Jump to content

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவ நடனம் – ஆனந்த குமாரசாமி

 
coomaraswamy.jpg?w=785 ஆனந்த குமாரசாமி
தேன்புக்க தண்பணைசூழ்
தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம்
பயிலுமது என்னேடீ
- திருவாசகம், XII, 14

”தோழியே, தேன் நிரம்பிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த தில்லையின் சிற்றம்பலவன் திருநடனம் ஆடுகிறானே, அது ஏனடி?”

நடராஜர் – சிவனுடைய பெயர்களில் தலை சிறந்தது இதுவே; ஆடல்வல்லான், ஆடல் அரசன், கூத்தன். பிரபஞ்சமே அவனது அரங்கம், அவன் ஆடல்களோ எண்ணற்றவை, ஆடுவதும் அவனே, அதைக் காண்பதும் அவனே – 

கூத்தன் தமருகம் கொட்டிய கணமே
ஆர்த்து வந்திடுவர் ஆட்டம் காண்போர்
மூர்த்தி அபிநயம் முடித்திட அகல்வார்; அவனும்
வார்த்தை அற்று ஏகனாய் வதியும் இன்பத்திலே (1)

“கூத்தன் தமருகம் கொட்டிய கணம், அவன் ஆடல் காண வந்தனர் அனைவரும்; அவன் ஆடல் முடிந்து அனைவரும் கலைந்த பின், அவன் ஆனந்தத்தில் அவன் மட்டும் இருந்தான்”

சிவனின் எத்தனை நடனங்கள் அவரை வழிபடுபவர்களுக்கு தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்த நடனங்கள் அனைத்திற்கும் வேர் ஒன்று தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அது என்றும் எப்போதுமுள்ள தாளலயமான ஆற்றலின் வெளிப்பாடாகும். லூசியன் (Lucian) குறிப்பிடும் ஈரோஸ் ப்ரோடோகோனோஸ் (Eros Protogonos) சிவனே, அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“எல்லாம் தோன்றுவதற்கு முன்னரே ஆடல் இருந்தது, அது ஈரோஸுடன் சேர்ந்து வெளிப்பட்டது, அவ்வடலை நாம் வின்மீண்களின் கூட்டு நடனத்திலும், கோள்களிலும் நட்சத்திரங்களிலும், அவைகளுக்கிடையேயான பிணைப்பிலும், பரிமாற்றத்திலும், ஒத்திசைவிலும் காணலாம்.”

பிற்காலத்தில் சிவனுடன் இணைக்கப்பட்ட ஆரியர்களுக்கு முந்தய மலை தெய்வத்தை வழிபட்டு வெறியாட்டெழுந்து நடனமாடிய மனிதர்களுக்கு சிவனுடைய நடனத்திற்கான விளக்கம் தெரிந்திருக்கும் என நான் சொல்லவரவில்லை. எந்தவொரு மதத்திலும் கலையிலும் உள்ள ஒரு மிகச்சிறந்த கூறு, மற்றும் சிறந்த குறியீடாக உள்ள எதுவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக ஆகிறது; அது எல்லா காலங்களிலும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதால் தேடி கண்டடையத்தக்க பொக்கிஷத்தை அவர்களுக்கு கொடுக்கிறது. சிவ நடனத்தின் தொடக்கம் எதுவாக இருந்தாலும், அது எல்லா மதங்களிலும் கலைகளிலும் இருப்பதைவிட கடவுளின் செயல்பாட்டை குறிக்கும் சிறந்த வடிவமாக காலத்தால் உருவாகி வந்துள்ளது. சிவனின் நடனங்கள் பல, அவற்றில் மூன்றைப் பற்றி மட்டுமே நான் பேசவிருக்கிறேன். அவற்றில் ஒன்று இந்த கட்டுரையில் மைய இடம் வகிக்கிறது. முதலாவது நடனம், தேவர்களுடன் இமயமலையில் நிகழும் மாலை நேர நடனம். இது சிவ பிரதோச ஸ்தோத்திரத்தில் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:

“அரிய கற்கள் பதிக்கப்பட்ட தங்க அரியனையில், மூவுலங்களுக்கும் அன்னை அமர்ந்திருக்க, அனைத்து தெய்வங்களும் சூழ்ந்திருக்க சூலபாணி கையிலையில் நடனம் ஆடுகிறான்.

சரஸ்வதி வீணை இசைக்கிறாள், இந்திரன் குழலூதுகிறான், பிரம்மா காலத்தை படைக்கும் கைத்தாளம் வைத்திருக்க, லஷ்மி பாட துவங்குகிறாள், விஷ்ணு மத்தளம் இசைக்க, அனைத்து தெய்வங்களும் அவனை சூழ்ந்து நிற்கின்றனர்.

கந்தர்கள், யக்சர்கள், படகர்கள், உரகர்கள், சித்தர்கள், சத்யர்கள், வித்யாதரர்கள், அமரர்கள், அப்சரஸ்கள் மற்றும் மூவுலகிலும் உள்ள எல்லா உயிர்களும் அந்தி சமயத்தில் மகாநடனத்தைக் காணவும் தேவர்களின் இசையைக் கேட்கவும் கூடியுள்ளனர்.”

இந்த கூட்டுநடனச் சித்தரிப்பு கதாசரித்சாகரமின் துவக்க பகுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் சிவன் இரண்டு கரங்களுடன் காட்டப்பட்டுள்ளான், பிற தெய்வங்களின் பங்களிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சிவனின் காலடியில் முயலகன் இல்லை. நான் அறிந்தவரை இந்த நடனம் பற்றிய சிறப்பான விளக்கங்கள் எதுவும் சைவ இலக்கியங்களில் காணப்படவில்லை. 

