Jump to content

இந்து என உணர்தல் - ஜெயமோகன்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

இந்து என உணர்தல் - ஜெயமோகன்

March 29, 2021

fine_arts_main-300x170.jpg

உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன்.

பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெருக்கமான அக பயணத்தை மேற்கொண்டேன். இப்போது உங்கள் வலைதளத்தின் வாயிலாக தினமும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

பின் நவீனத்துவத்தின் மீதான என் காதலை வார்த்தெடுத்தவர் நீங்கள் தான். தர்க்கத்தையும் தாண்டிய உச்ச நிலைகளை உங்கள் படைப்பின் மூலம்தான் கண்டுணர்ந்தேன். ஆனாலும் உங்களின் உன்னத படைப்புகளாகக் கருதப்படும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு போன்றவற்றை நான் வாசித்தது இல்லை. இன்னும் நான் அவ்வளவு வளரவில்லை அல்லது இன்னும் நான் அங்கு வந்து சேரவில்லை என்றே எண்ணிக்கொள்கிறேன். அதனாலேயே உங்களின் தீவிர வாசகன் என கூறிக்கொள்ளும் நிலையை நான் அடையவில்லை என்றே நினைக்கிறேன்.

நிறைய முறை உங்களுக்கு எழுத எண்ணித் தோற்றிருக்கிறேன். என்ன எழுதுவது?. நான் எழுத நினைப்பவற்றையும், எனக்கு தேவைப்படுவன பற்றியும் முன்பே அறிந்ததைப்போல் எழுதித் தீர்த்துவிடும் ஆசானிடம் புதிதாக என்ன கேட்பது. நிறைய கட்டுரைகளை நீங்கள் எனக்காக எழுதியதாகவே எண்ணி உள்ளம் மகிழ்ந்திருக்கிறேன்.

இன்றும் வழக்கம் போல் தோற்றுப்போகாமல் உங்களுக்கு எழுதிவிடுகிறேன்.

எனது ஐயங்கள்

அ) இந்துக்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய எழுதிவிட்டீர்கள். சலித்திருக்கூடும். என்னுடைய கேள்வியும் இதை ஒட்டிதான். அந்த வேறுபாட்டை என்னால் நன்கு உணரமுடிகிறது. ஆனால் ஒரு இந்துவாக நான் ஏன் பெருமைப்பட வேண்டும்? உங்களின் சாதியாதல் கட்டுரையில் “ஒரு மனிதனை அவனுடைய சொந்த ஆளுமையை வைத்து மதிப்பிடும்போதுதான் அவனுக்குரிய உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது” என்ற உங்கள் சொற்கள் காட்டும் வெளிச்சத்தின்வழி பார்த்தால் இந்துவாக பிறந்ததைத்தவிர வேறு என்ன செய்துவிட்டேன் நான் பெருமை கொள்வதற்கு? சாதியைப் போல் மதமும் ஒரு குறுகலான மனப்பான்மைதானே?

ஆ) நான் அண்ணல் அம்பேத்கரின் கண்களால் இந்து மதத்தை அணுகியவன். எனக்கு இந்துக்கள் என்பவர்கள் சாதிகளால் பிணைக்கப்பட்ட குழுமம் என்ற புரிதலே மேலோங்கி இருக்கிறது. ஒரு சக இந்து வலியால் துடித்துக்கொண்டிருக்க, நான் மட்டும் எவ்வாறு ‘இந்து’ எனக் கூறி பெருமிதம் அடைய முடியும். நீங்கள் சொல்லும் ஆசாரங்கள் வேறு இந்து தரிசனம் வேறு என்ற வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த புரிதல் யாருடைய வலியையும் நீக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இப்போதைய இந்துக்கள் யாரும் இந்து மதம் போதிக்கும் தத்தவங்களை அறியாதவர்களா? அந்த அறியாமையில் என்ன பெருமை?

இந்த ஐயங்களை உங்களிடம் சமர்பிக்கிறேன். இவற்றில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

இப்படிக்கு

கருப்பன்

[விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்]

siva-300x300.jpg

அன்புள்ள கருப்பன்,

உங்கள் புனைபெயருடன் உண்மைப்பெயரையும் பிரசுரிக்கிறேன். ஏனென்றால் இளமையில் நாம் இப்படிச் சில அடையாளங்களை சூட்டிக்கொண்டு அதனூடாகச் சிந்திக்கிறோம்.  பிறரையும் அப்படி நம்மை பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறோம். இதனால் நம்மை பிறர் பார்க்கும் பார்வையையும் கட்டுப்படுத்திவிடுகிறோம். மெய்யான எதிர்வினைகள் வராமல் செய்துவிடுகிறோம்.

உங்களுடைய ஐயங்கள் மெய்யானவை. இந்த ஐயங்களை அல்லது இவற்றுக்குப் பின்னாலுள்ள அறவுணர்வை மழுங்கவைக்க நான் முயலப்போவதில்லை. அவை அவ்வாறே கூர்மையுடன் நீடிக்கட்டும் என்றே சொல்ல விரும்புகிறேன்.

*

முதலில் ஏன் இந்து என்ற அடையாளம் அல்லது மரபுத்தொடர்ச்சி தேவை என நான் நினைக்கிறேன்? இது என் தரப்பு, நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கான பதில். நீங்கள் இதை யோசித்துப்பார்க்கலாம் என்று மட்டுமே சொல்வேன்.

நான் மானுட அறிதல் என்பது நிகழ்காலத்தின் எல்லைக்குள் நின்றிருப்பது அல்ல என்று உறுதியாக அறிகிறேன். நிகழ்காலத்தின் அரசியல், சமூகவியல், பண்பாட்டுச்சூழலில் இருந்து அறிதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்க்கமுடியாது, அது இயல்பான செயல்பாடு. ஆனால் அறிதல் என்பது தொடர்ச்சியானது. மிகமிகத் தொன்மையான காலத்தில் இருந்து, பழங்குடிக் காலத்திற்கும் முன்பிருந்து, திரண்டு வந்துகொண்டிருப்பது. நம் வழியாக முன்செல்வது.

யோசித்துப்பாருங்கள், இப்படி புரிந்துகொண்டால் ஒழிய சிந்தனைக்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் எப்பொருளும் இல்லை. நமக்கு நேற்று பொருட்டல்ல என்றால் நாளை வருபவர்களுக்கு நமது இன்றைய சிந்தனைகளும் பண்பாடும் பொருட்டே அல்ல. அப்படியென்றால் நாம் சிந்திக்கவேண்டாம், கலைகளை உருவாக்கவும் வேண்டாம், இல்லையா?

மானுட அறிவு மிகத்தொன்மையான காலம் முதல் தொடர்ச்சியாக உருவாகி, ஒன்றுடன் ஒன்று மோதி முரண்பட்டு இணைந்து, தன்னைத்தானே திரட்டிக்கொண்டு நம்மை வந்தடைந்திருக்கிறது. நாம் சிந்திப்பதும் கனவுகாண்பதும் அதன் நீட்சியாகவே. சமகாலத்திலேயே உழல்பவர்கள் கூட அந்த நீட்சியிலேயே இருக்கிறார்கள்.

அன்றாட வணிகம்,அன்றாட அரசியல் ஆகியவற்றிலேயே திளைப்பவர்களின் அகம்கூட தொன்மையிலிருந்து நீண்டு வரும் மரபின் மேலேதான் நிகழ்கிறது. அவர்கள் என்னென்ன தர்க்கம் பேசினாலும் அவர்களின் எளிய அறிவால் பதில் சொல்லிவிட முடியாத கேள்விகளுக்கு மரபின் பதில்களையே நாடுவார்கள். அன்றாடத்தில்கூட தன்னையறியாமலேயே மரபின் பதில்களை மறுசமையல் செய்து கையாள்வார்கள்.

அறிவியக்கத்தில் செயல்படுபவன் அந்த மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், அதை ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாளவேண்டும் என்று மட்டுமே நான் சொல்கிறேன். என் பயணங்களை நீங்கள் பார்க்கலாம். தொல்பழங்காலச் சின்னங்கள் முதல் இன்றைய பண்பாட்டுநிலைகள் வரை சென்றுகொண்டே இருக்கிறேன். அது இந்த தேடலால்தான்.

மரபின் சிந்தனைகளின் பெரும்பகுதி மதத்திலேயே உள்ளது.மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல.ஆசாரங்களின் தொகுதி மட்டும் அல்ல. சட்டதிட்டங்கள் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது. அதை எந்தச் சிந்திக்கும் மனிதனும் முற்றாக நிராகரிக்க முடியாது.

அதிலும், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் போன்றவை மிகமிகத் தொன்மையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிந்தனையில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்டு வருபவை. பல்லாயிரம் அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புக்கள் அவற்றில் திரட்டப்பட்டுள்ளன. அவை மாபெரும் மானுடச்செல்வங்கள்.

அவற்றிலேயேகூட இந்துமதம் மேலும் தொன்மையானது. அதன் ஒருபகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது. கற்காலத்துத் தொல்குடி வாழ்க்கையில் உள்ளது.மறுபகுதி இதோ நம் கண்ணெதிரில் உள்ளது. இன்று, இந்த உலகப்பரப்பில் வேறெந்த மதத்துக்கும் இந்த தனித்தன்மை இல்லை. மானுட சிந்தனை, மானுடக்கலை இத்தனை நூற்றாண்டுகளில் எப்படி உருவாகி வந்தது என்று கண்கூடாக காணும் வாய்ப்பை அளிக்கும் பிறிதொரு களமே உலகில் இல்லை. இது கொஞ்சம் புரட்டிப்படிக்கும் பழக்கமுள்ள, காழ்ப்பற்ற, எவரும் காணக்கூடிய உண்மை.

ஓர் உதாரணம் சொல்கிறேன். கற்காலத் தொல்குடிச் சின்னங்களில் இரண்டு மான்களை வேட்டையாடி கையிலேந்தி நின்றிருக்கும் ஒரு வேடனின் உருவம் காணப்படுகிறது. Master of Animals என அதை ஆய்வாளர் சொல்கிறார்கள். எல்லா தொல்குடிப் பண்பாடுகளிலும் அந்த வடிவம் ஏதோ ஒருவகையில் உள்ளது. மெசபடோமியா, எகிப்து பண்பாடுகளில் உள்ளது.

அதை ‘அதிருஷ்டம் கொண்டுவருபவன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் பசித்தபோது உணவுடன் வரும் தந்தை என்றும் கொள்ளலாம். கனவில் உணவுடன் வந்த தந்தை வடிவமாக இருக்கலாம். நாம் ஊகிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தின் வடிவம் அது.

அவ்வடிவங்கள் இந்தியாவின் கற்காலச் சின்னங்களில் உள்ளன. அதே வடிவம் கொஞ்சம் உருமாறி இந்தியாவின் மிகத்தொன்மையான சிவவடிவமான குடிமல்லம் சிவலிங்கத்தில் உள்ளது. மானை தலைகீழாகப் பிடித்து ஒரு கையில் வேட்டை ஆயுதத்துடன் இருக்கும் சிவன். பின்னர் அந்த மான் அருகே துள்ளி நின்றிருப்பதாக மாறியது. சிவனின் வடிவங்களில் அவர் வேடனாக வரும் பிட்சாடனர், கிராத மூர்த்தி போன்ற உருவங்கள் முக்கியமானவை.

யோசித்துப்பாருங்கள், கண்ணெதிரே ஐம்பதாயிரம் ஆண்டுக் காலம் நீண்டு வளர்ந்து வந்திருக்கும் ஒரு மகத்தான படிமம் நின்றிருக்கிறது. நினைப்புக்கெட்டா தொல்வடிவிலிருந்து நம் மூதாதையர் எண்ணி எண்ணி, கனவுகண்டு கனவுகண்டு, திரட்டி எடுத்த ஒன்று. நம் ஊரில் ஆலயத்தில் கரிய மழமழப்பான கல்லென அமர்ந்திருக்கிறது அது. எத்தனை அரியது அது. மானுடகுலத்தில் எத்தனைபேருக்கு அப்படி ஒன்று மரபில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறது?[கற்காலத்து மழை]

என்னை அது வெறும் தூசியென, காலக்குமிழியென உணரச் செய்கிறது. கூடவே மானுடமென இந்த முப்பதாயிரம் ஆண்டுகளும் அறுபடாது நீடித்த மரபுத்தொடர் நான் என்னும் பெருமிதத்தையும் அளிக்கிறது. இதை நான் ஏன் இழக்கவேண்டும்? இழந்து நான் அடைவதுதான் என்ன?

நான் அதனுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்? அரசியல்வாதிகள் சமைத்தளிக்கும் மந்தை அடையாளங்களையா? அல்லது தொழில்நுட்பம் உருவாக்கி அளிக்கும் நுகர்வோர் அடையாளத்தையா?

200px-Ancient_Collection_MfA_Boston_0751 கிமு 350 எகிப்து SumerianBulls.jpg மேய்க்கோப் பண்பாடு, கிமு 2600 kudopi-ani.jpg ரத்னகிரி அருகே, குடோப்பி. கற்கால பாறைச்செதுக்கு This_Lingam.jpg குடிமல்லம் சிவன் 375px-Bhikshatana_Shiva.JPG பிட்சாடன சிவன் 375px-Kankalamurti.jpg கிராதமூர்த்தி [வேடனாகிய சிவன்] 2007.2_front_PS2.jpg சோழர்கால செப்புத்திருமேனி.

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அங்கிருந்த பாகன் மதங்களை அழித்தன. தடையமே இல்லாது செய்தன. இன்று பேரறிஞர்கள் மிகப்பெரிய உழைப்பு செலுத்தி துளித்துளியாக அவற்றை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பணி தொடங்கி இருநூறாண்டுகளாகின்றன. சாதாரணமாக இணையத்திற்குச் சென்று பார்த்தாலே அந்த அறிவுச்செயல்பாட்டின் பேருருவை காணமுடியும்.

அப்படி இருக்க கண்ணெதிரே ஏறத்தாழ முழுமையுடன் நின்றிருக்கும் அத்தகைய ஒரு தொல்மதம் எத்தனை பெரிய பண்பாட்டுச் சொத்து. எவ்வளவு பெரிய மானுடச்செல்வம். அதை அழியவேண்டும் என்பவர்கள் அறியாமூடர்கள் அன்றி வேறல்ல.

இந்து மதத்தின் அறிவுத்தொகுப்பு,  பண்பாட்டுத் தொகுப்பு மனம் பிரமிக்கச் செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமானது. மானுடசிந்தனை தவிர்க்கவே முடியாதவர்கள் என இருநூறு தத்துவஞானிகளை அதில் சுட்டமுடியும். மானுடன் கொண்டாடவேண்டிய முந்நூறு பெரும்படைப்பாளிகளை அட்டவணையிட முடியும். ஞானிகளின் நிரை மிகப்பெரியது.

அதில் ஓர் உறுப்பினர் என்று சொல்வதில் எந்த இழிவும் இல்லை. அது பெருமிதத்திற்குரியது. அது இழிவு என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது – கற்பிப்பவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். மானுடத்தின் செழிப்பான ஒருபகுதியை ஏற்கனவே அழித்தவர்கள். எஞ்சுவதை அழிக்க நினைப்பவர்கள்.

இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து. அதைச் சொல்வதற்காக சென்ற முப்பதாண்டுகளில் இங்குள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட அரசியல்கும்பலால் இழிவுசெய்யப்படுகிறேன், பல தளங்களில் வெளியேற்றப்படுகிரேன். ஆனால் அதைச் சொல்லாமலிருக்க மாட்டேன்.

*

அறிவு- கலைச்செல்வத்தின் நுட்பமான தொடர்ச்சியாகச் சொல்லத்தக்கது ஆழ்படிமங்கள்.[ Archetype] தொன்மங்கள், படிமங்கள், நம்பிக்கைகள், கதைகள் என அது பலமுகம் கொண்டிருக்கிறது. ஆழ்படிமங்கள் வழியாகவே மானுட உள்ளம் ஆழ்ந்து யோசிக்கமுடியும். தன் அடிப்படைகளைப் பற்றி உசாவமுடியும்.

இப்படிச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் அன்றாடச் சிக்கல்களைப் பற்றிப் பேச அன்றாட அடையாளங்களும் குறியீடுகளும் போதும். அடிப்படைகளைப் பற்றிப் பேச ஆழ்படிமங்கள் தேவை. நீங்கள் நீங்கள்மட்டுமாக நின்று சிந்திக்க அன்றாட விஷயங்கள்போதும், பல்லாயிரம் ஆண்டு தொன்மைகொண்ட மானுட உள்ளமாக நின்று யோசிக்க ஆழ்படிமங்கள் தேவை.

