Jump to content

பெரியார் – அறிதலும் புரிதலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று)

பெரியார் – அறிதலும் புரிதலும்  (பாகம் – ஒன்று)

— விஜி/ஸ்டாலின் —  

இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில்   அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. 

வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும்,  சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. 

அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு  பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் மிக அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர் பெரியாராகவே அது இருந்து வருகின்றது.  

யாரிந்த பெரியார்? என்று ஈழத்திலே இன்றைய இளந்தலைமுறையினரிடத்தில்  கேட்டால் கடவுளை எதிர்த்தவர், வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர், என்கின்ற நுனிப்புல் மேய்கின்ற  வண்ணமான  பதில்களே பெரும்பான்மையாக கிடைக்கின்றன.   

மனிதகுல விடுதலையின் குறியீடு 

ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் மேடை முழக்கங்களில், மனித உரிமைகளுக்கான  குரல்களில்,  பெண்ணுரிமை வாதிகளின் முன்னெடுப்புகளில்,  சுரண்டல்களுக்கெதிரான இடதுசாரிகளின் போராட்டக் களங்களில், சமூக நீதிக்கான அறைகூவல்களில், தமிழ் தேசியவாதிகளின் மொழியுணர்வு கோரிக்கைகளில், மத  சிறுபான்மையினரின் நசுக்கப்பட்ட குரல்களில் அனைத்திலுமே பெரியார் என்னும் பெயர் முன்னிறுத்தப்படுகின்றது.   பெரியார் இறந்து சுமார் (48 வருடங்கள்) அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் நாட்டில் உருவாகுகின்ற எந்தவொரு அரசியல்/சமூக செயற்பாட்டு   இயக்கமேனும் பெரியார் என்னும் பெயரை  கடந்து செல்ல முடியாத நிலைமை இன்றுவரை தொடர்கின்றது. சுருங்கச்சொன்னால் மனிதகுல விடுதலையின் ஒட்டுமொத்தக் குறியீடாக தமிழ்நாட்டில் பெரியார் கொண்டாடப்படுகின்றார். “கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவேயில்லை”யென்று தன் வாழ்நாள் முழுக்க பிரச்சாரம் செய்த ஒரு மனிதனை 99 வீதம் இறைபக்தியால் நிரம்பி வழியும் தமிழ் நாட்டுமக்கள் கொண்டாடுவதன் இரகசியந்தான் என்ன? அவர் தமிழ் நாட்டு மக்களுக்காக அப்படி என்னதான் செய்தார்? எதனைதான் விட்டுச் சென்றுள்ளார்?   

தொண்டு செய்து பழுத்த பழம்  

 தூயதாடி மார்பில் விழும்  

 மண்டைச் சுரப்பை உலகு தொழும்  

 மனக்குகையில் சிறுத்தை  எழும்”.  

என்று பெரியாரை சிலாகிப்பார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.  

1879 ல் பெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.இராமசாமி  என்னும் இயற்பெயரை கொண்ட பெரியார்  95 வயதுவரை வாழ்ந்தவர். 

இளவயது 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தான் இளவயதில் வகித்துவந்த ஈரோடு உள்ளுராட்சி மன்றத்தலைவர் பதவி உட்பட 28 கெளரவ பதவிகளை இராஜினாமா செய்தவர். இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாடு தலைவராக இருந்து காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கதர் இயக்கம், மதுவிலக்கு போராட்டம் என்பவற்றை தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து முன்னின்று நடத்தியவர். 

சமய சம்பிரதாயங்களின் பெயரால் பெண்கள் மீது இழைக்கப்பட்டுவந்த சமூகக்கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்பி அதனுடாக பெண்களை அணிதிரட்டுவதிலும் போராடச் செய்வதிலும் பாரிய வெற்றிகண்டவர். பெண்ணடிமைத்தனத்தை பூண்டோடு ஒழிப்பதில் அவர் காட்டிவந்த சிரத்தையை மதித்து பெண்கள் மாநாடொன்றில் அவருக்கு வழங்கப்பட்ட கெளரவ பட்டமே அவருக்கு பெரியார்‘ என்னும்  நிரந்தர பெயராயிற்று.   

மூத்த சத்தியாக்கிரகி 

கேரளம் வைக்கம் மகாதேவர் ஆலயத்தின் பெயரில் இடம்பெற்ற தீண்டாமை கொடுமைகளுக்கெதிராக நீண்ட சத்தியாகிரகத்தினை நடாத்தி அதில் வெற்றியும் கண்டவர். இதனாலேயே அவர் ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படுகின்றார். அப்போதெல்லாம் காந்தி இந்தியாவில் தனது சத்தியாக்கிரக வழிமுறைகளை தொடங்கியிருக்கவில்லை. என்பது சுவாரசியமான வரலாற்று செய்தியாகும்.  

அக்காலத்தில் கோலோச்சிய சாதிய கொடுமைகள் மீதும் அதனை பாதுகாக்கும் புராண இதிகாசங்கள் மீதும் கடவுளின் பெயரால் நடைபெற்றுவந்த அநீதிகள் மீதும் கடுமையான கேள்விக்கணைகளை தொடுத்தார். அதன்காரணமாக கண்ணெதிரே இடம்பெறும் தீண்டாமை கொடுமைகளையிட்டு   காந்தியாருடன் சமரசமற்ற  வாத பிரதிவாதங்களில் ஈடுபடநேர்ந்தது. இறுதியில் அவருடன் முரண்பட்டு இந்திய தேசியகாங்கிரஸில் இருந்து வெளியேறினார்.  

சுயமரியாதை இயக்கம் 

அதன்பின்னர் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பகுத்தறிவு மற்றும் சமதர்ம பிரச்சாரங்களை முன்னெடுப்பதை தீவிரமாக்கினார். அவற்றுக்காகவே பல மாநாடுகளை தமிழகமெங்கும் நடாத்தினார்.  

தனது சிந்தனைகளையும்,  செயற்பாடுகளையும்  மக்களிடம் பரவலாக  எடுத்துச்  செல்வதற்காக  குடியரசு, ரிவோல்ட் (ஆங்கிலம்), பகுத்தறிவு, ஜஸ்ட்டிஸ் (ஆங்கிலம்), விடுதலை, உண்மை, தி மொடர்ன் ரஷனிஸ்ட் (ஆங்கிலம்) போன்ற பல்வேறுபட்ட   வாராந்த, மாதாந்த இதழ்களை வெளியிட்டார். 

பார்ப்பனரல்லாதாருக்கான சமூக சமத்துவத்துக்காக போராடிவந்த நீதிகட்சியில் சேர்ந்தியங்கி அதன் தலைவராகவும் பின்னர் திராவிட இயக்கத்தின் ஸ்தாபகராகவும், தலைவராகவும் இறக்கும் வரை பணியாற்றினார். இவர் உருவாக்கிய திராவிட இயக்கப் பாரம்பரியமே  பல்வேறு கிளைகளாகி இன்றுவரை தமிழ் நாட்டு அரசியலில் நிராகரிக்கமுடியாத சக்திகளாக இருந்துவருகின்றன.  

1937ஆம் ஆண்டு  கட்டாய ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் அறிஞர்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்பு மாநாடுகளையும் கிளர்ச்சிகளையும் செய்தார். சுமார் மூன்று ஆண்டுகள் இடைவிடாது நடந்த இப்போராட்டங்களின் காரணமாக ஹிந்தி திணிப்பு வாபஸ் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . 

வைக்கம் போராட்டம், மது விலக்கு மறியல் போராட்டம், ஹிந்தி திணிப்புக்கெதிரான போராட்டம் என்பவற்றின்போதும் ‘பெரியாரின் பொன் மொழிகள்’ என்னும் நூல் வெளியீட்டுக்காகவும் கூட பல்வேறு தடவைகளில் வருடக்கணக்கான சிறைவாசங்களை அனுபவித்தார்.  

பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கான ஒதுக்கீட்டு விடயத்தில் திருத்தம் கோரி பெரியார் நடத்திய கிளர்ச்சிகளின் பலனாகவே இந்திய அரசியல் யாப்பானது 1951ல் முதன்முதலாக திருத்தத்தை கண்டது என்பது பெரும் சாதனையே.   

சர்வதேச ரீதியாக கப்பல் பயணங்கள் மட்டுமே இருந்துவந்த காலங்களில் இங்கிலாந்து,  ஜெர்மனி, ரஸ்யா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கெல்லாம்  அரசியல்தலைவர்கள், தொழிற்சங்கங்கள், புரட்சிகர சக்திகள் போன்ற பலதரப்பட்டவர்களையும் சந்தித்தும் உரையாடியும் பல்வேறுவிதமான அனுபவங்களை பெற்றுக்கொண்டார்.  

உலகப்புகழ்பெற்ற காரல்மாக்சின்  ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யை 1931ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக தமிழாக்கம் செய்து வெளியிட்ட பெருமைக்குரியவர் இந்த பெரியாரேயாகும்.  

பெரியாரின் அரசியல் போராட்டங்களும் களப்பணிகளும் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பல்வேறு விதமான மாறுதல்களுக்கு அடிகோலின. அதேவேளை  மாக்சிஸம், தேசியம், சாதியம்,   கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கைகள்,  பெண்ணுரிமை, கல்வி முறைமை, தமிழ் மொழி சீர்திருத்தம், மாநில உரிமைகள்,  சமூகநீதி, மதசார்பின்மை என்று விரிகின்ற அவரது எழுத்துக்களும் சிந்தனைகளும் பரந்து விரிந்த நவீன பார்வைகளால் செதுக்கப்பட்டவையாகும். எதிர்காலம் பற்றிய அவரது   எதிர்வுகூறல்களும் முன்மொழிவுகளும்  இன்றுவரை பலராலும் ஆச்சரியமானவையாக   விதந்தோதப்படுகின்றன.   இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கையிலும் மத, மொழி சிறுபான்மையினராகிய நாம் எதிர்கொள்ளுகின்ற அரசியல்,சமூக சிக்கல்களுக்கு விடைகாண பெரியாரின் சிந்தனைகளும் கருத்தாக்கங்களும் நிச்சயம் வழிவகுக்கும் வல்லமைகொண்டவையாகும். 

இவ்வாறாகவெல்லாம் இந்திய அளவில் காந்தி, நேரு, அம்பேத்கார், ஜின்னா என்று பலதரப்பட்ட ஆளுமைகளுடன் சரிநிகர் சமனாக அரசியல் களம்கண்ட பெரியார்மட்டும் ஈழத்தை  பொறுத்தவரை எப்படி முக்கியத்துவம் இழந்து போனார்?  ஏன் அதிகம் அறியப்படாது போனார்?  

குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களில் எத்தனையோ இந்திய அறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் நம்நாட்டு பாடவிதான குழுவினர்கள் ஏன்  புது உலக தீர்க்கதரிசிதென்கிழக்கு ஆசியாவின் சோக்ரடீஸ் அறியாமைமூடநம்பிக்கைஅர்த்தமற்ற சம்பிரதாயம்இழிந்த வழக்கங்கள் என்பவற்றின் கடும்  எதிரி”  என்று யுனஸ்கோவால் புகழுரைக்கப்பட்ட பெரியாரை மட்டும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர்? என்கின்ற கேள்விகள் எழுப்பப்படவேண்டிய காலமிது.   

(தொடரும்—) 

 

https://arangamnews.com/?p=3287

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 2)

— விஜி/ஸ்டாலின் — 

காந்தியும் பெரியாரும்  

பெரும் தனவந்த குடும்பத்தில் பிறந்து பல்வேறு கெளரவங்களோடும் செல்லப்பிள்ளையாக வாழ்ந்துவந்த ஒரு இளைஞன் எப்படி பகுத்தறிவாளனாக மாறினான்? லட்சோப லட்சம் பக்தகோடிகளின் வாழ்நாள் கனவான காசி யாத்திரையும் கடவுள்களின் மடாலயங்களுமே அந்த ராமசாமி என்னும் இளைஞனை பகுத்தறிவாளனாய் மாற்றுவதில் பெரும் பங்குவகித்தன என்று சொன்னால் நம்புவீர்களா?   

பெரியார் தனது 25 ஆவது வயதிலே துறவு கொள்ளும் நோக்கோடு காசிப்பயணம் மேற்கொண்டபோதே அவரது சிந்தனையில் பகுத்தறிவு என்னும் தீப்பொறி மூண்டது. காசி செல்லும் வழிகளிலும் தங்கிச் சென்ற மடங்களிலும் இதுவரை காலமும் ஒருபோதும் அறிந்திராத பிராமணியக் கொடுமைகள் பலவற்றை அவர் நேரிடையாகக் காணவும் அனுபவிக்கவும் நேர்ந்தது. கடவுளின் பெயரால் பிராமணரல்லாதோர் மீது திணிக்கப்படும் சாதி வெறி, தீண்டாமை, போன்ற சமூகக்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள அவரது மனது இடந்தரவில்லை.  

துறவு கொள்ளும் எண்ணத்தை துறந்து வீடுவந்து சேர்ந்த அவர் மீண்டும் அன்றாட வாழ்வில் கவனங்கொண்டார். இளம் வயதிலேயே தந்தையாரை இழக்கவேண்டி வந்தமையால் குடும்பப் பொறுப்பு மிக்கவராக மாறவேண்டிய நிலைவந்தது. தந்தையின் வியாபார விடயங்களை பொறுப்பெடுத்தார். தந்தையாரின் செல்வாக்கு காரணமாக ஈரோடு நகரத்தில் பல்வேறுபட்ட கெளரவ பதவிகள் இவரை தேடிவந்தன. ஈரோடு நகரமன்ற தலைவராகவும், கெளரவ மஜிஸ்திரேட்டாகவும் நியமனமானார்.  

அவ்வேளைகளில்தான் இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்று இந்திய தேசிய காங்கிரஸ் நடத்தி வந்த போராட்டங்கள் பெரியாரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. இந்திய சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் மட்டுமன்றி காந்தியாரின் ‘தீண்டாமைக் கொடுமைகள்’ ஒழியவேண்டும் என்கின்ற பிரச்சாரங்களினால் பெரியார் சற்று அதிகமாகவே கவரப்பட்டார்.   

