Jump to content

புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு

புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.

இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.

இயேசு சிலுவையில் இறந்த வேளையில், எருசலேம் கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை, இரண்டாக கிழிந்தது யூத குருக்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தி இருந்தது. கடவுளையும் மனிதரையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த திரை கிழிந்தது, இயேசு இறைமகனாக இருப்பாரோ என்ற எண்ணத்தை அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. அவராக உயிர்த்தெழுந்து வரவில்லை என்றாலும், அவரது சீடர்களே உடலை மறைத்து வைத்துவிட்டு வதந்தியைப் பரப்பலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு.

சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய யூத சமயத் தலைவர்கள்,இயேசுவின் கல்லறைக்கு முத்திரையிட்டு, காவல் வீரர்களைக் கொண்டு அதை கவனமாக காவல் காக்க ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் வடிவில் வந்த வானதூதர் இயேசுவின் கல்லறையைத் திறந்தார். இடி சத்தத்தில் மயங்கி விழுந்த காவல் வீரர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இயேசுவின் உடலை காணவில்லை. யூத சமயத் தலைவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. ஆனால் அவர்கள், இயேசுவின் உடல் திருடப்பட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.

மறுபக்கம் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்கள் தடவி மரியாதை செலுத்த வந்த பெண் சீடர்கள், கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து விட்டதாக அறிவித்தனர். இந்த செய்தியை அப்பெண்கள் இயேசுவின் மற்ற சீடர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. அவ்வேளையில் கல்லறை அருகில் நின்று அழுது கொண்டிருந்த மகதலேன் மரியாவுக்கு இயேசு காட்சி அளித்து, தாம் உயிரோடு இருப்பதை உறுதி செய்தார். இந்த நிகழ்வை,
“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்”
என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடியுள்ளார்.

இதையடுத்து, யூத சமயத் தலைவர்களுக்கு பயந்து, பூட்டிய அறைக்குள் தஞ்சம் அடைந்து கிடந்த சீடர்களுக்கு முன்பும் இயேசு தோன்றினார். சிலுவையில் அறையப்பட்டதால், தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஏற்பட்ட காயங்களை அவர்களுக்கு காட்டினார். இதனால் அவர் உயிர்த்து எழுந்தது உண்மை என்பதை சீடர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாற்பது நாட்களாக பலமுறை காட்சி அளித்த இயேசு, அவர்களோடு பந்தியில் அமர்ந்து உணவு உண்டதாகவும், தமது நற்செய்தியை அறிவிக்க அவர்களைத் தயார் செய்ததாகவும் பைபிள் கூறுகிறது.

உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளில் ஒலிவ மலைக்கு சீடர்களை அழைத்து சென்ற இயேசு, உலகெங்கும் சென்று தம்மைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கட்டளையிட்டார். அவரை கடவுளாக நம்புவோருக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் ஞானஸ்நானம் வழங்குமாறும் ஆணையிட்டார். உலகம் முடியும் வரை தமது சீடர்களோடு இருப்பதாக வாக்களித்த இயேசு, அவர்கள் கண் முன்பாகவே விண்ணகத்திற்கு ஏறி சென்றார். அப்போது அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், உலகின் முடிவில் மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள அரசராக இயேசு மீண்டும் வருவார் என்று கூறி மறைந்தனர்.

எருசலேமுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் இருந்து வந்த இறைமகன் என்றும், மரணத்தை வெற்றி கொண்ட ஆண்டவர் என்றும் மக்களிடம் போதித்தனர். சீடர்களின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் பலரும் இயேசுவை கடவுளாகவும், தங்கள் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும், நட்புறவுடன் வாழ்வதிலும், உடைமைகளை பொதுவாக கொண்டு பிறரது துயர் துடைப்பதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். சீடர்கள் வழியாக ஆண்டவர் இயேசு பல்வேறு அற்புதங்களை செய்தார். இதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

இயேசு

இந்த வேகமான வளர்ச்சி யூத சமயத் தலைவர்களின் கண்களை உறுத்தியது. சீடர்களை பிடித்து, அடித்து உதைத்த அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போதும், யூத குருக்களால் இயேசு உயிர்த்தெழவில்லை என உறுதியாக கூற முடியவில்லை. பலவித துன்பங்களை சந்தித்தாலும், இயேசுவுக்கு சான்று பகர்வதை சீடர்கள் நிறுத்தவில்லை. இயேசுவின் பெயரால் அதிக அளவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால், பாலஸ்தீன் நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கிறிஸ்தவம் விரைந்து பரவியது. இயேசுவின் சீடரான புனித தோமா அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு வந்து பலரையும் கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார்.