அந்த ஆழ்படிமங்கள் பழங்குடி வாழ்க்கையிலிருந்து தொடங்கி மெல்லமெல்ல வேரூன்றியிருப்பவை. அவற்றை உருவாக்க முடியாது, அவை காலத்தில் உருவாகி வரவேண்டும். அவற்றுக்கு எந்த தர்க்கமும் ஒழுங்கும் இல்லை. அவை நம் என்றுமுள்ள தேடல்கள், அச்சங்கள், கண்டடைதல்களிலிருந்து பிறப்பவை. அவை மதங்களில்தான் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்துமதம்போன்று மிகமிகத் தொன்மையான ஒரு மதத்தில், பழங்குடிப் பண்பாடு அப்படியே உள்ளே உறையும் ஒரு மதத்தில் அவை அழியாது பேணப்படுகின்றன. அவை எந்த புனைவிலக்கியவாதிக்கும், எந்த சிந்தனையாளனுக்கும் பெருஞ்செல்வம். அவன் உள்ளத்தை கட்டமைக்கின்றன, மேலும் சிந்திக்க வழியமைக்கின்றன

800px-Yogi._Mold_of_Seal%2C_Indus_valley பசுபதி, மொகஞ்சதாரோ AnyConv.com__siva.jpg யோகேஸ்வர சிவன்

ஐரோப்பாவின் மாபெரும் மறுமலர்ச்சி என்பது அது தன் புதைக்கப்பட்ட பாகன் பண்பாட்டின் ஆழ்படிமங்களை மீட்டெடுத்ததில் இருந்து தொடங்குகிறது. அதன் சிந்தனை, கலை எல்லாம் அங்கிருந்தே பெருகிப் பேருருக்கொண்டன. அதன் தத்துவம் அங்கிருந்தே உருவாகியது. அந்த தத்துவமே அறிவியலை உருவாக்கியது. நம் கண்முன் நமது தொன்மை விரிந்து கிடக்கிறது. எவரோ சொன்னார் என்று நாம் புறந்திரும்பி நின்று கொண்டிருக்கிறோம்.

அந்த ஆழ்படிமங்களை நான் அடையவேண்டும் என்றால் நான் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். நன் அதன் நீட்சியாக என்னை உணரவேண்டும். ஆகவேதான் நான் இந்து.

நான் இப்போது பதினேழாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள்தான் உலகமெங்கும் புதியகவிதையின் அடிப்படைகளை உருவாக்கிய முன்னோடிகள். அவர்கள் அனைவரிலும் இருக்கும் பாகன் பண்பாட்டு அடிப்படைகள் பிரமிக்கவைக்கின்றன. அவர்களை அந்தப் பண்பாட்டுக் கூறுகள் இல்லாமல் புரிந்துகொள்ளவே முடியாது.

அந்த பாகன் பண்பாடு பன்மைத்ன்தமை, இயற்கையுடனான அணுகுமுறை, பிரபஞ்சப்பார்வை ஆகியவற்றில் இந்துமதத்திற்கு மிக அணுக்கமானது. நமக்கு என்ன தடை? எவர் அளிக்கும் தடை?

இந்த மாபெரும் தொடர்ச்சியை நான் ஏன் உதறவேண்டும்? உதறியபின் எனக்கு எஞ்சுவது என்ன? ஐரோப்பாவில் இருந்தும் மத்திய ஆசியாவில் இருந்தும் வந்துசேரும் எளிமையான தீர்க்கதரிசன மதங்கள். அவற்றின் ஒற்றைநூல் நம்பிக்கைகள். அவற்றை நோக்கி என்னை செலுத்தும்பொருட்டுத்தானே இந்த மூர்க்கமான இந்து எதிர்ப்பு இங்கே கட்டமைக்கப்படுகிறது?

அந்தத் தீர்க்கதரிசன மதங்கள் உலகமெங்கும் பேரழிவுகளை உருவாக்கியவை. தங்களுக்குள்ளேயே தீராப்போர்களை உருவாக்கி தங்களையே அழித்துக் கொண்டவை, கொள்பவை. அடிமைமுறையை பலநூறாண்டுக்காலம் நிலைநிறுத்தியவை. இனவெறுப்பை பேணுபவை. அம்பேத்கரே அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்.

சரி, அதீத கூர்மையுடன் நான் தேடிச்சென்றால்கூட ஐரோப்பா உருவாக்கிய மறுமலர்ச்சிக்கால பொருள்முதல்வாத பண்பாட்டை அல்லது அறிவொளிநோக்குப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை அங்குள்ள பாகன் மதத்தின் ஊற்றுக்களில் இருந்து அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை நான் ஏன் இங்கேயே தேடிக்கொள்ள கூடாது? அறிவொளிநோக்கு வேண்டுமென்றால் எனக்கு சங்கரர் போதுமே. பொருள்முதல்வாதம் வேண்டுமென்றால் கபிலரோ கணாதரோ போதுமே? நான் ஏன் இரவல் சிந்தனையாளனாக ஆகவேண்டும்? எவருடைய நலனுக்காக?

*

சரி, நீங்கள் கேட்ட கேள்விகள். முதலில், இந்துமதம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டதா?

ஆமாம், அது உருவாகி வந்த பரிணாமத்தில் அது பிறப்படிப்படையிலான சாதியடுக்குகளாகவே திரண்டு வந்தது. அது எவராலும் அப்படி கட்டமைக்கப்படவில்லை. பலநூறு இனக்குழுக்கள் பொதுவான நம்பிக்கைகள் ஆசாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்துசமூகம் உருவானபோது அவர்களின் எண்ணிக்கை, போர்வல்லமை, ஆதிக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மேல் கீழ் என்னும் அடுக்கு உருவானது. அது பின்னர் தத்துவார்த்தமாக விளக்கப்பட்டது.அதுவே சாதிமுறை.

அவ்வண்ணம் பிறப்பு அடிப்படையிலான அடுக்குமுறை இல்லாத ஒரு சமூகம்கூட உலகில் எங்கும் இல்லை. நிலப்பிரபுத்துவத்தின் இயல்பு அது. உலகமெங்கும் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையானது. இந்தியாவில் அது சாதிமுறை. அதில் ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் உலகமெங்கும் அதே ஒடுக்குமுறை இருந்தது என்பதே வரலாறு.

உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவம் அழிந்துவருகிறது. அன்றிருந்த சமூக அமைப்புக்களும் அழியும். அவற்றை நிலைநிறுத்தும் உளப்போக்குகள் மேலும் சில தலைமுறைகளில் அழியும். சாதியும் அவ்வண்ணமே நம் கண்முன் அழிந்து வருகிறது. இன்று அது மேல்கீழ் அதிகார அடுக்கு அல்ல. அரசியலுக்கான திரளடையாளம் மட்டுமே. அதுவும் மறையலாம்.

நீங்கள் இந்த வரலாற்று உண்மையை ‘இந்துமதம் என்பது சாதிகள் மட்டுமான ஒன்று’ என்று திரித்துக்கொள்கிறீர்கள். நம் சூழலில் செய்யப்படும் பொதுவானதிரிபு இது. இளைஞர்கள் அதை அரசியலில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

இந்துமதம் என்பது சாதிமுறை மட்டும் அல்ல. அதன் சமூகக் கட்டமைப்பில் ஒரு சிறு பகுதிதான் சாதி. அதன் மெய்யியல் சாதி சார்ந்தது அல்ல. அதன் அடிப்படை ஞானம் சாதிச்சார்பு கொண்டது அல்ல. சாதி ஒழிந்தாலும் இந்துமெய்ஞானம் எந்த ஊறுமின்றி நிலைகொள்ளும். மேலும் வளரும்.

இந்து மதத்தின் மெய்யியல், தத்துவம், இலக்கியம், கலை ஆகியவை அனைத்துமே சாதிமுறைக்காக மட்டுமே நிலைகொள்பவை என ஒருவன் எண்ணுவான் என்றால், அவன் எந்தத் தரப்பினன் ஆயினும், அறிவிலியே. சாதிமுறையின் பொருட்டு அவை அனைத்தையும் ஒருவன் துறப்பான் என்றால் அவன் கண்மூடிக்கொண்டவன் மட்டுமே.

இந்துமதத்தின் வரலாற்றிலேயே சாதிகள் தொடர்ந்து முன்னும் பின்னும் படிநிலைகளில் நகர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன. சாதிமுறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த புரட்சிகள் உருவாகியிருக்கின்றன. சாதிமுறை இன்று தளரும்போதும் இந்துமதம் எவ்வகையிலும் தளர்வடையவில்லை. வளர்ச்சியே அடைகிறது.

ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அரசியல் தளத்தில் செயல்படும் அறிஞர்கள் வரலாற்றை நோக்கி விளக்கியிருக்கலாம். அவர்கள் காலகட்டத்தின் அரசியல் தேவைகள், வரலாற்றுப் பார்வைகள் அவர்களை இயக்கியிருக்கலாம். நமக்குத்தேவை நாமே அறியும் வரலாற்று நோக்கு, பண்பாட்டு நோக்கு.

*

மதம் அளிப்பது மெய்யியலை. அந்த மெய்யியலை தத்துவம் என்றும், கலை என்றும், அறவியல் என்றும் விரித்துக்கொள்வது அந்தச் சமூகத்தின் பொறுப்பு. அச்சமூகத்தின் தோல்விகளுக்கு மதமே காரணம் என்று சொல்வதென்றால் அதை அத்தனை சிந்தனை, கலை, இலக்கியம் அனைத்துக்கும் போட்டுப்பார்க்கலாமே?

சரி, இந்துமதம் எளியோருக்காக ஒன்றும் செய்யவில்லை. வேறு எந்த மதம் செய்கிறது? அடிமைமுறையை பல நூறாண்டுகள் நிலைநிறுத்திய மதங்களா? அயல்நிலங்களை ஆக்ரமித்து அங்குவாழ்ந்த கோடானுகோடி மக்களை வேரோடு அழித்த மதங்களா? அச்செயல்களுக்கு பலநூறாண்டுகள் நியாயம் கற்பித்த மதங்களா? இனவாதத்தை இன்றும் பின்னின்று இயக்கும் மதங்களா?

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். உங்கள் பார்வையில் பார்த்தால்கூட பாவக்கணக்கு மிகக்குறைவான மதங்கள் மூன்று இந்திய மதங்கள் மட்டுமே.

சரி, மதங்களை விடுவோம். நவீனச் சிந்தனைகளை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவின் களத்தில் உருவானவை நவீன ஜனநாயகச் சிந்தனைகள். நவீன இலக்கிய- தத்துவச் சிந்தனைகள். நவீனக் கலைகள். ஆனால் காலனியாதிக்கம் அந்த ஐரோப்பாவின் கொடை. உலகை பஞ்சத்திலாழ்த்திச் சூறையாடியவை ஐரோப்பிய நாடுகள். உலகப்போர்களை விட பலமடங்கு மக்களை பட்டினியில் சாகவிட்டவை. ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்துமே காலனியத்தின் கறைபடிந்தவை என தூக்கி வீசிவிடலாமா?

சரி, அது நேற்று. இன்று? நீங்கள் சொல்லும் பின்நவீனச் சிந்தனைகள் எங்கே உருவாகின்றன? முதன்மையாக ஃபிரான்ஸில். ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்காவில். அங்குள்ள கல்விநிலையங்களில். பெரும் ஊதியத்தையும் நிதிக்கொடைகளையும் பெறும் பேராசிரியர்கள் அவற்றை உருவாக்குகிறார்கள். அந்த பல்கலைகளுக்கு நிதியளிப்பவர்கள் யார்? பெரும்வணிகர்கள், வணிக நிறுவனங்கள், அங்குள்ள அரசு.

அந்த வணிகர்கள் , நிறுவனங்கள் செய்யும் தொழில் என்ன? அங்குள்ள அரசுகளின் வருவாய் முதன்மையாக எது? ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் போலி ஆட்சியாளர்களை நிறுவி அவர்களின் வளங்களைச் சுரண்டுவது. ஆயுதங்களை உற்பத்திசெய்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று அவர்களை சுரண்டுவது. அவர்கள் ஓயாது போர்புரியும்பொருட்டு உட்பூசல்களை, தேசியமோதல்களை உருவாக்குவது.

அந்தச் சிந்தனைகளை ஏற்க ,பயில இந்த உண்மைகள் உங்களுக்கு தடையாக அமையவில்லை இல்லையா? இந்தச் சிந்தனைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் நேரடி நிதிகள் எவ்வாறு உருவாகின்றன என்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்று தோன்றவில்லை இல்லையா?

உங்கள் அளவுகோல்களின்படி இங்கே அநீதி உள்ளது, சுரண்டல் உள்ளது. ஆகவே திருக்குறள் தேவையில்லை. சங்க இலக்கியம் பயனற்றது. அத்தனை தத்துவங்களும் வீண், இல்லையா?

அப்படிச் சொல்லமாட்டீர்கள். ஆனால் ஆனால் சாதிமுறையை, அல்லது சமகாலத்தில் உள்ள சுரண்டலை இந்து மெய்ஞானம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பீர்கள். அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை காரணமாக ஆக்குவீர்கள், இல்லையா? அந்த மனநிலையை உங்களில் உருவாக்கியவர் யார்? அதை யோசியுங்கள்.

உங்கள் பிழையை நான் செய்ய மாட்டேன். பிரான்ஸ் அரசு ஆயுத வியாபார அமைப்பு என்பதனால், சார்போன் பல்கலை ஆயுதவியாபாரிகளின் நன்கொடையால் இயங்குகிறது என்பதனால், எனக்கு சார்த்ர் முதல் ஃபூக்கோ வரையிலானவர்கள் பொருளற்றவர்களாக தோன்றமாட்டார்கள். ஐரோப்பா காலனியாதிக்கம் செலுத்தியது என்பதனால் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் அன்னியமாக தோன்றமாட்டார்கள்.

கிறிஸ்தவ மத அமைப்பு அடிமைமுறையை பரப்பியது,  உலகமெங்கும் தொல்குடிகளை முற்றழித்தது என்பதனால் நான் கிறிஸ்தவ மெய்ஞானத்தை பழிக்கமாட்டேன். அந்த மெய்ஞானம் எனக்கு தேவை. அது வேறொரு தளம். எனக்கு எந்நிலையிலும் கிறிஸ்து தேவை.

மதத்திலுள்ள மெய்யியல், தத்துவம், கலை ஆகியவை ஓர் இலட்சியதளத்தில் செயல்படுகின்றன. மதமென்னும் உலகியல் அமைப்பு வேறொரு தளத்தில் செயல்படுகிறது. உலகியலை இலட்சியவாதம் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முயல்கிறது. ஆனால் உலகியல் ஒருபோதும் இலட்சியவாதத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பண்பாட்டின் உலகியல் நடத்தையை வைத்து அப்பண்பாட்டில் உள்ள இலட்சியவாதத்தை நிராகரித்தால் உலகின் எந்தச் சமூகமும் பொருட்டாக மிஞ்சாது.

நாம் மதத்தில் இருந்து அதன் இலட்சியவாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை சமகால இலட்சியவாதத்துடன் இணைத்து மேலெடுக்கலாம். மதம் உருவாக்கும் உலகியல் அமைப்புக்களை அந்த இலட்சியவாதத்தின் அடிப்படையில் காலந்தோறும் மறு அமைப்பு செய்யலாம். மதத்திற்குள் உருவாகும் அத்தனை சீர்திருத்தவாதிகளும் செய்தது அதையே. சங்கரர், ராமானுஜர் முதல் நாராயண குரு, வள்ளலார் வரை.

*

கடைசியாக ஒன்று. இதெல்லாம் சிந்தனை, கலை, இலக்கியம் போன்ற தளங்களைச் சார்ந்தவை. இவற்றுக்கு அப்பால் மானுடன் தேடும் மீட்பு ஒன்றுண்டு. முழுமையறிதல், நிறைவடைதல் என அதை சொல்கிறேன். வாழ்வினூடாகச் சென்றடையும் நிறைநிலை அது. அதை நான் வேதாந்தத்தில் கண்டடைகிறேன். நான் நேற்றுவரை அதை கொஞ்சம் ஐயத்துடன் கற்றறிந்ததாக மட்டுமே முன்வைப்பேன். ஒன்று அந்த தயக்கமேதுமில்லை. வேதாந்தம் மெய்மையின் வழி.

வேதாந்தம் எனக்கு மெய்ஞானத்தை ’வழங்கவில்லை’, நான் செல்லவேண்டிய பாதையை அளித்தது. உரிய ஆசிரியர்கள் வழியாக, நூல்கள் வழியாக, குறியீடுகள் வழியாக, ஊழ்கம் வழியாக…. ஆகவே நான் வேதாந்தி. வேதாந்தம் இந்துமதத்தின் ஒரு பிரிவு என்பதனால் நான் இந்து.

 •  

நீங்கள் இந்துமதத்தில் பிறந்தமையால் ’மட்டும்’ பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்துமதத்தை அறிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, பிறப்பாலேயே சில அடிப்படை உருவகங்கள் ஆழ்மனதில் உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் மகிழ்ச்சி அடையலாம். கற்கலாம், கற்றபின் பெருமிதம் கொள்ளலாம்.

