Jump to content

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கே கையேந்துவது?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கடந்த பத்தாண்டுகளாக, ஈழத்தமிழ் அரசியலின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெனீவா இருந்துவருகின்றது. ஒருபுறம் இலங்கையில் இருந்து பிரமுகர்கள் அங்கு காவடியெடுக்க, ‘புலம்பெயர் புத்திமான்கள்’ நடைபவனி, பேரணி, ஈருளிப் பயணம் என ஐரோப்பியத் தலைநகரங்களில் இருந்து, ஜெனீவாவை நிறைத்தார்கள். 

ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு நன்மை விளையாது என, 2010ஆம் ஆண்டுமுதலே, சொல்லி வந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையைத் தங்கள் வழிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு களமாக, ஜெனீவா பயன்படுகிறது. அதற்கு தமிழர் பிரச்சினை ஒரு துரும்புச்சீட்டு மட்டுமே என்பதை, தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்களை, அரசியல் தெரியாதவர்கள், உலகறிவு அற்றவர்கள், தேசியத்தின் விரோதிகள் எனப் பலவாறு நிந்தித்தார்கள். 

கடந்த வாரம், “ஜெனீவாவில் தமிழர்களுக்கு நன்மை விளையாது” என்று, ஐ.நாவில் பணியாற்றியவர்களே சொல்லி விட்டார்கள். இவர்களின் மொழியில், ‘மணிகட்டின மாடு’ சொல்லிவிட்டது. இனி என்ன?   

உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழர் பேரவை, நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மனித  உரிமைகளுக்கும் சர்வதேச நீதிக்குமான நிலையம், சமாதானத்துக்கும் நீதிக்குமான இலங்கை செயற்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து ஒழுங்குசெய்த ‘இலங்கை: நீதி,சட்டம் ஒழுங்கு, ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்’ என்ற தலைப்பில் அமைந்த கருத்தாடல் நிகழ்வில், இலங்கை தொடர்பில் பணியாற்றிய உயர்நிலை ஐ.நா அதிகாரிகள், சில முக்கியமான செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். இச்செய்திகள் மிக முக்கியமானவை.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றியோரில் ஒருவர், ஐ.நாவின் முன்னாள் துணைச் செயலாளர் நாயகமாக இருந்த சார்ள்ஸ் பெற்றி. ஐ.நா செயலாளர் நாயகம், ஜூன் 2010ஆம் ஆண்டு இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்கான நிபுணர் குழுவை நியமித்தார். அக்குழு, தனது அறிக்கையை ஏப்ரல் 2011இல், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்தது. 

அவ்வறிக்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, ‘இலங்கை விடயத்தில் ஐ.நா தவறிழைத்தது’ என்பதாகும். நிபுணர் குழு, தனது அறிக்கையில், ‘மக்களைப் பாதுகாப்பதை, தனது பிரதான கடமையாகக் கொண்ட ஐ.நா, அந்தக் கடமையில் இருந்து தவறியது. இலங்கை விடயத்தில், அடிப்படை மனித உரிமைகளைக் காக்கத் தவறி, தவறிழைத்துவிட்டது’ என்று குறிப்பிட்டது. 

இதையடுத்து, இலங்கையில் ஐ.நா நடந்துகொண்ட விதம் தொடர்பில், உள்ளக மீளாய்வு ஒன்றைச் செய்வதற்கான குழுவை, ஐ.நா செயலாளர் நாயகம் உருவாக்கினார். அக்குழுவின் தலைவராக இருந்தவரே சார்ள்ஸ் பெற்றி. ஒன்பது மாதகாலப் பணியின் பின்னர், அவ்வறிக்கை,  2012 நவம்பர் மாதம், ஐ.நா செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 128 பக்கங்கள் நீள்கிற அறிக்கை, ‘பெற்றி அறிக்கை’ எனப் பொதுவாக அறியப்பட்டது.

ஐ.நாவின் அமைப்பு ரீதியான செயற்பாட்டடை விமர்சிக்கும் உள்ளக மீளாய்வு அறிக்கையாக இது இருந்தும், ஐ.நா சபையின் அறிக்கை என்ற அடிப்படையில், அதில் சொல்லப்பட்ட விடயங்களுக்குள்ள பெறுமதியை மறுக்க இயலாது. 
அவ்வறிக்கை, ‘இலங்கையில் ஓர் இனப் படுகொலை, அரங்கேறாது தடுப்பதற்கு வழிகள் இருந்தும், ஐ.நா அசமந்தப் போக்குடன் செயற்பட்டது’ எனக் கோடிட்டுக் காட்டுகிறது. 

அதேவேளை, போர் முடிந்த பின்னர், மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் துன்பப்படுகையில், ஐ.நா வாளாவிருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இன்றும் பொதுவெளியில், கிடைக்கின்ற  அறிக்கையில் சில பகுதிகள், கறுப்பு மையால் நீக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகள், ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனையும் அவரது பிரதான அலுவலர் விஜய் நம்பியாரையும் குற்றம் சாட்டுகின்றன.நடந்தேறிய மனிதப் படுகொலைக்கான இரத்தம் தோய்ந்த கரங்களுடையோராக இவ்விருவரையும் சுட்டுகின்றன. இதை, ஐ.நா பணியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். ஐ.நா பற்றிய மாயைகளைக் களைய, இன்றும் வாசிக்கப் பயனுள்ள அறிக்கையையே சார்ள்ஸ் பெற்றி தந்திருக்கிறார். 

கடந்த வாரம், சார்ள்ஸ் பெற்றி என்ன சொன்னார் என்கிற விடயத்துக்கு வருவோம். கலந்துரையாடலின் போது, தனது தொடக்கவுரையை அவர் பின்வருமாறு நிறைவு செய்தார். 

“உலகளாவிய ரீதியில், மனித உரிமை மீறல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுப்பதில் ஓர் அமைப்பாக, ஐக்கிய நாடுகள் சபை இன்று செயலிழந்துள்ளது. இதன் அர்த்தம், ஐ.நாவிடம் இதற்கான வழிமுறைகளோ கருவிகளோ இல்லை என்பதல்ல. மாறாக, அதற்கான தைரியமும் விருப்பமும் அதனிடம் இல்லை. அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி, ஐ.நாவின் சாசனத்தை நிறைவேற்றும் வகையில், ஐ.நா செயலாற்ற வேண்டும். இதை, ஐ.நா செய்யுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், உடனடியாகவும் குறுகிய கால நோக்கிலும் நீதியையும் தேவையையும் எதிர்பார்த்து இருப்போருக்கு, நான் சொல்வது ஒன்றுதான்; ஐ.நாவை நம்பி இராதீர்கள். ஐ.நா, தனது சாசனத்தின் படி நடந்துகொள்ளும் என்று எதிர்பாராமல் இருப்பது நல்லது. அது பலத்த ஏமாற்றங்களையும் தேவையற்ற துன்பங்களையும் தவிர்க்க உதவும்”. 

இச்சொற்கள், மிகவும் சாதாரணமான ஒருவர் உதிர்த்தவையல்ல. 20 ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நாவில் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள். ருவாண்டா, மியான்மார், ஆப்கானிஸ்தான், கொங்கோ என பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளில் எல்லாம், ஐ.நாவின் அலுவலராகப் பணியாற்றிய ஒருவரின் வார்த்தைகள் ஆகும். 

சார்ள்ஸ் பெற்றியைத் தொடர்ந்து கருத்துரைத்த, ஐ.நாவின் இலங்கைக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிறீப்,  “பெற்றியின் கருத்துகளையே, நான் எதிரொலிக்கிறேன்” எனச் சொன்னார். தனது உரையின் நிறைவில் இரண்டு விடயங்களை அவர் அடிக்கோடிட்டார். 

“இலங்கையின் எதிர்காலம், இலங்கையர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இலங்கை மக்களே, தங்களுக்கான உரிமைகளை வெல்வதற்கும் தக்கவைப்பதற்கும் பங்களிக்க வேண்டும். அதேவேளை, மனித உரிமைகள் என்பதை, வெறுமனே ஒரு சமூகத்தின் நலன்களுக்கு மட்டுமே உரியதாகச் சுருக்கிவிடாதீர்கள். அது தவறானது. அனைத்துச் சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் கருத்தாக, மனித உரிமைகளை மாற்றுங்கள். இது அனைத்து இலங்கையருக்கும் ஆனது என்பதை, நினைவில் கொள்ளுங்கள்”.      