இதனிடையே, பாலஸ்தீன் நாட்டில் கிறிஸ்தவ சமயத்தை தீவிரமாக எதிர்த்த சவுல் என்ற இளைஞர், கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கொலை வெறியுடன் செயல்பட்டார். இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்ட பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க செய்தார். ஸ்தேவான் என்ற கிறிஸ்தவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தார். தாமாஸ்கஸ் நகருக்கு செல்லும் வழியில், திடீரென வானத்தில் இருந்து வீசிய பேரொளியால் அவர் குதிரையுடன் தடுமாறி விழுந்தார்.

அப்போது, “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் ஒலித்தது. “ஆண்டவரே நீர் யார்?” என்று திருப்பிக் கேட்டார் சவுல். “நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்” என பதில் வந்தது. அத்துடன் கிறிஸ்தவர்கள் மீதான அவரது கொலைவெறி அடங்கியது. பவுல் என்ற பெயருடன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்.

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தாலே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. நரபலி உள்ளிட்ட கொடூரங்கள் கிறிஸ்தவ சமயத்தின் பரவல் காரணமாகவே முடிவுக்கு வந்தன. உலகெங்கும் அடிமை முறை ஒழிந்ததற்கும், ஆண் - பெண் சமத்துவம் ஏற்படவும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெறவும் கிறிஸ்தவ போதனைகளே வித்திட்டன. இவ்வாறு, இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகில் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போர் அனைவருக்கும் மாற்றமும், புதுவாழ்வும் கிடைப்பது உறுதி என்று பைபிள் கூறுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!

தமிழகத்திற்கு வந்த இயேசுவின் சீடர் :

உயிர்த்த இயேசு முதல் முறை தம் சீடர்களுக்கு தோன்றியபோது, பன்னி ருவரில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. “ஆண்டவரை கண்டோம்“ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, “அவ ருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும் பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட் டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று தாமஸ் பதில் கூறினார். ஒரு வாரத்துக்கு பிறகு, தாமசும் இருந்தபோது இயேசு தம் சீடர்கள் முன்பு தோன்றினார்.

அப்போது அவர் தாமஸைப் பார்த்து, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. சந்தேகப்படாமல் நம்பிக்கைகொள்” என்றார். உடனே தாமஸ் இயேசுவைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி அவரை பணிந்து வணங்கினார். இயேசு அவரிடம், “நீ என் னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப் புக்கு உறுதியான சான்றாக அமைந்தது.

அப்போது தாமஸ் பெற்ற நம்பிக்கையே, பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை அவருக்கு வழங்கியது. கி.பி.52ல் கேரளாவுக்கு வந்திறங்கி ஏராளமான மக்களை மந்திருப்பிய தாமஸ், ஏழு இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இயேசுவைப் பற்றி போதித்த தாமஸ், இறுதியாக சென்னைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நற்செய்தி அறிவித்த தாமஸ், இங்குள்ள பலரையும் இயேசுவை கடவுளாக ஏற்கச் செய்ததாக அறிகிறோம்.

கி.பி.72ல் செயின்ட் தாமஸ் மவுன்டில் செபம் செய்து கொண்டிருந்த அவரை, கிறிஸ்தவத்தின் எதிரிகள் சிலர் ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். தாமஸின் உடல், சாந்தோம் பேராலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது கல்லறையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வருகின்றனர். இயேசுவின் சீடர்களை அவருக்காக உயிரைக் கொடுக்கும் அள வுக்கு தூண்டியது அவரது உயிர்த் தெழுதலே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

-டே.ஆக்னல் ஜோஸ்.

 

https://www.maalaimalar.com/devotional/christianity/2021/04/03141642/2503755/Jesus-Christ.vpf

 

  • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.