ஜெ

 

 

https://www.jeyamohan.in/145231/

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்! - நிலாந்தன்.
   June 6, 2021

   இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. அப்படி என்றால் துரித அன்டிஜென் சோதனைகளை செய்தால் என்ன?
   இது தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கூறுகிறார்கள் அது செலவு கூடிய ஒரு பயிற்சி என்று. இலங்கைத் தீவு போன்ற ஒரு வழங்குறைந்த நாடு அதைத் தாங்காது என்று. எல்லாப் பிரஜைகளையும் சோதனை செய்வதை விடவும் நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைப்பதே புத்திசாலித்தனமானது செலவு குறைந்தது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு நோய்த்தொற்று சங்கிலியை உடைப்பது என்றால் தடுப்பூசி; சமூக விழிப்பு; சமூக முடக்கம் போன்றனவே பயன்பொருத்தமானவை என்றும் கூறுகிறார்கள்.
   ஆனால் தடுப்பூசி விடயத்திலும் இலங்கைத்தீவு பின்தங்கியிருப்பதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேல் மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பதுலட்சத்து இருபத்திஐயாயிரம் பேருக்கு பல கிழமைகளுக்கு முன்பு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது. இரண்டாங்கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கான மூன்றுமாத காலஎல்லை இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். ஆனால் அவர்களில் ஐந்து லட்சத்து எழுபத்திஐயாயிரம் பேருக்கு இரண்டாங்கட்ட தடுப்பூசி இன்னமும் ஏற்றப்படவில்லை. இதற்கிடையே சீனா ஐந்துலட்சம் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. அது வேறுவகை. இதை மாவட்டங்கள் தோறும் அரசாங்கம் பிரித்துக் கொடுக்கிறது. இவ்வாறு கிள்ளிக் கொடுத்து முழு நாட்டுக்கும் தடுப்பூசியை ஏற்றி முடிப்பது எந்தக் காலம்?
   எனவே தடுப்பூசி விடயத்திலும் அரசாங்கம் திருப்தியாக செயல்பட முடியவில்லை. ஆயின், சமூக முடக்கந்தான் ஒரே வழியா ? இல்லை அதுவும் செலவு கூடிய ஒரு செய்முறை என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது.. அண்மை வாரங்களாக அரசாங்கம் தொடர்ச்சியாக சமூகத்தை முடக்கி வருகிறது. இது விடயத்தில் வெளிப்படைத்தன்மையும் சிவில் தன்மையும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வளவு காலத்துக்கு சமூகம் முடக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெளிவாக அறிவித்திருக்கவில்லை. பதிலாக ஊடகங்கள் ஒருபக்கம் குழப்புகின்றன. தவிர அரசாங்கமும் இத்தனை நாள் சமூகமுடக்கம் என்று முதலில் கூறிவிட்டு பின்னர் நாட்களை மேலதிகமாக நீடிக்கின்றது.
   இது ஒருவிதத்தில் மக்கள் முன்கூட்டியே உசாராவதைத் தடுக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கமும்தான். ஏனென்றால் இலங்கைத்தீவில் பெருநகரங்களில் உள்ளதுபோல ஒன்லைன் விநியோக வலைப்பின்னல் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பரவலாகவும் பலமாகவும் இல்லை. இதனால்தான் உள்வீதிகளில் சமூகத்தை முழுமையாக முடக்க முடியவில்லை. எனவே சமூக முடக்கம் எத்தனை நாட்களுக்கு என்பதனை அரசாங்கம் முன்கூட்டியே தெளிவாக அறிவிப்பதன் மூலம் மக்கள் உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். ஆனால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு போரைப் போலவே முன்னெடுக்கின்றது. அதில் சிவில்த்தனத்தை விடவும் ரானுவத்தனமே அதிகமாக காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
   “ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் முதலாவது தவறு கோவிட்-19ஐ இன்னொரு போர் என்றும் அதை இராணுவத்தைப் பயன்படுத்தி வெல்லலாம் என்றும் சிந்தித்ததும் தான்” என்று தனது ருவிற்றர் பக்கத்தில் இமேஷ் ரணசிங்க என்ற சிங்கள ஊடகவியலாளர் கூறுகிறார். உலகளாவிய தொற்றுநோய் காலத்தில் மையத்தில் அதிகாரங்களை குவித்த ஒரு நாடாக ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டப்படுகிறது. கோத்தாபய ராஜபக்ச அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின் ஒரு பெருந் தொற்றுநோய் சூழலை காரணம் காட்டி நாட்டின் சிவில் கட்டமைப்புக்கள் அதிகபட்சம் ராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கோவிட்-19ஐ கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவரான படைத்தளபதி ஊடகச் சந்திப்புக்களில் மருத்துவர்களைவிடக் கூடுதலாகக் கதைக்கிறார். சமூக முடக்க நாட்களில் மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் தெருக்களையும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் படைத்தரப்பே பெருமளவுக்கு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நாட்டின் எல்லா covid-19 தடுப்பு மையங்களும் படைத்தரப்பினரால்தான் நிர்வகிக்கப்படுகின்றன.

   அதிலும் குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் அரசாங்கம் மூன்று நியமனங்களை செய்திருக்கிறது. காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் பிரதானியும் ஓரு ஓய்வுபெற்ற படைப்பிரதானியும், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற படைப்பிரதானியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு அலுவலகங்களும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டவை. அதாவது நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகளுக்கு ஓய்வுபெற்ற படைப்பிரதானிகள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
   இவ்வாறு ஒரு நோய்த்தொற்றுச் சூழலை முன்னிறுத்தி நாட்டின் வெவ்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளை அரசாங்கம் படைமயப்படுத்தி வருகிறது. ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்து படைத் தரப்பை முன்னிறுத்தி வைரசை எதிர்கொண்ட போதிலும் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றிகளை பெறத் தவறிவிட்டது என்பதைத்தான் இமேஷ் ரணசிங்க போன்ற ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   ஆனால் இது விடயத்தில் வெற்றிபெற்ற நாடுகளை தொகுத்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மையத்தில் அதிகாரத்தை குவித்து நோயெதிர்ப்பு நடவடிக்கைகளை இராணுவத்தனமாக முன்னெடுத்த நாடுகள் என்று பார்த்தால் சீனாவை மட்டும்தான் பெருமளவுக்கு முன்னுதாரணமாக காட்டமுடியும். ரஷ்யாவும் பெருமளவுக்கு ராணுவ தனமாகவே நிலைமைகளை அணுகியது. எனினும் சீனா அளவுக்கு அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும்கூட சீனா எந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது என்பது தொடர்பில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற செய்திகளை பெற முடியவில்லை என்பதனை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
   அதேசமயம் வைரஸ் தொற்றை இப்போதைக்கு ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகள் என்று வரிசைப் படுத்தப்படும் நாடுகளை தொகுத்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் சிவில் விழுமியங்களையும் வெளிப்படைத் தன்மையையும் அதிகளவு மதித்த நாடுகள்தான். மையத்தில் அதிகாரத்தை குவித்து ராணுவத்தனமாக முடிவுகளை எடுத்த நாடுகள் அல்ல. எனவே பெரும் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகமதிகம் ராணுவ மயப்படுத்துவதற்கு பதிலாக மக்கள் மயப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒன்றுதான் இது விடயத்தில் அதிகபட்சம் வினைத்திறன் மிக்கது என்பது கடந்த ஓராண்டு காலத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்களை வைரசுக்கு எதிராக உளவியல் ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் தயார்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகபட்சம் வெளிப்படைத் தன்மையோடு மக்கள் மயப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதில் சிவில் சமூகங்களையும் மத நிறுவனங்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.
   அவ்வாறு மக்கள் மையப்படுத்தப்படாத ஒரு பின்னணியில்தான் வண் டே மாஸ்கை அணிபவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுகிறதா? நமது தெருக்களில் ஒரு கணக்கெடுப்பை செய்தால் அதில் அதிகமானவர்கள் வண் டே மாஸ்க் அணிந்திருக்கக் காணலாம். ஒரு நாள் மாஸ்க் எனப்படுவது மீளப் பயன்படுத்த முடியாதது. ஆனால் நாட்டில் வண் டே மாஸ்கை திரும்ப திரும்ப துவைத்து பயன்படுத்தும் ஒரு நிலைமையை காணலாம். வீதிகளிலும் அலுவலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வண் டே மாஸ்கை அணிபவர்களே அதிகம். அவர்களெல்லாம் வண் டே மாஸ்கை ஒருநாள் மட்டும் பயன்படுத்தி விட்டு ஏறிவதில்லை. .வண் டே மாஸ்க் அவ்வாறு பல நாட்கள் பல தடவைகள் துவைத்துப் பயன்படுத்தக் கூடியது அல்ல. அதற்கென்று மீளப் பயன்படுத்தக்கூடிய வகைகள் உண்டு.
   ஆனால் மக்கள் பெருமளவுக்கு வண் டே மாஸ்கைத்தான் அணிகிறார்கள். ஏனெனில் அதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன…. முதலாவது அது பயன்படுத்த இலகுவானது. இரண்டாவது விலை குறைந்தது. மூன்றாவது துவைத்துப் பாவிக்க இலகுவானது. நாலாவது கண்ணாடி அணிபவர்களுக்கும் ஹெல்மெட் அணிபவர்களுக்கும் இலகுவானது. ஐந்தாவது வாகனம் ஓட்டும் பொழுது அணிந்திருக்க வசதியானது. போன்ற பல காரணங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் இக்காரணங்கள் யாவும் அந்த மாஸ்க் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாவிக்கமுடியாதது என்ற அடிப்படையான சுகாதார விளக்கத்தை புறக்கணிப்பவை.
   இது விடயத்தில் ஏனைய நாடுகளில் நிலைமை எப்படியிருக்கிறது என்று இக்கட்டுரைக்கு தெரியாது. பிரான்சில் வசிக்கும் ஒருவர் சொன்னார்….நோய்த்தொற்றின் தொடக்கத்தில் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் முப்பது யுரோக்களுக்கு விற்ககப்பட்டதாம் ஆனால் இப்பொழுது ஒரு பெட்டி இரண்டரை யுரோக்கு விற்க்கப்படுகிறதாம். முன்பு ஒரு குப்பி சனிடைசர் ஐந்து யூரொ. இப்பொழுது ஒரு லீற்றர் ஐந்து யூரோவாம். அதாவது பிரெஞ்ச் அரசாங்கம் விலைகளைக் குறைத்திருக்கிறது. ஆனால் நமது நாட்டில் கொரோனாவுக்கு முன் ஒரு பெட்டி வண்டே மாஸ்க் நானூறு ரூபாய். இபொழுது நல்ல மாஸ்க் ஒரு பெட்டி எழுநூறு ரூபாய். மாஸ்க்கின் விலை குறைந்தால் அதைத் தோய்த்துப் பாவிப்பது குறையுமா?
   எதுவோ,இலங்கைத் தீவின் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. அதாவது மக்கள் வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக மாஸ் அணிகிறார்களா? அல்லது பொலிசாரிடமிருந்தும் படைத்தரப்பிடமிருந்தும் குறிப்பாக சட்டத்திடமிருந்தும் தங்களை பாதுகாப்பதற்காக மாஸ்க் அணிகிறார்களா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.
   இப்படித்தானிருக்கிறது வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளின் மக்கள் மயப்பட்ட தன்மை. இப்படியே போனால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொற்று அலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
   எனவே இதுவிடயத்தில் அரசாங்கம் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்னவென்றால் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆகக்கூடியபட்சம் வெளிப்படைத்தன்மை மிக்கதாக மக்கள் மயப்படுத்துவதுதான். மாறாக அவற்றை ராணுவ மயப்படுத்துவது அல்ல.
    