இருவரது கருத்துகளும் மிக முக்கியமானவை. கடந்த ஒரு தசாப்த காலமாகக் கிளுகிளுப்பான, பரபரப்பான, உணர்ச்சிவசமான களமாக ஜெனீவா, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்களிடையே இருந்துவந்துள்ளது. 

இந்தக்களம் குறித்த நேர்மையானதும் வெளிப்படையானதுமான கருத்துகளை ஏற்க, எம்மில் பலர் தயார் இல்லை. ஏனெனில், போரின் நிறைவு முதல், ‘தமிழ் மக்களுக்கான தீர்வு, ஜெனீவாவிலிருந்தே கிடைக்கும்’ என்றுதான் பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். 

கடந்த பத்தாண்டு கால, ஈழத்தமிழ் அரசியல் போக்கைத் திரும்பிப் பார்த்தால், சில விடயங்களைப் புரிந்து கொள்ளவியலும். 

முதலில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம், தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்றும் இனி, தமிழ் மக்களின் உரிமைகளை, ஐ.நா உறுதிப்படுத்தும் என்றும் சொல்லப்பட்டது. 

இந்தியா எவ்வாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து, வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அவ்வாறே வடமாகாண சபையின் ஊடாகத் தமிழ் மக்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும் என்று சிலரும், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தை அகற்றிய அமெரிக்கா, இன்னோர் அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம், தமிழருக்கான தீர்வு சாத்தியமாகும் என்று, வேறு சிலரும் சொன்னார்கள். 

வடமாகாண சபையையும் கண்டோம்; மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் அகற்றப்பட்டு, நல்லாட்சி அரசாங்கத்தையும் கண்டோம். இன்று, தொடங்கிய இடத்தில் மீண்டும் வந்து நிற்கிறோம். தமிழ் மக்கள், தங்கள் மீதில்லாமல், பிற அனைத்தின் மீதும் நம்பிக்கை வைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது

இனியாவது நாம், அந்நியக் கனவுகளில் இருந்து அகல வேண்டும். எமக்கான போராட்ட வெளிகளை, நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் போராட்டத்தின் மையமாக்க வேண்டும். குறுகிய கட்சி அரசியலையும் வாக்கு அரசியலையும் விடுத்து, ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். 

ஜெனீவாவை வைத்து அரசியல் செய்பவர்களது உடனடிப் பிரச்சினை, ஜெனீவாவில் என்ன நடக்கும் என்பதல்ல; மாறாக, ஜெனீவாவுக்குப் பிறகு, எங்கு கையேந்துவது என்பதுதான்.

கலந்துரையாடலின் நிறைவுக் கருத்தாக, சார்ள்ஸ் பெற்றி உதிர்த்த சொற்கள் மனங்கொள்ளத்தக்கவை: 

“இலங்கை மக்களுக்கான எனது அறிவுரை யாதெனில், ஐ.நாவை நம்பி இராதீர்கள்; நீங்கள் ஏமாந்துபோகக் கூடும். உங்கள் எதிர்ப்பாற்றலில் நம்பிக்கை வையுங்கள். ஐ.நாவை மையப்படுத்தி, உங்கள் மூலோபாயங்களை வகுக்காதீர்கள்” என்பதாக அமைந்துள்ளது.  

தமிழ் மக்களின் உரிமைக்கும் நீதிக்குமான நெடிய போராட்டத்தின் முக்கியமான ஒரு புள்ளியில் நிற்கிறோம். எம்முன்னே, இரண்டு தெரிவுகள் உள்ளன. தமிழ் மக்களுக்கு, அன்று முதல் இன்று வரை மறுக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும், சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கும் மறுக்கப்படுபவற்றையும் பரந்த நோக்கில் கண்டு, இன்றைய சூழலில் அனைத்து மக்களையும் அணிதிரட்டிப் போராடுவதற்கேற்ற அரசியல் கொள்கையுடனும் வேலைத்திட்டத்துடனும் மக்களை  அணிதிரட்டப் போகிறோமா? அல்லது, இன்னொரு சக்தியை ‘ஆபத்பாண்டவர்’ என்று நம்பிக் கையேந்தப் போகிறோமா?

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவாவுக்குப்-பிறகு-எங்கே-கையேந்துவது/91-266329

