Jump to content

ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து மூத்த இலக்கிய சிகரம் டொமினிக் ஜீவா காலமானார்!

 

ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார்.

டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.

அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்

 

https://newuthayan.com/ஈழத்து-மூத்த-இலக்கிய-சிக/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Meeting With Dominic Jeeva Event in Jaffna - 'ஜீவாவுடன் ஓரு மாலைப் பொழுது' நிகழ்வு - YouTube

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இவருடைய அரசியல்  எவ்வாறு இருப்பினும், மல்லிகை சஞ்சிகையை இறுதிவரை ஓமத்துடன் நடத்தி வந்தார். சிறுவயதில் மல்லியை வசித்து வளந்தவன்.

Link to post
Share on other sites

அஞ்சலிகள்! பல எழுத்தாளுமைகளை ஈழத்தில் அறிமுகம் செய்தவர். 

Link to post
Share on other sites

மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒன்று ஜீவா சேர். கண்ணீர் அஞ்சலி! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குச்சி ஒழுங்கைக்குள்...,,
ஒழிந்திருந்தது உனது பதிப்பகம்..,

அப்பா என்னை அழைத்து வந்தார்...!

ஓரத்தில் அமர்ந்திருந்த படியே...,
உங்கள் உரையாடலைக் கேட்ட நினைவு..!

முதல் முதலில் ' மல்லிகையொன்று'
மணம் வீசிய நாள் அது...!

பத்து ரூபாய்க்களைக் கொடுத்த அப்பா,
எத்தனை மிச்சம் என்றும் கேட்கவில்லை!
நீயும் கொடுக்கவில்லை..!

அப்பாவிடம் கேட்டேன்..!
அவர் தந்த விளக்கம் தான்...,
என் உள்ளத்தில்...,
உன்னை உயரத் தூக்கி வைத்ததது....!

ஈழத் தமிழ் இலக்கியத்தின்,
முன்னோடி நீ என்பேன்....!

கல்லா நிதிகள் நிறைந்த உலகில்..,
நீ தான் உண்மையான கலாநிதி என்பேன்! 

எத்தனை தடைகளை உடைத்தெறிந்தாய்?

சாதி மான்களின் சாபங்கள்,
சமூகத்தின் காவலர்கள் போட்ட தடைக்கற்கள்,
ஓரடி  ஏற...ஈரடி...சறுக்கும் சந்தை,
இவ்வளவு இருந்தும்...,
உனது தலை...,
தண்ணீருக்கு மேலே தான் இருந்தது..!

மானிடத்தின் மதிப்புணர்ந்தவனே !
சென்று வா...!

இன்று போல....என்றும்...நீ...,
ஈழத்தமிழ் உலகின்...,
விடிவெள்ளியாய்...,
நினைவில் நிறைந்திருப்பாய்..!  

 • Like 7
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும்.
 

Link to post
Share on other sites

எனது பள்ளிக் காலங்களில் ஜீவா அவர்கள் நடாத்திய 'மல்லிகை' சஞ்சிகையை வாசித்த அனுபவங்கள் என்றும் பசுமையானவை. 

அன்னாருக்கு நன்றி கலந்த அஞ்சலிகளும், பிரார்த்தனைகளும். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா  சாந்தியடையட்டும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து இலக்கியங்களை அறிய உதவிய மல்லிகை சஞ்சிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

Edited by கிருபன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை ஜீவா ( 1927 – 2021 ) விடைபெற்றார் ! வரலாறாகிவிட்ட ஈழத்தின் இலக்கியக்குரல் ! ! முருகபூபதி.

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%

இன்று 29 ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. இந்த அகாலவேளையில் யார்…? எனப்பார்த்தேன்.

மறுமுனையில் இலக்கிய நண்பர் தெய்வீகன், “ உறக்கத்தை குழப்பியதற்கு மன்னிக்கவும் “ எனச்சொல்லிவிட்டு, எங்கள் மல்லிகை ஜீவா கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற ஆழ்ந்த துயரம்மிக்க செய்தியை சொன்னார்.

அத்துடன் எனது உறக்கம் முற்றாக களைந்துவிட்டது.

தனது வாழ்நாள் முழுவதும் களைக்காமல் ஓடி ஓடி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த மல்லிகை ஜீவா இனியாவது நிரந்தரமாக ஓய்வுபெறட்டும். என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, பொங்கிவந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியவாறு இந்த நினைவுப்பதிகையை அஞ்சலிக்குறிப்பாக சமர்ப்பிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, கொழும்பில் தனது ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்தில் இன்று 29 ஆம் திகதி ( 29 ஜனவரி 2021 ) தமது 93 வயதில் மறைந்தார்.

 

 

யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகான ந்தனுக்கும் ஆறாம் வகுப்பில் புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல தடவையாக பனைமரங்களைப்பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந்தக்கற்பகதருவை பாடசாலை

பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு நூல்களில் பனைமரங்கள் அட்டைப்படமாகின. ரஜனி திராணகம சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான முறிந்த பனை, மூத்த பத்திரிகையாளர் கார்மேகத்தின் ஈழத்தமிழர் எழுச்சி, செ.யோகநாதன் தொகுத்த ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம், ஜெயமோகனின் ஈழத்து இலக்கியம், பேராசிரியர் கா. சிவத்தம்பியின் யாழ்ப்பாணம் சமூகம் – பண்பாடு – கருத்துநிலை உட்பட பல நூல்கள் பனைமரத்தை ஒரு குறியீடாகவே அட்டைகளில் சித்திரித்துள்ளன. வவுனியாவைக்கடந்தவுடன் ஏ9 பாதையின் இருமருங்கும் தென்பட்ட பனைமரங்களை கல்விக்காக பயணித்த அக்காலத்தில் பரவசத்துடன் பார்ப்பேன்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

அவ்வாறு அந்த மண்ணில் நான் பரவசத்துடன் பார்த்த ஒரு மனிதரின் பெயர் டொமினிக்ஜீவா. எங்கள் மாணவர் விடுதியின் சார்பாக மாதாந்தம் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்கு அவர் பிரதம பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் நான் அவரைப்பார்த்தது இல்லை. அவர் அருந்துவதற்கு ஒரேஞ்பார்லி போத்தல் ஒன்றை மேசையில் வைத்திருந்தார்கள். வெள்ளை வேட்டி வெள்ளை நஷனல் அணிந்து வந்திருந்தார். மேடையில் உரத்த குரலில் பேசினார். அவ்வப்போது கைகளை உயர்த்தினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கைச்சம்பவங்களை விபரித்தார். சங்கானையில் நடந்த ஒரு சாதிக்கலவரம் பற்றிச்சொன்னார். எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. அவரது முகத்தையும் மேசையிலிருந்த குளிர்பானப்போத்தலையும் பார்க்கிறேன். அவரது நெற்றி இடைக்கிடை புடைத்து நரம்புகளும் தெரிந்தன.

எனக்கு அந்த வயதில், அவர் ஏதோ கோபத்தில் பேசுவதாகவே புரிந்தது. தனது உரை முடியும் வரையில் அவர் அந்த குளிர்பான போத்தலை தொடவே இல்லை. நீண்டநேரம் பேசியும் அவரது நா வரண்டுவிடவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியமானது. காலப்போக்கில் சுமார் பத்தாண்டுகள் கழித்து அதாவது 1971 காலப்பகுதியிலும் அதே உணர்சிப்பிழம்பாக அவர் பேசியதை கண்ணுற்றபொழுது அதற்குப்பொருள் தர்மாவேசம் என்று புரிந்துகொண்டேன்.