சிவனின் பிரபலமான இரண்டாவது நடனம் தாண்டவம். இது பைரவர், வீரபத்ரர் போல சிவனின் தமோ வடிவத்தை சேர்ந்தது. சிவன் பத்து கரங்கள் கொண்ட வடிவில் தனது கணங்கள் சூழ தேவியுடன் மயானத்திலும் எரிகாட்டிலும் ஆடும் நடனமாகும். எல்லோரா, எலிபெண்டா மற்றும் புவனேஸ்வர் போன்ற பழங்கால சிற்ப தொகுதிகளில் இந்நடனத்தின் சித்தரிப்புகள் உள்ளன. தாண்டவத்தின் ஆதி வேர் எரிகாட்டில் நடு இரவில் மகிழ்ந்து ஆடும் தெய்வமும் பேயும் கலந்த ஆரியர்களுக்கு முந்தைய தெய்வத்தில் உள்ளது. மயானத்தில் ஆடப்படும் இந்த நடனம் பிற்காலத்தில் சைவ மற்றும் சாக்த இலக்கியங்களில் சில இடங்களில் சிவனாகவும் சில இடங்களில் காளியாகவும் உருவகப்படுத்தி உணர்ச்சிகரமாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நடனம், பிரபஞ்சத்தின் மையம் என அழைக்கப்படும் தில்லையின் பொன்னம்பலத்தில் (பொற்ச்சபை) ஆடும் நடராஜ நாட்டியம். இந்த நடனம் தாரகாவன ரிஷிகளை அடக்கிய பின்பு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முதன்முதலாக காட்சியளிக்கப்பட்டது என கோயில்புராணம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த புராணத்திற்கு நடராஜ நடனத்தின் உண்மையான அர்த்தத்துடன் நெருக்கமான தொடர்பு இல்லை. எனினும் இப்புராணத்தை சுருக்கமாக பார்க்கலாம்:

”தாரகாவனத்தில் மீமாம்சத்தை பின்பற்றும் மரபார்ந்த ரிஷிகள் பலர் வசித்துவந்தனர். சிவன் அந்த ரிஷிகளை குழப்பி பொய்ப்பிக்க அழகிய பெண்ணாக உருவெடுத்த விஷ்ணு மற்றும் ஆதிசேஷனின் துணையுடன் சென்றார். குழப்பமடைந்த ரிஷிகள் முதலில் தங்களுக்குள் சினம் கொண்டு கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் வெகுசீக்கிரத்திலேயே அந்த கோபம் சிவனின் மீது திரும்பியது. அவர்கள் மந்திரம் மூலம் சிவனை அழிக்க முற்பட்டனர். வேள்வித்தீயில் சீற்றம் கொண்ட புலியை தோற்றுவித்து அவன் மீது ஏவினர். புன்னகையுடன் அதை தன் சிறுவிரல் நகத்தால் அடக்கிய சிவன் அதன் தோலை உரித்து பட்டாடை போல உடுத்திக்கொண்டான். முனிவர்கள் மீண்டும் அவியிட்டு மாநாகம் ஒன்றை தோற்றுவித்தனர். அதையும் வென்று தன் கழுத்தில் மாலை போல அணிந்துகொண்டு நடனமாட துவங்கினான். இறுதியாக கொடிய அரக்கனான முயலகனை ஏவினர். இறைவன் தன் கால் நுனியால் அவனை மிதித்து முதுகை உடைத்து மண்ணில் நெளியவைத்தான். தன் கடைசி எதிரியையும் வீழ்த்திய பின் சிவன் மீண்டும் தன் நடனத்தை துவங்கினான். இந்த நடனத்தை தேவர்களும் ரிஷிகளும் கண்டனர்.

பிறகு ஆதிசேஷன் சிவனுக்காக தவமிருந்து இந்த தெய்வீக நடனத்தை மீண்டும் காட்சி கொடுக்குமாறு வரம் வேண்டினான்; அதை ஏற்ற சிவன் பிரபஞ்சத்தின் மையமான தில்லையில் இந்நடனத்தை காட்சியளிப்பதாக வாக்களித்தார்.” (2)

சிவனின் இந்த நடனம் ஸ்ரீ நடராஜராக ஆடல் அரசனாக தென்னக செப்புத்திருமேனிகளில் உருக்கொண்டுள்ளது. இந்த வடிவங்கள் செப்புத்திருமேனிகளின் மிகச்சிறந்த வடிவங்களாகும். இவ்வடிவங்கள் ஒவ்வொன்றிலும் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அவை அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தையே வெளிப்படுத்துகின்றன. அவ்வடிவங்களில் உள்ள நுண் வேறுபாடுகளை தெரிந்துகொள்வதை விட ஸ்ரீ நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம். நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின் மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது. வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான். கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது கரம் துடியை ஏந்தியுள்ளது, மற்றொன்று அபயஹஸ்தம் காட்டுகிறது. ஒரு இடது கரம் அனலை ஏந்தியுள்ளது, மற்றொன்று கஜஹஸ்தம் காட்டுகிறது, இக்கரம் முயலகனை நோக்கியிருக்கிறது. முயலகன் நாகத்தை பிடித்துக்கொண்டிருக்கிறான். இடதுகால் தூக்கிய திருவடியாக உள்ளது. பத்மபீடத்தில் துவங்கும் திருவாசி (பிரபாவளையம்) வட்ட வடிவில் அமைந்துள்ளது, அதைச் சுற்றிலும் சுடர் எரிந்துகொண்டிருக்கிறது. துடியையும் அனலையும் ஏந்தியுள்ள கரங்கள் திருவாசியைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. நடராஜரின் திருமேனிகள் அனைத்தும் ஒரே அளவில் நான்கு அடி உயரத்தில் காணப்படும், அரிதாக நான்கு அடியை தாண்டியும் இருக்கும். 