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   குளங்களைத் தொலைக்கும் தலைமுறை
   -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ  
   தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும்.   
   கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.  
   போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு, எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற வினாவை, நாம் ஒவ்வொருவரும் நம்முள் எழுப்பியாக வேண்டும்.   
   பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் ஒரு தொடக்கம். இலங்கையின் வடபகுதியில் நிலத்தடி நீர்ப்பற்றாக்குறை அடிப்படைப் பிரச்சினையாக மாறிவிட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டம் மக்களை விழிப்படைய வைப்பதற்கான நல்லதொரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.   
   வவுனியாக் குளத்தில் மண்போட்டு நிரவப்பட்டு, பொழுது போக்குப் பூங்காவாக அமைப்பதற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை நீர்பாசனத் திணைக்களத்துடன் இணைந்து, வவுனியா நகர சபையின் அனுமதியுடன், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் இரண்டு ஏக்கர், நிலம் அபகரிக்கப்பட்டு வேறு கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் அதனை அரச அதிகாரிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் கண்டும் காணாமல் இருந்துவருவதும், மௌனம் காப்பதும் கவலையளிப்பதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள்.  
   இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வவுனியா நகரசபை. குளத்தின் நீரைக்கொண்டு மேற்கொள்ளப்படும் விவசாயம் குறித்தோ, அருகிவரும் வவுனியாவின் நிலத்தடி நீர்மட்டம் குறித்தோ, சுற்றுச்சூழல் பேரழிவு குறித்தோ எதுவித அக்கறையும் இன்றியே இவை நடந்தேறுகின்றன.  
   கடந்த ஓராண்டாக இச்செயற்பாடுகளுக்கு எதிராக, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டும் துண்டுப்பிரசுரப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.   
   வவுனியாக்குளத்தை காப்பாற்றுமாறு கோருகின்ற குரல்கள் புதிதல்ல. இற்றைக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர், ‘வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சினை: அன்பான வவுனியா வாழ் பொது மக்களே உங்களின் கவனத்துக்கு....’ என்ற தலைப்பிட்டு, துண்டுப் பிரசுர இயக்கம் நடத்தப்பட்டது. அத்துண்டுப்பிரசுரம் மூன்று அடிப்படையான விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தது.   
   நாம் எதிர்நோக்கும் வரட்சி, திடீரென்று நம் மத்தியில் வந்து புகுந்து விடவில்லை. வரட்சிக்கான மிக முக்கியமான காரணங்களாக காடுகளை அழித்து இயற்கையை நாசமாக்குவதும், நிலத்தடி நீரைப் பேணக்கூடிய பகுதிகளைப் பார்த்து அமைக்கப்பட்ட குளங்களின் கரையோர நிலங்களை ஆக்கிரமித்து, குளத்துக்கு மழை காலங்களில் நீர் வடிந்து ஓடும் இடங்களை வழிமறித்து, சொகுசான வீடுகள், கோவில்களை அமைத்துக் கொண்ட செயற்பாடுகளே காரணமாகும்.   
   வன்னியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களிலேயே தரைத்தோற்ற அமைப்பில் உயரமானது வவுனியாவாகும். இதை உணர்ந்தே, நமது முன்னோர் மிகுந்த தூரநோக்கத்தோடு குளங்களைக் கட்டி, அவற்றைத் தமது வாழ்வின் ஓர் அங்கமாகப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர்.   
   அப்படிப்பட்ட குளங்களை அழிப்பதால், எமக்கென்ன என்று அனேகமானோர் விட்டுவிட்டு இருந்தபடியால் தற்போது எதிர் நோக்கியிருக்கும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் அனைவரையும் பாதித்திருக்கிறது.   
   வவுனியாக் குளத்தின் சீரழிவால், சிறுபோக விவசாயம் பாதிக்கப்பட்டது. அதில் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள்; கால்நடைகளுக்கான நீர் இன்றி அவை தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிவதைக் காணமுடிகிறது. வவுனியாக்குளத்தில் மீன்பிடியை ஒரு வாழ்வதார தொழிலாகக் கொண்டிருந்த 20க்கு மேற்பட்ட குடும்பங்களின் வயிற்றில் நேரடியாக அடி விழுந்துள்ளது.   
   இன்று 10 ஆண்டுகளின் பின்னரும் அதேபோராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளோம் என்றால், பிரச்சினை எங்கே இருக்கின்றது என்பது, ஆராயப்பட வேண்டும். சமதரையான நிலவியல் அமைப்பைக் கொண்ட பிரதேசம் என்றவகையில், அடிக்கடி வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பிரதேசமாக வவுனியா இருந்துவருகிறது. அந்தவகையில், பிரதான நீரேந்து பகுதியாகக் குளங்களே இருந்து வருகின்றன.   
   வவுனியாவையும் அதைச் சுற்றியும் உள்ள பல ஊர்களின் பெயர்கள், குளத்தின் பெயருடன் முடிவடைகின்றன. ஆனால், இன்று அப்பெயர்களைக் கொண்ட பல ஊர்களில் குளங்கள் இல்லை.   
   குளங்கள் பற்றிப் பேசுவதென்றால், அனுபம் மிஸ்ராவை விட்டுவிட்டு எம்மால் பேசமுடியாது. இந்தியாவெங்கும் பயணம் செய்து, குளங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், அறிவியல் செய்திகள், குளம் கட்டும் முறை, குளங்களை மீட்கும் பொறிமுறை ஆகியவற்றை ஆவணப்படுத்தியதோடு செயலிலும் காட்டியவர் அனுபம் மிஸ்ரா. எட்டு ஆண்டுகால களப்பணியின் பின்னர், 1993ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘குளங்கள் இன்னும் தேவையானவையே’ (The Ponds are Still Relevant) என்ற புத்தகம் மிகவும் முக்கியமானது. 80 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய புத்தகம் இன்றும் இந்தியக் கிராமப்புறங்களில் குளங்களை அமைக்கவும் புதுப்பிக்கவும் வழிகாட்டும் நூலாக உள்ளது. தனது முழு வாழ்க்கையையும் குளங்களுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் அர்ப்பணித்தவர் அனுபம் மிஸ்ரா.   
   குளங்கள் பற்றிய பல கதைகள் இந்த நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. 34 வகையான குளங்களை அடையாளம் காட்டும் மிஸ்ரா, குளங்களை உருவாக்கும் பெருங்கலைஞர்கள் காலப்போக்கில் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற துயர வரலாற்றையும் விளக்குகிறார்.   
   கொலனியாதிக்கத்தின் வருகை, பண்டைய நீர்நிலைகளுக்கும் நீர்சேமிப்பு முறைகளுக்கும் ஏற்படுத்திய சேதத்தையும் குறிப்பிடுகிறார். இன்று நீர் பண்டமாக்கப்பட்டுள்ள நிலையில் குளங்கள் முன்னெப்போதையையும் விட முக்கியமானவை என்பதை நாம் உணர வேண்டும்.   
   நீர் தொடர்பான நான்கு முக்கிய தரவுகள் எம் சிந்தனைக்கு உகந்தன.  
   1. உலகச் சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்குக் குடிப்பதற்கேற்ற நீர் கிடைப்பதில்லை.   
   2. ஆண்டுதோறும் நான்கு மில்லியன் மக்கள் நீர் தொடர்பான நோய்களால் மரணிக்கிறார்கள்.   
   3. நீர் தொடர்பான மரணங்களில் 98% விருத்தியடையும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.   
   4. உலகின் மொத்த நீர்வளத்தில் ஒருசதவீதம் மட்டுமே மனிதப் பாவனைக்கு உகந்த நன்னீராகும். இதனால் தான் ‘21ஆம் நூற்றாண்டின் யுத்தம் தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்க முடியும்’ என்ற உலகவங்கியின் கூற்று, அச்சம் தருவதாய் உள்ளது. அதேவேளை தண்ணீர், இன்று உலகின் மிக முக்கியமான விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.  
   இன்று தண்ணீர் நுகர்பண்டமாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தண்ணீர் என்பது ஒவ்வொரு மனிதனதும் உரிமை என்ற நிலை மறுக்கப்பட்டு ஒரு விற்பனைப் பண்டமாகியுள்ளது. இது தண்ணீரின் தனியார்மயமாக்கலுக்குத் துணையாகிறது. தண்ணீர் நுகர்பண்டமானதால் அது சந்தைக்குரியதாகிறது. எனவே, அதை யாராவது சந்தையில் விநியோகிக்க வேண்டும். எனவே அரசுகள் தண்ணீரைத் தனியார்மயமாக்கி விற்பனைக்கு விட்டன. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் நீரைத் தனியார்மயமாக்குமாறு பல அரசுகளைக் கோருகின்றன.   
   உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள், விரைவில் முடியக்கூடிய வளமாக எண்ணெய் இருக்கின்றமை, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எதிர்பாராத காலநிலை மாற்றங்களாலான வரட்சி, வெள்ளப்பெருக்கு என்பவற்றின் பாதிப்புகள் போன்றன நீரின் அத்தியாவசியத்தை மீள உறுதிப்படுத்தியுள்ளன.  
   கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீரைக் குறிவைக்கும் செயற்றிட்டங்கள் அபிவிருத்தியின் பெயரால் இலங்கையின் வடக்குக்கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன. மூங்கில் பயிர்ச்செய்கை, கரும்புப் பயிர்ச்செய்கை என்பன இதில் பிரதானமானவை.  
   கழிவுகள் கலக்கும் இடமாகக் குளங்கள் மாறத் தொடங்கியுள்ளன. அபிவிருத்தியின் பேரால் குளங்களையும் ஆறுகளையும் நிலத்தடி நீரையும் இழந்துவிட்டு, எம்மால் செய்யக் கூடியது என்ன? குளங்களைத் தொலைத்த தலைமுறை என்பது எமக்குக் கனகச்சிதமாகப் பொருந்துகின்றது.   
   இப்போது எம்முன் உள்ள கேள்வி யாதெனில் இருக்கின்ற குளங்களைக் காப்பது எப்போது? இழந்த குளங்களை மீட்பது எப்போது? அனுபம் மிஸ்ரா தனது நூலுக்கான முன்னுரையை பின்வருமாறு நிறைவு செய்வார்.   
   ‘இங்குள்ள நூறு, ஆயிரம் குளங்கள்  
   வெற்றிடத்தில் உருவானவவையல்ல;   
   அவற்றின் பின்னே ஓர் இணைந்த சக்தி இருந்தது.   
   உற்சாகப்படுத்திய ஒருசிலரும்  
   குளங்களை வெட்டும் சில பத்துப்பேரும்  
   அந்தச் சிலரும் பலரும் காலப்போக்கில்   
   நூறாய் ஆயிரமாய் மாறினார்கள்.  ஆனால்,   
   கடந்த சில நூற்றாண்டுகளில் அதிகம் படித்ததாய்   
   சொல்லிக்கொண்ட அரைவேக்காடுகள்   
   சிலதை, பத்தை, நூறை ஆயிரத்தை  
   ஒரு பெரிய பூச்சியமாக மாற்றினார்கள்’. 
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குளங்களைத்-தொலைக்கும்-தலைமுறை/91-269357
    
