• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கந்தப்பு

கீதை காட்டும் பாதை

Recommended Posts

கீதை காட்டும் பாதை

- இளங்கோ

நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத்தனை வீடுகளிலும் அந்த வரிகள் தொங்க விடப்பட்டுள்ளன. அது ஏதோ உலகமகா தத்துவங்களில் ஒன்று என நம்மவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கீதையைப் படிக்கும் முன் நானும் அது போன்ற ஒரு மயக்கத்தில்தான் ஆழ்ந்திருந்தேன். மிகுந்த ஆர்வத்தோடு அதனைப் படிக்கத் தொடங்கினேன். இறுதியில், மனித வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன் தராத உழுத்த வேதாந்தங்களின் தொகுப்புத்தான் கீதை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மகாபாரதம் என்பது கண்ணனின் வாழ்க்கையையோ அல்லது அவனது சிறப்புக்களையோ பெருமைப் படுத்த எழுதப் பட்ட இலக்கியம் அல்ல. துஷ்யந்தன், பரதன், (துஷ்யந்தனின் மகனாகிய பரதனின் பெயரிலிருந்துதான் பாரதம் என்ற பெயர் உருவாகியது) யயாதி, குரு, சந்தனு, போன்ற சந்திர வம்சத்து அரசர்களைப் பற்றிய தொகுப்பு நூல்தான் அது. அதன் பெரும் பகுதி அந்த வம்சத்தில் தோன்றிய பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த பங்காளிச் சண்டையை விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இறுதியில் அபிமன்யுவின் பேரனும் பரீட்சித்து மன்னனின் மகனுமாகிய ஜனமேயனுடன் அந்தப் பெருங்கதை முடிவடைகிறது. இதில் கண்ணன் பாத்திரமானது பாண்டவர்களின் நண்பனாக இடையில் வரும் ஒன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது. கதைத் தன்மையின்படி மகாபாரதத்தின் முக்கிய கதா பாத்திரம் பீஷ்மரேயன்றிக் கண்ணன் அல்ல.

எனவே கண்ணனை முதன்மைப் படுத்துவதற்காகவும் மகாபாரதத்தில் வி;ட்ட குறை தொட்ட குறையாக சொல்லப் பட்ட வருணாசிரம தர்மத்தை வலியுறுத்துவதற்காகவும் இடையில் வந்தவர்கள் மகாபாரதத்தோடு இணைத்த ஒரு இடைச்செருகலே பகவத் கீதை. பதினெட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய பகவத் கீதையின் பெரும் பகுதி, கண்ணன் தன்னைத்தானே தன் பெருமைகளை பறை சாற்றிக் கொள்வதாகவே அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டாக, சிவன், காளி, போன்ற மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சிற்றறிவு படைத்தவர்கள் என்றும் தன்னை (கண்ணனை) வணங்குபவர்களே உண்மையானவர்கள் என்றம் சொல்லப் பட்டிருக்கிறது. (பகவத் கீதை அத்தியாயம் - 7, சுலோகம் 20,21,22,23).

இதில் இன்னொரு வேடிக்கையையும் நாம் பார்க்கலாம். மகாபாரதத்தைக் குறிப்பிடும் போது வியாசர் அருளிய மகாபாரதம் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கீதையைப் பற்றி குறிப்பிடும் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது என்று குறிப்பிடுகிறார்கள். கீதை போர்க்களத்தில் உபதேசிக்கப் பட்டதென்றால் அப்போது கூட இருந்து எழுதியது யார்? கீதையின் முழுச் சுலோகங்களைச் சொல்லி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாளாவது தேவைப் படும். அந்த நாளில்தான் முதல் நாள் போரும் நடை பெறுகிறது. அப்படியானால் இது எவ்வாறு சாத்தியம்? இவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்ததை எதிரில் இருந்த கௌரவப் படை வாய் பார்த்துக் கொண்டிருந்ததா?. எனவே கீதை போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கப் படவும் இல்லை. அதை உபதேசித்தது கண்ணனும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு இடைச் செருகலே.

கீதையானது கற்பனையான ஒன்று, அது போர்க்களத்தின் நடுவில் உபதேசிக்கபடவில்லை என்பதை இந்துத் துறவியான விவேகானந்தரும் ஒப்புக் கொள்கிறார். (சுவாமி விவேகானந்தர் எழுதிய கீதை பற்றிய சிந்தனைகள் - பக்கம் 1-6)

எஞ்சி இருக்கும் பகுதிகளில் மானுட இழிவைச் சுமக்கும் வருண பேதம் விளக்கப் பட்டிருக்கிறது. அடுத்து கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்றும் ஆன்மா அழிவற்றது என்றும் சொல்லப் பட்டிருக்கிறது இதைத் தவிர வேறு எதுவும் அதில் சொல்லப் படவில்லை.

