Jump to content

நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்லும் ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலமென்று...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்லும் ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலமென்று...!

spacer.png

ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம்

ஈழத்தின் மூத்தகுடி தமிழ்குடி. வரலாற்றுக் காலங்களுக்கு முன்பே ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்லியல்அகழ்வாய்வுகள், கல்வெட்டுப் பதிவுகள் என்பன சான்றாக இருக்கின்றன.

நாம் ஓர் தேசிய இனம். எமக்கென்றோர் மொழி இருக்கிறது. பரந்து விரிந்த நிலப்பரப்பு இருக்கிறது. கலைபண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. நாங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளங்கள் யாவும் இருக்கின்றன.

ஆனால், ஈழத்தைத் தமதாக்கி,பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த தமிழர்களை வந்தேறு குடியாக்கி, வரலாற்றைத் திரிவாக்கி எம் உரிமைகளை எல்லாம் ஆறாம் நூற்றாண்டுககுப் ,பின் இடைச்செருகளாய் வந்த சிங்கள பௌத்த பேரினவாதம் படிப்படியாய்ப் பறிக்கத் தொடங்கியது.

காலத்துக்கு காலம் ஐரோப்பியர்கள் ஈழத்தைத் தம் உரிமைக்குள் கொண்டுவர முயன்றபோது கூட தமிழரசுகள்தான் அதை எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டு வரலாற்றுச் சாதனைகளைப் பதித்தன என்பது வரலாறு. அன்று கூட தமிழர்களின் புறமுதுகில் குத்தி தமிழரசுகளை அழிக்கக் கைகோர்த்து நின்றது சிங்களப் பேரினவாதம்தான் என்பதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். 

இறுதியில் ஈழத்தைத் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கூட, நீண்ட வரலாற்றுப் பின்னனி கொண்ட தமிழர்களின் உரிமை பற்றி கருத்தில் எடுக்கவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கைகளிலே ஆட்சிப்பொறுப்பை வழங்கி வெளியேறியது.

அதன்பின் அரியணை ஏறிய சிங்களப் பேரினவாதம் குடியேற்றம் என்ற பெயரில் நிலப்பறிப்புகளை செய்தது. தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்தது. தரப்படுத்தல் என்ற திட்டத்தின் மூலம் தமிழ் மாணவர்களின் கல்வியிலும் கைவைத்தது. 

தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையை வேண்டி சிங்களப் பேரினவாதத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தங்கள்,பேச்சுக்கள்அறவழிப் போராட்டங்கள் எல்லாம் தோற்றுப்போனது. 

 

 

JrfhYK8KY4Y9mFIELSZE.jpg

 

 

இந்தநிலையில் தமிழர்களைத் தம்உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராட வைத்தது சிங்களப் பேரினவாதம்.

விரல் மடிப்புக்குள் போராளிகளின் எண்ணிக்கையோடு தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமையை வென்றெடுக்க கரந்தடிப்படையாய் சிறு போராட்டக் குழுவாய் முளைகொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, வலிமையும்,அர்ப்பணிப்பும், கட்டுப்பாடும் நிறைந்ததாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, மக்கள் சக்தி எனும் மாபெரும் பலத்துடன் நிமிர்ந்து நின்றது. 

தமிழரின் உரிமைக்காக மூன்று தசாப்தங்களைக் கடந்த தமிழீழ விடுதலைப்போராட்டம், போரியலில் பெரும் வெற்றிகளைச் சந்தித்து இருக்கிறது. பல திருப்புமுனைகளை எதிர்கொண்டிருக்கின்றது. தம் முன் வந்த சவால்களை எல்லாம் சாதனைகளாய் மாற்றியிருக்கிறது. பெரும் நெருப்பாறுகளை நீந்திச் கடந்திருக்கிறது.

 

 

l28UIyge9tMhHzIYyWC3.jpg

 

ஒருநாடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் தமிழீழத்  திருநாடு மிளிர்ந்தது.

மிகக் குறுகிய காலத்தில் வல்லமை மிக்க தலைவனின் நேரிய வழிகாட்டலில், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் ,விடுதலை உணர்வும் மிக்க போராளிகளால் தாங்கி ஆலமரமாய் வேரூன்றி, விழுதெறிந்து நின்ற எமது தமிழீழம் எனும் விடுதலை விருட்சத்தின் வீரியத்தைக் கண்டு, சிங்கள தேசம் மட்டுமல்ல அயல்நாடுகளும் அரண்டு போயிருந்தன. மேற்குலகின் பார்வையும் எம் போராட்டம் மீது விழுந்தது.

