Jump to content

முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர்  ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர்  ...


spacer.png

அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴

இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது.  சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. 

ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. 

தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! 

தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். 

இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது!

அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று  எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும்.

நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! 

நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது.

சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊

முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. 

இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. 

சிங்களவர்களும், வட இந்தியர்களும்,   ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது!

எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான்.

நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால்  (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்!


புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று
திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா  குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்!

அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு.  தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும்.
மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும்.

இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு.

கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை.

முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்:
 [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்]

முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்:
 [முதற்பெயர்] [குடும்பப்பெயர்]

ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. 

அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன.

Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம்.  அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம்.

அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது!

இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம்.

ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen);  அவரது குடும்பப்பெயர் (nomen);  அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen).
அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும்.
ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்!

இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது.

ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர்.

எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர்.
 
இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது.

எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். 

பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது.

பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். 

ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன்.  இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது!

ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன்.

இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! 

ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்!

ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது!

மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். 

எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள்.

தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.

எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.


குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல!


——

  • Like 20
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! 

எனக்கும் இதே மாதிரி பிரச்சனை வந்தது.
இப்போதும் எனது பெயர் கடைசி பெயர்.அப்பாவின் பெயர் முதல்பெயர்.

கனடாவில் பிள்ளைகள் பிறக்க பிறக்க கடைசிபெயரை அப்பன் பெயராக வைக்கிறார்கள்.
மகனின் பிள்ளைகளுக்கும் எனதுபெயரையே கடைசிபெயராக வைத்துள்ளார்கள்.
கனடாவில் மாற்றிமாற்றி வைக்கிறார்கள் நீயும் அப்படி வைக்கலாம் என்றேன்.
சம்மதிக்கவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! 

எனது பெயரும் பெரிய பெயர்.
இதுவே பல இடங்களில் எப்படி கூப்பிடுவதென்று தெரியாமல் பைலை தள்ளி வைத்திருப்பார்கள்.
என்னடா பின்னால வந்தவனெல்லாம் போறானே என்று போய் கேட்டா பெயரைக் கேட்டுவிட்டு இந்தப் பெரிய பெயரை கூப்பிடமுடியாமல் வைத்திருக்கிறேன் என்பார்கள்.
யாரை நோவது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனைக்குள் அகப்படாமல் தெளிவடைய முடியாது எங்கள் குடும்பத்தில் எனது துணைவரின் தமையனார் மொன்றியலில் வசிக்கிறார் நாங்கள் ரொரன்டோ எங்கள் வீட்டின் எனது பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெயர் முதற்பெயராகவும்  துணைவரின் பெயர் குடும்பப் பெயராகவும் உள்ளது. அதே நேரம் மொன்றியலில் உள்ள துணைவரின் சகோதரரின் மகனுக்கு முதற்பெயராக மகனின் பெயரும் குடும்பப் பெயராக எனது துணைவரின் தந்தை பெயரும் உள்ளது அதே நேரம் அண்ணியாருக்கும் அவரின் குடும்பப் பெயராக மாமாவின் பெயரே அமைந்துள்ளது. ஆனால் எனது குடும்பப் பெயராக எனது துணைவரின் பெயர் இல்லை. பதிவுத் திருமணத்தின்போது ஒரு கேள்வி உள்ளது மணப்பெண்ணிற்கான பகுதியில் அவள் தன்னுடைய குடும்பப் பெயரை துணைவரின் குடும்பப் பெயருக்குக்கீழ் மாற்ற விரும்புகிறாரா என்பது... அதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தால் அது துணைவரின் தந்தை பெயரை தனது குடும்பப் பெயராக ஏற்றுத் தொடரவேண்டும் இல்லை எனது தந்தையின் பெயரையே வைத்திருக்க விருப்பம் என்று தெரிவித்தால் அவள் தனது கன்னிப்பெயரையே குடும்பப் பெயராக தொடர முடியும். உண்மையிலேயே இந்த நிலை வெளியிடங்களுக்கு செல்லும்போது சிக்கலானதாக உள்ளது நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்று பயண இடங்களில் நிரூபிக்க மேலதிக ஆவணங்களை கைவசம் வைத்திருக்கவேண்டியுள்ளது.