1919ஆம் ஆண்டு காலப்பகுதியில் பஞ்சாப்பில் இடம்பெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை பெரியாரை பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கியது. பிரிட்டிஸாசாரின் அப்பட்டமான அந்த மனித உரிமை மீறலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நகர மன்ற தலைவர், கெளரவ மஜிஸ்ரேட் போன்ற பதவிகள் உட்பட தான் வகித்துவந்த 28 கெளரவ பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு இந்திய சுதந்திரத்துக்காக போராடும் வண்ணம் தேசிய காங்கிரசில் இணைந்தார். 

பெரியாரின் வரவு இந்திய தேசிய காங்கிரசின் சுயராஜ்ய கொள்கைகளை தமிழ் நாடு முழுக்க விரிவாக்குவதில் முக்கிய பாத்திரம் வகிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் முன்வைத்த சுதந்திரத்துக்கான ஒத்துழையாமை இயக்கம், கதர் ஆடை பிரச்சாரம், மதுவிலக்கு போன்றவற்றுக்கான போராட்டங்களை தமிழ் நாட்டின் மூலை மூடுக்குகளெல்லாம் கொண்டு சென்றவர் பெரியார்தான். தனது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் போன்றவர்களையும் மதுவிலக்கு போராட்டத்தில் இணைத்து பெண்களை போராட வருமாறு அறைகூவல் விடுத்தார். அரசியலுக்கு வந்தபின்னர் மாளிகை கட்டிக்கொண்டவர் அல்ல பெரியார். தனது மாளிகை போன்ற வீட்டையே தமிழ் நாடு காங்கிரசின் தலைமையகமாக பயன்படுத்த தானமாக கொடுத்தவர் அவர். காந்தியார் தமிழ் நாட்டுக்கு வந்தபோது அங்கிருந்துதான் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை அறிவித்தார். வேகமாகவும் கடுமையாகவும் கட்சிப்பணிகள் ஆற்றியதன் விளைவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக 1921லும் தலைவராக 1922லும் பெரியார் முன்னிலைக்கு வந்தார். 

அதேகாலத்தில் இலங்கையிலும் இந்திய தேசிய காங்கிரஸைப் போன்றே பூரண சுதந்திரக் கோரிக்கையுடன் தீண்டாமை கொடுமைகளையும் ஒழிப்பதை நோக்காக கொண்டு ஓர் இயக்கம் செயற்பட்டு வந்ததமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண இளைஞர்(மாணவர்) காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட இவ்வியக்கத்தினரும் காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களால் கவரப்பட்டு அவரை இலங்கைக்கு அழைத்திருந்தனர். அதன்படி காந்தியார் 1927ல் இலங்கைக்கு வருகை தந்து உரையாற்றியிருந்தார். தாழ்த்தப்பட்ட  சாதியினருக்கு பாடசாலை மறுப்பு, ஆலய தரிசனங்கள் மறுப்பு, தேநீர்கடைகளில் தனியான ‘மூக்குப்பேணிகள்’ என்று யாழ்ப்பாணத்திலும்  சாதிக்கொடுமைகள் தலைவிரித்தாடிய காலங்கள் அவை.  

வைக்கம் (ஈழவர்) போராட்டம்  

காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் செயற்பட்டு வந்த காலங்களில்தான் கேரளத்தில் இருந்த வைக்கம் மகாதேவர் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஈழவர் (கேளரத்தில் ஈழவர் என்றும் தமிழ்நாட்டில் நாடார்கள் என்றழைக்கப்படுபவர்கள்)  மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நடந்து செல்ல முடியாதவாறு தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. கோவில் நுழைவை எண்ணிக்கூட பார்க்கமுடியாத நிலையில் கோவில் சுற்று வீதியில் நடப்பதற்கான உரிமை கோரியே இப்போராட்டம் நடத்தப்பட்டது. நாளுக்கு நாள் கைதாகும் சத்தியாகிரகிகளால் சிறைக்கூடங்கள் நிரம்பிக்கொண்டேயிருந்தன. காந்தியார் கூட ‘வைக்கம்’ வந்து இருதரப்பாரையும் சமரசம் செய்து போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயன்றும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் போராட்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட நேர்ந்தது.  

சிறையிலிருந்தவாறு கடிதங்கள் மூலம் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு நடத்துமாறு கோரி தமிழ் நாட்டிலிருந்த பெரியாருக்கு அழைப்பு விட்டனர் அவர்கள். அதன்பெயரில் பெரியார் வைக்கம் சென்று சத்தியாகிரகம் செய்தார்,  உரையாற்றினார், பத்திரிகைகள் மூலம் இச்செய்தியை வெளியுலகுக்கு கொண்டுவந்தார். அதனால் அவரும்  சிறையிலே தள்ளப்பட்டார். பெரியார் சிறையிடப்பட்டதும் தமிழ் நாட்டிலிருந்து காங்கிரசின் ஏனைய தலைவர்களும் நாகம்மையாரும், கண்ணம்மாளும் வைக்கம் வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு மாதகாலத்தின் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார் மீண்டும் சத்தியாகிரகத்துக்கு தலைமையேற்றார். மீண்டும் சிறை கிடைத்தது. நாலுமாதங்களின் பின்னர் மீளவும் வெளியே வந்து போராட்டத்தை கையிலெடுத்தார். ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் (1924 மார்ச் 30 – 1925 நவம்பர் 23)  தொடர்ச்சியாக நடந்த இப்போராட்ட காலத்தில் சுமார் 140 நாட்கள் பெரியார் வைக்கத்திலேயே காலம் கழித்துள்ளார்.  

இறுதியாக வேறு வழியேதுமின்றி குறித்த கோவில் வீதிகள் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டன. இந்த ‘வைக்கம்’ வெற்றியே கேரளத்தில் மட்டுமல்ல தமிழ் நாடு மற்றும் வட மாநிலங்கள், ஏன் இலங்கையிலும் (1960களில்) கூட பின்னர் வந்த காலங்களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவு போராட்டங்களின் வெற்றிக்கான உத்வேகத்தை அளித்தது எனலாம். இத்தகைய வெற்றியொன்றின் நாயகனாக இருந்தமையால்தான் பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்றழைக்கப்படலானார். இன்றுவரை ‘வைக்கம்’ நகருக்கு சென்று வருபவர்கள் இந்த வரலாற்றை அறிந்துகொள்ள அங்கே “பெரியார் நினைவகம்” ஒன்று பலவிதமான ஆவணங்களுடன்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

வகுப்புவாரி இடஒதுக்கீட்டு கோரிக்கை  

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த தேசிய காங்கிரசில் இணைந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக செயற்பட்ட காலங்களிலும் கூட சாதி எதிர்ப்பையே முன்னிறுத்தி செயலாற்றுவதிலேயே பெரியார் தீவிர கவனங்கொண்டிருந்தார். காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டவேளைகளிலும் பகுத்தறிவு கொள்கைகளையே பிரச்சாரம் செய்தார். சாதியெதிர்ப்பு, தீண்டாமையெதிர்ப்பு போன்றவற்றில் காங்கிரஸ் காட்டிவந்த சிரத்தையின் போதாமையையிட்டு கட்சி நிர்வாக கூட்டங்களில் அடிக்கடி கேள்வியெழுப்பினார். காந்தியாருடன் பல்வேறு விதமான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டார்.  

தேச விடுதலை என்பது தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும் விடுதலையடைவதாய் இருக்கவேண்டும் என்றும் வெறுமனே வெள்ளையர் கையிலிருந்து பார்ப்பன மேட்டுக்குடிகளின் கரங்களுக்கு அதிகாரம் கைமாறுவதால் சுதந்திரம் கிடைத்துவிடாது என்றும் வாதிட்டார். 

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் மிகவும் கீழ் நிலையிலேயே இருந்து வந்தனர். உயர்கல்வி கற்பதற்கும் அரச உத்தியோகங்களை பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் மூலம் கல்வி கற்றோருக்கு வாய்ப்புகள் மிக அரிதாகவே இருந்தன. சமஸ்கிரதமும் ஆங்கிலமும் கற்ற பிராமணர்களே அரச உத்தியோகங்கள் அனைத்திலும் நிறைந்திருந்தனர். 

இந்நிலையில்தான் தொடர்ச்சியாக ஐந்து காங்கிரஸ் மாநாடுகளில் பிராமணர் அல்லாதவர்களுக்குரிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோல்விகண்டார் பெரியார். சமூகநீதி இன்றி பொருளாதார சமத்துவம் சாத்தியமில்லை, பொருளாதார சமத்துவம் இன்றேல் சுதந்திர காற்றை எல்லோரும் சமமாக சுவாசிக்க முடியாதது என்று உறுதியாக நம்பினார்.  

1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில் இறுதி முயற்சியாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தபோதிலும் அதிலும் அவரால் வெற்றிகொள்ளமுடியவில்லை. தீண்டாமையை மட்டும் அகற்றிவிட்டு சாதிய ஏற்றத்தாழ்வுகளை பாதுகாக்கும் காங்கிரஸினதும் காந்தியாரினதும் பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரால் முடியவில்லை. 

தனது முதற்கடமையான தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்புக்கு இந்த தேச விடுதலைகோரும் தேசியவாதிகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை  என்றுணர்ந்தார். அதன்காரணமாகவே இறுதியில் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பெரியார் வெளியேறினார்.   

ஒரு கட்டத்தில் 1931ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதமிருந்தார். அவ்வேளை கோடிக்கணக்கான மக்களின் அரசியலுரிமையை விட ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல என்று   தயங்காது சொல்லுமளவுக்கு காந்தியாரின் வர்ணாச்சிரம ஆதரவு கொள்கை மீது சீற்றம் கொண்டிருந்தார். 

ஆனால் காந்தி ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது  (1948- ஜனவரி- 30) பதறிப்போன பெரியார் பார்ப்பனிய சிந்தனை கொண்டிருந்த ஆபத்தின் ஆழத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டார் காந்தியார் என்று எழுதியதோடல்லாமல், “இந்த மண்ணுக்கு காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும்” என்று கோரிக்கைவிடுத்தார்.  

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=3416

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 3)

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம் 3)

— விஜி/ஸ்டாலின் —  

சுயமரியாதை இயக்கம்     

ஐரோப்பாவில் உருவாகிய அறிவொளிக்கால சிந்தனைகள் உலகப் புகழ்பெற்றவை. ரூசோ, வால்டேயர், இம்மானுவேல் கான்ட், ஆடம் சிமித் போன்ற பல அறிஞர்களால் 18 ஆம் நூற்றாண்டில் வேகமாக பரப்பப்பட்ட அச்சிந்தனைகள் கடவுளின் பெயரில் கோலோச்சி வந்த பழமைவாதக் கோட்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாகின.  

அதன் தொடர்ச்சியில் கடவுள் இறந்து விட்டான் என்று அறிவித்தான் நீட்சே என்னும் பேரறிஞன்.  

இந்த அறிவொளி இயக்க சிந்தனைகளின் தாக்கம் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் (theory of divine origin) அடிப்படையில் மன்னனானவன் கடவுளின் பிரதிநிதி என்று ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மன்னராட்சி தத்துவங்களை கேள்விக்குள்ளாக்கியது. பழமைவாத சிந்தனைகள் தூக்கி வீசப்பட்டன. மக்களாட்சி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற வாழ்வியல் நெறிகளை நோக்கி ஐரோப்பியர்கள் முன்னேறத் தொடங்கினர். முக்கியமாக அரசியல் என்பது முதன்முறையாக மதநீக்கம் செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதபீடங்களின் இடுக்குப் பிடிகளில் இருந்து மெதுமெதுவாக மக்களின் கைகளில்  அதிகாரங்கள் சென்றடையத் தொடங்கின. கூடவே பண்பாட்டு கலாச்சார விழுமியங்களும் தனிமனித சுதந்திரத்தை மதித்து அனுசரித்து செல்ல வேண்டியனவாக புடமிடப்பட்டன. அதனுடாகவே   ஜனநாயகம், தேசிய அரசுகள், சோசலிசம், மார்க்சிசம் போன்ற நவீன ஆட்சித்தத்துவங்கள் தொடர்ச்சியாக பிறப்பெடுத்தன.  

இத்தகைய அறிவொளி இயக்கமொன்றின் தேவை இந்தியத் துணைக் கண்டத்தை பொறுத்தவரை நீண்டகாலமாகவே வெற்றிடமாக இருந்து வந்தது. இந்நிலையில்தான் 1925ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டுமென்று பெரியார் எடுத்த  முடிவானது  எதிர்காலத்தில் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தரப்போகின்ற அறிவொளி இயக்கமொன்றின் தொடக்கமாகவும் இருந்தது. அந்த இயக்கமானது  சுயமரியாதை (self respect) இயக்கம் என்றழைக்கப்பட்டது.  

சுயமரியாதைதான் மானிட விடுதலையின் அடிப்படை என்பதை நோக்காகக் கொண்டே இவ்வியக்கத்தை பெரியார் தொடங்கினார். மூட நம்பிக்கைகளின் பெயராலோ சாதி, மத, வர்க்கபேதங்களின் பெயராலோ பாலின வேறுபாடுகளின் பெயராலோ ஏன் கடவுளின் பெயராலோ கூட எந்தவொரு தனிமனிதனும் அவமானப்படுத்தப்படுவதையோ கீழ்மைப்படுத்தப்படுவதையோ எதிர்த்துப் போராடுவதே சுயமரியாதை இயக்கத்தின் பணி  என்று அறிவித்தார் பெரியார்.   

இன்றும் தேவை பகுத்தறிவு பெரியார்  

எமது கீழைத்தேய நாடுகளில் இன்றுவரை மதத்தையும் அதன்பெயரில் சாத்திர சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகளையும் அரசியலில் இருந்து பிரித்தெடுக்க முடியாதிருக்கின்றோம். குறிப்பாக தமிழக மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் கடவுளின் பெயரிலான விதி, சோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் கோலோச்சுவது குறைந்தபாடில்லை. இதன் காரணமாக இலங்கையில் மட்டுமல்ல புகலிடத்தமிழர்களை குறிவைத்தும் கோவில்களும் புதிய புதிய சுவாமிகளும் பிறப்பெடுக்கின்றார்கள். கிறிஸ்தவ மதப்பிரிவுகளின் எண்ணிக்கை புற்றீசல்கள் போல் பெருகிவருகின்றன. ‘இஸ்லாத்தின் எதிரிகள்’ என்று சொல்லி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து சொர்க்கம் செல்லமுனையும் வகாபிஸ்ட்டுக்களும் ஒழிந்தபாடில்லை. இவையனைத்துக்கும் காரணம் மதத்தின் பெயரிலான மூடநம்பிக்கைகள் இன்றுவரை தொடர்வதேயாகும்.   