இலக்கியங்களை மேற்கோள் காட்டாமலே இந்த நடனத்தை எளிதாக விளக்கிவிடலாம். ஆயினும் தற்போது கிடைக்கும் பல இலக்கியங்களின் உதவியுடன் அதன் பொதுவான அர்த்தத்தை மட்டுமல்லாமல் விரிவான குறியீட்டு தன்மையையும் முழுவதுமாக நம்மால் விளக்கிக்கொள்ள முடியும். நடராஜ வடிவத்தில் உள்ள சில முக்கியமான அம்சங்கள் சிவனின் பொது அம்சத்தை சார்ந்தவையே, அவை இந்த நடனத்திற்கு மட்டும் உரியவையல்ல. உதாரணமாக, ஒரு யோகிக்கு இருப்பது போன்று காணப்படும் சடை முடி, கொன்றை இலை மகுடம், பிரம்மனின் மண்டையோடு, கங்கையின் உருவம் (விண்ணுலகில் இருந்து விழும் கங்கை சிவனின் தலை முடியில் மறையும் வடிவம்), நாகங்கள், உமையை தன்னில் பாதியாக கொண்ட மகாதேவரின் இருமை நிலையை குறிக்கும் இருவேறு காதணிகள், நான்கு கரங்கள் ஆகியவை. சிவனின் யோகி அம்சத்திற்கு சேர்ந்த துடியும் அவன் பொதுவாக ஏந்தியிருப்பவற்றுல் ஒன்றாகும். எனினும் இந்த நடனத்தில் துடிக்கு ஒரு சிறப்பான பொருள் உள்ளது. இவ்வாறெனில், சைவர்களுடைய புரிதலின் படி சிவனின் நடராஜ நடனத்திற்கான அர்த்தம் என்ன? இதற்கான அர்த்தம் பின்வரும் பாடலிலும் இதுபோன்ற பல பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன:

 காட்ட வனல் போல் உடல் கலந்துயிரையெல்லாம்,
 ஆட்டுவிக்கும் நட்டுவன் எம்மண்ணலென வெண்ணாய்.
   - திருவாதவூரார் புராணம், பாடல் 75 

“விரகில் மறைந்திருக்கின்ற அனல் போல நம்முள் மறைந்திருந்து தன் ஆற்றலை உடலிலும் உயிரிலும் கலந்து பரப்பி அவற்றை ஆடவைப்பவன் என் மன்னன், ஆடலரசன்.”(3)

நடராஜ நடனம் சிவனின் ஐந்து செயல்பாடுகளைக் (பஞ்சக்ருத்யை) குறிக்கின்றது. அவை: சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மாயை கலைத்தல்), அனுக்ரஹம் (முக்தியளித்தல்). இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய தெய்வங்களின் செயல்களாக கருதப்படுகின்றன.

இந்த பிரபஞ்ச செயல்பாடே நடராஜ நடனத்தின் மைய கருத்தாகும். பின்வரும் பாடல் இதன் விரிவான குறியீட்டுதன்மையை விளக்குகிறது. உண்மை விளக்கம், பாடல் 36:

 தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
 சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -- ஊற்றமா
 ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
 நான்ற மலர்ப்பதத்தே நாடு. 

”படைப்பு தோன்றியது துடியில் இருந்து, காப்பது அபயக்கரம், அழித்தல் நிகழ்வது ஏந்தியுள்ள அனலால், முக்தியை அளிப்பது தூக்கிய மலர்ப்பாதம்.”

கஜஹஸ்தத்தில் இருக்கும் நான்காவது கரம் சுட்டிக்கொண்டிருக்கும் தூக்கிய திருவடியானது ஆன்மாவின் விடுதலைக்கான இடம் என இப்பாடல் குறிப்பிடுகிறது. 

இதையே சிதம்பர மும்மனிக்கோவையில் உள்ள பின்வரும் பாடலிலும் காணலாம்.

 பூமலி கற்பகப் பூத்தேள் வைப்பு
 நாமநீர் வரைப்பின் நானில வளாகமும்
 எனைய புவனமும் எண்ணீங்குயிரும்
 தானே வகுத்ததுன் தமருகக் கரமே
 தனித்தனி வகுத்த சராசரப்பகுதி
 யனைத்தையும் காப்பதுன் அமைத்த கைத்தலமே
 தோற்றுபு நின்ற அத் தொல்லுலகடங்கலும்
 ஆற்றுவது ஆரழல் அமைத்ததோர் கரமே
 ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்துநின்
 றூட்டுவ தாகும்நின் ஊன்றியபதமே;
 அடுத்த இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
 கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே
 இத்தொழில் ஐந்தும்நின் மெய்த்தொழில். 

”என் இறைவா, மண்ணுலகையும் விண்ணுலகையும் ஏனைய புவனங்களையும் கணக்கில்லா உயிர்களையும் படைத்தது உன் டமருகம் (துடி) ஏந்திய கரம். நீ படைத்துள்ள அறிந்த அறியமுடியாத பிரபஞ்சங்கள் இரண்டையும் காப்பது உன் அபயக் கரம். இவ்வுலகங்கள் அனைத்தையும் மாற்றமடைய வைப்பது அனல் ஏந்திய கரம். ஈட்டிய வினைப்பயனில் சிக்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு அடைக்கலம் அளிப்பது உன் ஊன்றிய திருப்பாதம். தன்னை அடைந்த உயிர்களுக்கெல்லாம் விடுதலை என்ற பேரின்பம் அளிப்பது உன் தூக்கிய பாதம். இவை ஐந்தும் நீ செய்யும் தொழில்களாகும்”

நடராஜ நடனத்தின் மைய கருத்தை திருமூலருடைய திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் மேலும் விரிக்கின்றன. திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரமான திருக்கூத்து தரிசனத்தில் வரும் பாடல்கள்:

 எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
 எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
 எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
 தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 
 ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
 ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
 ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
 தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 

“எங்கும் அவன் திருமேனி; எங்கும் வியாபித்திருப்பது சிவசக்தி; எங்கும் சிதம்பரம்; எங்கும் அவன் ஆடல்; எங்கும் எதுவும் சிவமாய் இருப்பதால்; எல்லா நிகழ்வுகளும் செயல்களும் சிவனருளின் திருவிளையாட்டே. 