  • By கிருபன்
   திருவிழா முடிந்தது: இனி என்ன செய்யலாம்?
   -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாமறிவோம். அது, நிச்சயமாகத் தமிழர்களோ அரசாங்கமோ அல்ல! 
   ஆசியாவின் மீதான ஆவலின் விளைவால், உதித்துள்ள பூகோளஅரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமே ஜெனீவாவில் அரங்கேறியது. வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டன என்பதைப் பார்ப்பதன் மூலம், அதை இலகுவில் புரிந்துவிட முடியும். 
   இலங்கை, இன்று பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையர்கள் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, பொருளாதாரச் சங்கிலியில் கீழ்நிலையில் உள்ளவர்கள், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்களப் பெருந்தேசியவாத அகங்காரத்துக்கு, இராணுவமயமாக்கல் புதிய அதிகாரத்தையும் வலுவையும் வழங்கியுள்ளது. இதற்கு, ‘ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தின் அவசியம்’ என்ற முகமூடி வெகுவாகப் பொருந்துகிறது. 
   இன்று, சிறுபான்மையினர் தொடர்ச்சியாகப் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையையே அரசாங்கம் தனது ‘சமூக மூலதனமாகக்’ கொள்கிறது. 
   ஜெனீவாவில் நடந்தவை ஆச்சரியம் தருபவையோ எதிர்பாராதவையோ அல்ல. ‘திருவிழா’ தொடங்கி முடியும் வரையான காலத்தில், ஒரு நகைச்சுவையான சாகசப் படத்தைப் பார்க்கும் மனோநிலையே காணப்பட்டது.  
   திருவிழாவுக்கு முன்பு, அதைப் பற்றிய கனவுக் கோட்டைகளைக் கட்டியெழுப்புவதில் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ஊடகங்களில் பலவும் போட்டியிடுவதும், பின்பு ஏமாற்றிவிட்டார்கள் என்று அழுது புலம்புவதும் நமக்குப் பழகிவிட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு திருவிழாவுக்கும் முன்பு சொன்னவற்றை ஒப்பிட்டால், எல்லாமோரு சுவடியின் பிரதிகளாகத் தெரியும்.  
   ஜெனீவா திருவிழா, என்னவோ தமிழரின் அவலம் பற்றியது மட்டுமே என்ற மயக்கம் நம்மிடையே அதிகமிருக்கையில், அடிக்கடி எழுகிற ஒரு வினா, ‘பொய்யென்று அறிந்தும் ஏன் அதே பொய்யை மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கிறோம்’?
   கசக்கும் உண்மையை விட இனிக்கும் பொய் நம்மைக் கவர்கிறது என்பது ஒரு காரணம்; உண்மைகளை விசாரித்தறியவும் விவாதிக்கவும் நமக்கு வாய்ப்புகள் குறைவு என்பது இன்னொரு காரணம். அத்துடன் பிற களங்களில் நிகழ்வன பற்றித் தேடியறிந்து, பிறரின் அனுபவங்களினின்று கற்கும் மரபு குறைவாகவுள்ளது. 
   சர்வதேச விசாரணை பற்றித் தமிழ் மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்பை, தமிழீழ விடுதலை, சமஷ்டி ஆகியன பற்றி இருந்த நம்பிக்கைகளுடன் ஒப்பிடலாம். முந்திய இரண்டிலும், தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தைச் சில தலைமைகளிடம் ஒப்படைத்து அவற்றையே நம்பியிருந்தனர்.  அவை ஏன் தவறின என்பது பற்றி, இங்கு மீண்டும் பேசத் தேவையில்லை. 
   சர்வதேச விசாரணையைப் பொறுத்தவரை, அது, ‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொட்டிய’ ஒரு வரம் மாதிரித் தெரிந்தது. நமக்குச் சாபங்களுக்கும் வரங்களுக்கும் வேறுபாடு தெரிவது குறைவு.
   ஐ.நா மனித உரிமைகள் பேரவை, போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேச்செடுத்த நாள் முதல், இங்கும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்நாட்டிலும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை விட்டால், போர்ப் பாதிப்புகளில் வேறெதனுடைய முக்கியத்துவமும் போய்விட்டதெனலாம்.
   காணாமலாக்கப்பட்டோர் பற்றியும் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் நில மீட்புப் பற்றியும் பாதிக்கப்பட்டோரின் எதிர்ப்புக் குரல்கள் எழும்வரை, எந்தத் தமிழ்த் தலைமையும் அவற்றை முன்வைத்துப் போராடவோ போராடுமாறு மக்களுக்கு வழிகாட்டவோ முன்வரவில்லை.
   சர்வதேச சமூகம், தமிழ் மக்களைப் பற்றி அக்கறை காட்டுகிறது என்ற மயக்கம் இல்லாதிருந்தால், தமிழ் மக்களிடையே சர்வதேச சமூகமும் ஐ.நா சபையும் இந்தியாவும் பற்றிய பொய் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்ப தமிழ்த் தலைமைகள் முயன்றிரா; பொய் நம்பிக்கைகளைக் காட்டி, வாக்குச் சேகரிப்பில் இறங்க வாய்ப்பு இருந்திராது. வருடாந்தம் ஜெனீவாவுக்குத் தலயாத்திரை போய், வெட்டி விழுத்தப்போவதாக நாடகமாட இடமிருந்திராது. நல்லவேளை, இந்தமுறை இந்த அபத்தக் கதைகளிலிருந்து கொவிட்-19 நோய் பரவுகை காப்பாற்றியது. 
   பேரினவாத அரசாங்கம் சர்வதேச விசாரணையை மட்டும் மறுக்கவில்லை. அது, எந்த நியாயமான விசாரணைகளையும் விரும்பவில்லை. அரச படைகளை மட்டுமே இலக்குவவைத்து விசாரணைகளை வேண்டுவதாக அது கூறுகிறது. அதன் மூலம், சிங்கள மக்களிடையே போர்க்குற்ற விசாரணைகளுக்கு எதிரான எண்ணத்தை வளர்த்துள்ளன. அவர்களுடைய உபாயங்களை முறியடிக்கும் மாற்று உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் வகுக்கவில்லை. 
   தமிழ்த் தேசியவாதம், உலக அரசியலையோ பிராந்திய அரசியலையோ விளங்கிச் செயற்படுவதாகச் சொல்ல இயலாது. கண்மூடித்தனமான மேற்குலக விசுவாசமும் இந்தியாவை அண்டிநிற்கும் போக்கும் தமிழ்மக்களின் நலன்கருதி விளைந்தன வல்ல. அதில் தமிழ்த் தேசியவாதத்தின், தலைமைகளின் முதலாளியச் சார்புக்கும் அதையொட்டிய ஐக்கிய தேசிய கட்சி அனுதாபத்துக்கும் ஒரு பங்குண்டு. 
   தமிழ் மக்கள் தொடர்ச்சியாகத் தேர்தல்களில் வாக்களித்து, பிரதிநிதிகளைத் தெரிந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார்கள். தெரிவான பிரதிநிதிகள் மக்களை விடாது ஏய்த்து வந்துள்ளார்கள். ஆனாலும் நாமும் விடாது அதே பிரதிநிதிகளைத் தெரிகிறோம். அவர்களில் சிலரைப் பிடிக்காவிட்டால், நம்மை ஏமாற்றப் புதிய தலைகளைத் தெரிகிறோம். இந்த மனநிலையை என்னவென்பது?  
   ஒன்றில் கட்சியை மாற்றுவது அல்லது, ஆட்களை மாற்றுவது என்ற இரண்டு வழிகளிலேயே, தமிழ் மக்கள் தம் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காணும் முனைப்புகளில் ஏற்படும் இடர்களைக் களைய முனைந்துள்ளார்கள். மாகாண மட்டத்தில் ஆட்சி அதிகாரத்தை உடைய வடமாகாண சபையாலோ தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பதவியையும் உடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தாலோ எதுவும் இயலவில்லை. பத்தாண்டுகால ஜெனீவாத் திருவிழாவாலும் எதுவும் ஆகவில்லை. 
   வளரும் அந்நியக் கடன் சுமையிடையே தவறும் பொருளாதாரமும் தீர்க்காத தேசிய இனப்பிரச்சினையும் மோசமாவதன் பயனாக, சீரழியும் சமூக இணக்கமும் அமைதியும் அரசியல்வாதிகள் பலருக்கும் தொடர்புள்ள குற்றச் செயல்களிடையே சட்டமும் ஒழுங்கும் எதிர்நோக்கும் நெருக்கடியும் பொறுப்பற்ற நுகர்வால் சிதையும் சுற்றாடலும் சுயாதீனமான அயற் கொள்கையின் சிதைவால் நாட்டின் இறைமை எதிர்நோக்கும் சவால்களும் உட்பட, நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாவிடத்து, இஸ்லாமிய பயங்கரவாதத்தினின்று நாட்டைக் காப்பாற்றுவது பற்றிய பேச்சுகளும் புலம்பெயர் தேசங்களில் வலுப்பெறும் விடுதலைப்புலிகள் என்ற பொய்களுமே இந்த அரசாங்கத்தின் பிரதான ஆயுதங்களாக உள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களே அரசாங்கம் தன்னை தொடர்ச்சியாகப் ‘பாதிக்கப்பட்டரோகக்’ காட்டிக் கொள்ள உதவுகிறது. இந்த அரசாங்கத்தின் ஆதரவுத்தளமும் அதுதான் என்பதை அது நன்கறியும். 
   இலங்கை தொடர்பான தீர்மானம் பற்றிய கருத்தாடலில் உரையாற்றிய இலங்கைக்கான தூதுவர் சி.ஏ. சந்திரபிரேம ‘இத்தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது இலங்கைச் சமூகத்தைப் துருவங்களாகப் பிரிப்பதோடு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.’ என்று தெரிவித்துள்ளார். இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கையின் செல்திசையை அடையாளங்காட்டி நிற்கின்றன. 
   இன்று இலங்கையின் சிறுபான்மையினர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். ஒருபுறம் புதிய அரசியலமைப்புக்கான வேலைகள் நடக்கின்றன. சிறுபான்மையினரது அடையாளங்களும் நிலங்களும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. 
   ஜெனீவாவில் என்ன நடந்தாலும் அது சிறுபான்மையினர் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வாகாது. அதனிலும் மேலாக இலங்கையின் ஜனநாயகத்தைத் தக்கவைப்பதென்பதே பாரிய சவாலாக உள்ளது. 
   மூன்று விடயங்கள் உடனடியானவை. முதலாவது, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றிக் கிடைப்பதையும் வாழ்வாதாரங்கள் உள்ளமையையும் எவரதும் சுயமரியாதையான சமூகப் பயனுள்ள வாழ்வுக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் நலமான வாழ்வுக்குமாக அத்தியாவசியமான சேவைகளை உறுதி செய்தல். 
   இரண்டாவது, பாதுகாப்புத் துறையின் பணிகளை முற்றிலும் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்பான அலுவல்கட்கு மட்டுப்படுத்துவதுடன் குடிசார் அலுவல்களிலும் அரசியலிலும் பாதுகாப்புத் துறை குறுக்கீட்டைத் நிறுத்துவதை உறுதி செய்தல்.
   மூன்றாவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உறுதிப்படுத்தலும் நீதிமன்றங்களின் பொறுப்பான நடத்தையையும் உறுதிசெய்தல்.
   இவை சாதிக்க இலகுவானவையல்ல; அதேவேளை இயலாதனவுமல்ல. இன்று இலங்கையர்கள் முன்னுள்ள சவால், இவை மூன்றையும் உறுதிப்படுத்துவதாகும். 
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திருவிழா-முடிந்தது-இனி-என்ன-செய்யலாம்/91-268767
    
