினி மகனின் அறையை நோக்கி முகத்தை அசைத்தார். 

முருகவேள் கைகால் கழுவி, உடை மாற்றிக்கொண்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தார். அவர் காலையில் வேலைக்குச் செல்லும்போது, உணவு மேசையில் வைத்துவிட்டுச் சென்ற பத்து ஈரோ பணம் அப்படியே இருந்தது. தாட்சாயினி தேநீர்க் குவளையையும் மூன்று கோப்பைகளையும் எடுத்துவந்து மேசையில் வைத்துவிட்டு, கணவனின் எதிரே அமர்ந்தார். முருகவேள் மூன்று கோப்பைகளிலும் தேநீர் நிறைத்து முடித்ததும், தாட்சாயினி ” மகன் தேத்தண்ணி குடிக்க வாங்க” என்று குரல் கொடுத்தார். 

அஸ்லமின் கையில் அந்தச் சிறிய அரபுப் புத்தகமிருந்தது. அவன் தந்தைக்கு அருகே அமர்ந்துகொண்டு, தேநீர் கோப்பையை எடுத்து உறிஞ்சத் தொடங்கினான். அவனது மற்றைய கை புத்தகத்தை விரித்து வைத்திருந்தது. படித்துக்கொண்டே தேநீரை வேகவேகமாகக் குடித்தான். அவன் குடித்து முடிக்கும் வரை அமைதியாகயிருந்த முருகவேள், மகனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டார்:

“மகனுக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது…ஏன் இந்த புதுக் கோலம்?

அஸ்லம் கையிலிருந்த புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு, தந்தையையும் தாயையும் கனிவாகப் பார்த்தான். 

“இது திடீரெண்டு எடுத்த முடிவில்ல..ஆறு மாசமாய் நான் இஸ்லாத்தைப் படிச்சுக்கொண்டிருக்கிறன்.”

“மகன் எங்க போயாம் படிச்சது?” தாட்சாயினி கேட்டாள்.

“எல்லா இடத்துக்கும் போனன். முதலில ரம்ஸியோட சேர்ந்து சும்மாதான் பள்ளிவாசலுக்குப் போனன். அந்த இடமும் ஆட்களும் அவையள் சொல்லுற விசயங்களும் எனக்குப் பிடிச்சிருக்கு…”

முருகவேள் சற்று நேரம் தலையைக் குனிந்துகொண்டிருந்தார். பின்பு, தேநீரின் கடைசி மிடறை உறிஞ்சிவிட்டுச் சொன்னார்:

“மகன் அப்பிடி உன்ர எண்ணத்துக்கு நீ நடக்க ஏலாது. உன்னைப் பெத்து வளர்த்தவயள் சொல்லுறதயும் நீ கேக்கத்தான் வேணும். இந்த குடும்பத்துக்கு சமயமில்ல, கடவுளில்ல.”

அஸ்லம் எழுந்துநின்று கையில் புத்தகத்தை எடுத்துக்கொண்டான். அவனுக்கு எப்போதும் வரும் சுள்ளென்ற கோபம், அவனின் வாய்க்குள் வந்து முட்டிக்கொண்டு நின்றது. அவன் வாய் தானாகவே திறந்தது.

“நீங்கள் காஃபிர்களா இருக்கிறீங்க எண்டதால, என்னாலேயும் அப்பிடி இருக்க ஏலாது.”

முருகவேளின் இடது கை மேசையைச் சடுதியில் முன்னே தள்ள, அவர் எழுந்த வேகத்திலேயே வலது கையால் மகனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். பல வருடங்களாகப் பாரம் ஏற்றியும் இறக்கியும் உரமேறிய அந்தக் கை முகத்தில் பட்டபோது, அஸ்லம் பொறி கலங்கிப்போனான். அவனது கையிலிருந்து புத்தகம் தானாகவே கீழே நழுவியது. அஸ்லம் தனது தாயாரைப் பார்த்தபோது, தாட்சாயினி நாற்காலியில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். 

முருகவேள் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல், படுக்கை அறைக்குள் போய்க் கட்டிலில் சாய்ந்துகொண்டார். வீட்டிலிருந்து வெளியே போகும் கதவு திறக்கப்பட்ட சத்தமும், அது அறைந்து மூடப்படும் சத்தமும் கேட்டன. தாட்சாயினி படுக்கை அறைக்குள் நுழைந்தபோது, வெள்ளை வெளேரென்ற அவரது முகம் சிவந்திருந்தது. கண்கள் துடித்துக்கொண்டிருந்தன. தாட்சாயினி அச்சப்படும்போது அவரது கண்ணிமைகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோணால் மாணாலாக வெட்டித் திறக்கும். தாட்சாயினி மெல்ல வந்து முருகவேளின் அருகில் அமர்ந்துகொண்டு, முருகவேளின் கண்களைப் பார்த்துச் சொன்னார்:

“நீங்க ஒண்டும் பேச வேணாம் துலீப் பப்பா.. நம்மிட மகனிட நசீபு இதுதான் எண்டா அப்புடியே நடக்கட்டும். ஆகாசத்தையும் பூமியையும் உண்டாக்கிறதுக்கு மொதலே எல்லாத்தையும் அல்லாஹ் முடிவு செஞ்சிட்டானுன்டு நீங்கானே சொல்வீங்க.”