அவனது நடனங்கள் ஐந்தும் காலரீதியானது, காலாதீதமானது; அவை ஐந்தும் அவனின் ஐந்தொழில்கள்; தன் அருளால் அவன் ஐந்தொழில்களையும் நிகழ்துகிறான்; இதுவே உமாசகிதன் ஆடும் திருநடனம்.” 

 சத்தி வடிவு சகல ஆனந்தமும்
 ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம்
 சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு
 ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 
 ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
 ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
 மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
 மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 

”சக்தியின் வடிவே ஆனந்தம் அனைத்தும்; ஆனந்தம் அனைத்தும் சேர்ந்தது உமையவளின் மேனி; காலகதியில் தோன்றுகின்ற சக்தியின் வடிவை ஆனந்தத்துடன் இணைப்பது அவன் நடனம்.

ஆகாயத்தை உடலாக; அதிலுள்ள கருமேகத்தை முயலகனாக; திசை எட்டையும் திருக்கரங்களாக; மூன்று ஒளிகளையும் மூக்கண்களாக; நம் உடலை சபையாகக் கொண்டு அவன் நடனமாடுகிறான்.”

இதுவே அவன் ஆடும் ஆடலாகும். ’பிரபஞ்சம் எங்கும் இறைவன் வியாபித்திருக்கிறான்: நம் உள்ளமே அப்பிரபஞ்சம்.’  இதுவே இந்த ஆடலின் ஆழமான பொருள். 

 ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
 பாடிய பாட்டும் பலவான நட்டமும்
 கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
 தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 

”ஆடுகின்ற கால்களையும்; காற்சிலம்பின் ஓசையையும்; பாடுகின்ற பாட்டையும்; எண்ணற்ற நடனங்களையும் கொண்ட நம் குருபரனின் வடிவை நம் உள்ளத்துள் தேடி கண்டுகொண்டால் நம் தளைகள் அனைத்தும் நீங்கும்.”

ஆகவே, இறைவனை தவிர உள்ளத்தில் இருக்கும் பிறவனைத்தையும் நீக்கினால் அவன் மட்டுமே அங்கு உறைந்து ஆனந்த நடனமாடுவதை அறியலாம். இதை உண்மை விளக்கத்தில் கீழ்வரும் பாடலிலும் காணலாம்: 

 மோனந்த முனிவர் மும்மலத்தை மோசித்துத்
 தான் மான் இடத்தே தங்கியிடும் -- ஆனந்தம்
 மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக்
 கொண்ட திரு அம்பலத்தான் கூத்து 

”முனிவர்கள் மும்மலத்தை அறுத்து தான் என்ற சுயத்தை அழித்த இடத்தை ஆனந்தத்தால் நிறைப்பதே அருள் வடிவான அம்பலத்தான் ஆடும் கூத்து.”

முனிவர்கள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதை திருமூலரின் அழகிய வரிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம்:

 வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
 சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
 ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
 செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே 
 . . . முக்காலத் தியல்பைக் குறித்தங்
 கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே 
 சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
 சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
 சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
 சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே 

”துரிய நிலையை எய்திய சிவயோகியர்கள் (சோம்பர்) சுயத்தை கடந்து செயலற்ற நிலையில் இருப்பர். அவர்கள் இருப்பது சுத்த வெளியில்; அவர்கள் செயல்படுவதும் சுத்த வெளியில்; அவர்கள் உணர்ந்தது வேதாந்தத்தை (சுருதி முடிவு); அவர்கள் கண்டடைந்தது அவ்வேதாந்தம் குறிப்பிடும் ஆழ்நிலையை.”

சிவன் அந்தகன், அழிப்பவன்; மயானத்தின் மேல் இச்சை கொண்டவன். அவன் அழிப்பது எதை? ஊழிமுடிவில் மண்ணுலகையும் விண்ணுலகையும் அழிப்பவன் மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆன்மாவையும் உள்ளத்தையும் கட்டியுள்ள தளைகளையும் அழிப்பவன்.(4) மயானம் என்பது என்ன? அது எங்குள்ளது? இது இறந்த பின்பு நமது உடலை எரிக்கும் சுடுகாடு அல்ல, அவனை நேசிப்பவர்களின் உள்ளங்களில் உள்ள மலங்களையும் அழுக்குகளையும் எரிக்கும் இடம். அங்கு அகங்காரம் அழிக்கப்பட்டு, மாயையும் இச்சையும் எரிக்கப்படுகின்றன. அதுவே ஸ்ரீ நடராஜர் ஆடும் மயானம், எரிகாடு. அதனால் தான் அவனை சுடலையாடி என்கின்றனர். இந்த உவமையில் நடராஜர் என்ற சிவனின் அருள் வடிவிற்கும் மயானத்தில் ஆடும் அவரின் கோர வடிவிற்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பை காணலாம். 