    
   https://globaltamilnews.net/2021/161985/  
  • By கிருபன்
   தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன்
   June 5, 2021 புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும்.
   இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள்.
   தேவதேவன் திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களுக்கு உகந்தவர்களைக் கொண்டாடத்தான் செய்யும். அவர்கள் இருவகை. அந்த அரசை அமைத்துள்ள கட்சிகளின் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கியவர்கள், அந்த அரசுடன் ஒத்துப்போகிறவர்கள்.
   திமுக அரசு மு.கருணாநிதி அவர்கள் பதவியேற்ற நாள்முதல் அவ்விரு சாராரையும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் உள்ளது.தேவநேயப் பாவாணர் பெயரில்தான் மாவட்ட மைய நூலகம் உள்ளது. மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயரில்தான் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளது. அரசுடன் ஒத்துப்போனமையால்தான் சுரதாவுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி விருதுகளும் பரிசுகளும் பெற்ற பலர் உண்டு.
   தேவிபாரதி குற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை இரண்டு. ஒன்று, திராவிட இயக்க முன்னோடிகள் எனும்போதே அவர்களில் எவர் உகந்தோர் எவர் அல்லர் என்ற தெரிவு திமுக அரசிடம் இருந்தது. அந்த தெரிவு மு.கருணாநிதியின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் சார்ந்ததாகவே இருந்தது. ஆகவே கா.அப்பாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்ற பலர் புறக்கணிக்கப்பட்டார்கள். அவ்வாறு ஒரு புறந்தள்ளப்பட்டோர் பட்டியல் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குள்ளேயே உண்டு.
   நாம் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியம் பற்றி மட்டுமே. அரசியலெழுத்து பற்றி அல்ல. அவற்றின் இடம் தெரியுமென்றலும் இலக்கியமுன்னோடிகள் நவீன இலக்கியத்தை மட்டுமே முன்வைத்தனர். நவீன இலக்கியத்திற்கு இங்கே ஆதரவும் புரலவலரும் வாசகரும் இல்லை என்பதனால். என் தலைமுறையில் ஓரளவு வாசகர்கள் வந்துவிட்டனர். ஆகவே இன்னும் கொஞ்சம் விரிவாக அரசியலெழுத்தையும் உள்ளே கொண்டுவந்து இலக்கியத்தின் இலக்கணங்களை அமைத்துக்கொண்டேன். எஸ்.எஸ்.தென்னரசு அல்லது விந்தன் பற்றிப் பேசிய இலக்கியவிமர்சகன் நான்தான்.
   விக்ரமாதித்தன் இரண்டாவது குற்றச்சாட்டே முக்கியமானது. அரசு என்பது அரசை அமைக்கும் கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. தான் ஆட்சி செய்யும் நிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டிற்கும் பொறுப்பேற்பதுதான் அரசின் கடமை. அப்பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் முயலவேண்டியது அதன் பணி. அரசின் நடவடிக்கைகள் அந்நோக்கிலேயே அமையவேண்டும். ஏனேன்றால் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களின் வரிப்பணத்தை மட்டும் அது செலவுசெய்யவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிறது.
   ஜனநாயகத்தின் அடிப்படை ஒன்று உண்டு. ஆட்சியைப் பிடிப்பது வரைத்தான் கட்சி அரசியலின் பார்வை இருக்கவேண்டும். அதற்குப் பிறகு இருக்கவேண்டியது அனைவருக்குமான ஆட்சியாளரின் பார்வை. கட்சிச்சார்புப் பார்வை இருந்தால் அது பண்பாட்டுக்குச் செயல்பாடுகளுக்குப் பேரழிவாக முடியும். அந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே கட்சிக்கருத்தியலாகச் சுருக்கிவிடுவதில் முடியும். திமுக ஆட்சியில் நடந்தது அதுவே.
   எஸ்.ராமகிருஷ்ணன் ஆகவேதான் புதுமைப்பித்தனுக்குக் கூட சென்னையில் ஒரு பண்பாட்டு நினைவகம் இல்லை. நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. இங்குள்ள நவீன இலக்கியம் தமிழ்மொழி அடைந்த வெற்றிகளில் ஒன்று. தமிழ்ப்பண்பாடு என்றும் பெருமை கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் ஐம்பதாண்டுகளாக அது அரசாலும், அரசின் கல்விநிறுவனங்களாலும், முற்றாகவே கைவிடப்பட்டது.
   இக்குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக திராவிட இயக்க எழுத்தை நவீன இலக்கியம் ஏற்றுக்கொண்டதா என்ன என்று கேட்கிறார்கள். அபத்தமான கேள்வி அது. இது கொடுக்கல்- வாங்கல் அல்ல. நவீன இலக்கியத்திற்கு அதற்கான அழகியல் கொள்கைகள், அதற்கான வாழ்க்கைப்பார்வைகள் உண்டு. அவற்றையே அது முன்வைக்கும். அதனடிப்படையிலேயே அது தன்னை வரையறை செய்துகொள்ளும். அதனடிப்படையிலேயே அது பிற இலக்கியங்களை மதிப்பிடும். அந்த அளவுகோல்களை இழந்தால் அதன்பின் அது நவீன இலக்கியமே அல்ல. அப்படி அது தன்னை அழித்துக்கொண்டு அடைவதற்கொன்றும் இல்லை.
   கலாப்ரியா திராவிட இயக்க இலக்கியப் போக்கு நவீன இலக்கியத்தை ஏற்காமல் போகலாம், அது இயல்பானதே. மு.கருணாநிதிக்கு அவை ஒவ்வாமையை அளிக்கலாம். திராவிட இயக்க அமைப்புகள் அளிக்கும் விருதுகள் நவீன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதில்லை. இங்கே பேசப்படுவது அரசைப் பற்றி, கல்வித்துறை பற்றி. அனைவரின் வரிப்பணத்தால் அனைவருக்குமாக அமைந்துள்ள அரசு செய்யவேண்டிய பண்பாட்டுப் பணிகள் பற்றி.
   ஓர் உதாரணம் சொல்கிறேன். கேரளத்தில் நேர்ப் பாதி ஆட்சிக்காலம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. மிகத்தெளிவான அரசியல்கொள்கையும், திட்டவட்டமான இலக்கியக்கொள்கையும் கொண்ட கட்சி அது. அதில் சமரசமே இருப்பதில்லை. ஆனால் அது அரசில் இருந்த காலகட்டத்தில் மார்க்ஸிய எழுத்தாளர்களை மட்டும் முன்னிறுத்தவில்லை. அதற்காக அரசுநிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளவுமில்லை.
   சுரெஷ்குமர இந்திரஜித் மாறாக கேரள இலக்கியச் சூழலில் உள்ள மிகச்சிறந்த ஆளுமைகளை நடுவர்களாக, ஆலோசகர்களாகக் கொண்ட குழுக்களே பண்பாட்டுச் செயல்பாடுகளை நடத்தின. கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பழுத்த காங்கிரஸ்காரர்கள், தீவிர கம்யூனிஸ்டு எதிரிகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவகங்கள் அமைந்துள்ளன. அரசுமரியாதைகள் அமைந்துள்ளன. முதல்வரே நேரில் சென்று அவர்களை பாராட்டிய, நோய்நலம் உசாவிய தருணங்கள் உண்டு.
   ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் அமைப்புகள் அளிக்கும் விருதுகள் அவர்களுக்குரிய எழுத்தாளர்களுக்கே அளிப்பட்டன.பொதுவெளியில் அவர்களை மட்டுமே மிகத்தீவிரமாக முன்வைத்தனர் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்காக மாநாடுகளையே நடத்தினார்கள். கம்யூனிசத்தை ஏற்காத எழுத்தாளர்களை கட்சியின் விமர்சகர்கள் கடுமையாக மறுத்து  கட்சி இதழ்களில் எழுதினர். இதுதான் வேறுபாடு.
   இமையம் டெல்லியில் ஆண்ட சென்ற காங்கிரஸ் அரசுகளையே உதாரணமாகக் கொள்ளலாம். காங்கிரஸ் அரசு இருந்த காலகட்டத்தில் தேசிய அளவிலேயே சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள். காங்கிரஸ் அதில் தலையிடவில்லை.
   இன்றும் சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் வரையிலான பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்கள். அரசு அதில் தலையிடுவதில்லை. திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது.  இன்றைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவர்களுக்கோ ஆளும் கட்சியின் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கோ அவ்விருதுகள் வழங்கப்படுவதில்லை — இப்போதைய சூழலைப் பார்த்தால் எவ்வளவுநாள் அது நீடிக்குமென தெரியவில்லை என்பது வேறுவிஷயம். ஏனென்றால் சுதந்திரமாகச் செயல்பட்ட பல பண்பாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுவிட்டன.
   சாரு இதுவே முறைமை. இந்த வகையான ஒரு நடுநிலைமை, அரசையும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பிரித்துப்பார்க்கும் பார்வை, கலாச்சாரச் செயல்பாடுகளையும் அரசியல்செயல்பாடுகளையும் வேறுவேறாகப் பார்க்கும் நிதானம் இதுவரை திமுகவில் இருந்ததில்லை. திரும்பத் திரும்பச் சுட்டப்படுவது அதைத்தான். திமுக எழுத்தாளர்களை ஏற்றதில்லை என்று சொன்னதுமே திமுக கொண்டாடிய கட்சிசார் எழுத்தாளர்கள், குற்றேவல் எழுத்தாளர்களின் பெயர்பட்டியலுடன் வருபவர்களிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது
   இங்கே தமிழ் என்றென்றும் பெருமைகொள்ளவேண்டிய மாபெரும் படைப்பாளிகள் எந்த ஏற்புமின்றி, எந்த வசதியுமின்றி ஏங்கி மறைந்தனர். அவர்களை கௌரவிக்க, அவர்களை விருதளிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்ட என்னைப் போன்ற எழுத்தாளர்களே இறங்கி நண்பர்களிடம் பணம் திரட்டியும், கைப்பணம் போட்டும் விருதுகளை அமைக்கவேண்டியிருந்தது. பலநூறுகோடி ரூபாயில் அரசின் ‘இலக்கிய மாநாடு’கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ஆயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட சிற்றிதழ்களை நம்பி நவீன இலக்கியம் வாழ்ந்தது.
   யுவன்
   இரா முருகன் பா.ராகவன் அரசுக்கும் அரசமைப்புகளுக்கும் அணுக்கமாக ஆகும் கலையறிந்தோர் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் முன்னிறுத்தப்பட்டனர். வெற்று மேடைப்பேச்சாளர்கள் மேடைமேடையாக மு.கருணாநிதியை வெட்கமின்றி புகழ்ந்து வெகுமதிகளை பெற்றுக்கொண்டனர். மெய்யான அறிஞர்கள் மூர்க்கமாக புறந்தள்ளப்பட்டனர். அவர்களில் திராவிட இயக்கச் சார்புள்ள பேரறிஞர்களும் உண்டு.
   கோவையில் திமுக நடத்திய சென்ற உலகத்தமிழ் மாநாட்டை எண்ணிப்பாருங்கள். அ.கா.பெருமாளுக்கு அங்கே இடமில்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஆய்வாளர் மேடையேறத் தகுதி கொண்டவர்? கோவையிலேயே  இருந்த நாஞ்சில்நாடனுக்கு கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பில்லை என்றால் அது என்ன இலக்கியமாநாடு?
   சு.வேணுகோபால் சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது.
   இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம்  ”அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்கு தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம்தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள்.
   தேவதச்சன் இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள் – சென்ற கால உடன்பிறப்புகளுக்கு திராவிட இயக்க எழுத்தாவது கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான்கு முன்னோடிகளைச் சொல் என்றால் சொல்வார்கள். இவர்கள் தற்குறிகள்.
   ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி. பென் டு பப்ளிஷ் போன்ற விருதுகளையே அமைப்பாகத் திரண்டு வென்ற அரைவேக்காடுகள் இவற்றை விட்டுவைக்கப் போவதில்லை. அவர்களில் பலர் கவின்கலை விருதுகளுக்காக கோழிமுட்டைகள், தென்னைமரங்கள் என படங்கள் வரைய ஆரம்பித்திருப்பதாகவும் செய்தி.
   புலவர் செ இராசு ஒரு ஜனநாயகத்தில் நாம் எதிர்பார்க்கவேண்டிய செயல்பாடு என்பது கேரளத்தில் நிகழ்வதுபோல தகுதியானவர்களைக் கொண்டு அமைக்கப்படும் சுதந்திரமான அமைப்பு. அதன் வெளிப்படையான செயல்பாடு. அந்த தகுதி கட்சிச்சார்பு அல்ல, அறிவியக்கத் தகுதி. திட்டவட்டமான வெளிப்படையான சாதனை.எந்த அரசு வந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறு ‘அறிஞர்’குழு உள்ளே சென்று அமர்ந்துவிடும். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பொருட்படுத்தத் தக்க ஒரு புத்தகம்கூட இருக்காது. சரியான குழுவே சரியான ஆளுமைகளை தெரிவுசெய்யமுடியும். கௌரவிக்கப் படுபவர்களும் நிறுவப்பட்ட இலக்கியத் தகுதி கொண்டிருத்தல் அவசியம்.
   ஆனால் இன்று தமிழகத்தில் அதற்கான வாய்ப்புண்டு என நான் நினைக்கவில்லை. இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர்.  கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
   பாவண்ணன் ஆகவே இங்கே அதிகபட்சம் நான் எதிர்பார்ப்பது, திமுக மீது சாய்வு கொண்டவர்களிலேயே கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்கள் கௌரவிக்கப்படுவதுதான். உதாரணமாக எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்கள். கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.
   இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி போன்று ஏற்கனவே உரிய அங்கீகாரம் பெற்ற முன்னோடிகளை விட்டுவிடலாம். அரசின் நிதியுதவி உடனடியாகத் தேவையாகும் இடத்தில் இருக்கும் ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், ஃப்ரான்ஸிஸ் கிருபாபோன்றவர்களுக்கு அது கிடைக்குமென்றால் அதன்பொருட்டு இந்த அரசை மனமுவந்து பாராட்டுவேன். தொடர்புகள் ஏதும் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களும் திமுக- இடதுசாரி ஆதரவு மனநிலை கொண்டவர்களே.
   ராஜ் கௌதமன் மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. தேவதச்சன் ஒரு முன்னோடியின் இடம் கொண்டவர்.
   திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன்ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை. இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலில் அவர்களைச் சொல்லி வைக்கவேண்டும்—வாசகர்களுக்காக.
   அ.கா பெருமாள் இந்த அரசு பண்பாட்டுச் செயல்பாடுகளுக்காக, அறிவுச் செயல்பாடுகளுக்காக ஏதாவது மெய்யாகவே செய்யவேண்டும் என்றால் செய்யவேண்டிய சில உள்ளன. நோபல்பரிசு பெற்ற தமிழகத்து அறிவியலாளர்களுக்கான நினைவகங்களை இங்கே உருவாக்கவேண்டும். சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர். கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு நினைவகம் உருவாகவேண்டும். அவை அவர்களின் துறை சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களின் சாதி காரணமாக அவர்கள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டனர். அந்த கீழ்மையிலிருந்து திமுக வெளிவரவேண்டும்.
   கட்சிச் சார்புக்கு அப்பாற்பட்ட நோக்குடன்  கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன், பேரகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இனிமேலேனும் நினைவகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாகிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இங்கே இன்னும்கூட அங்கீகரிக்கப்படவில்லை. அவருடைய நினைவு நிலைநிறுத்தப்படவேண்டும்.
   குடவாயில் பாலசுப்ரமணியம் எப்போதுமே நம் ஆசைகள் இவை. இவற்றை நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புதுமைப்பித்தனுக்கு சென்னையில் ஒரு சிலையை நானே நிதி திரட்டி வைக்கவேண்டும் என்னும் கனவு எனக்கு பத்தாண்டுகளாக உள்ளது. சொந்தமாக அமையும் சிறு இடத்தில். கோவையில் வைக்கலாமென்று சொல்லும் பல நண்பர்கள், புரவலர் இன்று உள்ளனர். அது ஒரு படைப்பூக்கமற்ற நிர்வாகச் செயல்பாடு என்பதனால்தான் தொடங்குவதற்குத் தயங்குகிறேன். அவ்வாறு அமையும் என்றால் அதுவே புதுமைப்பித்தனுக்குக் கௌரவம்.
   எந்த அரசு இருந்தாலும் அவ்வரசு நோக்கி இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்த தளத்தில் ஒவ்வொரு விருதின்போதும் இதையெல்லாம் எழுதுகிறேன். ஒவ்வொரு விவாதத்திலும் குறிப்பிடுகிறேன். நம்பிக்கைதான், எதிர்பார்ப்புதான். ஒரு புதிய அரசு அமையும்போது அதைக் கோரலாம். சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது. அது இந்த ஆட்சியில் இன்னும் விரிவாக, இன்னும் பயனுள்ளதாகவேண்டும். இவ்வறிவிப்புகளை அவ்வண்ணம் நம்ப விரும்புகிறேன்.
   சோ.தர்மன் ஆனால் அந்நம்பிக்கைகள் நிறைவேறும் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இணையவெளியில் திமுகச் சில்லறைகள் இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மேல் பெய்துகொண்டிருக்கும் காழ்ப்புக் கூச்சல்கள் செவிகூச செய்கின்றன. இது தாங்கள் வேட்டையாடிப்பெற்ற இரை, தாங்களே பிய்த்துக்கிழித்து தின்போம் என்ற வெறியை மட்டுமே அதில் காணமுடிகிறது. அவர்கள் வெறும் தொண்டர்கள், அவர்களின் மனநிலை எப்போதும் அதுதான்.
   ஆனால் அவர்களின் வெறிக்கூச்சலை சாதாரணமாகக் காணமுடியாது. அதற்கு மிகப்பெரிய செல்வாக்குண்டு. மெல்லமெல்ல அவர்களில் சிலரையே அறிஞர் என்றும் படைப்பாளர் என்றும் அரசு அங்கீகரிக்கவே இந்த பரிசுகள் வழிவகுக்கும். அந்த இரையை அடையும்பொருட்டு பிற அனைவரையுமே அவர்கள் கூட்டாக இழிவுசெய்வார்கள். அனைவரையும் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவார்கள். விளைவாக தமிழுக்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்கள் அவமதிக்கப்பட்டு இச்சில்லறைகள் அரங்கிலேறும் சூழல் அமைந்தால் அதைவிட கீழ்மை வேறில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இங்கேதான்.
   ஸ்டாலின் ராஜாங்கம் இது முன்பும் நிகழ்ந்ததுதான். அவ்வாறு அரசால் வெற்றுக்கூச்சலிடும் கட்சிக்காரர்கள் இலக்கியவாதிகளாக, சிந்தனையாளர்களாக, ஆய்வாளர்களாக முன்னிலைப் படுத்தப் படும்போது அவர்கள் இலக்கியவாதிகளோ, சிந்தனையாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
   அது விருதை எதிர்ப்பது அல்ல. அவ்விருதின் வழியாக நிறுவப்படும் ஒரு மதிப்பீட்டை எதிர்ப்பது. அடுத்த தலைமுறையினரிடம் எது இலக்கியம், எது சிந்தனை, எது ஆய்வு என்று சுட்டிக்காட்டுவது. அதைச் செய்யாவிட்டால் தவறான முன்னுதாரணங்கள் உருவாகி நிலைபெறு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்சென்று அதைச் செய்வது விமர்சகர்களின், இலக்கியச் செயல்பாட்டாளர்களின் கடமை.
   ப.சரவணன் இந்த அளவுகோல்கள் மிகக்கறாரானவை அல்ல. எவரைவிட எவர் மேல் என்றெல்லாம் துல்லியமாக எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இப்படிச் சொல்லலாம், பொதுவாக தீவிர வாசிப்புச் சூழலிலும் ஆய்வுச்சூழலிலும் ஏற்கப்பட்ட இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே முக்கியமானவர்கள். அங்கே வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர்கள் இடம்பெறலாகாது. அவர்களே ஓசை கிளப்புபவர்கள், எங்கும் முண்டியடிப்பவர்கள், கும்பலாகச் செயல்படுபவர்கள். அவர்கள் அங்கே சென்று அமரவே வாய்ப்பு மிகுதி. ஆட்சியாளர்களின் விவேகமே அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்.
   கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனை திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன்.அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி.
   கரு ஆறுமுகத்தமிழன் பண்பாட்டு ஆய்வாளனாக, இலக்கிய விமர்சகனாக என்னை எப்போதுமே அந்நிலையில்தான் நிறுத்திக்கொள்வேன். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் தன்னை நிறுத்திக்கொண்ட இடம் அது. எந்த புதிய அரசையும் நம்பிக்கையை அளித்தே எதிர்கொள்ளவேண்டும். இன்று அதையே செய்கிறேன்.
   மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பட்டியல் என்பது நான் எப்போதும் முன்வைப்பது. இவர்களைப்பற்றி எப்போதும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். விமர்சனம் மட்டுமல்ல, பரிந்துரையும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியே. ஆகவே இதை முன்வைக்கிறேன். இதையே மலையாளத்திலும் செய்வதுண்டு.
   எஸ்.செந்தில்குமார் இவற்றைப் பேசும்போது இப்படி பரிந்துரை செய்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும்– ஒரே கட்டுரையில் எல்லாம் இருந்தால் நல்லது என்பதனால். ஆய்வுகள் போன்றவற்றுக்கு புறவயமான அளவீடுகள் உண்டு. அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம். புலவர் செ.இராசு பேராசிரியர் பா.ஜம்புலிங்கம், ஆ.சிவசுப்ரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.சரவணன். கரு.ஆறுமுகத்தமிழன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் பணி தெளிவானது, மறுக்கமுடியாதது. அவர்களின் நூல்களே சான்று.
   ஆனால் இலக்கியத்தின் தரமதிப்பீடுகள் அகவயமானவை. அவை புறவயமாக நிறுவப்படுவது தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடுகள் வழியாகத்தான். இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும்.
   அ.இரா.வேங்கடாசலபதி ஆனால் இலக்கிய அழகியலை முன்வைக்கும் விமர்சனம் இந்திரா பார்த்தசாரதியை முன்வைத்து அவரே சிறந்தவர் என கூறுகிறது. அந்த இலக்கியவிமர்சனக் கருத்தும் ஒரு சிறுவட்டத்திலேயே திகழும்.  அதன் செல்வாக்கு இலக்கியவாசகர் நடுவே மட்டும்தான். ஆனால் மெல்லமெல்ல அந்தத் தரப்பு நிலைகொள்கிறது. அப்படித்தான் இலக்கியவாதிகள் நிலைபெறுகிறார்களே ஒழிய ‘மக்கள் ஏற்பினால்’ அல்ல.
   கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரன் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி. இந்த வேறுபாடு என்றுமுள்ள ஓர் உண்மை. அதை ஜனநாயகப் பண்புகளால் நிறுவவில்லை, அழ்கையலால்தான் நிறுவியிருக்கிறோம்.
   இச்சூழலில் ஓர் அரசு எவருக்கு விருதளிக்கவேண்டும், கௌரவிக்க வேண்டும்? மக்கள் கருத்தையா அது பொருட்படுத்தவேண்டும்? இல்லை, அங்கே அரசு மக்களுக்கு தந்தை எனும் இடத்தில் உள்ளது. எது மக்களுக்கு பிடிக்கிறதோ அதையல்ல, எது மக்களுக்குத் தேவையோ அதை அளிக்கவேண்டும்.
   ரமேஷ் பிரேதன் கீரனூர் ஜாகீர்ராஜா யூமா வாசுகி கண்மணி ஆகவேதான் உலகமெங்கும் அரசுகள் மக்கள் அறியாத கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதளித்து அவர்களை முன்னிறுத்துகின்றன. சத்யஜித் ரே விருது பெறுகிறார், ரமேஷ் சிப்பி விருது பெறுவதில்லை. அடூர் விருது பெறுகிறார், ஐ.வி.சசி விருது பெறுவதில்லை.
   அவ்வகையான அங்கீகாரம் நிகழ்வதற்கு இரண்டு அடிப்படைகள் தேவையாக உள்ளன. ஒன்று, மதிப்பீடுகளை முன்வைத்து அதை நிறுவும் விமர்சன இயக்கம். இரண்டு, அவ்விமர்சன இயக்கத்திற்கு அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம். விமர்சன இயக்கம் தர்க்கங்களை உண்டுபண்ணுகிறது. அதற்கு தீவிர வாசகர்களின் ஏற்பு உருவாகிறது. கல்வித்துறை தொடர்ந்து வரவேண்டும். [அது நிகழாததனாலேயே இங்கே கி.ரா போன்ற இலக்கியமுன்னோடிகளுக்கு ஞானபீடம் போன்ற விருதுகள் வந்தமையவில்லை.]
   ஆ.சிவசுப்ரமணியம் தமிழில் விமர்சன இயக்கம் சென்ற தலைமுறை வரை வலுவாக இருந்தது. இன்றும் வாசகர்களிடம் அந்த விமர்சன இயக்கத்தின் செல்வாக்கு உள்ளது, ஆனால் அதற்கு அரசு அல்லது கல்வித்துறை அங்கீகாரம் இல்லை. அரசு தன் கட்சிச்சார்பாலும் கல்வித்துறை அதன் சாதியரசியல்- ஆள்பிடிப்பு அரசியலாலும் இலக்கியத்தை அணுகுகிறது.
   ஆகவே இன்று நவீன இலக்கியச் சூழலில் உள்ள மதிப்பீடுகளுக்கு எந்த புறவய மதிப்பும் இல்லை. தேவதேவனோ தேவதச்சனோ மாபெரும் கவிஞர்கள் என்பதில் இலக்கியவாசகனுக்கு ஐயமே இல்லை. ஆனால் அதை இந்தச் சின்ன வட்டத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அரசு அல்லது கல்வித்துறையின் ஏற்பு அவர்களுக்கு அமைவதே இல்லை.
   சுப்ரபாரதிமணியன் சூழல் இப்படி இருக்கையில் நாம் நம் கலைஞர்கள்  சமூக ஏற்பின்றி சிறுமை கொள்வதைப்பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. சமூக ஏற்போ, கல்வித்துறை ஏற்போ இல்லாமல் அரசின் ஏற்பு இயலவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் பயனில்லை. அதை மாற்றுவது இந்த அறிவுச்சூழலில் இருந்து எவரேனும் அரசில் பங்குபெற்றால்தான் இயலும்.
   கேரளத்தில் கலைப்பண்பாட்டு துறை என்ற ஒரு துறையும் அதற்கு அமைச்சரும் உள்ளனர். அதில் இலக்கியவாதிகள் அமைச்சராவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, இலக்கியஅறிவு கொண்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராகிறார்
   [இலக்கியவாதி அதற்கு முற்றிலும் தகுதியற்றவன். அவன் அந்த இடத்தை ஓர் இலக்கிய அதிகாரமாக ஆக்கிக்கொள்வான். அவ்வண்ணம் ஓர் இடம் ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் என்றால் அவன் தன்னை இலக்கியவிமர்சகனாக, வெளிப்படையான அளவுகோல்களுடன் தன் தெரிவை முன்வைத்து நிறுவியவனாக, இருக்கவேண்டும். கேரளத்தில் அவ்வாறு அமைச்சரான இலக்கிய விமர்சகர் ஜோசப் முண்டச்சேரி. அகில இந்திய அளவில் டாக்டர் ஸ்ரீகாந்த் வர்மா, டாக்டர் கரன்சிங் மற்றும் கே.நட்வர்சிங்]
   ஜம்புலிங்கம் கேரள கலாச்சார அமைச்சர்களில் எம்.ஏ.பேபி [கம்யூனிஸ்ட்]  ஜி.கார்த்திகேயன் [காங்கிரஸ்]  போன்றவர்கள் கட்சி எல்லை கடந்து நீடித்த பங்களிப்புக்காக இன்றும் நினைக்கப்படும் ஆளுமைகள். அப்படி எவரும் திராவிட ஆட்சி உருவானபின் இருந்ததில்லை.
   அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் கலைக்களஞ்சியம் [பெ.தூரன்] தமிழ்ப்பேரகராதி [எஸ்.வையாபுரிப்பிள்ளை] போன்ற பெரும்பணிகள் நிகழ்ந்தன. [ஆனால் தமிழ்வழிக் கல்வி என்னும் தளத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், அரங்கநாயகம் மூவருமே பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்]
   தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, கௌரவிக்கப்படும் ஒரு சூழல் தமிழில் மெல்லமெல்ல உருவாகலாம். அவ்வண்ணம் உருவானால் இலக்கிய விழுமியங்கள் விருதுகளுக்கான அளவுகோல்களாக ஆகலாம். அதற்குரிய காலம் இன்னும் கனியவேண்டும்.
   சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.
   ஜெ
    