புகலிடத்தமிழர்களை குறிவைக்கும் இந்திய வருகை தரும் சோதிடர்களின் பொருளாதார சுரண்டல்கள் சொல்லிமாளாது. மதவாதிகளின் பிடியிலிருந்து அரசியலை விடுவிக்கமுடியாது திண்டாடுகின்றோம். இது இலங்கைக்கு மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகள் எங்கும் இதேநிலைதான். பெரும் கோடீஸ்வர்களாக ஆன்மீக தலைவர்களே இருக்கின்றனர். இவர்களே அரசியல் மையங்களை தீர்மானிக்கும் ‘கிங் மேக்கர்”களாகவும் வலம்வருகின்றார்கள். 

இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்நிலையென்றால் கடந்த நூற்றாண்டின் நிலைமைகளை விபரிக்க வேண்டியதில்லை. மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர் தமிழர்கள். அந்த இழிநிலை கண்டே  பெரியார் கொதித்தெழுந்தார். தமிழர்களின் இழிநிலைக்கு காரணம் இந்த மூடநம்பிக்கைகளே என்று குரலெழுப்பினார். சோதிடத்துக்கு ஆதாரமாக காணப்படும் நட்சத்திரம், லக்கினம், திதி, அர்ச்சனை, பரிகாரம் போன்ற அனைத்துமே இதிகாச, புராணங்களின் பெயரால் நடைபெறும் ஏமாற்றுவித்தைகள் என்கிறார். இவையனைத்துக்கும் கடவுளின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படுவது தகுமோ என்று கேள்வியெழுப்பினார். கூடவே  இவற்றையெல்லாம் நான் சொல்வதற்காக அன்றி உங்களின் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள் என்று மக்களை தூண்டினார். 

மனித வாழ்வின் துன்ப துயரங்களுக்கு அடிப்படைக் காரணம் முன்வினைப்பயன் காரணமான விதியே என்றும், அந்தவிதியானது இறைவன் வகுத்தவழி என்றும் நம்பும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை இந்த இழிவு நிலை தொடர்வதை தடுக்கமுடியாது என்கிறார்.  

பிறவியிலே பேதம் சொல்லி நடந்துவருகின்ற தீண்டாமைக்கொடுமைகளுக்கு வர்ணாச்சிரம தர்மமே காரணமென்றால் இத்தகைய கோட்பாடுகள் யாரால் யாருக்காக  உருவாக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பினார். “சதுர்வர்ண மயா சிருஷ்டம்” (நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்) என்று கண்ணன் ஊடாக பகவத்கீதையிலே அதற்கு பதில் கிடைத்தது.   

சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பை தனது கொள்கையாக ஒரு போதும் வரித்துக்கொள்ளவில்லை. ஆனால் தீண்டாமையும், அக்காலத்தில் கடுமையாக இருந்த பால்ய திருமணம், விதவை வாழ்வு போன்ற பெண்கள் மீதான சமூக கொடுமைகளும் ஒழிய வேண்டுமென்றால் அவற்றை பாதுகாத்து சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிக்கும் பகவத்கீதை, மனுஸ்மிருதி போன்ற  புராண, இதிகாசங்கள் எல்லாம் ஒழிக்கப்படவேண்டும், மனிதனை மனிதன் இழிவு செய்யும் இந்த குப்பைகளையெல்லாம் உருவாக்கியது கடவுள்தான் என்றால் அந்தக்கடவுள் நமக்கெதற்கு? என்பதே பெரியாரதும் சுயமரியாதை இயக்கத்தினதும் வாதமாயிருந்தது.  

அரசியல் துறையில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் உருவாக வேண்டுமானால், அதற்கான முன்நிபந்தனை, குடிமை சமுதாயத்தில் (civil society) ஏற்படவேண்டிய மாற்றங்களேயாகும் என்பதை நோக்காகக்கொண்டே சுயமரியாதை இயக்கம் செயற்பட்டது.  

தீவிர சுயமரியாதை பிரச்சாரங்களில் ஈடுபட்ட பெரியார் பல்வேறுவிதமான வார இதழ்களையும் மாத ஏடுகளையும் நாளாந்த பிரசுரங்களையும் அயராது வெளியிட்டுவந்தார். செங்கல்பட்டு, ஈரோடு, விருதுநகர் என்று மாநிலம் முழுக்க சுயமரியாதை மாநாடுகளை தொடராக நடாத்தினார். குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, நகரதூதன், விடுதலை, தமிழன், என்று பல்வேறு ஏடுகள் பரவலாக வெளிவந்தன.  

“மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணிலே படக்கூடாது, தெருவிலே நடக்கக்கூடாது, குளத்திலே தண்ணீர் எடுக்கக்கூடாது” என்கின்ற கொடுமைகளை தாங்கிக்கொண்டு இந்த இனம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காலந்தள்ள போகிறது? “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்பதை எப்போது புரிந்து கொள்ளப்போகின்றீர்கள்?முன்னேற்றத்துக்கு தடையாய் இருக்கும் மூடநம்பிக்கைகளை தூக்கி எறியுங்கள், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று முழங்கினார். அதுமட்டுமன்றி விதவைகளை நோக்கி மறுமணம் செய்ய தயங்காதீர்கள் என்கிறார். தேவதாசி முறையை நாம் ஒழிப்பதெப்போது? என்று கேள்வியெழுப்பினார். சுயமரியாதை மாநாடுகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்களையும் பெண்களையும், குறிப்பாக ‘விதவைகள்’, ‘வேசிகள்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் விசேடமாக அழைத்தார்.    

திருமணம் என்பதில் இருந்துவந்த நமது நடைமுறைகள் எல்லாம் இப்போது பார்ப்பன மயமாகிவிட்டன. தற்போதைய திருமண முறைகள் பெண்களின் விருப்பு வெறுப்புகளை விட சாதி, பொருளாதாரம் போன்ற அடிப்படைகளுக்கே  முன்னுரிமை வழங்குகின்றன. இவற்றையெல்லாம் ஒழிப்பதானால் சுயமரியாதை திருமணம் மட்டுமே  ஒரே வழியென்றார்.  

சாதி வேறுபாடுகளின்றி, கோயிலின்றி, தாலியின்றி, பிராமணர்களின்றி சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளுங்கள் என பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் செய்ததோடல்லாமல்  சுயமரியாதை திருமணங்களை அவரே முன்னின்று நடாத்த தொடங்கினார்.  

சுயமரியாதை திருமணம்  

1928ஆம் ஆண்டு முதலாவது சுயமரியாதை திருமணத்தை பெரியாரே முன்னின்று அருப்புக்கோட்டை என்னுமிடத்தில் நடத்திவைத்தார். அதன் தொடர்ச்சியாக பலர்  புரோகித வழிமுறைகளையும் சாதியையும் மறுத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதனால் பார்ப்பன பத்திரிகைகள் இவற்றை கேவலப்படுத்தி மக்களிடையே எதிர்ப்புகளை உருவாக்கின.  

இதன் காரணமாக பல்வேறுவிதமான விமர்சனங்கள், சேறடிப்புகள், சண்டை சச்சரவுகள், தாக்குதல்கள் போன்றவற்றை பெரியாரும் தோழர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது. அதேவேளை இத்திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரமும் பெறமுடியவில்லை. அதன் காரணமாக சொத்துபிரிப்பு  மற்றும் வாரிசு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தபோது  பாரிய சிக்கல்களை தோற்றுவித்தது. நீதிபதிகளாயிருந்த பார்ப்பனர்கள் சுயமரியாதை திருமணங்களை சட்டப்படி ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பல்வேறு கட்டங்களில் தீர்ப்புகளை வழங்கினார். எனினும் சளைக்காது  ஆயிரக்கணக்கான சுயமரியாதை திருமணங்கள் நடந்தவண்ணமே இருந்தன. 

தமது சுயமரியாதை பிரச்சாரங்கள் மீதும் சுயமரியாதை திருமணங்கள் மீதும் வைக்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் முகம்கொடுத்து ஒவ்வொரு கூட்டங்களிலும்  பதிலிறுத்தார் பெரியார். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால் எதுகை மோனையுடனோ தத்துவார்த்த கோசங்களுடனோ  உரையாற்றுகின்ற மேடை பேச்சாளராக அவர் இருக்கவில்லை. சாதாரண மக்களின் மொழியில் அவர்களுடன் உரையாடுவதாக அவரது பேச்சுக்கள் இருந்தன. அதனால் அவரின் கருத்துக்கள் இலகுவாக சாமானிய மக்களை சென்றடையத்தொடங்கின. காலப்போக்கில் தமது கொள்கைகளை மக்களுக்கு புரியவைப்பதில் அவர் வெற்றிகண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.   

அதேபோல வர்ணாச்சிரமத்தின் காவலர்களாக இருந்துகொண்டு இந்திய சுதந்திரம் கோருகின்ற தேசியவாதிகளால் ஒரு போதும் சமூகநீதியை பெற்றுத்தரமுடியாது என்பதனால் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நோக்கி  வகுப்புவாரி இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து போராடினார். வீதி வீதியாக மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டங்களையும் கலகங்களையும் செய்தார். சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்தார் பெரியார். அவற்றில் பல வெற்றிகளையும் கண்டார். 

1928 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை அன்றைய நீதிக்கட்சி தலைமையிலான சென்னை மாகாண நிர்வாகம் முதன்முறையாக அறிமுகம் செய்வதற்கு பெரியாரின் இடைவிடாத போராட்டங்களும் உறுதுணையாகின. பட்டதாரிகளும், ஆசிரியர்களும், வக்கீல்களும், அரசு உத்தியோகஸ்தர்களும் முதன் முறையாக பிரமணரல்லாதோரிடமிருந்து உருவாகும் வரலாறு உருவாகியது.  

அதேபோல தேவதாசி ஒழிப்புச் சட்ட முன் வரைபு ஒப்புதல் பெறுவதில் பல்வேறு விதமான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் குழப்பங்களையும் தாண்டி இந்தியாவில் முதல்தடவையாக  1930 ஆம் ஆண்டு நீதிகட்சியின்  ஆட்சியில் முத்துலட்சுமி ரெட்டி வெற்றியடைவதற்கு பெரியாரது அயராத எழுத்துக்களும் ஆலோசனைகளும் பக்கபலமுமே காரணமாய் அமைந்தன. 

சுயமரியாதை இயக்கமானது சாதிமுறைமையை காப்பாற்றுகின்ற கடவுளை நோக்கி கேள்வியெழுப்பினாலும் இறை நம்பிக்கையாளர்களை எதிர்க்கவோ எதிரியாக நோக்கவோ இல்லை. நாத்தீகர்களை மட்டும் தம்மோடு இணைத்துக்கொள்ளவில்லை. காரணம் கடவுளை ஒழிப்பதை விட சாதியை ஒழிப்பதே அவரது இலட்சியம் என்றுணர்ந்து செயலாற்றியது அவ்வியக்கம். தமிழர்களின் முன்னேற்றத்துக்கும் பொருளாதாரா மேம்பாட்டுக்கும் சாதியை ஒழிப்பதே முன்நிபந்தனை என்கிறார். தாம் கடவுளை எதிர்ப்பதற்கான காரணங்களை தெளிவாக மக்களுக்கு புரியவைத்தார்.  

அதனால்தான் அவரது இயக்கம், மாநாடுகள், கொள்கை விளக்க கூட்டங்கள் அனைத்திலும் இறை நம்பிக்கை மிக்கவர்களும் தாராளமாக கலந்துகொண்டு ஆதரவளித்தனர். பலரும் அவருடைய நேர்மையையும் சாதியொழிப்பு என்கின்ற இறுதி இலக்கையும் புரிந்துகொண்டிருந்தனர். குன்றக்குடி அடிகளார் போன்ற பல ஆன்மீக, சைவ மத தலைவர்கள் கூட அவருடைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து பல்வேறு கட்டங்களில் பெரியாருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.  

அதனால்தான் இன்றுவரை கடவுள் சிலைகளுக்கு அடுத்ததாக பெருமளவில்  பெரியார் சிலைகளே தமிழ்நாடெங்கும் இருக்கின்றன. கடவுளை எதிர்த்த பெரியாரை கடவுளை நம்புகின்ற கோடிக்கணக்கான மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக இன்றுவரை கொண்டாடியும்  வருகின்றார்கள். 

 

https://arangamnews.com/?p=3548

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

பெரியார் : அறிதலும் புரிதலும் (பாகம்- 4)

      — விஜி/ஸ்டாலின் — 

நவீன உலகை தரிசிக்க கப்பலில் புறப்பட்ட பெரியார் 

சுயமரியாதை இயக்கத்தில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளைகளில் திடீரென்று பெரியார் காணாமல் போனார். சுமார் ஒரு வருடம் கழித்து அவர் திரும்பி வந்தபோதுதான் அவரது ஐரோப்பிய பயணம் பிரபல்யமானது.   

தனது அறிவுத்தேடலை விரிவாக்க உலகளாவிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஒரு நீண்ட பயணத்தை அவர் திட்டமிட்டார். மேலைநாடுகளின் அரசியல் பொருளாதார சமூக வளர்ச்சிக்குரிய காரணங்களை ஆராய்வதை நோக்காகக் கொண்டு பலநாடுகளுக்கு சென்றுவரும் நோக்கோடு அப்பயணத்தை ஆரம்பித்தார். பயணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் உலக புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு பகுதியையும் “லெனினும் மதமும்” என்கின்ற நூலையும் தனது குடியரசு பத்திரிகையில் தமிழாக்கம் செய்து தொடராக வெளியிட்டார்.    