சாக்தத்திலும் இந்த கருத்து உள்ளது, குறிப்பாக வங்கத்தில். அங்கு தந்தை வடிவமான சிவனுக்கு பதிலாக அன்னை வடிவமான காளி வணங்கப்படுகிறாள். ”காளியின் வருகைக்காக உள்ளம் அனலால் தூய்மை செய்யப்படுகிறது, அவள் வருகைக்காக உள்ளம் எல்லாவற்றையும் துறக்கிறது, அங்கு ஆடுகிறாள் காளி தன் நடனத்தை.” காளியை பாடும் ஒரு பெங்காலி பாடல்:

 நீ எரிகாட்டின் மேல்இச்சை கொண்டவள் ஆதலால்
 என் இதயத்தை ஒரு எரிகாடாக்கினேன்
 காளியாய் எரிகாட்டில் உறைபவளே
 ஆடுக நின் முடிவிலி நடனம்
 அன்னையே, நீயன்றி வேறேதுமில்லை என் இதயத்தில்
 நாளிரவு பாராமல் எரிகிறது இறப்பின் கனல்
 இறந்தோரின் சாம்பல் எங்கும் சிதறியபடி
 உன் வருகைக்காக நானிருந்தேன்
 மரணத்தை வென்ற மஹாகாலன் நின் காலடியில் இருக்க
 வருக நீ, ஆடுக உன் தாள கதியில் - அதை
 என் மூடிய விழிகளால் பார்த்திருப்பேனாக 

இதேபோல தென்னகத்தில் தமிழிலும் சிவன் நடனமாடுவதற்கான நோக்கத்தை விளக்கக்கூடிய பாடல்களைக் காணலாம். 

 அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து  
 நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன்.  
   - சிவஞான சித்தியார் சுபக்கம், சூத்திரம் 5, பாடல் 7 

“எண்ணற்ற உயிர்களுக்கு இரு பலன்களை அளிப்பதற்காக ஐந்து தொழில்களுடன் இறைவன் ஆடல் புரிகின்றான்.” அவை: ஒன்று இகம் – இந்த உலகில் கிடைக்கும் பலன்; மற்றொன்று பரம், முக்தியில் கிடைக்கும் பேரானந்தம்.

உண்மை விளக்கத்தின் பாடல்கள் 32, 37, 39 ஆகியவை இதை மீண்டும் நமக்கு சொல்கின்றன:

 . . . சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே
 அவாயம் அற நின்று ஆடுவான் 
 மாயைதனை உதறி வல்வினையைச் சுட்டுமலம்
 சாய அமுக்கி அருள் தான் எடுத்து -- நேயத்தால்
 ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
 தான் எந்தையார் பரதம் தான். 
 பரை இடமா நின்று மிகு பஞ்சாக்கரத்தால்
 உரை உணர்வுக்கு எட்டா ஒருவன் -- வரைமகள்தான்
 காணும்படியே கருணை உருக்கொண்டு ஆடல்
 பேணு வார்க்கு உண்டோ பிறப்பு. 

”நமது வினைகளை நீக்குவதற்காக பரம்பொருள் நம் ஆன்மாவில் நடனம் ஆடுகின்றான். தந்தையாகிய அவன் நம் மாயையை கலைந்து; கர்மவினை தொடரை எரித்து; மலம், ஆனவம், அவித்யை ஆகிய தீமைகளை முறித்து அருளை பொழிகின்றான், ஆனந்தக் கடலில் ஆன்மாவை மூழ்கடிக்கின்றான். இந்த திருநடனத்தை கண்டவர்கள் மறுபிறப்பை எப்போதும் காணமாட்டார்கள்.”

பிரபஞ்ச செயல்பாட்டை இறைவனின் லீலையாக காண்பது சைவ இலக்கியங்களில் முதன்மையான ஒரு கூறு. ’என்றும் எங்கும் நிறைந்திருக்கும் நடனமே அவனாடும் ஆடல்’ என திருமூலர் சொல்கிறார். சிவனுடைய ஆடலின் இந்த இயல்பை அலெக்ஸாண்டர் ஸ்கிராபின் (Alexander Scriabin) Poem of Ecstasy – யில் குறிப்பிடுகிறார். இந்த கவிதை துல்லியமாக ஒரு இந்து படிமமாக உள்ளது:

 ஆத்மன் (புருசன்) களியாடுகிறான்,
 ஆத்மன்  இச்சை கொள்கிறான்,
 மாயையால் அனைத்தையும் படைக்கிறான்,
 தன்னை பேரானந்தத்திற்கு ஒப்படைக்கிறான்
 . . .
 தன் படைப்பில் அரும்பியவற்றிற்கு (பிரக்ருதி) நடுவே, 
 ஒரு மென்தொடுகையில் நீடிக்கிறான்
 . . .
 அதன் அழகால் உன்மத்தம் கொண்டு, பாய்ந்தெழுகிறான், நடமிடுகிறான், சுழன்றாடுகிறான்
 . . .
 அவனது லீலையில், பேரானந்தமும் அவனே, பேரின்பமும் அவனே,
 முக்தியும் அவனே, இறைவனும் அவனே. 
 நோக்கம் ஏதுமற்றது எனும் அற்புத பிரம்மாண்டத்தில்,
 முரண்படும் இச்சைகளின் இணைவில், 
 பிரக்ஞையிலும், அன்பிலும், தன்னந்தனியே,
 ஆத்மன் தன் தெய்வீக இருப்பை அறிகிறான்
 . . .
 ஓ, என் உலகமே, என் வாழ்வே, என் மலர்வே, என் பேரின்பமே!
 உன் ஒவ்வொரு கணமும் நான் படைத்தவை -
 முன்பு இருந்த உன் ரூபங்கள் அனைத்தையும் அழித்து:
 நானோ நித்ய அந்தகன்
 . . .
 இவ்வாடலில் மகிழ்ந்து, இச்சுழலில் திளைத்து,
 பேரின்பக் களத்திற்கு இமைக்கணத்தில் எழுகிறான்.
 இந்நித்ய மாற்றத்தில், நோக்கமற்றவனாக, இறைவனாக,
 ஆத்மன் தன்னை அறிகிறான்,
 இச்சையில், தனிமையில், கட்டற்று,
 எல்லாம் படைத்து, ஒளிவீசி, உயிரூட்டி,
 பல்வேறு ரூபங்களில் ஆடல் நிகழ்த்தி, ஆத்மன் தன்னை அறிகிறான்
 . . .
 ’ஓ, என் உலகமே, நான் எப்போதும் உன்னுள் உறைகிறேன்,
 என்னை நீ கனவு கண்டாய், நான் இருப்புக்கு வந்தேன்
 . . .
 நீதானே விடுதலையும் பேரானந்தமும் ஆகிய ஒரு அலை
 . . .
 ஒரு மகா பிரளயத்தால் இந்த பிரபஞ்சம் தழுவப்படுகிறது, அங்கு 
 ஆத்மன் இருப்பின் உச்ச நிலையில் இருக்கிறான், இச்சையின்
 தெய்வீக சக்தியின் முடிவில்லா அலையை உணர்கிறான். அவன் அச்சம் கடந்தவனாகிறான்: அவனுக்கு,
 அச்சுறுத்தியது, இப்போது உற்சாகமளிக்கிறது,
 பயமுறுத்தியது, இப்போது மகிழ்வளிக்கிறது
 . . .
 இந்த பிரபஞ்சம் எதிரொலிக்கும் உவகை நிறைந்த ஓசையே நான்.”(5) 