5

“வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான் ” என்று இக்பாலின் வாப்பா மீரான் சொல்வார். இதை மீரான் இவ்வாறு தொடர்ச்சியாகச் சொல்லமாட்டார். நிரம்பிய குடிபோதையில் இருக்கும் போது மட்டுமே, அவர் இக்பாலை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இதைத் துண்டு துண்டாகக் கோர்வையில்லாமல் சொல்வார். திரும்பத் திரும்பச் சொல்வார்.

அப்போது இக்பாலின் குடும்பம் வவுனியாவில் குடியிருந்தது. இக்பாலின் தந்தை லொறிச் சாரதியாக இருந்தார். அவர் லொறி ஓட்டச் சென்றால், நான்கு நாட்களுக்கு வீட்டுக்குத் திரும்ப மாட்டார். திரும்பி வரும்போது, கொழும்பில் வாங்கிய பழக் கூடைகளுடனும் நிரம்பிய போதையிலும்தான் வருவார்.

மீரான், தான் ஓட்டும் லொறியை அவ்வப்போது வீட்டுக்கும் கொண்டுவருவார். அந்த லொறியில்தான் இக்பால் வண்டி ஓட்டிப் பழகிக்கொண்டான். பதினைந்து வயதிலேயே அவனுக்கு வண்டி ஓட்டத் தெரிந்திருந்தது. அந்த வயதில்தான் மீரானையும் அவன் நிரந்தரமாகப் புதைத்தான். இருபத்து மூன்று வயதிலே, தாயையும் தனக்கு இளைய சகோதரர்களையும் விட்டுவிட்டு, சாரதி வேலை செய்ய இக்பால் குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். 

குவைத்தில் பெரும் செல்வந்த வீட்டில்தான் சாரதி உத்தியோகம். ஆனால், வண்டி ஓட்டுவது மட்டுமே வேலையல்ல. வீட்டைச் சுத்தம் செய்வது, முதலாளியின் அலுவலகத்தைச் சுத்தம் செய்வது, கடை கண்ணிக்குப் போய் வருவது என நாள் முழுவதும் அவனுக்கு வேலை ஏவப்பட்டது. முதலாளி அதிகம் பேசும் பழக்கமில்லாதவன். பேசினால் இக்பாலின் முதுகில் சற்றே ஓங்கி அறைந்து பேசும் பழக்கமுள்ளவன். அந்த வீட்டில் முதலாளியின் மனைவியும் வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளுமிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே மரியாதையாக ஒரு வார்த்தை பேசத் தெரியாமலிருந்தது. வேலைக்குப் போன புதிதில் இக்பாலுக்கு அரபு மொழி புரியாது என்பதால் பிரச்சினை இருக்கவில்லை. இக்பாலுக்கு அரபு மொழி மெதுவாகப் பிடிபட்டபோது, அவனால் அங்கே இருக்க முடியவில்லை. ஆனால், இக்பாலின் பாஸ்போர்ட் முதலாளியின் கையிலிருந்தது. ஊருக்குத் திரும்பிப் போகும் போதுதான், முதலாளி அதைக் கொடுப்பானாம். இரண்டு வருடங்கள் கழித்துத்தான் விடுமுறை கொடுப்பதைப் பற்றி யோசிக்கவே முடியும் என்று முதலாளி சொல்லிவிட்டான். ஏஜெண்ட் சொல்லி அனுப்பிய சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் முதலாளி கொடுத்தான். கொஞ்சம் பிரயாசைப்பட்டால் இலங்கையிலேயே இந்தப் பணத்தைச் சம்பாதித்துவிடலாம் என்று இக்பாலுக்குத் தோன்றியது. இங்கிருந்து எப்படிக் கிளம்புவது என்பதுவே அவனது முழு நேரச் சிந்தனையாகயிருந்தது.

அந்த வீட்டில் கத்தாமாவாக இருந்தவளும் இலங்கையைச் சேர்ந்தவள்தான். மூதூர் பக்கத்தில் ஏதோவொரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். பெயர் சுமைரா. அவளோடு ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கு எப்போதாவது இக்பாலுக்கு வாய்ப்புக் கிடைக்கும். சுமைராவோடு பேசிய போதுதான், இந்த முதலாளி இரண்டு வருடங்களல்ல, மூன்று வருடங்களானாலும் ஊருக்குத் திருப்பி அனுப்பமாட்டான் என்பது இக்பாலுக்குத் தெரிய வந்தது.