1931ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி பிரெஞ்சு நாட்டைச்  சேர்ந்த ‘அம்புவாஸ்’ என்ற கப்பலில் தனது பயணத்தை தொடங்கினார் பெரியார். அவர் பயணத்தில் இருந்தபோது அவரது பத்திரிகைகளில் அந்த பயணம் பற்றிய செய்திகள் எதுவும் இடம்பெறாதவாறு பார்த்துக்கொண்டார். ரஷ்யா கம்யூனிசம் போன்ற வார்த்தைகள் அப்போதைய பிரித்தானிய காலனி அரசால் மிக கடுமையாக கண்காணிக்கப்பட்டமை இதற்கு காரணமாக இருக்கலாம்.  

இளமையில் செல்வந்தராயிருந்தும் பொதுவாழ்வில் வந்த பின்னர் சிக்கனத்தையும் எளிமையையும் கடைப்பிடிக்கத் தொடங்கிய பெரியார் “கஞ்சன்” என்று பெயரெடுத்தவர். பொதுப்பணத்தை வீணடிக்கக்கூடாது என்பதற்கு அவர் முன்மாதிரியாக இருந்தமையே அதற்கு காரணம். அதனால்தான்  மூட்டை முடுச்சுக்களை ஏற்றுகின்ற கப்பலின் நான்காம் வகுப்பு மலிவுவிலை பிரிவிலேயே அவர் பயணித்தார். முன்பின் அனுபவமில்லாத கடற்பயணம், காற்றும் குளிரும் வாட்டி வதைத்தன.  

இந்தப்பயணமானது முக்கியமாக இலங்கை, எகிப்து, ரஸ்யா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், போத்துக்கல், இங்கிலாந்து என்று சுமார் பத்து நாடுகளை தாண்டியது.  

முதலில் இலங்கையில் கப்பல் தரித்தபோது வெளியே சென்றுவருவதற்கு கிடைத்த ஆறுமணி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கொழும்பு நகர் சென்று சிலரை சந்தித்துத் திரும்பினார். அதன் காரணமாக ஐரோப்பிய பயணம் முடிந்து வரும் வழியில் இலங்கையிலும் சிலகாலம் தங்கிச்செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டார்.  

சுமார் பன்னிரு நாட்கள் கப்பல் பயணத்தின் பின்னர் எகிப்தை வந்தடைந்தார். மனித இனத்தின் பெரும்சாதனைகளில் ஒன்றான சுயேஸ் கால்வாயின் பிரமாண்டத்தை பார்த்து அதிசயித்து நின்றார். எகிப்தில் சுமார் 11 நாட்கள் செலவிட்டு புராதன நகரங்களின் அழகினையும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளையும் பெரிதும் ரசித்தார். அலெக்ஸாந்திரியா துறைமுகமூடாக கிரீஸ் சென்றடைந்தார். அங்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஏதன்ஸ் நகரம், சாக்கிரடீஸ், பிளாட்டோ போன்றவர்களின் நினைவிடங்கள், சிலைகள், வரலாறுகள், பல்கலைக்கழகங்கள் என்று ஒரு நிமிடம் கூட வீணடிக்காது சுற்றி வலம் வந்தார்.  

அதன் பின்னர் துருக்கி தேசத்தில் பெரியார் வந்திறங்கினார். சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்நாட்டை பீடித்திருந்த கொடிய யுத்தத்தின் வடுக்கள் இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஒட்டோமான் பேரரசின் இறுதி அத்தியாயங்களை வரலாறு எழுதி முடித்திருந்தது. கமால் பாஷாவின் தலைமையில் புதிய துருக்கி பல புரட்சிகர மாற்றங்களுடன் ஒரு மதச்சார்பற்ற தேசமாக எழுந்து நிற்கத் தொடங்கியிருந்தது.   

துருக்கியின் அகன்று விரிந்த சமவெளிகள் வயல் நிலங்கள் அனைத்தும் ஆசியா கண்டத்திலும் வணிக நகரமான கொன்ஸ்ந்தாந்துநோபிள் ஐரோப்பிய நிலப்பரப்பிலும் இருந்தது. புரட்சிக்கு முன்னரான வரலாற்றுக் காலங்கள் முழுக்க கொன்ஸ்தாந்துநோபிள் என்றறியப்பட்ட அந்த பட்டினம் இஸ்தாம்பூல் என்று அழைக்கப்படும் புதிய வரலாறு தொடங்கியிருந்தது.  

அந்த பட்டினத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுதந்திர சதுக்கத்தில் எழுந்து நின்ற கமால் பாஷாவின் உருவச்சிலை பெரியாரை கவர்ந்திழுத்தது. கமல் பாஷாவின் தலைமையில் இடம்பெறத் தொடங்கியிருந்த மதபீடங்களின் அதிகாரம், மற்றும் மூட நம்பிக்கை போன்றவற்றுக்கெதிரான வேலைத்திட்டங்களை துருவித்துருவி அறிந்துகொண்டார் பெரியார். நிச்சயமாக  ஐரோப்பாக் கண்டத்தையும் ஆசியாவையும் பிரிக்கின்ற அந்த மார்மரா கடலின் வனப்பை ரசிப்பதற்கு அவருக்கு அப்போது நேரம் வாய்த்திருக்கமாட்டாது. அதனால்தான் பெரியாரின் பிற்கால உரைகளில் அடிக்கடி கமல் பாஷா நினைவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார். 

ஸ்டாலின் பெரியாரை சந்தித்தாரா 

அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளான பொதுவுடைமை ரஸ்யாவை பார்வையிடுவதற்கான நாட்கள் நெருங்கியிருந்தன. ஒடேசா துறைமுகம் சென்றடைந்த பெரியார் அங்கிருந்து உக்ரைன் வழியாக மொஸ்கோ நோக்கிய நெடுந்தூர ரயில் பயணத்தை ஆரம்பித்தார். பெப்ரவரி மாதம் 20 டிகிரி குளிரின் கொடுமை சொல்லிமாளாது. நதிப்படுக்கைகள் எல்லாம் உறைந்து கிடந்தன. அவற்றின் மீது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும், குதிரைவண்டிகளும் கூட தாராளமாக நடமாடிக்கொண்டிருந்தன. மொஸ்கோ வந்தடைந்த பெரியாருக்காக சோவியத்தின் ஒன்றியம் அவரை ‘அரச விருந்தினராக’ அங்கீகரித்திருக்கின்ற மகிழ்ச்சியான செய்திகாத்திருந்தது. தங்குமிடம், வழிகாட்டிக்குழு, மொழிபெயர்ப்பாளர் என்று வசதிகள் ஏற்பாடாகியிருந்தன. 

1932ஆம் ஆண்டு மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற “மே தின” ஊர்வலத்தை பார்வையிட்டு அங்கு ஜோசேப் ஸ்டாலின் முன்னிலையில் உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றார். அப்போது அவர் இந்தியாவின் நாத்தீக தலைவர் என்று அறிமுகம் செய்யப்பட்டார். அவரது உரையில் எல்லோரையும் போல சொந்தநாட்டு வரலாற்றுப் பெருமைகளைப் பேசி கைதட்டு வாங்க முயலவில்லை. வெட்கத்தை விட்டு உரையாற்றினார். 

சாதியக்கொடுமை காரணமாக தொடரும் ‘இந்திய மக்களின் ஏழ்மை நிலை’ பற்றி உருக்கமான உரை நிகழ்த்தி மக்கள் கூட்டத்தின் கண்ணீரை வரவழைத்தார். பெருந்தலைவர் லெனினின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவிடம் தொடங்கி அஸர்பைசான் எண்ணெய் வயல்கள், மொஸ்கோ மோட்டார் கம்பெனிகள், சர்வதேசத்தொழிற்சங்க அலுவலகம், மாபெரும் அனல் மின்நிலையங்கள், மக்கள் நீதிமன்றங்கள், கூட்டுப்பண்ணைகள், நாத்தீக பிரச்சார மையங்கள், நூதனசாலைகள் என்று பல இடங்களையும் பார்வையிட்டார். 

விவசாயிகள், மாணவர்கள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் பிரிவினரையும் கண்டுபேசி கம்யூன்கள் மற்றும் சோஷலிச கட்டுமானங்கள் போன்றவற்றின் அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டார்.  

சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி மிகையில் இவானோவிச் கலினினனை (mikhail ivanovich kalinin) சந்தித்து உரையாடினார். கிரம்ளின் மாளிகையில் மேதின நிகழ்வுக்காக வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பினையும் கூடவே பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியும் நாத்திகர் சங்கமும் பெரியாரது ரஷ்ய சுற்றுலாவுக்கு பெரும் உறுதுணையாய் இருந்தன.  

ஸ்டாலினை சந்தித்து உரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், இறுதி நேரத்தில் அது ரத்துசெய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. பெரியாருடன் பயணித்த இராமநாதன் என்பவரின் நடத்தைகள் சோவியத் புலனாய்வு அதிகாரிகளின் அதிருப்தியை சம்பாதித்தமையால் அந்த அனுமதி இரத்தானது. 

சுமார் மூன்று மாதகால அனுபவங்களோடு அந்த மண்ணை விட்டுவிலக மனமின்றி ரஸ்யாவை விட்டு வெளியேறினார் பெரியார். 

அதன் பின்னர் பிரான்ஸ் இங்கிலாந்து என்று பயணம் தொடர்ந்தது. லண்டனில் தொழிற்சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. அங்கிருந்த ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் மத்தியில் இந்திய தொழிலாளர்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் விதம் பற்றி விலாவரியாக உரையாற்றினார். லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் சக்லத்வாலாவை சந்தித்து பேசினார். வேல்ஸ் சென்று பார்வையிட்டு திரும்பினார்.  

ஸ்பெயின், போத்துக்கல், இத்தாலி என்று சென்ற பெரியார் அங்கும் இருக்கக்கூடிய கம்யூனிச சித்தாந்த தலைவர்களை சந்தித்தார். பார்சலோனாவில் இருக்கும் கொலம்பஸ் சிலை என்று எதையும் விட்டுவைக்காமல். பார்வையிட்டுக்கொண்டேயிருந்தார். 

ஜெர்மனுக்கும் பெரியார் சென்றார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்குவராத காலம். ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இப்போதெல்லாம் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் நிர்வாண சங்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் எல்லோரும் நிர்வாணமாகவே உலாவருவர். நிர்வாணமாக சூரிய குளியல் செய்வது என்பது இன்றைய காலத்தில் உலகெங்கும் சாதாரணமானதொன்று. ஆனால் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இவைபற்றியெல்லாம் அபச்சாரமான பார்வையே உலகெங்கும் இருந்து வந்தது. பேசாப்பொருட்களை பேசுவதுதானே பெரியாருக்கு கைவந்த கலை. ஜெர்மனியில் இருந்த நிர்வாண சங்கம் பற்றி அறிந்து அச்சங்கத்தினரையும் பார்க்க விரும்பினார். அவர்களை சென்றுபார்த்தார். ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் யாரும் துணிமணிகளுடன் செல்லமுடியாது. ஆகவே அவர்களை சந்திக்க நிர்வாணமாக செல்ல துணிந்தார். அவர்களை சென்று பார்த்து கலந்துரையாடினார். அவர்களோடு இணைந்து நின்று நிர்வாணமாக படங்களும் எடுத்துக்கொண்டார்.  

சுமார் ஒருவருடகால உலகச் சுற்றுப் பயணம் இறுதி கட்டத்துக்கு வந்திருந்தது. பிரான்ஸ் மார்சேல் துறைமுகத்திலிருந்து ‘ஹாரூன மாரு’ என்ற ஜப்பானிய கப்பலானது பெரியாரையும் ஏற்றிக்கொண்டு 17/10/1932 அன்று கொழும்பு வந்தடைந்தது.  

இலங்கையில் சுமார் இருபது நாட்கள் தங்கியிருந்த பெரியார் அதன் பின்னர் இந்தியா சென்றடைந்தார். 

இந்தியா திரும்பிய பெரியாருக்கு சமதர்மம் பற்றிய ஈடுபாடு அதிகமானது. தனது உலக சுற்றுப்பயணம் பற்றி தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க சுமார் நாற்பது கூட்டங்களில் உரையாற்றினார். ‘அது புதியதோர் உலகம் அதுபோல் எங்கும் இதுவரை இருந்ததில்லை’ என்று கம்யூனிச ஆட்சிமுறையை புகழ்ந்தார். ஆனால் ‘அது எனக்கு புதிதல்ல. நான் இவ்வுலகு எப்படி இருக்கவேண்டுமென்று கனவு கண்டுகொண்டிருக்கின்றேனோ அது சாத்தியமானதுதான் என்பதையே நான் அங்கு அறிந்துகொண்டேன்’ என்றார்.  

‘சாமி கும்பிடுவதையல்ல “கும்பிடுகின்றேன் சாமி”’ என்பதை முதலில் கைவிடுங்கள் என்கிறார். ‘கனம்’,  ‘திரு’, ‘ஸ்ரீமதி’, என்று அழைப்பதைவிடுத்து அனைவரும் ஒருவரையொருவர் ‘தோழர்’ என்று விளிக்கவேண்டும் என்று சுயமரியாதை இயக்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரச்சார கூட்டங்களுக்கு செல்கின்றபோது பிறந்த குழந்தைகளை பெற்றோர்கள் பெரியாரின் கையினில் கொடுத்து பெயரிடச் சொல்வது வழமை. உலகச் சுற்றுப் பயணம் முடிந்து வந்த பின்னர் நடந்த அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், என்றவாறாக சமதர்ம தலைவர்களின் பெயரை சூட்டினார். அது மட்டுமல்ல ரஷ்யா, மொஸ்கோ என்றும் கூட பெயரிட்டுள்ளார் என்கின்ற நகைச் சுவையான செய்திகளும் பெரியாரின் வரலாற்றில் உண்டு.   

