Jump to content

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

 
 
மருத்துவர் லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

மருத்துவர் லீ வெண்லியாங்

 

கொரோனா வைரஸின் தொடக்க காலத்திலேயே அதைப் பற்றி எச்சரித்ததால், ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்ட, சீன மருத்துவர் லீ வெண்லியாங் அதே கொரோனா தொற்றால் இறந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில், லீ வெண்லியாங்கின் உடல்நிலை தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள், சீன அரசு ஊடகத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அவர் வேலை பார்த்த மற்றும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட வுஹான் மருத்துவமனை கூறியது.

34 வயதான லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சக மருத்துவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைப் பரப்ப முயற்சித்தார். மூன்று நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு காவலர்கள் வந்து வைரஸ் குறித்த வேலைகளை நிறுத்தக் கூறினார்கள்.

லீ வெண்லியாங் மீண்டும் பணிக்குத் திரும்பினார். மருத்துவமனைக்கு வந்த ஒரு நோயாளி மூலம் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் இறப்பதற்கு மூன்று வார காலத்துக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவர் லீ வெண்லியாங் தன் கதையை, மருத்துவமனையின் படுக்கையில் இருந்த படியே சீனாவின் சமூக வலைதளமான வைபோவில் பதிவிட்டார்.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,WEIBO

"எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் லீ வெண்லியாங், நான் வுஹான் மத்திய மருத்துவமனையில் கண் மருத்துவராக இருக்கிறேன்..." என அப்பதிவு தொடங்கும். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப வாரங்களில் வுஹான் உள்ளூர் அதிகாரிகள் எத்தனை அலட்சியமாகச் செயல்பாட்டார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது அப்பதிவு.

மருத்துவர் லீ வெண்லியாங், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க மையமாக கருதப்படும் வுஹானில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வகையான வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேரை அவர் கண்டபோது, அது 2003-ம் ஆண்டு உலகை ஆட்டிப்படைத்த சார்ஸ் என நினைத்தார். ஹுவானன் மீன் சந்தையிலிருந்து வுஹான் முழுவதும் இந்த வைரஸ் வந்ததாக நம்பப்பட்டது. அப்போது, நோயாளிகள் லீ வெண்லியாங் பணியாற்றி வந்த மருத்துவமனையில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, தன்னோடு பணியாற்றிய சக மருத்துவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி செயலி குழு மூலம் வைரஸ் பரவுவது குறித்த ஒர் எச்சரிக்கைச் செய்தியை இவர் அனுப்பினார். அதோடு தங்களைத் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.

அப்போது பரவிக் கொண்டிருந்தது கொரோனா வைரஸ் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு

பட மூலாதாரம்,LI WENLIANG

நான்கு நாட்களுக்குப் பிறகு சீனாவின் பொது பாதுகாப்புத் துறையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. அங்கு லீ வெண்லியாங்கை ஒரு கடிதத்தில் கையெழுத்திடக் கூறினார்கள்.

தவறான கருத்துக்களைக் கூறுவதாகவும், சமூக ஒழுங்கை சீர்குலைப்பதாகவும், தொடர்ந்து இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் லீ வெண்லியாங் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் எனவும் அக்கடிதத்தில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அதன் கீழ் "ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன்" என அவரது கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

மருத்துவர் லீ வெண்லியாங், அக்கடிதத்தை வைபோவில் பதிவிட்டு என்ன நடந்தது என விளக்கினார்.

விலங்குகளோடு தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே வைரஸ் தொற்று ஏற்படும் என கடந்த ஆண்டு ஜனவரியின் முதல் சில வாரங்களில் வுஹான் உள்ளூர் நிர்வாகம் கூறியது. அதோடு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவாது எனக் கூறப்பட்டது. இது முற்றிலும் தவறானது என நமக்கு இப்போது தெரியும்.