அத்தருணத்தில் மகாகவி பாரதியின் ரௌத்திரம் பழகு என்ற சொற்பதத்தையும் தெரிந்துகொண்டிருந்தேன். இலங்கையில் முதல் முதலாக தமிழில் சிறுகதை இலக்கியத்திற்காக தேசிய சாகித்திய விருதைப்பெற்றவர். விருது பெற்ற அந்தக்கதைத்தொகுதியின் பெயர்: தண்ணீரும் கண்ணீரும். விருதை வாங்கிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் திரும்பிவருகிறார். ஊர்மக்கள் அச்சமயம் யாழ்ப்பாண மேயராக பதவியிலிருந்த துரைராஜாவின் தலைமையில் மாலை அணிவித்து அவரை வரவேற்கின்றனர். யாழ். ரயில் நிலையத்துக்கு சமீபமாகவே அவரது வீடு அமைந்திருக்கிறது. அவருக்கு நேரம் சொல்வதற்கு அங்கு வரும் ரயில்கள் போதும். கஸ்தூரியார் வீதியில் தந்தையாரின் ஜோசப்சலூனை கவனித்துக்கொண்டார். அத்துடன் எழுதத்தொடங்கினார். புத்தகக்கடை பூபாலசிங்கமும் ராஜகோபல் என்ற அன்பரும் அவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியதுடன் சிறந்த நூல்களையும் படிக்கக்கொடுத்தனர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார். ஐக்கியதேசியக்கட்சி பதவியிலிருந்த காலப்பகுதியில் ஒரு மேதின ஊர்வலத்தில் அவர் கலந்துகொண்டு தொழிலாள விவசாய பாட்டாளி மக்களுக்காக கோஷம் எழுப்பியவாறு சென்றபொழுது யாரோ எறிந்த கல் அவரது நெற்றியை பதம்பார்த்தது. யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கே கடமையிலிருந்த அவரது இலக்கிய நண்பரும் மருத்துவருமான

டொக்டர் நந்தி அவரது காயத்துக்கு இழையும்போட்டு, மருந்திட்டு கட்டுப்போட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னார். ஆனால் இந்த தர்மாவேச சிங்கம் சும்மா இருக்குமா? அந்த இரத்தம் கசிந்த நெற்றிக்கட்டுடன் மேதின மேடைக்குத்திரும்பி, “இதோ பாருங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் பரிசு… “ என்று இரத்தம் கசிந்த நெற்றியை காண்பித்து, “ சோஷலிஸம் மலரும் காலம் தூரத்தில் இல்லை” என்று ஆக்ரோஷமாக குரல் கொடுத்தார். இந்த வரலாற்றையெல்லாம் அவரது மல்லிகையில் 1972 இல் நான் எனது முதலாவது சிறுகதை எழுதியபின்புதான் தெரிந்துகொண்டேன்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

கனவுகளுடன் 1960 களில் யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்று, கனவுகளுடனேயே திரும்பியிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து பார்க்கும் தூரத்தில் கடல். அந்தக்கடலின் மாந்தர்களும் கனவுகளுடன்தான் வாழ்ந்தனர். எனது கனவுகளிலும் வந்தனர். “ என்னத்தைச் செல்லிய சோமலமாதாவே….” என்ற அவர்களது மொழி எனக்கோ கொஞ்சும்மொழி. நான் ரசிக்கும் பிரதேச மொழிவழக்கு. அவர்களது பேச்சுமொழியில் கனவு என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி மல்லிகைக்கு அனுப்பியிருந்தேன். ஆசிரியர் டொமினிக்ஜீவா அதற்கு கனவுகள் ஆயிரம் என்ற பெயரைச்சூட்டி 1972 ஜூலை மாத மல்லிகையில் அச்சிட்டு எனக்கு ஒரு பிரதியை தபாலில் அனுப்பியிருந்தார். எனது பிறந்த நாளன்று குறிப்பிட்ட இதழ் என் வசம் கிடைத்தது தற்செயலானது. ஏதிர்பாராதது. அன்று முதல் அவரை பயிலத்தொடங்கினேன். உறவாடினேன்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

அவருடன் பயணித்த அனுபவத்தின் அறுவடையாக 2001 இல் மல்லிகைஜீவா நினைவுகள் என்ற நூலை எழுதி அவருக்கும் வாசகர்களுக்கும் வழங்கினேன். தண்ணீரும் கண்ணீரும் கதைத்தொகுப்பைத் தொடர்ந்தும் சிறுகதைகள் எழுதிய ஜீவா, பின்னர் பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனம் முதலான தொகுதிகளையும் மேலும் சில நூல்களையும் இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர். சாலையின் திருப்பம் தொகுதிக்கு அவரது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் சரஸ்வதி (1958), தாமரை (1968) முதலான இதழ்களும் ஜீவாவின் உருவப்படத்தை அட்டையில் பிரசுரித்து அவரைப்பற்றி எழுதி கௌரவித்திருக்கின்றன. குமுதம் இலவச இணைப்பாக ஜீவாவின் அனுபவமுத்திரைகள் கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து விநியோகித்திருக்கிறது. இந்தத்தகவல்கள் யாவும் கடந்தகால செய்திகளே. ஒரு சிறுகதை எழுத்தாளன், பெரிய பொருளாதார வசதிகளோ, உயர்ந்த கல்விப்பின்புலமோ இல்லாமல் தொடர்ச்சியாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக மல்லிகை இலக்கிய இதழை நடத்தியிருக்கிறார் என்ற சாதனையும் இன்று காலம் கடந்த செய்திதான். இலங்கை நாடாளுமன்றத்தில் விதந்து பேசப்பட்ட இலக்கியவாதியான டொமினிக் ஜீவாவுக்கு அந்தப்பெருமையை பெற்றுக்கொடுத்ததும் அவரது அயராத முயற்சியினால் வெளியாகிக்கொண்டிருந்த மல்லிகைதான். மாதாந்தம் மல்லிகையை வெளியிட்டவாறே ‘மல்லிகைப்பந்தல்’ பதிப்பகத்தின் மூலம் பல படைப்பாளிகளின் படைப்புகளையும் நூலுருவாக்கி விநியோகித்தார். எனது பாட்டி சொன்ன கதைகள், கங்கை மகள் என்பன

மல்லிகைப்பந்தல் வெளியீடுகளே. 1975 இல் மல்லிகைப்பந்தல் என்ற பெயரை இலக்கிய சந்திப்புக்காகவே அவர் தெரிவு செய்திருந்தார். அந்தப்பந்தலில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் எனது முதலாவது (சுமையின் பங்காளிகள்) சிறுகதைத்தொகுதிக்கு வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குசெய்தவிட்டு, அஞ்சலட்டையில் அச்சிடப்பட்ட அழைப்பை எனக்கு அனுப்பியிருந்தார். ஆசிரியரும் எழுத்தாளருமான சு. இராஜநாயகன் நிகழ்ச்சிக்குத்தலைமை. இவர்தான் பத்திரிகையாளர் பாரதியின் அப்பா. அந்தப்பயணத்தில் யாழ்ப்பாணத்தில் டானியல், வரதர், புத்தகக்கடை பூபாலசிங்கம் ஆகியோரையும் குரும்பசிட்டியில் கனகசெந்திநாதன் உட்பட பல படைப்பாளிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தியதும் ஜீவாதான். யாழ்ப்பாணத்தில் மல்லிகை வெளியான காலங்களில் மாதாந்தம் ரயிலேறி கொழும்பு வந்து சில நாட்கள் தங்கியிருந்து, அலைந்து திரிந்து மல்லிகை பிரதிகளையும் விநியோகித்து இலக்கிய சந்திப்புகளிலும் கலந்துகொள்வார். கொழும்பு மலிபன் வீதியில் மல்லிகைக்கு தேவையான வெள்ளீய அச்சு எழுத்துக்கள் மற்றும் அச்சிடும் காகிதாதிகளை வாங்கி ஏதும் யாழ்ப்பாணம் செல்லும் லொறிகளில் ஏற்றிவிட்டு மீண்டும் ரயிலில் யாழ்ப்பாணம் திரும்புவார். கொழும்பு வருமுன்னர் எனக்கு ஒரு அஞ்சலட்டையில் தனது வருகை பற்றி எழுதிவிடுவார். எங்கள் நீர்கொழும்புக்கும் வருவார். எங்கள் ஊர் கடற்கரையில்தான் இலக்கிய சந்திப்புகள் நடைபெறும். நீர்கொழும்பூர் முத்துலிங்கம், சந்திரமோகன். பவாணி ராஜா, சிவம், ரட்ணராஜா, மு.பஷீர், நிலாம் , தருமலிங்கம், செல்வரத்தினம் ஆகியோருடன் நானும் அந்தச்சந்திப்புகளில் கலந்துகொள்வேன்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

 