 

கட்டுரை நன்றாக உள்ளது கிருமி.

நாங்கள்தான் எப்படி தெளியப்போகிறோம் என்று தெரியவில்லை. 🤔

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

எனது பெயரும் பெரிய பெயர்.
இதுவே பல இடங்களில் எப்படி கூப்பிடுவதென்று தெரியாமல் பைலை தள்ளி வைத்திருப்பார்கள்.

ஜேர்மனிக்கு வந்த நாள் தொடக்கம் இண்டு வரைக்கும் உந்த பெயர் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனை. டாக்குத்தர் இல்லாட்டி ஓபிஸ்களிலை என்ரை பெயரை கு...கு..கு..மா..மா..மார எண்டு உச்சரிக்க தொடங்கவே ஓம் நான் தான் எண்டு கையை தூக்கிக்காட்டி முன்னுக்கே எழும்பி ஓடிடுவன். உந்த சோலிக்காகத்தான் வெளிநாட்ட்டிலை வாழுற சீனக்காரர்கள் கூடுதலாய் தங்கடை பெயரோடை சட்டபூர்வமாய் ஒரு இங்கிலிஷ் பெயரையும் சேர்த்து வைச்சிருப்பினம். உதாரணத்துக்கு மைக்கல் சின் யொன் சுங். இதிலை மைக்கல் கூப்பிடு பெயர்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடு வந்தவர்களுக்கு பெயர் பிரச்சினை  ஏர்போர்ட்டிலே தொடங்கி விடும்....இதனால்   பல பிரச்சினைகள்  வந்ததுண்டு ...  சில இடங்களில்   சில்வா   பீரிஸ்   முகமட்    ஜோசப்    எனவும் உண்டு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை விட்டு வெளிக்கிட்ட நாள் முதலாய்.....எனது முதல் பெயர் அப்பாவின் பெயர் தான்...!
அப்பாவின் பெயர் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே அவர் ஆசைப்பட்டிருப்பார்? அவர் பெயரையே என் பெயர் ஆக்கி விட்டதால்....எனக்குக் குற்ற உணர்வு எள்ளளவும் வரவேயில்லை!
இப்போது ஒரு குடும்பப்  பெயர் உண்டு..! அதனால் பிரச்சனைகள் இல்லை!

ஆனால் உண்மையான பிரச்சனை....நீளமான எங்களது பெயர்கள் தான்!

உதாரணத்துக்கு.....கைலாயபதிவாசன் அல்லது சிவஞானசுந்தரம்..!
பாவம்...வெள்ளைக்காரன் என்ன பாடு படுவான்..!

உங்கள் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டது!

த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன!

பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர், சாதீயம் தென்னிந்தியாவில் புகுத்தப் பட்ட பின்னர் தான் இந்தக் குடும்பப் பெயர்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்! ஆதித் தமிழர்கள் குடும்பப் பெயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்! தாழிகளில் புதைப்பதும்,நடுகல் நடுவதும் அவர்களது வழக்கமாக இருந்திருக்க வேண்டும்!


பிராமணர்கள் தான்...எரிப்பது, உடன் கட்டையேறுவது போன்ற முறைகளை அறிமுகப் படுத்தினார்கள்!

இதன் முக்கிய நோக்கம் தமிழர்களின் வரலாற்றுத் தடையங்களை  இல்லாமல் செய்வதேயாகும்..! தங்களுக்கு ஏற்றவாறு விதிகளை  மாற்றினார்கள்! ஒரு பிராமணப் பெண்  உடன்  கட்டையேறத் தேவயில்லை!  அவள் தலைமயிரை வழித்துக் கொண்டால், அது 
உடன் கட்டையேறியதற்குச்  சமனாகும்!