சுமைரா தன்னுடைய இருபத்தோராவது வயதில், ஒரு வயதுக் குழந்தையைக் கணவனுடன் விட்டுவிட்டு, இங்கே பணிப்பெண் வேலைக்காக வந்திருக்கிறாள். சம்பளத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கணவனின் வங்கிக் கணக்குக்கு முதலாளி அனுப்பிவிடுகிறான். மூன்று வருடங்களாகியும் சுமைராவைத் திருப்பி அனுப்பமாட்டேன் என்கிறானாம். அந்த வீட்டில் சுமைராவுக்குத் தூங்குவதற்கு நான்கு மணிநேரங்கள் கூடக் கிடைப்பதில்லை. இடையிடையே முதலாளியம்மா அவளை அடிப்பதும் உண்டு என்று சொன்னாள் சுமைரா. ஒருநாள் சுமைராவுடன் இக்பால் பேசிக்கொண்டிருப்பதை முதலாளி கண்டுவிட்டான். இம்முறை உண்மையாகவே இக்பாலின் முதுகில் வலுவான குத்தொன்று விட்டான் முதலாளி.

ஒருநாள் காலையில், சுமைரா வீட்டுக்குள்ளிருந்து கத்திக் குழறி அழும் சத்தத்தை இக்பால் கேட்டான். இக்பாலால் என்னதான் செய்ய முடியும். அவன் காரை இன்னும் அழுத்தி அழுத்தித் துடைத்துக்கொண்டு, காதுகளைக் கூர்மைப்படுத்திக் கேட்டான். சுமைரா தமிழில் ஏதோ சொல்லிச் சொல்லிக் கத்துகிறாள். ஆனால், அவள் என்ன சொல்கிறாள் என்பது இவனுக்கு முழுவதுமாகப் புரியவில்லை. 

அப்போது முதலாளி கையில் ஒரு கடிதத்தோடு வெளியே வந்தான். இக்பாலைப் பார்த்து “தாள் ஹின” என்று வெறுப்போடு கத்தினான். இக்பால் அருகே சென்றதும், கடிதத்தை அவனிடம் கொடுத்துவிட்டு “இதில் என்ன இழவு எழுதியிருக்கிறது என்று படித்துச் சொல் சவ்வாக்” என்றான் முதலாளி.

அந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. சுமைராவின் சிநேகிதி யாரோ மூதூரிலிருந்து எழுதியிருக்கிறாள். சாம வேளையில் கிராமத்துக்குள் பாய்ந்த தமிழ் இயக்கம், முஸ்லீம்களின் குடியிருப்புகளை எரித்துவிட்டதாகவும், சுமைராவின் கணவனும் குழந்தையும் எரிந்து சாம்பலாகிவிட்டார்கள் என்றும் அந்தக் கடிதத்திலிருந்தது. 

கடிதத்தில் இருந்ததை இக்பால் திணறித் திணறி அரபியில் மொழிபெயர்த்து முதலாளியிடம் சொன்னான். அதைக் கேட்டதும் முதலாளி அப்படியே சக்கப்பணிய தரையில் உட்கார்ந்துவிட்டான். பின்பு அவன் கையை உயர்த்த, கையைப் பற்றி இக்பால் முதலாளியைத் தூக்கிவிட்டான். முதலாளி இக்பாலிடம் கடிதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே சென்றான். சற்று நேரம் கழித்து, முதலாளியின் மனைவி இக்பாலை அழைத்து “நீ அவளுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லு” என்றாள். 

இக்பால் கால்கள் நடுங்க வீட்டுக்குள்ளே சென்றான். சுமைரா ஒரு மூலைக்குள்ளே ஒடுங்கிப்போய்த் தரையில் உட்கார்ந்திருந்தாள். இவனைக் கண்டதும் வெறித்துப் பார்த்தாள். என்ன பேசுவது என்று தெரியாமல் “ராத்தா ஊருக்குப் போகப் போறீங்களா?” என்று இக்பால் கேட்டான்.

சுமைராவின் கண்கள் கீழே தாழ்ந்தன. அவள் தலையைப் பின்பக்கமாகச் சுவரில் மடாரென மோதிக்கொண்டு சொன்னாள்:

“போய் என்னத்தச் செய்ய?”

“என்ன சொல்கிறாள் அவள்?” என்று முதலாளி சற்றுப் பயந்த தொனியில் இக்பாலுக்கு பின்னால் நின்று கிசுகிசுத்தான். சுமைரா சொன்னதை இக்பால் அரபியில் சொன்னபோது, “தய்யுப்” என்று முணுமுணுத்தான் முதலாளி. அதற்கு ‘நல்லது’ என அர்த்தம்.

பின்வந்த நாட்களில் சுமைராவே அவ்வப்போது வலிய வந்து இக்பாலோடு பேசினாள். அவள் இவனிலும் ஒரு வயது மூத்தவள். இவர்கள் பேசுவதைக் கண்டாலும் இப்போது முதலாளி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. அதிருப்தியாகத் தலைமை மட்டும் அசைத்துக்கொள்வான்.

