Jump to content

தீவுகளில் நீடிக்கும் பனிப்போர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீவுகளில் நீடிக்கும் பனிப்போர்

-ஹரிகரன் -

“நெடுந்தீவில் சீனா தளம் அமைக்க அனுமதிக்கும் அளவுக்கு இலங்கை அரசு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யும் என்றும் இந்தியா நம்பவில்லை. ஆனால் தாம் பாரம்பரியமாக செல்வாக்குச் செலுத்தி வந்த பகுதிக்குள் சீனா ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதை அனுமதிப்பது இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது”

 ஒரு திட்டத்தை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது என்று கூறும் சீனா, அதில் தலையிடத் தயாரில்லை என்று கூறும் சீனா, கிழக்கு முனையத்தை இந்தியாவின் கையில் இருந்து தட்டி விட்டு இப்போது, வடக்கு மின்திட்ட விடயத்தில் இலங்கை சர்வதேச இணக்கப்பாடுகளை மதிக்க வேண்டும் என்று கூறுவது தான் வேடிக்கை

K4-05.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளுக்காக சீனாவும் இந்தியாவும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. கேந்திர முக்கியத்துவம் மிக்க தீவுகளுக்கான சீனா சர்வதேச அளவில் மல்லுக்கட்டுவது இதுதான் முதல் முறையில்லை.

தென்சீனக் கடலில் உள்ள ஸ்பரட்லி  தீவுக் (Spratly Islands) கூட்டங்களின் உரிமைக்காக மலேசியா, புருணை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்வான், ஆகிய நாடுகளுடன் சீனா இப்போதும் முட்டுப்பட்டுக் கொண்டு தான் உள்ளது. தென்சீனக் கடலில் சீனா செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அதில் விமான ஓடுதளத்துடன் கூடிய கடற்படைத் தளங்களையும் நிறுவியிருக்கிறது.

K4-03.jpg

சென்காகு தீவுகளுக்காக (Senkaku Islands)  ஜப்பானுடனும்இ தாய்வானுடனும் சீனா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இவை சீனாவின் எல்லைக்கு அப்பாலுள்ள தீவுகளுக்காக நடத்தப்படும் பனிப்போர்.

இந்தியப் பெருங்கடலிலும், இலங்கைத் தீவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டு வருவதற்காகவும், சீனா பனிப்போர் நடத்தியது. இலங்கைத் தீவுக்காக இந்தியாவுடன் மல்லுக் கட்டிய சீனா இப்போது, இலங்கைத் தீவுக்குச் சொந்தமான, நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவுக்காக இந்தியாவுடன் போட்டி போடத் தொடங்கியிருக்கிறது.

K4-02.png

இலங்கைத் தீவின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் சீனா உறுதியான வெற்றியைப் பெற்று விட்டது. அண்மையில் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதில் இருந்தே, சீனாவின் ஆதிக்கம் எந்தளவுக்கு கொழும்பின் மீது படிந்திருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் ஒவ்வொரு திட்டமும், இந்தியாவின் எதிர்ப்பு சமாளிக்கப்பட்டு, அல்லது அதன் எதிர்ப்பு கணக்கில் கொள்ளப்படாமல், ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது

K4-01.jpg

அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு தெற்கு கொள்கலன் முனையம், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், போன்ற பிரதான திட்டங்கள் அனைத்திலும் சீனா வெற்றியைப் பெற்று வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் நிலை அதற்கு எதிர்மாறானதாகவே இருந்து வந்திருக்கிறது.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. அண்மையில் கிழக்கு முனையத் திட்டத்தை இந்தியாவினால் செயற்படுத்தக் கூடிய நிலை இருக்கவில்லை.

அதுபோன்று, முன்னர் மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்கும் முயற்சிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. சீனாவின் அழுத்தங்களைத் தாண்டி, இந்தியாவினால் முக்கியமான திட்டங்களை பெற்றுக் கொள்வதில் கடும் பின்னடைவு ஏற்பட்டிருகிறது. கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், வடக்கிலுள்ள தீவுகள் விவகாரத்திலும் உறுதியான வெற்றிக்காக போராட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில், கலப்பு மின் திட்டங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் தான், இந்தியா விழித்துக் கொண்டது. இதற்கு புதுடெல்லியிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனை இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்திருந்தார்.