    
   https://www.jeyamohan.in/147882/
  • By கிருபன்
   மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை.
   https://tamilasiabooks.com/
    
   https://www.jeyamohan.in/145363/
  • By கிருபன்
   தமிழ் வணிக எழுத்தின் தேவை | எழுத்தாளர் ஜெயமோகன்
   January 18, 2021
   தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு
   அன்புள்ள ஜெ
   உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக்  கடந்து  இலக்கிய வாசிப்பிற்கு வருவது  பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
   வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை.
   இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்தவர்கள் சரி. இது புதிய வாசகர்கள் இவ்வகை எழுத்தாளர்கள் அனைவரையும்  முற்றிலும் ஒதுக்கி வைக்கத்  தூண்டுவது அல்லவா.
   வித்தியாசமான நடைகளின் வாசிப்பனுபவம்  , மற்றும் சில குறிப்பிட்ட நல்ல அம்சங்களை ரசிப்பது, இவையோடு ஒப்பீட்டு  அனுபவத்துக்கும் உதவுமே. (தேர்ந்து எடுத்த படைப்புகள் மூலம் ). உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்.

   சில (சுஜாதா ) உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
   1. சுஜாதா ஒரு ஆணாதிக்கவாதி எழுத்தாளர் என்பதான அபிப்பிராயம் முன்பு உலவியதுண்டு. அவர் எழுதிய “ஓடாதே” எனும் நாவல் படித்திருக்கிறேன். புதிதாகக் கல்யாணம் ஆகி தேனிலவுக்குப் புறப்படும் ஒரு தம்பதியில் கணவன் ஒரு சராசரி இளைஞன். மனைவி மிகுந்த தன்னம்பிக்கை மிகுந்த இளம்பெண். முழுக்க அவைளை சுற்றிச் சுழலும் நாவல். அவர்கள் பயண ஆரம்பத்தில் இருந்து எதிர் கொள்ளும் எதிர் பாராத சிக்கலான பிரச்சனைகளைத் தன் அசட்டுக் கணவனையும் அரவணைத்துக்கொண்டே சாதுர்யமாக சமாளிப்பது பற்றிய மிக வித்தியாசமான நாவல். கணேஷ், வஸந்த் இறுதியில் கொஞ்சமாக வருவார்கள்.
   2. சுஜாதாவின் “வைரங்கள்” எனும் நாவலில்  ஒரு அத்தியாயத்தில் பிரச்சினையில் தவிக்கும் ஒரு ஏழைத்  தம்பதியோடு பயணப்படும் அவர்களின் காது கேளாத  ஊமைக்குழந்தையின் பார்வையில் அந்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் வாசித்தது. அப்போது என் மனதை மிகவும் சலனப்படுத்தியது. இப்போதும்  மனதின் முலையில் இருக்கிறது.
   பொழுது போக்கு எழுத்தாளர்கள் என வகைப் படுத்தப்பட்டவர்களின் படைப்புகளில் வாசிக்கத்தகுந்தவற்றை (குறைந்ததாயினும்) சுட்டிக் காட்டுவதும் பரந்த இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி ஆகாதா.
   அன்புடன்
   ரமேஷ் கிருஷ்ணன்

   அன்புள்ள ரமேஷ்கிருஷ்ணன்,
   நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது பொழுதுபோக்கு எழுத்து அல்லது வணிக எழுத்து அல்லது பொதுவாசிப்பு எழுத்து என்பது இலக்கியச் சூழலில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்தது. அது புதுமைப்பித்தன், க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை மூன்று தலைமுறைகளாக முதிர்ந்து வந்த பார்வை. அதன் தீவிரம் உச்சத்திலிருந்தபோது நான் எழுதவந்தேன்
   எண்பதுகளின் இறுதியில் வணிக எழுத்தை நிராகரிக்கும்போக்கு உச்சத்திலிருந்தமைக்கு ஒரு காரணமும் இருந்தது. இன்று வணிக எழுத்தாளர்களை எவரும் இலக்கியமேதைகள் என்று சொல்வதில்லை. ஆனால் அன்று அகிலன் ஞானபீட விருது பெற்றிருந்தார். கோவி.மணிசேகரன் ஞானபீடம் தவிர எல்லா விருதுகளையும் பெற்றிருந்தார். அவர்களே இலக்கியத்தின் உச்சங்கள் என அவ்வாசகர்கள் நம்பினர்.
   ஐம்பது அறுபதுகளில் தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன் போன்ற இலக்கியவாதிகள் வணிக இதழ்களில் எழுத வாய்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் அன்றைய வணிக இலக்கிய நட்சத்திரங்களுக்கு முன் அவர்கள் ஒளி குன்றிப்போனார்கள்
   பெரிய இதழ்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அங்குள்ள வாசகர்களிடம் இலக்கியமேதைகளால்கூட உரையாட முடியாது என்று நிரூபணமாயிற்று. அந்த வாசகன் அவனுக்கு பழகிய சுவையை அவர்களிடம் எதிர்பார்க்கிறான். அவனுக்குப் பிடித்ததுபோல இலக்கிய எழுத்தாளன் எழுதவேண்டுமென கோருகிறான். இலக்கிய ஆசிரியன் உருவாக்கும் உலகுக்குள் கொஞ்சம் முயற்சி எடுத்து நுழைய அவனால் இயலவில்லை

   இக்காரணத்தால் வணிக இலக்கியம் என்பது முற்றிலும் வேறு, அதற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்கவியலாது என்னும் எண்ணம் உறுதிப்பட்டது. சுந்தர ராமசாமிகூட தொடக்கத்தில் கல்கியில் எழுதியிருக்கிறார். ஆனால் எண்பதுகளில் வணிக எழுத்துடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளக்கூடாது, எவ்வகையிலும் அதனுடன் சமரசம் செய்துகொள்ளக்கூடாது, இலக்கியம் தூயவடிவிலேயே முன்வைக்கப்படவேண்டும் என்னும் கருத்து ஓங்கியிருந்தது.அதன் முன்னணிக்குரலாக அவர் திகழ்ந்தார்.
   வணிக எழுத்தை வாசிப்பவர்கள் வேறொரு அறிவுப்புலத்தில் இருக்கிறார்கள், அவர்களை அங்கிருந்து இலக்கியத்தின் அறிவுப்புலத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்று சுந்தர ராமசாமியின் தலைமுறை நம்பியது. அதற்கு முதலில் தாங்கள் வாசித்துக்கொண்டிருப்பவை இலக்கியங்கள் அல்ல என்று அந்த வாசகர்கள் உணரவேண்டும். இலக்கியம் என இன்னொன்று உள்ளது என அவர்கள் தெளிவடையவேண்டும். அப்போதுதான் அவர்கள் வணிக எழுத்தின் புலத்திலிருந்து இலக்கியப்புலத்திற்கு வரமுடியும்.
   ஆகவே வணிக எழுத்தின் புலத்தை ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் போக்கு உருவாகியது. அதை முற்றிலும் ஒதுக்கி அதற்கு மாறாக இலக்கியத்தை முன்வைக்கும் நிலைபாடு எடுக்கப்பட்டது. சுந்தர ராம்சாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் என அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனை விமர்சகர்களும் இதில் ஒரே நிலைபாடுகொண்டிருந்தனர்

   வணிக எழுத்து மிகப்பெருவாரியாக வாசிக்கப்பட்டது. ஒருசெயல் பெரும் எண்ணிக்கையில் செய்யப்படும்போது அதற்கு  ‘பெருந்திரள் மனநிலை’ என ஒன்று உருவாகிவிடுகிறது. பெருந்திரள் தன்னை தொகுத்துக்கொண்டே செல்லும் தன்மைகொண்டது. தொகுக்கத் தொகுக்க அது ஆற்றல்மிக்கதாக ஆகும். காலப்போக்கில் ஒற்றை உருவாக அது மாறிவிடும். ஒருவரை கொண்டாடுவதென்றால் அத்தனைபேரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்.பல்லாயிரம்பேர் கொண்டாடும் ஒருவரை எவரும் மறுக்கமுடியாது.
   அப்படித்தான் அரசியலில் தலைவர்களும் சினிமாவில் நாயகர்களும் உருவாகிறார்கள். பன்முக சுவைகள் பலவகைப்போக்குகள் உள்முரண்பாடுகள் உள்விவாதங்கள் பெருந்திரள்சூழலில் உருவாவதில்லை. ஒரு காலகட்டத்திற்கு ஓரிரு நட்சத்திரங்கள் எழுந்து ஒளிர்வார்கள். எண்பதுகளில் சுஜாதா ,பாலகுமாரன்.
   அவ்வாறு எழுபது எண்பதுகளில் வணிக எழுத்து ஒற்றைப்பேரமைப்பாக ஆகிவிட்டிருந்தது. பல கதையாசிரியர்கள் வழியாக ஒரே உள்ளம் அத்தனை கதைகளையும் எழுதுவதுபோல. அதை வாசிப்பவர்களும் ஒட்டுமொத்தமாக ஒற்றை வாசகமனம்தான். உண்மையில் அந்த ஒற்றை வாசகமனம்தான் முதலில் உருவாகிறது. பல்லாயிரம் மனிதர்களின் மனங்கள் இணைந்த அந்த பேருருவ மனம் ஒரு தெய்வம்போல. அது எழுத்தாளனிடம் ஆணையிடுகிறது, அது கோருவதை அவன் எழுதியாகவேண்டும்.

   இலக்கியவாதி அந்தப் பேருருவனிடம் சென்று உரையாடமுற்படுகிறான். அதை தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான், அது முடிவதில்லை. அழகிரிசாமி அதில் அடைந்த தோல்வியெல்லாம் மிகப்பரிதாபகரமானவை.ஆகவேதான் அந்தப் பேருருவனை அப்படியே விட்டுவிலகி வந்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அந்த ராட்சதனுடன் தனிமனிதர் போரிடவே முடியாது. கலாச்சார இயக்கங்களால் மட்டுமே அவனை எதிர்க்கமுடியும்.
   நான் இலக்கியத்திற்குள் நுழைந்தபோது இலக்கியத்திற்குரிய அந்த வேகத்தை முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அதற்குமுன்பு பிரபல ஊடகங்களில் கிட்டத்தட்ட நூறுகதைகள் வரை எழுதியிருந்தேன். பின்னர் பேரிதழ்களை முழுக்க நிராகரித்து சிற்றிதழ்களில் மட்டும் எழுதலானேன். என் முதல்தொகுதியின் முன்னுரையிலேயே அதை குறிப்பிட்டிருந்தேன்.வணிக எழுத்தை இடதுகாலால் எற்றித்தள்ளுவேன் என்று ஒருவகை அறைகூவலாக. அதை அன்று சுஜாதா அவருடைய மதிப்புரையில் மெல்லிய கிண்டலுடன் குறிப்பிட்டிருந்தார்
   ஆனால் இலக்கியவிமர்சனம் எழுதியபோது வணிகஎழுத்து என்னும் புலத்தில் உருவான குறிப்பிடத்தக்க ஆக்கங்களை சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஜெயகாந்தன் பொதுவான இதழ்களில் எழுதியமையாலேயே இலக்கியவாதிகளால் ஒதுக்கப்பட்டார். அவர் தமிழின் முதன்மை இலக்கியவாதிகளில் ஒருவர் என நான் திரும்பத்திரும்ப எழுதினேன். சுஜாதாவின் சிறுகதைகள் நாடகங்கள் பற்றி குறிப்பிட்டேன்
   வணிக எழுத்தின் புலத்திற்குள் வெளியான முக்கியமான நூல்களின் பட்டியலையும் என் விமர்சனச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வெளியிட்டிருக்கிறேன். அவற்றை சிற்றிதழ்சார்ந்த உலகில் கவனிக்கவைக்க என்னால் முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். அப்பட்டியல் அப்படியேதான் இருக்கிறது