அத்தகைய ஒரு கடற்கரைச்சந்திப்பில்தான் மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் யோசனை மலர்ந்தது. 1972 பெப்ரவரி மாத மல்லிகை, நீர்கொழும்பு சிறப்பிதழாக வந்தது. அதனை வெளியிட்டுவைப்பதற்கு மண்டபம் கிடைக்காத சூழ்நிலையில் எங்களது சூரியவீதி இல்லத்திலேயே அதனை 19-02-1972 ஆம் திகதி நடத்தினோம். யாழ்ப்பாணத்தில் போர்மேகங்கள் சூழ்ந்தன. அவரது தோழரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேச செயலாளருமான தோழர் விஜயானந்தன் கொல்லப்பட்டார். சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்தோடு ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்து கொழும்பு வாசியாகிவிட்டார். அவர் கொழும்பு வாசியாவதற்கு முன்பே நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டேன். நீண்ட இடைவெளிக்குப்பின்பு, 1990 இல் மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் வெளியான சந்தர்ப்பத்தில் ஜீவாவை சென்னைக்கு அழைத்து அங்கே அவருடன் ஊர் சுற்றினேன். இந்தப்பயணத்தில் கண்ணதாசனின் மனைவியின் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டோம். இங்குதான் சிவாஜிகணேசனையும் சந்தித்தோம். ஜெயகாந்தன், சிட்டி, சிவபாதசுந்தரம், சுந்தா சுந்தரலிங்கம், மேத்தா, இன்குலாப், திலகவதி, சிவகாமி, ராஜம்கிருஷ்ணன், ரகுநாதன், பாலகுமாரன், சு. சமுத்திரம், அக்கினி புத்திரன், செ. யோகநாதன், பொன்னீலன், கண.முத்தையா, அகிலன் கண்ணன், ரங்கநாதன், நர்மதா ராமலிங்கம், குணசேகரன், அறந்தை நாராயணன், தி.க. சிவசங்கரன், வைரமுத்து, மேத்தாதாஸன், இளம்பிறை ரஹ்மான், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்ணு, சி.ஏ. பாலன், உட்பட பலரை சந்திப்பதற்கு இந்தப்பயணம் பயன்பட்டது. இலங்கையிலும் ஜீவாவுடன் பல பயணங்களை, குறிப்பாக கொழும்பில் மேற்கொண்டிருக்கின்றேன். 1972 இல் ஒரு நாள் நீர்கொழும்பு கடற்கரை மணலில் அமர்ந்திருந்தபொழுது மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழ் சிந்தனை தோன்றியதுபோன்றே, பல வருடங்களுக்குப்பின்னர் 1999 இல் நீர்கொழும்பில்

அதே சூரியவீதி இல்லத்தில் நண்பர் திக்குவல்லை கமாலுடனும் ஜீவாவுடனும் அமர்ந்து மதியவிருந்துண்டபோது உருவான சிந்தனைதான் மல்லிகையின் அவுஸ்திரேலியாthumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

 

 சிறப்புமலர். 2001 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் குறிப்பிட்ட மலர் வெளியிடப்பட்டது. இம்மலரில், புவனா இராஜரட்ணம், நல்லைக்குமரன் குமாரசாமி, எஸ் சுந்தரதாஸ், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், பாலம்லக்ஷ்மணன், களுவாஞ்சிக்குடி யோகன், உரும்பைமகள், பிரவீணன் மகேந்திரராஜா, நடேசன், ஜெயசக்தி பத்மநாதன், தி.ஞானசேகரன், கலாநிதி வே. இ. பாக்கியநாதன், கவிஞர் அம்பி, மாவை நித்தியானந்தன், அருண். விஜயராணி, மாத்தளை சோமு, கனபரா யோகன், அ. சந்திரகாசன், பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, ரேணுகா தனஸ்கந்தா, த.கலாமணி, முருகபூபதி ஆகியோர் எழுதியிருந்தனர். மலரின் முகப்போவியத்தை அக்காலப்பகுதியில் சிட்னியிலிருந்த, தற்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி மாத இதழை வெளியிடும் கலாமணி பரணீதரன் வரைந்திருந்தார். குறிப்பிட்ட அவுஸ்திரேலியா மலர் இலக்கியத்தரமாகவும் கனதியாகவும் வெளியாகியது. நீர்கொழும்பு சிறப்பிதழையடுத்து திக்குவல்லை, அநுராதபுரம், முல்லைத்தீவு உட்பட பல பிரதேச சிறப்பிதழ்கள் வெளியாகின. ஆனால் அவுஸ்திரேலியா மல்லிகை சிறப்பு மலருக்குப்பின்னர் எந்த ஒரு புகலிட நாட்டினதும் மல்லிகை சிறப்பு மலர் வெளிவரவேயில்லை என்பதுடன் மல்லிகையின் வரவும் கடந்த ஆண்டு (2012) இறுதிக்குப்பின்னர் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம். 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டு காலப்பகுதியில் ஜீவாவின் கனவுகள் சிலவற்றையாவது நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவு எனக்குண்டு.thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

எனது கனவுகள் ஆயிரத்தை தமது மல்லிகையில் பதிந்து படரவிட்டவருக்கு நன்றிக்கடனாக அவரது சில கனவுகளையாவது நனவாக்க துணை நின்றேன் என்ற உள்ளப்பூரிப்பு எனக்கு என்றும் உள்ளது. அதில் முக்கியமானது இலங்கையில் நாம் பலர் இணைந்து 2011இல் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு. குறிப்பிட்ட மாநாட்டு யோசனையும் அவருடைய கொழும்பு மல்லிகை காரியாலயத்தில் எனக்கு அவரால் அளிக்கப்பட்ட ஒரு தேநீர் விருந்துபசார சந்திப்பில்தான் உருவானது. இயங்கிக்கொண்டிருப்பவர்களை முதுமையும் நோயும் அண்டாது என்பார்கள். அதற்கு ஒரு உதாரணமாக அவர் இயங்கினார். “ எல்லாம் போதும். போதுமப்பா…” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவர் ஓய்வை விரும்பிய கணங்கள் அவை. ஆனால் அவர் உறங்கும்பொழுது மட்டுமே ஓய்வெடுப்பவர். மல்லிகை வேலைகளை முடித்து, அலைந்து களைத்து வீடு திரும்பியதும் வாசலில் கால் செருப்புகளை கழற்றிவிட்டது டன் அனைத்துக்கவலைகளையும் கழற்றிவிட்டுவிடும் இயல்புள்ளவர். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கையில் சாய்ந்தால் அவர் எந்தக்கவலையும் அற்று நித்திராதேவியுடன் சங்கமித்துவிடுவார். அதன் பின்னர் மறுநாள் காலைதான் கண்விழிப்பார். குண்டூசி விழுந்தாலும் அந்த ஓசையில் விழித்தெழும் எனக்கு, அவரது ஆழ்ந்த (இந்த விடயத்தில் அவர் கொடுத்துவைத்தவர்) உறக்கம் வியப்பானது. இனி அந்த உறக்கமே அவருக்கு நிரந்தரமானது! இனி மல்லிகை பற்றியும் சில குறிப்புகள்: மல்லிகை இலங்கை தமிழக எழுத்தாளர்கள் பலரது உருவப்படங்களையும் அட்டையில் பதிவுசெய்து அவர்களைப்பற்றிய ஆக்கங்களையும் பிரசுரித்துவந்தது. இதுவும் பெறுமதிமிக்க இலக்கியப்பணிதான்.thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

தமிழக படைப்பாளிகள் ஜெயகாந்தன், சிதம்பர ரகுநாதன், தி;.க.சிவசங்கரன், வல்லிக்கண்ணன், நீலபத்மநாபன், பேராசிரியர் நா.வானமாமலை, பா.செயப்பிரகாசம், கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, சுதந்திர போராட்ட தியாகி சிந்துபூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, ஏ.ஏ. ஹெச். கே. கோரி மற்றும் வெளிநாடுகளில் வாழும் அ.முத்துலிங்கம் கவிஞர் அம்பி , வவுனியூர் இரா உதயணன் பத்மநாப ஐயர் , கவிஞர் சேரன் , நிலக்கிளி பாலமனோகரன் , க.பாலேந்திரா , எஸ்.பொ. வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே) சுதாராஜ் , இளைய அப்துல்லாஹ் , முருகபூபதி ஆகியோரின் உருவப்படங்களையும் அவர்களைப்பற்றிய ஏனைய எழுத்தாளர்கள் எழுதிய ஆக்கங்களையும் மல்லிகை கடந்த காலங்களில் பிரசுரித்து அவர்களின் கலை, இலக்கிய, சமூகப் பணிகளை கௌரவித்திருக்கிறது. அத்துடன் மல்லிகை ஜீவா என்ற இந்த ஈழத்து இலக்கியக்குரல் தமிழகத்துக்கு இலக்கியப்பாலமும் அமைத்தது. குறிப்பிட்ட அட்டைப்படக்கட்டுரைகளும் பின்னர் தனித்தனி தொகுப்புகளாக மல்லிகைப்பந்தல் வெளியீடுகளாக நூலுருப்பெற்றன. அவை:- அட்டைப்பட ஓவியங்கள் (1986) மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002) முன்முகங்கள் (2007) பல்கலைக்கழகப்படங்களுக்காகவும் தேசியப்பட்டங்களுக்காகவும் பலரும் ஆலாய்ப்பறந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டம்வழங்கி கௌரவிக்க முனைந்து ஜீவாவுக்கு அழைப்பும் விடுத்தது. ஜீவா என்னசெய்தார் தெரியுமா? கல்வித்துறை சார்ந்த பட்டம் என்பதனால் அது தன்னை அவமானப்படுத்துவதற்காகவே வழங்கப்படுவதாகக் கருதி அதனை

நிராகரித்தார். இவரது நிராகரிப்புத்தொடர்பாக பத்திரிகைகளில் காரசாரமான விவாதங்களும் எழுந்தன. பின்னர் குறிப்பிட்ட விவகாரமே ஒரு நூலையே வெளிவரச்செய்தது. பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் என்ற தலைப்பில் கவிஞர் மேமன்கவி அந்தநூலை தொகுத்திருந்தார். பல்கலைக்கழக பட்டத்தை நிராகரித்த ஜீவா பிறிதொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் அதியுர் விருதான சாகித்திய ரத்னா, தேசத்தின் கண் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். இவை இலக்கியம் சார்ந்திருந்தமையே அதற்குக்காரணம். அச்சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதியிடம் தேசத்தின் கண் விருதினைப்பெற்றுக்கொண்ட மற்றுமொருவர் சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞான எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் ஆவார்.