தமிழரின் சில நல்ல வழக்கங்களை நாம் பாராட்டவே  வேண்டும்!
பிராமணர்கள்  தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கத்தை  ஏற்படுத்தினார்கள்! எனது தந்தையாரின் தந்தையார் அவர் சின்னக் குழந்தையாய்  இருக்கும் போதே இறந்து விட்டார்! அவரின் தாயாருக்கு...மறுமணம்  அந்தக் காலத்திலேயே  செய்து  வைக்கப் பட்டது! அதுவும் சமூகப் பெரியவர்களால்  முன்னின்று நடத்தி  வைக்கப் பட்டது!

இதை நான் இங்கே எழுதுவதன் நோக்கமானது, இப்போதய சமூக வழக்கங்களை வைத்து..எமது கலாச்சாரத்தை,நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்! அவை  எம்மீது திணிக்கப் பட்டு. இப்போது எமது கலாச்சாரம் என அடையாளப் படுத்தப் படுகின்றன!

இதே போலத் தான் எமது மதமான சைவமானது இப்போது இந்து மதமாகத் திணிக்கப் படுகின்றது!

இணுவிலில் அனுமாருக்குக் கோயில் என்ற போது என்னால் முதலில் நம்ப முடியவில்லை!

அனுமாரை...எப்பவாவது கடவுளாகக் கும்பிட்டநினைவு எனக்கு இல்லை! வெறும் இராம தூதுவனாகத் தான் எனக்குத் தெரியும்..!

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கனடாவில் பிள்ளைகள் பிறக்க பிறக்க கடைசிபெயரை அப்பன் பெயராக வைக்கிறார்கள்.
மகனின் பிள்ளைகளுக்கும் எனதுபெயரையே கடைசிபெயராக வைத்துள்ளார்கள்.
கனடாவில் மாற்றிமாற்றி வைக்கிறார்கள் நீயும் அப்படி வைக்கலாம் என்றேன்.
சம்மதிக்கவில்லை.

குடும்பப்பெயரை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாற்றினால் நாம் தமிழ் மரபில் இடமிருந்து வலமாக எழுதுவதை வலமிருந்து இடமாக மட்டும் மாற்றுகின்றோம். நிலைத்த குடும்பப்பெயர் இருக்காது.

உங்கள் மகன் உங்கள் பெயரை குடும்பப்பெயராகப் பாவித்து ஒரு clan ஐ உருவாக்குகின்றார். சில தலைமுறைகளின் பின்னர் அதே பொதுவான குடும்பப்பெயரில் இருக்கும் உறவுமுறையில்லாத பலரும் கிளைக்குடும்பமாகவும் கருதலாம்!

7 hours ago, ஈழப்பிரியன் said:

எனது பெயரும் பெரிய பெயர்.
இதுவே பல இடங்களில் எப்படி கூப்பிடுவதென்று தெரியாமல் பைலை தள்ளி வைத்திருப்பார்கள்.
என்னடா பின்னால வந்தவனெல்லாம் போறானே என்று போய் கேட்டா பெயரைக் கேட்டுவிட்டு இந்தப் பெரிய பெயரை கூப்பிடமுடியாமல் வைத்திருக்கிறேன் என்பார்கள்.
யாரை நோவது.

எனது பெயரை ஆங்கிலேயர்கள் உச்சரிப்பதற்குத் திணறுவார்கள். வங்கி அல்லது காப்புறுதி நிறுவனங்களில் இருந்து ஃபோன் வந்தால் அவர்கள் குடும்பப்பெயரைச் சொல்லித்தான் கதைக்கவேண்டும். எரிச்சலூட்டுபவர்களாக இருந்தால் முதற்பெயரில் அழைக்க விடுவதேயில்லை😁 

Link to comment
Share on other sites

குடும்பப் பெயரை வைத்து ஐபோப்பியர்கள் பல நூற்றாண்டு பின்னோக்கி தமது பரம்பரையைத் தேட முடியும். ஐரோப்பியர்களின் சரித்திரத்தைத் துல்லியமாக எழுத அவர்களின் குடும்பப் பெயர் உதவுகிறது. எனது நண்பன் ஒருவன் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு தேவாலையத்தின் உள் முகட்டில் உள்ள ஓவியத்தைக் காட்டி, அது தனது முப்பாட்டன் வரைந்தது என்று கூறினான்.