சிறுபான்மை இனங்கள் போராடி வெற்றிபெற்றால் அது தம்நாடுகளுக்குள் பெரும் பிரச்சனைகளை உருவாக்கிவிடும் என்ற சுயநல எண்ணங்களால் எமது விடுதலைப் போராட்டம் நியாயமானது என்று தெரிந்திருந்தும் எமை அழிக்க பன்னாட்டுப் படை வளமும்,பலமும் சிறிலங்காப் படைகளோடு கைகோர்த்து நின்றன.

 

 

eO636NQ4FcoCyULQtKYj.jpg

 

அதன் வெளிப்பாடே சிறிலங்காப் படைகளால் மாவிலாறில் தொடக்கிய போர் ஓய்வை அறியாது நீண்டு விரிந்தது.

தமிழ் மக்களின் உரிமைக்காய், தாய்மண்ணின் விடுதலைக்காய்ப் போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்காப் படைகளோடு மட்டுமல்ல, போரியல் பலம்மிக்க வல்லரசுகளின் திட்டமிடல்களையும், படைப்பலங்களையும் எதிர்த்து நின்று போரிட்டார்கள். 

மிகக் குறுகிய காலத்திற்குள் விடுதலைப்புலிகளை அழித்துவிடலாம் எனக் கனவுகண்டவர்கள் எல்லாம் வியந்து நிற்க, மூன்றாண்டுகள் கடந்தும் வீச்சோடு நடந்தது போர். 

இங்குதான், எம்நிலங்களை வல்வளைப்புச் செய்து, எம்மக்களை அழித்தொழிப்புச் செய்துவரும், சிறிலங்காப் படைகளை வழிமறித்து, முற்றுகைச் சமரொன்றை செய்வதென தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முடிவெடுக்கின்றார்.

அந்த முற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்ட இடமே ஆனந்தபுரம்.

 

 

odKos11w6uPzPfkW6EY5.jpg

"ஆனந்தபுரம்" தமிழன் வீரத்தைப் பறைசாற்றும் இன்னுமொரு பெயர். விடுதலைக்காய்ப் போராடிய ஓர் இனத்தின் அழிக்க முடியா அடையாளம். தமிழன் போரியலின் வியத்தகு வடிவம். 

எப்படிச் சாத்தியம் ஆனது? உலகப் போரியல் வல்லுநர்களால் இன்றும் விடைதெரியா ஆச்சரியமாய், காலம் கடந்தும் நீளப்போகும் மெய்சிலிர்க்க வைக்கும் வீரத்தின் சாட்சியம்.

'உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு' என வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாது செயலாலும் நிகழ்த்திக் காட்டிய வல்லமைகளின் கனவுகளும் இலட்சியங்களும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் புனிதபூமி.

பன்னாடுகளும் கூட்டுச் சேர்ந்து வியூகம் அமைத்து, குண்டுமழை கொட்டி, நொடிப்பொழுது கூட ஓய்வின்றி  எறிகணைகள் பொலிந்து, நாளுக்கு நாள் படையணிகள் மாற்றி மாற்றிச் சமரிட்டும், எளிதில் உடைக்க முடியாது, அசைக்க முடியாத கோட்டையாய் எதிரியை திணறடித்த போர்க்;களம்.

ஆனந்தபுரம் ஒரு குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட தென்னந்தோப்புகள் நிறைந்த அழகான ஊர். முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியின் ஒரு மருங்கு. இன்னொருபுறம் பச்சைப்புல்மோட்டை நீரேரியை உள்ளடக்கிய வெட்டவெளிப் பகுதி. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியின் ஒருபக்கமுமாய் குடியிருப்புகளும்  தென்னந்தோப்புக்களும் நிறைந்த பகுதி.

 

taHmLmLg8zRHBqvZyyPr.jpg

அந்தப்பகுதியில் விடுதலைப்புலிகளின் படைத்துறை அனுபவம் மிக்க படையணிகள், போரியலில் பெரும் வெற்றிகளைப் படைத்த தளபதிகள், படைக்கல வளங்கள், மருத்துவம்;, உணவு வளங்கள் என எல்லாமே ஒருங்கிணைக்கப்பட்டு மண்ணரண்கள் அமைக்கப்பட்டு ஆனந்தபுரம் பெரும் முற்றுகைச் சமருக்குத் தயாராகியதோடு தேசியத் தலைவர் அவர்களும் அந்தக் களத்தில் நேரடியாகவே நின்றார்.