கீதை போதிக்கும் வருணாசிரம தர்மம் பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் ஒரு சாதிக் கட்டமைப்பு. வைசியர்களும், சூத்திரர்களும் பெண்களும் தாழ்ந்த பிறவிகள் என்று கீதை கற்பிக்கிறது. (பகவத் கீதை அத்தியாயம் - 9, சுலோகம் 32,33).

பாருங்கள்! பெண்கள், பிராமணப் பெண்களாயினும் சூத்திரப் பெண்களாயினும் அவர்கள் தாழ்ந்த பிறவிகளே! பெண்களுக்கு கீதை கொடுத்திருக்கும் மாபெரும் கௌரவம் இது.

அது மட்டுமல்லாது அந்தந்தக் குலத்தில் தோன்றியவர்கள் அந்தத் தொழிலையே செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. குலத் தொழில் ஒழிக்கப் பட்டுவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்றும் அது சர்வ நாசத்திற்குத்தான் வழி வகுக்கும் என்றும் அதில் சொல்லப் படுகிறது (பகவத் கீதை அத்தியாயம் - 1, சுலோகம் 38,39,40,41 : அத்தியாயம் - 18, சுலோகம் 47 ). இதுதான் கீதையில் கர்மா எனப் படுகிறது. இந்தக் கர்மா மீறப் படக் கூடாது என்று கீதை போதிக்கிறது. அதாவது மலம் அள்ளுபவன் என்னதான் திறமை பெற்றிருந்தாலும் அவன் அதையே அள்ளவேண்டும், கூலித் தொழிலாளியின் மகன் கூலித் தொழிலையே செய்ய வேண்டும் பிணம் ஏரிப்பவர்களின் பரம்பரையினர் அந்தத் தொழிலையே செய்ய வேண்டும் என்பது போல்தான் கீதையின் வரிகள் உள்ளன. இந்தக் கருத்தை நியாயப் படுத்தும் விதமாக காலஞ் சென்ற காஞ்சி சங்கராச்சாரி தனது தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் வேதம் பிராமணர் ஆல்லாதார் என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

“பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா? அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள்.”

அடுத்து ஆன்மா அழிவில்லாதது என்பது பகுத்தறிவிற்கு முரணானது. உயிர் என்பது உடலை விட்டு தனித்து இயங்க முடியாது. மூளையின் செயற்பாடே உயிர் எனப் படும். அதானால்தான் தமிழ் சித்தார்களில் ஒருவரான திருமூலர் உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்றார். கீதையின் ஆன்மாக் கோட்பாட்டை விஞ்ஞானம் மறுக்கிறது.

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது நடமுறை வாழ்கைக்குச் சற்றும் பொருந்தாத உளறல் தத்துவம். அதுவும் அவரவர்க்கு விதிக்கப் பட்ட கடமையைத்தான் அது சொல்லுகிறது. அதிலும் வருணபேதம் தான் ஒலிக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தாலும் பலனை எதிர்பார்க்காமல் யாருமே உழைப்பதில்லை. ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழிய வேண்டும் என்ற பலனை எதிர்பார்காமலா இலெனின் வர்க்கப் போராட்டத்தை நடத்தினார்? பலனை எதிர்பார்க்கமலா எட்வார்ட் ஜென்னர் அம்மை நோய்க்கு மருந்து கண்டு பிடித்தார்? பலனை எதிர் பார்க்கமலா தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்? எனவே வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள், சாதி வர்க்க பேத மற்ற சமரச உலகைக் கணவிரும்புகிறவர்கள், மனிதர்களுக்குள் அன்பும் அறமும் தழைத்தோங்க வேண்டும் என்று விரும்கிறவர்கள் கீதையை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்

எதைப் பற்றியும் கவலைப் படமால் உலகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற நினைப்புடன் தண்டத்தை வைத்துக் கொண்டு மடத்தில் உட்கார்ந்திருக்கும் பேர்வழிகளுக்கு வேண்டுமானால் கீதை கட்டும் பாதை சரியானதாக அமையலாம்.

-ஒரு பேப்பர்

Share this post


Link to post
Share on other sites