    
  • By கிருபன்
   ஜெனீவா: உருளும் பகடைகள்
   -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். 
   ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக் கொண்டது என்று, நம்பச் சொல்கிறவர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். இன்னமும் ஐ.நாவைக் கைகாட்டும் தமிழ்த் தேசியவாதிகளைப் பார்க்க முடிகிறது. 
   ஜெனீவாவை முன்னிறுத்தி, இலங்கையில் நடக்கின்ற விடயங்கள் எதுவுமே, மனித உரிமைகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. மாறாக, அவை இலங்கை மீதான செல்வாக்கை நோக்காகக் கொண்டவை. ஜெனீவாவை மையங்கொண்டு உருளும் பகடைகள், தமிழ் மக்களின் மீதோ, இலங்கை ஜனநாயகத்தின் மீதோ அக்கறை கொண்டு உருட்டப்படுபவையல்ல!
   இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில், நாடுகள் முன்வைத்த கருத்துகள் இதை வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றன. 
   இலங்கையோடு நட்புறவாகப் போக விரும்புகிற நாடுகள், இலங்கையோடு சேர்ந்து பணியாற்றுகின்ற நாடுகள், இலங்கைக்கான வேண்டுகோளோடு தமது அறிக்கையை முடித்துக் கொண்டன. இதற்கு நல்லதோர் உதாரணம் அவுஸ்திரேலியா; இது இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. இலங்கை அகதிகள் பிரச்சினை, அவுஸ்திரேலியாவுக்குப் பெரியது.எனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட்டால், அது அகதி அந்தஸ்துக் கோரியுள்ள பலருக்கும் வாய்ப்பாகும்.  இலங்கையுடன் நல்லுறவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது, இலங்கை தொடர்பான அவுஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம். இதற்கு வாய்ப்பாகவே, அவுஸ்திரேலியாவின் அறிக்கை உள்ளது.  
   இதேபோன்ற அறிக்கையையே கனடாவும் வெளியிட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும், இதேவகையில் அமைந்த அறிக்கைகளையே வெளியிட்டன. அவை மொத்தத்தில், இலங்கையைத் தொடர்ந்தும் பேரவையின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கக் கோரின. ஆனால், அதற்கு மேல், வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளின் அறிக்கைகளில், இரண்டு முக்கியமானவை. முதலாவது, இலங்கையின் தேசியரீதியில் அமைந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கு, ஐ.நா உதவ வேண்டும் என்று நெதர்லாந்து கோரியது.
    இரண்டாவது, ஜேர்மனியின் அறிக்கையில், ‘கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆணையாளர் தனது அறிக்கையில், இதை சர்வதேச சட்டவரம்புக்குள்ளும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.  இதை ஜேர்மனி நடைமுறைப்படுத்துகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினருக்கு எதிரான வழக்கு, ஜேர்மனியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  
   இதன் மறுமுனையில், ஆசிய, ஆபிரிக்க நாடுகள், இலங்கைக்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்தன. இதில் சீனாவும் ஜப்பானும் முக்கியமானவை. அதேபோல, ரஷ்யாவும் முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.பாகிஸ்தான் தனது அறிக்கையில், ஜனாஸாக்கள் நல்லடக்கம் தொடர்பான விடயத்தைத் தவிர்த்தமையும் நோக்கற்பாலது. 
   இந்தியா, தனது அறிக்கையில், இரண்டு அடிப்படைகளில் இலங்கையை ஆதரிக்கிறது. முதலாவது, இலங்கையின் ஒற்றுமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்; இரண்டாவது, இலங்கைத் தமிழரது சமத்துவமும் நீதியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைக்கான அபிலாஷைக்கு உதவுவது. 
   அவ்வகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா கோரியது. அது, தனது அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுக்கான நீதி பற்றியோ, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை பற்றியோ பேசமால் கவனமாகத் தவிர்த்தது. இந்தியாவின் அறிக்கையானது, இலங்கைக்கு முழுமையான ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்ற நிலையையே காட்டுகிறது. ஒருவகையில் இலங்கைக்கு ஆதரவு; ஆனால், இலங்கை 13ஆவது திருத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனியே ஓங்கி ஒலித்தது. 
   இதேவேளை, இந்திய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், “இந்தியா, இலங்கையைக் கைவிடாது” எனத் தெரிவித்ததோடு, ஜெனீவாவில் செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவால் இலங்கையைக் கைவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ‘அயலவர்களுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையாக, இதை எதிர்பார்ப்பதாகவும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் காலங்கடந்தவொன்று என்றும் தெரிவித்துள்ளார். 
   இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. முதலாவது, இலங்கை, இந்தியாவுக்குத் தரமறுத்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்குப் பதிலாக, மேற்கு முனையத்தை வழங்கும் முடிவை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது. இது செவ்வாய்கிழமை (02) அமைச்சரவை அறிவிப்புகளில் வெளியானது. 
   இதேவேளை, அமைச்சரவைக் குறிப்புகளில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் இந்திய நிறுவனமாக, ‘அதானி’ குழுமத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிசெய்துள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தவறானது என, இந்தியாவிலிருந்து வெளியாகும் The Wire இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, அவசரகதியில் மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கியதையிட்டு, உள்ளூரில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 
   இதேவேளை, சத்தமில்லாமல் இன்னொரு நிகழ்வும் செவ்வாய்கிழமை (02) நடந்தது. அது, ‘இலங்கை-இந்தியா-மாலைதீவு ஆகியவற்றை இணைத்த கரையோரப் பாதுகாப்புக் கூட்டுழைப்புக்கான செயலகம்’ (A Secretariat for Trilateral National Security Advisers (NSA) on Maritime Security Cooperation) கடற்படைத்தலைமையகத்தில் தொடக்கப்பட்டது.இவ்வாறு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று, கடந்த நவம்பர் மாதம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கோரியிருந்தார். இதை, இலங்கை தொடர்ச்சியாக இழுத்தடித்து வந்த நிலையில், திடீரென இது செயல்வடிவம் பெற்றுள்ளது. 
   கடந்த செவ்வாய்கிழமை நடந்தேறிய இரண்டு நிகழ்வுகளும் தற்செயலானவை அல்ல. நீண்டகாலத் திட்டமிடலின் விளைவானவையும் அல்ல. ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு, இலங்கை செய்துள்ள காரியங்கள். இந்தியா, தனது நலன்களைக் காக்க மீண்டுமொருமுறை ஈழத்தமிழர் உரிமை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, தனது தேவைகளை நிறைவேற்றியுள்ளது. ஈழத்தமிழரின் மீது அக்கறை கொள்கிற இந்தியாவுக்கு, அங்கிருந்து இடம்பெயர்ந்து நூற்றாண்டுகாலமாய் அல்லலுறும் மலையகத் தமிழ் மக்கள் தெரிவதில்லை; அவர்தம் இன்னல்கள் தெரிவதில்லை. 
   இதேபோலவே, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் Yousef Al Othaimeen, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் உயர்மட்டக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில், “முஸ்லிம்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு உள்ள உரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பின்னர், வர்த்தமானி அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரச்சினைக்கான நியாயமான தீர்வு எட்டப்படவில்லை. மாறாக, ஜெனீவாவில் ஆதரவைப் பெறுவதற்கான வேலைகளே நடக்கின்றன. மேற்குலக நாடுகளின் அறிக்கைகளும் இலங்கையின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதேயன்றி, இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையோ நீதியோ தொடர்பானவையல்ல. 
   இது ஒருபுறமிருக்க, ஜெனீவா தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவும் புலம்பெயர் விடுதலைப்புலி ஆதரவாளர்களும், எதிரெதிர்த் திசைகளில் நின்றபடி, ஓரே குரலில் பேசுகிறார்கள். இக்குரல்கள் மக்களுக்கான குரல்கள் அல்ல; நீதிக்கான குரல்கள் அல்ல. அவை தமது நலன்சார், குறுந்தேசியவாத நலன்சார் குரல்கள்; அவர்களது இருப்புக்கான குரல்களாகும்.
   விடுதலைப் புலிகளின் கொடிகளுடனும் படங்களுடனும் நடக்கின்ற பேரணிகள்,  கோசங்கள், தொலைத்தழித்த காலத்தின் அந்தகாரத்தில் நிற்றுழலும் அபத்தங்களின் குரல்கள். இக்குரல்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளுடன் சமப்படுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கத்துக்கு உதவுகின்றன. இலங்கையில் நீதிக்கும் ஜனநாயகத்துக்குமான கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்து மடைமாற்றுகின்றன. முன்சொன்னதுபோல, சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசியமும் எதிரெதிர்த் திசையில் நின்று, ஒன்றையே செய்கின்றன. 
   இலங்கையின் இன்றைய உடனடியான பிரச்சினை ஜனநாயகம் பற்றியது; நீதி பற்றியது; அடிப்படை உரிமைகள் பற்றியது. இவை, இலங்கையர் அனைவருக்கும் பொதுவானவை. அதைத் தக்கவைப்பதே, இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரதான சவால். 
   ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எட்டப்பட்டுள்ள தீர்வு, இன்று எவ்வாறு சிறுபான்மையினரை எதிர்த்திசைகளில் ‘கொம்புசீவி’ விடுகிறது என்பதை, நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நடப்பவை எதுவும், மக்கள் நல நோக்கிலானவை அல்ல.
    இந்தியாவையோ வேறெவரையோ நம்பியிருப்பதன் ஆபத்துகளை, இவ்வார நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நிரூபணப்படுத்தியுள்ளன. ஆனால், வரைபில் திருத்தம் வரும்; அதில் வெற்றி வரும்; எமக்கு விடிவு வரும் என்ற கதைகள் இன்னமும் எம்மத்தியில் உலாவுகின்றன. அதை அழுத்தமாக நம்புகிறவர்களும் நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் அதிசயப்பட எதுவுமில்லை. ‘தீபாவளிக்குத் தீர்வுவரும்’ என்பதை நம்பியவர்கள் தானே நாங்கள்!        
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜெனீவா-உருளும்-பகடைகள்/91-267477
    
