Jump to content

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை; நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று (27.01.2021) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதிய வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழங்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சம்மந்தமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இன்றையதினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கானது ஆரம்பத்திலே குற்றவியல் சட்ட கோவையின் 106 ஆவது பிரிவின் கீழே பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார். 

இவ்விடயமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15 டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் சென்ற தடவை நீதிமன்றத்துக்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பிடியானை இருந்தது என தெரிவித்து  இன்று வரை மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள். அதற்கு முன்னர் குறித்த மூவரும் பிணையிலே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.

இன்றைய வழக்கில் பொலிசார் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இதன் போது தொல்லியல் பொருட்களை சேதமாக்கினார்கள் என்ற ரீதியிலும், தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழே ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது என்பது அனைவருக்கு தெரிந்த விடயம்.  குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது சந்தேக நபர்களுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வாதிட்டோம். 

ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.

ஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம். அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. 

spacer.png

இங்கே தொல்பொருள்மிக்கதான மலையை சேதப்படுத்தியது அன்றி மரத்தாலான ஏணியை அப்புறப்படுத்தி விட்டு இரும்பிலான ஏணியை உருவாக்கினார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இது சம்மந்தமான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பிரதம அலுவலகத்தில் இருந்து இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் அறிவுறுத்தல் வழங்கிய கடிதமும் உள்ளது. ஆகவே இந்த ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த போது நீதிமன்றம் அவற்றை பார்வையிட்டு வழக்கு எப்படியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த குறிப்பிடப்பட்ட மரத்திலான ஏணிக்கு யார் சேதத்தை விளைவித்தார்கள் என்பதில் தெளிவில்லை என்றும், கொடுக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் அரசாங்கமே இதனை திருத்தி அமைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது என்பதில் புலனாகுவதன் காரணமாகவும், யார் எவ்வாறான சேதங்களை விளைவித்தார்கள் என்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலே, ஆலய நிர்வாக சபையினர் என்ற காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் சமர்ப்பிக்க முடியாது என்றும், ஆகவே தொடர்ச்சியாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறும் இது அரச அதிகாரிகள் செய்திருந்தாலும் கூட யார் செய்திருந்தார்கள் என்பதனை நீதிமன்றத்திற்கு சரியாக அறிக்கையிடுமாறும். தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இந்த விபரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் குற்றவியல் சட்டக்கோவை 102இன் கீழ் நீதவானுக்கு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தீர்மானித்து குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 

இதேவேளை வழக்கு நீண்ட திகதி இடப்பட்டு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது ஒரு வழிபாடு சுதந்திரம் தொடர்புடைய விடயம். நீதிமன்றத்திலே நான் சமர்ப்பணங்களை செய்கின்ற போது அரசியல் அமைப்பு 14ம் 01இ கீழ் பூரண சுதந்திரம் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டினேன்.

தொல்லியல் பெறுமதிமிக்க இடமாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருந்தால் அங்கே வழிபடுவர்கள் செல்வதற்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. இல்லை என்றால் எவரும் ருவண்வெலிசாயாவுக்கு போக முடியாது. ஸ்ரீமாபோதிக்கு போக முடியாது, பொலனறுவையில் இருக்கின்ற எந்த புராதான இடங்களிற்கும் போக முடியாது. வழிபடவும் போக முடியாது. ஆகையினால் புராதன இடமாக இருந்தாலும் கூட அது வழிபாட்டு  சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற சமர்ப்பணத்தை செய்திருந்தேன். 

அடிப்படை உரிமையை தடுக்கிறதான இந்த செயற்பாட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்த கிழமை தயாரான நிலையில் குறித்த வழக்கு குறுக்கிட்டதன் காரணமாக இந்த வழக்கு விடயங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அது தாமதமாகியிருப்பதாக நீதிமன்றத்திலே நான் சொல்லியிருக்கிறேன். 

அந்த ஆவணங்கள் தயாராக இருக்கின்றன. இந்த நீதிமன்றத்தின் கட்டளையையும், வழக்கு நடவடிக்கை கோவை முழுவதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி கிடைத்த பின்னர் அதையும் இணைத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கின்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டு இங்கே வழிபடுவதற்கு தடையேற்படுத்தக்கூடாது என்ற நிவாரணத்தை பெற்றுக்கொடுப்போம். 

