Jump to content

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு அவருக்கு கள்ளக்குறிச்சியிலும் விழுப்புரத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் கவனித்துவந்தார்.

டெல்டா மாவட்ட நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்பும் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது, வழியில் மரியாதை நிமித்தம் சந்தித்த பெண் ஐ.பி.எஸ். அவருக்கு வணக்கம் செலுத்தினார். அவரை காரில் ஏற்றிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அவரிடம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்தப் பெண் அதிகாரி அதிலிருந்து தப்பிக்க கடுமையாக முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கார் உளுந்தூர் பேட்டை அருகில் வந்தபோது, அங்கு சில காவல்துறை மூத்த அதிகாரிகள் நின்றிருந்தனர். கார் அங்கே நின்றதும், கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடிவந்த பெண் அதிகாரியை அங்கிருந்தவர்கள் வேறு காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

இதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 22ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து காவல்துறை தலைவரிடமும் உள்துறை செயலரிடமும் புகார் அளிப்பதற்காக அந்தப் பெண் அதிகாரி காரில் சென்னை நோக்கிசென்றபோது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அவரது காரை மறித்த மாவட்ட எஸ்.பி. கண்ணன், ராஜேஷ் தாஸிடம் போனில் பேசினால்தான் காரை அனுமதிப்பேன் என்றும் தான் சொல்லும்வரை காரை விட்டு இறங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்குப் பிறகு சென்னை வந்த அந்தப் பெண் அதிகாரி காவல்துறை தலைவரிடமும் உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏதுமில்லாமல் ஒரு நாள் கழிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" என்று கேள்வியெழுப்பினார்.

 

இதற்குப் பிறகு ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன், ராஜேஷ்தாசுக்காக பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சமரசம் பேச முயன்ற தனிப்பிரிவு ஆய்வாளர் ஒருவர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவையும் தமிழக அரசு அமைத்தது.

ஆனால், ராஜேஷ் தாஸை இடைநீக்கம் செய்து, கைதுசெய்ய வேண்டுமென்று கோரி ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் கனிமொழி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான புகாரை சிபிசிஐடி பதிவுசெய்தது. சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 354, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் அகதிகளை, முகாம் என்ற பெயரில் சிறை வைத்து கண்காணிக்கும் Q branch ஏறத்தாழ முழுமையாக வழக்கில் இருக்கவேண்டுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஈழத்தமிழ் அகதிகளை, முகாம் என்ற பெயரில் சிறை வைத்து கண்காணிக்கும் Q branch ஏறத்தாழ முழுமையாக வழக்கில் இருக்கவேண்டுமே?

இருக்கும் ஆனால் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005ம் ஆண்டு, ஜெயலலிதா காலத்திலேயும்,வேறு பெண் போலீஸ் அதிகாரியிடம், சில்மிஷம் செய்து மாட்டி தண்டனை வழக்கப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மனைவி.... தமிழக அரசின், மிக உயர்ந்த பதவியில் இருந்தவராம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`காருக்குள் என்ன நடந்தது?!’ - பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரில் இருப்பது என்ன?

தமிழக காவல்துறை உயரதிகாரி ஒருவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி புகாரளித்திருக்கிறார். அதில் காருக்குள் என்ன நடந்தது என்பதையும் புகார் கொடுக்க வந்தபோது தடுத்த எஸ்.பி மீதும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழக காவல்துறை உயரதிகாரி ஒருவர் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு டி.ஜி.பி அலுவலகத்திலும், காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண் ஐபிஎஸ் அதிகாரி, கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு விசாரணை கமிட்டி அமைத்துள்ளது. இந்தப் புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். காவல்துறை உயரதிகாரி மற்றும் புகார் கொடுக்க வந்தபோது பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தடுத்த, எஸ்.பி ஒருவர் மீதும் எப்ஃ.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,``நான், 21.2.2021-ல் கரூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தேன். லைட் ஹவுஸ் கார்னரில் எனக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வரின் கான்வாய் வாகனம் மாலை 5.30 மணியளவில் அங்கு வந்தது. அப்போது காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் அங்கிருந்தனர். முதல்வர் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது காவல்துறை உயரதிகாரி ஒருவர் என்னிடம் பேசினார். அப்போது அவர் முதல்வரின் நிகழ்ச்சி முடிந்த பிறகு அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு என்னுடன் காரில் வரும்படி கூறினார்.