கனடா இலக்கியத்தோட்டம் ஜீவாவுக்கு இயல்விருது வழங்கியபோது, நண்பர்பூரணி மகாலிங்கம் கொழும்பு வந்து தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழா நடத்தி அதனை அவரிடம் வழங்கினார். பலரது முகங்களை மல்லிகை முகப்பில் பதிவுசெய்த ஜீவாவை கனடா காலம் இதழ் அச்சமயம் முகப்பில் அலங்கரித்தது. ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்க்;கப்பட்டுள்ளன. இவரது பல கதைகளின் சிங்களமொழிபெயர்ப்பு பத்ரே பிரசூத்திய. (மொழிபெயர்த்தவர் இப்னு அஸுமத்) ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம். இதனை Undrawn Portrait for Unwritten Poetry என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் நல்லைக்குமரன் க. குமாரசாமி. மல்லிகை இதழின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஜீவா ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதன் பெயர்:- அச்சுத்தாளின் ஊடாக ஓர் அனுபவப்பயணம். இலக்கிய சிற்றேடுகள் வெளியிட துணிபவர்களுக்கு இந்நூல் சிறந்த பாடநூல்.

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

இலங்கையிலும் தமிழகத்திலும் இலக்கியச்சிற்றேடுகள் வெளியிட்டு சிரமப்பட்டு பின்வாங்கிக்கொண்டவர்களைப்பற்றியும் ஜீவா, மல்லிகையின் 44 ஆவது ஆண்டுமலரில் நினைவூட்டியிருக்கிறார். ரகுநாதன் (சாந்தி) சி.சு.செல்லப்பா (எழுத்து) நா. பார்த்தசாரதி (தீபம்) ஜெயகாந்தன் (ஞானரதம்) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) வல்லிக்கண்ணன், விந்தன் ஆகியோரே ஜீவா நினைவூட்டுபவர்கள். இவர்களுடன் கவிஞர் கண்ணதாஸனையும் வேறும் சிலரையும் ஜீவா தற்செயலாக மறந்துவிட்டார். இலங்கையில் கே.கணேஷ் (பாரதி) செ.கணேசலிங்கன் (குமரன்) ரஹ்மான் (இளம்பிறை) வரதர் (வெள்ளி- புதினம் ) இவர்களில் கணேசலிங்கன், ரஹ்மான், வரதர் ஆகியோர் சொந்தமாக அச்சுக்கூடமே வைத்திருந்தவர்கள். இலங்கையில் மெய்கண்டான் கலண்டர்களை வருடந்தோறும் வெளியிடும் பிரபல அச்சகத்தினரும் நீர்கொழும்பில் சாந்தி அச்சகத்தினரும் இலக்கியச்சஞ்சிகைகளை நடத்தி கைவிட்டவர்களே. இவற்றிலிருந்து புலனாவது….. அச்சகம் இருந்தால் மாத்திரம் ஒரு சிற்றிதழை நடத்திவிடலாம் என்பது அல்ல இங்குதான் மல்லிகை ஜீவாவின் அசுர பலம் புலனாகியது. ஒரு காலத்தில் மல்லிகையை ‘சிறுசோறு படைக்கும் சஞ்சிகை’ என்று கிண்டலாக விமர்சித்த பிரபல எழுத்தாளர் எஸ்.பொ.வின் உருவப்படத்தையும் மல்லிகை பிரசுரித்து கௌரவித்திருக்கிறது. எஸ்.பொ.வுக்கு 75 வயது (பவளவிழா) எனத்தெரிந்ததும் வாழ்த்துத்தெரிவித்து கட்டுரையும் பிரசுரித்தது. காலம்காலமாக மல்லிகையுடனும் ஜீவாவுடனும் முரண்பட்டவர்கள் கூட மல்லிகையின் அட்டைப்படங்களிலும் உள்ளடக்கத்திலும் இடம்பெற்றுள்ளனர். இந்தப்பண்பு இலங்கை இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல தமிழகத்து இலக்கியவாதிகளுக்கும் முன்னுதாரணமாகும்.

இச்சந்தர்ப்பத்தில் ஒரு தகவல்:- கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் ஜெயகாந்தனின் நேர்காணல் வெளிவரவே இல்லை. அதற்கான முயற்சியை பரீக்ஷா ஞாநி மேற்கொண்டபோதும் கோமல் அதற்கு உடன்படவில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இலக்கியவாதிகள் இயங்கவேண்டும் என்பதற்கும் மல்லிகை ஜீவா முன்னுதாரணமாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்தான் முன்னர் மல்லிகை அலுவலகம் இயங்கியது. ஒருசமயம் இலங்கை இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலுக்கும் இலக்கானது. மல்லிகை சாதனங்கள் சேதமுற்றன. ஜீவாவும் அவருடன் அங்கே அச்சுக்கோப்பாளராக பணியாற்றிய சந்திரசேகரமும் உயிர்தப்பியது ஈழத்து இலக்கியம் செய்த புண்ணியமோ தெரியவில்லை. 1995 இற்குப்பின்னர் மல்லிகை ஜீவா கொழும்பு வாசியாகிறார்.

 

thumbnail_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0

ஆனால் இந்த இடப்பெயர்வு அவராக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. மல்லிகைக்காகவே இடம்பெயர்ந்தார். தொடர்ந்தும் இயங்கினார். மல்லிகையும் மலர்ந்தது. 2012இற்குப்பின்னர் மல்லிகையின் வரவு தடைப்பட்டுவிட்டது தினக்குரல் ஞாயிறு இதழில் மல்லிகை ஜீவா பற்றிய தொடரை எழுதியவரும் ஜீவாவின் உற்ற நண்பருமான தெணியானும் மல்லிகை 50 ஆவது ஆண்டு மலர் வரையிலாவது வரவேண்டும் என்று என்னுடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங்களில் சொன்னார்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு நானும் நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங்கும் அவரைப்பார்க்கச்சென்றோம்.

எம்மை அடையாளம் கண்டு மார்போடு அணைத்துக்கொண்டார்.

அவரது பூதவுடலை அணைக்கமுடியாமல் அந்நியநாட்டிலிருந்து தவிக்கின்றேன்.

மல்லிகை ஜீவா எழுத்தாளர், இதழாசிரியர், சமூகப்போராளி, முதலான அடையாளங்களுடன் மறையவில்லை. வரலாறாகவே வாழ்ந்துகொண்டிருப்பார் !

 

https://akkinikkunchu.com/?p=146080

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்


 

டொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்

nuhman-jeevaa.jpg
தனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணைப்பில், நினைவு இழப்பில் வீடு அடங்கியிருந்தார். அந்த நிலையில் ஜீவாவைப் போய்ப் பார்க்கும் மன ஓர்மை எனக்கு இருக்கவில்லை. இன்று அவரது மறைவு அதிலிருந்து அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சுமார் எழுபது ஆண்டுகால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் ஜீவாவும் பின்னிப்பிணைந்து வளர்ந்தவர். தமிழ் உலகு எங்கும் நன்கு அறியப்பட்டவர். வாழ்த்துகளும், பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். அவருடைய வாழ்வு முழுநிறைவானது. ஒன்பது ஆண்டுகளுக்குமுன் ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை ஒட்டி ஞானம் இதழில் நான் எழுதிய கட்டுரையை அவருக்கு என் இறுதி அஞ்சலியாக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

…….. …….

டொமினிக் ஜீவாவுக்கு 85 வயதாகிறது. கலை இலக்கிய நண்பர்கள் அவரது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 27.06.2011 கொண்டாடினார்கள். 18.06.2011ல் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு கரவை விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு விழாவில் ஜீவாவைச் சந்தித்தேன். வழக்கம்போல் அன்போடு விசாரித்தார். மல்லிகை இதழ்களோடு அழகாக அச்சிட்ட ஒரு அழைப்பிதழையும் நீட்டினார். அது அவரது பிறந்த நாள் சந்திப்பு அழைப்பிதழ். எட்டுப் பக்கங்களில், ஒவ்வொரு பக்கத்திலும் ஜீவாவின் வெவ்வேறு முகத் தோற்றத்துடன், ஜீவமொழிகள் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ். இம்முறை கட்டாயம் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எனினும் முடியவில்லை. ஆகையால் இக்குறிப்பை எழுதுகிறேன்.