  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, புங்கையூரன் said:

இலங்கையை விட்டு வெளிக்கிட்ட நாள் முதலாய்.....எனது முதல் பெயர் அப்பாவின் பெயர் தான்...!
அப்பாவின் பெயர் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே அவர் ஆசைப்பட்டிருப்பார்? அவர் பெயரையே என் பெயர் ஆக்கி விட்டதால்....எனக்குக் குற்ற உணர்வு எள்ளளவும் வரவேயில்லை!
இப்போது ஒரு குடும்பப்  பெயர் உண்டு..! அதனால் பிரச்சனைகள் இல்லை!

ஆனால் உண்மையான பிரச்சனை....நீளமான எங்களது பெயர்கள் தான்!

உதாரணத்துக்கு.....கைலாயபதிவாசன் அல்லது சிவஞானசுந்தரம்..!
பாவம்...வெள்ளைக்காரன் என்ன பாடு படுவான்..!

உங்கள் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டது!

த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன!

பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர், சாதீயம் தென்னிந்தியாவில் புகுத்தப் பட்ட பின்னர் தான் இந்தக் குடும்பப் பெயர்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்! ஆதித் தமிழர்கள் குடும்பப் பெயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்! தாழிகளில் புதைப்பதும்,நடுகல் நடுவதும் அவர்களது வழக்கமாக இருந்திருக்க வேண்டும்!


பிராமணர்கள் தான்...எரிப்பது, உடன் கட்டையேறுவது போன்ற முறைகளை அறிமுகப் படுத்தினார்கள்!

இதன் முக்கிய நோக்கம் தமிழர்களின் வரலாற்றுத் தடையங்களை  இல்லாமல் செய்வதேயாகும்..! தங்களுக்கு ஏற்றவாறு விதிகளை  மாற்றினார்கள்! ஒரு பிராமணப் பெண்  உடன்  கட்டையேறத் தேவயில்லை!  அவள் தலைமயிரை வழித்துக் கொண்டால், அது 
உடன் கட்டையேறியதற்குச்  சமனாகும்!

தமிழரின் சில நல்ல வழக்கங்களை நாம் பாராட்டவே  வேண்டும்!
பிராமணர்கள்  தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கத்தை  ஏற்படுத்தினார்கள்! எனது தந்தையாரின் தந்தையார் அவர் சின்னக் குழந்தையாய்  இருக்கும் போதே இறந்து விட்டார்! அவரின் தாயாருக்கு...மறுமணம்  அந்தக் காலத்திலேயே  செய்து  வைக்கப் பட்டது! அதுவும் சமூகப் பெரியவர்களால்  முன்னின்று நடத்தி  வைக்கப் பட்டது!

இதை நான் இங்கே எழுதுவதன் நோக்கமானது, இப்போதய சமூக வழக்கங்களை வைத்து..எமது கலாச்சாரத்தை,நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்! அவை  எம்மீது திணிக்கப் பட்டு. இப்போது எமது கலாச்சாரம் என அடையாளப் படுத்தப் படுகின்றன!

இதே போலத் தான் எமது மதமான சைவமானது இப்போது இந்து மதமாகத் திணிக்கப் படுகின்றது!

இணுவிலில் அனுமாருக்குக் கோயில் என்ற போது என்னால் முதலில் நம்ப முடியவில்லை!

அனுமாரை...எப்பவாவது கடவுளாகக் கும்பிட்டநினைவு எனக்கு இல்லை! வெறும் இராம தூதுவனாகத் தான் எனக்குத் தெரியும்..!