   ஆனால் ஒன்றை வலியுறுத்தவிரும்புகிறேன். வணிக எழுத்தின் களத்திற்குள் சுவாரசியமான படைப்புக்கள் உண்டு. அவற்றை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி எழுதுவதுமுண்டு. ஆனால் அவை வணிகப்படைப்பு என்னும் பொது இயல்புக்குள் வருகின்றனவே ஒழிய இலக்கியத்திற்குள் வரவில்லை. வணிக எழுத்தில் சுவராசியமான புதிய களம் உடையவை, சில நல்ல வாழ்க்கைத்தருணங்கள் கொண்டவை உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமான இயல்பை நான் மேலே சொன்ன ஒற்றைப்பேருருக்கொண்ட வாசகனே தீர்மானிக்கிறான்.
   தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலில் ஒரு  ‘சோனித்தனம்’ குடியேற அந்த சிற்றிதழ்சார்ந்த ‘இலக்கியப்பிடிவாதம்’ வழிவகுத்தது. ஒரு குறிப்பிட்டவகை எழுத்து, ஒரு குறிப்பிட்டவகை மனநிலை மட்டுமே இலக்கியம் என்னும் புரிதல் இங்கே உருவானது. இன்றைக்கும் பல மொக்கைகள் இலக்கியம் என்றால் அது தன்வரலாற்றுக்குறிப்பு மட்டுமே என நம்பிக்கொண்டிருக்கின்றன. எழுத்தை எழுத்தாளனின் வாழ்க்கையாகவே பார்க்கின்றன.
   நேரடி வாழ்வனுபவங்களை யதார்த்தமாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று எண்ணிக்கொண்ட விமர்சகர்களும் பலர் உண்டு. ஆகவே எந்தப்படைப்பையும் அப்படைப்பாளியின் தனிப்பட்ட அனுபவ உலகுக்கு நெருக்கமாக உள்ளதா என்று பார்த்து மதிப்பிட்டனர். அப்படைப்பு அந்த அனுபவங்களின் புறவுலகுக்கு எந்த அளவுக்கு அணுக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு யதார்த்தமானது என்று கணித்தனர்.
   ’யதார்த்தம்’ என்பதும் ’கலை’ என்பதும் சமமான சொற்களாக புழங்கலாயின. யதார்த்தம் என்பது ‘நம்பக’மானதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் நோயுற்ற சிற்றிதழ் வாசகர்களிடையே இருந்தது. அதாவது இலக்கியம் என்பது வாசிப்பவரும் ஏற்கனவே அறிந்து, உண்மைதானா என்று பரிசீலித்து ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும் என நம்பப்பட்டது

   கொஞ்சம் கற்பனை இருந்தால்கூட ‘கற்பனையானது’ என்று சொல்லி படைப்பு நிராகரிக்கப்பட்டது. கொஞ்சம் உணர்வுவெளிப்பாடு இருந்தால்கூட ‘செண்டிமெண்டல்’ என விலக்கப்பட்டது. அதாவது இலக்கியத்திலிருந்து இலக்கியச்செயல்பாட்டின் அடிப்படையான கற்பனையையும் உணர்ச்சிகரத்தையும் அகற்றும் முயற்சி நடைபெற்றது.
   இதன் விளைவாக மிகமிக சுவாரசியமற்ற தட்டையான யதார்த்தச்சித்தரிப்புகள் இலக்கியத் தகுதி பெற்றன. உணர்ச்சிகள், காட்சிநுட்பங்கள், மொழிவளம், வடிவக்கட்டமைப்பு, நாடகீய உச்சங்கள், சிந்தனைகள், தரிசனங்கள் என இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என உலகமெங்கும் கருதப்பட்ட எந்த இயல்பும் அற்றவை அவை. அவ்வாறு எண்பது தொண்ணூறுகளில் கொண்டாடப்பட்ட வெற்று யதார்த்தச் சித்திரங்கள் பல உண்டு.
   இதை நிராகரித்தாகவேண்டிய சூழல் எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது இருந்தது. இலக்கியம் என்பது பலவகையான எழுத்துமுறைகள் கொண்டது. யதார்த்தவாதம் அதில் ஒருவகை அழகியல் மட்டுமே. புறவயமான யதார்த்ததுடன் அணுக்கமாக நிலைகொள்ளும் இயல்புவாதம் அதைவிட குறுகலான ஓர் அழகியல்முறை. அந்த இடுங்கின பாதை மட்டுமே இலக்கியத்தின் வழியாக இருக்கவேண்டியதில்லை என்று நாங்கள் சொன்னோம்

   துப்பறியும்கதை, பேய்க்கதை, மாயாஜாலக்கதை, சாகசக்கதை என இலக்கியம் எல்லா கதைவடிவங்களையும் கொள்ளலாம். உலக இலக்கியத்தில் இதில் ஒவ்வொன்றிலும் செவ்வியல் படைப்புக்கள் உள்ளன என்று நாங்கள் சொல்லவேண்டியிருந்தது. யதார்த்தவாதம் மட்டுமல்ல கற்பனாவாதம், மிகைபுனைவு, மாயயதார்த்தம் எல்லாமே கலைதான் என்று சொன்னோம்.அக்காலத்தில் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா ஏன் ஒரு கிளாஸிக் என்று நான் ஒரு கட்டுரை எழுதியது நினைவுள்ளது. ஓர் உரையின் எழுத்துவடிவம் அது.
   ஆகவே ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது’ என்று ஓங்கிக் குரல்கொடுத்தோம். இலக்கியப்பெறுமதி என்பது படைப்பின் யதார்த்தமதிப்பில் இல்லை, அது உருவாக்கும் வாழ்க்கைத்தருணங்களின் நுட்பம், சிந்தனைகளின் ஆழம், தரிசனங்களின் முழுமை ஆகியவற்றில் உள்ளது. ஆழம் என்பது அதுதானே ஒழிய வாசகன் பார்த்து ‘ஓக்கே’ சொல்லும் புறவய யதார்த்தம் அல்ல என்று வாதிட்டோம்.
   இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும். வணிகஎழுத்துக்கு எதிரான ஒட்டுமொத்த நிராகரிப்பு நிகழும்போதுகூட தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழல் ஆண்பெண் உறவு சார்ந்த மென்கிளுகிளுப்பை எழுதுவதில் தமிழ் வணிக எழுத்தின் அதே மனநிலையையே கொண்டிருந்தது.
   இங்கே அதிகமாக வாசிக்கப்பட்டது, வாசிக்கப்படுவது, ஆண்பெண் சரசமாடுவதைப்பற்றிய எழுத்துதான். காதல்கள், கள்ள உறவுகள், பாலியல் மீறல்கள். குபரா முதல் ஜானகிராமன் வழியாக வண்ணநிலவன் வரை. இன்றும்கூட அதுவே மைய ஓட்டம்.அவற்றின் ஆழமின்மையும் மேலோட்டமான ஜிலுஜிலுப்பும் எவருக்கும் ஒவ்வாமையை அளிக்கவில்லை. அவற்றை ‘நுட்பமான’ இலக்கியப்படைப்புக்கள் என்று கொண்டாட தயக்கமும் இல்லை. விமர்சகராக சுந்தர ராமசாமிதான் இதை கடுமையாகச் சுட்டிக்காட்டிவந்தார்.
   இந்தப் பின்னணியிலேயே என்னுடைய படுகை, மாடன் மோட்சம், மண், மூன்று சரித்திரக்கதைகள், பாடலிபுத்திரம், ரதம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற கதைகள் வெளிவந்தன. அவை எல்லாமே கற்பனையை விரித்து, புறவயமான நம்பகத்தன்மையை உதறி ,எழுதப்பட்டவை. அன்று கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாருமே அப்படித்தான் எழுதினோம்.

   எழுத்தாளன் தான் தன் தனிவாழ்வில் அனுபவித்து அறிந்ததை மட்டுமே எழுதவேண்டும் என்ற அசட்டுத்தனமான ஒரு நம்பிக்கை இலக்கியச் சூழலில் இருந்தமையால் தமிழ்வாழ்வின் பல தளங்கள் தொடப்படவே இல்லை.  கற்பனையின் துணைகொண்டு வேறுவேறு உலகங்களை படைப்பது, ஆராய்ச்சி செய்து எழுதுவது எதுவும் ஏற்கப்படவில்லை. அச்சூழலில்தான் முழுக்கமுழுக்க கற்பனைப்படைப்பான விஷ்ணுபுரம் வந்து இலக்கியத்தில் மைய இடம் பெற்றது. வரலாற்றையே அது கற்பனையால் உருவாக்கியது.
   இலக்கியம் என்பது சூம்பிப்போன தன்வயக்குறிப்பு அல்ல, அது பண்பாட்டின்மீதான ஒட்டுமொத்தவிமர்சனம், பண்பாட்டை மறு ஆக்கம் செய்யும் முயற்சி, வரலாற்றுக்கு இணையான மறுவரலாற்றை உருவாக்கும் மாபெரும் அறிவுச்செயல்பாடு என்று நிறுவியதில் விஷ்ணுபுரத்திற்கு பெரும்பங்கு உண்டு. தன்னறிதலும் விரிவான ஆராய்ச்சியும் கற்பனையும் வடிவபோதமும் இணையும் ஒருபுள்ளியிலேயே பெரிய படைப்புக்கள் உருவாகமுடியும் என அது காட்டியது. பின்னர் வந்த ஜோ.டி.குரூசின் ஆழிசூழ் உலகு, சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களின் வழியை உருவாக்கியது விஷ்ணுபுரம்தான்.
   இச்சூழலில் எல்லாவகையான புனைவுமுறைகளையும் பரிசீலிக்கும்போது தமிழில் அந்த புனைவுமுறையில் முன்னர் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று ஆராயவேண்டியிருந்தது. அவ்வாறுதான் வணிக எழுத்துநோக்கி கவனம் சென்றது. அப்படிப் பார்க்கையில் முன்னோடியான புதுமைப்பித்தன் எல்லாவகை கதைகளையும் எழுதியிருந்தமை தெரியவந்தது. பின்னர் அவ்வகைமைகள் வணிக எழுத்துக்கே சென்றன, இலக்கியம் தெரிந்த யதார்த்தம் என்ற அசட்டு இடுங்கலுக்குள் சிக்கிக் கொண்டது

   வணிக இலக்கியத்திலேயே தமிழ்வாழ்க்கையின் பல்வேறு களங்கள் பேசப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றச் சூழலில் ஒரு நாவல் என்றால் அது பிவி.ஆர் எழுதிய மிலாட் மட்டுமே. பஞ்சாப் பிரச்சினை பின்னணியில் ஒரு நாவல் என்றால் வாசந்தி எழுதிய மௌனப்புயல் மட்டுமே. இலக்கிய எழுத்து என்பது ஒருவகையில் கற்பனைத்திறனும் ஆராய்ச்சிக்கான அறிவும் இல்லாதவர்கள் எழுதும் தோற்றுப்போன புனைவுகள் என்ற நிலையே உருவாகிவிட்டது. பலவீனத்தையே பலமாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
   வணிக எழுத்தில் கற்பனை என்பது வாசகனை சுவாரசியப்படுத்த மட்டுமே பயன்பட்டது. ஆகவே கற்பனை என்பதே வாசகனை சுவாரசியப்படுத்த ‘பொய்’ சொல்வது என்ற எண்ணம் இலக்கியச் சூழலில் உருவானது. ஆனால் கற்பனை என்பது அன்றாடம் கடந்த, ஆழ்மன உண்மைகளைச் சொல்வதற்கான வழிமுறை என்பதே இலக்கியத்தின் அடிப்படைக்கொள்கை.
   உதாரணம் புதுமைப்பித்தனின்  ‘கபாடபுரம்’ ‘பிரம்மராக்ஷஸ்’ போன்ற கதைகள். சுந்தரராமசாமி உட்பட புகழ்பெற்ற புதுமைப்பித்தன் ரசிகர்கள் அவற்றை புதுமைப்பித்தன் ‘எழுதிப்பார்த்த’ கதைகள் என்றே நினைத்தனர். அவர்கள் அவருடைய சாதனைகளாக கருதிய கதைகள் சாபவிமோசனம், மனித இயந்திரம் போன்றவையே.  கபாடபுரம் புதுமைப்பித்தனின் சாதனை ,மறு எல்லையில் செல்லம்மாள் இன்னொரு சாதனை என தமிழில் சொல்லி ஒருவகையில் நிலைநிறுத்திய விமர்சகன் நான்.

   ஆனால் கபாடபுரத்தின் புனைவுநீட்சி சிற்றிதழ்சார் இலக்கியத்தில் நிகழவில்லை. அது வணிக எழுத்திலேயே நிகழ்ந்தது. கண்ணதாசன் உட்பட பலர் குமரிக்கண்டம் போன்றவற்றை எழுதினர். ஆனால் வெறும் கேளிக்கையெழுத்தாகவே எழுதினர். மீண்டும் கபாடபுரத்தின் நீட்சி இலக்கியத்தில் நிகழ்ந்தது கொற்றவை வழியாகத்தான்.
   இந்த நீட்சிக்காக, வணிக எழுத்தை ஆராயவேண்டியிருந்தது. பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டாலும்கூட வணிக எழுத்தின் களம் மிகப்பெரிதாக இருந்தமையால் அவர்களுக்கு புதியபுதிய களங்கள் தேவை என்னும் நிலை இருந்தது. ஆகவே வரலாறு, உளவியல்சிக்கல்கள் என பல தளங்களில் புனைவுகளை அவர்கள் எழுதினர். ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஒரு வணிக எழுத்து. ஆனால் ஒரு பெரும்நாவலுக்குரிய கருவும் களமும் கொண்டது. பி.வி.ஆர் எழுதிய கூந்தலிலே ஒருமலர்இலக்கியப்படைப்பாக ஆகவில்லை. ஆனால் எந்த சிற்றிதழ் இலக்கியத்திலும் இல்லாத களமும், கற்பனைவீச்சும் உள்ளது
   இன்னும்கூட தமிழ்ச் சிற்றிதழ்சார் எழுத்தில் முன்னோடிகள் உருவாக்கிய குறுகல் உள்ளது. புதியகளங்களை நாடுவது, அவற்றில் புதிய உளநிகழ்வுகளையும் உணர்வுமுடிச்சுகளையும் கற்பனையால் உருவாக்குவது, தத்துவதரிசனங்களை நிகழ்த்துவது, வரலாற்றில் ஊடுருவுவது, பண்பாட்டை விரித்துரைப்பது இங்கே நடைபெறவில்லை. ஆகவே சிற்றிதழ்சார் எழுத்தில் ஒருவகையான சலிப்பூட்டும் தன்மை இன்றும் நீடிக்கிறது. இன்றுகூட நேற்றைய வணிக எழுத்தை சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகள் கவனித்தால் வீச்சுடன் மேலே செல்லமுடியும்.
   உதாரணமாக, சித்தர்களின் உலகம் தமிழ்ச்சூழலுக்கே உரிய ஒரு மாயவெளி. ஆலயச்சிற்பங்களின் மர்மங்கள் இன்னொரு வெளி. இந்திரா சௌந்தரராஜன் இவற்றை வணிகப்புனைவாக எழுதியிருக்கிறார். ஏன் ஒரு படைப்பாளி அவற்றை ஆழமான மெய்யியல் உசாவல்கள் கொண்ட ஒரு நாவலாக எழுதக்கூடாது? ஏன் தன் கொல்லைப்புறத்தில் நிகழ்பவற்றை மட்டுமே எழுதவேண்டும்?
   ஜெ
    
