Jump to content

யாழிணையம் 23 ஆவது அகவை


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 22ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2021) 23ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.

கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து முழு உலகமுமே ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முன்னர் குறிப்பிட்ட விடயத்தினையே மீண்டும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்திருக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அத்துடன் போலிச் செய்திகள் அதிகம் உலவும் சமூக வலைத்தளங்களில் இருந்து இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று சரிபார்த்துவிட்டு இணைக்கப்படவேண்டும்.

மேலே குறிப்பிட்ட விடயம் ஏனைய செய்திகளுக்கும் தகவல்களுக்கும் பொருந்தும் என்பதால் அவற்றிலும் கவனம் கொள்ளுங்கள் என வேண்டிக் கொண்டு தகவல்களைச் சரிபார்த்து அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் மிகச் சமீபத்தில் தமிழகத் தேர்தல் வருகின்றது. யாழ் இணையம் எந்த ஒரு கட்சி சார்ந்தே அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம்.. கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். 

ஒவ்வொரு கருத்தாளர்களையும் நாம் மதிக்கின்றோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆற்றல் அறிவு நுண்ணறிந்து பார்க்கும் அறிவு அனுபவம் சூழல் என்று இன்னோரான காரணிகளால் பல்வேறு வகையான எண்ணங்கள் சிந்தனைகள் இங்கு கருத்துக்களாக பதிவில் வருகின்றது. அவை சரி பிழை என்பதற்கு அப்பால் கருத்துக்களுக்கு மதிப்பளித்து கோபப்படாது தொடர்ந்தும் நிதானமாக கருத்துக்களை வைக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.  கருத்துக்களை கருத்துக்களாகப் பார்த்து அவைகளிற்கு பதில் கருத்துக்களை வையுங்கள். இன்றைய உலக ஒழுங்கில் நேரம் எவ்வளவு பெறுமதியானது என்பதை நாமறிவோம். கோபப்பட்டு எழுதும் கருத்துக்கள் பயனற்றுப் போவதுடன் வீண் மனஸ்தாபங்களும் வீணே ஏற்படுவதை அதற்காக செலவழிக்கும் நேர விரயத்தையும் தவிர்த்துக் கொள்வோம். தவறாகப் தோன்றும் கருத்துகளை நீக்குவதற்கு அல்லது ஒழுங்குபடுத்துவதற்கு மட்டுறுத்தினர்கள் மிக அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது. இவைகளுக்கு துணைபோகாது  நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது என்பதையும் நினைவுட்டிக் கொள்ள விரும்புகின்றோம்.

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.  எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.