(பெரியாரின் இலங்கைப்பயணம் பற்றிய தனியான கட்டுரை அடுத்த பகுதியில்) 

 

https://arangamnews.com/?p=3738

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்


 

இலங்கையில் பெரியார்

இலங்கையில் பெரியார்

  — விஜி/ஸ்டாலின் — 

பெரியாரின் ஐரோப்பிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருந்தது. இறுதியாக பிரான்சிலிருந்து கப்பலில் புறப்பட்டு 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். இலங்கையில் பல இடங்களில் அவருக்கு வரவேற்புகள் அளிக்கப்பட்டன. கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். சுமார் இருபது நாட்கள் அவர் இலங்கையில் தங்கியிருந்தார். 

கொழும்பை வந்தடைந்தவுடன் இலங்கை வர்த்தக சங்கத்தினர் சார்பில் அங்கு பெரியாருக்கு முதலாவது வரவேற்பு அளிக்கப்பட்டது.  

மறுநாளே பெரியாருக்கு சட்ட சபை வளாகத்தில் விருந்தோம்பல் இடம்பெற்றது. அங்கு புத்த சமயம், சிங்கள சமூகங்கள் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அரசியல் பிரமுகர்களுடன் நடந்த உரையாடலை பயன்படுத்திக் கொண்டார்.  

தொடர்ந்து வந்த நாட்களில் கொழும்பு பர்ஸியன் ஹோட்டலில் பெரியாருக்கு இன்னுமொரு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்றை தொழிற் சங்க முன்னோடியும் கல்விமானுமான அமைச்சர் பெரிய சுந்தரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

மேலும் பேராசிரியர்கள், மாணவர்கள், சிங்கள இளைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு இலங்கையில் அரசியல் சமூக பொருளாதார தன்மைகளை பற்றிய தகவல்களை திரட்டுவதில் ஈடுபட்டார். கூடவே தமது சுயமரியாதை இயக்கம், அதன் நோக்கம், செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களையும் நடாத்தத் தவறவில்லை.  

இந்திய வம்சாவளி தமிழர்களும், மலையாளிகளும் கொழும்பில் நிறைந்திருந்த காலம் அது. வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலாளிகள், சில்லறை வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இவர்களில் இருந்தனர். இத்தகைய இந்தியர்களின் சார்பில் சுமார் இரண்டாயிரம் பேரளவில் கூடி கொழும்பு ‘எல்பின்ஸ்டன் பிக்ஸர் பாலஸில்’ பெரியாருக்கு மிகப்பெரியதொரு வரவேற்பு நிகழ்வை நடாத்தினார்கள். அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்ட பெரியார் தனது சுயமரியாதை கொள்கை விளக்க உரையொன்றை அவர்களிடையே நிகழ்த்தினார். 

இலங்கைப் பேருரை  

டாக்டர் எஸ். முத்தையா (திருநெல்வேலி ஜில்லா ஆதி திராவிடர் நலச்சங்க தலைவர்) தலைமையில் காலிமுகத் திடலில் மிகப்பெரிய பொது கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த சுமார் பத்தாயிரம் பொது மக்களிள் மத்தியில் மிகப்பெரிய உரையொன்றை நிகழ்த்தினார். அதுவே பெரியாரின் ‘இலங்கைப் பேருரை’ என்றழைக்கப்படுகின்றது.  

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அங்கு பேசிய பெரியார்;  

“தோழர்களே எனது அபிப்பிராயத்துக்கும் முயற்சிக்கும் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ, அல்லது அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை.” எனச் சொல்லி தனது உரையை ஆரம்பித்தார்.  

“ஆனால் என்னை எதிர்ப்பவர்களோ சேறு பூசுபவர்களோ தடை போட முற்படுபவர்களோ மனித குலம் ஏற்றத்தாழ்வுகளுக்குட்பட்டு இழிநிலையில் கிடப்பதை மறுக்கமுடியாது” என்றார்.  

“உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, அரசன்-பிரசைகள், அதிகாரி-குடிஜனங்கள், குரு-சிஷ்யன் என்பனவாகிய பல தன்மையில் வகுப்பு வித்தியாசங்களுக்கு ஆளாகி மேல்- கீழ்த் தரத்தோடு கட்டுப்பாடான சமுதாய கொடுமைகளாலும் அரசாங்க சட்டங்களாலும் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது-வருகின்றது என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது என்று உறுதியாய் சொல்லுவேன்” என்றார்.  

உலகம் முழுவதும் காணப்படும் பஞ்சம் பட்டினி, மற்றும் சமூகக்கொடுமைகள் அனைதுக்கும் மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சமூக அமைப்பே காரணமென்று சாடிய அவர், இத்தகைய சமூக அமைப்புகள் எப்படி உருவாகின்றன? என்ற கேள்வியை எழுப்பி “வேத, புராண, சரித்திர காலம் முதல் மனித சமூகமானது கடவுள், ஜாதி, மதம், தேசம்” என்று பிளவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்றும்,அந்த பிளவுகளிலிருந்தே மேற்படி உயர்வு தாழ்வுகள் கொண்ட படிமுறை சமூக அமைப்புக்கள் பிறப்பெடுக்கின்றன என்றும் தெளிவுபடுத்தினார். இதனை செய்துவருபவர்கள் உலகை ஆளுகின்ற ஒரு சிறிய கூட்டத்தினரே ஆகும் என்பதை குறிப்புணர்த்தினார்.   

அத்தகைய சமூகங்களும், அதனால் விளையும் இன்னல்களும் கஷ்டங்களும் குறித்த ஒரு நாட்டினருக்கோ, மதத்தினருக்கோ, மட்டுமே உரியதல்ல. அவை எல்லோருக்கும் எக்காலத்துக்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டினார்.   

ஆதிகால மனிதர்கள் எல்லாவற்றையும் பொதுவாகவே அனுபவித்தார்கள், ஆனால் காலப்போக்கில் மனிதர்களிடையே உருவான பேராசையும் சோம்பேறித்தனமுமே தனியுடமை சிந்தனைக்கு தொடக்கப்புள்ளியானது என்பதையும், அதன் காரணமாகவே அந்த சிறிய கூட்டத்தினர் மதத்தையும் தேசத்தையும் ஜாதியையும் கற்பித்து அவற்றின் பெயரால் பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கிவைத்தனர் என்கின்றார். 

இவையனைத்துக்கும் காரணம் பொருளாதார உள்நோக்குத் தவிர வேறெதுவும் இல்லை என்று ஆதிக்க வர்க்கங்களின் சூட்சியை அம்பலப்படுத்தினார்.  

“தோழர்களே கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம், என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகளல்ல. ” அனைத்தும் கற்பிக்கப்பட்டவை, போலியானவை மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது இடைநடுவில் புகுத்தப்பட்டவையே என்று அடித்துரைத்தார் பெரியார். கூடவே சொன்னார் பசி, நித்திரை போன்ற உணர்ச்சிகள் மட்டுமே மனிதனுக்கு இயற்கையானவை மாறாக மதப்பற்று தேசப்பற்று ஜாதிப்பற்று எல்லாம் ஒரு சிறிய கூட்டத்தினரால் பெருந்தொகையான ஏழை எளிய மக்களை வருத்தி ஏமாற்றி பிழைப்பதற்காக உருவாக்கப்பட்ட கற்பிதங்களே அன்றி வேறேதுமில்லை என்கிறார்.  

ஆனால், “இத்தகைய சூட்சிகளை யாராவது வெளிப்படுத்தக் கிளம்பிவிட்டாலோ உடனே அப்படிப்பட்ட காரியத்தை நாஸ்திகம் என்றும், மதத்துரோகம் என்றும், தேசத்துரோகம் என்றும், தேசியத்துக்கு விரோதம் என்றும், சிலர் சொல்லி அடக்கி விடப்பார்க்கின்றார்கள். இப்படி சொல்லி அடக்குபவர்கள் யாரென்று பார்த்தாலோ அவர்கள் மேல் நிலையில் இருந்து கொண்டும், சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல் சோம்பேறி வாழ்க்கையில் இருந்து கொண்டும், அந்நியன் பிறர் உழைப்பில் சுகமனுபவிக்கும் ஒரு சிறு கூட்டத்தாரும்  மற்றும் அவர்களால் தங்கள் நிலைமையை காப்பாற்றிக்கொள்வதற்காக என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவர்களது கூலி பிரசாரர்களுமேயாவர்.” என்று விபரித்தார்.  

பெருவாரி மக்கள் அனுபவிக்கும் ஏழ்மைக்கும் இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் என்பதை உணராதவர்களாகவே நமது மக்கள் காணப்படுகின்றார். அப்படியான தெளிவை மக்கள் அடைந்துவிட கூடாதென்பதற்காகவே தான் கடவுள் செயல், தலைவிதி, ஆன்மா, பாவம், புண்ணியம், முன்ஜென்மம், சொர்க்கம், நரகம், தீட்டு, என்பவையெல்லாம் துணைபுரிகின்றன என்று விரிவாக பேசினார். 

தேசியம் என்றால் என்ன

உலகெங்கும் தேசிய விடுதலைப்போராட்டங்கள் நிறைந்திருந்த காலம். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சுதந்திரம், தேசவிடுதலை பற்றிய பேச்சுக்கள் பரபரப்பாக இருந்த நேரம். அக்காலத்தில்தான் தேசியம் என்றால் என்ன? என்பது குறித்து மிக தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளுங்கள் என்று பெரியார் அம்மாபெரும் மக்கள் கூட்டத்தினரை கேட்டுக்கொண்டார். 

“தேசியம், என்பதும் முற்கூறியவைகளைப் போன்ற ஒரு போலி உணர்ச்சிதான் ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்துவரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்துக்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஸ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும், மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப்படுத்தவும், ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகார பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூட்சியாகும்.”  

“தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது” 

ஆகவே “தேசம்” என்பதும் தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் போன்றே ஒரு வகுப்பாருடைய சுயநலத்துக்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல வேண்டியதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.” என்றார்.  

இவ்வேளையில் நவீன தேசியவாத சிந்தனையாளர்களில் முக்கியமானவராக கருதப்படக்கூடியவரும் “தேசியம் ஒரு கற்பிதம்” என்று சொன்னவருமான பெனடிக் ஆண்டர்சன் போன்றவர்கள் (Benedict Anderson 1936-2015) பிறப்பதற்கு முன்பே பெரியார் தேசியம் பற்றி சொல்லியுள்ள கருத்துக்கள் உண்மையில் ஆச்சரியப்படத்தக்கன.  

பெரியார் ஒரு புலமைசார் புத்திஜீவியோ கல்விமானோ அல்ல என்பதை எண்ணும் போது அதெப்படி இவரால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிந்தது?  

அதுமட்டுமன்றி 1932ஆம் ஆண்டு சொன்ன அவரது வார்த்தைகள் அச்சொட்டாக இன்றைய தமிழ் தேசியத்துக்கும் பொருந்துகின்ற விந்தையை என்னவென்று சொல்லுவது? 

இறுதியாக தனது உரையை;  

“உலகில் கஷ்டப்படும் எல்லா மக்களும் ஜாதி, மதம், தேசம், என்கின்ற வித்தியாசமில்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள் அப்போதுதான் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என சொல்லி முடித்தார். உலகப்புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் (communist manifesto) அறிக்கையில் கார்ள் மாக்ஸ் ‘உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று விடுத்த அறிவிப்புக்கும் பெரியாரது இலங்கை பேருரையின் இறுதி வேண்டுகோளுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் இல்லையெனலாம். 

பெரியாரின் பகுத்தறிவு தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ளவும் அவர் கொண்டிருந்த சமதர்மம் பற்றிய பார்வையை தெரிந்து கொள்ளவும் பெரியாரின் இந்த இலங்கைப் பேருரையானது ஒரு சிறந்த கையேடு எனலாம். சாதி ஒழிப்பை நோக்காக கொண்டு அவர் தொடங்கிய பகுத்தறிவு பாதை பொருளாதாரம் சார்ந்த வர்க்க பிரச்சினைகளிலும் கவனம் கொண்டிருந்தது. ஆனாலும் ரஸ்யா போன்ற நாடுகளில் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பொருளாதார சமத்துவம் பற்றி மேலும் விரிவான பார்வைகளை அவருக்கு கொடுத்திருக்கவேண்டும் என்பதை இந்த இலங்கைப்பேருரை காட்டிநிற்கின்றது. 

மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் பெரியார்  

காலிமுகத்திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மலையகம் நோக்கி பெரியாரின் பயணம் தொடங்கியது. மலையகத்தில் வாழுகின்ற மக்களை கண்டுபேசும் நோக்கோடு ஹட்டன், கண்டி, மாத்தளை, நாவலப்பிட்டி போன்ற இடங்களை சென்று பார்வையிட்டார். குறிப்பாக அவர்களின் வாழ்க்கை முறைகள், வேலைகள் மற்றும் கூலி நிலை பற்றி அறிந்துகொண்டார்.  

மலையக மக்களின் தந்தை என்றழைக்கப்படக்கூடிய அறிஞரும் அரசியல்வாதியுமான நடேசய்யர் தலைமையில் ஹட்டன் நகரில் சுமார் மூவாயிரம் பேர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. (இலங்கையில் திராவிட மற்றும் பகுத்தறிவு இயக்க செயற்பாடுகளை பிறிதொரு பகுதியில் பார்ப்போம்.) 

யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள தமிழர்களை காணவும் பெரியார் ஆவல் கொண்டார். அதன்படி அங்கு சென்று 1932/ஒக்டோபர்/30,31 மற்றும் 1,2/நவம்பர் ஆகிய  நான்கு நாட்கள் தங்கி பலரையும் கண்டு பேசினார். இந்த ஒழுங்குகளை யார் மேற்கொண்டார்கள் என்பதையோ அங்கு பெரியார் சந்தித்த தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்களையோ பெற முடியவில்லை. ஆனால் கொடிகாமம், பருத்தித்துறை போன்ற இரு இடங்களில் நடந்த பொது கூட்டங்களில் பெரியார் உரையாற்றியுள்ளதாக மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன. 

யாழ்ப்பாண சந்திப்புகளை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெரியார் மேலும் ஒரு வாரம் கொழும்பில் தங்கியிருந்து விட்டு இந்தியா பயணமானார். நவம்பர்8 ஆம் திகதி தூத்துக்குடியை வந்தடைந்ததுடன் முடிவுற்ற அவரது உலக பயணமானது அப்போது பத்துமாதங்களையும் இருபத்தி ஐந்து நாட்களையும் கடந்திருந்தது. 