நிச்சயமாக தமிழர்களின் நல்ல வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வேறு கலாச்சாரங்க்ககளைத் தழுவி எமது இனம் வளர்ச்சி அடைவதிலும் தவறில்லை. ஏனென்றால் மாற்றங்களினூடாகவே எதையும் தக்கவைக்க முடியும்.

ஆனால் எம்மவர்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையை இறுகப் பற்றுவதும் பயனற்ற வேற்றுப் பழக்கவழக்கங்களை எமது கலாச்சாரத்தில் புகுத்துவதும் ஆரோக்கியமானது அல்ல. இன்று நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் கிடைக்காமல் போவதற்கான காரணங்களின் வேரைத் தேடிப் போனால் அது எமது சமூகக் கட்டமைப்பிலேயே முடியும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நாங்களும் கட்டாயம் குடும்பப் பெயர் ஒன்றைப் பின்பற்றி வந்திருந்தோமாலால் எம் மூதாதையர் பற்றிய தெளிவும் எமக்கு இருந்திருக்கும். எப்படி நாம் எம் வரலாறுகளை எழுதிய மறந்தோமோ அதுபோலவே குடும்பப் பெயர் இல்லாது பரம்பரையை அறிய முடியாதவர்கள் ஆகிவிட்டோம். என் மகள் இதைப் பெரும் குறையாகக் கூறுவாள். நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன்.

ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மவர்கள் மற்றவர்களுக்காகவே எதையும் மாற்றிப் பழக்கிவிட்டனர். இது எம்மவரிடையே உள்ள ஒருவித தாளவுச் சிக்கல் என்றே நான் எண்ணுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழர்கள் நாங்களும் கட்டாயம் குடும்பப் பெயர் ஒன்றைப் பின்பற்றி வந்திருந்தோமாலால் எம் மூதாதையர் பற்றிய தெளிவும் எமக்கு இருந்திருக்கும். எப்படி நாம் எம் வரலாறுகளை எழுதிய மறந்தோமோ அதுபோலவே குடும்பப் பெயர் இல்லாது பரம்பரையை அறிய முடியாதவர்கள் ஆகிவிட்டோம். என் மகள் இதைப் பெரும் குறையாகக் கூறுவாள். நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன்.

ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மவர்கள் மற்றவர்களுக்காகவே எதையும் மாற்றிப் பழக்கிவிட்டனர். இது எம்மவரிடையே உள்ள ஒருவித தாளவுச் சிக்கல் என்றே நான் எண்ணுகிறேன்.

சுமே, ஒருவரது மொழி என்பது அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றது. வெப்ப வலையத்தில் வாழும் எமது மொழியின் முதல் எழுத்தே ‘அ’ வில் தொடங்குகின்ரது. குளிர் காலனிலையில் வாழும் வெள்ளையன் பெரிதாக வாயைத் திறந்து மொழியைப் பேச முடியாது. அதிக வெப்பத்தை அவன் இழக்க வேண்டியிருக்கும். வாயிலுள்ள சுருட்டை வெளியே எடுக்காமலே வின்ஸ்டன் சேர் சிலால் ஒரு பிரசங்கமே நடத்த முடியும். நமது மொழியில் அது கடினமானது. ஒரு கிளி பேசப் பழகுவது போலத் தான், எமது பெயர்களை அவர்கல் பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள்...!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தேவையான பதிவு கிருபன். இதே பிரச்சினையும் அனுபவமும் எனக்கும் நிறைய உண்டு. பின்பு எழுதுகின்றேன்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சுமே, ஒருவரது மொழி என்பது அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றது. வெப்ப வலையத்தில் வாழும் எமது மொழியின் முதல் எழுத்தே ‘அ’ வில் தொடங்குகின்ரது. குளிர் காலனிலையில் வாழும் வெள்ளையன் பெரிதாக வாயைத் திறந்து மொழியைப் பேச முடியாது. அதிக வெப்பத்தை அவன் இழக்க வேண்டியிருக்கும். வாயிலுள்ள சுருட்டை வெளியே எடுக்காமலே வின்ஸ்டன் சேர் சிலால் ஒரு பிரசங்கமே நடத்த முடியும். நமது மொழியில் அது கடினமானது. ஒரு கிளி பேசப் பழகுவது போலத் தான், எமது பெயர்களை அவர்கல் பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள்...!

