Jump to content

தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனை மறுத்தல் அகத்திணை மரபா.?

Screenshot-2021-03-09-12-24-29-385-org-m

 

தொகையும் பாட்டும் சங்க இலக்கியமென்று தமிழ்க்கூறும் நல்லுலகம் போற்றி வந்தது. தமிழிலக்கயத்தில் சங்கப் பாடல்களை நோக்குமிடத்து அகம், புறம், அகப்புறம் என்று பாகுபாடு செய்துள்ளனர். இது பாடற்பொருளின் தன்மை நோக்கிச் செய்யப்பட்ட பாகுபாடாகும்.

சங்கப்பாடல்கள் மொத்தம் 2381. இதில் புறப்பாடல்களை விட அகப்பாடல்களே அதிகமானவை. காரணம், பண்டைய தமிழ்ச் சமூகம் களவு, கற்பு என்னும் வாழ்க்கை நெறிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதாகும். இந்நெறியானது களவில் அரும்பி கற்பில் மலர்கிறது. அகவாழ்க்கையில் தலைமக்களாகத் தலைவன், தலைவி, கருதப்பட்டாலும், தோழியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அகத்திணையின் உயிர்ப்பண்பாகக் காதலர் தம் மனவொற்றுமை இருக்கும் போது தலைவனைத் தலைவியின் நிலையிலிருந்து தோழி வேண்டாமென்று மறுத்துக் கூறக் காரணம் யாது? அவ்வாறு மறுத்துக்கூறும் போது, இதற்குத் தலைவி ஏன் பதில்மொழியவில்லை? என்பவற்றை நற்றிணைப் பாடல்வழி நின்று இக்கட்டுரை ஆராய்கிறது.

அகத்திணைக் கோட்பாடு

அகத்திணையின் பாடுபொருள்களுள் ஒன்றாகக் காதல் உணர்வு இருந்துள்ளது. இவ்வுணர்வு உள்ளத்தோடு உள்ளம் ஒன்றியதின் விளைவால் தோன்றுகிறது. இவ்வுணர்வின் அடிப்படையில் அக ஒழுக்கங்களைத் தொல்காப்பியர்,

‘’கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப”
(தொல்.பொருள்.அகம். 1)

என்று ஏழு திணைகளாக வகுத்துள்ளார். அவை, கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பனவாம். இவ்வெழுதிணையைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று ஒழுக்கத்தின் அடிப்படையில் மூன்றாக வகுத்துக் காட்டினர். தொல்காப்பியர் கைக்கிளை, பெருந்திணைக்கட்கு (53, 54) இரண்டு நூற்பாக்களில் திணையின் காதற்செய்கையினைக் கூறியுள்ளாரே தவிர, திணைக்கான இலக்கணத்தைக் கூறவில்லை.

அதேபோல், ஐந்திணைக்கும் துறைகளில் திணைக்கான காதற்செய்கையினை வகுத்துக் காட்டினாரே அன்றி, இலக்கணம் கூறவில்லை.

தொல்காப்பியத்துக்குப் பின்தோன்றிய அகப்பொருள் விளக்கமே கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்பவற்றிற்குப் பின்வருமாறு இலக்கணம் கூறுகிறது.

“கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்” (அகப்.விள.அகம். 3)

“ஐந்திணை உடையது அன்புடைக் காமம்” (மேலது., 4)

“பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்” (மேலது., 5)

ஒருதலை, அன்புடை, பொருந்தா என்ற அடைமொழிகளில் திணைகளின் காமத்தன்மையையும், திணைக்கான வேறுபாட்டையும் மொழிகிறார் நாற்கவிராச நம்பி.

கைக்கிளை என்பது சிறிய உறவா? இழிந்த உறவா? என்பதில் கருத்து வேறுபாடும் ஐயப்பாடும் உண்டு. இளம்பூரணர்உரை கூறும் போது ‘பெருமையில்லா தலைமக்கள் உறவு’ என்கிறார். இப்பகுதிக்கு உரைகூறும் நச்சினார்க்கினியர் ‘ஒருமருங்கு பற்றிய கேண்மை’ என்பார். இதற்கு வ. சுப. மாணிக்கனார், கைக்கிளை என்னும் குறியீடானது இருபாலர்க்கும் பொதுவானது. அவ்வாறு பொதுவாயினும், இளையவன் காதலைக் கூறுவதே இலக்கணமாகும் என்கிறார்.