(தொடரும்) 

https://arangamnews.com/?p=3829

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

நீதிக்கட்சியின் தொடக்கம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 6)

   — விஜி/ஸ்டாலின் — 

நீதிக்கட்சியின் தொடக்கம்  

தனது அரசியல் பாதையின் தொடக்கத்தில் முதல் ஆறாண்டு காலம் (1919-1925) இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றினார் பெரியார். காங்கிரசில் இருந்தபோது வைக்கம் போராட்டம், மதுவிலக்கு போராட்டம் போன்ற வெற்றிகரமான பணிகளை செய்திருந்தார். ஆனாலும் தீண்டாமை, சாதியொழிப்பு போன்ற விடயங்களில் காந்தியும் காங்கிரசும் பார்ப்பனர்களை சமாளித்துக்கொண்டு எடுத்து வந்த இரட்டை நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து வெளியேறும் நிலைக்கு வந்தார். அதன் பின்னரே சாதியொழிப்பை முதற்பணியாக கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பகுத்தறிவு கொள்கைகளை பிரச்சாரம் செய்யத்தொடங்கினார்.  

சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகளின்போது (1925-1935) ‘சுயமரியாதைத் திருமணம்’ அறிமுகம் செய்தமையிலும் நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்புச் சட்ட வரைபு போன்றவற்றை வெற்றிகொள்ளும் பணியிலும் பெரியாரின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கனவாகும்.  

இவ்வேளையில்தான் நீதிக்கட்சி என்பது யாது? அதற்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட தொடர்புகள் எத்தகையன? என்பது பற்றி சற்று விரிவான பதிவுகள் தேவையாகவுள்ளது.  

1900 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவெங்கும் பிராமணராதிக்கம் வியாபித்திருந்தது. ஆங்கிலம் கற்ற மேட்டுக்குடிகளாகவும் அரச பணிகளின் பெரும்பான்மையான இடங்களை வகிப்பவர்களாகவும் பிராமணர்களே இருந்தனர்.   

சென்னை மாகாணத்தை (தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஒரிசா) பொறுத்த வரையில் 3 அல்லது 4 வீதமாகவே வாழ்ந்த பிராமணர்கள் அரசின் நீதி நிர்வாக பணிகளில் 70-80 வீதமான இடங்களை நிரப்பியிருந்தனர்.  

இத்தகைய போக்குகளை இதே காலப்பகுதியில் இலங்கையெங்கும் பரந்திருந்த யாழ்ப்பாண வேளாள- மேட்டுக்குடிகளின் அதிகார வர்க்கத்தோடு ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம்.  

இவ்வேளையில்தான் சி. நடேசனார் தலைமையில் 1912ஆம் ஆண்டு பிராமணரல்லாத அனைவரதும் நலன்கருதி ‘சென்னை மாகாண சங்கம்’ என்னும் பெயரில் ஓரமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பானது ‘பிராமணரல்லாதோர் சங்கம்’ என்றும் ‘திராவிடர் சங்கம்’ என்றும் அழைக்கப்பட்டது. 

1916ஆம் ஆண்டு  நவம்பர் 20ஆம் திகதி சி.நடேசனார் தன்னோடு பிட்டி. தியாகராயர், டி.எம். நாயர் போன்றோரையும் இணைத்துக்கொண்டு’ தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்’ என்னும் பெயரில் பிராமணர் அல்லாதோர் சங்கத்தை விரிவுபடுத்தினார். அதுவே அடுத்துவரும் நூறாண்டுகளுக்கு தமிழ் நாட்டில் யாராலும் நிராகரிக்க முடியாத சக்தியாக நிமிர்ந்து நிற்கப்போகும் சமூகநீதி கருவூலமாகும் என்பதை அன்று யாரும் முன்னுணர்ந்திருக்க முடியாது.  

இந்த தென்னிந்திய நலன்புரிச்சங்கத்தின் கொள்கையறிக்கையில் சொல்லப்பட்ட முக்கிய விடயங்களாக  

*’எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும் 

*’பார்ப்பனரல்லாதார் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவேண்டும்‘  

*’பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒருவரை ஒருவர் உயர்வாகவோ தாழ்வாகவோ நடத்தக்கூடாது’ என்கிற வகையில் அமைந்திருந்தன. இதுவே ‘பிராமணர் அல்லாதோர் அறிக்கை’ (the non-brahmin manifesto) என அழைக்கப்படுகின்றது.   

இந்த சங்கத்தினர் தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக மூன்று ஏடுகளை தொடங்கினர். தமிழில் வெளிவந்த ஏட்டுக்கு பெயர் ‘திராவிடன்’ தெலுங்கில் வெளிவந்த ஏட்டின் பெயர் ‘ஆந்திர பிரகாஷிகா’ ஆங்கிலத்தில் வெளிவந்த ஏட்டின் பெயர் ‘ஜஸ்டிஸ்’ என்பனவாக இருந்தன. இந்த ஜஸ்டிஸ் என்னும் பெயரைக் கொண்டே காலப்போக்கில் தென்னிந்திய நல புரிச்சங்கமானது ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்றும் ‘நீதிக்கட்சி’ என்றும் அழைக்கப்பட்டது. 

மொண்டேகு செல்ம்ஸ்போர்ட் (montahu-chelmsford reforms) சீர்சிருத்தத்தின் ஊடாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்குரிய முதலாவது தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலுக்கு முன்னர் அரசியலில் பிரமணரல்லாதோரின் வகிபாவத்தை உறுதி செய்யும் முயற்சியில் நீதிக்கட்சியினர் இறங்கினர். நீதிக்கட்சியினர் லண்டன் வரை சென்றுகூட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதன் பயனாக இட ஒதுக்கீட்டை பிரித்தானிய அரசு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்தது. இதன் பயனாக 127 இடங்களில் 28 இடங்கள் பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வெற்றிதான் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை இன்றுவரை பிராமணர்கள் கைப்பற்ற முடியாது தடுத்து நிற்பதன் அடிப்படையாகும். 

சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு நாடாத்தப்பட்ட முதலாவது தேர்தலில் போட்டியிட்டு இந்த நீதிக்கட்சியினரே ஆட்சியமைத்தனர்.  

பிராமணராதிக்கத்தின் பிடியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசுக்கு மாற்றான ஒரு உறுதியான அமைப்பாக தென்னிந்திய அளவில் இந்த நீதிக்கட்சி செயற்படத் தொடங்கியது. 1920-1926 வரையிலும் பின்னர் 1930-1937 வரையிலுமாக 13 ஆண்டு காலம் சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் இந்த நீதிக்கட்சியே இருந்து வந்தது. இந்த ஆட்சிகால சாதனைகளே தமிழ் நாட்டின் சமூக நீதிக்கான பலமான அடித்தளமாக இன்றுவரை இருந்து வருகின்றது. 

*1921ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்தில்தான் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது.  

* 1923ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக வளாகம் இந்தியாவின் மூன்றாவதும் தமிழ் நாட்டின் முதலாவதுமான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது. தென்னிந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்களான ஆந்திரா பல்கலைக்கழக வளாகம், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் போன்றவை உருவாக்கப்பட்டன. 

*’பள்ளர்கள்’, ‘பறையர்’, ‘சக்கிலியர்கள்’ என்ற சொல்லாடல்கள் மாற்றியமைக்கப்பட்டு ‘ஆதி திராவிடர்கள்’ என்கின்ற சொல் ஆவணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.   

*பல்கலைக்கழக மருத்துவத்துறையில்  இணைவதற்கு சமஸ்கிரதம் சித்தியடைய வேண்டும் என்றிருந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.    

*பல்கலைக்கழக மட்டத்தில் (1910ஆம் ஆண்டு முதல்) தமிழ் பாடத்துக்கு பதிலாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டிருந்தமையை மாற்றி மீண்டும் தமிழ் 1924 ஆம் ஆண்டு பதிலீடு செய்யப்பட்டது. 

*விவசாய நிலங்களுக்கு ஜமீன்தார்கள் வாங்கிவந்த குத்தகையை சட்டத்தினுடாக குறைத்து பெரும் பொருளாதார சுரண்டல் கட்டுப்படுத்தப்பட்டது. 

*1927ல் கோவில்கள், மடங்கள் போன்றவற்றின் பெயரில் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்த நிலவுடமை, மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் கண்காணிக்கவும் அவற்றின் பயன்பாடுகளை மக்கள் நலன் சார்ந்து உறுதி செய்யவும் “அறநிலையத் துறை” ஒன்று உருவாக்கப்பட்டது.  

*இந்தியாவில் முதல் தடவையாக 1930ல் தேவதாசி முறைமை ஒழிப்புச் சட்ட முன்வரைபு கொண்டுவரப்பட்டது என்று அவர் சார்ந்த செயற்பாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். 

இத்தகைய தாய்மொழி பாதுகாப்பு, சாதி ஒழிப்பு, மற்றும் சமூகநீதி செயற்பாடுகளில் நீதிக்கட்சியினரும் பெரியாரது சுயமரியாதை இயக்கமும் வெவ்வேறு பாதைகளில் ஆனால் ஒரே திசையில் இணைந்தும் பிரிந்தும் பயணித்து வந்தனர்.  

சிறைக்கு தேடிவந்த நீதிக்கட்சியின் தலைமைப் பதவி  

நீதிக்கட்சியானது எத்தனையோ அரும்பணிகளை ஆற்றிவந்தபோதிலும் மறுபுறம் அதிகரித்துவந்த காந்தியின் செல்வாக்கு காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களிடையே பெருமதிப்பு பெறத்தொடங்கியது. 

அதேவேளை நீதிக்கட்சியின் மூத்த தலைவர்கள் வயோதிபம் காரணமாக படிப்படியாக இறந்து கொண்டிருந்தமை, நீதிக்கட்சியினரின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவான குத்தகை குறைப்பு மசோதா கட்சிக்குள் இருந்த ஜமீன்தார்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, நீதிக்கட்சியை ஆதரித்துவந்த ‘நாடார் மகாஜன சங்க’த்துக்குள் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக அதில் ஒருபகுதியினர் நீதிக்கட்சியை விட்டு விலகி காங்கிரசை ஆதரிக்கும் நிலைக்கு சென்றமை, பித்தாபுரம் ஜமீன்தார் போன்றவர்கள் பிரிந்து சென்று ஜனநாயக கட்சி என்னும் புதிய அமைப்புகளை உருவாக்கியமை என்கின்ற பல்வேறு விதமான காரணிகளால் நீதிக்கட்சியானது  பலவீனமடையத் தொடங்கியது.  

இந்நிலையில் 1927ஆம் ஆண்டிலேயே நீதிக்கட்சியினர் தமது பத்திரிகையான “திராவிடன்” இதழை தொடர்ந்து நடாத்தும் பொறுப்பை பெரியாரிடம் கையளித்திருந்தனர்.  

இத்தகைய பலவீனமான சூழலில்தான் நீதிக்கட்சியானது 1937 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளவேண்டி வந்தது. அதேவேளை தேர்தல் நேரத்தில் சென்னை மாகாண முதல்வராகவும் நீதிக்கட்சியின் தலைவராகவும் இருந்த பொப்பிலி அரசர் ஐரோப்பிய பயணத்தில் இருக்கவேண்டிய சூழலும் இணைந்து அத்தேர்தலில் நீதிக்கட்சியை படுதோல்விக்கு தள்ளின. பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கத்தினரும் கூட நீதிக்கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்களில் முடிந்தவரை பங்கெடுத்து உழைத்தும் நீதிக்கட்சியை  காப்பாற்ற முடியவில்லை. 

அத்தேர்தலூடாக நீதிக்கட்சியினர் எதிர்கொள்ள நேர்ந்த படுதோல்வியும் அந்நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எழுச்சியடைந்த இந்திய தேசிய காங்கிரசின் வெற்றியும் சென்னை மாகாண அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வித்திடத்தொடங்கின. சென்னை மாகாணத்தின் முதல்வராக ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரி பதவியேற்றார்.  

வீழ்ந்த சரிவை ஈடுசெய்ய வேறு வழியேதுமின்றி நீதிக்கட்சியினர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராயிருந்த பெரியாரை 1938ஆம் ஆண்டு நீதிக்கட்சிக்கும் தலைவராக்கினர். பெரியார் அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிலிருந்தமையால் அவரின் உருவப் படங்களை தூக்கிக்கொண்டு ‘பெரியாரே தலைவர்’ என்று  ஊர்வலம் போனார்கள் நீதிக்கட்சியினர்.  

(தொடரும்) 

https://arangamnews.com/?p=4025

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 7)

ஹிந்தி எதிர்ப்பு  போராட்டம்  – பெரியார்-அறிதலும் புரிதலும் – (பாகம்- 7)

    — விஜி/ஸ்டாலின்  

ஹிந்தி எதிர்ப்பு  போராட்டம்   

ராஜாஜி-பெரியார்  உறவும் முரணும் 

ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியின் வரலாறு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசியகாங்கிரஸின் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் மட்டுமன்றி இந்திய உள்துறை அமைச்சராகவும் மவுண்பேட்டனுக்கு பின்னர் இந்தியாவின் உயர்பதவியான (இறுதி) தலைமை ஆளுநராகவும் பதவி வகித்தவர். அத்தோடு காந்தியாரின் நான்காவது மகன் தேவதாஸை தனது மருமகனாக்கி காந்தியை சம்பந்தியாக்கிக் கொண்டவர்.  

பெரியார் ஈரோட்டிலும் ராஜாஜி சேலத்திலும் நகரசபை தலைவர்களாக இருந்த காலத்திலிருந்து அரசியலில் உறவுகொண்டவர்கள். அதன் பின்னர் சுமார் ஆறாண்டு காலம் காங்கிரசில் ஒன்றாக பணியாற்றியவர்கள். காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி காந்தியும் காங்கிரசும் ஒழியவேண்டும் என்று மூச்சுக்கு மூச்சு கூறிவந்தார். ஆனாலும் ராஜாஜியுடனான தனது உறவை கைவிடவில்லை என்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகவேண்டி வந்தது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இக்குற்றச்சாட்டுகளால் பெரியாரது சுயமரியாதை இயக்க தோழர்கள் கூட குழப்பங்களுக்குஉள்ளானார்கள்.   