அதனால் எதிரியின் பார்வையும் ஆனந்தபுரத்தின்மீது குவிந்தது. கூடவே பன்னாட்டுப் படைவளமும் படைத்திட்டமிடலும் எதிரிக்குப் பலம் சேர்த்தன. ஓய்வு என்பதை அறியாத போர்க்களமாக ஆனந்தபுரம் இருந்தது. 

இந்த முற்றுகைக்குள் வைத்தே விடுதலைப்புலிகளின் அத்தியாயத்தை புதைத்து விடலாம்; எனக் கனவு கண்டன அரச பயங்கரவாதமும், போருக்கு துணைநின்ற நாடுகளும்.

 

 

Vd7VMywSuyUowdBCEmji.jpg

எதிரியின் எறிகணைத் தாக்குதல்களும், பல்குழல் பீரங்கிகளின் முழக்கமும்;, கனரக ஆயுதங்களின் சூட்டுவலுவும், வான்படையின் குண்டு மழையும், நச்சுவாயுத் தாக்குதல்களுமாய் எப்போதும் புகை மண்டலமாக இருந்தது ஆனந்தபுரம். அதற்குள் நின்றுதான்  போராளிகள் களத்தை எதிர்கொண்டனர்.

ஆனந்தபுர போரரங்கு அசைக்க முடியாத பெரும் கோட்டையாக இருந்தது. சிறிலங்காப் படைகள் நாளுக்கு நாள் புதிய படையணிகளை மாற்றி மாற்றி ஆனந்தபுர முற்றுகையை உடைக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டே இருந்தனர்.

முற்றுகைக்குள் இருக்கும் தேசியத் தலைவர் அவர்களையும், தளபதிகளையும் உயிருடன் பிடித்துவிட வேண்டும் என்பதே சிறிலங்கா அரசினதும் போருக்கு துணை நின்ற நாடுகளினதும் எண்ணமாக இருந்தது. அந்த நாளுக்காக அவர்கள் ஒவ்வொரு நொடியும் காத்திருந்தார்கள்.

ஆனால், ஆனந்தபுர முற்றுகைக்குள் இருந்து களமாடிய போராளிகளது ஒர்மமும் தற்துணிவும் எந்த நாட்டுப் படைவலுவாலும் உடைக்க முடியாத ஒன்றாக இருந்தன. கொண்ட இலட்சியத்தில் உறுதி தளராத போராளிகள், நாளுக்கு நாள் தம் உயிர்களைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

கூடி நின்று களமாடிய தோழதோழியர் விழவிழ, துயர் கடந்து, விழுப்புண்களின் வலி மறந்து, பசி மறந்து ,தூக்கம் மறந்து, நாளாந்த கடன் மறந்து தம் முழுப்பலத்தையும் கொடுத்து நெஞ்சுரத்தோடு நின்று போராடிக் கொண்டிருந்தார்கள். 

RWjfy6KZZPQAUMxip7gp.jpg

 

ஆனந்தபுர முற்றுகைச் சமர்க்களம் விடுதலைப்புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும், சாவையே திகைக்க வைத்த வரலாறுகளையும், பதியம் செய்தன. உலகப் போரியல் வரலாறுகளே இதுவரை கண்டிராத பக்கத்தை குருதி மையால் எழுதின. 

விழுப்புண்பட்டவர்கள் கூட தங்கள் விழுப்புண்களின் வலிகளை வேதனைகளை மறந்து மீண்டும் களத்தை எதிர்கொண்டார்கள்.

களமுனையில் வெடிபொருட்கள் தீர்ந்து வரும் நிலையில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட ஆட்டிலறிகள்  குறுந்தூரத் தேவையை நிறைவேற்றின.

இப்படியான இறுக்கம் நிறைந்த சூழலில்தான்  தலைவர் அவர்களைப் பத்திரமாகப் பாதுகாத்து முற்றுகைக்குள் இருந்து வெளியேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அனைவரிடமும் இருந்தது.

அதனால் தலைவர் அவர்களை முற்றுகையை விட்டு வெளியே வரும்படி அனைவரும் பணித்தனர். ஆனால் முற்றுகைக்குள் இருந்து இறுதிவரை போராடுவதையே தலைவர் விரும்பினார்.