இன்றைய நீதிவானுடைய முடிவு எங்களுக்கு பெரும் ஆறுதலைக்கொடுக்கின்றது. ஏனென்றால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தை தவறாக பிரயோகித்து அதன் கீழே பிணை கொடுக்க முடியாது என்கின்ற ஏற்பாட்டை காரணமாக வைத்து எங்களது பாராம்பரிய வழிபாட்டு தலங்களை முடக்குவதும் அதற்கு பாதகம் விளைவிக்கின்ற இந்த அரசின் செயற்பாட்டிற்கு அதற்கு எதிரான முதற்படியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆகவே ஆலய நிர்வாகத்தினர் சுதந்திரமாக நடமாட முடியும். அதுதான் எங்களது பிரதான நோக்கமாக இருந்தது. அதிலே நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆதிலிங்கேஸ்வரர் விடயத்திலே வழிபட விரும்புபவர்கள் எவரும் வழிபடக்கூடிய வகையிலே சட்டத்தின் துணையோடு அதனை உறுதி செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், அன்டன் புனிதநாயகம், குரூஸ் உட்பட சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகியிருந்தனர்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை; நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும், கேசவன் சயந்தனும் ஒரு சதம் தானும் வாங்காமல் இந்த வழக்கில் வாதாடியதாகவும், பலர் ஏறெடுத்தும் பார்க்கவில்லையெனவும் வவுனியவில் இருக்கும் பிரபல ஊகவியலாளர் ஜெரா தம்பி அவர்கள் தன் முகநூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மீது தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், வழக்கின்போது முன்னிலையாகவில்லை என்கிற குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருந்த ஆலயத்தின் மூவரும் முன்னைய பிணையின்படி விடுதலையாகி சற்றுமுன் வீடு வந்து சேர்ந்திருக்கின்றனர். இந்த விடுவிப்பை தன் வாதத்திறமையால் மேற்கொண்ட பெருமையும், திறமையும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்களையும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கனிஸ்ர சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் அவர்களையுமே சாரும். வழக்கில் வாதாட வருவதாக சொன்ன 24 மணிநேரத்துக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து நெடுங்கேணி வரை வருகை தந்து சரியான தகவல்களை நேரடியாகத் திரட்டிச்சென்றமையெல்லாம் வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்கள். சமநேரத்தில் வழக்கில் முன்னிலையாகிய, அதேநேரத்தில் முன்னைய வழக்குகளில் முன்னிலையாக சிரேஸ்ட சட்டத்தரணிகளும், இளநிலை சட்டத்தரணிகளும் என்றும் ஆலயத்தினரினதும், தமிழ் சமூகத்தினதும் நன்றிக்குரியவர்கள். இந்த வழக்கிற்காக ஒரு சதம் பணத்தைக் கூட அவர்கள் பெறத் தயாராக இருக்கவில்லை என்பதெல்லாம் சிறந்த மனித மாண்பு.
 
இவ்வழக்கு தொடர்பில் ஆலோசனை கூறிய துறைசார்ந்த பலரும் கூறிய விடயம், தொல்லியல் சட்டங்கள் மிக இறுக்கமானவை. இதில் ஒருவர் சிக்கினால் வெளியில் எடுப்பது சாத்தியமே அற்ற ஒன்று. ஒன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி வெளியில் வரவேண்டும் அல்லது சிறையில் இருக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால் இந்த இறுக்கமான விடயத்தைத் தான் வாதத் திறமையால் மட்டும் உடைத்தோடு, இதனை ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்காக மேலே கொண்டு செல்லப்போகும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்களும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கனிஸ்ர சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் அவர்களும் என்றும் நன்றிக்குரியர்கள். இதனை செய்ய தமிழ்ச் சூழலில் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
 
எத்தகைய உதவியானாலும் செய்வதற்கு நான் இருக்கிறேன். என்ன வேணும், என்ன செய்வம் என்று தொலைபேசியிலும், நேரிலும் ஆறுதலும் உதவியும் செய்தது அண்ணாக, தம்பியாக, சகோதரியாக வாழும் வெகுசிலர்தான். அவர்களுக்கும் ஆலயத்தினர் நன்றி சொல்லியாகவேண்டும். அதிலும் தம்பி சட்டத்தரணி தனஞ்சயன், பூபாலசிங்கம் அய்யா, தேவன் அண்ணை, குகன் அண்ணை, தமிழ் விருட்சம் கண்ணன் அண்ணை, சஞ்சய், ரவி அண்ணை, ராஜேஸ், செந்தூரன், திபாகரன், சாந்தன் ஆகியோர் அன்போடு அருகிருந்தவர்களில் முக்கியமானவர்கள்.
 
