Jump to content

சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021
================================


உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். 

ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குத் தடையாகவும் பலநேரங்களில் அவர்கள் மீது அநாவசியமான அழுத்தங்களைக் கொடுப்பவர்களாகவும் ஆண்கள் மட்டுமே இருப்பதில்லை. சமூகத்தில் உள்ள பிற பெண்களும் ஊடகங்களும் கூட தமது பங்குக்கு பெண்கள் மீது வன்முறையை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஒருவாரத்தில் பெண்கள் தொடர்பான சில பத்திரிகை/ இணையச் செய்திகளைப் பார்க்க முடிந்தது.
1. யாழ்ப்பாணத்தில் அண்மையில் தன் குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பெண்
2. கிளிநொச்சியில் தனது மூன்று குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்ய முயன்ற ஒரு பெண்
3. இந்தியாவின் சண்டிகாரில் தனது ஐந்து மாதக் குழந்தையுடன் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்ட பிரியங்கா என்ற காவல்துறையில் பணிபுரியும் பெண்.
4. பிம்ஷா ஜாசின் ஆராச்சியின் பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனத்தை எதிர்த்து 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் வழக்குத் தாக்கல்.

இதில் முதல் செய்தியில் சொல்லப்பட்ட பெண் மிக இளவயதில் குறைந்த வருமானமுள்ள குடும்பத்தவர். மிக இளவயதில் வருமானம் ஈட்ட மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்றவர். அதன் பின்னர் ஏற்பட்ட தொடர் சம்பவங்களால் கையில் ஒரு ஐந்து மாதக் குழந்தையுடன் நாடு திரும்பியவர். இன்று தனது கைக்குழந்தையை அடித்துத் துன்புறுத்திய குற்றத்திற்காக விசாரணையை எதிர்நோக்குகிறார். 

இவருடைய இன்றைய நடத்தைக்கு (அல்லது பலர் சொல்வதுபோல அவர் இழைத்த குற்றத்திற்கு) இவர் மட்டுமே பொறுப்பல்ல. இவர் இளவயதில் குடும்பத்திற்காக வருமானம் ஈட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டமை, இன்று ஒரு கைக்குழந்தையுடன் நாடு திரும்பியமை என்பவற்றில் அவரின் தந்தை மற்றும் வளைகுடா நாட்டில் இருக்கும் அவரின் கணவரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்தானே. 

ஆனால் இன்று அவரை மிகவும் ஆபத்தான குற்றவாளியாக சித்தரிக்கும், விமர்சிக்கும் சில ஊடகங்களும் இணையப் பாவனையாளர்கள் பலரும் அந்தப் பெண்ணையே குற்றவாளியாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவருக்காக வாதாட முன்வந்த பெண் வழக்கறிஞரையும் பணத்திற்காக குற்றவாளியைக் காப்பாற்றத் துடிக்கும் வழக்கறிஞர் என்று பல பெண்களே சமூக வலைத் தளங்களில் தூற்றுவதையும் பார்க்க முடிந்தது.

அந்தப் பெண்ணின் விடயத்தில் பெற்றோர் அவருக்கு இளவயதில் கல்வியையும் சரியான வழிகாட்டலையும் வழங்கியிருந்தால் இவருடைய நிலை இன்று வேறாக இருந்திருக்கக்கூடும். யாரோ முகம் தெரியாதவரை சமூக வலைதளத்தில் சந்தித்து, காதலித்து இன்று கையில் ஒரு பிள்ளையுடன் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. 

இரண்டாவது பெண் தனது குடிகாரக் கணவனுடன் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும் ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டதுடன் தானும் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அவரின் மூன்று பிள்ளைகளும் இறந்துவிட்ட நிலையில் அவர் காபாற்றப்பட்டுள்ளார். இந்த விடயத்திலும் அந்தப் பெண்ணின் மீதுதான் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் பிள்ளைகளைக் கொன்றதும் சட்டப்படி குற்றமே. 

ஆயினும் குடிகாரக் கணவனால் தினமும் குடும்ப வன்முறைக்கு முகம் கொடுத்த இனி இந்த மனிதனுடன் வாழமுடியாது, இந்த உலகத்தில் இனியும் உயிருடன் இருப்பதில் பயனில்லை என்று சிந்திக்கத் தூண்டிய கணவனை குற்றம் சாட்டவில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அவன் ஒரு குடிகாரன் மட்டுமே. தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்ற அந்தப் பெண்தானே இரக்கமற்ற கொலைகாரி. இதுதான் எமது சமூகத்தின் பார்வை. 

ஒருவரைத் தற்கொலை செய்யத் தூண்டியவரும் சட்டப்படி குற்றவாளி என்பதை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். மனைவியை அடிப்பதும் இலங்கையில் சட்டபடி குற்றம். உண்மையில் அந்தக் கணவன்தான் முக்கியமான குற்றவாளி. ஆனால் ஆணாதிக்க கட்டமைப்பை கட்டிகாக்க விரும்பும் சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. 