யூலை மாதத்தில், முதலாளியின் குடும்பம் ஒரு மாதகால விடுமுறையைப் பிரான்ஸ் நாட்டில் கழிக்க முடிவெடுத்தபோது, தங்களுக்குப் பணி செய்ய இக்பாலையும் சுமைராவையும் கூடவே அழைத்துச் சென்றார்கள். விமானத்தில் முதலாளி குடும்பம் முதல் வகுப்பிலும், இக்பாலும் சுமைராவும் சாதாரண வகுப்பிலும் பயணம் செய்தார்கள். இவர்கள் இருவருக்கும் அருகருகேதான் இருக்கைகள். ஏழு மணிநேர விமானப் பயணத்திலும், அதிகமாகப் பேசிக்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. இவனுடைய குடும்பத்தைப் பற்றித்தான் சுமைரா அதிகமும் விசாரித்தாள். அவளின் குடும்பத்தைப் பற்றிக் கேட்பதற்கு எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

குவைத்தில் விமானத்தில் ஏறும்போது, முதலாளி பாரம்பரிய அரபு உடையணிந்திருந்தான். அவனது மனைவியும் இரு பெண்களும் எப்போதும் போலவே ‘அபாயா’ அணிந்து முகத்தை மூடித் திரையிட்டிருந்தார்கள். ஆனால், அந்த குடும்பம் பிரான்ஸின் நீஸ் நகர விமான நிலையத்தில் இறங்கும்போது, முற்றாக வேறு மாதிரியாக இருந்ததைக் கண்டு இக்பால் கண்களை விரித்து, உடனடியாகவே முகத்தைத் தாழ்த்திக்கொண்டான்.

முதலாளி அரைக் காற்சட்டையும் அரைக் கைச் சட்டையும் அணிந்திருந்தான். அவனின் மனைவி குட்டைக் கவுனுக்கு மாறியிருந்தாள். இரு பெண் பிள்ளைகளும் ஜீன்சும் ரீ சேர்ட்டுமாக உற்சாகத்தில் குதித்துக்கொண்டிருந்தார்கள். விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, மறக்காமல் இக்பாலினதும் சுமைராவினதும் பாஸ்போர்டுகளை வாங்கி, முதலாளி தனது கைப்பையில் வைத்துக்கொண்டான்.

கடற்கரையோரமாக ஒரு பெரிய ஆடம்பர வில்லாவை முதலாளி வாடகைக்குப் பிடித்திருந்தான். விமான நிலையத்தின் வாசலிலே பென்னம் பெரிய சொகுசு வண்டி, வெள்ளைக்காரச் சாரதியுடன் முதலாளி குடும்பத்துக்காகக் காத்திருந்தது. இன்னொரு வண்டியில் பெட்டிகளும் சாமான்களும் இக்பாலும் சுமைராவும் ஏற்றப்பட்டு, கடற்கரை வில்லாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அங்கே சுமைராவுக்குத்தான் நிறைய வேலைகளிருந்தன. காலை உணவையும் இரவு உணவையும் அவள் தயாரிக்க வேண்டும். வீட்டையும் படுக்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். துணிகளை இயந்திரத்தில் துவைத்து, உலர வைத்துப் பெட்டி போட்டுத் தேய்க்க வேண்டும் என ஏகப்பட்ட வேலைகள். ஒவ்வொரு நாளும், முதலாளி குடும்பத்தினர் நள்ளிரவுக்குப் பிறகே வில்லாவுக்குத் திரும்பினார்கள். திரும்பியவுடன் இன்னொருமுறை உணவருந்துவார்கள். சுமைரா விழித்திருந்து பரிமாறிவிட்டு, பாத்திர பண்டங்களைக் கழுவிவைத்துவிட்டே தூங்கச் செல்ல வேண்டும். குவைத்தில் நான்கு மணிநேரமாவது தூங்கியவளுக்கு, இங்கே இரண்டு மணிநேரம் கூடத் தூங்க முடியாமலிருந்தது. 

இக்பாலுக்கு இங்கே அதிக வேலையில்லை. குவைத்தில் அதிகாலையிலேயே எழுந்து தொழுகைக்குச் செல்லும் முதலாளி, இங்கே காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பான். முதலாளி கடற்கரையில் நடைபோடச் செல்லும்போது, முதலாளியின் புகையிலை, புகைக்கும் குழாய் அடங்கிய சித்திரப் பெட்டியைக் காவியவாறு இக்பால் முதலாளியுடனேயே போக வேண்டும். முதலாளிக்கு என்னதான் பருத்த தொந்தியென்றாலும், அவன் கால்களை அகல அகலமாக வைத்து அதி வேகமாக மூச்சிரைக்க நடப்பான். இக்பால் ஓட்டமும் நடையுமாகத்தான் பின்னால் போவான். நள்ளிரவுக்குப் பின்னால் வில்லாவுக்குத் திரும்பும்போது, முதலாளி போதையில் உளறிக்கொண்டுதான் வருவான். அப்போது அவன் இக்பாலின் முதுகில் தட்டும் விசையிலிருந்து, அன்று சூதாட்ட விடுதியில் முதலாளி கொஞ்சப் பணத்தை இழந்தானா, நிறையப் பணத்தை இழந்தானா என்பதை இக்பால் புரிந்துகொள்வான்.

