Jump to content

கவலையில்லாத மனிதன்  - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவலையில்லாத மனிதன்

 

            சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.

 

            நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.

 

            சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?

 

            இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.

 

            24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.

 

            கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.

 

            வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.

 

                                                                                                   - சுப. சோமசுந்தரம்

   

 

 

                

 

  • Like 16
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறர் கவலையில் உள்ளனரோ இல்லையோ, இதனை எழுதும் நீங்கள் மகிழ்வாக உள்ளீர்கள் என்பது நிச்சயம்.

😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூனா...பானா, உங்கள் மகள் எழுதிய கதைகளை வாசித்துள்ளேன்!

இன்று உங்கள் கதையையும் வாசிக்கக் கிடைத்தது!

சம்பிரதாயங்களும், சமூக நம்பிக்கைகளும் காலத்திற்கேற்ப மாற வேண்டும்!

இல்லா விட்டால், அவையும் காலா வதியாகி விடும்..!

ஒருவரது மன மகிழ்ச்சி என்பது பணத்திலோ, பதவி உயர்விலோ  தங்கியிருப்பதில்லை என்றே நானும் கருதுகின்றேன்!

பிரபல மோட்டார் கார் கம்பனியின் உரிமையாளரான கென்றி போர்ட் என்பவர்...தனது கம்பனியில் தொழில் பார்க்கும் கறுப்பினத்தவஒ ஒருவன்... அவனது  மதிய உணவை அருந்தும் போது, அவன் முகத்திலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு தனக்குப் பொறாமை வருவதாக எழுதியுள்ளார்! அவ்வளவுக்கும் அவன் சாப்பிடுவதோ....வெறும் காய்ந்து போன பாண் துண்டுகள் மட்டுமே!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

அருமையான சொல்லாட்சி.

கவலை இல்லாத மனிதனைப் பற்றி கவலைக் கொண்டதால்... கிடைத்தது அருமையான பதிவு 🤝👏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" அதனால்தான் அவர் கவலை இல்லாமல் இருக்கின்றார். எல்லோருக்கும் அப்படி ஒரு "தில்" இருப்பதில்லை......நல்ல நகைச்சுவையான பதிவு சுப. சோமசுந்தரம்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் வாழ்கை, ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை பிரச்சனைகள், அருமை உங்கள் எழுத்து நடை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர்.

மடியிலே கனம் என்றால்
வழியிலே பயம் என்பார்கள்.

இது படிப்பு பணம் பதவி எல்லாவற்றுக்குமே எடை போடலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.

இரவுபகல் தான் வாழ்வு.
சிறிய வயதில் சந்தோசமென்றால் முதிர்ச்சியில் இல்லாமல் போகலாம்.
சிறிய வயதில் துயரம் என்றால் முதிர்ச்சி சந்தோசமாக அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

இரவுபகல் தான் வாழ்வு.
சிறிய வயதில் சந்தோசமென்றால் முதிர்ச்சியில் இல்லாமல் போகலாம்.
சிறிய வயதில் துயரம் என்றால் முதிர்ச்சி சந்தோசமாக அமையலாம்.

முதலில் உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி, திரு.ஈழப்பிரியன். நீங்கள் ரசித்து வாசித்தமை இருமுறை நீங்கள் அளித்துள்ள கருத்துக்களிலிருந்து தெளிவு. குறிப்பாக, உங்களிடமிருந்து இரத்தினச் சுருக்கமாக சில தத்துவார்த்த முத்துக்களை உதிர வைத்தது எனக்கான மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

இந்த மகத்தான கதைசொல்லியின்  அற்புதமான மனித வாசிப்பில் உருவான இப் படைப்பு, யாழ் வாசகர்கள் முன்பு எழுத்து வடிவில் தரப்படும் முன்னரே, செவிவழியாக நேரில் கேட்கும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்: எழுத்தாளரின் சொல்லோவியமும், எழுத்தோவியமும், கல்கியின் "பொன்னியின் செல்வன்" படைப்பாற்றலை நினைவூட்டியது. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஊரில் இருக்கும் போதுநானும் இப்படித்தான் இருந்தேன் கவலை இல்லாமல்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.