இதனையே, தொல்காப்பியர் “சொல்லெதிர்பெறாஅன்” என்கிறார். இப்பகுதிக்கு உரை கூறும் கி. இராசா ‘தன்னையும் அவளையும் இணைத்துப் பேசி அவளிடமிருந்து மறுமொழி பெறாதப் போதும் தானே சொல்லி மகிழ்வது’ என்பார். எனவே, சிறிய உறவு முறையினைக் கொண்டது கைக்கிளையென்று தெளிவாகிறது. ஆனால், கைக்கிளை என்பது இழிந்த உறவா? என்பதற்கு இல்லையென்று வ. சுப. மாணிக்கனாரின் விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

ஐந்திணை என்பது உள்ளப் புணர்ச்சியும் உடற் புணர்ச்சியும் இரண்டறக் கலந்த ஓருயிர்ப் புணர்ச்சியாகும். வ. சுப. மாணிக்கனார், ஐந்திணையாவது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்ற காமம் நுதலுகிற காமவினைகளைக் கொண்டவை என்கிறார்.

பெருந்திணை என்பதற்கு ஒரு சாரார்வலிந்த காமம் என்றும், மற்றொரு சாரார் ஒவ்வாகாமம் என்றும் கருதினர். இருசாரார் கருத்திலும் மாறுபாடு காணப்படுகிறது. இருசாராரின் கருத்தும் தவறானது என்றுக் கூறிய வ. சுப. மாணிக்கனார், தலைவனின் மிகு செயல்களையே பெருந்திணை என்கிறார். உதாரணமாக, காதலியைத் தன் பெருமுயற்சியால் இல்லக்கிழத்தியாக ஆக்குதல், காதற்றொடர்பை மடலேறி ஊருக்கு அறிவித்தல் போன்ற தலைவனின் மிகுச் செயல்களைத்தான் பெருந்திணை என்கிறார்.

அகத்திணைக் குறிக்கோள்

களவொழுக்கமானது இருவருள்ளத்தும் உள்நின்று தோன்றிய அன்பின் பெருக்கத்தால், ‘தான், அவள்’ என்ற வேற்றுமை ஏதுமின்றி, இருவரும் ஒருவரேயென ஒழுகுவதே உள்ளப்புணர்ச்சியாகும். இக்களவொழுக்கம் எதிர்பார்த்து நிகழக்கூடியது அல்ல. எதிர்பாராவிதமாக நிகழும் நிகழ்வாகும். இதனை இறையனார் களவியல்,

“அதுவே,

தானே அவளே தமியர்கரணக்

காமம் புணர்ச்சி இருவயின் ஒத்தல்”
(இறை.அகப்.ப. 28)

என்று குறிப்பிடுகிறார்.

இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ஒருவரையொருவர் இன்றியமையாததொழுகும் உயிரோரன்ன செயிர்தீர்நட்பே நிலைபெற்று வளர்வதாகும். பின்னர், ஒருவரையொருவர் பிரிவின்றியொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணம் செய்து வாழுகிற கற்பென்னும் நிலையினை அடைவர். இதனை மேலும் உறுதிபடுத்தும் வகையில், “உயிர்ஓரன்ன செயிர்தீர்நட்பின்” (நற்.72) என்னும் தொடருக்கு, ‘நாம் இருவரும் ஓருயிர்ஈருடலாய் இருந்ததால் நினக்கு ஒன்றை மறைத்தல் குற்றமாகும்’ என்று உரை கூறுவார் வ. த. இராமசுப்பிரமணியம்.

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே”
(தொல்.பொருள்.களவு. 2)

ஒன்றுபடுதல், வேறுபடுதல் என்னும் இருதிறத்தினை (நல்வினை, தீவினை) உடைய ஊழால் (முன்வினைப் பயன்) இருவரையும் ஊக்குவிக்கின்ற நல்வினையால் தமக்குள் ஒத்த கூறுபாடுகளையுடையத் தலைவனும் தலைவியும் காண்பதே களவாகும். இவர்களுள் தலைவியைக் காட்டிலும் தலைவன் தகுதி மேம்பட்டவன் எனினும் தவிர்தல் இல்லை என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் கி. இராசா. பாலது ஆணை - எத்தனையோ பேரைப் பார்க்கும் போது தோன்றாத காதல் உணர்வு ஒருவரைப் பார்க்கும் போது மட்டும் தோன்றுவதை பாலின் பொருட்டு அல்லது கடவுளின் செயல் அல்லது விதியின் ஆணையால் நிகழ்வதாக அகப்பொருள் கூறுகிறது.