குறிப்பாக கோயம்புத்தூரிலும் குற்றாலத்திலும் நடந்த இவர்களின் இரண்டு சந்திப்புக்கள் அரசியல் வானில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின.  

1934ல் ராஜாஜியும் பெரியாரும் ஒரேவேளையில் கோயம்புத்ததூர் மத்திய சிறையில் இருக்க நேரிட்டது. அவ்வேளையில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். நிறைந்த விடயங்களை பரிமாறிக்கொண்டனர். சிறைக்கு வெளியிலோ இச்சந்திப்பு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. உரையாடல்களின் போது மீண்டும் பெரியார் காங்கிரசில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது என்பதும் அதிலும் காங்கிரஸ் கட்சியானது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை (இந்திய அளவில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளிலும் அரச பணிகளிலும் பார்ப்பனர் அல்லாதோருக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கை) அங்கீகரிக்கும் முடிவுக்கு வரவேண்டுமென்பதை முன்நிபந்தனையாக வைத்தே உரையாடினார் என்பதும் பிற்காலங்களில் தெரியவந்தது.  

அதேபோல 1936ஆம் ஆண்டிலும் ஒருமுறை குற்றாலம் சென்றபோதும் அங்கே ராஜாஜியை சந்திக்க இன்னுமொரு வாய்ப்புக் கிடைத்தது. அங்கும் தனது வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காந்தியார் அங்கீகரித்தால் தான் மீண்டும் காங்கிரசில் இணைந்து கொள்ளத்தயாராக இருக்கின்ற நிபந்தனையையே முன்வைத்து ராஜாஜியுடன் உரையாடினார்.  

ஆனால் பெரியாருக்கும் ராஜாஜிக்குமான கள்ள உறவின் காரணம் என்ன என்று கம்யூனிஸ்ட்டுக்கள் உட்பட பலர் கேலிப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ராஜாஜியுடனான பெரியாரது நட்பு “கொள்கைக்கு விரோதமானது” “கள்ள உறவு” என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

ஹிந்தி திணிப்பை தடுத்து நிறுத்திய பெரியார் 

1937ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரசின் சார்பில் முதலமைச்சரான ராஜாஜி, பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே ஹிந்தி திணிப்பை அமுலாக்க துணிந்தார். ஹிந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் கட்டாயம் ஹிந்தி படிக்கவேண்டும் என்கின்ற அச்சட்டம் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிட்டது.  

ஆறாம் ஏழாம் எட்டாம்…. வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு ஹிந்தி பாடத்தை கட்டாயமாக்க இந்த சட்டம் முனைந்தது. ஹிந்தி பாடத்தில் சித்தி அடையாதவர்கள் வகுப்புச் சித்தியை அடைய முடியாதவர்களாக்கப்படும் நிலைமை தமிழ்நாட்டில் பெரும் குழப்ப நிலையை விளைவித்தது. 

இலங்கையில் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசகரும மொழி சட்டத்தை விட இச்சட்டமானது கடுமையானதாக இருந்தது. 

இலங்கை அரச கரும மொழி சட்டமானது சிங்கள மக்கள் வாழும் மாவட்டங்களில் அரச உத்தியோக பணி செய்பவர்கள்தான் சிங்கள பாடத்தில் சித்தியடைய வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தத்தை கொடுத்தது. 

ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் சிங்களத்தை கட்டாயப் பாடமாக்கும் நிபந்தனையை அச்சட்டம் விதிக்கவில்லை. 

அதேபோல் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசு உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு சிங்கள பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்கின்ற நிபந்தனையும் விதிக்கவில்லை. 

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தி திணிப்பானது முழுக்க முழுக்க திராவிட மொழி பேசும் மாநிலங்களில் ஹிந்தியை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்க முனைந்தது. எனவேதான் இச்சட்டம் ‘ஹிந்தித்திணிப்பு’ சட்டம் எனப்படுகின்றது. 

இதன் காரணமாக திராவிடமொழிகள் பேசும் சென்னை மாகாணமெங்கும் மக்கள் கொதித்தெழுந்தனர். இவ்வேளையில் தனது நண்பன் ராஜாஜியை எதிர்த்து போர்க்கொடி தூக்க பெரியார் முன்வருவாரா? என்கின்ற பலத்த கேள்விகள் அரசியல்வாதிகளிடையே எழுந்தது. 

காங்கிரசிலிருந்து வெளியேறிய (1925ஆம் ஆண்டு) காலத்தில் இருந்து இந்திய தேசியத்தின் மீது பெரியார் வைத்திருந்த நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருவதை அவரது பேச்சுகளும் எழுத்துக்களும் வெளிக்காட்டிவந்தன.  

1930ஆம் ஆண்டு காலத்தில் ‘இந்தியா ஒரு தேசமா’ என்கின்ற கேள்வியை எழுப்பி குடியரசில் விவாதத்தை தொடங்கிவைத்தார் பெரியார். 

அதன் தொடர்ச்சியாக இந்திய தேசியம் என்பதன் பின்னணியில் பார்ப்பன- பனியா ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களே உள்ளன என்று அம்பலப்படுத்தத் தொடங்கினார். அதுமட்டுமன்றி காங்கிரஸானது பிரிட்டிஸ் ஆட்சியாளர்களுடன் முரண்படுவதாக காட்டிக்கொண்டு ரகசியமாக சமரசம் செய்துவருகின்ற உத்தியை கடைப்பிடித்து மக்களை ஏமாற்றிவருகின்றது என்றெல்லாம் நேரடியான விமர்சனங்களை வைத்து வந்திருந்தவர் பெரியார். 

சுருங்கச் சொன்னால் இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்திருந்தார் பெரியார். இந்நிலையில் ராஜாஜி கொண்டுவந்த ஹிந்தி திணிப்பு முயற்சியானது ஹிந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்கின்ற ஆவேசத்தை அவர் மனதில் உருவாக்கியது. தமிழரின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும் என்றால் தமிழ்மொழி காக்கப்பட வேண்டும் என்கின்ற முடிவுக்கு பெரியார் வந்தார். ஆனால் அதுவரை காலமும் தமிழ் மொழி பெருமை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதவராகவே அவர் இருந்து வந்தார். 

தமிழின் தொன்மை பற்றியோ தமிழ் இலக்கியங்களில் செழிப்பு பற்றியோ மார்பு தட்டி வெற்று அரசியல் செய்பவராக ஒருபோதும் அவர் இருக்கவில்லை. அவரது பாஷையில் சொன்னால் திருக்குறளைத் தவிர மற்றைய அனைத்துமே அவரைப் பொறுத்தவரையில் வெங்காயங்கள்தான். 

1936 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் அவர் ஆற்றிய உரையில் தமிழ் மொழி பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார். “தமிழ்மக்கள் நலன், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பது அல்லாமல் வெறும் பாசையை பிடித்துக் கொண்டிருக்கின்ற பிடிவாதக்காரன் அல்ல நான்” என்று தெளிவாகச் சொன்னார். 

அதே பெரியார்தான் 1937ஆம் ஆண்டு ஹிந்தி திணிப்பு வந்தபோது கொதித்தெழுந்தார். ஹிந்தி திணிப்பின் ஊடாக தமிழர்களின் நலன் பாதிக்கப்படுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கல்வியறிவு இன்றி கிடந்த இந்த சமூகத்துக்கு வெள்ளையர்கள் வந்த பின்னரே அந்த வாய்ப்பும் மீண்டும் கிடைத்தது. வெள்ளையர் ஆட்சி கொண்டுவந்த பொதுக் கல்வித் திட்டத்தின் பயனாக அப்போதுதான் மீண்டெழ தொடங்கியிருந்த தமிழ் மக்களுக்கு ஹிந்தித் திணிப்பு மற்றுமொரு பேரிடி என்று அவர் கருதினார். ஆகவேதான் ஹிந்தி திணிப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹிந்தி திணிப்பின் மூலம் மீண்டும் தமிழ் மாணவர்களின் எதிர்காலமும் தமிழர்களின் நலனும் தமிழர்களின் தன்மதிப்பும் கெட்டுவிடும் என்பதை அவர் உணர்ந்தார். அதனால்தான் மிக ஆக்ரோஷமாக ஹிந்தியை விரட்டியடிக்க வேண்டும் என்று அவர் புறப்பட்டார். 

அப்போதுதான் பெரியாரின் தமிழ் மக்கள் நலன் சார்ந்த கொள்கை பிடிப்பை தமிழகம் உணர்ந்து கொண்டது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்க முன்வந்தார் பெரியார். 

சென்னை மாகாணமெங்கும் ஹிந்தி எதிர்ப்பு கோஷங்கள் வேகம் கொண்டன. பொலிஸாரின் தடையுத்தரவுகளை மீறி தமிழின தலைவர்களோடு மாணவர்கள், வழக்குரைஞர்கள், பொது மக்கள் என்று உண்ணாவிரதங்களிலும் எதிர்ப்பு ஊர்வலங்களிலும் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.   

தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் பெரியாருடன் கடுமையாக முரண்பட்டிருந்த மறைமலை அடிகள் போன்றோருக்கு பெரியாரே கடிதம் எழுதி இந்திக்கு எதிராக போராட வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்தார். 

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மொழி அறிஞர்கள் என பலதரப்பட்டோரும் பெரியாரின் அழைப்பை ஏற்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். 

திருச்சியில் மறைமலையடிகள், உ.வெ.சாமிநாதய்யர், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் தலைமையிலும் சென்னையில் பெரியார் மற்றும் நீதிக்கட்சி தலைவர் ஏ.டி.பன்னீர்ச்செல்வம் போன்றோர் தலைமையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

திருச்சியிலிருந்து தமிழர் பெரும்படை எனும் பெயரில் 40 நாட்கள் நடந்து சென்று சென்னையை அடையும் ஒரு யாத்திரை நடாத்தப்பட்டது. ரெ. திருமலைச்சாமி என்பவர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றி ஒருவரைக் கொண்ட குழுவினர் இந்த யாத்திரையில் பங்கெடுத்தனர். இந்த சென்னைக்கான யாத்திரையை பெரியாரே திருச்சியிலிருந்து தொடங்கிவைத்தார். 

இந்த யாத்திரை முடிவில் சென்னை மெரினா கடற்கரையில் நின்று போராட்டக்காரர்களை பெரியாரே வரவேற்றார். அவர்கள் முன்னிலையில் பேசிய போதுதான் முதன்முதலாக பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோஷத்தை முன் வைத்து உரையாற்றினார். 

காஞ்சியிலே ஹிந்தி திணிப்புக்கு எதிரான மிகப்பெரிய மாநாடு ஒன்றை பெரியார் தலைமை ஏற்று நடத்தினார். 1938 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஹிந்தி எதிர்ப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. 

மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இப்போராட்டங்களினால் பொலிஸாரால் பெரியார் உட்பட சுமார் 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டனர். அதில் நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகிய இருவர் சிறையிலேயே மரணமாகவும் நேர்ந்தது. 

ராஜாஜியின் ஆட்சி ஆட்டம் கண்டது. ஹிந்தி திணிப்பை வாபஸ் வாங்க வேண்டிய நிலைக்கு சென்னை அரசாங்கம் வந்தது. 

இதற்கிடையில் இரண்டாம் உலகமகா யுத்தப்பணிகளுக்கு இந்தியர்களை கட்டாயமாக ஈடுபடுத்தும் பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து தனது முதல்வர் பதவியை துறப்பதாக ராஜாஜி அறிவித்தார்.  

இதன் காரணமாக சென்னை மாகாண நிர்வாகம் ஆளுநரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய பெரியார் ஆளுநரோடு பேச்சுவார்த்தைக்கு செல்ல உடன்பட்டார். பேச்சுவார்த்தை மேடையில் ஹிந்தி திணிப்பை உடனடியாக மீளப்பெற வேண்டியதன் அவசியத்தை விலாவாரியாக எடுத்துரைத்து வலியுறுத்தினார்.  

அதன் பலனாக  1940ஆம் ஆண்டு கட்டாய ஹிந்தித்  திணிப்பை வாபஸ் பெறும் அரசாணையை ஆளுநர் எர்ஸ்கின் பிரபு வெளியிட்டார்.  

ராஜாஜி அமுலாக்க எண்ணிய ஹிந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வீச்சும் அதற்கு பெரியார் வழங்கிய உறுதியான தலைமையும் காங்கிரஸாரை மட்டுமல்ல பிரித்தானிய ஆட்சியாளர்களை சென்னை மாகாணத்தை நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தது.  

ராஜாஜியுடன் பெரியார் கொண்டிருந்த உறவென்பது தனிமனித உறவு என்பதையும், நண்பனேயானாலும் தனது இலட்சியத்தில் ஒரு போதும் சமரசம் செய்ய மாட்டாதவர் பெரியார் என்பதையும் நிரூபிக்கும் வாய்ப்பினை ராஜாஜியின் ஹிந்தி திணிப்பே பெரியாருக்கு வழங்கியதும் சுவாரஸ்யமானதுதான்.  

பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க முடியாமல் ஹிந்தி திணிப்பு வாபஸ் வாங்கப்பட்டது உண்மைதான்.  

ஆனால் ஹிந்தி திணிப்பின் காரணமாக மக்களின் மனதில் மொழியுணர்வு பற்றி எரியத் தொடங்கியது.  

1937-1940 வரையான மூன்றாண்டு காலம் தமிழ்நாடு முழுக்க இடம்பெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையாக கருக்கொள்ளத் தொடங்கியமையை யாராலும் தடுக்க முடியவில்லை.  

முதலமைச்சர் பதவியா நமக்கு சரிப்பட்டு வராதுங்க” 

இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபோதுதான் நீதிக்கட்சிக்கு பெரியார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

உட்கட்சி மோதல்களாலும், நிதி பஞ்சத்தாலும், தேர்தல் படுதோல்வியாலும் சீரழிந்து அழிவின் விளிம்பில் இருந்த நீதிக்கட்சியையே பெரியார் பொறுப்பெடுத்தார்.  