👍🏽👍🏽👍🏽

வாவ்..!!!! ஒரு வித்தியாசமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 01:08, வல்வை சகாறா said:

உண்மையிலேயே இந்த நிலை வெளியிடங்களுக்கு செல்லும்போது சிக்கலானதாக உள்ளது நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்று பயண இடங்களில் நிரூபிக்க மேலதிக ஆவணங்களை கைவசம் வைத்திருக்கவேண்டியுள்ளது.

எங்கள் தலைமுறையினர்தான் குழப்பங்களுடன் சமாளிக்கின்றார்கள். அடுத்த தலைமுறையினர் ஒரு பொதுவான பொறிமுறையை பின்பற்றுவார்கள் என்று பார்த்தால் அவர்களும் அப்படியே தொடர்கின்றார்கள். எனினும் குடும்பப்பெயர் தமிழ்ப்பெயராக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 01:48, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு வந்த நாள் தொடக்கம் இண்டு வரைக்கும் உந்த பெயர் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனை. டாக்குத்தர் இல்லாட்டி ஓபிஸ்களிலை என்ரை பெயரை கு...கு..கு..மா..மா..மார எண்டு உச்சரிக்க தொடங்கவே ஓம் நான் தான் எண்டு கையை தூக்கிக்காட்டி முன்னுக்கே எழும்பி ஓடிடுவன். உந்த சோலிக்காகத்தான் வெளிநாட்ட்டிலை வாழுற சீனக்காரர்கள் கூடுதலாய் தங்கடை பெயரோடை சட்டபூர்வமாய் ஒரு இங்கிலிஷ் பெயரையும் சேர்த்து வைச்சிருப்பினம். உதாரணத்துக்கு மைக்கல் சின் யொன் சுங். இதிலை மைக்கல் கூப்பிடு பெயர்.

சீனாக்காரர், கொரியன் எல்லாம் பல்நாட்டுக் கம்பனிகளில் சேரும்போது ஆங்கிலப் பெயர்களை முதற்பெயர்களாகப் பாவிக்கின்றார்கள். ஆனால் ஜப்பான்காரர் அப்படி செய்வதில்லை. அவர்களுடன் உரையாடும்போதும் அல்லது அவர்களுக்கு இமெயில் அனுப்பும்போது ஜப்பான் பண்பாட்டின்படி அவர்களின் குடும்பப்பெயர் (கடைசிப்பெயர்) உடன் ‘சான்’ என்று சேர்த்துச் சொல்லவேண்டும். san ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.

என்னுடைய குடும்பப்பெயரின் வல்லினம், இடையினமும் அதிக மெல்லினமும் இருப்பதால் ஐரோப்பியர் கூடியவரை உச்சரிப்பதைத் தவிர்ப்பார்கள்😁 ஒருமுறை ஹெல்சிங்கி எயார்போர்ட்டில் பிளைட்டுக்குக் காத்திருக்கும்போது வழமைபோன்று இரண்டு சிறிய சிவப்பு வைன்போத்தல்களை அவுக் அவுக்கென்று குடித்து சாப்பிட்டுவிட்டு சற்றுக் கண்ணயர்ந்துவிட்டேன்😌

நான் கிணத்துக்குள் விழுந்துகொண்டிருந்தபோது என்னுடைய பெயர்மாதிரி ஒன்றை கீழே வெகு ஆழத்தில் தண்ணிக்குள் இருந்து கெதியாக வா என்ற தொனியில் ஒரு பெண்குரல் தொடர்ந்து கூப்பிட்டமாதிரி இருந்தது. கண்ணைத் திறந்தால் என்னுடைய பிளைட் “லாஸ்ற் கோல்” என்று காட்டிக்கொண்டிருந்தது. வேர்க்க விறுவெறுக்க ஓடி ஒரு மாதிரி இமிக்கிரேஷனையும் தாண்டி பிளைட்டைப் பிடிச்சன்!😬 