ஒத்த என்னும் சொல்லானது, ஒப்புமையுடைய (பிறப்பு, ஆளுமை, ஆண்டு, வனப்பு, அன்பு, அடக்கம், அருள், உணர்வு, வளம்) என்ற பொருளில் எடுத்தாளப்பட்டிருப்பினும், ‘மிக்கோ னாயினும் கடிவரை யின்றே’ என்பதன் மூலம் தலைவன் தலைவியின் மேற்கூறிய ஒத்த நிலைகளிலிருந்து தகுதி மேம்பட்டவனாக இருப்பினும், அவனைத் தவிர்க்கும் உரிமை தலைவிக்குக் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது.

தலைவன் தலைவி இருவரிடையே நிகழும் களவொழுக்கமானது காம உணர்வுகளை வெளிப்படுத்தத் தூண்டும். இதனைத் தொல்காப்பியர்,

“வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்

சிறப்புடை மரபினவை களவென மொழிப”
(தொல்.பொருள்.களவு. 9)

ஆகிய ஒன்பதும் களவொழுக்கத்துக்குரிய சிறந்த உணர்வு நிலைகளாகச் சுட்டுவார். இவ்வுணர்வு நிலைகள் தலைமகட்கும், தலைமகற்கும் ஒக்கும் என்பார் இளம்பூரணர். இதில் நோக்குவ எல்லாம் அவையே போறல், சாக்காடு (இறப்பதற்கு இணையான துன்பநிலை) என்ற இருநிலைகள் காம உணர்வின் உச்சகட்ட நிலையினைக் காட்டுவதாக உள்ளன.

காம உணர்வானது இருவரிடத்தும் மேலோங்கிக் காணப்பட்டாலும், அக்காம உணர்வினை வெளிப்படுத்தும் முறை தலைவிக்கு இல்லை என்பார் தொல்காப்பியர். இதனை,

“தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை”
(தொல்.பொருள்.களவு. 28)

தலைவி தனது காதல் வேட்கையினைத் தலைவனுக்கு முற்கிளத்தல் இல்லை என்கிறார். மிகுந்த துன்பம் தரக்கூடிய காமத்தினை தலைவி தலைவனிடம் சொல்லும் முறைமை இல்லை என்பதனை,

“நோய் அலைக் கலங்கிய மதன்அழி பொழுதில்

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்

யானென் பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்

கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ

மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவிஇணர்”
(நற். 94)

என்னும் பாடல் தலைவியின் கூற்றில் அமைந்தது. இப்பாடலுக்கு உரை கூறும் எச். வேங்கடராமன், ‘அன்புடன் வந்து அருகிலிருந்து அன்பான இனிய உரைகளைக் கூறி ஆற்றுவித்தல், ஆண் மகனுக்குரிய சிறந்த பண்பாகும். தலைவி என்பவள் தன்னுடைய பெண்மையால் தூய்மை செய்யாதப் பசியமுத்து தனது நிறைந்த ஒளியை மறைத்துக் காட்டினாற்போல, துன்பம் தரக்கூடிய காமத்தை மறைத்துக் கொள்வாள்’ என்கிறார். இது போன்ற செயல்கள் அகத்திணையின் குறிக்கோளை எடுத்துக்காட்டுகின்றன.

அகத்திணைக்கு மாறுபாடான நற்றிணைப் பாடல்

“இவளே கானல் நண்ணிய காமர்சிறுகுடி,

நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு

மீனெறி பரதவர்மகளே நீயே

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்

கடுந்தோர்ச் செல்வன் காதல் மகனே

நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ

புலவு நாறுதும் செலநின் றீமோ

பெருநீர்விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை

நும்மொடு புரைவதோ அன்றே

எம்ம னோரில் செம்மலு முடைத்தே”
(நற். 45)

நெய்தல் நிலத் தலைவியின் நிலையில் நின்ற தோழி, தேரையுடைய செல்வந்தனின் அன்புக்குரிய மகனை வேண்டாம் என்று மறுப்பாதாக இப்பாடல் அமைந்துள்ளது. இது அகத்திணை மரபுக்கு மாறுபட்டதாகக் காணப்படுகிறது. எவ்வாறெனின், இப்பாடலில் தலைவனை வேண்டாமெனத் தோழி மறுக்க காரணம் தலைவனுடைய ஊரா? குடியா? தொழிலா? செல்வமா? நில வேறுபாடா? உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற குலமா? என்று பலவாறு சிந்திக்கத் தூண்டுகிறது.