போலீஸ்
 
போலீஸ்

அங்கிருந்து நீங்கள் பணி செய்யும் இடத்துக்குச் செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். அதன்பிறகு அந்தக் காவல்துறை உயரதிகாரி, முதல்வரின் மறுநாள் சுற்றுப்பயண (22.2.2021) ஸ்பாட்டுக்கு செல்வதாகவும் என்னிடம் தெரிவித்தார். லைட் ஹவுஸ் பகுதியில் முதல்வரின் நிகழ்ச்சி மாலை 6.30 மணியளவில் முடிந்தது. உடனடியாக நான் காவல்துறை உயரதிகாரியின் காரில் ஏறி, அடுத்த ஸ்பாட்டில் முதல்வர் பேசும் இடத்துக்குச் சென்றேன். இரவு 7.20 மணியளவில் என்னுடைய பி.எஸ்.ஓவிடம் காவல்துறை உயரதிகாரியின் காரை பின்தொடர்ந்து வரும்படி தெரிவித்தேன். ஆனால் என்னுடைய கார், காவல் துறை உயரதிகாரியின் காரைப் பின்தொடர்ந்து வரவில்லை.

முதல்வரின் அன்றைய சுற்றுப்பயணம் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் நிறைவு பெற்றது. அதன்பிறகு உளுந்தூர்பேட்டைக்கு காவல்துறை உயரதிகாரியுடன் காரில் சென்றேன். காரில் செல்லும்போது காவல்துறை உயரதிகாரி எனக்கு காரில் இருந்த ஸ்நாக்ஸ் கொடுத்தார். மேலும் அவர் காரில் தலையை வசதியாக வைத்துக் கொள்ள தலையணை ஒன்றை எனக்கு கொடுத்தார். தொடர்ந்து அவர் என்னிடம் பாட்டு பாடக்கூறினார். அதற்கு நான் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஆனாலும் அந்த உயரதிகாரி வற்புறுத்தலின்பேரில் நான் பாட்டு பாடினேன்.

பாலியல் அத்துமீறல்
 
பாலியல் அத்துமீறல்

அப்போது நான் பாடிய பாடல் நன்றாக இருந்ததாக அவர் கூறி, வாழ்த்துகூற கைக்குலுக்கும்படி கேட்டார். உடனே என் வலது கையை கைகுலுக்க நீட்டினேன். அவர் கைகுலுக்கிய விதம் வித்தியாசமாக இருந்தது. அதன்பிறகு என்னுடைய இடது கையையும் நீட்டக் கூறினார். காரின் சீட்டிலிருந்த ஆர்ம்ரெஸ்ட்டில் என் கையை வைத்தார். சில நிமிடங்கள் என்னுடைய விரல்களை அவர் பிடித்துக் கொண்டு அவர் கண்களை மூடியபடி பாடிக் கொண்டிருந்தார். அது 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது அவர் என்னுடைய விருப்பமான பாடல் என்னவென்று கேட்டார். அதை யூடியூப்பில் ப்ளே பண்ண கூறினார். அதன்பிறகு டிரைவரிடம் காரின் கண்ணாடியை மேலே பார்த்து வைக்கும்படி கூறினார்.

சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய கையில் அவர் முத்தமிட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதனால் சிரித்துக் கொண்டே தன்னுடைய கையை எடுத்துக் கொண்டார். மீண்டும் என் கைகளை நீட்டும்படி அவர் கூறினார். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். 5 நிமிடங்கள் மட்டும் என்று கூறி என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டார். அதனால் ஏற்பட்ட பதற்றத்ததினால் என்னுடைய உள்ளங்கை வேர்த்தது. அதை உணர்ந்துக் கொண்ட உயரதிகாரி, டவலைக் கொடுத்து துடைக்கக்கூறினார். பயணத்தின் போது அவர் என்னுடன் பேசிக் கொண்டே வந்தார். உயரதிகாரியின் கேள்விகளுக்கு மட்டும் நான் பதில் கூறினேன். அப்போது என்னுடைய போட்டோக்கள் உயரதிகாரியின் செல்போனில் இருந்ததை என்னிடம் காண்பித்தார். அதை அவரே எடுத்ததாகவும் கடந்த தடவை நான் பணியாற்றும் இடத்துக்கு வந்தபோது எடுத்ததாகவும் கூறினார். அது என்னுடைய பேவரட் கேட்டகிரியில் வைத்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அவர் என்னுடன் பயணம் செய்வது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதன்பிறகு என்னுடன் பயணித்ததுக்கு நன்றி என்றும் கூறினார். காவல்துறை உயரதிகாரி என்னிடம் நான் மட்டும்தான் பேசுகிறேன், நீங்கள் பேசவில்லையே என்று கூறினார். அதன்பிறகு ஜல்லிக்கட்டு, காவல்துறை முகாம்கள் உள்ளிட்ட பணி தொடர்பாக நானும் பேசினேன். உளுந்தூர்பேட்டை அருகே கார் சென்றுக்கொண்டிருந்தபோது மீண்டும் என்னுடைய கைகளை நீட்டக்கூறினார். நான் மறுத்தேன். இருப்பினும் அவர் என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டார்.

உளுந்தூர்பேட்டையில் காவல்துறை உயரதிகாரியை வரவேற்க அந்தச் சரக அதிகாரி காத்திருந்தார். அதனால் என்னுடைய கைகளை அவர் விட்டுவிட்டார். அதன்பிறகு அந்த அதிகாரியுடன் என்னுடன் காரில் பயணித்த உயரதிகாரி சென்று விட்டார். என்னுடைய கார் வரவில்லை என்றதும் காவல்துறை உயரதிகாரி, தன்னுடைய காரில் செல்லும்படி கூறினார். அதற்கு நான் மறுத்துவிட்டு வேறு ஒரு காவல்துறை அதிகாரியின் காரில் செல்வதாக அவரிடம் கூறினேன். 22-ம் தேதி காரில் நடந்த தகவல்களை என்னுடைய மேலதிகாரியிடம் கூறினேன்.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்
 
ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்

பின்னர் காரில் நடந்த கொடுமைகளை புகாராக எழுதிக் கொண்டு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியைச் சந்திக்க சென்னைக்குப் புறப்பட்டேன். நான் காரில் வந்தபோது காவல்துறை உயரதிகாரி எனக்கு தொடர்ந்து கால் செய்தார். அவரின் போன் அழைப்பை ஏற்கவில்லை. அதனால் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு போன் செய்யும்படி மெசேஜ் அனுப்பினார். அதன்பிறகு காவல்துறை உயரதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் நான் அந்த உயரதிகாரியிடம் நான் சென்னை செல்லும் தகவலைக் கூறியிருக்கிறார். மேலும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் என்னிடம் பேசி சமாதானப்படுத்தும்படி கூறியிருக்கிறார்.

அதனால் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் எனக்கு போன் செய்தார்கள். அவர்களின் போன் அழைப்பையும் நான் ஏற்கவில்லை. அதன்பிறகு செங்கல்பட்டு பரனூர் டோல்கேட் அருகே நான் காரில் சென்று கொண்டிருந்தபோது மாவட்ட காவல் அதிகாரி ஒருவர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரும் அதிரடி படையைச் சேர்ந்த சிலரும் என்னுடைய காரை வழிமறித்தனர். பி.எஸ்.ஓ, டிரைவரை காரை விட்டு கீழே இறங்கும்படி மிரட்டினர். இன்ஸ்பெக்டர் என்னுடைய காரிலிருந்து சாவியை எடுத்துக் கொண்டார். காரில் தனியாக இருந்த நான் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதுபோல் உணர்ந்தேன்.

பாலியல் தொல்லை
 
பாலியல் தொல்லை representational image

போலீஸ் வாகனம் என்னுடைய கார் செல்லவிடாமல் வழிமறித்து நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மாவட்ட அதிகாரி, என்னிடம் காவல்துறை உயரதிகாரி உங்கள் காரை வழிமறிக்கும்படி கூறியதாக தெரிவித்தார். நான் அவரிடம் என்னை செல்ல அனுமதிக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் மறுத்தார். மேலும் அவர், அந்த உயரதிகாரி போனில் இருப்பதாகவும் அவரிடம் பேசும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் பேச மறுத்துவிட்டேன். அதற்கு அவர், நீங்கள் காவல்துறை உயரதிகாரியிடம் பேசினால் மட்டுமே இங்கிருந்து செல்ல அனுமதிப்பேன் என்று கூறினார்.