சிவன் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நடனமாடுகிறான். இது மனிதர்கள் கண்டுகளிப்பதற்காகவே சிவன் நடனம் ஆடுகிறான் என்ற கருத்தை நிராகரிக்கிறது. மாறாக பிரபஞ்சத்தின் வாழ்வை பேணுவதற்காகவும், தன்னை நாடுபவர்களுக்கு விடுதலையை அளிக்கவுமே நடனமாடுகிறான் என்பதை காட்டுகிறது. நாட்டிய கலைஞர்கள் ஆடும் நடனத்தை நாம் சரியாக கவனித்தால், அதுவும் விடுதலைக்கு இட்டுச் செல்லும் பாதையே என்பதை நாம் அறியலாம். அவனது ஆடலுக்கான உண்மையான காரணம் அவனுடைய இயல்பிலேயே உள்ளது, அவனது அசைவுகள் அனைத்தும் தன்னியல்பாக இயற்கையாக பிறந்தவை, அது நோக்கம் அற்றது – அவனின் இருப்பு நோக்கத்தின் எல்லையை கடந்தது. 

சிவ நடனத்தை பற்றி மேலும் சொல்வதென்றால் இதை சி-வா-ய-ந-ம என்ற பஞ்சாக்க்ஷரத்துடன் (ஐந்தெழுத்து மந்திரம்) அடையாளப்படுத்தலாம். 

 அண்ணல் முதலா அழகு ஆர் எழுத்து ஐந்தும்
 எண்ணில் இராப்பகல் அற்று இன்பத்தே -- நண்ணி
 அருளானது சிவத்தே ஆக்கும் அணுவை
 இருளானது தீர இன்று. 

“இந்த அழகிய ஐந்தெழுத்து மந்திரத்தை தியானித்தால் ஆன்மா ஒளியும் இருளும் அற்ற இடத்தை அடைகிறது, அங்கு சக்தி ஆன்மாவை சிவனுடன் ஒன்றாக இணைக்கிறது.” என உண்மை விளக்கம் நமக்கு சொல்கிறது.

உண்மை விளக்கத்தின் மற்றொரு பாடல் திருவாசியை விளக்குகிறது. பஞ்சாக்க்ஷரமும் நடனமும் ’ஓம்’ என்ற எழுத்துடன் அடையாளப்படுத்தப்படுகின்றன. திருவாசி அவ்வெழுத்தின் குறியீடாகும்: 

 ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில்
 நீங்கா எழுத்தே நிறைசுடராம் -- ஆங்காரம்
 அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது
 பெற்றார் பிறப்பு அற்றார் பின். 

”ஸ்ரீ நடராஜரை சுற்றியுள்ள திருவாசி ஓங்காரமாகும். அதில் இருந்து பிரிக்க முடியாத எழுத்து (அக்ஷரம்) அதனுள் நிறைந்த ஒளியாகும். இதுவே அம்பலத்தான் ஆடும் ஆடலாகும்.”

மேலும் திருவருட்பயன் (பகுதி 9, பாடல் 3) திருவாசியை இயற்கையின் நடனமாக வைத்து, மறுபக்கம் சிவனின் ஞான நடனத்தை வைத்தும் விளக்குகிறது:

 ஊன நடன மொருபா லொருபாலா
 ஞானநடந் தானடுவே நாடு 

”இயற்கையின் நடனம் ஒருபக்கமும், ஞான நடனம் மறுபக்கமும் இருக்க, உள்ளத்தை ஞானத்திற்கு நடுவில் வைத்துக்கொள்வாயாக.”

நல்லசாமி பிள்ளை இதற்கு மிகச்சிறப்பான ஒரு விளக்கம் தந்துள்ளார்: ”முதல் நடனம் பருப்பொருளின் இயற்கையின் இயக்கம் மற்றும் ஆற்றல். அது திருவாசி, ஓங்காரம், காளியின் நடனம். மற்றொன்று சிவனின் நடனம். இது ஓங்காரத்தில் இருந்து பிரிக்கமுடியாத அக்ஷரம், அது அர்த்தமந்திரம் அல்லது பிரனவ-சதூர்தத்தின் நான்காவது எழுத்து மற்றும் துரியம் என அழைக்கப்படுகின்றது. முதல் நடனமானது சிவனே விரும்பி ஆடினால் அன்றி சாத்தியமில்லாதது.” 