இந்தப் பிரச்சினையானது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமுரியது. ஏனெனில் சிவன் நமக்கு அனைவருக்கும் உரியவராவார். அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நமக்கு அதிகமே உண்டு. அதனைத் தான் கடந்த காலங்களில் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாக்களின்போது பார்த்தோம். நாட்டின் பல பாகங்களிலிருந்து அடியவர்கள் வந்தனர். வழிபட்டனர். சைவம் சார்ந்த அமைப்புக்கள் வந்தனர். யாத்திரைகள் செய்தனர். ஆனால் ஆலயத்தினருக்கு பிரச்சினை என்றபோது...!
 
ஆலயத்தினரோடு மிகநெருக்கமான நண்பர்களைத் தவிர, ஊர் மக்கள் தலைபோட விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டனர். ஆலயமே ஒரு பொய்யடா வகை வாக்குமூலங்கள் கொடுக்கவும் தயாராய் இருந்தனர். உது உவைக்கு தேவையில்லாத வேலை, பட்டுத்தெளியட்டும், இனி இதெல்லாம் இப்பிடித்தான் முடியும் வகையறா வசனங்கள் காதுகளுக்குள் ஒலித்தவை.
என்ன பிரச்சினையென்றாலும் முன்னின்று குரல்கொடுக்கும் வெகுஜன அமைப்புக்கள், மனிதவுரிமை ஆர்வலர்கள் கொரோன பிரச்சினையில் பாவம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். கைதாகியிருப்பது ஒரு மதத்தின் பூசகர் என்றபோதும், அந்தத் துறைசார்ந்த அதிகாரிகள் சுகயீன விடுமுறையில் நின்றனர். சேனையின் அய்யா சொன்னாராம், சுமந்திரன் வந்தால் நாங்கள் எதுவும் உதவமாட்டம் என்று.
 
கடந்த காலங்களில் வெடுக்குநாறி மலை ஆலயத்திற்கு கால்நடையாகவும், பாரவூர்திகளிலும் வருகைதந்து, புகைப்படங்கள் எடுத்தும், பேஸ்புக்கில் லைவ் போட்டும் விருப்பங்களை குவித்துக்கொண்ட அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் சதாநேரமும் பிஸியாய் இருந்தன. இந்தப் பிரச்சினை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவுபோட்டு விருப்பம் வாங்குவதற்குக் கூட நேரமிருக்கவில்லை. சுமந்திரன் வரப்போகிறார் என நேற்றைய தினம் அறிந்ததும், பேரதிர்ச்சியடைந்த அத்தகைய அரசியல்வாதிகள் குறுக்கமறுக்க ஓடித்திரிந்ததாகக் சொன்னார்கள்.
இலக்கியவாதிகள், சமூக கருத்து சொல்லிகள், மனிதவுரிமைப் போராளிகள் என்று கொஞ்சப்பேரை இங்கின பார்த்துக்கொண்டிருக்கிறன். அரிவுவெட்டு சீசன் என்றபடியால் ஆக்களும் வயலுகளோட கடும் பிஸி. காணவே முடியல.
 
உண்மையில் எல்லைக்கிராமத்தவரின் உலகு வேறானது. இதுவொரு தங்கநிலம். இங்கு எதை விதைப்பினும் விளையும். ஆனால் அதற்கு விலை கிடைப்பதில்லை. எனவே இவர்களின் உழைப்பானது பாலைவன ராத்திரியில் ஒற்றைத்தீபத்தைக் கொண்டுபோவதற்கு ஒப்பானது. எனவேதான் இத்தீபத்தை நோக்கி பல கரங்கள் காப்பிடத் தேவைப்படுகின்றன. ஆனால் அதற்கு கைதர அதிகம் பேர் இல்லை என்பதை இந்த ஐந்து நாட்கள் தெளிவாகவே உணர்த்திவிட்டன. அப்பாவிகள் தண்டனை அனுபவிக்க வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு வாழும் சமூகத்தில், இவர்கள் மட்டும் தம்மை ஆடுகளாக்கிக்கொள்ளவேண்டிய தேவை கிஞ்சித்தும் இல்லை. எனவே இனியாவது அவர்கள் மனந்திருந்தி வாழக் கடவ.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி ...இடைக்கிடை ஏதோ மக்களுக்காய் செய்கிறார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் இறால் போட்டுச் சுறா பிடிக்கப்பார்க்கிறார். 

உண்மையும் அதுதான். ஆனாலும் நன்மை நடைபெற்றிருக்கிறது. அதனால் பாராட்டலாம்... 👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.