5 நிமிடங்கள் வரை அங்கு காத்திருந்தேன். அதன்பிறகும் என்னை செல்ல அனுமதிக்காததால் காவல்துறை உயரதிகாரியிடம் போனில் பேசினேன். மறுமுனையில் பேசிய காவல்துறை உயரதிகாரி, எனது செயல்களுக்காக உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார். அதற்கு நான் காவல்துறை உயரதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். இந்த உரையாடலை நுண்ணறிவு பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அதனால் நான் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும் காவல்துறை உயரதிகாரி போனில் தெரிவித்தார். அதற்கு நான் (காவல்துறை உயரதிகாரி) உங்களிடம் பேச விரும்பவில்லை.

டிஜிபி அலுவலகம்
 
டிஜிபி அலுவலகம்

காவல்துறை உயரதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதற்கு காவல்துறை உயரதிகாரி, நாமெல்லாம் நண்பர்கள் என்று பேச ஆரம்பித்தார். அதற்கு நான், `நாம் நண்பர்களல்ல. நான் உங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், `நான் உன்னுடைய நலம் விரும்பி. உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். சென்னையில் பேசிக் கொள்ளலாம்’ என்றார். உடனே நான் உங்களிடம் பேச எதுவும் இல்லை. உயரதிகாரியைச் சந்தித்துக் கொள்கிறேன் என்றேன். ஆனால் அந்த காவல் அதிகாரியோ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அதன்பிறகு நான் சென்னைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினேன்.

அதற்கு காவல்துறை உயரதிகாரி, சில மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் என்னை பேசக் கூறினார். அதற்கு நான் அவசியமில்லை என்று மறுத்துவிட்டேன். எனினும் தொடர்ந்து வற்புறுத்தியதால் தொழில்நகர எஸ்.பி ஒருவரிடம் மட்டும் பேச சம்மதித்தேன். அதற்கு காவல்துறை உயரதிகாரி ஓகே என்று கூறினார். அதன்பிறகு எஸ்.பி-யிடம் போனைக் கொடுத்து விட்டேன். அதன்பிறகு எஸ்.பி-யிடம் காவல்துறை உயரதிகாரி பேசினார். அதன்பிறகு நான் சென்னைக்கு காரில் புறப்பட்டு வந்தேன். பின்னர் டிஜிபி, உள்துறை செயலாளரைச் சந்தித்து புகாரளித்தேன். புகாரைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு நான் பணியாற்றும் இடத்துக்கு திரும்பி காரில் வந்துக் கொண்டிருந்தேன்.

பாலியல் வன்கொடுமை
 
பாலியல் வன்கொடுமை Representational Image

அப்போது என்னிடம் போனில் பேசிய கணவர், தன்னுடைய தந்தைக்கு (மாமனாருக்கு) குறிப்பிட்ட செல்போன் நம்பரிலிருந்து சமரச அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார். அதுவரை என்னுடைய மாமனாருக்கு காரில் நடந்த விஷயம் தெரியாது. அதன்பிறகே என் மாமனாருக்கு எனக்கு நடந்த கொடுமை தெரியவந்தது. என்னுடைய மாமனாரிடமும் காவல்துறை உயரதிகாரி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சமரச பேசியவர் கூறியிருக்கிறார். காவல்துறை உயரதிகாரி ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்று எனக்கு தெரியவந்தது. என்னை புகாரளிக்க விடாமல் காவல்துறையினரால் தடுக்கப்பட்டேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மூலம் புகாரை வாபஸ் வாங்க எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது அதிகார துஷ்பிரயோகமாகும். காவல்துறை உயரதிகாரி, உயர்பதவியிலிருப்பதால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் அழிக்க முயற்சி செய்தார். அதனால் விசாரணை தொடங்குவதற்கு முன் அவரை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். காவல்துறை உயரதிகாரியால் எனக்கு நடந்த கொடுமைகள், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் 354 A (2), 341, 506(1), தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் 2002ன் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

`காருக்குள் என்ன நடந்தது?!’ - பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரில் இருப்பது என்ன?| Lady police IPS officer complaint against higher officer (vikatan.com)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.