இந்த விளக்கத்தின் படி திருவாசி என்பது பருப்பொருள், இயற்கை, பிரக்ருதி ஆகியவற்றைக் குறிக்கிறது. அதனுள் தனது கரங்களாலும், தலையாலும், காலாலும் அதை தொட்டுக்கொண்டு புருஷனாகிய (பிரபஞ்சமளாவிய ஆன்மாவான) சிவன் நடனமாடுகிறான். ’சி-வா’ மற்றும் ’ந-ம’ ஆகியவற்றிற்கு இடையில் ’ய’ இருப்பது போல அவைகளுக்கு நடுவில் நம் தனி ஆன்மா உள்ளது.

இதுவரை நாம் பார்த்த நடராஜ நடனத்திற்கான முழுவிளக்கத்தையும் சுருக்கினால் அந்நடனத்திற்கு மூன்று அடிப்படையான பொருள்கள் இருப்பதைக் காணலாம்: முதலாவது, நடராஜ நடனத்தின் உருவகம் – பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இயக்கத்திற்கும் ஆதாரமாக நடராஜ நடனம் உருவகப்படுத்தப்படுகிறது, பிரபஞ்சமாக திருவாசி உருவகப்படுத்தப்படுகிறது. இரண்டாவது, அவன் ஆடலுக்கான நோக்கம் – மாயையின் பிடியில் இருந்து எண்ணற்ற மனித ஆன்மாக்களை விடுவிப்பது அவனது ஆடலின் நோக்கமாகும். மூன்றாவது, அவன் நடனமாடும் இடம் – ஒவ்வொருவரின் உள்ளத்துள்ளும் இருக்கும் பிரபஞ்சத்தின் மையமாகிய சிதம்பரம் அவன் ஆடும் இடமாகும்.

இதுவரை நான் அழகியல் சார்ந்த விமர்சனங்களை தவிர்த்து, நடராஜ நடனத்தின் மைய சிந்தனையை மட்டும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். மேலும், அதை அந்நடனத்தின் அழகை பற்றி சொல்லாமலும், ஒவ்வொரு சிலையின் அழகையும் குறையையும் குறிப்பிடாமலேயே வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ஆயினும்கூட அறிவியல், மதம் மற்றும் கலை ஆகியவற்றை உள்ளடக்கிய இதன் பிரம்மாண்ட தன்மையை நாம் தவிர்த்துவிட இயலாது. பிரபஞ்ச உண்மையின் உருவகமாக, வாழ்க்கையின் சாரத்தை அறிவதற்கான திறவுகோளாக, இயற்கையின் கோட்பாடாக, ஒரே ஒரு இனத்திற்கு மட்டும் நிறைவளிக்கக்கூடியதாக அல்லாமல், ஒரு நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் மட்டும் ஏற்கக்கூடியதாக அல்லாமல், எல்லா காலங்களிலும் எல்லா நாட்டிலும் உள்ள தத்துவவாதிகள், கலையை நெசிப்பவர்கள், கலைஞர்களுக்கும் உரிமையுடைய, உலகளாவிய தன்மையுடைய இந்த நடனத்தை முதலில் வடிவமைத்த அந்த கலைரிஷிகளின் சிந்தனையும் உணர்ச்சியும் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருந்திருக்க வேண்டும். தங்கள் கண்டறிந்த வாழ்வின் உள்ளொளியை சிற்பத்தில் வெளிப்படுத்த முயன்ற ஒவ்வொருவருக்கும் இந்த நடராஜ வடிவம் ஆற்றலிலும் அருளிலும் எவ்வளவு மகத்தான ஒன்றாக தோற்றமிளித்திருக்க வேண்டும்!

இந்த நடனத்தை கண்டவர்களுக்கு வாழ்கையும் சிந்தனையும் நீர்புகாத பெட்டிகள் போல ஒன்றைமற்றொன்று முற்றிலுமாக பிரிந்திருக்காது. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி நிபுணத்துவ துறைகள் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இது போன்ற ஒரு ஒருங்கினைவு சிந்தனைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், எல்லா இசையிலும் அடிப்படையான இன்றியமையாத ஒரு நாதம் இருப்பது போல, கலை படைப்புகள் ஒவ்வொன்றிற்கு பின்னும் இருக்கக்கூடிய முழுமையான படைப்பு ஆற்றலையும் காண நாம் தவறிவிடுகிறோம்.

நடராஜ வடிவத்தின் பாகங்கள் ஒவ்வொன்றும் நேரடியாகவே அர்த்தப்படுகின்றன, இதில் எந்த மூடநம்பிக்கைகளுக்கும் இடமில்லை. பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்திற்கு பின்னும் உள்ள அறிவியல்ரீதியான ஆற்றலின் உருவ வடிவமான இந்த நடராஜ நடனத்தை இன்று இருக்கும் எந்த கலைஞனாலும் அவன் எவ்வளவு சிறந்த கலைஞனாக இருந்தாலும் கூட உருவாக்க இயலாது. நடராஜ நடனம் குறிக்கும் நித்யத்தை உணரவேண்டுமென்றால் முதலும் முடிவுமற்ற காலத்தில் கடுவெளியின் எல்லையற்ற பரப்பில் விரிந்துள்ள இயக்கத்தின் மாற்றத்தை புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் முடியும். அந்த மாற்றத்தையே துடியும் அனலும் குறிக்கின்றன. அனல் அழிவுக்கான குறியீடல்ல, அந்த மாற்றத்தையே குறிக்கிறது. இவை பிரம்மனின் பகல் மற்றும் இரவு என சொல்லப்படும் கல்பகாலம் மற்றும் பிரளயகாலத்தின் குறியீடாகும். 