    
   https://www.jeyamohan.in/141469/
    
  • By கிருபன்
   எண்ணும்பொழுது - ஜெயமோகன் 
   “தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான்.
   அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.
   அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டைச் சுழித்து “என்ன பார்வை?”என்றாள்
   “சும்மா”
   ”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டைச் சுழித்தாள்
   “பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?”
   “பாக்கிறது மட்டுமா?”
   “பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம் வெறும் உடம்பு”
   “ம்க்கும், ஏதாவது கேட்டா உடனே ஏதாவது சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிச்சிடறது”
   அவள் தங்க வளையல்களைக் கழற்றினாள். அவள் நகைகளைக் கழற்றும்போதும் மேஜை மேலிருந்த சிறிய பீங்கான் கிண்ணத்தில் போடும்போதும் அவை மெல்லிய உலோக ஓசையிட்டன. ஓசையிலிருந்தே எது வளையல், எது மோதிரம் என்று சொல்லமுடிந்தது.
   “என்னமோ சொன்னீங்களே?” என்றாள்
   ”என்ன?”என்றான்
   “என்னமோ கன்னின்னு?”
   “அதுவா? அது ஒரு கதை… நான் முன்னாடி கேரளத்திலே வடகரைங்கிற ஊரிலே வேலை பாத்தப்ப ஒருநாள் ஒரு சின்னக்கோயிலிலே கதை கேக்கப் போனேன். நம்மூர் வில்லுப்பாட்டு மாதிரி அங்க ஒருவகை பாட்டு. பானைப்பாட்டுன்னு பேரு. பானைவாயிலே தோலைக்கட்டி அதிலே குச்சியாலே தட்டிட்டே பாடுறது… நீட்டி நீட்டிப் பாடுவாங்க… அப்ப எல்லாமே ஆச்சரியமா இருந்த காலகட்டம். அதனாலே அதை ரொம்ப ரசிச்சுக் கேட்டேன்”
   “ஓகோ” என்று அவள் ஆர்வமில்லாமல் சொன்னாள். கண்ணாடியில் உடலைத் திருப்பி தன்னை பார்த்துக்கொண்டாள்.
   “தெக்குதிருவீட்டில் கன்னியோட பாட்டுகதை”
   “அது எதுக்கு இப்ப ஞாபகம் வந்தது?”
   “சும்மாதான்… ஏன் ஞாபகம் வந்தது, என்ன சம்பந்தம்னுதான் யோசிச்சிட்டிருக்கேன்.”
   ”எப்ப பார் யோசனைதான்… ஒருநாள் மண்டையே ஷார்ட் சர்க்யூட் ஆகி புஸ்னு கருகிரப்போகுது”
   அவன் புன்னகைத்தான்.
   அவள் “இருங்க” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.
   அவன் தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காலை நீட்டி ஆட்டியபடி அந்த கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவள் இன்னமும் இருப்பதுபோல கண்ணாடிக்குள் அவள் கழற்றி வைத்த நகைகள் இருந்தன.
   கண்ணாடிக்குள் அவள் ஆழத்தில் தோன்றினாள். நைட்டி அணிந்திருந்தாள். நீரிலிருந்து எழுவதுபோல கண்ணாடிப் பரப்பில் இருந்து எழுந்து அணுகி வந்து முகத்தைப் பார்த்துக்கொண்டாள். இப்பாலிருப்பது பிம்பம் என எண்ணிக்கொண்டான். அவள் கன்னத்தில் பூனைமுடி ஈரத்தில் ஒட்டியிருந்தது. நெற்றியிலும் முடி நனைந்திருந்தது. முகத்தை கையால் நீவிவிட்டாள். வெண்துவாலையால் முகத்தையும் கழுத்தையும் அழுத்தித் துடைத்தாள்.
   “ஏன் இங்கேயே டிரஸ் மாத்திக்கிடறது?”
   ‘இங்கியா?”
   “மொத்தமாக் கழட்டுறே, அப்ற மாத்துறதுக்கு என்ன?”
   “அதெல்லாம் மாட்டேன்.”
   “ஏன்னு கேட்டேன்.”
   ”மாட்டேன், அவ்ளவுதான்.”
   “சரி, வா.”
   “என்ன அவசரம்?” அவள் தாலியைக் கழற்றி கண்ணாடிமுன் இருந்த கொக்கியில் மாட்டினாள்.
   “அதை மட்டும் ஏன் மாட்டுறே?”
   “கீழே வைச்சா சிக்கிடுது,” என்றாள் ?அப்றம் அதை சிடுக்கெடுக்கிறது பெரிய ரோதனை.”
   “தாலிச்சிடுக்கு.”
   “என்னது?”
   “இல்ல, ஒண்ணுமில்லை”
   அவள் அருகே வந்தாள். இயல்பாக இரு கைகளையும் தூக்கி தலைமுடியை சீரமைத்தாள். இதை பெண்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இயல்பாகவே செய்கிறார்கள். அவள் மார்புகள் மெல்லிய வழுவழுப்பான நைட்டிக்குள் ஏறி இறங்கின. அவற்றின் உறுதியான வடிவை உணர்த்தியபடி. அவற்றின் நுனிகள் இறுகியிருக்கின்றன என்று காட்டியபடி.
   அவள் கட்டில் அருகே வந்து நின்று “சரண்யா அக்கா நாளைக்கு மலைக்கோயில் போலாமான்னு கேட்டாங்க… கார் போகுது. ஒரு சீட் இருக்குன்னு சொன்னாங்க.”
   “போயேன்… எங்கிட்ட கேக்கணுமா?”
   “சொல்லணும்ல?”
   இதுவும் ஒரு ஜாலம். உச்சிமுனைக்கு ஒரு கணம் முன் தயங்கி நின்று இயல்பான அன்றாடப் பேச்சை எடுப்பது. வேறெங்கோ என நடிப்பது. உடலொன்று பேச சொற்கள் பிறிதொன்று பேசும் ஒரு நுண்ணிய நடிப்பு. நடிப்பவரே அறியாத நடிப்புபோல அழகுடையதொன்றில்லை. அதைப்போல கூர்மையானதுமில்லை.
   “சொல்லிட்டேல்ல?” என்றான். அவள் கையைப் பிடித்து இயல்பாக அருகே அமரச் செய்தான்.
   “நாளைக்கு கேஸுக்கு சொல்லணும்… எப்ப வேணுமானாலும் தீந்துடும்,” என்றாள்.
   ”ஓகோ” என்றான் “அப்றம்?”
   “என்ன அப்றம்?”
   “மத்தபடி மளிகை, சமையல்…”
   “வெளையாட்டா? டைமுக்கு வந்து உக்காந்துட்டு ஏன் லேட்டுன்னு கேக்கத் தெரியுதுல்ல?”
   “சரி, இனிமே கேக்கலை,” என்றான்
   அவள் மீண்டும் கைகளை தூக்கி கொண்டையை அவிழ்த்து முடியை கைகளால் விரித்து தோளில் இட்டுக்கொண்டு மெத்தைமேல் காலை தூக்கி வைத்து அமர்ந்தாள்.
   “எல்லா தலைகாணியையும் எடுத்து வைச்சுகிடணுமா?”
   “நீ வேணுமானா எடுத்துக்க.”
   எத்தனை சொற்கள் வழியாக…
   அவள் தலையணையை எடுத்து வைத்து அதை கைகளால் அழுத்தி பதமாக்கினாள்.
   “தலைகாணியிலே சாய்ஞ்சு உக்காந்தா குழி விழுந்திடுது. அப்றம் காலையிலே எனக்கு கழுத்து வலி.”
   “நான் தெக்குதிருவீட்டில் கன்னி கதையப்பத்திச் சொன்னேன்ல?”
   “ஆமா, அது என்ன கதை?”என்றபடி சாய்ந்து அமர்ந்தாள்.
   “தெக்குதிருவீட்டில் கன்னி ஒரு பெரிய அழகி. பெரிய குடும்பம். தெக்குதிருவீடுன்னா ஒரு குட்டி ராஜாவோட வம்சம். வடக்கே நாடுவாழிகள்னு சொல்லுவாங்க. அவளுக்கு பதினெட்டு வயசு இருக்கிறப்ப குளிக்கப்போறா. அப்ப போம்பாளர்னு இன்னொரு நாடுவாழி அந்தப்பக்கமா போறார். அவரோட பல்லக்குத்தூக்கிகளோட சத்தம்கேட்டு கன்னி குளப்புரையோட தூணுக்குப் பின்னாடி ஒளிஞ்சுகிட்டா. ஆனா தண்ணியிலே அவளோட பிம்பத்தை போம்பாளர் பாத்துட்டார். அவள் மேலே காதலாயிட்டார்.”
   அவள் சிரித்து “இது நல்லாயிருக்கு,” என்றாள்
   “நானும் கொஞ்சம் மேலோட்டமான ஆர்வத்தோடதான் கதையைக் கேட்டேன். ஆனால் இந்த எடம் அப்டியே உள்ள இழுத்துட்டுது. சாதாரணமா இந்த மாதிரியான பாட்டுகளிலே இப்டி ஒரு சூட்சுமமான விஷயம் இருக்கிறதில்லை.”
   “அப்றம்?” என்றாள்
   “அவர் வந்து பெண் கேட்கிறார். அவரு ஏழு கப்பலுக்கு உரிமையாளர். பெரிய படை வச்சிருந்தவர். அவருக்கு திருவீட்டுக்கன்னியை கட்டிக்குடுக்கிறாங்க. தண்ணியிலே பாத்த பெண்ணை அவர் நேரிலே பாக்கிறார். ஆனா அவளை கண்ணாடியிலே பாத்தாத்தான் அழகுன்னு நினைச்சு ஆறன்முளையிலே சொல்லி ஆளுயர கண்ணாடி செஞ்சு அதிலே நிக்கவைச்சு பார்க்கிறார்…”
   “ஓகோ, வித்தியாசமா இருக்கே?”என்று அவள் புன்னகைத்தாள்.
   “அவங்க பதினாறு வருசம் மனசு ஒப்பி சேந்து வாழுறாங்க.”
   “குழந்தைங்க இல்லியா?” என்றாள்
   ‘இல்லை… பதினாறு வருசம் கழிச்சு போம்பாளர் கப்பலிலே வியாபாரத்துக்கு கிளம்பறார். அஞ்சு வருசமாகும் திரும்பி வர்ரதுக்கு. அதுவரைக்கும் பிரிஞ்சிருந்தா ஆம்புளை மனசு மாறாதான்னு கன்னி கேட்டா. போம்பாளர் கன்னிகிட்டே ஒரு மோதிரத்தைக் குடுக்கிறார். அது பொன் மோதிரம். ஆனா அது மாயப் பொன். இந்தப் பொன் மோதிரம் எப்ப வெள்ளி மோதிரமா மாறுதோ அப்ப நான் உனக்கு துரோகம் பண்ணிட்டதா நினைச்சுக்கோன்னு சொல்றார்.”
   அவள் கையால் தலைமுடியை பிடித்துச் சுருள்களாகச் சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தாள். கண்கள் மாறிவிட்டிருந்தன.
   “அவர் கிளம்பறப்ப அவள் ஒரு முல்லைக்கொடியை அவருக்குக் கொடுக்கிறா. இந்த முல்லைக்கொடிக்கு நாளும் தண்ணி விடணும். எப்ப இது வாடுதோ அப்ப நான் துரோகம் பண்ணினதா நினைச்சுக்கிடுங்கன்னு சொல்றா. அவர் கெளம்பிப் போயிடறார்.”
   அவன் அவளுடைய உளம்கூர்ந்த முகத்தை பார்த்தான். என்ன நினைக்கிறாள்? கதையைப் புரிந்துகொள்கிறாளா, இல்லை வேறெதாவது யோசிக்கிறாளா?
   “அப்றம்?”என்று அவள் கேட்டாள்.
   “கப்பல் பல மாத காலம் கடலிலே போச்சு. பொருள் கொள்முதல் பண்ணிட்டு திரும்பி வர்ரப்ப புயல் வந்திட்டுது. கப்பல் திசைமாறி அலைகளிலே ஓட ஆரம்பிச்சிட்டுது. கப்பல் உடைஞ்சு போம்பாளர் கடலிலே விழுந்தார். ஆயிரம் அலை சேந்தடிச்சுது. பத்தாயிரம் அலை சேந்து அடிச்சுது. போம்பாளர் ஒரு கட்டையை புடிச்சுக்கிட்டு கடலிலே நீந்தினார். ‘திருவீட்டில் கன்னியின் கணவன் நான் கடலே, என்னைத் திரும்பி போகவிடு கடலே’ன்னு அவர் மன்றாடினார். ‘நஞ்சு மூத்த நாகராஜாவைபோல் படமெடுக்கும் கடலே, என் நெஞ்சு அழிஞ்சு நானே வந்தா எடுத்துக்கோ கடலே’ன்னு கூவி அழுதார்”
   “அத்தனை அலையிலேயும் அந்த முல்லைச்செடியை அவர் விடவே இல்லை. முல்லைச்செடியை விட்டா ரெண்டு கையாலேயும் நீந்தலாம்னு தோணினாலும் விட மனமில்லை. முல்லைச்செடியை பிடிச்சிட்டிருக்கிற போம்பாளரை மூழ்கடிக்க கடலுக்கு அதிகாரமில்லை. கடல் அலையாலே அடிச்சடிச்சு பாத்தது. அதிலே இருந்து ஒரு முல்லைப்பூ கூட உதிரலை. அதனாலே கடல் அவர்மேல்  மனசிறங்கி அவரை கடலுங்கரைங்கிற ஒரு தீவிலே கொண்டு போய்ச் சேத்தது. அவர் அங்கே கரையேறினார். அவர் கையிலே அந்த முல்லைச் செடி இருந்தது.”
   “அங்கே கடலுங்கரை நாடுவாழி ஒருத்தர் இருந்தார். அவர் போம்பாளரை காப்பாற்றி ஒரு கடலோர வீட்டிலே தங்க வைச்சார். அவருக்கு ஒரு படகுகட்டி அதிலே ஏற்றி ஊருக்கு அனுப்புறதா வாக்குறுதி குடுத்தார். கடலுங்கரை தம்பினானோ மகள் பெயர் கடலுங்கரை கன்னி. அவ பெரிய அழகி… திருவீட்டு கன்னிக்கு தண்ணியோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு தீயோட அழகு. திருவீட்டுக் கன்னிக்கு குழிமுயலோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு கருநாகத்தோட அழகு.”
   அவள் “உம்” என்றாள்
   “கடலுங்கரைக் கன்னிக்கு போம்பாளரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. கப்பல் வேலை முடியும் வரை அவர் அங்கேயே தங்கவேண்டியிருக்கு. அங்கேருந்து ஏழுகடல் தாண்டித்தான் போம்பாளரோட ஊர் இருக்கு. அவராலே வேற எங்கேயும் போகமுடியாது. ஏன்னா அது ஒரு தீவு. கடலுங்கரை கன்னி போம்பாளரை கவர முயற்சி பண்றா. கட்டாயப்படுத்திப் பாக்கிறா. கடலிலே துரத்தி விட்டிருவேன்னு பயமுறுத்தியும் பாக்கிறா. அவர் அவளைத் திரும்பிக்கூட பாக்கலை”
   அவள் கண்களைப் பார்த்தபடி கதையைத் தொடர்ந்து சொன்னான். அவன் எப்போதுமே எதையாவது அப்படிப் பேசுவதுண்டு. படித்தது, பார்த்தது. ஆனால் எல்லாமே அவள் பார்வையில் கேலிக்குரியவைதான். ஆரம்பத்தில் அந்தக் கேலி ஓர் இனிய விளையாட்டாக இருந்தது. ஆனால் அதன்பின் அதில் பிடிவாதமாக நீடித்த புறக்கணிப்பு அவனைக் குத்தத் தொடங்கியது. அது இயல்பான புறக்கணிப்பு அல்ல, நான் புறக்கணிக்கிறேன் என்ற நிலைப்பாடு. அதை ஐயமில்லாமல் தெரிவித்தாக வேண்டும் என்னும் உறுதி. அதைத் தெரிவிக்க அவள் கண்டுகொண்டவழி கள்ளமற்ற, சிறுமித்தனமான கேலி. அறியாமையைத் தன் இளமையின் அடையாளமாக முன்வைப்பது. ஒருவகை தகுதியாகவே அதை நினைத்துக்கொள்வது. அதை எப்போது விளையாட்டல்ல என்று உணரத் தொடங்கினான்? அதைவிட அதை எப்படி விளையாட்டே என நம்பினான்?
   “போம்பாளர் தன்னைப் புறக்கணிச்சதை கடலுங்கரைக் கன்னியாலே மறக்கவே முடியலை. நினைக்க நினைக்க அது தீயா படர்ந்து சுட ஆரம்பிச்சுது. ஊணும் உறக்கமும் இல்லாம அவள் மெலிஞ்சா. அவளோட தோழிகள் அவள் ஏன் அப்டி இருக்கான்னு கேட்டாங்க. அவ பதில் சொல்லாம அழுதா. அவங்களுக்கும் புரியலை.”
   “அந்த ஊரிலே கோணச்சின்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு ஒண்ணரைக்கண்ணு, காக்காய்நெறம், சோழிப்பல்லு, ஒண்ணரைக்காலு. அவ குரூபியா இருக்கிறதனாலே அவளை யாருமே பார்க்கறதில்லை. அந்த குரூபத்துக்குப் பின்னாலே அவ ஒளிஞ்சிட்டிருந்து எல்லாரையும் பாத்திட்டிருந்தா. அவ முன்னாலே யாரும் எதையும் ஒளிக்கலை. ஏன்னா அவளை யாரும் பாக்காததனாலே அவ அங்க இல்லைன்னே அவங்க மனசும் நினைச்சுக்கிட்டிருந்தது. அவ முன்னாடியே ஆம்புளைங்க நிர்வாணமாக் குளிப்பாங்க. பொம்புளைங்க கள்ளப்புருஷனை பாப்பாங்க. ஆணும்பெண்ணும் கூடி இருப்பாங்க.”