ஜீவாவுக்கு எண்பத்தைந்து வயது என்பதை நம்பமுடியாது. அவரது ஆரோக்கியம் அப்படி. இன்னும் அதே வெள்ளை நெனல் வேட்டியுடன் கைகளை அகல விரித்து நிமிர்ந்து நடக்கிறார். இளமை மிடுக்கின் சுவடுகள் இன்னும் மறைந்துவிடவில்லை. தீவிர இலக்கியச் செயற்பாட்டாளராக, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்தும் மல்லிகை ஆசிரியராக அர்ப்பணிப்புடன் இயங்குகிறார். நினைவாற்றலும் செயற் துடிப்பும் மங்கிவிடவில்லை. உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று வேடிக்கையாக மல்லிகை தூண்டில் பகுதிக்கு ஒரு கேள்வி அனுப்பலாம் என்று சிலவேளை நாங்கள் சில நண்பர்கள் சந்திக்கும் போது  பேசிக்கொண்டதுண்டு. அதற்கு அவர் சொல்லக் கூடிய விடைகளை நினைத்துப் பார்த்துச் சிரித்ததும் உண்டு. ஜீவாவின் ஆரோக்கியத்தின் அடிப்படை அவரது வாழ்க்கை முறைதான் என்று நினைக்கிறேன். அவர் தன் வாழ்க்கையை கட்டுதிட்டமான சில ஒழுங்குமுறைகளுக்குள் அமைத்துக்கொண்டவர். தற்துணிபும் தன்னம்பிக்கையும் அவரை வழிநடத்தின. ஒரு இலக்கியவாதி என்ற வகையில் அவரது வாழ்வு நிறைவானது. இதில் அவருக்கு ஒரு சுயதிருப்தி இருப்பது அவரது ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படக் காணலாம்.

நான் ஜீவாவை முதல்முதல் சந்தித்தது 1965 டிசம்பரில் என்று நினைக்கிறேன். அப்போதுதான் நீலாவணனுடன் முதல்முதல் நான் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்போது மல்லிகை வெளிவரத் தொடங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். கஸ்தூரியார் வீதியில் ஜீவாவின் தொழிலகத்தில் அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசினோம் என்பது இப்போது நினைவில்லை. ஜீவா ஒருவருக்கு சிகையலங்காரம் செய்துகொண்டே என்னுடன் உரையாடியது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது நான் இலக்கிய உலகுக்குப் புதியவன். ஜீவா என்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்க முடியாது. 1970களின் தொடக்கத்தில் கைலாசபதியின் தலைமையில் சாகித்திய மண்டல உறுப்பினர்களாகச் செயற்பட்டபோதுதான் நாங்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலப் பிட்டியிலும் கல்முனையிலும் இலக்கிய விழாக்களை நாம் இணைந்து நடத்தியிருக்கிறோம். அக்காலகட்டத்தில்தான் நான் மல்லிகையில் அடிக்கடி எழுதினேன். 1976ல் நான் யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இணைந்தபின் மல்லிகை அலுவலகத்திலும், வெளியிலும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இருந்தன. மல்லிகையைத் தருவதற்காக என் வீட்டுக்கும் அவர் சில தடவைகள் வந்திருக்கிறார். 1990ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலம்பெயரும்வரை இச் சந்திப்பு நீடித்தது. பின்னர் ஜீவாவும் அநேகரைப்போல் கொழும்புக்குப் புலம்பெயர்ந்தார். அதன்பின் அடிக்கடி இல்லாவிட்டாலும் இடைக்கிடை அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

nwdn_file_temp_1611849052158.jpg

ஜீவாவுக்கும் எனக்குமிடையே சில ஊமை முரண்பாடுகள் இருந்தபோதும் அவை பகை முரண்பாடுகள் அல்ல, நட்புரீதியான, விமர்சனரீதியான முரண்பாடுகள்தான். நான் நீண்டகாலமாக மல்லிகைக்கு எழுதுவதில்லை என ஜீவாவுக்கு என்மீது வருத்தம் உண்டு. மல்லிகைக்கு மட்டுமல்ல ஏனைய பத்திரிகைகளுக்கும் நான் அதிகம் எழுதுவதில்லை. அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்பதுதான் அதற்குரிய ஒரே காரணம். 

ஜீவா கொழும்புக்கு வந்தபின்னர் மல்லிகை அட்டையில் எனது படமும் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார். கொழும்பில் சந்திக்கும் போதெல்லாம் வற்புறுத்தி எனது படம் ஒன்றை அனுப்பவேண்டும் என்று கேட்பார். நானும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் செல்வேன், பிறகு மறந்துவிடுவேன். இவ்வாறான விடயங்களில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை என்பதும் அதற்கு ஒரு காரணம். ஒருமுறை கொழும்பில் சந்தித்தபோது எனது படம் மல்லிகை அட்டையில் வராவிட்டால் வரலாறு தன்மீது பழிசுமத்தும் என்று தனக்கே உரிய பாணியில் ஜீவா என்னிடம் கூறினார். ‘வரலாற்றுப் பழியில்’ இருந்து ஜீவாவை விடுவிக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன். ஆயினும் சொன்னதுபோல் படம் அனுப்பவில்லை. பின்னர் எப்படியோ எனது படம் ஒன்றை எங்கிருந்தோ பெற்று, எனது மாணவன் பிரசாந்தனைக்கொண்டு என்னைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதுவித்து ஜூன் 2009 மல்லிகை இதழில் பிரசுரித்தார். ‘வரலாற்றுப் பழியில்’ இருந்து ஜீவா விடுபட்டதில் எனக்குத் திருப்தியே.

மல்லிகையை வெளியிடத் தொடங்கிய பின்னர் ஜீவா தன் சுயதொழிலைக் கைவிட்டு அதனையே தன் முழுநேரத் தொழிலாகவும் இலக்கியப் பணியாகவும் வரித்துக்கொண்டார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தை, இலக்கியத்தை மட்டும் நம்பி வாழ்பவர் இலங்கையில் நான் அறிந்தவரை ஜீவா ஒருவர்தான். அவருடைய விடா முயற்சியும், தற்துணிபும், அர்ப்பணிப்பும் அதைச் சாத்தியமாக்கியுள்ளன, மல்லிகையை ஐம்பதாவது ஆண்டை நோக்கிக் கொண்டு செல்கின்றன. இதை ஒரு தனிமனித சாதனையாக நாம் கொண்டாடலாம்.

கடந்த நாற்பது ஆண்டுகால ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மல்லிகையின் பங்கு என்ன என்ற கேள்வி நம்முன் உள்ளது. 1970க்குப் பின்னர் மல்லிகையில் எழுதி முன்னணிக்குவந்த ஒரு எழுத்தாளர் பரம்பரை இதற்குப் பதில் சொல்லும் என்று நம்புகின்றேன். திக்வல்லை கமால் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஓர் இலக்கிய ஆளுமை. இவருடைய கணிசமான படைப்புகள் மல்லிகையிலேயே பிரசுமாயின. 

செங்கையாழியான் தொகுத்த மல்லிகைச் சிறுகதைகள் இரு தொகுதிகளும் மல்லிகையின் இலக்கியப் பங்களிப்பின் அறுவடைகள்தான். தான் வளர்த்த அல்லது தன்னைக் களமாகக் கொண்டு வளர்ந்த இலக்கியப் பரம்பரை பற்றி மல்லிகை பெருமைப்படுவதில் நியாயம் உண்டு. 

முக்கியமான சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதிலும் மற்ற இதழ்களைவிட மல்லிகைக்கு முக்கியமான பங்கு உண்டு. மல்லிகை வெளியிட்ட சிங்களச் சிறுகதைகள் தொகுப்பு இதற்கு ஒரு உதாரணம். 

ஈழத்து இலக்கியம், இலக்கிய விமர்சனம் தொடர்பான திறந்த விவாதங்களுக்கு மல்லிகை எந்த அளவு களமாக அமைந்தது என்ற கேள்வியையும் நாம் கேட்டுப்பார்க்கலாம். இது தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு இடம் உண்டு. எனினும் மல்லிகையில் இடம்பெற்ற விமர்சனங்கள், விவாதங்கள் பல முக்கியமானவை. மார்க்சியம், தேசியம், இலக்கியவடிவங்கள் என்பன தொடர்பான முக்கியமான விமர்சனக் கட்டுரைகள், விவாதங்கள் மல்லிகையில் இடம்பெற்றுள்ளன. கைலாசபதி, சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரட்னா உட்பட ஈழத்தின் முக்கியமான விமர்சகர்கள் மல்லிகையில் எழுதியுள்ளனர். மல்லிகையில் வெளிவந்த முக்கியமான விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலுருவாக்கப்படின் இத்துறையில் மல்லிகையின் பங்களிப்பு வெளிச்சத்துக்கு வரும்.