ஊர் - தலைமகளானத் தலைவி, கடற்கரையொட்டிய கானலிடத்துள்ள சிறிய குடிசையின்கண் வாழ்ந்து வருகின்ற வாழ்க்கையினை உடையவள். ஆனால் தலைவனோ கொடிகள் உயர்ந்து பறக்கக்கூடிய கடைத் தெருக்களையுடைய மூதூர்க்கண் வாழுகின்றவன் ஆவான்.

குடி - தலைவி, தலைவன் ஆகிய இருவரின் பிறப்பினைக் கூறும்போது தலைவியானவள், நீலநிறத்தில் காட்சித்தரும் பெரிய பரப்பினைக்கொண்ட கடலில் செல்லும்போது அக்கடலே கலக்குமாறு உட்புகுந்து, மீன் வேட்டையினை நடத்துகின்ற பரதவர்களின் மகளே தலைவி ஆவாள். தலைவனுடைய பெற்றோர் கடல்கட்குச் செல்லாமல் கால்வலியத் தரைவழியில் நெடுந்தேரினை கடுகிச் செலுத்துகின்ற செல்வந்தனின் மகனாவான்.

தொழில் - நிணம் உடைய சுறாமீன்களை அறுத்துக் காயவைத்து இருக்க அவற்றைக்கவரும் புள்ளினங்களை ஓட்டுபவளாகவும், சுறாமீன்களோடு வாழ்வதால் புலால் நாற்றம் வீசுபவளாகவும் தலைவியுள்ளாள். வேந்தனின் மகனாக தலைவன் இருந்துள்ளமையால் தேரினை ஓட்டக்கூடிய பாணனை வழி நடத்துபவனாக இருந்துள்ளான்.

செல்வம் - பரதவர்களின் கடல்வாழ்க்கை என்பது பெருநீர்விளையுள் சிறிய நல்ல வாழ்க்கையாகும். கடலுக்குச் சென்று மீன்வேட்டை சிறந்தால் மட்டுமே இவர்களால் வாழ்க்கை நடத்தமுடியும். இவர்கள் மீன் வேட்டையன்றி, வேறுதொழில் ஏதும் கல்லாதவர். வேந்தன் மரபில் தோன்றியவனாகத் தலைவன் இருப்பதால், பொருளீட்ட வேண்டிய தேவையேதும் கிடையாது. இவன் பலர்க்கும் கொடையளிக்கக் கூடிய மரபின் வழி வந்தவனாக இருந்திருக்கிறான்.

நில வேறுபாடு - தலைவி நெய்தல் நிலத்தினைச் சார்ந்தவள் என்பது தெளிவாகிறது. வேந்தனின் மகன் தலைவன் என்றுக் கூறுவதன் மூலம் அரசமுறை முல்லை நிலத்தில் தோன்றியிருந்தாலும், அது மருதநிலத்தில்தான் நிலைப்பெற்றிருக்கக் கூடும். எனவே தலைவன் மூதூரினையுடைய மருதநிலத்துக்குரியவனாவான். இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக, இப்பாடலுக்கு உரையெழுதிய கு. வெ. பாலசுப்பிரமணியன் நெய்தல் நிலத் தலைவியைப் பிற நிலத்தினின்றும், தேரில் வந்த செல்வன் காதலுகின்ற வழக்கம் இருந்துள்ளமையை “நில்லாது கழிந்த கல்லென நெடுந்தேர்யான்கண்டன்றோ இலனே” என்னும் (குறுந். 311) பாடலைச் சான்று காட்டுகிறார்.

குலம்- வேந்தன் மரபில் வந்த தலைவன் உயர்ந்தவனாகவும், மீன்வேட்டையாடும் பரதவர்களின் வழியில் வந்த தலைவித் தாழ்ந்தவளாகவும் இருந்துள்ளதால், இவ்விருவரிடையே ஏற்றத்தாழ்வு தோன்றியிருக்கக் கூடும். இருப்பினும் குலத்தகுதி கருதாது காதல் படருமென்பதை, “இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்ட ஆண்டொழிந்தன்றே” என்ற (குறுந். 118) பாடலைச் சான்று காட்டுகிறார், இப்பாடலுக்கு உரையெழுதிய கு. வெ. பாலசுப்பிரமணியம்.