காலையில் முதலாளி குடும்பம் புறப்பட்டுச் சென்றதும், சமையலுக்கும் பிற தேவைகளுக்கும் வேண்டிய பொருட்களை சுமைரா சொல்லச் சொல்ல, இக்பால் தாளில் எழுதிக்கொண்டு கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வருவான். திரும்பி வந்ததும் கணக்கு எழுதி வைப்பான். முதலாளி அவனிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்திலுள்ள மீதிக்கும் கணக்குக்கும் பொருந்திப் போகிறதா என்று பார்ப்பான். அதற்குப் பின்பு அவனுக்குப் பெரிதாக வேலையில்லை. நள்ளிரவில் முதலாளியின் வண்டி வரும்போது, முன் வாசற் கதவைத் திறந்துவிடுவான். முதலாளி குடும்பம் வீட்டுக்குள் சென்ற பின்பு, வீட்டுக்குப் பின்னாலிருக்கும் குப்பைத் தொட்டியைத் தள்ளிச் சென்று தெருவில் விடுவான். கதவை மூடிவிட்டுத் தூங்கச் செல்வான். இவனுக்கான படுக்கை அறை வில்லாவிற்குப் பின்னால் தனியாக இருந்தது. வேலைக்காரர்களுக்கான அந்த அறை, வவுனியாவிலுள்ள இவனது வீட்டைப்போல நான்கு மடங்கு பெரிதாகயிருந்தது. அதிகாலையிலேயே எழுந்து, வெற்றுக் குப்பைத் தொட்டியை இழுத்துவந்து வீட்டுக்குப் பின்னால் மறைத்து வைப்பான். 

அவர்கள் நீஸ் நகரத்துக்கு வந்து ஒரு வாரம் கழிந்திருந்தபோது, வழமை போலவே இக்பால் கடைத் தெருவுக்குப் புறப்பட்டான். இன்றைக்கு ஒரு புதிய வழியால் கடைத் தெருவை நோக்கிச் செல்லலாம் என அவன் நினைத்தான். இவன் இப்படியாக ஊரைப் பார்த்தால்தான் உண்டு. கடைத் தெருவின் மத்தியிலுள்ள தேவாலயத்தின் கோபுரம் இங்கிருந்து பார்க்கும் போதே தெரிந்தது. எந்த வழியால் போனாலும், அந்தக் கோபுரத்தில் ஒரு கண்ணை வைத்திருந்தால் கடைத் தெருவை அடைந்துவிடலாம் என்று இக்பால் கணக்குப் போட்டான்.

புதிய வழி நினைத்ததுபோல சுலபமாக இருக்கவில்லை. எங்கெல்லாமோ சுற்றிச் சுழன்று அது அவனை அழைத்து வந்தது. ஒருவழியாகக் கடைத் தெருவை நெருங்கியபோது, வீதியோரத்தில் அடக்கமாகயிருந்த ஒரு சிறிய உணவகத்தை கண்டதும் இக்பால் அப்படியே நின்றான். கண்ணாடிப் பெட்டிக்குள் கடலை வடைகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. நிமிர்ந்து கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்தான். ‘காந்தி கபே’ என்றிருந்தது. உள்ளே நுழைந்தான். கதவைத் திறந்ததுமே தமிழ் சினிமாப் பாட்டு மெல்லிதாகக் கேட்டது.

அந்த உணவகத்தில் நான்கு குட்டி மேசைகள் மட்டுமேயிருந்தன. கடைக்காரியைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. கடைக்காரிக்கு அய்ம்பது வயதிருக்கும். பாவாடை, சட்டை போட்டிருந்தார். வாயில் வெற்றிலையை மென்றுகொண்டே “வாங்கோ..இருங்கோ தம்பி” என்றார். வடையும் சம்பலும் மட்டுமல்லாமல், கடைக்காரி தயாரித்துக் கொடுத்த பால் தேநீரும் அமுதமாகயிருந்தது. “தம்பி ஒரு வாய் வெத்தில போடுறீங்களோ…” என்று கேட்டார் கடைக்காரி. 

அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த உணவகத்துக்குப் போய், ஒரு தேநீர் குடிப்பது இக்பாலுக்கு வழக்கமாகியது. கடைக்காரிக்கு ஆட்களைப் பேசத் தூண்டிவிடும் வல்லமையிருந்தது. இவன் தன்னுடைய முதலாளியோடு இங்கு வந்திருப்பதாகவும், இரண்டு வாரங்களில் குவைத்துக்குத் திரும்பப் போவதாகவும் சொன்ன போது, இப்படியே பிரான்ஸிலேயே இருந்துவிடுமாறு கடைக்காரி இக்பாலுக்கு ஆலோசனை கொடுத்தார். அதற்கான வழியையும் அவரே சொன்னார்.