PhotoLab_app__IMG_20210128_160928.jpg

ஜீவா பிரதானமாக ஒரு படைப்பாளியா, பத்திரிகை ஆசிரியரா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுச் சிக்கலானது. ஜீவா ஒரு படைப்பாளியாக - ஒரு சிறுகதை எழுத்தாளனாகவே தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினார். 1950, 60 களில் அதில் தீவிரமாக இயங்கினார். தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். பின்னர் இவற்றில் இடம்பெற்ற கதைகளையும் வேறு சில கதைகளையும் சேர்த்து 50 கதைகள் கொண்ட டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஒரு முழுத் தொகுப்பாக 1996ல் வெளிவந்தது. ஜீவாவின் மிகப் பெரும்பாலான கதைகள் 1950, 60களில் எழுதப்பட்டவைதான். மல்லிகை வெளிவரத் தொடங்கிய பின்னர் மிகக் குறைவான கதைகளையே ஜீவா எழுதியிருக்கிறார். அவ்வகையில் ஜீவா ஒரு சிறுகதை எழத்தாளர் என்பதைவிட மல்லிகை ஆசிரியர் என்ற பிம்பமே இன்று மேலோங்கியுள்ளது.

ஒரு சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் 1950, 60 காலகட்டத்துச் சிறுகதை எழுத்தாளராகவே நாம் ஜீவாவை நோக்கவேண்டும். ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை இக்காலகட்டம் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். இலங்கையில் இடதுசாரி, மார்க்சிய அரசியல் சிந்தனையும் முற்போக்கு இலக்கிய இயக்கமும் முன்னணிக்கு வந்த காலகட்டம் இது. சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வும் சமூக எழுச்சியும் இலக்கியத்தில் வெளிப்பாடு பெற்று, சாதாரண மக்களின் பேச்சுமொழி இக்கிய மொழியாக மாற்றமடைந்த காலகட்டமும் இதுவே. வர்க்க, சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை என்ற குரல் இலக்கியத்தில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலகட்டம் இது.  தாழ்த்தப்பட்ட அடிநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இக்கால கட்டத்தில்தான் எழுத்தாளர்களாக முன்னணிக்கு வந்தார்கள். டொமினிக் ஜீவா, டானியல், என். கே. ரகுநாதன், எஸ். பொன்னுத்துரை போற்றவர்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். சே. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், இளங்கீரன் முதலியோர்  தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தோர் அல்ல எனினும் புதிய இலக்கியக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்டு முற்போக்கு இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவாகினர். கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரட்னா ஆகியோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் கருத்துநிலைக் காவலர்களாக முன்னணிக்கு வந்தனர்.

ஜீவாவின் கதைகள் இக்காலகட்டத்து முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டுக்கு உதாரணங்களாக அமைவன. ஜீவாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தாழ்த்தப்பட்ட அல்லது அடிநிலை மக்களே. அவர்களது பிரச்சினைகள், துன்பங்கள், ஆசை அபிலாசைகள், அவர்களுக்குள் புதைந்திருக்கும் மனிதத் தன்மை என்பன அவரது கதைப் பொருளாக அமைகின்றன. சாதி ஒடுக்குமுறை என்னும் யாழ்ப்பாணச் சமூக யதார்த்தத்தை, அங்கு நிலவிய வர்க்க முரண்பாட்டை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லும் கதைகள் அவற்றுட் பல. இக்காலத்தில் எழுதிய டானியல், என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், செ. கணேசலிங்கள் முதலியோரின் கதைகளிலும் நாம் இப் பொதுப் பண்பைக் காணலாம். 1950, 60களில் இத்தகைய கதைகள் ஈழத்து இலக்கிய உலகில் புதியவை. அரசியல் உணர்வை முனைப்பாகக் கொண்டவை. அதனாலேயே இவை கலை அல்ல பிரச்சாரம் என ஒரு சாராரால் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவே மக்கள் இலக்கியத்தின் அழகியல் என முற்போக்கு விமர்சகர்களும் எழுத்தாளர்களும் வாதிட்டனர். அக்கால கட்டத்தில் இத்தகைய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய வாலாற்றுத் தேவை தங்களுக்கு இருந்ததாக ஏ. ஜே. கனகரட்னா இதுபற்றிப் பேசும்போது ஒருமுறை என்னிடம் கூறினார். இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது ஏ. ஜே. அப்படிச் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகின்றது. எக்காலத்துக்கும் பொதுவான, நிலையான கலைமுறை, அழகியல் என்று எதுவும் இல்லை. எல்லாமே மாறுவன, வேறுபடுவன. இந்த வேறுபாடுகளே இலக்கியத்துக்கு ஒரு பன்முகத் தன்மையைத் தருகின்றன. 1950, 60 களில் 70களிலும்கூட முற்போக்கு இலக்கியம் முன்வைத்த அழகியல் தனித்துவமானது, வேறுபட்டது என்ற புரிதல் முற்போக்கு இலக்கியத்தின் அழகில் பிரச்சினைகள் பற்றிய சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம். இச்சர்ச்சைகள் எவ்வாறு இருந்தாலும் ஐம்பது அறுபதுகளில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஜீவாவும் ஒரு முக்கிய ஆளுமை என்பதை யாரும் மறுக்க முடியாது. மல்லிகைப் பந்தல் மூலமாக ஒரு நூல் வெளியீட்டாளர் என்ற வகையிலும் ஜீவாவின் இலக்கியப் பணி முக்கியமானது.

nwdn_file_temp_1611911740835.jpg

ஜீவாவின் சுயசரிதை நூல்களை - எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத் தாளின் ஊடாக ஒரு அனுபவப் பயணம் - படிக்கும் போது அவரது சமூகச் சூழல், குடும்ப வாழ்வின் நெருக்கடி ஆகியவற்றுக்குள் அமிழ்ந்து போகாது ஈழத்து இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாக அவர் எழுச்சியடைந்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே தோன்றுகின்றது. அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே இதனைச் சாத்தியமாக்கியது என்று கூறலாம். சவரக் கடையே தன் சர்வகலாசாலை என்றும், நான் சிரைக்கப் பிறந்தவனல்ல சாதிக்கப் பிறந்தவன் என்றும், மண்புழுவாக இருந்து மனிதனானவன் என்றும் ஜீவா தன்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். தன்னையும் தன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பற்றி அடிக்கடி குரல் உயர்த்திப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். சிலவேளை இது ஒரு நெருடலாகவும் மிகையான சுய மதிப்பீடாகவும் எனக்குத் தோன்றியதுண்டு. ஆயினும், ஜீவா என்ற மனிதனின், எழுத்தாளனின், பத்திரிகையாளனின் பயணத்தில் தாண்ட வேண்டியிருந்த தடைகளையும், சகிக்க வேண்டியிருந்த அவமானங்களையும், சந்திக்க வேண்டியிருந்த இன்னல்களையும் அறியும்போது ஜீவாவின் உளவியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஜீவா சொல்வதுபோல் இறுக்கமான யாழ்ப்பாணச் சாதி அடுக்கை உடைத்துக்கொண்டு ஒரு மண்புழு மனிதனான கதைதான் ஜீவாவின் கதை. அவருடைய சிறுகதைகள் எல்லாவற்றையும் விடச் சிறந்த கதை அது. ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை அதனாலேயே நானும் கொண்டாட நினைத்தேன். ஜீவா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மல்லிகையையும் மல்லிகைப் பந்தலையும் இன்னும் மணம் கமழச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

………….           …………….

இதை எழுதி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 

கனத்த மனதுடன் இன்று வழியனுப்புகிறோம். 

நிறை வாழ்வு வாழ்ந்தீர், நிலைக்கும் உம் பணிகள்

 

https://www.namathumalayagam.com/2021/01/blog-post.html?fbclid=IwAR0l1RjjwiAN4tQD7_k18N72Mw7EsA9stcg8S-oxtAifNdKbhAxstdJYLWs

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முப்பது காசுப் புரட்சி

டுதல், பாடுதல், சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர், பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார்’ என்ற பாரதியின் வாக்கை மகுட வாக்கியமாகக்கொண்டு, 1966 ஓகஸ்ட் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் வெளிவந்த ‘மல்லிகை’ இதழின் தனி இயங்குசக்தியாக விளங்கியவர் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவர் ‘மல்லிகைப் பந்தல்’ என்ற பதிப்பகத்தையும் உண்டாக்கி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டார். கடுமையான யுத்தச் சூழலிலும், விமானக் குண்டு வீச்சுகளுக்குக் கீழேயும் மல்லிகை ஓயாமல் மலர்ந்தது. மொத்தமாக 401 இதழ்கள் வெளிவந்தன. தமிழில் வேறெந்த இலக்கிய இதழும் இந்த எண்ணிக்கையை எட்டியதேயில்லை.