இது ஒருபுறம் இருக்க, அந்தப் பெண் கல்வி கற்று ஒரு தொழில் புரிபவராக இருந்திருந்தால், தன்னம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் நிச்சயம் இந்த முடிவிற்கு வந்திருக்க மாட்டார். கணவனைப் பிரிந்து பிள்ளைகளைத் தனியாகவே வளர்க்கும் முடிவுக்கு வந்திருப்பார். மேலை நாடுகளில் இருப்பது போல தற்காலிக வதிவிட வசதி, பிள்ளைகளைப் பராமரிக்க அரச நிதியுதவி போன்ற வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அவர் தற்கொலை முடிவிற்குப் போயிருக்க மாட்டார் என்று நம்பலாம்.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட இந்தியப் பெண் காவலதிகாரி இரண்டு நாட்களுக்கு முன்னர் போக்குவரத்துக்கு கடமைக்குத் தனது ஐந்து மாதக் கைக்குழந்தையுடன் தெருவில் கடமைக்கு வந்து நின்றது பெரும் செய்தியானது. இவரை இவ்வாறு தனது கைக்குழந்தையுடன் பெருந்தெருவில் கடமைக்கு அனுப்பிய உயரதிகாரிகள் மீது குற்றமும் சுமத்தப்பட்டது. 

ஆனால் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் உண்மையில் உயரதிகாரிகள் மட்டுமா? அந்தக் குழந்தையின் தந்தைக்கு அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொறுப்பு இல்லையா? பெண்களும் தமது குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலில் இவ்வாறான இளம் தாய்மார்கள் தமது பிள்ளைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கு ஏற்ற வசதிகளை உருவாக்கிக் கொடுக்காத எமது அமைப்புகளும் தவறில்லையா? குழந்தைகளுக்குத் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் அவசியம் என்று பிரச்சாரம் செய்யும் அரசுகள் ஏன் அனைத்து வேலை செய்யும் பெண்களுக்கும் முழுமையாக ஆறு மாதங்களுக்குக்  கொடுப்பனவுடன் கூடிய பேற்றுக்கால விடுமுறையை வழங்கக்கூடாது என்ற கேள்வியையும் இந்த சம்பவம் கேட்க வைக்கிறது. 

நான்காவதாக குறிப்பிடப்பட்டவர் ஏனைய மூன்று பெண்களையும் விட கல்வியில், தொழில் தகமையில் மேம்பட்டவர். சமூகத்தில் உயர் பொலீஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் உள்ளவர். ஆனால் அவராலும் இந்த ஆணாதிக்க சிந்தனாவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. கடந்த மாதம் அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றில் 33 ஆண் உயர் பொலிஸ் அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். ஒரு பெண்ணை பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம் என்று தமது திணைக்கள பதவியுயர்வு தொடர்பான விதிமுறைகளில் சொல்லப்படவில்லை என்பதுதான் அவர்களின் வாதம்.

இந்த நான்கு விதமான செய்திகளையும் படித்தபோது எனது மனதில் தோன்றிய ஒரே விடயம், பெண் படிக்காத கிராமத்தவளாக இருந்தாலும், படித்து உயர் பதவியில் இருந்தாலும் அவள் ஆணைவிட ஒருபடி குறைவானவள் என்றே இன்றும் பல சமூகங்கள் நம்புகின்றன. போததற்கு இன்று பலரின் வீட்டில் அழையா விருந்தாளியாக வந்து தங்கியிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் தொடர்ந்தும் “இதுதான் குடும்பப் பாங்கான, கலாச்சாரத்தை காப்பாற்றும் வாழ்க்கைமுறை” என்ற பெயரில்  பழமைவாதத்தை ஆண் பெண் இருபாலாரின் தலைக்குள்ளும் திணித்து விடுகின்றன.
 
இவ்வாறான புறச்சூழல்கள் ஆணையும் பெண்ணையும் அவ்வாறான கோட்பாட்டை நம்பச் செய்ய முயல்வதுடன் பல சமயங்களில் வெற்றி பெற்றும் விடுகின்றன. ஆண்கள் மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் அதன் விளைவுதான். ஆனால் பெண்ணும் ஒரு சமுதாயத்தில் பலமானவளாக, பங்களிப்பவளாக மாறும்போது அந்த சமூகம் விரைவாக முன்னேறும் என்ற உண்மையை ஆணாதிக்கத்தை காதலிக்கும் ஆண்கள் உணரும்வரை, பெண்களில் திறமையை ஊக்குவிக்கும், பாராட்டும் சமூகமாக மாறாதவரை  அந்த சமூகம் அடுத்த நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிச் சமூகமாகவே இருக்கப் போகிறது.

-- அக்கம்-பக்கம் --

 

https://www.facebook.com/101881847986243/posts/287022779472148/?d=n

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.