 

 

Link to comment
Share on other sites

இது போன்ற பெயர்க்குழப்பங்கள் எனக்கும் வந்ததுண்டு. இலங்கை கடவுச் சீட்டின் படி இங்க பல ஆவணங்களில என் பெயர் குடும்பப் பெயரா இருந்து, அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைக்க இப்படி பல குழப்பங்களுக்குப் பிறகு இந்நாட்டு கடவுச்சீட்டு எடுக்கும்போது இக்குழப்பத்தைச் சரிசெய்து கொண்டேன். அதன்படி ஏனைய ஆவணங்கள் பலவற்றையும் சரிசெய்து நேரவிரயமாகியது. ஆனாலும் பெயர்க்குழப்பத்தால வாற சிக்கல்கள் இப்ப இல்லை.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய சமூகத்தில் பிள்ளைகள் வளர்வதால் அந்த முறைப்படி பெயர் இருப்பதே குழப்பம் இல்லாமல் இருக்க வழி.

90 களில் தமிழ் ஒலி வானொலியில் இது பற்றி நேரடி விவாதம் ஒன்று நடந்தது. நான் இதை சொன்ன போது நடாத்துநர் தனது பிள்ளைகளுக்கு தனது தகப்பனாரின் பெயர் வருவதை அசிங்கமாக தான் பார்த்ததால் தனது பிள்ளைகளுக்கு தனது பெயரை முதற் பெயராக வைத்ததாக சொன்னார். 

எனக்கு வந்த கோபத்தில் ஆமாம் நீங்கள் ஊரில் இருந்து வரும் போதே பிளான் பண்ணி வந்தீர்கள் நான் அகதியாக ஓடி வந்தவன் என்றேன். பேச்சு மூச்சு இல்லை.

நல்லதொரு கருத்து

இதை கதையாக்க எல்லோராலும் முடியாது. வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 07:35, புங்கையூரன் said:

த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன!

குடும்பப்பெயர்கள் சந்ததிகளின் அடியைக் குறிக்க இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் பாட்டன்/பாட்டி பெயர்களை பிள்ளைகளுக்கு வைத்து சுழற்சி செய்துகொண்டிருந்தார்கள். 

போடியார் என்றால் மேச்சல்தரைகள், விவசாய நிலங்கள் என்று பெரும் காணிகளுக்குச் சொந்தக்காரர் என்று நினைத்தேன். அது குடும்பப்பெயராகப் பாவிக்கப்பட்டதா?🤔

 

On 19/2/2021 at 09:46, இணையவன் said:

எனது நண்பன் ஒருவன் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு தேவாலையத்தின் உள் முகட்டில் உள்ள ஓவியத்தைக் காட்டி, அது தனது முப்பாட்டன் வரைந்தது என்று கூறினான்.

உண்மைதான். பரம்பரையினரை கண்டுபிடிக்க குடும்பப்பெயர்கள் உதவும். எனினும் ஐரோப்பியர்களும் இடையிடையே குடும்பப்பெயர்களையும் மாற்றுவார்கள்.

On 19/2/2021 at 10:45, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன்.

அப்ப உங்கள் பெயர் எங்கே போயிட்டுது?🤭

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2021 at 10:45, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களின் பெயர்கள் போல இல்லாமல் நீங்கள் மேற்கு நாட்டவர்களின் நாக்கு சுழல்வதற்கு ஏற்ப முதலே பெயரை வைத்துவிட்டீர்கள்! 😬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே ஒரு மனிதரின் பெயரை வைத்து அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என கண்டு பிடித்து விடலாம்..ஆனால்  இனிவரும் காலங்களில் தமிழ்ச் சமுதாயத்தின் பெயர்களை வைத்து பூர்வீகத்தை கண்டு பிடிக்கவே முடியாது. 