    
  • By கிருபன்
   ஐ.நா வரைபு: ‘ஆப்பிழுத்த குரங்கு’கள்
   தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன. 
   குறிப்பாக, ஈழத்தமிழ் அரசியலைத் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ‘புலம்பெயர் புத்திசாலி’களை நினைக்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.  
   இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது. ஏற்கெனவே, இலங்கை அரசாங்கம் ஏற்று அனுசரணை வழங்கிய ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே இம்முறை, இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் தீர்மானம் நிறைவேற்றி, தமிழர்களுக்குத் தீர்வைத் தரும். இதுவே, இப்போதும் முன்சொன்ன புத்திசாலிகளின் வாதமாக இருந்து வருகிறது. 
   இதே வாதத்தையே, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, இவர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஆனால், ஜெனீவாவில் தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்தும் வந்திருக்கிறார்கள். அணுகுமுறையும் மாறவில்லை; நம்பிக்கையும் போகவில்லை. வேலைத்திட்டமோ, மக்கள் மீதான நியாயமான அக்கறையோ இல்லாதவர்களிடம், எதிர்பார்க்க அதிகம் இல்லைத்தான். 
   இந்தப் புத்திசாலிகளை, ஓர் அரங்காடிகளாக வைத்திருக்க, ஐ.நாவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் விரும்புகின்றன. ஏனெனில், இவர்களின் அலப்பறைகள், இலங்கை அரசாங்கத்துக்குக் கொஞ்சம் கடுப்பூட்டும்; மேற்குலகின் மீதான, தமிழ் மக்களின் நம்பிக்கைகள் குறையாமல் இருக்கும். இந்தக் களத்துக்கு வெளியே போராடுவது பற்றி, தமிழ் மக்கள் சிந்திக்காமல் இருப்பதை, இந்தப் புத்திசாலிகள் பார்த்துக் கொள்வார்கள். எனவே, இந்தப் புத்திசாலிகளும் தங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சும்விதமாக, சில நடவடிக்கைகள் நடந்தேறும். 
   அப்படிப்பட்ட ஒன்றுதான், அண்மையில் வெளியான ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கை. அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட கதையாடல்கள் ஏற்படுத்திய நம்பிக்கைகள், ‘ஜெனீவாத் திருவிழா’வைத் தொடக்கி வைக்கப் போதுமானவையாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக, இலங்கை பற்றிய மையக் குழு என்றழைக்கப்படும் பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மொன்டினிக்ரோ, வட மசிடோனியா ஆகிய நாடுகள், இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை முன்வைக்க இருக்கின்றன.  
   இந்தப் பின்புலத்தில், இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடந்த உரையாடல்கள், எழுதப்பட்ட கட்டுரைகள், அனைத்தையும் ஒருகணம் மீட்டுப் பாருங்கள். இலங்கை தண்டிக்கப்படப்போகிறது; யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்படப் போகின்றன; இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் பாரப்படுத்தப் போகிறார்கள் என்பனவெல்லாம், பிரதான பேசுபொருள்களாக இருந்தன. 
   அதேவேளை, இந்த மைய நாடுகள், இலங்கையின் இணக்கமோ ஒப்புதலோ இன்றி, ஒரு தீர்மானத்தை முன்வைக்கப் போகின்றன என்பது மேலதிக நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கை, நீண்டகாலம் நிலைக்கவில்லை. கடந்தவாரம், இலங்கை மீதான தீர்மானத்தின் முதல்வரைவு வெளியானது. அது, இந்த நம்பிக்கைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியது. இவ்வரைபு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருப்பது, நம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதைக் காட்டப் போதுமானது. 
   அவர், “இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்டுள்ள ஆரம்ப வரைபு, கடும் ஏமாற்றமளிக்கிறது. தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதுமான குறிக்கோள்கள் சம்பந்தமாகப் பார்க்கும்போது, குறித்த முதல் வரைபு, குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானதும் சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பதும் ஒன்றுதானா? தமிழர்கள்தான், அவ்வாறு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்; அல்லது, நம்ப வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 
   இவ்விடத்தில், இலங்கை இராணுவம் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்துகள் மனங்கொள்ளத்தக்கவை. “பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என, நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்புப் படைப்பிரிவுகளுக்கு, அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை. அதேவேளை, இலங்கைப் படையினரை, சமகால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றுவதில், இலங்கைக்கு உதவுவது குறித்து, அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது” என்று கூறியிருப்பது, தமிழருக்கு வேண்டியதும் சர்வதேச சமூகம் வேண்டுவதும் ஒன்றல்ல என்பதை, விளக்கப் போதுமானது. 
   இனி, ‘ஆப்பிழுத்த குரங்கு’களின் கதைக்கு வருவோம். இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்துள்ளது. அதேவேளை, 2015ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதையே கடந்த தேர்தல்களில், தமது வாக்குகளின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்ற வாதத்தையும் முன்வைக்கிறது. 
   இந்த வாதங்களை முன்வைத்துப் பேசிய, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து இயங்கத் தயாராக இருப்பதாகவும், அதேவேளை, பிறநாடுகளின் நலன்களுக்காக இலங்கை போன்ற நாடுகள், பலிக்கடாவாக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். 
   இது, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ள நாடுகளுக்கு, மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை, அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று புறந்தள்ளியுள்ளது.மறுபுறம், ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது, மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பை, இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது. 
   செவ்வாய்க்கிழமை (23) பேரவைக்கு, இலங்கையின் வெளிநாட்டமைச்சர்  ஆற்றிய உரையில், முன் வைக்கப்பட்ட வாதங்களின் மூலம், தாம் பழிவாங்கப்படுகிறோம் என்ற துரும்புச்சீட்டை, இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இப்போது, இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரத் தயாராக உள்ளவர்கள் முன்னுள்ள சவால், கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பானது. இரண்டு வழிகள் அவர்கள் முன்னுள்ளன. 
   முதலாவது, ஆணையாளரின் அறிக்கையை மையப்படுத்தி, கடுமையான ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம். ஆனால், அத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் போதுமான ஆதரவைத் திரட்டுவது, மிகக் கடுமையாக இருக்கும். குறிப்பாக, அமெரிக்கா அங்கத்துவம் வகிக்காத நிலையில், தேவையான நாடுகளின் ஆதரவைப் பெறுவது கடினமானது. இவ்வாறு, கடினமான ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோற்கடிக்கப்படுமாயின், அது இலங்கை அரசாங்கத்துக்குப் பெருவெற்றியாக அமைந்து விடும். 
   இரண்டாவது வழி, நாடுகளின் ஆதரவைப் பெறத்தக்க மென்மையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், இலங்கையை தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவைக்குப் பொறுப்பாளியாக்குவதுடன், இலங்கையைத் தோற்கடித்த ஓர் இராஜதந்திர வெற்றியை உறுதிப்படுத்துவது.
   இதில், தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போகிறோம் என்று அச்சுறுத்துவதன் மூலம், இலங்கை அரசாங்கம் விட்டுக்கொடுப்புகளைச் செய்யும் என்று எதிர்பார்த்தே, மைய நாடுகள் அதை அறிவித்தன. ஆனால், இலங்கை அரசாங்கம் வேறுவகையில் எதிர்வினையாற்றி உள்ளது.
   இலங்கை அரசாங்கமும் தீர்மானத்தைக் கொண்டுவர நினைப்பவர்களும், ‘ஆப்பிழுத்த குரங்கின்’ நிலையிலேயே இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம், உள்ளூரில் வீரவசனங்களைப் பேசினாலும், உலக அரங்குகளில் தனிமைப்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. எனவே ‘பாதிக்கப்பட்டவன்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துகிறது. 
   மறுபுறம், “தீர்மானத்தைக் கொண்டுவருவோம்” என்று சொல்லியாயிற்று; இனிப் பின்வாங்கவும் முடியாது. கொண்டுவருகிற தீர்மானத்தில் தோற்கவும் முடியாது என்ற நிலையில் மைய நாடுகள் உள்ளன. இப்போது அவர்கள் குறி, வெற்றிபெறக் கூடிய ஒரு தீர்மானம். நிறைவேற்றப்படும் தீர்மானமானது,இப்போது உள்ள முதல் வரைபிலிருந்து, நீர்த்துப்போன ஒன்றாகவே இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். கடந்த சில மாதங்களாக, சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கையேந்தி நின்ற தமிழ்த்தேசியவாதத் தலைவர்கள், இப்போது வெளியாகியுள்ள முதல் வரைபை இட்டு, மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 
   தமிழ் மக்கள், ஜெனீவாவின் பெயரால் ஏமாற்றப்படுவது, இது முதன்முறையன்று. ஆனால், இன்னமும் சர்வதேச சமூகத்திடம் தீர்வு, ஐ.நாவிடம் நீதி என்ற புலம்பல்கள் தொடர்கின்றன. இப்போது, புலம்பெயர் தேசங்களில் ஜெனீவாவை நோக்கிய கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. வருடம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு, ஜெனீவாக் கூட்டத்தொடரில், இலங்கை பேசப்படுகிறது என்றவுடன், நடக்கும் இந்தப் போராட்டங்கள், எந்த வகையிலும் பயன் விளைவிக்க மாட்டா. உண்மையான ‘ஆப்பிழுத்த குரங்கு’கள் இவைதான். 
   தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது நெடியது; தொடர்ச்சியான ஊடாட்டத்தையும் பங்குபற்றலையும் வேண்டுவது. புலம்பெயர் தேசங்களில் உள்ள அரசுகளுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதென்பது, விக்கலுக்கு தண்ணீர் குடிப்பதல்ல.  இராஜதந்திரச் செயற்பாட்டின் அடிநாதம்; தொடர்ச்சியான ஊடாட்டம். 
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நா-வரைபு-ஆப்பிழுத்த-குரங்கு-கள்/91-266876
    