கடைக்காரி சொன்ன வழியைப் பற்றியே, இக்பால் சில நாட்களாகத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். குவைத்தில் பத்து வருடங்களில் சம்பாதிப்பதை, பிரான்ஸில் ஒரே வருடத்தில் சம்பாதிக்கலாம் என்கிறார் கடைக்காரி. இந்த நாட்டிலேயே நிரந்தர விசாவையும் சுலபமாகப் பெற்றுவிடலாமாம். குவைத் கபீலும் குடும்பமும் இவனது பாஸ்போர்டையும் பிடுங்கி வைத்துகொண்டு, அடிமைத்தனம் செய்கிறார்கள். சுமைரா சொல்வதை வைத்துப் பார்த்தால், அவர்களிடமிருந்து விடுதலையே இல்லைப் போலத்தானிருந்தது. இப்படிக் குவைத்தில் வந்து மாட்டிக்கொண்ட பல பேரை அவனுக்குத் தெரியும். கடைக்காரி பலருக்கு வழிகாட்டிய அனுபவசாலியாகத் தெரிந்தார். இந்த நகரத்துக்கு அருகிலிருக்கும், இத்தாலி நாட்டிலிருந்து கிளம்பி, பிரான்ஸ் எல்லையைத் திருட்டுத்தனமாகக் கடந்து, இந்த நகரத்துக்கு வெறும் கையாக வந்து சேர்ந்த பலருக்கும் அவர் வழிகாட்டியதாகச் சொன்னார். கடைக்காரி சொல்வது சரி போலத்தான் இக்பாலுக்கும் பட்டது. ஆனால், முதலாளி இவனது பாஸ்ப்போர்டை பூதம் போலக் காத்து வைத்திருக்கிறானே. அதை இவன் கடைக்காரியிடம் சொன்னபோது, “தம்பி நீங்கள் விசா எடுத்து சட்டப்படி வந்ததால இஞ்ச அகதியாப் பதிய ஏலாது. அதை மறவுங்கோ. தமிழ்ப் பெயரில டொக்குமென்ட்ஸ் எடுத்துத்தர ஆளிருக்கு. என்ன ஒரு அய்நூறு ஃப்ராங் கேப்பார்”. 

இவனுடைய மூன்று மாதச் சம்பளப் பணம் முதலாளியிடமிருக்கிறது. அதை இப்போது வாங்க முடியாது. ஆனால், கடையில் பொருட்கள் வாங்கவென முதலாளி கொடுத்த பணம் அவனிடமிருக்கிறது. கணக்குப் பார்த்தால் அது அவனுடைய மூன்று மாதச் சம்பளத்துக்கும் குறைவுதான். படைத்தவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, குவைத் முதலாளியிடமிருந்து தப்பிச் செல்ல இக்பால் முடிவெடுத்தான். இந்த நகரத்திலிருந்து தொள்ளாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பாரிஸ் நகரத்துக்குச் சென்று விட்டால், நீரில் போட்ட சீனியாகக் கரைந்துவிடலாம் என்றார் கடைக்காரி. அங்கே வேலை கிடைப்பது ஒன்றும் கடினமில்லையாம்.

காலையில் முதலாளி குடும்பம் பத்து மணியளவில் வெளியே போனது. இங்கிருந்து இரயில் நிலையம் இருபது நிமிட நடை தூரத்திலிருந்தது. பாரிஸ் செல்லும் பன்னிரண்டு மணி இரயிலைப் பிடித்தால், எட்டு மணிநேரத்தில் பாரிஸில் இறங்கலாம் எனக் கடைக்காரி தெளிவாகச் சொல்லியிருந்தார். தான் தப்பிப் போவதைப் பற்றி, சுமைராவிடம் சொல்லவே கூடாது என்றுதான் இக்பால் முதலில் நினைத்திருந்தான். இவன் தப்பிச் சென்றது தெரிய வந்தவுடன் சுமைராவுக்கு அடி நிச்சயம். மொத்தக் கோபத்தையும் அவள் மீதுதான் காட்டுவர்கள். ஆதலால் சுமைராவிடம் சொல்லிக்கொள்ளாமல் போகவும் அவனால் முடியவில்லை. பாதி உண்மையையாவது சுமைராவிடம் சொல்லிவிடுவது என்ற முடிவுடன் பதினொரு மணியளவில் சமையலறைக்குள் நுழைந்தான். சுமைரா மும்முரமாகச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள். “ராத்தா…நான் இத்தாலிக்கு ஓடிப் போகப் போறேன்”.

சுமைரா அவனை வெறித்துப் பார்த்தாள். அவளது வலது கை எழுந்து அவளது மார்பைத் தொட்டது. அவளது வாய் மெதுவாகத் திறந்து கேட்டது:

“நான்?”

6

இக்பாலும் சுமைராவும் பாரிஸ் இரயில் நிலையத்தில் இறங்கி, கால்போன போக்கில் சிறிது தூரம் நடந்து ஒரு தங்கும் விடுதியைக் கண்டுபிடித்தார்கள். “ரெண்டு ரூமா எடுக்க வேணும்?” என்று இக்பால் கேட்டபோது “நம்மட்ட அம்பட்டுக் காசில்லையே…” என்றாள் சுமைரா. 

அடுத்த நாள் காலையில், இருவரும் நீஸ் நகரத்துக் கடைக்காரி கொடுத்திருந்த முகவரிக்குப் புறப்பட்டார்கள். தலையில் முக்காடு இல்லாத சுமைரா இன்னும் இளமையாகத் தோன்றினாள். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்தபோது, மெத்ரோ நிலையத்துக்கு வழி சொன்னார்கள். மெத்ரோ நிலையத்தில் அங்குமிங்குமாக இலங்கைச் சாயல் முகங்கள் தெரிந்தன. இவர்களுக்குப் பெரிய நிம்மதியாகயிருந்தது. 