பிரளய காலத்தில் இயற்கை கருவாக செயலற்று இருக்கும். சிவன் விரும்பும் வரை அதன் இயக்கம் நிகழாதிருக்கும். சிவன் தான் விரும்பி தன் ஆனந்த நிலையில் இருந்து எழுகிறான், நடனமாடுகிறான். அந்த நடனம் விழிப்பு ஓசையின் அலைகளால், கருவாகிய இயற்கையை தூண்டுகிறது. இயற்கையும் ஆடலில் இணைகிறது. அது அவனைச் சுற்றி திருவாசியாக ஒளிர்கிறது. ஆடுகிறான், ஆடலால் எண்ணற்ற பிரபஞ்ச நிகழ்வுகளை நிகழ்த்துகிறான். ஊழி முடிவிலும் ஆடுகிறான், ஆடலிலேயே அனலால் அனைத்து நாமங்களையும் ரூபங்களையும் அழிக்கிறான், மீண்டும் பேரமைதியை தருகிறான். இது கவிதை, அதேசமயம் அறிவியலும் கூட. 

நடராஜ வடிவம் நம் முந்தய பல தலைமுறைகளை தன் அடியவர்களாக்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் நாம் இன்று நம்பிக்கைகளை மறுத்து கேள்விகளை எழுப்புகிறோம், எல்லாவித நம்பிக்கைகளுக்கும் பின்னுள்ள ஆதிஉணர்வுகளை கண்டறிகிறோம், முடிவிலி பெருவெளியையும் முடிவிலி நுண்மையையும் ஆராய்கிறோம். ஆயினும்கூட, இன்றும் நாம் நடராஜரின் அடியவர்களே. 


குறிப்புகள்:

1.சோ.நடேசன் என்பவர் இந்த கட்டுரையை முன்பே “சிவானந்த நடனம்” (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1980) என்ற நூலில் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பு பாடல் அந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

2.கஜசம்ஹார மூர்த்தியின் புராணமும் இதற்கு சமமான ஒரு புராணமாகும். 

3.இந்த பாடல் கடவுள் மாமுனிவரின் திருவாதவூரார் புராணத்தில் உள்ளது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் நல்லசாமிபிள்ளை. இம்மொழிபெயர்ப்பு நல்லசாமிபிள்ளையின் சிவஞானபோத நூலில் உள்ளது. (Sivagnana Botham of Meykandar – English Tranaslation and explanation by J M Nallaswami Pillai – Part 2 (shaivam.org))

இதே பாடலை இவ்வாறும் மொழிபெயர்க்கலாம்:

”விரகில் மறைந்திருகின்ற அனல் போல அனைத்து உடல்களிலும் மறைந்திருந்து பரவி அவ்வுடல்களை நிரப்பி, அங்கு ஆடும் நடனத்தால் அவ்வுயிர்கள் அனைத்தையும் இயங்க வைப்பவன் எம் தந்தை என அறிக!”

மேலும் இதை ஜோஹன்னஸ் எக்கார்டின் (Johannes Eckhart) வரிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம் – ”நெருப்பு காய்ந்த மரக்கட்டைக்கு உயிர் கொடுத்து  ஒளிர்வை உண்டாக்குவது போல கடவுள் மனிதனிடத்தில் செயல்புரிகிறார்.”

4.இதை பிரஞ்சு குறியீட்டாலர் மார்செல் ஸ்வாப் (Marcel Schwob) என்பவர் மோனெல்லின் புத்தகம் (Le Livre de Monelle) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதுடன் ஒப்பிடலாம்: ”உபதேசம் இது: அழி, அழி, அழி. உன்னுள் இருப்பவற்றையும் உன்னைச் சூழ்ந்திருப்பவற்றையும் அழி. உன் ஆன்மாவிற்கும், ஏனைய பிற ஆன்மாக்களுக்கும் இடத்தை உண்டாக்கு. அழி, ஏனென்றால் அழிவிலிருந்தே படைப்புகள் அனைத்தும் வருகின்றன.  .  .  .  எஞ்சியவற்றில் இருந்தே அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன, இந்த உலகில் உள்ள எதுவும் புதிது அல்ல, வடிவங்கள் மட்டுமே புதியவை. ஆனால் வடிவங்களோ நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டியவை.  .  .  .   நீ அருந்தும் கோப்பை ஒவ்வொன்றையும் உடைத்தெறி.”

5.Poem of ecstasy அலெக்ஸாண்டர் ஸ்கிரானால் 1905 – 1908 க்கு இடையில் எழுதப்பட்ட ஒரு நீண்ட சிம்போனிக் கவிதை (symphonic poem) ஆகும். இதன் சிலசில வரிகள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இது லிடியா எல். பிமெனோஃப் நோபல் (Lydia L. Pimenoff Noble) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு அக்டோபர் 29 1917ல் பாஸ்டன் சிம்போனி ஆர்கஸ்ட்ரா நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. (இதன் முழுவடிவையும் இங்கு காணலாம்: Boston Symphony Orchestra concert program, Subscription Series, Season 30 (1910-1911), Week 3, seq. 28 – BSO Program Books – BSO Archives)


மூலம்: Dance of Shiva, by Ananda coomaraswamy

தமிழில்: தாமரைக்கண்ணன், வாசுதேவன். காளியை பற்றிய பாடலை மொழிபெயர்த்தவர் கவிஞர் வேனுவேட்ராயன்.

நன்றி – கரு. ஆறுமுகதமிழன்
 

https://tamaraikannan.wordpress.com/2021/02/27/87/

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.