  • By கிருபன்
   P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்?
   -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
   பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது. 
   இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது. 
   இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 
   இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன.  இதை எவ்வாறு தக்கவைப்பது?இதற்கான வேலைத்திட்டம் என்ன? இதை யார் முன்னெடுக்கப் போகிறார்கள்? இலங்கையில் ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் தக்கவைப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை முன்னகர்த்துவதா, இல்லையா? 
   இக்கேள்விகளுக்கான பதிலை, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை, பேரணியின் பிரகடனத்தில் இருந்து தேடித் தொடங்கலாம். அவ்வறிக்கை, அடிப்படையில் மூன்று விடயங்களைச் சொல்கிறது. 
   முதலாவது, தமிழருக்கான நீதியைச் சர்வதேச சமூகத்திடம் கோருவது. 
   இரண்டாவது, தமிழரின் உடனடியான பிரச்சினைகளைத் தீர்க்க, அரசிடம் கோருவது. 
   மூன்றாவது, மலையகத் தமிழரதும் முஸ்லிம்களதும் பிரச்சினைகளுக்கான தீர்வை, அரசிடம் கோருதல். 
   இந்தப் பிரகடனத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அடுத்து, என்ன செய்வது போன்ற எதுவும் இல்லை. இது புதிதல்ல; தனிநாடுதான் தீர்வு என்று, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றிய பின்னர், அதை வெல்வதற்கான வழி என்ன என்ற கேள்விக்கு, “அது இரகசியம்” என உரைத்த கதையை நாமறிவோம். 
   எனவே, திட்டமில்லாத, நீண்ட முன்னோக்கு இல்லாத குறுகியகால அரசியல் நலன்களுக்காகவும் திசைதிருப்பல்களுக்காகவும் உருவாக்கப்படும் உணர்ச்சிப் பேச்சுகளும் வீராவேசமும் எமக்கு அழிவையே தந்திருக்கின்றன.  
   இந்த P2P போராட்டம், நீண்ட திட்டமிடலோ, மக்களுடனான கலந்துரையாடலோ இன்றித் தொடங்கப்பட்டது. இன்று, அதை மக்கள் போராட்டம் என்று சொல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்களுடன் பேசாமலேயே இதைத் தொடங்கினார்கள்.இதற்கான மக்கள் திரளைச் சேர்க்கும் திட்டம், அவர்களிடம் இருந்திருக்கவில்லை. 
   தமிழ் மக்களின் உரிமைக் குரலுக்கான போராட்டத்துக்கு, மக்கள் தன்னெழுச்சியாக ஆதரவு தந்தார்களேயன்றி, போராட்ட ஒழுங்கமைப்பாளர்களால், மக்களின் பங்கேற்புக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கவலைக்குரியது. ‘முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம்; நீங்கள், எங்கள் பின்னே வாருங்கள்’ என்பதுதான், தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறியாக இருந்தது. இது இராமநாதனில் இருந்து, இன்றுவரையும் தொடர்வது அவலம். 
   இலங்கையினதும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளினதும் வரலாற்றைக் கூர்மையாக அவதானித்தால், ‘சிவில் சமூகம்’ எனும் அடையாளத்தில்,  மக்கள் சார்பாகப் பேசும் புதிய பிரமுகர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாற்றாக, மக்கள் எவ்வகையிலும் தெரிவுசெய்யாத அலுவலர்களும் முகவர்களும் தங்களைச் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக நிலைநாட்ட முயலுகின்றனர். 
   இவர்கள் இரண்டு பணிகளைச் செவ்வனே செய்கிறார்கள். அதில் பிரதானமானது, அயலார் நிகழ்ச்சி நிரலை உள்ளூர் மயமாக்குவதன் மூலம், நல்ல சேவகர்களாக இருப்பது. 
   இரண்டாவது, போராட்டங்களை அரசியல்நீக்கம் செய்வது. இதன்மூலம், வெகுஜன ஜனநாயக நோக்கில், மக்களின் அடிப்படையிலான வெகுஜன நலன் பேணும் அமைப்புகள் உருவாகாமல், இவை பார்த்துக் கொள்கின்றன. இவை, நாம் சிந்திக்க வேண்டிய விடயங்கள். 
   P2P பிரகடனம் தொடக்கத்திலேயே, தமிழரின் சுயநிர்ணயம் பற்றிப் பேசுகிறது. இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களான, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழரினதும் சுயநிர்ணய உரிமையை, நாம் ஏற்றுக் கொள்கிறோமா? 
   இப்பிரகடனம், தமிழர் தேசம், சிங்கள தேசம் என்று இரண்டு சொல்லாடல்களுக்குள் இயங்குகிறது. இந்தச் சொல்லாடலே, அடிப்படையில் ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கிறது.  
   இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை முழுமையாக நோக்கின், அதை வெறுமே சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களின் பிரச்சினையாக நோக்குவது, பிரச்சினையின் ஒரு பகுதியையே தீர்க்கும். எனவே, தொடர்ச்சியான பெரிய நிலப்பரப்பொன்றுக்கு உரிமைகோரக் கூடிய சிங்கள, தமிழ்த் தேசிய இனங்கள் மட்டுமன்றி, தமக்கெனத் தொடர்ச்சியான பெருநிலப்பரப்பற்ற போதும், பொதுவான மொழி, பண்பாட்டு, அரசியல் வரலாற்றுப் பொதுமைகளையுடைய முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தையும் சுயாட்சியையும் ஏற்றல் என்ற அடிப்படையில் மட்டுமே, தேசிய இனப் பிரச்சினைக்கு, நிலைக்கக் கூடிய, நல்ல தீர்வொன்றைக் காண இயலும்.
   தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மேலும், சுயநிர்ணய உரிமை எனும் நியதி, அதன் முழு மெய்ப்பொருளில், பிற தேசிய சிறு பான்மையினரது அபிலாஷைகளைக் கையாள்வதற்கும் பயன்பட வேண்டும். இதை, இந்தப் பிரகடனம் செய்யத் தவறியுள்ளது. 
   எமது பிரச்சினைகளை மற்றவர்கள் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும் என்று நினைப்போர், மற்றவர்களின் பிரச்சினைகளையும் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும். ஈழத்தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவு, ‘ஈவோருக்கும் இரப்போருக்கும்’ இடையிலான உறவாக இருக்க முடியாது. ஒரு தேசியவாத அகங்காரத்துக்கு, எதிரான இன்னொரு தேசியவாத அகங்காரம் ஆபத்தானது. 
   இப்போராட்டம் தொடங்கிய வேளையில், ஒருபகுதி மக்கள் இப்போராட்டத்தின் கோசமாக, இலங்கையின் வடபுலத்து மீனவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரினர். இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடி, வடபுலத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டினர். ஆனால், அக்கோரிக்கை மறுக்கப்பட்டது. அக்கோரிக்கை மிகவும் நியாயமானது. இது, யாருடைய நலன்களை முன்னிறுத்தி, நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்ற வினாவை எழுப்புகிறது.
   கடந்த மூன்று தசாப்தங்களாக, ஏகாதிபத்திய மீளெழுச்சியைக் கொண்டதொரு சர்வதேசப் பின்னணியில், தவறாகக் கையாளப்பட்ட இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை, போராக வக்கிர வளர்ச்சி பெற்றது. மோதலின் இரு தரப்பிலும் இருந்தோரில் பெரும்பாலானோர் அறியாமலே அந்நியக் குறுக்கீடுகள் தொடர்ந்தன. 
   கொலனிய யுகத்திலும் பின்னரும், மோதல்களின் போது, அயல்தரப்புகள் ஓர்  இனக் குழுவுக்கோ, இன்னொன்றுக்கோ சார்பாக நின்றதாகத் தோன்றினாலும், அவர்களது குறுக்கீடு இலங்கையினதோ, எந்தத் தேசிய இனத்தினதோ நலனுக்கானதல்ல. இந்திய மேலாதிக்கச் சக்திகளது நடத்தையும் அத்தகையதே. 
   தேசிய இன ஒடுக்கலின் தீவிரமாதலை அடுத்து, இந்தியாவும் மேற்குலகும் பல்வேறு தருணங்களில் தமிழ்த் தேசியவாத நோக்கங்களை ஆதரிப்பது போன்று, தோற்றம் காட்டியுள்ளன. ஆயினும் தமது மேலாதிக்க நலன்களுக்கு உதவியான முறையில், துரிதமாகக் தரப்பையும் அனுதாபங்களையும் மாற்றியுள்ளன.
   விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாக முறியடிப்பதில், இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் நிற்பதென இந்தியாவும் மேற்குலகும் முடிவெடுத்ததை உணர்ந்த பின்னரும், தமிழரையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் காப்பாற்ற, மேற்குலகோ இந்தியாவோ குறுக்கிடும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு, வலுவான நம்பிக்கை, போரின் இறுதி மாதங்களில், பல தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்தது. வருந்தத்தக்கவாறு, கடந்த சில ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களின் பின்னரும், அதே போக்கு நிலைக்கிறது. 
   இலங்கை பயங்கரமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்குகிறது. இன்று, அந்நியக் கடனிலேயே இலங்கை காலம் கடத்துகிறது. கடனுக்கான விதிப்புகளும் நிபந்தனைகளும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கேடானவை. இது தொடர்பிலேயே, அந்நியத் தலையீட்டுக்காரர், தமக்கு வாய்ப்பாகவும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் தீங்காகவும், தேசிய இனப் பிரச்சினையை மீண்டும் பயன்படுத்தாதவாறு, தேசிய இனப் பிரச்சினை, புதிய பார்வையில் நோக்கப்பட வேண்டும். 
   P2P போராட்டத்துக்கான ஏகோபித்த ஆதரவு மூலம், மக்கள் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள். அதேவேளை, தத்தம் நிகழ்ச்சி நிரல்களை மீண்டுமொரு மக்களின் பெயரால், செய்து முடிப்பதற்கு நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது, இன்று இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து சிறுபான்மையினங்களையும் பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுதிரட்டி, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களேயன்றி, அரசியல் தலைமைகளோ சிவில் சமூகமோ அல்ல. 
    