தோழி மறுத்துக் கூற காரணம் யாது?

தலைவியின் உற்றவள் தோழியாவாள். தலைவன், தலைவி ஆகியோரின் பண்புகளைச் சித்தரித்துக் காட்டும் இன்றியமையாதப் பாத்திரமாகத் தோழி விளங்குகிறாள். தலைவன், தலைவி இருவரும் நேரடியாக உரையாடுவதைக் காட்டிலும், தோழியின் வாயிலாக உரை நிகழும் இடங்களே அதிகம். அப்பாடல்கள் இலக்கியச்சுவை கொண்டவையாக அமைகின்றன. எனவே, தோழி தலைவனுக்கு மறுப்புத் தெரிவிக்க இரண்டு காரணங்கள் இருந்திருக்கக் கூடும். அவை,

1. தலைவனின் நிலை

2. தலைவனின் அன்பு

தலைவனின் நிலை

தலைவியைக் காட்டிலும் ஊர், குடி, தொழில், செல்வம், குலம் போன்ற நிலைகளில் உயர்ந்தவனாக மூதூர்த் தலைவன் இருந்துள்ளான். தலைவி தலைவனுடைய அனைத்து நிலைகளிலும் தாழ்ந்தவளாக இருக்கிறாள். இதனடிப்படையில் தலைவனை வேண்டாமென்று மறுத்துக் கூறியிருக்கலாம்.

தலைவனின் அன்பு

தலைவனைத் தேர்ந்தெடுக்கும் முறையில் தோழியின் மதிநுட்பமானது வியப்பிற்குரியது மட்டுமல்லாமல், போற்றுதலுக்குரியதுமாகும். காரணம், தோழி இப்பாடலில் ‘எம்மனோரில் செம்மலும் உடைத்தே’ என்று கூறுவதன் மூலமாகப் பரதவத் தோன்றலின் வழியில் வந்தவர்கள் செல்வ வளம் நிறைந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. இருப்பினும், மூதூர்த்தலைவனின் செல்வ வளத்தோடு ஒப்பிடும் போது குறைந்தவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. மேலும், நெய்தல் நிலத்தலைவனாக இருப்பின் அவனுடைய அன்பும் குறையாமல் இருந்திருக்கும் என்ற நோக்கில் மறுத்துக் கூறவும் இடமுண்டு. ஆகவேதான், மூதூர்த் தலைவனை வேண்டாமெனத் தோழி மறுத்திருக்கக் கூடும்.

தலைவி பதில் மொழியாமை

தோழி மூதூர்த் தலைவனை மறுத்ததற்குத் தலைவி எவ்விதமானப் பதிலும் கூறாமல் இருந்தமைக்குக் காரணமுண்டு. “சூழ்தலும் உசாத்துணை நிலமையிற் பொலிமே” (தொல்.பொருள்.களவு. 36) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரைகூறும் கி. இராசா ‘தலைமகனும் தலைமகளும் ஒழுகும் களவொழுக்கத்திற்கு இன்றியமையாத துணையாக இருந்து அவ்வொழுக்கத்தை ஆராய்ந்து துணிதல் என்பது தோழிக்கு உரிய சிறந்த பண்பாகும்’ என்பார். தோழி என்பவள் இனம், சமூகம் சார்ந்து சிந்திக்கக் கூடியவளாக இருந்ததன் பொருட்டே, சரியான தலைவனைத் தேர்ந்தெடுத்து, அவனைக் குறியின்கண் நிறுத்தி, பரத்தை நோக்கிச் செல்லும்போது, அவனுக்கு அறிவுரைக் கூறி, தலைவன் பொருள்வயிற் பிரிவின்போது தலைவிக்கு ஆறுதல் கூறி, களவொழுக்கம் நீளும்போது வரைந்துக்கொள்ள வற்புறுத்துதல் போன்ற நிலைகளில் தோழியே தலைவியின் நலன் கருதிச் செயல்படுவதால், தலைவி தோழிக்கு அறத்தொடு நின்று ஒழுகினாள் என்பது நிரூபனமாகின்றது.

மா. சிவஞானம்

இளம் முனைவர்பட்ட ஆய்வாளர்,
காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்.

காந்தி கிராமம்.

http://www.muthukamalam.com/essay/literature/p268.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.