இந்த அலட்சியத்தால், மருத்துவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க எந்த விதிமுறைகளும் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை. மருத்துவர் லீ வெண்லியாங்கை காவலர்கள் வந்து எச்சரித்துச் சென்ற பிறகு, குளுக்கோமா என்ற நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்தார் மருத்துவர் லீ வெண்லியாங். மேலும், அந்த பெண் கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

தன் வைபோ பதிவில், தான் எப்படி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் இருமல் ஏற்படத் தொடங்கியது எனவும், அடுத்த நாள் தனக்கு எப்படி காய்ச்சல் இருந்தது எனவும், இரு நாட்களுக்குப் பிறகே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் அவர் விளக்கி இருந்தார். மேலும், அவரது பெற்றோர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

பத்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 2020ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி, சீனா கொரோனாவை ஓர் அவசர பிரச்சனையாக அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஓர் உலக பெருந்தொற்றாக அறிவித்தது. இப்படி அறிவித்த போது, அனைவருக்கும் பரிசோதனை செய்வது என்பது கிட்டத்தட்ட எதார்த்தத்தில் சாத்தியமில்லாததாகிப் போனது.

மருத்துவர் லீ வெண்லியாங் பல முறை கொரோனா பரிசோதனை செய்த போதும், ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் என்றே வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

லீ வெண்லியாங்

பட மூலாதாரம்,WEIBO

கடந்த 2020 ஜனவரி 30-ம் தேதி சமூக வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "இன்று நியூக்லிக் ஆசிட் சோதனை செய்தேன், அதில் பாசிட்டிவ் வந்திருக்கிறது. குழப்பங்கள் தீர்ந்து தற்போது தொற்று உறுதியாகி இருக்கிறது" என்றார். அப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான கருத்துகளும், ஆதரவு வார்த்தைகளும் வந்தன.

"மருத்துவர் லீ வெண்லியாங் ஒரு ஹீரோ" என ஒருவர் பதிவிட்டிருந்தார். "வருங்காலத்தில் ஏதாவது தொற்று நோய்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கை விடுக்க பயப்படுவார்கள்" என மற்றொருவர் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

"ஒரு பாதுகாப்பான பொது சுகாதார சூழல் உருவாக, லட்சக்கணக்கான லீ வெண்லியாங்குகள் தேவை" என மற்றொருவர் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, 34 வயதான மருத்துவர் லீ வெண்லியாங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் மரண செய்தி வெளியான போது கோபத்திலும், துக்கத்திலும் சீன சமூக வலைதளமான வைபோ மூழ்கியது.

"வுஹான் அரசு மருத்துவர் லீ வெண்லியாங்கிடம் மன்னிப்பு கோர வேண்டும்", "எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும்" என இரண்டு ஹேஷ்டேக்குகள் பெரிய அளவில் டிரெண்டாகின.

"நீங்கள் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த கோபத்தை மறந்துவிடாதீர்கள். இப்படி மீண்டும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என ஒருவர் தன் கருத்தைப் பதிவுச் செய்திருந்தார்.

சீனா இந்த பிரச்சனையை சமாளிக்க பல கருத்துக்களை தணிக்கை வளையத்துக்குள் கொண்டு வந்தது. பல வாரங்கள், மாதங்கள் கழித்து, மருத்துவர் லீ வெண்லியாங்கின் மரணத்துக்கு தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் உணர்ந்ததாகத் தெரிகிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு, லீ வெண்லியாங்கின் பதிவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன.

மக்கள் அவரின் சமூக வலைதளப் பக்கத்துக்குச் சென்று காலை வணக்கம் கூறுகிறார்கள். அவர்களது சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மருத்துவர் லீ வெண்லியாங் இறந்து ஓராண்டாகிவிட்டது, சீனாவும் கொரோனாவை வெற்றி கொண்டுவிட்டது. ஆனால், லீ வெண்லியாங்கின் சமூக வலைதள பக்கத்தில் குவிந்து வரும் கருத்துகள் தொடர்ந்து நம்பிக்கை ஒளியை வீசி கொண்டிருக்கின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.