இவர்கள் மெத்ரோவுக்குள் ஏறியபோது, உள்ளேயும் ஒரு நடுத்தர வயது இலங்கை முகம் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டுமென்று அந்த மனிதரின் எதிரில் காலியாகயிருந்த இருக்கைகளில் இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள். இவர்களைப் பார்த்ததும் அந்த மனிதர் தலையசைத்துப் புன்னகைத்தார். டிப்டொப்பாக கோட் -சூட் அணிந்திருந்தார். அவரது கையில் தமிழ்ப் பத்திரிகையொன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்ததை இக்பால் கவனித்தான். உடனேயே தனது கையிலிருந்து முகவரிச் சீட்டை அவரிடம் நீட்டியவாறே கேட்டான்:

“அண்ணன் இந்த இடத்துக்கு எப்பிடிப் போறது?”

அந்த மனிதர் துண்டுச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு “இதிலயிருந்து மூண்டாவது ஸ்டேசனில இறங்குங்கோ” என்றார். முகவரிச் சீட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டுக் கேட்டார்:

“எவ்விடம் ஊரில?”

“நான் வவுனியா அண்ணன், இவ மூதூர்”

“மூதுரோ… அந்தப் பக்கம்தானே இப்ப கடுமையான பிரச்சினையாக் கிடக்கு…எளிய சோனகங்கள் தமிழ் ஆக்கள வெட்டித் தள்ளுறாங்கள்… தங்கச்சி உங்கிட குடும்பம் பத்திரமாயிருக்கோ?” 

அந்த மனிதர் சுமைராவைப் பார்த்தபோது, சுமைரா அவரைப் பார்த்து மெல்லிதாகப் புன்னகை செய்தாள். அதைக் கண்டபோது, இக்பாலுக்குத் தேகம் நடுங்கத் தொடங்கிவிட்டது. நெஞ்சுக் கூட்டுக்குள் ‘சுபஹானல்லாஹ்’ என்ற முணுமுணுப்பு எழுந்தது. இக்பால் வாயை இறுக மூடிக்கொண்டான். அந்த மனிதர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்விட்டார். 

மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கி, இருவரும் வெளியே வந்தார்கள். அந்தப் பகுதி முழுவதும் தமிழ்ச் சனங்களால் நிறைந்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் தமிழ்க் கடைகளும், உணவகங்களும், விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகளும் நிறைந்திருந்தன. இக்பால் சுமைராவின் முகத்தைப் பார்த்தான். அவளது கண்ணிமைகள் வெட்டி வெட்டித் திறந்துகொண்டிருந்தன. அவள் இக்பாலின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

நீஸ் கடைக்காரி குறித்துக் கொடுத்திருந்த இடத்திலிருந்த தனபாலன், இவர்கள் இருவரையும் அகதிகளாகப் பதிவு செய்யும் வேலைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நீஸ் கடைக்காரி சொல்லியிருந்த தொகைக்கு நான்கு மடங்கு அதிகமாகவே தனபாலன் பணம் கேட்டார். ஆனால், பணத்தைத் தவணைமுறையில் கொடுத்தால் போதுமானதென ஒரு சலுகையும் கொடுத்தார். வேலை தேடுவதற்கான வழியையும் அவரே இக்பாலுக்குச் சொல்லிக்கொடுத்தார்.

அரை மணிநேரத்திற்குள்ளாகவே தனபாலனின் கைத்திறமையால் தயாரிக்கப்பட்டு, இவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பிறப்புச் சான்றிதழ்களில், இக்பாலுடைய பெயர் நாகநாதன் முருகவேள் என்றும், சுமைராவின் பெயர் செல்வராசா தாட்சாயினி என்றுமிருந்தன. இருவருக்கும் ஒரு திருமணச் சான்றிதழையும் தனபாலனே தயாரித்துக் கொடுத்தார். “குடும்பம் எண்டால் விசா லேசா எடுக்கலாம்” என்று தனபாலன் புன்னகைத்தார். இவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளென்றும், இலங்கை இராணுவத்தால் தேடப்படுபவர்கள் என்றும் வரலாறு எழுதி, அகதி விண்ணப்பத்தைத் தயாரித்தார் தனபாலன்.

இதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, துலீப் பிறந்தபோது, தங்களுடைய அடையாளங்களை முழுவதுமாக அழித்துவிடுவது என முருகவேள் தம்பதி முடிவெடுத்தார்கள். 

7

கட்டிலில் சாய்ந்திருந்த இக்பாலுக்கு அருகே உட்கார்ந்திருந்த சுமைரா, கணவனின் கையைப் பிடித்துக்கொண்டார். 