தோல் நிறமும் தலைமயிர் நிறமும்....... சாட்சியாக வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன!

என்னுடன் மட்டக்களப்பு நண்பரொருவர் கல்லூரிக் காலத்தில், ஒன்றாகப் படித்தார்...!

அவரது பெயர் போடியார் என்று குறிப்பிட்டார்! தனது குடும்பத்தில் அனைவரும் போடியார் என்று தான் அழைக்கப் படுவதாகக் கூறினார்! வன்னிப் பகுதிகளில் நாச்சியார் என்று அழைக்கப் படுவது போல...வன்னி மன்னர்களின் ஆதிக்கம், கிழக்கில் விரிந்த போது இந்தப் பெயர்கள் அங்கு வழக்கத்துக்கு வந்திருக்கவும் கூடும்..!

இந்தியாவில்  எல்லா தலைப்பாகைகளின் குடும்பப் பெயர் சிங் என்பது போலவும் இருக்கலாம்!

பஞ்சாப் மாகாணத்தின் 'ஆதாமாக" மிஸ்டர் சிங்  இருந்திருப்பாரோ?😜

  • Thanks 1
Link to comment
Share on other sites

பெயர் பிரச்சினை பெரிய தொடர். ஏன் எங்களுக்கு குடும்ப பெயர் இல்லாமல் போனது என்பது பலமுறை யோசித்திருக்கிறேன். 

எங்கள் பெயர்களை வெளிநாட்டவர்கள் உச்சரிக்க பெரும் சிரமப்படுவார்கள். 

அவர்கள் சிரமம் என்றால் அதற்கு நான் அவர்களுக்கு சொல்வேன் உங்கள் மொழியும் எனக்கு சிரமமாகத் தான் இருந்தது. அதை சிரமப்பட்டுத்  தான் நானும் கற்றுக் கொண்டேன்.

எனது அப்பாவின் பெயர் ஆனந்தசடாட்சரம்.  அதை யேர்மனியில் இழுத்து நீட்டி அலுவலகங்களில் கூப்பிடுவார்கள். அதற்கு ஒவ்வொரு இடத்திலும் மன்னிப்பு கேட்பார்கள். சிலர் தலையைப்பிடித்து ஒருதரம் சொல்வாயா உன் பெயரை என்று கேட்டால் நமது தன்மானத்தை சீண்டுவது போலிருக்கும். அப்படி கோட்போரிடம் அவர்கள் பெயரைக் கேட்பேன். அவர்கள் பெயரை சரியாக உச்சரிக்க முடியும் ஆனால் நான் இழுத்து நீட்டி முறிப்பேன். 

தங்கள் பெயரை அப்படி தவறாக உச்சரிக்க விடாமல் திருந்துவார்கள். அவர்களுக்கு நான் சொல்வது "இதுபோல் என் பெயரையும் உச்சரியுங்கள்"

தொடர்ந்து பழக்கப்பட்ட இடங்களில் ஆனந்தா என்று அடிவாங்காமல் சுருக்கி கூப்பிடுவார்கள். 

Edited by shanthy
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பலருக்கு உள்ள பிரச்சனை, கண்டி சிங்களவர்கள் தங்கள் பெயரை பரம்பரையுடன் இணைத்துதான் பதிவார்கள், எங்களுக்கு சொந்த இடமே இல்லாமல் போய்விட்டது இனி பெயரை வைத்து என்ன செய்ய,

இந்த பரம்பரை பெயரும் ஒரு சாதி முறையைதான் இந்தியா & சிங்களவர்களில் உருவாக்கியுள்ளது 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்னுமொரு பெயர் இருக்கு ஆனால் சொல்ல மாட்டன். இது பெரிய பிரச்சினை தான். ஆனால் தமிழர் மட்டும் வித்தியாசமாக இருந்திட்டு போகட்டுமன்

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.