இந்த நிலையில் ஆனந்தபுர முற்றுகைகக்குள் இருந்த பிரிகேடியர் துர்க்கா தேசியத் தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

 

 

IEIEEm1wQkSo4TjFoEVQ.jpg

 

அந்தக் கடிதத்தில், “அண்ணா, நீங்கள் எங்கள் மக்களினுடைய மிகப் பெரிய சொத்து. அவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக தேவை. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஆனந்தபுரத்தை விட்டு வெளியேறுங்கள்” 

மக்கள் மீது தலைவர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பு ஆனந்தபுரத்திலிருந்து அவரை வெளியேறச் செய்கின்றது.

தலைவர் அவர்கள் வெளியேறவும் ஆனந்தபுரம் சிறிலங்காப் படைகளின் முற்றுகைக்கு உள்ளாகின்றது. வெளியே தலைகாட்டமுடியாத களச்சூழல். 

மிகஅருகில் எதிரி. வீரச்சாவு அடைந்து கொண்டிருப்பவர்களை விதைப்பதற்கு அவகாசம் இல்லை. பெரும் விழுப்புண்களைத் தாங்கி வலியால் துடிப்பவர்கள் ஒருபுறம். உணவில்லை. மருந்தில்லை. தாகத்துக்கு தண்ணீர்  எடுக்கக் கூட முடியாத இறுக்கம். 

எரிகுண்டுகளால் உடல்களில் எரிகாயங்களையும், நச்சுவாயுக்களின் தாக்கத்தால் பலபோராளிகள் மயக்கமடைய எங்கும் புகைமண்டலமாக மாறிக் கொண்டிருந்தது ஆனந்தபுரம். 

 

WbDyhB0ebM6bsl6RU2Qj.jpg

இத்தனைக்கும் முகம் கொடுத்து தலைவர் அவர்களை பாதுகாத்து விட்டோம் என்ற மனநிறைவோடும் ஆன்மதிருப்தியோடும் நின்று, அசைக்க முடியாத நெஞ்சுரத்தோடு சிறிலங்காப் படைகளையும், பன்னாட்டு படைவலுவையும் எதிர்த்து நின்று வீர வரலாறுகளைப் பதியம் செய்தபடி இருந்தார்கள் போராளிகள். 

இந்த நிலையில் தேசியத் தலைவர்; அவர்கள் ஆனந்தபுர முற்றுகையை உடைத்து வெளியேறும்படி பணிக்கின்றார். அதற்கமைய 2009 ஏப்ரல் 04 ஆம், 05ஆம் நாள்கள் பெரும் உடைப்புச் சமர்கள் இடம்பெற்றன. ஆனந்தபுரம் பச்சைப் புல்மோட்டைப் பகுதியூடாக உடைப்பை ஏற்படுத்தி அதனூடாக போராளிகள், தளபதிகள் எனப் பலர் வெளியேறுகின்றனர்.

 

wXUEn06SWRuvyvTWZ3S1.jpg

 

இந்தச் உடைப்புச் சமர்களில் நீண்ட விடுதலைப் போருக்கு வெற்றிகள் பலதைத் தந்த ,விடுதலைப்போராட்டம் சந்தித்த இறுக்கமான நேரங்களில் எல்லாம் தடைநீக்கிகளாய் இருந்து தேசியத் தலைவருக்கு தோள் கொடுத்த, எமது விடுதலைப் போரை உலகம் விழிநிமிர்த்திப் பார்க்கச் செய்த பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுஷா, பிரிகேடியர் துர்க்கா உள்ளிட்ட பல தளபதிகள், கருவேங்கைகள், போராளிகளை ஆனந்தபுரமண் தன்மடியில் அரவணைத்துக் கொண்டது. 

போராளிகளின் குருதியால் சிவந்த ஆனந்தபுரம் ஆயிரமாயிரம் போர்க்காவியங்களை தன் மடியில் சுமந்து நிற்கின்றது.

மாவீரங்கள் விதையாய் விதைக்கப்பட்டிருக்கும் இந்த மண்ணின் பெருமையை,நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு; சொல்லும் ஆனந்தபுரம்; வீரத்தின் விளைநிலமென்று.

 

 

unaj8J9naXu1ry9MhAlc.jpg

 

தாரகம் இணையத்திற்காக அ. அபிராமி

 

 

https://www.thaarakam.com/news/faaf3079-6917-4cd1-9e56-316ffeacbabf

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.