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் பதவி விலகலை தொடர்ந்து அடுத்து யார் முதலமைச்சர், யார் தலைமையில் ஆட்சியை தொடர்வது என்கின்ற கேள்விகள் எழுந்தன. பெரியாரின் தலைமையின் கீழ் வந்திருந்த நீதிக்கட்சியை முன் நிறுத்தி ஒரு ஆட்சியை அமைக்குமாறு காங்கிரஸ் சார்பில் ராஜாஜியிடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் சார்பில் கவர்னர் தரப்பில் இருந்தும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

ஆனால் பெரியாரோ அதையும் நிராகரித்தார். பெரியார் நினைத்திருந்தால் அந்தக்கணமே நான்கு மாநிலங்களை கொண்ட அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக அமர்ந்திருக்க முடியும். 

ஆனால் தேர்தல் பதவிகளை அலங்கரிப்பதை விட சமுதாயப்பணி செய்வதே தனது மேலான கடமை என்பதில் பெரியார் உறுதியான நிலைப்பாடுகொண்டிருந்தார். முதலமைச்சர் பதவியா “ஐயோ நாம மேற்கொண்டிருக்கும் போராட்டத்திற்கும் அதற்கும் சரிப்பட்டு வராதுங்க” என்றவர் பெரியார். அவர் பதவிகளை தேடியலைந்தவரல்ல. வீடுதேடி வந்த சென்னை மாகாண முதலமைச்சர் பதவியை அநாயசமாக தன் புறங்கையால் தட்டிவிட்டவர் பெரியார் என்பதே அவருக்கே உரிய சிறப்பாகும். 
 

 

https://arangamnews.com/?p=4148

 

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்-அறிதலும் புரிதலும் (பாகம்- 8 )

பெரியார்-அறிதலும் புரிதலும்  (பாகம்- 8)

      — விஜி/ஸ்டாலின் —  

திராவிட கழகத்தின் தோற்றம் 

திராவிட இயக்கம் என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை கடந்து நிற்கின்றது. இது எப்படி சாத்தியமானது?  

திராவிடர்களின் சமூக முன்னேற்றம் என்கின்ற கொள்கையில் ஓய்வின்றிய சுடரோட்டமாக அது பயணித்து வருகின்றமை ஆச்சரியம் தான். பாதைகளை மாற்றிக் கொண்டாலும் நீண்டகால இலக்கு மாறாமல் தன்னை தகவமைத்து வருகின்றது. இத்தகைய கொள்கை மாறாத இலட்சியமே அதன் தொடர்ச்சியான இருப்பை இன்றுவரை சாத்தியமாக்கியிருக்கின்றது.  

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் சங்கம், திராவிட சங்கம் என்கின்ற பெயர்களில் செயற்பட்டு வந்த இயக்கங்களின் தொடர்ச்சியில் இருந்துதான் நீதிக்கட்சி என்கின்ற அந்த நீண்ட நெடிய அரசியல் இயக்கம் பரிணாமம் பெற்றது. அதாவது திராவிடர்களின் நலனை முன்னிறுத்துவதிலிருந்து அச்சொட்டும் பிசகாத ஒரு திராவிட இயக்கமாகவே நீதிக்கட்சி  இயங்கி வந்தது. அதில் பல வெற்றிகளையும் கண்டது. 

இந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை இரண்டு வகையான கால கட்டங்களாக பிரித்து நோக்கலாம். பெரியார் தலைமைக்கு வருவதற்கு முன்னரான நீதிக்கட்சி என்கின்ற பெயரில் இயங்கிய காலகட்டம் என்பது ஒன்று. பெரியார் தலைமை ஏற்ற பின்னர் திராவிட கழகம் எனும் பெயர் பெற்று இயங்கிய கால காலகட்டம் என்பது மற்றொன்று. 

இந்த இரு காலகட்டங்களிலும் ஒரே விதமான கொள்கையில் உறுதியாக அது பயணித்து வந்தது. ஆனால் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைகைக்கொண்டு செயற்பட்டு வந்தது. அது எப்படி? 

அதாவது பெரியார் நீதிக் கட்சிக்கு தலைமை ஏற்பதற்கு முன்னர் அக்கட்சியானது தேர்தல் அரசியலை முன்வைத்து இயங்கியது. ஆட்சி அதிகாரத்தின் ஊடாக சமூக நீதியை நிலைநாட்டுவதை குறிக்கோளாக கொண்டு பலமுறை சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்தும் வந்தது. இதன் காரணமாக திராவிடர்களின் நலன் சாந்த கொள்கைகளை அது உறுதியாக பின்பற்றி வந்தது.    

பெரியாரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி வந்த பின்னர் தேர்தல் அரசியலை புறக்கணிக்கும் முடிவை பெரியார் முன்வைத்தார். அதனுடாக அரசியல் பதவிகளை துறந்த சமூக சீர்திருத்த இயக்கமாக அதனை மாற்ற விரும்பினார். இதன் காரணமாக நீதிக்கட்சித் தலைவர்கள் சிலர் பெரியாருடன் முரண்பட்டனர். ஆனாலும் பெரியார் நீதிக்கட்சியை பொறுப்பெடுக்கும் போது முன் வைத்த நிபந்தனையின் அடிப்படையிலேயே அக்கட்சியை வழிநடத்துவதில் பிடிவாதமாய் இருந்தார்.  

இதற்காக மிகப் பெரிய மாநாடு ஒன்றை கூட்டினார். 1944ஆம் ஆண்டு சேலத்தில் கூட்டப்பட்ட மாநாட்டில்தான் நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து “திராவிட கழகம்” என பெயர் சூட்டப்பட்டது. இதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் யாவும் திராவிட கழகத்தின் சமுதாயக்கொள்கைகள் என்ற தத்துவத்துவம் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டது. 

இத்தகைய முடிவுகளூடாக சமுதாயப் பணி ஒன்றே திராவிட கழகத்தின் கொள்கைகள் என பகிரங்கமாக அறிவித்தார் பெரியார். 

சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற விடயங்களில் அரசியல் பதவிகள் மூலம் மாற்றங்களைக் கொண்டு வரலாமேயன்றி அவற்றை தொடர்ச்சியாக பாதுகாக்கும் காரணிகளை இல்லாதொழிக்க முடியாது என்பதே பெரியாரது வாதமாக இருந்தது. 

ஆகவே அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடுவதை விட திராவிடர்களை அடிமையாக நடத்தும் கருத்தியல்களுக்கு எதிரான போராட்டமே அவசியம் என்று உணர்ந்தார் பெரியார். மக்களை மூட நம்பிக்கையில் இருந்து வெளிக்கொணருவதும் ஆதிக்க கருத்தியல்களை பாதுகாக்கும் சாதி, மதம், கடவுள் போன்ற கட்டுமானங்களை தகர்ப்பதுமே சமுதாயப் பணி செய்பவர்களின் முதல் கடமை என அவர் தீர்க்கமாக நம்பினார். ஆதிக்க கருத்தியல்களுக்கு எதிரான போராட்டத்தை அவர் மிகமிக வலியுறுத்தினார். 

நீதிக்கட்சியின் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து வந்த அண்ணாதுரை என்னும் இளைஞன் இந்தப் பணிகளில் பெரியாருக்கு நெருக்கமானார். நீதிக்கட்சியில் இருந்தபோதும் பெரியாரின் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பங்கெடுத்து வந்தவர் அண்ணாதுரை ஆகும். 1929ஆம் ஆண்டு  பெரியார் நடத்திய செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஒரு மாணவனாக கலந்துகொண்டவர் அண்ணாதுரை. அந்த வகையில் ஏலவே அறிமுகமாகியிருந்த அண்ணாதுரையை செயலாளராக்கி திராவிட கழகத்திற்கு இளரத்தம் பாய்ச்சினார் பெரியார். 

திராவிட கழகத்தின் எதிர்கால கொள்கை திட்டங்களில் இந்தச் சேலம் மாநாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. 

அண்ணாவின் தீர்மானங்கள் என்று அழைக்கப்படும் அம்மா நாட்டுத் தீர்மானங்கள்தான் திராவிட கழகத்தினை தியாக உணர்வு மிக்க இயக்கமாக மாற்றியமைப்பதில் பெரும் பங்காற்றின. 

அண்ணா தீர்மானங்கள்”  

*மக்கள் பிரதிநிதிகளாக சட்டசபையிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பதவி வகிப்பவர்களில் நியமன உறுப்பினர்கள் யாவரும் தமது பதவிகளை துறப்பது,  

*பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சார், திவான், பகதூர் பட்டங்கள் அனைத்தையும் உடனடியாக துறப்பது,  

*பிரித்தானிய அரசாங்கத்தின் இரண்டாம் உலகம் யுத்த பணிகளின் பெயரில் வகிக்கும் சகலவிதமான பொறுப்புகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வது,  

*எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் எவ்விதத் தேர்தல்களிலும் போட்டியிடாதிருப்பது  

போன்றவையாகும். 

ஆகவே நீதிக்கட்சியின் தேர்தலில் பங்குபற்றி ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றும் கொள்கையில் இருந்து  “அண்ணாதுரை தீர்மானம்” மூலம் திராவிடர் கழகம் மக்கள் இயக்கமாக முன்னேறியது.  

பெரியாரும் அவரது தோழர்களும் திராவிடக்கழகத்தின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக பெரிதும் பாடுபட்டனர். அண்ணாதுரையின் பேச்சுக்களும், எழுத்துக்களும் திராவிடக் கழகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை கவர்ந்திழுப்பதில் பெரும் பங்காற்றியது. மிகக்குறுகிய காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மும்மடங்காக மாறியது.  

பணபலமோ, பணக்காரர்களின் பக்கபலமோ ஏதுமற்ற திராவிட கழகம் இளைஞர்களின் அசுர பலத்துடன் மிக வேகமாக வளர்ச்சி கண்டது. அண்ணா எங்கள் தளபதி என்று இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். 

அடுத்து 1945 ஆம் ஆண்டு திருச்சியில்நடைபெற்ற மாநாட்டுக்கு  தளபதி அண்ணாத்துரையின் வேகத்தையும், திறமையையும் மதித்து அம்மா நாட்டுக்கு தலைமையேற்று நடத்துமாறு பணித்தார் பெரியார். அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 10-10-1945 அன்று திராவிடக்கழகத்தின் ‘கருஞ்சட்டைப் படை” (தொண்டர்படை) உருவாக்கப்பட்டது.  

உழைக்கும் மக்களை ஊத்தயர்களாகவும் அழுக்கு நிறைந்தவர்களாகவும் சித்தரித்து இழிவாக்கியும் புறந்தள்ளியும் வந்த நிலைமையை உணர்ந்து அவர்கள் வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் வெளிக்காட்டவும், அவற்றை நீக்கி கொள்ள தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராய் இருக்கிறார்கள் என்பதை பிரசித்தம் செய்யவும் கறுப்புச்சட்டை அடையாளம் அறிமுகம் செய்யப்பட்டது. 

அதன் பின்னர் 1946ல் தான் திராவிட கழகத்திற்கென ஒரு கொடி உருவாக்கப்பட்டது. இக்கொடி கறுப்பு நிறத்தின் நடுவே ஒரு சிகப்பு வட்டத்தை கொண்டது. சாதி, மத, சமூக, பொருளாதாரத்தில் இருண்ட பகுதிக்குள் வாழும் மக்களை கறுப்பு நிறம் குறிப்பதாகவும் அதிலிருந்து விடுபடும் மக்களை சிவப்பு நிறம் குறிப்பதாகவும் பெரியார் கருதினார்.  

திராவிடர் கழகத்தை மிகக் குறுகியகாலத்தில் குறிப்பிடத்தக்க வலிமைகொண்ட கட்சியாக மாற்றிய பெரியாரும் அவரது தோழர்களும், 1946 ஆம் ஆண்டு  50,000 பேர் கலந்துகொண்ட கருஞ்சட்டைப்படை மாநாடு ஒன்றை மதுரையில் நடாத்தினார்கள். இம்மாநாட்டில் வன்முறையாளர்கள் கலவரங்களை தூண்டிவிட்டனர். கழகக் கொடிகள் எரிக்கப்பட்டும், மாநாட்டுப் பந்தல்கள் தீவைத்து கொழுத்தப்பட்டும், உறுப்பினர்கள் தாக்கப்பட்டும், கறுப்பு சேலை அணிந்த பெண் தோழர்கள் நிர்வாணமாக்கப்படுமளவுக்கும் எதிர்ப்புகள் தலைதூக்கின. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில்தான் திராவிடர் இயக்கம் வளர்ந்தது என்பது கவனத்துக்குரிய விடயம்.   

இன்னுமொரு முக்கிய விடயமாக பெரியார், அண்ணாத்துரை போன்றோருக்கு பின் வந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் தலைவர்களாக திகழ்ந்தவர்கள் இக்காலகட்டத்தில்தான் இணைந்து கொண்டார்கள். முக்கியமாக இரா.நெடுஞ்செழியன், க.அன்பழகன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, மணியம்மையார், கி.வீரமணி போன்றோரை குறிப்பிடலாம்.  

அண்ணா தீர்மானங்களின் அடிப்படையில் இதன்படி 1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் எதிர்கொண்ட சட்டசபைத் தேர்தலையும் அரசியலமைப்பு அவைக்கான தேர்தலையும் பகிஷ்கரிக்கும் முடிவுக்கு திராவிடக் கழகம் வந்தது. தொடர்ந்தேர்ச்சியான பிரச்சாரங்களும், போராட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் எழிச்சியை உருவாக்கியது. இது “திராவிட நாடு” கோரிக்கையையும் வலுப்படுத்துவதாக மாறியது.     

மேற்படி பிரிவினைக் கோரிக்கையை கண்டு 1947 பெப்ரவரியில் திராவிடக் கழக கூட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு தடை விதித்தது.  

மறுபுறத்தில் அனைத்து தடைகளையும் தாண்டி திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்தில் அதிக வரவேற்பை பெறத் தொடங்கின. பெருகி வந்த மக்கள் ஆதரவுகளுடன் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் திராவிட கழகம் பல்வேறு வெற்றிகளை ஈட்டியது. 

 

https://arangamnews.com/?p=4451

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.