அதற்குப் பின்னர் இந்திய தூதுவர், கோபால் பாக்லே, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும போன்றோருடன் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுக்களின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் டொலர் நிதியுடன் நிறைவேற்றப்படும், கலப்பு மின்திட்டத்தை, இந்தியாவின் கொடையிலேயே முன்னெடுப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடனாக கிடைக்கும் நிதியில், இருந்தே இந்த திட்டம் செயற்படுத்தப்படவிருந்த நிலையில், இந்தியா அதனை கொடையாக கொடுக்க முன்வரும் போது, இந்த உடன்பாட்டை இலகுவாக உடைக்கலாம் என்றே புதுடெல்லி கணக்குப் போட்டிருக்கிறது.

நெடுந்தீவு, நயினாதீவு போன்றவற்றில் சீனாவின் பிரசன்னத்தை இந்தியா விரும்பவில்லை. இவை இந்தியாவின் கரையில் இருந்து 50 கி.மீற்றருக்கு உட்பட்ட பகுதிக்குள் இருப்பவை. இவ்வாறான தீவுகளில் சீனா தளம் அமைக்கப் போவதில்லை. அவ்வாறான அச்சம் இந்தியாவுக்கும் கிடையாது.

அங்கு சீனா தளம் அமைக்கப் போவதாகவும், நெடுந்தீவில் பாரிய துறைமுகத்தை அமைக்கும் வசதிகள் உள்ளதாகவும் சிலர் மிகையான கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். நெடுந்தீவில் பாரிய கப்பல்கள் வரக்கூடிய துறைமுகத்தை அமைக்கும் வசதிகளில்லை. அது பவளப் பாறைகளைக் கொண்ட ஆழம் குறைந்த கடற்பகுதியைக் கொண்ட ஒரு தீவு.

இந்த தீவுக்கான போக்குவரத்தை சர்வதேச கடல் எல்லை வழியாக மேற்கொள்ள முடியாது, இந்தியா, அல்லது இலங்கை கடல் எல்லைகளுக்குள்ளால் தான் பயணிக்க முடியும். நெடுந்தீவில் இருந்து வடக்கு பகுதி கடற்பகுதியின் ஊடாகத் தான் செல்ல முடியுமே தவிர தெற்குப் பகுதி வழியாக செல்ல முடியாது. காரணம், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள கடற்பகுதி ஆழம் குறைந்த மணல் திட்டுகளைக் கொண்டது.

எனவே, நெடுந்தீவிலோ, நயினாதீவிலோ சீனா தளங்களை அமைக்கும் என்பது மிகையான கற்பனை. அவற்றை சீனா தனது நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும். அங்கு சீன அதிகாரிகளின் பிரசன்னமும், சீனா பயன்படுத்திக் கொள்ளப்போகும் கருவிகளும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

நேரடியாக அல்லாத பாதுகாப்பு நெருக்கடிகளையே இந்தியா எதிர்கொண்டிருக்கிறதே தவிர நெடுந்தீவில் சீனா தளத்தை அமைக்கும் என்றோ, அங்கு நிரந்தரமாக குடிகொள்ளும் என்றோ இந்தியா அச்சம் கொள்ளவில்லை. நெடுந்தீவில் இருந்து இராமேஸ்வரம் வெறுமனே 38 கிலோ மீற்றர் தொலைவில் தான் இருக்கிறது.

இவ்வாறான நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு நலன் சார் விடயங்களில் கவலை கொள்வதில் ஆச்சரியமில்லை. நெடுந்தீவில் சீனா தளம் அமைக்க அனுமதிக்கும் அளவுக்கு இலங்கை அரசு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யும் என்றும் இந்தியா நம்பவில்லை. மறைமுக பாதுகாப்பு நெருக்கடிக்கு அப்பால், இந்தியா பாரம்பரியமாக செல்வாக்குச் செலுத்தி வந்த பகுதிக்குள் – இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் கால்களுக்குள் புகுந்து சீனா ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதை அனுமதிப்பது இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது.

இதனால் தான், இந்த திட்டங்களை சீனா முன்னெடுப்பதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதனை தானே பொறுப்பேற்கத் தயார் என்ற சமிக்ஞையையும் வெளியிட்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கியது போலக் காட்டிக் கொண்டாலும், இன்னமும், அந்த திட்டத்தை இந்தியாவிடம் கொடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக எந்த முயற்சியிலும் இறங்கவில்லை.

சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கையளிப்பது தாமதிக்கப்படுகிறதே தவிர அது நிறுத்தப்படவில்லை. இந்தியாவிடம் அதனை கையளிக்கும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதே தவிர அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆக இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை.

கிழக்கு முனைய விவகாரத்தில் எவ்வாறு இழுத்தடித்து வந்ததோ அதுபோலத் தான் இந்த விடயத்திலும் நடந்து கொள்கிறது. இந்தநிலையில் சீனத் தூதரக பேச்சாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து முக்கியமானது.

எந்த நாடாக இருந்தாலும் ஒரு நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டை மதிக்க வேண்டும் என்று சீனா கூறியிருக்கிறது. இந்த விடயத்தில் ஒரு திட்டத்தை முடிவு செய்யும் உரிமை இலங்கைக்கு உள்ளது என்று கூறும் சீனா, அதில் தலையிடத் தயாரில்லை என்று கூறும் சீனா, கிழக்கு முனைய விவகாரத்தில் தனது புலனாய்வுப் பிரிவுகளைப பயன்படுத்தி, இந்தியாவின் கையில் இருந்து தட்டி விட்டது.

இப்போது, வடக்கு மின் திட்டங்கள் இந்தியாவின் கைகளில் கிடைக்காமல் தடுக்கும் நோக்கிலேயே, சர்வதேச இணக்கப்பாடுகளை மதிக்க வேண்டும் என்று சீனா கூறுகிறது. ஆனால் இதே சீனா கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட சர்வதேச உடன்பாடு மதிக்கப்ட்ட வேண்டும் என்று கொழும்பிடம் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழலில், வடக்கிவுள்ள தீவுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான பனிப்போர், இன்றும் சில காலத்துக்கு நீடிக்கும் போலவே தெரிகிறது.
 

https://www.virakesari.lk/article/100945

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாய்வானின் பொருளாதாரத்தைப் போன்று அல்லது Hong Kong கைப் போன்றதொரு வளர்ச்சிக்கு இலங்கெஇயை சீனா இட்டுச் செல்லும். 

தீவுப் பகுதிகளை சிறந்த சுற்றுலாத்துறைகளாகவும், சிறந்த மீன்பிடித் துறைமுகங்களாகவும் மாற்ற முற்படும். இதற்காக சிங்கள சேவைத்துறையினர் தீவுப் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுவர். சீன சுற்றுலாப் பயணிகளால் தீவுப் பகுதிகள் நிறையும். மீன்பிடித் துறைகள் சீன மீன்பிடி ஆழ்கடல் இழுவைப் படகுகளால் நிறையும். 

கவனிக்க, இதற்கெல்லாம் தங்குதடையற்ற, செலவு குறைந்த மின்சாரம் தேவை. இந்தியா இந்த விடயத்தில் இழுபறிப்படும்போது சீனால் மெதுவாக யாழ்க் குடாவில் தனது அடுத்த செயற்திட்டங்கள் தொடங்கப்படும்.......

 

.....ஒரே கிழுகிழுப்புத்தான் போங்கள்..

😂😂

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்களுக்கு, வடக்கே, மூன்று தீவுகள் என்ற போலிப் பந்துகளை வைத்து உருட்டி விளையாட விட்டு விட்டு, தென்பகுதியில் சீனனும், சிங்களவனும் வலு பிஸி.

குருந்தூர் மலையில், சீனா காரன் ஏதாவது கண்காணிப்பு கோபுரத்தினை அமைத்துக்கொண்டிருப்பான்.

இந்தியர்கள், எல்லாம் முடிந்த பின்னர் வாரி சுருட்டிக் கொண்டு எழும்பி குய்யோ, முறையோ என்பார்கள்.

இவர்கள் ஐஞ்சாப்பு தமிழ் புத்தகத்தில் வரும், 'வந்த பின் காப்போன் மீன்' வகையினர். 😎

புலிகளை தனது தனிப்பட்ட குடும்ப வஞ்சத்துக்காக ஒழித்த, சோனியா குடும்ப வாரிசோ, வெங்காயம், தயிறு என்று, ம்ஸரூம் பிரியாணி சமைக்கிறார்.... யூடியூபில்... 🤦‍♂️

Edited by Nathamuni
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.