   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/P2P-போராட்டம்-எதுவரைக்-கொண்டு-செல்லும்/91-265738
 • Topics

 • Posts

  • கிணற்றடி வாழை என்றும் பசுமை மாறாது ஈரலிப்பாகவே இருக்கும் அதுபோல் உங்களின் கவிதையும்......!  👍 பகிர்வுக்கு நன்றிகள் ......!
  • இப்பொழுதுதான் பார்த்தேன், படித்தேன் .....ஒரு அருமையான நகைச்சுவையுடன் கூடிய துப்பறியும் கதை.....நீங்கள் தொடர்ந்து இங்கு எழுதுங்கள்....மேலும் இந்தக் கதையைக்கூட "யாழ் அகவை 23 க்கு" நகர்த்தும்படி நிர்வாகத்திடம் கோரலாம்.....நிறையபேர் வாசித்து கருத்து சொல்வார்கள்......!  🌹  👍 உங்கள் வரவு நல்வரவாகுக.......!
  • காலங்கள் கடந்திடினும், ஆழப் புதைந்த.நினைவுகளைக்..  கிழறிப் பார்க்கின்றது, கவிதை ! கற்றாளை இதயங்கள்..., சொரிந்திடும் கண்ணீர், வற்றாத.நதியாகி...,, குறைப் பிரசவக் காதல்களின், கல்லறைகளை.நனைக்கட்டும்!
  • 17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை     PBKS  vs  MI       4 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.   பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் கல்யாணி நந்தன் கிருபன்   மும்பை இந்தியன்ஸ் சுவி குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26 நுணாவிலான் கறுப்பி   இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️
  • அடிக்குற வெயிலுக்கு இளநீர் யூஸ்.👌  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.