   “கோணச்சி காணாத ஒண்ணுமில்லை. மனுஷனோட எல்லா கோணலும் அவளுக்குத் தெரியும். ஆனா அவளுக்கும் ஒரு குறையுண்டு. உடலிலே கொஞ்ச கோணல் இருந்தால்கூட அவங்களை அவளாலே கூர்ந்து பாக்கமுடியாது. ஏன்னா அவங்க அவளைப் பாத்திருவாங்க. அவங்க பார்வை பட்டாலே அவ ஒளிஞ்சுகிடுவா. ஆயிரம் பேர் போற மைதானத்திலே அவ கண்ணிலே கோணலான உடம்புள்ளவங்க மட்டும் தெரியவே மாட்டாங்க. அப்டிப்பட்டவ.”
   அவள் புன்னகைத்து “இதெல்லாம் அந்த கதையிலே இருந்திச்சா?”என்றாள்.
   “கிட்டத்தட்ட இப்டித்தான்,” என்றான்.
   “அப்டியே அடிச்சு விடுறது… சரி சொல்லுங்க,” என்றாள் சிரித்தபடி.
   “கோணச்சி வந்து கடலுங்கரை கன்னியைப் பாத்தா. உடனே அவளுக்குத் தெரிஞ்சுட்டுது, கடலுங்கரை கன்னி காதலிலேதான் நோயாளி ஆயிட்டான்னு. அவளைப் பக்கத்திலே உக்காந்து கூர்ந்து பாத்தா. அவள் கட்டிலைச் சுத்தி கடலிலே எடுத்த கூழாங்கல்லு நாலஞ்சு கிடந்தது. உடனே ஆளைக் கண்டுபிடிச்சிட்டா. நேரா போய் போம்பாளரைப் பாத்தா. அவரோட மனசையும் தெரிஞ்சுகிட்டா. திரும்பி வந்து அவ கடலுங்கரை கன்னிகிட்டே சொன்னா. ‘அம்மையே, கடலோடி போம்பாளன் ஏன் கன்னியைத் திரும்பிப் பாக்கலேன்னு தெரியுமா?’ கடலுங்கரை கன்னி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு கண்டு ஆச்சரியப்பட்டா. ‘ஏன்?’ன்னு கேட்டா. ‘கோணச்சிக்குத் தெரியும். பத்து பவுனுக்கு உபாயம் சொல்லித்தருவேன்’ன்னு கோணச்சி சொன்னா”.
   “கடலுங்கரை கன்னி ஆமாடப்பெட்டியை திறந்து பத்து பவுன் எடுத்துக் கொடுத்தா. கோணச்சி உபாயம் சொல்லிக்குடுத்தா. போம்பாளன் எப்பவுமே ஒரு முல்லைச்செடி பக்கத்திலே போய் உக்காந்திட்டிருக்கான். அதிலே பூக்குற பூவையே எண்ணி எண்ணிlg பாத்திட்டிருக்கான். அந்த பூச்செடியை கொடுத்தவள் ஒரு கன்னியாத்தான் இருக்கணும். அது அவன் மனசிலே நிறைஞ்ச மங்கை. அவளை மறக்கமுடியாமல்தான் உன்னை ஏற்கமுடியாமல் இருக்கான். அவளை மறந்தால் உன்னை அணைப்பான்.”
   “கடலுங்கரை கன்னி இன்னும் பத்து பவுன் எடுத்து கோணச்சிக்கு குடுத்தா. ‘போம்பாளன் அவளை மறக்கவும் என்னை மணக்கவும் ஒரு மார்க்கம் சொல்லடி கோணச்சி’ன்னு கடலுங்கரை கன்னி கேட்டா. கோணச்சி சொன்னா, ‘அவன் அவளை மறக்கணுமானா அவள் அவனுக்கு துரோகம் செய்யணும். அவள் அவனை மறக்கணுமானா அவன் அவளுக்கு துரோகம் செய்யணும்’. கடலுங்கரை கன்னி கேட்டா ‘ஒரு மனசோடே உறவுகொண்ட ரெண்டு பேர் எப்படியடி கோணச்சி துரோகம் செய்வார்?’ கோணச்சி சொன்னா ‘மனுஷ மனசறிஞ்ச கள்ளி நான். மனசறிஞ்சு மனசறிஞ்சு கோணச்சியாய் போனேன்ந கடலுங்கரை கன்னி அவள் கையைப்பிடிச்சுட்டு ‘மனசிலே அறிஞ்ச மர்மம் என்னன்னு சொல்லுடி கோணச்சின்’னா. கோணச்சி அறியாத ரகசியங்கள் இல்லை. ஏன்னா அவளோட வழியெல்லாம் குறுக்குவழி. அவளோட நடையெல்லாம் பதுங்கி நடை. அவளோட பார்வையெல்லாம் ஓரப்பார்வை. அவளோட குரலெல்லாம் காதோடதான்.”
   “கோணச்சி சொன்னா. ‘எண்ணக்கூடாது அம்மே. எண்ணி எண்ணிப் பார்ப்பதெல்லாம் எண்ணிக்கை தவறும். கணக்கிட்டுப் பார்ப்பதெல்லாம் குறைஞ்சுகூடும். ரெண்டு பேரையும் எண்ண வைப்போம், இழந்ததும் விட்டதும் எண்ணினால் கூடும். எடுத்ததும் வைச்சதும் எண்ணினால் குறையும்’. கடலுங்கரை கன்னிக்கு சந்தேகம் ‘எண்ண வைக்கிறது எப்டியடி கோணச்சி?’ன்னு கேட்டா. ‘பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும் அம்மையே’ன்னா. ‘சரி எப்டியாவது அவரை எண்ணவை. உனக்கு இன்னும் பத்து பவுன் பரிசா தாறேன்’னு கடலுங்கரை கன்னி சொன்னா.”
   “எப்டி?” என்று அவள் கேட்டாள். இப்போது அவள் கதையிலிருந்து வெளியே போய்விட்டது தெரிந்தது. கண்களில் ஒரு சுருக்கம்.
   “எப்டீன்னு சொல்லு?” என்றான்.
   “தெரியலை,” என்றாள்.
   “கதையிலே இப்டி இருக்கு,” என்றான். “கோணச்சி அந்த முல்லைச் செடியை பாத்தா. இப்டி ஒரு செடி இங்க இருக்குன்னா அங்க போம்பாளரோட மனைவிகிட்டே வேற ஒண்ணு இருக்குன்னு கண்டுகிட்டா. அவ அங்கே எண்ணினாள்னா இவர் இங்க எண்ணுவார். இவர் இங்க எண்ணினார்னா அவ அங்க எண்ணுவா. அதுக்கு ஒரு மந்திரம் உண்டு. கோணச்சி கோணமலை உச்சியிலே ஏறி அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தா.”
   “ஏழு நாள் மந்திரம் போட்டுட்டு எட்டாம் நாள் கோணச்சி கீழே இறங்கி வந்தா. மந்திரம் பலிக்குதான்னு பாக்க கடலுங்கரை கன்னி கடலோரத்திலே போம்பாளர் தங்கியிருந்த வீட்டுக்கு போனா. அங்க போம்பாளர் முல்லைச்செடி பக்கத்திலே பதறிட்டு நிக்கிறதை பார்த்தா. என்னன்னு கேட்டா. ‘இதிலே பூத்த பூவிலே ரெண்டு பூவை காணலை… நேற்று இருந்த பூவொண்ணு இன்னைக்கு மறைஞ்சிட்டுது. நேற்று இன்னொரு பூவும் மறைஞ்சிட்டுது. பூவை கண்டால் சொல்லிடு’ன்னு சொன்னார் போம்பாளர்.”
   “கடலுங்கரை கன்னி போம்பாளரோட வேலைக்காரன்கிட்டே என்னன்னு கேட்டா. ‘பூவெல்லாம் ஒண்ணும் குறையல்லை. முந்தாநாள் ராத்திரியில் சொப்பனம் கண்டு எந்திரிச்சார். ஓடிப்போய் செடியிலே பூத்த பூவையெல்லாம் எண்ணிப் பார்த்தார். இப்படி பூவை எண்ணி பாத்ததே இல்லை. என்ன ஆச்சு இவருக்குன்னு நான் பக்கத்திலே போய் கேட்டேன். ஒரு பூ உதிர்ந்த மாதிரி சொப்பனம் கண்டேனடான்னு சொன்னார். பூ உதிர்ந்தா கீழே கிடக்குமேன்னு நான் சொன்னேன். சந்தேகம் போகாம பக்கத்திலே உக்காந்து எண்ணி எண்ணிப் பாக்க தொடங்கினார். பொழுது போய் பொழுது வளர சந்தேகம் கூடிட்டே இருக்கு’ன்னு வேலைக்காரன் சொன்னான். சிரிச்சுகிட்டே கடலுங்கரை கன்னி திரும்பி வந்தா.”
   “அங்கே ஏழு கடலுக்கு அந்தப் பக்கம் திருவீட்டில் கன்னி கணவன் போன நாள் முதல் நோன்பிருந்து கும்பிட்டு காத்திருந்தா. பூவோட இதழெல்லாம் விளக்குச் சுடர் மாதிரி அவளைச் சுட்டது. அடுப்புத்தீயோ ஆயிரம் நாக்காலே உண்ண வந்தது. வெயிலையும் தீயையும் ஆடையா அணிஞ்சதுபோல் இருந்தது. ‘ஆறப் பொறுத்தாச்சு தீயே அமையப் பொறுக்க மாட்டயா’ன்னு அவ தீக்கிட்டே கேட்டா. அப்டி காத்திருந்தவ திடீர்னு நாளுக்கு நாற்பத்தொரு தடவை அந்த மோதிரத்தை எடுத்து வெளுத்திருக்கா வெளுத்திருக்கான்னு பாத்தா. ஊணில்லை உறக்கமில்லை. பார்த்துப் பார்த்து பொன்மோதிரத்தை வெளுக்க வைச்சா. ஒருநாள் காலையிலே மோதிரத்தை எடுத்து பாத்தா. அது வெள்ளி மோதிரமா இருந்தது. அவ நேராப் போய் காட்டிலே தீவைச்சு அதிலே குதிச்சு ஆடையும் அணியும் ஊனும் எலும்பும் எரிஞ்சு செத்தா.”
   அவள் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள்.
   “இங்க முல்லைக்கொடியிலே எல்லா பூவும் உதிர்ந்திட்டுது. போம்பாளர் கண்ணீரோட பாத்திட்டிருந்தார். கொடியே வாடினதும் ஓடிப்போய் கடலிலே குதிச்சு உயிர்விட்டார். ‘குளிர்கடலே, அலைகடலே, ஆழக்கடலே நானே வந்திட்டேன்’ன்னு சொல்லிட்டே குதிச்சார். கடலோட ஆயிரம் வாசல்கள் திறந்து அவர் ஆழத்துக்கு போய்ட்டார்.”
   “அப்றம்?”
   “அந்த ரெண்டு ஆத்மாக்களும் சந்திக்கவே இல்லை. ஏன்னா திருவீட்டில் கன்னி தீயிலே போனாள். கப்பல்கார போம்பாளன் கடலிலே போனார். தீயிலே போனவ மேகங்களுக்குமேலே உள்ள சொர்க்கத்துக்கு போனா. கடலிலே போனவர் ஆழத்திலே இருக்கிற சொர்க்கத்துக்குப் போனார்… அவங்க ரெண்டும் பேருக்கும் நடுவிலே தீராத வானமும் மடங்காத காலமும் இருந்தது.”
   ”அப்றம்?”என்றாள்.
   “அவ்ளவுதான் கதை.”
   “என்ன கதை? ஒருமாதிரி வாலும் தலையுமில்லாம?” என்றாள்.
   “இந்த மாதிரி கதையெல்லாம் இப்டித்தான். ஒரு டிராஜடி மட்டும்தான் இருக்கும். நீதியெல்லாம் இருக்காது.”
   “என்ன கதையோ!” என்று சொல்லித் தலையணையை மீண்டும் கையால் அடித்தாள். “நடுவிலே இவ்ளவு குழி… இதை வைச்சு உக்காராதீங்கன்னா கேக்கிறதில்லை.”
   அவன் “இனிமேல் இல்லை,” என்றான். அவள் வயிற்றின்மேல் கைபோட்டு “என்ன படுத்தாச்சு?”என்றான்.
   “ஆ, படுக்காம? பகல் முழுக்க வேலை. வீடு ஆபீஸ்னு பெண்டு எடுக்குது!”
   “எந்த பெண்டு?”
   “சீ” என்று அவன் கையைத் தட்டிவிட்டாள்.
   நீண்ட கைப்பழக்கத்தால் அவன் அவளை மீட்டுவதெப்படி என அறிந்திருந்தான். உச்சுக் கொட்டல்கள், தட்டி விடுதல்கள், புரண்டு படுத்தல்கள், ‘என்ன இப்ப?” என்ற சிணுங்கல்கள் வழியாக அவள் அவனை அணுகிக்கொண்டிருந்தாள்.
   “இப்ப எதுக்கு அந்த கதை ஞாபகம் வரணும்?” என்று அவன் காதில் கேட்டாள்.
   “சும்மா, வந்திச்சு… இந்த புக்லே கேரளா டூரிசம் படம் பாத்தேன். அதனாலேகூட இருக்கலாம்…  இதென்ன?”
   “அப்ளம் பொரிக்கிறப்ப ஒரு சொட்டு தெறிச்சிட்டுது.”
   அவன் அதன்மேல் முத்தமிட்டான்.
   “அய்யே!”
   “என்ன பெரிய இவ மாதிரி?”
   “பெரிய இவதான்… அதானே தேடி வர்ரீங்க?”
   “ஆமாடி, தேடித்தான் வர்ரோம்.”
   அவன் முரட்டுத்தனமாக அவளை அள்ளி அணைத்துக்கொண்டான். அவள் அது வரை அவனைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதை உணர்ந்தான்.
   பெருமூச்சு கலந்த சொற்களால் உரையாடல். உடல்களால் உடலின் தொடுகையை உணர்தல். அதன்பின் உடல்களை பிணைத்துக்கொள்ளுதல். உடல் உடலை விழுங்கிவிட முயல்வதுபோல. உடல் உடலை ஆட்கொள்வதுபோல.
   அந்த அசைவுகளின் புரளல்களின் துவளல்களின் நடுவே அவள் அவன் இரு செவிகளையும் பிடித்து, அவன் தலையை சற்றே பின்னுக்கு தள்ளி, அவன் கண்களை கூர்ந்து பார்த்து “என்ன கதை அது? மடத்தனமா?” என்றாள்.
   “ம்” என்று அவன் சொன்னான்.
   அவள் கண்கள் தீபட்டு வெம்மைகொண்டவை போலிருந்தன. முகமே கொதிப்பதுபோல.
   “அவ்ளவும் கிறுக்கு… கிறுக்கு தவிர மண்டையிலே ஒண்ணுமில்லை!”
   அவள் வெறிகொண்டு அவனை இழுத்து அணைத்து அவன் உதடுகளைக் கவ்வி கடித்தாள். பற்கள் பதிந்தன. அவளுடைய அந்த வெறி மிக அரிதாகவே அவன் அறிந்தது. கைகளும் கால்களும் பரபரக்க மூச்சு சீறி ஒலிக்க ஊடே தொண்டையின் கமறல்போன்ற ஓசைகள் கலக்க அவள் மேலும் மேலும் கொந்தளிப்படைந்தபடியே சென்றாள்.
   பின்னர் மூச்சு சீராகிக்கொண்டிருக்க அவளுடைய உடல்மேல் அவன் குப்புறக்கிடந்தான். அவள் தோளின் வளைவில் முகம் அமைத்திருந்தான். அவள் மூச்சு அவன் தோள் மேல் பட்டுக்கொண்டிருந்தது. மென்மையான துணி ஒன்று தொட்டு அசைவதுபோல. அவன் முதுகில் அவள் கைநகங்கள் பதிந்ததன் எரிச்சல். தோளில் அவள் பற்கள் பதிந்த வலி.
   அவன் புரண்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் ஒருக்களித்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை மடித்து ஊன்றி அதில் தலைவைத்து எழுந்து அவனைப் பார்த்தாள். அவள் தோள்களில் கூந்தல் விழுந்து கிடந்தது. வெறுந்தோளில் சிறு தழும்பு ஒன்று. கழுத்தில் நீல நரம்பு ஒன்று புடைத்து மெல்லத் துடித்தது. ஒரு மார்பு மெத்தையில் அழுந்தியிருக்க கரிய சுருக்கங்களுடன் காம்பு கூர்ந்திருக்க இன்னொரு மார்பு வெண்ணிற மென்மையுடன் ததும்பிச் சொட்ட முற்பட்டு நின்றதுபோல் தெரிந்தது.
   அவன் அதை தொடப்போக அவள் தோளை விலக்கி அவனை அகற்றினாள். “அந்தக் கதையிலே எனக்கு சந்தேகம்,” என்றாள்.
   “என்ன?”
   “ரெண்டு பேரிலே யாரு முதன்முதலா எண்ணிப் பாக்க ஆரம்பிச்சது?”
   “ஏன்?”
   ”இல்ல கேட்டேன்.”
   “அது கதையிலே இல்லியே?”
   “யாரா இருக்கும்?”
   “அதை கோணச்சிகூட சொல்லிட முடியாது!” என்றான்
   “அந்தாள்தான்!”
   “இல்லை… வேணுமானா இப்டி சொல்லலாம். ஒரே செகெண்டிலே. ஒரு செக்கண்ட்டோட ஒரு பக்கம் இவ மறுபக்கம் அவர். ரெண்டு பேருமே சேந்து.”
   ”சும்மா உளறிட்டு!” என்று அவள் உதட்டைச் சுழித்து அவன் கையை தட்டினாள். உருண்டு மறுபக்கம்  எழுந்தாள். முதுகில் கூந்தல் கற்றைகள் விழுந்து அலை பாய பாத்ரூமுக்குச் சென்றாள்.
   அவன் செல்பேசியில் மின்னஞ்சல்களையும் குறுஞ்செய்திகளையும் பார்த்தான். அவள் திரும்பி வந்து “இந்த குழாய் எவ்ளவு மூடினாலும் சொட்டிக்கிட்டே இருக்கு. ராத்திரியிலே சிலசமயம் சத்தம் தூங்கவே விட மாட்டேங்குது,” என்றாள்
   “பாப்போம்!” என்றான்.
   “என்ன பாக்கிறது? ராமையாவை பாத்து வந்திட்டு போகச் சொல்லுங்க… இங்க வாட்டர்டாங் பக்கம்தான் அவன் வீடு.”
   “சரி.”
   அவன் எழுந்து பாத்ரூம் சென்று வரும்போது அவள் நைட்டியை அணிந்து தலைமுடியை தலைமுடிக்குமேல் தூக்கி விட்டுக்கொண்டு படுத்திருந்தாள்.
   அவன் படுத்துக்கொண்டு செல்பேசியை எடுத்தான்.
   “படிக்கப்போறீங்களா?”
   “அஞ்சு நிமிஷம்”
   ”லைட்டை ஆஃப் பண்ணிடுங்க… எனக்குத் தூக்கம் வருது,” என்று அவள் புரண்டு மறுபக்கம் நோக்கி படுத்துக்கொண்டாள்.
   அவன் விளக்குகளை அணைத்துவிட்டு செல்பேசியை இயக்கினான்.
    
   http://vallinam.com.my/version2/?p=7297
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.