“துலீப் பப்பா, எண்டக்கிம் நீங்க ஆரையும் கை நீட்டி அடிச்சதில்ல…” என்று சுமைரா முணுமுணுத்தார். இக்பால் மெதுவே சுமைராவின் கையை விலக்கினார். கட்டிலிலிருந்து துள்ளியெழுந்து விரைந்து போய் மகனின் அறைக்குள் நுழைந்தார். மேசையின் இழுப்பறைகளைத் திறந்து பார்த்துவிட்டு மூடினார்.

நள்ளிரவில் மறுபடியும் ஒருமுறை மகனின் அறைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே யாருமில்லை. மூன்று மணியளவிலும் போய்ப் பார்த்தார். மகன் வீடு திரும்பியிருக்கவில்லை. ஓசையில்லாமல் மேசையின் இழுப்பறைகளைத் திறந்து பார்த்து மூடினார்.

அதிகாலையில் எழுந்து குளியலறைக்குச் சென்றபோது, அங்கே மகன் இருக்கலாம் என இக்பால் நினைத்தார். ஆனால், குளியலறை இருளாகயிருந்தது. குளித்துவிட்டு, மறுபடியும் மகனின் அறைக்குள் போய்ப் பார்த்தார். யாருமில்லை. 

சமையலறைக்குள் நுழைந்து விளக்கைப் போடாமலேயே, குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தார். சமையலறை ஜன்னல் வழியே பள்ளிவாசல் இருந்த திசையைப் பார்த்தார். அந்தத் திசையில் நெருப்பு உயரே எரிவதைக் கண்டதும் பதறிப் போனார். கண்ணை வெட்டிப் பார்த்தபோது, பள்ளிவாசலின் விளக்குகள் தெரிந்தன. இப்போது நெருப்பு மறுபடியும் எரிவதைப் போலிருந்தது. அவரால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. மறுபடியும் மகனின் அறைக்குள் நுழைந்து வெளியே வந்தார். ஓசை எழுப்பாமல் வாசற் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார்.

அவர் புற்தரையை நெருங்கியபோது பள்ளிவாசல் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. மேலங்கியின் பைக்குள் கையை விட்டு, தொழுகைத் தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்துகொண்டார்.

(நீலம் – டிசம்பர் 2020)

 

http://www.shobasakthi.com/shobasakthi/2021/01/22/மூமின்/?fbclid=IwAR0ahbEHUmlgmbKKgn8xci3EgR84SUOL0mbskVTmWioqcEl1MG7vHke7MHU

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையை சுவியண்ணா இன்னும் வாசிக்கவில்லையோ அல்லது தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருக்கிறாரோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

இந்த கதையை சுவியண்ணா இன்னும் வாசிக்கவில்லையோ அல்லது தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருக்கிறாரோ 😀

இப்பதான் வாசித்து முடித்தேன்.....அதுக்குள்ளே அவசரம்.....!

நன்றாக இருக்கின்றது கதை.....பாகற்கொட்டை போட்டால் சுரைக்கொட்டை முளைக்காது.அப்படித்தான் இதுவும்.அரபி நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்களின் நிலைமையை கொஞ்சம் சொல்லியிருக்கின்றார். மிகவும் கஷ்டம்.......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜாதி காதவா. அல்லா திருப்பி குடுப்பான் சொல்ரது இதுதான் வா. கத எழுதுனவருக்கு அரபி மாலும் போல வா. கடம்மா, கபீல், தாள், தய்யூப் வார்த்தைகளை பார்த்தால் தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, colomban said:

ஜாதி காதவா. அல்லா திருப்பி குடுப்பான் சொல்ரது இதுதான் வா. கத எழுதுனவருக்கு அரபி மாலும் போல வா. கடம்மா, கபீல், தாள், தய்யூப் வார்த்தைகளை பார்த்தால் தெரிகின்றது. 

கதை எழுதுவதற்கு இயன்றவரை ஆராய்ச்சி செய்யவேண்டும், தகவல்களைத் திரட்டவேண்டும். கூகிளையும் பயன்படுத்தவேண்டும்.

சொற்களை  வைத்து கதையைச் செதுக்கும் நுணுக்கம் தெரிந்தவர் ஷோபாசக்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையில் புலிகளால் முஸ்லீம் குடும்பம் அழிக்கப்பட்ட்து என்றும் எழுதி இருக்கிறார்....நல்ல காலம் பேரை மாத்தினவை நாத்தீகமாய் இருந்தவை என்று எழுதியிட்டார் . இல்லாட்டில் மூனாக்களிடம் வேண்டி கட்டியிருப்பார்
 

On ‎24‎-‎01‎-‎2021 at 10:00, suvy said:

இப்பதான் வாசித்து முடித்தேன்.....அதுக்குள்ளே அவசரம்.....!

நன்றாக இருக்கின்றது கதை.....பாகற்கொட்டை போட்டால் சுரைக்கொட்டை முளைக்காது.அப்படித்தான் இதுவும்.அரபி நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்களின் நிலைமையை கொஞ்சம் சொல்லியிருக்கின்றார். மிகவும் கஷ்டம்.......!  😎

வளமையாய் நீங்கள் தான் முதலில் வாசித்து விட்டு கொமண்ட் போடுவீர்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.