தனது பன்னிரண்டாவது வயதில், அய்ந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி, தந்தையின் கடையில் முடிதிருத்தும் தொழிலைப் பயின்றவர் ஜீவா. ‘சவரக்கடையே எனது சர்வகலாசாலை’ என ஒரு நேர்காணலில் ஜீவா சொல்லியிருப்பார். ‘யோசப் சலூன்’ எனவும் ‘வண்ணான் குளத்தடிக் கடை’ எனவும் அழைக்கப்பட்ட அந்தச் சிகையலங்கார நிலையமே, ஜீவாவின் கற்கை நிலையமானது.

இளம் ஜீவாவின் அரசியல் ஆர்வம் திராவிட இயக்கத்தாலேயே தூண்டப்பட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களது எழுத்திலும் பேச்சிலும் தனக்கு வெகுவாக ஈர்ப்பு இருந்ததை ஜீவா பதிவு செய்திருகிறார். அவர் ‘திராவிட நாடு’ இதழுக்குச் சந்தாதாரரும் கூட. 

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட போது, ஜீவா இடதுசாரித் தத்துவத்தால் ஈர்க்கப்படுகிறார். புகழ் பெற்ற இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் 1948-ல் இந்தியாவிலிருந்து தப்பிவந்து, யாழ்ப்பாணத்தில் தலைமறைவாக இருந்தார். அப்போது ஜீவானந்தத்தைச் சந்தித்த டொமினிக், அவரால் கவரப்பட்டுத் தன்னோடு ஜீவா என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.

டொமினிக் ஜீவா 1927-வது வருடம், யாழ்ப்பாண நகரத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணச் சாதியச் சமூகக் கட்டமைப்பில் ஜீவா பிறந்த சாதி ‘பஞ்சமர்’ என்ற கட்டமைப்புக்குள்ளேயே வருகிறது. ஆலய நுழைவு, தேநீர் கடை நுழைவு போன்ற அடிப்படை மனித உரிமைகளே தலித்துகளுக்கு மறுக்கப்பட்டிருந்த, கொடிய சாதியத் தீண்டாமை நிலவிய காலத்திலேயே இளம் ஜீவா உருவாகிறார். பள்ளிக்கூடத்திலேயே பிஞ்சு ஜீவா மீதான சாதிய ஒடுக்குமுறை தொடங்கிவிடுகிறது. அந்த ஒடுக்குமுறை கடந்த 28.01.2021-ல் தொண்ணூற்று நான்கு வயதில் அவர் மறையும்வரை, அவரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தேயிருக்கிறது. மரணம் தான் அவரைத் தீண்டாமையிலிருந்து நிரந்தரமாக விடுவித்திருக்கிறது என்பதே சகிக்கவொண்ணாத உண்மையாகிறது.

தனது முப்பத்து மூன்றாவது வயதிலேயே ‘சாகித்ய விருது’ பெற்ற ஜீவா, தன்னுடைய இடையறாத இலக்கியச் செயற்பாடுகளால் இலங்கைக்கு வெளியேயும் புகழ் பெற்றவர். ஜீவாவுடைய ஆரம்பகால நூல்களை சரஸ்வதி, என்.சி.பி.எச். போன்ற தமிழகத்தின் இடதுசாரிப் பதிப்பகங்கள் வெளியிட்டன. தமிழகத்து எழுத்தாளர்களோடு இறுதிவரை ஜீவாவுக்கு உறவும் நட்பும் இருந்தன. சோவியத் எழுத்தாளர் ஒன்றியம் 1987-ல் ஜீவாவை சோவியத் நாட்டுக்கு அழைத்து மதிப்புச் செய்தது. டிசம்பர் 2000-ல் அய்ரோப்பாவுக்கு ஜீவா அழைக்கப்பட்டு மூன்று நாடுகளில், பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். 2013-ல் ஜீவாவுக்கு இயல் விருதை விழங்கி, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அந்த விருதுக்கு மகிமையைத் தேடிக்கொண்டது.

ஆனாலும், சாதியின் இரகசியக் கரங்கள் ஜீவாவைத் துரத்திக்கொண்டேயிருந்தன. 1999-ல் வெளியாகிய அவரது தன்வரலாற்று நூலான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ நூலைப் படிக்கும் போது, சாதியத்தால் அவர் எதிர்கொண்ட அவமானங்களும் வேதனைகளும் பற்கடிப்புகளும் மட்டுமல்லாமல், சாதியத்துக்கு எதிராக அவர் விடாமல் தொடுத்துவந்த போரும் நமக்கு அறியவும் ஆவணமாகவும் கிடைக்கின்றன.

தன்னுடைய சிறுகதைகளை ஆய்வு செய்து, பல்கலைக்கழக மாணவர்கள் ‘கலாநிதி’ பட்டம் பெற்றிருப்பதைக் குறிப்பிடும் ஜீவா “ஆனால், இந்த மண்ணிலுள்ள எந்தப் பல்கலைக்கழகமும் என்னை அழைத்து, என்னுடைய எழுத்துப் பணி குறித்து மாணவர்களோடு உரையாட வைத்ததில்லை” என மனம்வருந்திச் சாடுகிறார். கல்வி நிறுவனங்களில் கூட இறுக்கமாகப் படிந்து கிடக்கும் சாதியத்திற்கு ஜீவாவின் வாழ்விலேயே இன்னோர் எடுத்துக்காட்டும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாழ் பல்கலைக்கழகம் ஜீவாவுக்கு கௌரவ எம்.ஏ. பட்டம் வழங்க முன்வந்தது. கௌரவ கலாநிதிப் பட்டம் பெறுவதற்குச் சகல தகுதிகளும் உரித்துகளுமுள்ள ஜீவாவை எம்.ஏ. பட்டத்திற்குக் கீழிறக்கிப் பரிந்துரைத்த பல்கலைக்கழகத்தின் இழிசெயலில் உறைந்திருந்தது சாதியமே. பல்கலைக்கழகம் வழங்க முன்வந்த எம்.ஏ. பட்டத்தை ஜீவா சுயமரியாதையுடன் நிராகரித்தார். 

ஜீவாவின் எண்பதாவது பிறந்தநாளில் ‘தினக்குரல்’ நாளிதழில் முதன்மை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் ‘ஜீவாவை வாழ்த்துவோம்’ எனத் தலையங்கக் கட்டுரை எழுதி வெளியிட்டார். கட்டுரை வெளியானதும் ஆசிரியரை அழைத்த பத்திரிகையின் உரிமையாளர் ‘ டொமினிக் ஜீவாவைப் புகழ்ந்து ஆசிரியத் தலையங்கம் தீட்டியது சரியான காரியமா? அவர் யாழ்நகரில் கஸ்தூரியார் வீதியில் முடிதிருத்தும் நிலையம் வைத்திருந்தவர் என்பது உமக்குத் தெரியுமா?’ என்று கோபப்பட்டார் என்பதை வீ. தனபாலசிங்கம் பதிவு செய்துள்ளார். மல்லிகை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிலவற்றின் முகவரியில் ‘ஆசிரியர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆசிரையர்’ எனக் குறிப்பிட்டு அனுப்பப்படுவதுண்டு.

இத்தகைய நச்சுச் சாதி வலையைக் கண்ணி கண்ணியாக அறுத்துக்கொண்டே ஜீவா முன்னோக்கி நடக்க வேண்டியிருந்தது. தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சாதிகளது விடுதலைக்காகத் தொடக்கப்பட்ட ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’யில் செயலாற்றியவர் ஜீவா. அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்களிலொருவர். ஆலய நுழைவுப் போராட்டக்களத்தில் நின்றிருந்த ஜீவா மீது, ஆதிக்க சாதி வெறியர்களால் மலம் கரைத்து ஊற்றப்பட்டது. அந்த மலத்தின் நாற்றம் தன்னுடலிலிருந்து இன்னும் விலகவில்லை என பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் உரையாற்றும்போது ஜீவா அளித்த சாட்சியம் இரக்கத்தைக் கோரிய குரலாக இல்லாமல் அறைகூவலாகவே ஒலித்தது. சாதியத்திற்கு எதிரான போரில் இறுதிவரை ஜீவா பணியவேயில்லை. அவரது எழுதுகோலும் நாவும், முதுமையாலும் நோயாலும் ஓயுமட்டும் அவர் முனைப்போடு போராடிக்கொண்டேயிருந்தார். 

ஜீவாவிடம் வறட்டுவாதச் சிந்தனைகளோ முரட்டுப் பிடிவாதமோ கிடையாது என்பதை மல்லிகை இதழ்களைப் படிக்கும்போது நாம் புரிந்துகொள்ளலாம். அனைத்துவிதமான முற்போக்குச் சக்திகளையும் அரவணைத்தே அவர் இயங்கினார். சாதிய ஒழிப்பு என்ற பெயரில், சுயசாதிப் பற்றில் அவர் வீழ்ந்து போனவரில்லை. விடுதலைக்கான புதிய சிந்தனைகளை ஓயாமல் கண்டடைந்தார். தலித் அரசியலை மட்டுமல்லாமல், தலித் என்ற சொல்லையே அங்கீகரிக்க இடதுசாரிகள் தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த போது, சென்ற நூற்றாண்டின் இறுதி வருடத்தில் ஜீவா தன்னுடைய சுயசரிதையில் இவ்வாறு பதிவு செய்கிறார்:

“தலித் என்ற சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட, தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக – புழக்கத்தில் வந்துவிட்டது. அகில இந்தியச் சொல்லாகவும் பரிமாணம் பெற்றுவிட்டது. தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் பரவலாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்படுகிறது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக் கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது. இந்தச் சொல்லை இனி யாராலும் புறக்கணித்துவிட முடியாது. அலட்சியம் செய்துவிடவும் முடியாது. அந்தச் சொல்லின் வலிமை என்னையும் ஆட்கொண்ட காரணத்தாலேயே, நான் எனது சுயசரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன். நாங்களும் மனுசங்கடா! தலித் இயக்கம் கற்றுத் தந்த மூல மந்திரம் இது!”

ஜீவாவின் சுயசரிதையைப் படிக்கும்போது, அவருக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த சில விஷயங்களை இரகசியமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பது போல் ஓரிடத்தில் நான் உணர்வேன். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது, ஜப்பான் யாழ்ப்பாண நகரத்தில் குண்டு வீசும் என்ற அச்சமிருந்தது. ஜீவாவின் குடும்பம் யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து வந்த இடம் எனது கிராமமான அல்லைப்பிட்டியாக இருந்தது.

அல்லைப்பிட்டியில் ஜீவா ஒரு மாதம் தங்கியிருந்திருக்கிறார். எங்கள் கிராமத்துக் கடலில் ‘சூள்’ கொளுத்தி ஜீவா மீன் பிடித்திருக்கிறார். என் கிராமத்தின் காத்தான் கூத்துப் பாடல்களைச் சுகித்திருக்கிறார். ஒடியல் கூழின் சுவையில் திளைத்திருக்கிறார். ஜீவா அவரது உறவினரான மாணிக்கம் அய்யா வீட்டிலேயே அப்போது தங்கியிருந்தார் . ஜீவா தன்னுடைய சுயசரிதைப் பக்கங்களில் மாணிக்கம் அய்யாவின் பெருமைகளை வாயூறச் சொல்லியிருப்பார். மாணிக்கம் அய்யாவை அவரது இறுதிக் காலங்களில் நானும் பார்த்திருக்கிறேன் என்பதால் நான் அந்தப் பக்கங்களோடு ஒன்றிப் போய்விடுவேன். ஜீவா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் மட்டுமல்லாமல், மிகச் சிறந்த கதைசொல்லியும் கூட. மக்களின் வழக்காறுகளாலும், செழித்த அனுபவப் பாடங்களாலும் மட்டுமல்லாமல், கொந்தளிக்கும் உணர்ச்சிகரத்தாலும் அவர் தனது மொழியைக் கட்டியிருக்கிறார்.

டொமினிக் ஜீவாவின் எழுத்துலகம் அதிகமும் தலித்துகளாலும் விளிம்புநிலை மனிதர்களாலுமானது. இலக்கியம் அவருக்கு வெறும் ரசனைக்கான பண்டமல்ல. எழுத்து அவருக்கு விடுதலைக்கான கருவி. அவரது ஆரம்ப கால எழுத்துகளுக்கு, தமிழகத்தின் இடதுசாரி இதழ்களான சரஸ்வதியும் தாமரையுமே களம் அமைத்துக்கொடுத்தன. இந்த இதழ்களை முன்மாதிரியாக் கொண்டுதான், ஜீவா ‘மல்லிகை’ இதழைத் தொடக்கினார். 

ஜீவாவின் சிறுகதைப் பாணி, நேரடியான எளிமையான கதை சொல்லல். கதைக்குள் ஒரு செய்தியை வெளிப்படையாக வைத்திருத்தல். ஒருவகையில் எழுத்தில் உரத்துப் பேசல். ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற இலக்கிய எல்லைக்குள் கச்சிதமாக அடங்கியதே அவரது சிறுகதை வீச்சு. ஆனால், மல்லிகை இதழ் வெவ்வேறு குரல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. ஈழத்தின் நவீன எழுத்தாளர்களில் பலர் மல்லிகையில் உருவாகி வந்தவர்களே. 

எண்பதுகளில் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் பல இடதுசாரிகளும், எழுத்தாளர்களும் தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், ஜீவா ஒருபோதும் போரை ஆதரிக்கவில்லை. தமிழ் ஆயுத இயக்கங்களுக்கு முன்னே அவரது எழுதுகோல் தலை குனிந்ததே இல்லை. தமிழ்த் தேசிய வெறிக்கு அவர் பணிந்ததுமில்லை. இனப் பகைமைக்கு மாறாக, இன ஒற்றுமையையே அவர் முன்னிறுத்தினார்.

ஜீவா ‘மல்லிகை இதழின்’ ஆசிரியர் மட்டுமல்ல. அவரது தோளில் தொங்கிய பைக்குள் ‘மல்லிகை’ இதழ்கள் எப்போதும் வழங்குவதற்குத் தயார் நிலையிலிருந்தன. தெருக்களிலும் இலக்கிய அரங்குகளிலும் அவர் இதழைக் கொண்டு சென்று பரப்பினார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஒவ்வொரு வாசற்படியாக ஏறியிறங்கி இதழை விற்பனை செய்தார். எத்தனையோ தடைகளையும், சாதிய வன்மங்களையும், சதிகளையும் எதிர்கொண்டு ‘மல்லிகை’யை ஓர் இயக்கமாகவே டொமினிக் ஜீவா நிறுவிக்காட்டினார். 

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழைப் பண்டிதர் அயோத்திதாசர் ஆரம்பித்து நடத்தினார். ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ என்றார் அயோத்திதாசர். அதற்கு அறுபது வருடங்களுக்குப் பின்னாக ‘மல்லிகை’ இதழை ஜீவா ஆரம்பித்தபோது, தனி இதழின் விலை முப்பது சதம். இதழை எவருக்கும் இலவசமாக ஜீவா வழங்கமாட்டார். அது இலக்கியத்துக்கும் எழுத்துக்கும் இழுக்கு என்றார். ஓர் எளிமையான இதழாக முகிழ்த்த மல்லிகை, ஒரு வாசிப்புப் புரட்சியையே நடத்திக் காட்டியது. மல்லிகை அளவுக்குப் பரவலாக அறியப்பட்ட, படிக்கப்பட்ட இலக்கிய இதழ் ஈழத்தில் வேறொன்றில்லை. காலம் காலமாக வாசிப்பு மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட சாதியினரையும், அடிமட்டத் தொழிலாளர்களையும், விளிம்புநிலையினரையும் இலக்கிய வாசிப்பை நோக்கி வரலாற்றில் முதன் முதலாக இழுத்துவந்தவர் ஜீவாவே. எப்போதுமே தூய வெண்ணிற உடை தரித்து, படிய வாரிய தலையுடன் கைகளில் மல்லிகையை ஏந்தி யாழ்ப்பாணத் தெருக்களில் நிமிர்ந்து நடந்த ஜீவா ஒற்றையாள் ரூபம், அந்த ரூபம் அறிவு வெளிச்சம்!
 

http://www.shobasakthi.com/shobasakthi/2021/02/01/முப்பது-காசுப்-புரட்சி/

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கச்சதீவு அதிபர்... இரண்டு நாள் நல்லெண்ண விஜயமாக,  கைலாசா  நாட்டுக்கு சென்றார்.  அவரை  விமான நிலையத்திற்கு சென்று... கைலாசா  அதிபர் நித்தியானந்தா வரவேற்றார். 🤣
  • நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு முன்னர் திட்டமிட்ட வாறு நடைபெறும். சுகாதார விதிமுறைகளை பின் பற்றி , மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறும். என தெரிவித்தார். தேசிய வெசாக் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும் ,சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் , பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1211676
  • அதிக அளவு பூக்கள் பூத்தும்...  மகரந்த சேர்க்கை இல்லாததால், முருங்கை உற்பத்தி பாதிப்பு.
  • உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1211720
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.